Category: tamil katturai APJ arul

கட்டுரைகள் APJ அருள்

  • இறவாமை என்பது உண்மையா?

    இறவாமை என்பது உண்மையா? –ஏபிஜெ அருள்.

    என் மார்க்கம் இறப்பை ஓழிக்கும் மார்க்கம்.என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறுஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.
    இது சரியா?தப்பா?
    உண்மையா?பெய்யா?
    என்பதை விட இங்ஙனமாக வள்ளலார் என்ற ஞானி சொல்லி உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தப்படுகிறது.
    இது குறித்து அறிய வள்ளலார் உபதேசம், பாடல்கள்,விண்ணப்பம் உள்ளது. இது குறித்து நல்ல விசாரணை செய்ய யாதொரு தடையும் எவருக்கும் இல்லை.
    மற்ற மார்க்கங்களில் சொர்க்கம்,நரகம் குறித்து சொல்லப்பட்டுள்ளது என அறிக.
    இங்கு சொர்க்கம் நரகம் பற்றி விசாரமில்லை என்கிறார் -வள்ளலார்.

  • வள்ளலார் முடிபாக சொன்னது இது தான்

    வள்ளலார் முடிபாக சொன்னது இது தான். — ஏபிஜெ அருள்.

    22/10/1873 ல் வள்ளலார் சொன்னது; 
    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.”
    30/01/1874ல் சொன்னது;
    ” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த)சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
    நிற்க! ஆக
    வள்ளலார் சொல்ல வந்ததை 
    தெரிந்து கொள்ளாதவர்களாக (முயற்சிக்காதவர்களாக) இருந்தோம்.
    இந்நிலையில் வள்ளலார் மீண்டும் நம்மிடம் கீழ்வருமாறு சொல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 
    அது;
    சித்திவளாகத்தில் உள்ளிருந்த விளக்கை திருமாளிகைப் புறத்தில் வைத்து,

          “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்றப் படியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வ பாவணையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.’”

     

    அன்பர்களே!
    வள்ளலார் சொல்ல வந்த உண்மை, 
    சுத்த சன்மார்க்க நெறி, கடவுள் அருள்
    எல்லாம் இந்த “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுரப் பாடல்களில் தான் உள்ளது என்பதை சத்தியமாக இன்று அறிந்து உணர்வோம். 
    எவர்க்கெல்லாம் வள்ளலார் சொல்ல வந்த உண்மை, உண்மை கடவுளின் நிலை, பேரின்ப பெருவாழ்வு பற்றி தெரிந்து கொள்ள “ஆசை” உள்ளவர்கள் இன்றே 28 பாசுரப்பாடல்களை வாசிப்போம் பாடுவோம் கடவுள் அருளை பெறுவோம்.
    அன்புடன்:
    ஏபிஜெ அருள்.

    28 பாசுரப்பாடல்களுக்கு (ஞான சரியை என்ற தலைப்பில் ஆறாம் திருமுறையில்)
    http://www.atruegod.org/vallalar/ இதை கிளிக் செய்து காண்க

  • “சிவம்” என்பது பொது சொல்

    “சிவம்” என்பது பொது சொல்– ஏபிஜெ அருள்.

    ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும். நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம், சூரியன்,சந்திரன் மற்றும் மலை போன்ற சொற்கள் எங்ஙனம் உலகத்தார் அனைவரும் பொதுவார்த்தையாக எடுத்துக்கொள்வது போல ‘சிவம்’ என்ற சொல்லும் பொது வார்த்தை அதுவும் மெய் வார்த்தை.

    நிற்க! சிவம் என்றால் என்ன?
    தமிழ் அகராதி படி;
    நன்மை, முடிபான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது.
    ஆக,
    இங்ஙனம் பொதுப் (இயற்கையாய் உள்ள) பொருளை தரும் ‘சிவம்’ இன்று ஒரு குறிப்பிட்ட சமய சொல்லாக பார்க்கப் படுகிறது. சிவன், சிவலிங்கம், பரமசிவம், சிவபிரான் இவை உலக மாபெரும் சமயமான சைவசமய கடவுளரை குறிக்கும். சிவபுராணம்,சிவலோகம்,சிவசாதனம்,
    சிவாகமம்,சிவராத்திரி இவை அச்சமயம் சார்ந்தவை. ஆனால் ‘சிவம்’ என்றால்; எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி எனப்படும். 
    ஆக,
    சிவம் என்பது; 
    இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள் ஆகும்.

    ஆனால் இன்று ‘சிவம்’ என்றால் சைவ சமய கடவுளாகிய சிவபெருமானை அல்லது சிவலிங்கத்தை குறிக்கப்படுகிறது என்று எண்ணி மற்ற சமயமத மார்க்கத்தார்கள் சிவம் சொல்லை உச்சரிக்க முன் வருவதில்லை.
    ” சாதியும் மதமும் சமயமும் பொய் ‘என்கிற வள்ளலார், இயற்கையே கடவுளாக கண்டு அதை ‘சிவம்’என்றே அழைக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பொது கடவுளாகிய இயற்கை ஆண்டவரை ‘சிவபதி’ என்று வள்ளலார் அழைக்கும் போது, எங்கே மனிதர்கள் சைவ சமயக் கடவுளை நினைந்து விடக்கூடாது என்பதற்காக ‘சுத்த சிவம்’ என குறிப்பிட்டு சொல்வதை காணலாம்.
    நிற்க!
    சூரியன் என்றால் பொது வார்த்தை. பொது கோளம். இங்கு சூரியனை கடவுளாக வழிபடுபவர்களும் உண்டு. அங்ஙனம் அவர்கள் வழிபடுவதால் ‘சூரியன்’ அவர்களுக்கு மட்டுமே என்றா மற்றவர்கள் இருக்கிறார்கள்? 
    பஞ்சபூதம் என்பது எல்லோருக்கும் உரியது. இதை இயற்கையில் அமைந்ததாக எல்லோரும் பார்ப்பது போல் ‘சிவம்’ என்பது இயற்கையில் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும் ‘ஒரு பொது நன்மை’ என்றோ அல்லது இயற்கையில் எங்கும் நிறைந்து விளங்கும் சுயம் சொரூபமாகிய ஒரே மெய் பொருளாகிய பிரகாசம் (ஒளி) என இனி கருத்தில் கொள்வோம்.
    இந்த (பொது) ‘சிவம்’ உருவமா, அருவமா,உருஅருவமா என்று வரையறுத்து வெளிப்பட்டுள்ள ஒரு பொருள் அன்று.
    இதை,
    இயற்கை உண்மையாகவும் 
    இயற்கை விளக்கமாகவும் 
    இயற்கை இன்பமாகவும் 
    விளங்கும் ஒரு மெய் பொருள்.
    இதன் உண்மை ‘அக அனுபவத்திலே’ மட்டும் என்கின்றனர் அறிஞர்கள்.
    எல்லாம் வல்ல இயற்கையே!
    எல்லாம் வல்ல ஆண்டவரே!
    இப்படியாக மேற்படி அழைப்பதை பொதுவாக பார்க்கிறமோ அது போல்
    எல்லாம் வல்ல சிவபதியே! 
    என்பதையும் பொதுவாக காண்போம்.
    சிவமாகிய இயற்கையை போற்றுவோம்.
    சிவ சொரூபம் உள்ளத்தில் உணருவோம்.
    மெய் சிவ அருள் ஒளி பெறுவோம்.
    கடவுளின் உண்மை உரைக்கும் சுத்த சன்மார்க்கம் சார்ந்து கடவுள் உண்மை நிலை குறித்து நல்ல விசாரணை செய்வோம். — நன்றி ஏபிஜெ அருள்.
    ‘சிவம்’ என்பது இயற்கை உண்மை,
    ‘சிவம்’ என்பது இயற்கை விளக்கம்,
    ‘சிவம்’ என்பது இயற்கை இன்பம்,
    ஆகிய எல்லா அண்டங்களுக்கும், எல்லா உலகங்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும், எல்லா பொருள்களுக்கும் ஒளி வழங்கி நன்மை பயக்கும் ஒரு மெய்பொருள் எனத் தெரிந்துக் கொண்டோம்.
    ‘சிவம்’ என்பது பொது சொல் என்ற உண்மையை எல்லோரும் தெரிந்திட பகருங்கள். தமிழ் மொழி உண்மை உரைக்கும் மொழி. கடவுளின் உண்மை தெரிந்திட அமைந்த இயற்கை பொது மொழி. தமிழ் பொது வார்த்தை ‘சிவம்’. இச்சிவ உண்மை (இயற்கை) மனிதன் அறிந்து சாதிமதசமய வேறுபாடில்லாமல் இன்பமாக வாழ்வது சத்தியமே.

    — அன்புடன் ஏபிஜெ அருள்.

  • ஆதி,அநாதியே உண்மை கடவுள்

    ஆதி,அநாதியே உண்மை கடவுள்

    ஆதி,அநாதியே உண்மை கடவுள். — ஏபிஜெ அருள்.

    அன்பர்களே!
    எவர் ஒருவர் சொல்வது எல்லோருக்கும் பொதுவாக இருக்குமோ , அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும். எந்த ஒன்றை அறிஞர்கள் எல்லோராலும் பொதுவாக வியம்பப் படுகிறதோ அது உண்மையாகும்.
    நிற்க!
    பல சாதிகள், பல மதங்கள், பல சமயங்கள் இன்று உலகில் வெளிப்பட்டு உள்ளது. ஒன்றின் லட்சியம், கொள்கை மற்றொன்றுடன் ஒத்து போவதில்லை. இந்த சமய மதங்களில் காட்டப்பட்ட பல கடவுள்களில் உண்மை கடவுள் இவரே என எவரும் சொல்லிவிட முடியாது.
    அதே போல் சாதியாலும் நாம் வேறுபட்டு, பல பிரச்சனைகள் நடப்பதையும் நாம் மறுக்க முடியாது.
    ஆக, மனிதர்கள் எல்லோராலும் மற்றும் அறிஞர்கள் அனைவராலும் பொதுவாக ஒத்துக்கொள்ளக் கூடிய நெறியாக எந்தொரு சாதி மத சமய நெறிகள் இங்கு இல்லை.
    அன்பர்களே!
    இது உண்மை தானே!
    ஆனால்,
    எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ( அல்லது எவராலும் மறுக்க முடியாத ) நெறியாகவும்,
    அறிஞர்கள் அனைவரும் இதுவே பொது சபை என வியம்ப கூடியதாகவும்,
    ஒன்று உள்ளது என்றால் அது கண்டிப்பாக பொதுவாகவும், உண்மையாகவும் இருக்கும். அப்படிதானே!
    அன்பர்களே!
    சாதியும்,
    மதமும்,
    சமயமும்,
    இவைகள் தோன்றுவதற்கு முன்னதாக ஆதி (முதலாவதாகவும்),
    அனாதி (எல்லையற்றதாகவும்),
    ஆக இருக்கும் அருட்பெருஞ்ஜோதியே உண்மை கடவுள்.
    இயற்கை உண்மையை அறிந்தோர் இந்த மெய் பொருளையே கடவுள் என்கிறார்கள்.

    எங்கும் எதிலும் பரிபூரணமாக விளங்கும் இந்த உண்மை கடவுளையே எல்லா சமய மதத் தலைவர்,கடவுளர், தெய்வங்கள், யோகிகள் அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்கிறார் வள்ளலார்.
    அகவல் ::
    வரிகள்115 – 116
    சாதியும் மதமும் சமயமும் காணா
    ஆதி அனாதியாம் அருட்பெருஞ் ஜோதி.
    வரிகள் :: 141-142:
    எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்
    அப்பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி.
    வரிகள் :: 99 – 100
    எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
    அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.
    அன்பர்களே!
    சுத்தசன்மார்க்கம் சாருவோம்,
    உண்மை கடவுள் நிலை காண்போம்.

    — அன்புடன் ஏபிஜெ அருள்.

  • சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை

    சிறுமி மூலம் கடவுள் விளக்கிய உண்மை- ஏபிஜெ அருள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு எனது குடும்பம் கணவர் மகள்களுடன் ஒரு நாள் மாலைப் பொழுது சைவ உணவுகத்திற்கு சென்றிருந்தேன். உணவுக்கு ஆர்டர் பண்ணிவிட்டு உட்கார்ந்திருந்தோம்.ஹோட்டல் சுவர்களில் மகான் ஒருவரின் பெரிய சைஸ் படங்கள் பல  மாட்டப்பட்டிருந்தது. அன்பு பார்வை,எளிய தோற்றம், பசு மாட்டை இரக்கத்தோடு தடவி கொடுக்கும் படம் என பலபடங்கள். இதை கண்ட எனது இளைய மகள் (3 வது வகுப்பு சிறுமி), சுவரில் மாட்டிய படத்தை காண்பித்து, டாடி இந்த படங்களில் இருப்பது யாரு?எனக் கேட்டாள். 

    இவர் பெரிய மகான் என்றேன்.

    மகான்னா?என்றாள்.

     அவளுக்கு புரிவதற்காக,

     இரக்கமுள்ள பாசமுள்ள சாமி தாத்தா, என்றேன். படத்த பாரு, அந்த மகான் தாத்தாவிடம் மாடு எவ்வளவு அன்பா நிக்குது என்றேன்.

    கொஞ்ச நேரம் எல்லா போட்டோவையும் பார்த்தாள். ஒரு போட்டோவை மட்டும் ரொம்ப நேரமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆர்டர் பண்ணின டிபன் வகைகள் வரத் தொடங்கின. 

       எப்பொழுதும் முதலில் ஆவலுடன் சாப்பிட ஆரம்பிப்பவள் அன்று அவள் முன்பு அவளுக்கு பிடித்த நெய் ரோஸ்ட் வைத்தப் பிறகும், அந்த படத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து நான்; சாப்பிடு, என்றுச் சொல்லி விட்டு, நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். சத்தமாக; ‘டாடி’, என்றழைத்து, ‘இது நல்ல தாத்தா இல்லை , ஆய் தாத்தா என்றாள்.’ 

    உடனே நான்; அப்படி சொல்லக் கூடாது. சாப்பிடு என்று அதட்டினேன். 

    உடனே அவள்;

     டாடி, இது நல்ல தாத்தா இல்லை என்று மீண்டும் கத்தி சொன்னாள். சுற்றியிருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்ததை கண்ட என் கணவர், சுதாரித்து, அவள் அருகில் அமர்ந்து, சரி சாப்பிடு , என்று தோசையை பிட்டு வாயில் கொடுத்தார். எதுக்கு அப்படி சொன்ன? அப்பாவுக்கு புரியலை. இப்ப மெதுவா சொல்லு அப்பா கேட்கிறேன் என்றார். அவள் சொன்ன பதிலால் நாங்கள் அதிர்ந்தோம். நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விளக்கம் எனக்கு கிடைத்தது போலிருந்தது.

           அவள் சொன்னது; 

    டாடி..டாடி ..அந்த தாத்தா புலி தோல் மீது    உட்கார்ந்திருக்காங்க. புலி தோல் எப்படி இந்த தாத்தாவுக்கு கிடைச்சுது. புலியை கொல்லக்கூடாதுல டாடி. பாவமில்ல. ?

    புலி தோல உரிக்கும் போது அது அழுதிருக்குமில்ல …..எனச் சொல்லும் போது அவள் கண்கள் கலங்கியதை நாங்கள் கண்டோம். உடனே,

    நான்; சரி..சரி அப்படியெல்லாம் இல்லை. செத்த புலியிடமிருந்து தான் எடுப்பாங்க பேசாம சாப்பிடு என்றாள்.

    அப்படியா டாடி…இருந்தாலும் எனக்கு இந்த தாத்தா பிடிக்கல…புலி கண்ணைப் பாருங்க அது இன்னும் சாகல….. என்றாள். உடனே எனது பெரிய பெண் குறிக்கிட்டு;  நீ சொல்றதது கரக்ட். புலி தோலை உரிக்கறது பாவம். இந்த தாத்தா தோல் மேல் உட்காரக் கூடாது.சரியா? என்றவுடன் சமாதானம் ஆனாள்.

    அன்பர்களே!

    கடவுளின் அருளைப் பெற்றுத் தரும் கருணை விருத்தியாகமல் தடை செய்வது சாதி சமய ஆசாரங்களே என்கிறார் லள்ளலார். நிற்க!

     சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் எவை? 

    மேலே சிறுமி சுட்டிக் காட்டிய புலித்தோல் மீது அமரச்சொல்லும் கட்டுப்பாடே அந்த சமயத்தின் கட்டுப்பாடு ஆகும். ஆம், அந்த உணவகத்தில் இருந்த அந்த மகான் உண்மையில் உயிர்களிடத்தில் அன்பு இரக்கம் கொண்டவரே. ஆனால், இறைவனை நோக்கி தவம் செய்ய அவர் நம்பிக்கை கொண்டிருந்த சமயத்தின் வழக்கம் கட்டுப்பாடு தோலின் மீது அமர்ந்து, தவத்தால் உடலை சூடேற்றி, உள்ளத்தில் ஒளி காண்பதே பயிற்சி.

    நிற்க! மற்ற உயிர்களின் தோலை உபயோகப்படுத்துவது எங்ஙனம் உண்மை இரக்கம் ஆகும்? தோலுக்காக உயிர்கள் வேட்டையாடி கொல்லப்படுகிறது.  அப்படியே அவை இறந்த பிறகே எடுப்பதாக வைத்துக் கொண்டாலும், இறந்த அந்த விலஙகின் தோல் உரிப்பது,அதன் பல்லை எடுப்பது, எங்ஙனம் அவைகளை “தம் உயிர் போல் பாவித்தல் வேண்டும்”  என்ற சைவநெறிக்கு ஏற்புடையது ஆகும்? 

    இதை போல் பல சடங்குகள் எல்லா சாதி சமயங்களிலும் உள்ளது. 

    # மற்ற உயிர்களை வணங்கும் தெய்வங்களுக்கு பலி கொடுத்தல்.

    # கடினமாக நம்மை வருத்திக் கொண்டு விரதம்,கடின தவம், மூச்சு பயிற்சியில் இருத்தல். 

    # வேண்டுதல் பெயரில் நம் உடம்பில் ஆயுதங்களால் புண்ணாக்கி கொள்ளுதல்.

    # தவத்திற்கு யாகத்திற்கு இரத்தம்,தோல், மாமிசத்திற்கு மற்ற உயிர்களை கொல்லுதல்.

    # கல்லால், சவுக்கால் அடித்தல் அடித்துக் கொள்ளுதல்.

    # உடன்கட்டை, தாசியாக்குதல், தீண்டாமை, தீட்டு ஆதல், மற்றவர்களை விரோதியாக்குதல், தண்டனை, போர், அடிமையாக்குதல்.

    இவை நம் சாதி சமயத்தில் செய்ய வைக்கும் சடங்குகள், இவைக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். காரணம் அந்தந்த சாதி சமய தலைவர்கள் அனுமதிக்கும், மற்றும் அவைகளின் புனித நூல்களில் உள்ளது. யாரும் மறுக்க முடியாது.மீற முடியாது.

    நிற்க! இந்த பழக்க வழக்கம் நம்மிடம் இயற்கையாக இருக்கும் கருணையை விருத்தியாக்குமா? சொல்லுங்கள். 

    # எவ்வளவு இரக்கம் நம்மால் பெற்று வைத்திருந்தாலும் நம் சாதி பொதுநோக்கத்தை தருமா? 

    # நம் சமய சடங்குகள் மற்ற உயிர்களுக்கு துன்பம் தராமல் இருக்கிறதா?

    # நமது நல்ல விசாரணையில் வெளிப்படும் புதிய தனி உண்மைகளுக்கு நாம் சார்ந்துள்ள சமயமதம் இடம் தருமா?

    சிந்திப்போம். புதிய தனி பொது உண்மை வழி காண்போம்.

    நம் கருணையை விருத்தியாகாமல் செய்யும் இந்த சாதி சமயத்தை கைவிடுவோம்.

    உண்மை கடவுளை உண்மை அன்பால் கண்டு அருள் பெற வைக்கும் சுத்த சன்மார்க்கத்தை சாருவோம். 

    —-அன்புடன் ஏபிஜெ அருள்

     

  • ‘உணர்ந்து  உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி -2

    ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

    ‘உணர்ந்து உணர்ந்து” எதை உணர்ந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –2 

    2) உணர்ந்து உணர்ந்து ..

    இங்கு எதை உணர வேண்டும்? 

    அதற்குமுன் ,

    நம் வள்ளலார் பல பாடல்களில் வெளிப்படுத்தியது;

    “உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை…” என்றும்

    “உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள எட்டானை.. “என்றும், மேலும்,

    “எந்த வகையிலும் உணர்ந்து கொளற்கரியதாய்..” மற்றொரு பாடலில்

    “உணர்ந்துணர்ந்துணரா ஒரு தனிப் பெரும்பதி..” என்றும்,

    “ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்துணர்வாம்

    உருவுறச் செய் உறவே”

    என்கிறார்.

    ஆக,

     புறத்தில், 

    படிப்பால், 

    ஓதுவதால் 

    கடவுளை உணர முடியாது என வள்ளலார் சொல்கிறார்கள். 

    பின்பு, இங்கு எதை

     “உணர்ந்து உணர்ந்து” என்கிறார் வள்ளலார் ? 

    இதற்கு அருட்பெருஞ்ஜோதி அட்டகம் 8 பாடல்களில் 3 முதல் 7 வரை பாடல்களை ஊன்றி வாசித்தல் வேண்டும்.

    அப்பாடல்கள்;

    #

    கண்முதல் பொறியால் மனமுதல் கரணக்

    கருவினால் பகுதியின் கருவால்

    எண்முதல் புருட தரத்தினால் பரத்தால்

    இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால்

    விண்முதல் பரையால் பராபர அறிவால்

    விளங்குவ தரிதென உணர்ந்தோர்

    அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும்

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    #

    நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே

    நண்ணியும் கண்ணுறா தந்தோ

    திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித்

    திரும்பின எனில்அதன் இயலை

    இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும்

    இசைத்திடு வேம்என நாவை

    அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும்

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    #

    சுத்தவே தாந்த மவுனமோ அலது

    சுத்தசித் தாந்தரா சியமோ

    நித்தநா தாந்த நிலைஅனு பவமோ

    நிகழ்பிற முடிபின்மேல் முடிபோ

    புத்தமு தனைய சமரசத் ததுவோ

    பொருள்இயல் அறிந்திலம் எனவே

    அத்தகை உணர்ந்தோர் உரைத்துரைத் தேத்தும்

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    #

    ஏகமோ அன்றி அனேகமோ என்றும்

    இயற்கையோ செயற்கையோ சித்தோ

    தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ

    திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ

    யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ

    உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்

    ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    #

    தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்

    தத்துவா தீதமேல் நிலையில்

    சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்

    சிவநிலை தெரிந்திடச் சென்றேம்

    ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்

    ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்

    றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    அன்பர்களே!

    ஆக, மேற்படி பாடல்களில் மூலம் நாம் உணரவேண்டியது யாதெனில்;

    நாம் இது நாள் வரை,

    # இந்திரிய கருவிகள் கண்டதையோ, கரண கருவிகள் கண்டதையோ,

    உணர்வால் அறிவால் விளங்கியதோ,

    # மாமறைகள் உரைத்ததோ,

    # வேதாந்தம் சித்தாந்தம் அனுபவமோ,

    # உரைத்த எதுவுமோ,

    # தத்துவங்களோ, அதையும் கடந்த தத்துவாதீதமோ, சித்தியலோ இல்லை.

    அப்படியெனில்,

    — இவை முறையே;

    # விளங்க அரிதாகிய

    # இசைத்திட முடியாத

    # முடிந்த நிலை மேலாகிய

    # உரைத்திடாத

    # எல்லாம், எல்லோருக்கும் மேலாகிய

    – புதிய வடிவில்,

    – தனி அனுபவமாகிய,

    – இயற்கை உண்மையாகிய,

    – அருட்பெருஞ்ஜோதியே

         என நாம் உணர்ந்து உணர்ந்து வேண்டுதல் வேண்டும் எனத் தெரிந்துக்கொண்டோம் இன்று.

    இதை மேலும் உறுதிப் படுத்துகிறது கீழ் வரும் பாடல்:

    கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே 
    கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே 
    உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே 
    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே 
    விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க 
    மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே 
    எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் 
    இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே

    மற்றொரு பாடலில்;

    அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர் 
    அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம் 
    கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே 
    காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம் 
    இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர் 
    யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன் 
    உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா 
    ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.

    ஆக,

    வள்ளலார் வழியாகிய சுத்தசன்மார்க்கத்தை மட்டுமே சார்ந்து, மார்க்க மரபுகள் நான்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துணர வேண்டும்.

    அன்பர்களே!

    இன்னொரு முக்கிய பாடல்; அது;

     

    வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி

    வேகாத நடுத்தெரிந்து சின்னம் பிடி

    சாகாததலைஅறிந்து சின்னம் பிடி

     சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி.

    சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்

    #

    வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் – சாகாத்

    தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் உண்மை

    நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.”

    அன்பர்களே!

     உணர்ந்து கொள்ள வேண்டியதாக நாம் உறுதி எடுத்துக்கொண்டது;

    # இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாமல்,சாதி சமய மதங்கள் , புராணங்கள் இதிகாச கலைகள் எதிலும் லட்சியம் வையாது, எல்லாப் பற்றுகளும் காரணமான ஆசார வகைகளை விட்டு உண்மை கடவுளை தொழுவதை மட்டுமே என உணர்ந்தேன்.

    ஆனால் ,

    இப்போது ‘வேகாத கால்’ என்பதையும் உணர்துதல் வேண்டும் என்றால் இந்த வேகாத கால் என்றால் என்ன? 

    நிற்க!

     நம் அறிவில் இந்த வேகாத கால் என்ன என்று உணர வைக்கும் தயவு கடவுள் தயவு ஆகும்.

    இதோ அதன் பாடல்;

    சாகாத தலைஇது வேகாத காலாம்

    தரம்இது காண்எனத் தயவுசெய் துரைத்தே

    போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே

    பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே

    ஆகாத பேர்களுக் காகாத நினைவே

    ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே

    தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே

    தனிநட ராஜஎன் சற்குரு மணியே.

    #

    ஏகாத கல்விதான் சாகாத கல்வியென்

    றேகாத லாற்சொன்னீர் வாரீர்

    வேகாத காலினீர் வாரீர். வாரீர்

    ஆக, 

    சாகா கல்வியை கற்க வேண்டும் என்றும், அக்கல்வி கடவுளின் நிலை நாம் காணும் போது, கடவுள் அருளால் நமக்கு உரைக்கப்படும் என்பதை தெரிந்து, சாகா கல்வி உண்மை தெரிவிப்பதில் ஒன்றாகிய வேகாத கால் உணர்ந்துணர்வோம். 

    அன்புடன்

    ஏபிஜெ அருள், கருணை சபை சாலை.

    அன்பர்களே!

    ஒருவாறு நம் நன்முயற்சியால்

    நினைந்துநினைந்து -எது என்பதையும்

    உணர்ந்துணர்ந்து – எது என்பதையும்

    தெரிந்துக்கொண்டோம்.

    அடுத்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து எது என அடுத்த நல்ல விசாரத்தில் காண்போம்.

    With thanks – apjarul.

    தொடரும்…

  • உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.

    உள்ளவாறு உரைப்போம் — ஏபிஜெ அருள்.

    கருணை இரக்கம் அன்பு ஒழுக்கம் இவைகள் அனைத்தும் எல்லா மகான்கள் கர்த்தார் தேவர்கள் ஞானிகளாலும் சிறப்பாக சொல்லப்பட்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட சமய மத மார்க்கங்களில் இயல்புகளாக வெளிப்பட்டுள்ளது. அவை சொல்லப்படும் விதம் அழுத்தம் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் சமய மதங்களில் வேறுபடுகின்றன. ஆக,
    நல்லவிசயங்களை தான் நல்கின்றன சமய மத மார்க்கங்கள். இந்நிலையில் எதற்கு நமது சமயம் மத மார்க்கங்களை கை விட வேண்டும்?. 
    நமது தாய் தந்தை இருக்கின்ற சமய மதத்தை தான் பின்பற்றி வருகிறோம் என்பதே 99% ஆகும். மிகச் சிலரே வாழ்வின் சூழ்நிலையில் மற்றும் ஏதோ எதிர்பார்ப்பில் சமய மதத்தை மாற்றிக் கொள்கிறார்கள். (மிக சிலராகிய நாத்திகவாதிகள் பற்றி இங்கு விசாரமில்லை.) ஆக,
    நாம் நம்பிக்கை, பற்றுக் கொண்டியிருக்கும் சமய மதம் மார்க்கங்கள் , 
    “பிறருக்கு துன்பம் தராமலும் அவர்கள் செய்யினும் சகித்து அடங்கி இருக்கும் அறிவாகிய கருணையை, அன்பை, இரக்கத்தை, மற்றும் ஒழுக்கத்தை நல்குகின்றன ” நாம் அதில் பயின்றுவருகிறோம்.
    நிற்க! வள்ளலார் கண்ட உண்மை மேற்படியாக சமயமதங்களில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளை கடந்து மேன்மையான உயர்வான விசயமாகும். 
    அது; நம் நிலை எப்படி பட்டது? நம்மை அனுஷ்டிக்கும் கடவுள் நிலை எப்படி பட்டது? என்று விசாரித்து உண்மையை அவரவர் உள்ளத்தில் உணருதலும் உண்மை கடவுளின் அருளால் மரணத்தை தவிர்க்கும் வழியே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
    இரக்கம் அன்பு ஒழுக்கம் ஏற்கனவே பெற்று உரியவர்களாக உள்ளவர்கள் உண்மை அறிவுடன் உண்மை கடவுளையும் உண்மை இன்பத்தையும் பெறும் வழியாக உள்ளது. எனவே சுத்தசன்மார்க்கம் என்றால் உண்மையறிதலும் மரணத்தை தவிர்த்தலும்.
    ஆக, மரணத்தை தவிர்த்துக் கொள்ள ஆசையும், அந்த ஆசையை நிறைவேற்ற அருள் வேண்டி உண்மை கடவுளின் சொரூபத்தை உள்ளத்தில் உணர விசாரமும் மட்டுமே சுத்த சன்மார்க்கம் ஆகும். இதோ வள்ளலாரின் சத்திய வாக்கியம் அப்படியே.
    * என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
    * என் மார்க்கத்தில் உண்மை அறிதலே.
    * சாகா கல்வியை தவிர 
    வேறு ஒன்றுமில்லை.
    இங்ஙனமாக விளங்கும் இந்த நெறியை, அதன் அடிப்படை தகுதி ஒழுக்கம், அன்பு, ஜீவகாரூண்யத்தில் மட்டுமே வெளிப்படுத்துதலின் விளைவால், அதன் உயர்வான சிறப்பான உண்மையான பொதுவாக விளங்கும் நெறி விரைந்து வெளிப்படுவது தடைப்படுகிறது.
    இந்த சுத்த சன்மார்க்கம் எல்லாருக்கும் பொதுவாக உள்ளது. 
    ஆனால் அதே நேரத்தில் மேற்படியான ஆசை (சாகாமல் இருக்க), அறிவு (கடவுளின் உண்மை காண விசாரம்) உள்ளவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள்.

    பணிவுடன்

    ஏபிஜெ அருள்.

     

  • ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

    ‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –1

    ஆண்டவரின் அருள் பெறுவது எப்படி?(வள்ளலார் வழியில்) — ஏபிஜெ அருள்.

    ‘நினைந்துநினைந்து” எதை நினைந்து என வள்ளலார் சொல்கிறார்கள்? பகுதி –1 

    அன்பர்களே!
    காலம் போய்க் கொண்டிருக்கிறதே இன்னும் உண்மை அறிந்திட்டப் பாடில்லை. இன்று விசாரத்தில் அழுந்தி நான் செய்த முயற்சியை என் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன் சொல்லி நல்ல விசாரத்தை தொடர்கிறேன். அன்புடன் ஏபிஜெ அருள்.
    உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என வள்ளலார் சொல்லியுள்ளார்கள் எனப் பார்க்கும் போது, மிக முக்கியமாக ஒன்றை குறிப்பிடுகிறார். அது “மரணமில்லா பெருவாழ்வு” ஆகும். இந்த வாழ்வை நல்கும் சாகாகல்வி ஆண்டவரின் அருளால் தான்,நம் ஒவ்வொருவர்க்கும் உரைக்கப்படுகிறது.
    ஆக, ஆண்டவர் அருளை நாம் பெறுவதற்கு காரணமே நித்திய வாழ்வுக்காக தான் என்பதை சத்தியமாக நாம் உணர வேண்டும். இந்த மரணமில்லா பெருவாழ்வை பெறுவதற்கு
    ஆண்டவரின் அருள் வேண்டும். அருளை பெற ஆண்டவரை காண வேண்டும். எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இறைஒளியை நாம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உணர்ந்து மெய்பொருளின் உண்மை சொரூபத்தை காணலாம். இதற்கான வழி என்ன என வள்ளலார் சொல்லியுள்ளார்கள்?. அது
    கீழே வரும் பாடலில் உள்ளது.
                         நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே 
                         நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு 
                         நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான 
                         நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
                         வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர் 
                         மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
                         புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் 
                         பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. 

    இப்பாடலினின் படி நாம் செய்யவேண்டியது::
    1) நினைந்துநினைந்து
    2) உணர்ந்துணர்ந்து 
    3) நெகிழ்ந்துநெகிழ்ந்து
    4) அன்பே நிறைந்துநிறைந்து
    5) ஊற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு 
    நனைந்துநனைந்து
    6) அருளமுதே நன்னிதியே ஞான 
    நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 
    வனைந்துவனைந் தேத்துதும்நாம்..
    ஆக, மேற்படி 6 யையும், நன்முயற்சி பயிற்சியில் நாம் செய்தே ஆக வேண்டும்.
    வரிசையாக காண்போம்.
    1) நினைந்துநினைந்து…
    இங்கு நாம் எவையை நினைந்து நினைந்து பார்க்க வேண்டும்?
    நாம் பெருவாழ்வில் பெருங்களிப்புறவே சித்தி எலாம் வல்ல சிவசித்தன் உளம் கலக்கப் போவது சத்தியமே என நாம் நினைந்து,(உறுதியாக கருத்தில் கொள்ள வேண்டும்)
    அடுத்து, நாம் வேறு கடவுள் வேறு என்று பிரித்து பார்க்காமல், அந்த உத்தம சற்குருவை ஓர் உறவே என நினைந்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்
    வள்ளலார்.
    அடுத்து, வள்ளலார் கட்டளைப்படி
    நாம் உலக பழக்க வழக்கங்களைத் தவிர்த்துக் கொண்டுள்ள நமது உள்ளகத்தே கடவுள் அமர்ந்து அருள் பாலிப்பது உண்மை என நினைந்திருக்க வேண்டும். (பாடல் ஆதாரம் : சார் உலக…),
    மேலும் மற்றொரு பாடலில்;
    “பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் 
    பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே 
    துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று 
    கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே 
    காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.”
    மேற்படி பாடல் மூலம் நாம் நினைந்து உரைக்க வேண்டியவை;
    பரம்பரமே 
    சிதம்பரமே 
    பராபரமே 
    வரமே 
    துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே 
    துரியமுடி அனுபவமே 
    சுத்தசித்தாந்தமதாய்த் 
    தணிந்தநிலைப் பெருஞ்சுகமே 
    சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே
    என்பவைகளே.
    அன்பர்களே!
    மேற்படியானவை முறையே பார்க்கும் போது;
    மேலானவரே!
    அறிவுவழியானவரே!
    முடிவாகிய உயர்வானவரே!
    வலமாகிய இறவாவாழ்வை அருளுபவரே!
    இதுவரை (வேதத்தில்) வெளிப்பட்ட அனுபவமில்லாத தனி அனுபவத்தை தந்தவரே!
    இதுவரை எவரும் பெற்றிடா உயர்நிலை தருபவரே!
    இதுவரை முடிந்தமுடிவை கடந்து பேரின்ப சித்தி பெருவாழ்வை அருளுபவரே!
    சாதாரணநிலையில் பெரும்சுகத்தை பெறவைப்பவரே!
    உண்மை பொது வழியில் கண்டுகொள்ளக்கூடிய மெய்பொருளே!
    நீயே ஒன்றெனும் ஒன்றாகிய இயற்கை உண்மை கடவுள்!
    என நாம் கருத்தில் முதலில் ஏற்றி, பின்பு உண்மை அன்பால் நினைந்து நினைந்து நன்முயற்சியில் இருக்க வேண்டும்.
    ஆக,
    மொத்தத்தில் நாம் நினைந்து பார்க்க வேண்டியது: (இங்கு நாம் என்பது உலக பழக்கவழக்கங்களை தவிர்த்தவர்கள் ஆவர்).
    # ஓர் உண்மை கடவுளே! என நினைந்து,
    # அக்கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட
    நாம் வேறு கடவுள் வேறு என்று பிரித்து பார்க்காமலும்
    # அக்கடவுளின் நிலைஉள்ளத்தில் உரைவதாக உள்ள உண்மையை நினைந்து
    # ஆண்டவரின் அருளால் பெற்ற சாகாகல்வியின் பயனாகிய மரணமில்லா பெருவாழ்வில் வாழ்தலை நினைந்து,நினைந்து முயற்சித்தல் வேண்டும்.
    இங்ஙனமாக கடவுளை உள்ளபடி நினைந்து, உள்ளமெல்லாம் கனிந்துருகி நினைந்து இருத்தல் வேண்டும். 
    (தொடரும்).நன்றி.

  • இதுவே நியாயம், இதுவே உண்மை,இதுவே சுத்த சன்மார்க்கம் – ஏபிஜெ அருள்

    இதுவே நியாயம்— ஏபிஜெ அருள்.

    மார்க்கம் என்றால் வழி.
    சன்மார்க்கம் என்றால் மெய்பொருளாகிய கடவுளை கண்டு அருளை பெறும் வழி
    உலகில் எண்ணிலடங்க வழிகள் சொல்லப்பட்டு, பல சமய மத சன்மார்க்கங்கள் உள்ளது.
    அதில் முக்கியம்; சைவம்,வைணவம்,கிறிஸ்து,
    இஸ்ஸலாம்,சீக்கியம்,ஜைணம், பெளத்த மதம் உள்ளது. இந்நிலையில், தான் வைத்திருந்த சைவ சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி வழியில் முயற்சித்தாரவே வள்ளலார். அந்த வழிக்கு சுத்த சன்மார்க்கம் எனப் பெயர் வைத்து அழைத்தார்கள். சுத்த சன்மார்க்கம் என்றால் உலகில் காணும் சன்மார்க்கங்களை (அதாவது ஏற்கனவே வெளிப்பட்ட வழிகளை வழிபாடுகளை) மறுக்க வந்ததது என்கிறார் வள்ளலார். நான் கண்ட கடவுள் சமய சாத்திரப் புராணங்களில் சொல்லப்பட்ட கர்த்தர்,கடவுள் அல்ல என்கிறார்கள். கருணை விருத்திக்கு தடையாக உள்ளவை சாதி சமய ஆசாரங்களே! என்கிறார் வள்ளலார். எனவே முழு உண்மை உரைக்காத சாதி சமய மதங்களில் லட்சியம் வையாது, கடவுளின் அருளைப்பெற்று தரும் கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டு ஒழித்து உண்மை கடவுளை கருத்தில்கருதி உண்மை அன்பால் மட்டுமே வழிபாடு செய்தல் வேண்டும். இதுவே நான் கண்ட வழி (சுத்த சன்மார்க்கம்) என்கிறார்.
    இதுவே சத்தியம் என்கிறார் வள்ளலார்.இந்த உண்மையை தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையில் நமக்கு தெரிவிக்கிறார் வள்ளலார். இந்த வழியில் சென்று உண்மை ஆண்டவரின் சொரூபத்தை கண்ட வள்ளலாருக்கு இறைவன் சாகா கல்வி போதித்தார்.இந்த இன்பம் என்னை போல் எல்லோரும் பெறவேண்டும் என வள்ளலார் இறைவனிடம் வேண்டினார். பெருவெளி அடைந்த வள்ளலாரிடம் இறைவன்; ” நீ வந்த வழியை குறித்து நீயே மக்களிடம் விளக்குவாய் ” என நாம் இருக்கும் அறியாமை இடத்திற்கே அனுப்பி வைக்கிறார் இறைவன்.இதுவே வருவிக்கவுற்றது ஆகும்.
    இதுவே சுத்த சன்மார்க்கம்
    இதுவே உண்மை.

    இந்த உண்மையை தான் சொல்ல வேண்டும், சொல்லிய படி அறிய வேண்டும்,
    அறிந்த படி இடைவிடாது முயற்சிக்க வேண்டும். 
    முயற்சித்தவர்களுக்கு அகத்தில் அனுபவம் ஏற்பட்டு இறை ஒளி காணலாம் சாகா கல்வி கற்கலாம். இது சத்தியம் என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்.
    இந்த நெறியை உலகம் அறிய கூட்டம் மாநாடு நாம் செய்யலாம். இதை அறிய எல்லோரும் வரலாம். (ஆனால் சமய மதத்தார்களை மேடை ஏற்றினால் மேலே சொன்ன வள்ளலாரின் தனி நெறியை எங்ஙனம் வெளிப்படுத்துவார்கள்??) இரக்கம்,ஜூவகாருண்யம், இவை நம் மார்க்கத்தின் அடிப்படை தகுதிகளாக உள்ளது. இரக்கம் ஜூவகாருண்யம் சமய மதங்களிலேயே வெளிப்பட்டுள்ளது. இதுவல்ல வள்ளலார் கண்ட உண்மை. 
    கருணைக்கு தடையாக உள்ள சாதி சமய ஆச்சாரங்கள் விட்டு ஓழிக்க வேண்டும் தலைவனை(கடவுளையே) மட்டுமே கருத்தில் கருதி தொழவேண்டும். இதுவே சுத்த சன்மார்க்கம்.
    இந்த ஆசை உண்டேல் வம்மீன் என்கிறார் (எல்லோரையும் அல்ல). ஆனால் எல்லோருக்கும் உண்மையறிய வழி திறந்தே உள்ளது. வழி திறந்தே உள்ளது என்பதற்காக சாதி பற்று உடையவர்கள் சமய மத ஆச்சாரங்களை செய்பவர்கள் பயணிக்க முடியாது.அதாவது வள்ளலார் வழியில் வழிபாடு செய்ய முடியாது. காரியப்படாது. 
    எல்லா சமய மத நெறிகள் ஒவ்வொன்றும் எங்ஙனம் தனி நெறியாக விளங்குகிறதோ அது போல் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமும் 19 ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய தனி நெறியாகும்.
    இதுவே நியாயம். 

    நன்றி : ஏபிஜெ அருள், கருணை சபை,மதுரை.

  • ‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.

    ‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.
    (குறிப்பு: வள்ளலார் வழியாகிய சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குரிய கட்டுரை)

    பொதுவாக ஏதேனும் காரணங்கள் சொல்லி மக்கள் சந்தோசமாக இருப்பதில் சந்தோசம் தான். அதன் வரிசையில் இந்த தீபாவளியை நாம் கருதலாமா? என்ற கேள்வி வரும் போது நம் வள்ளலார் இவை குறித்து என்ன சொல்லியுள்ளார்கள் என்பதே சரியாகும். என் மார்க்கம் அறிவு மார்க்கம் மற்றும் உண்மை அறியும் மார்க்கம் என்கிறார்.ஆக, ஒன்றை சொல்லும் போது கேட்கும் போது, அதன் உண்மை என்ன என தெரிந்துக் கொள்பவர்களே நாம்.
    இந்த விழா[தீபாவளி] எதன் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது என்ற உண்மை அறியும் ஆசை உள்ள நம்மவர்கள் மட்டும் கட்டுரையை தொடரலாம். 
    இந்த நாட்டில் இந்த பண்டிகை முழுக்க முழுக்க புராணம்,இதிகாச அடிப்படையிலேயே கொண்டாடப் படுகிறது.புராணம் எதுவெனில்; விஷ்ணு புராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இதிகாசம்: இராமாயணம். இதில் விரதம், நோன்பு உண்டு.சரி நம் சுத்தசன்மார்க்கம் என்ன சொல்கிறது?
    வள்ளலாரின் கட்டளை யாதெனில்; வேதம்,ஆகமம், புராணம்,இதிகாசம் போன்ற கலைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்கள். இங்ஙனம் வள்ளலாரின் கட்டளை இருக்கும் போது புராணத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் தீபாவளி சுத்த சன்மார்க்கத்தாருக்கு கிடையாது. கூடாது. சமய நம்பிக்கை உள்ளவர்களின் ஒரு விழா.

    ஏன் புராணம், இதிகாசத்தில் லட்சியம் வைக்க கூடாது? இதோ நம் அய்யா கீழ்வருமாறு சொல்கிறார்கள்;
    ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள், என்கிறார் வள்ளலார். மேலும், அவ்வாறு இதில் பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் இதில் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் நம் அய்யா. அய்யாவின் கட்டளையை ஏற்பவர்கள் தான் சுத்த சன்மார்க்த்தில் இருக்கும் தகுதி பெறுவர் என்பது மிகவும் எல்லோருக்கும் தெரிந்த விதி.

    வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையேஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தேதீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநாயகனே!”

    இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

    இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
    மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
    வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
    தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
    சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
    அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
    அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

    கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
    கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
    கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
    காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
    பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
    பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
    தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
    தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.”

    தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
    சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
    ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
    உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்…”

    ” தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
    சேர்கதி பலபல செப்புகின் றாரும்
    பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
    பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
    மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
    மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
    எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
    எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.”

    இன்னும் பல பாடல்கள் உள.
    நம்மவர்களே, வள்ளலார் வழியில் உள்ளவர்களே, இதிகாசம்,புராணம் இவையில் லட்சியம் வையாதீர்கள். இதில் லட்சியமில்லை என்றால் புராண இதிகாச அடிப்படையில் அமையப் பெற்ற ” தீபாவளி” ஏது?  கூடாத ஒன்றுக்கு ” வாழ்த்து” ஏது.?
    வள்ளலார் இந்த உண்மையை தான் சொன்னார்கள். ஆனால்; அன்றைய தினம் அதாவது 22/10/1873 ல் இருந்த நிலைப்பற்றி வள்ளலாரே சொல்கிறார்கள்;
      ” உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”
    30/01/1874 ல் சொன்னது; 
    “இது காறும் என்னோடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை.”
    இன்றாவது வள்ளலாரிடம் சொல்வோம்
    ” அய்யா, நீங்கள் சொல்லவந்ததை இன்று நாங்கள் தெரிந்துக் கொண்டோம்” என்று.
    இதோ வள்ளலார் நமக்காக எங்ஙனம் வேண்ட வேண்டும் என்று சொன்னதை இன்று சொல்லி ஆண்டவரிடம் வேண்டுவோம்;
    எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
    இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

    நன்றி:அன்புடன் ஏபிஜெ. அருள்,கருணை சபை சாலை.