Blog

  • படியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம்

    படியுங்கள்,உண்மை தெரிய வரும்.இது சத்தியம். இன்று திருஅறை தரிசனம். இதே நாளில் வள்ளலார் என்ன சொன்னார்கள்?– ஏபிஜெ அருள்.
    அதிசயம் நடந்த நாள்.
    எவரும் பெற்றிராத பேறு.
    என்ன அதிசயம்?
    எத்தகைய பேறு?
    என்றால்; 
    திருவருட் பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க நெறி வழியில் கடவுள் அருளை 12/04/1871 ல் பெற்றார்கள். 
    இங்கு வள்ளலார் பெற்ற “கடவுள் அருள்” என்பது;
    மற்ற சமயமத மார்க்கங்களில் கிடைக்கக் கூடிய/கிடைத்த பயன் போன்றது அல்ல. 
    வள்ளலார் பெற்ற பேறு “ஒளி தேகம் – தனி வடிவம்” ஆகும்.
    இது இறைவனால் “சாகா கல்வி” போதிக்கப்பட்டு, சாகாவரத்தில் கொடுக்கப்படும் வலமான வாழ்வாகிய “மரணமில்லா
    பேரின்ப பெருவாழ்வு”என்கிறார் வள்ளலார்.
    12/04/1871ல் சுத்த சன்மார்க்க வழியில், உண்மை கடவுளை, தனி வெளியில் கண்டு, கடவுள் அருளால் சாகா கல்வி அறிந்து, பேரின்பத்தை அனுபவித்ததினால் அவர் தேகம் ஒளியாகி தனி வடிவத்தில் மாறியது. 
    “தனி வெளியில்” இந்த சாகாவரத்தை வள்ளலார் பெறுவதற்கு காரணமாக இருந்த “தகுதி” என்ன தெரியுமா?
    உண்மை கடவுளிடம், அவர் வேண்டியதை நாம் தெரிந்துக் கொள்வதின் மூலம், வள்ளலார் பெற்றியிருந்த தகுதியை நாம் அறியலாம். 
    இதோ வள்ளலார் இறைவனிடம் முறையிட்டது;
    “எனக்கு கிடைத்த இந்த பேறு இவ்வுலகத்தார் பெறுதல் வேண்டும்” என வேண்டினார். 
    இதுவே ஆன்ம நேய ஒருமை பாட்டுரிமை. 
    இதுவே பொது நோக்கம். 
    இதுவே சுத்தசன்மார்க்கத்தின் “ஞான ஆசாரம்” ஆகும்.
    இறைவன் வள்ளலாரின் வேண்டுதலை ஏற்றார்.
    கடவுள் வள்ளலாரிடம்;
    ” இப்பேறு பெறும் இந்த 
    பொது வழியை,
    நீயே இவ்வுலகத்தார்களிடம் விளக்கிச் சொல்ல செல்க! 
    எனவே மீண்டும் நம் வெளிக்கே வள்ளலாரை அனுப்பி வைத்தார் ஆண்டவர். 
    (இதைத் தான் உண்மை கடவுளால் “வருவிக்கவுற்றேன் என்கிறார் வள்ளலார் என்று அறிக).
    வள்ளலார், தன் ஒளிதேகத்தை,
    நம் பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டு 2 1/2 இரண்டரை வருடமாக நமக்கு சுத்த சன்மார்க்க உண்மையை, ஒழுக்கத்தை சொல்லிக்கொண்டு வந்தார்கள். இதை பேருபதேசத்திலும், 12/04/1871 கடித அறிவிப்பிலும் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
    மேலும்,
    30/01/1874 லும், அதாவது திருஅறை காப்பிட்டுக் கொள்ளும் முந்தின இரவில் (12 மணிக்கு முன்பு )அறைக்குள் செல்லும் முன்பு நம்மிடம் முக்கியமாக ஒன்றை பதிவு செய்கிறார்கள். அதை இங்கு காண்போம். –அன்புடன் ஏபிஜெ அருள், கருணை சபை சாலை, மதுரை.

    வள்ளலாரின் சத்திய வாக்கியம் அப்படியே தரப்பட்டுள்ளது.

    (சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்பது; )
    ” …இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் ,
    என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.”
    (இங்கு வள்ளலார் விடச்சொல்லும் ஆசாரங்கள் எவை?)
    அவர் நமக்கு ஏற்கனவே உபதேசித்து உள்ளார்கள்.
    அவையாவன: 
    (எதற்காக இந்த ஆசாரங்களை விட வேண்டும்?)
    இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
    “இந்த ஆசாரங்ககள் தயவை விருத்தி செய்வதற்குத் தடையாய் இருக்கின்றன” என்கிறார்.
    (” தயவு” விருத்தி ஏன் பண்ண வேண்டும்?)
    இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
    “தயவு தான் என்னை ஏறா நிலை மேல் ஏற்றியது. தயவால் தான் பொது நோக்கம் பெற்றேன். பொது நோக்கமே சுத்த சன்மார்க்க ஞான ஆசாரம்” என்கிறார்கள்.
    (பொது நோக்கம் ஏன் வருவித்துக் கொள்ள வேண்டும்?)
    இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
    “காருண்ணியம் விருத்தியாகி கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியுமே அன்றி வேறு வகையில் பெறுதல் கூடாது (முடியாது).” என்கிறார் வள்ளலார்.
    இரண்டரை வருடத்திற்கும் மேல் ஒளி தேகத்தை மறைத்துக் கொண்டு நம்மோடு இருந்து, தனக்கு உண்மை கடவுள் நிலை காண உதவிய வழியை (சுத்த சன்மார்க்கத்தை) உபதேசித்து வந்த வள்ளலார். அதாவது,
    ( 12/4/1871 பிறகு)
    உபதேசித்தும், விண்ணப்பங்கள் நான்கிலும்,திரு அகவலிலும் விளக்கி உள்ளார்கள். சத்திய ஞான சபை கட்டி அதன் மூலம் விளக்கியும் உள்ளார்கள்.
    (ஆறாம் திருமுறை) பாடல்களில் அனுபவமான, சாகாவரத்தின் இன்பத்தை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இந்த உண்மை அறியும் ஆவலோ, அறிவோ அன்று உலகத்தார்களிடம் இல்லை. காரணம் 1) சாதிசமயமத கட்டுப்பாட்டு ஆசாரங்கள் ஆதிக்கம்.
    2) வள்ளலார் வெளிப்படுத்திய மார்க்கம் புதியது, தனி தன்மை கொண்டது.
    தான் சென்ற புதிய,தனி வழியை மக்கள் பொது வழியாகவும் உண்மை வழியாகவும் தெரிந்துக் கொள்ள காலம் தேவைப்படும் விசயத்தை உணர்ந்தார் வள்ளலார். அன்று
    அவரை சுற்றியிருந்தவர்கள் எவருமே தான் சொல்லிய உண்மையை தெரிந்து கொள்ளவில்லை என்று 22/10/1873லும், 30/01/1874லும், பல பாசுரப்பாடலிலும் பதிவு செய்து உள்ளார் வள்ளலார்.
    22/10/1873 ல் சொன்னது;
    ”உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”
    மேலும் 30/01/1874ல் பதிவு செய்கிறார்கள்.
    அதுவும் இதோ;
    ” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”
    அன்பர்களே!
    அன்று இருந்தவர்கள் அப்படி…
    இன்று நாம்…. எப்படி?
    அன்பர்களே!
    நான் இன்று இப்படி…

    திருவருட் பிரகாச வள்ளலாரே!
    சுத்த ஞானியரே!
    இன்று நான் 
    அன்று நீங்கள் சொல்லிய

    #சுத்த சன்மார்க்க உண்மையை தெரிந்துக் கொண்டேன்.
    # ஆசாரங்களை விட்டொழித்தேன்.
    # பொது நோக்கம் வருவித்துக் கொண்டேன்.
    # இடைவிடாது கருணை நன்முயற்சியில் இருப்பேன்.
    இது சத்தியம்
    இது சத்தியம்
    இது சத்தியம்.
    சுத்தஞானியாரே!
    தனி வடிவம் பெற்றவரே!
    திருவருட் பிரகாச வள்ளலாரே!
    # தயவை விரைந்து விருத்தியாக்கி, உண்மை கடவுள் அருள் பெற, என்னுள் நீங்கள் இருந்து, 
    என் உள்ளத்திலே உண்மை ஆண்டவர் வெளிப்பட்டு,எனக்கு உண்மை (சாகா கல்வி) விளக்க, நீங்கள் உதவி புரிந்திட வேணுமாய் பணிவுடன் வேண்டுகிறேன். 
    நீங்கள் சொன்ன உண்மையை நான் இன்று தெரிந்துக் கொண்டதை போல், இவ்வுலகத்தார்களும் தெரிந்துக் கொள்ள வேண்டுகிறேன்.
    அன்புடன் பணிவுடன்;
    ஏபிஜெ அருள்.

    அன்பர்களே!
    தகுதியாக்கி கொண்ட நமக்கு,
    நம்முள் உண்மை கடவுள் வெளிப்பட்டு விளங்க, எல்லா வகையிலும் உதவிட வள்ளலார் தோன்றுவது சத்தியம்.

    அன்பர்களே!
    உண்மை தெரிந்து கொண்டவர்கள்,
    உண்மை தெரிந்துக் கொண்டேன் என்று இங்கு சத்தியமாக 
    (comments ல்) பதிவிடுங்கள்.

    நம்முள் உண்மை வெளிப்பட எல்லா வகையிலும் உதவிட வள்ளலார் தோன்றுவது சத்தியம். இதை
    மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் செய்யுங்கள்.

    உண்மை தெரிந்துக் கொண்டவர்கள், வடக்கு திசையில் இருந்து, தென் திசை முகம் கொண்டு,
    நம் அகத்திலே உள்ளழுந்தி,சிந்தித்து, 
    சிந்தித்தலை விசாரித்து, சாகாக் கலையை பெறுகிறதற்கு, கண்ணீர் விட்டு, உண்மை கடவுள் நிலை காண நன்முறையில் இடைவிடாது இருப்போம். நம்முள் உள்ளொளி ஓங்கி பேரின்ப பெருவாழ்வை பெறுவோம்.

    (ஆசையும்,நன்முயற்சியும் நம்மிடம் விரைந்து தோன்ற நான்கு விண்ணப்பங்களையும், பேருபதேசத்தையும் மீண்டும் மீண்டும் ஊன்றி வாசிக்க வேண்டும்.
    “நினைந்து..நினைந்து..” எனத் தொடக்கமுடைய 28 பாசுரப் பாடல்களில் கண்டப்படி தெய்வபாவனையை சித்தி வளாக தீபத்தில் செய்யுங்கள் என்கிறார் வள்ளலார்.
    (வடலூர் வரதாவர்கள் நம்மூர் சபை அல்லது நம் வீட்டு தீபத்தில் செய்யுங்கள் உண்மை தெரியும் வரை.) 
    இவண்:-கருணைசபை, மதுரை.
    வணக்கம். —- ஏபிஜெ அருள்
    948768314/ 9487417834/ apjarul1@gmail.com.

  • வள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும்

    Valluvar-Vallalar

    வள்ளுவரும் – வள்ளலாரும்.உண்மையும் சாகா நிலையும்.  — ஏபிஜெ அருள்.

    ஆம்,வள்ளுவர் சொன்னார்,வள்ளலார் செய்து முடித்தார்.
      வள்ளலார் சமயத்தில் இருக்கின்ற போதே திருக்குறள் வகுப்பு எடுத்தார்கள். வள்ளலாரை போல் எந்தொரு சமயமத ஞானி, யோகி எவரும் திருக்கறள் வகுப்பு எடுத்தது கிடையாது.  இரக்கம்,புலால் உண்ணாமை,ஒழுக்கம் இவை குறித்த உண்மைகளை வள்ளுவர் சொன்னது மட்டிலுமா வள்ளலார் வகுப்பு எடுத்தார்கள். இதோ வள்ளலார் சொல்கிறார்கள்:(தேவர் குறளில் சாகாகல்வி)வேதங்கள் முக்கியம் சாகாதகல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் ‘சாகாத கல்வியைக்’ குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி என்கிறார்கள் வள்ளலார்.

    சாகாகல்வி என்றால்,,,???நிற்க!இது உண்மையா ? இது சாத்தியமா ? என்று ஒரு பக்கம் சந்தேகம் உங்களுக்கு இருந்தாலும் மேற்படியாக சொன்ன ஒரே மார்க்கம் வள்ளலாரின் மார்க்கமே.சாகா கல்வியை இறைவனே தனக்கு உரைத்தார் என்றும், அப்பயனை தான் பெற்றதாக சொல்லுகிறார் வள்ளலார். மேலும் எல்லோரும் பெறுவதாகவும் உள்ளது என்கிறார்கள். இந்த உண்மையை ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் தெரிவித்தேன் என்கிறார்கள்-மேலும் வள்ளலார் கூறுகையில்; தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிக்கின்றது- அதை தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்- என்கிறார்கள்திருவள்ளுவர் எழுதியது திருக்குறள் என எல்லோரும் அறிவோம்-நிற்க! திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து பாடல்களில்;குறள்

    3:“ நிலமிசை நீடுவாழ் வார் ” (குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்)குறள்

    4:”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல”இதில் இடும்பை என்பது துன்பங்கள் எனப்படும்- சமய சான்றோர்கள் துன்பம் என்றால் பிறவித் துன்பங்கள் என்பர்-ஆனால் துன்பங்களில் பெரிய துன்பம் மரணம் தானே! இறைவனின் அருள் பெற்றவர்க்கு மரணம் என்ற துன்பம் கிடையாது என திருவள்ளுவர் சொல்லியுள்ளார்கள் என ஏன் சொல்லக் கூடாது-குறள்

    6:பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார்குறள்

    8: ”அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது”இதில் “பிற ஆழி நீந்தல் = பிறவாகிய கடல்களை நீந்தல், அரிதுகுறள்

    10:”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”நிற்க!மேலே நாம் கண்ட குறள்களில்;“பிறவி கடல்” “ நீடுவாழ் வார்” “இடும்பை இல” என கண்டோம்-இதற்கு தக்க ஆசிரியர் மூலமாய் தெரிந்து கொள்ளலாம் என்ற வள்ளலாரின் வார்த்தை நினைவில் கொள்ள வேண்டும்-ஆனால்; 

    ஆனால் திருவள்ளுவர் திருக்குறளை தவிர வேறு பல நூலையும் எழுதியுள்ளார்-திருவள்ளுவ நாயனார் திருக்குறள் தவிர அருளிய நூல்கள்;-ஞான வெட்டியான்-பஞ்ச ரத்தினம்- நவரத்தின சிந்தாமணி-கற்ப நூல் – குரு நூல் – சர நூல்-முப்பு (சூத்திர)இதில் “ஞான வெட்டியான் – 1500″/ ல்;

    பாடல் 8 ;

    தசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்ஜெகதலத்தி லெனைப்பழித்த செய்திவாறும்அசைவதிருந் தாக்கையசை யாதவாறுமடி நடுவு முடிவான கற்ப வாறும்பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்பஞ்சபட்சி யஞ்சு நிலைத் திருந்த வாறும்இசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறுமிராஜயோ கத்தினருள் காப்புத் தானே

    -(மேற்படி பாடலில் அசைவதிருந் தாக்கையசை யாதவாறு என்பது;இந்தத் தேகத்தை அழியாமலிருத்தி வைக்கத் தக்க —- மார்க்கத்தை)

    அடுத்த பாடல் 9;

    யோகாதி யோக நிலைத் திருந்த பேர்க்குமுற்பன்மாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்வெண்சாரை கரு நெல்லி விதித்த போக்கும்போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூ நீர்ப் போக்கும்பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும்ஆகாத மணிதர்களை யகற்றும் போக்குமசடில்லா மாதுரச குளிகை காப்பாம்(இங்கு; சாவைப் போக்கும் வேகாத் தலை, போகாப்புனல், உள்ளது-வள்ளலார் சொல்வது; சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் இம்மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்று சொன்னதை நினைவில் கொள்க)

    அடுத்த பாடலில் 11;”—-உயிருமுடல் நிலைத்திடவு பாயஞ் சொன்னாள்”ஆக; வள்ளலார் சொன்ன சாகாகல்வி ஏற்கனவே திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த “ ஞான் வெட்டியான்” ல் சொல்லப்பட்டுள்ளது-அதன் பின்பு சமய,மத,வேதங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள் இவையின் தோன்றலால், ஆதிக்கத்தால் மேற்படி ”சாகாகல்வி” மறைக்கப்பட்டு, பூட்டப்பட்டு விட்டிருந்தது-வள்ளலாரின் சத்திய அறிவால் இடைவிடாத கருணை முயற்சியின் பயனால் இறையருளால் அக்கல்வி வெளிப்பட்டுள்ளது- அக்கல்வியால் மரணத்தை வென்ற முதல் சுத்த ஞானியே நம் வள்ளலார்- அவர் பெற்ற பயனை நாமும் பெறலாம் எனச் சத்தியம் செய்து சொல்கிறார்கள்-நிற்க!ஆனால் வள்ளுவர்க்கும் வள்ளலாருக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சமயங்களில், மதங்களில் மார்க்கங்களில் கடவுள் அருளால் நீடுழி வாழலாம் என்றும், சாமாதியடைதல் முக்தியடைதல் மீண்டும் பிறவாதிருத்தல் இவையே கடவுள் அருள் என சொல்லப்பட்டுள்ளது-இங்ஙனமாக கொள்கையை கொண்ட சமயத்தில் மதத்தில் பற்று வைத்தால் பற்று வைத்தவர்களால் அச்சமய, மத கட்டுப்பாட்டை மீறி எப்படி சிந்திக்க முடியும்- மரணத்தை ஒத்துக்கொண்டவர்கள் எங்ஙனம் சாகாகல்வி குறித்து விசாரிப்பார்கள்? ஆச்சாரங்களை கைக்கொண்டவர்களிடத்தில் கருணை விருத்தியாகாது என்ற உண்மையையும் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்-எனவே, அன்பர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்-சரியோ, தப்போ,இயலுமோ, இயலாதோ,இங்ஙனம், அதாவது, சாகா கல்வியே வள்ளலார் மார்க்க நெறியாக சொல்லப்பட்டுள்ளது- சாகாகல்வி குறித்து பல பாடல்கள், உபதேசங்கள் வள்ளலார் செய்துள்ளார்கள்-தான் கொண்டியிருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை வள்ளலார் கண்டார்-அம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமயம் ,மதம், மார்க்கங்களை அறிவித்து உள்ளார் என்று சொல்வது தானே சரியாகும்- நியாயம் ஆகும்-இது தானே உண்மை.சாகா கல்வியின்  உண்மைப் பொருளை வள்ளுவர் வெளிப்படுத்தினார்.உண்மை பொருளை கருத்தில் கொண்டுசாகாவரம் பெற, சாதனமாக “இரக்கம்” மட்டுமே கைக்கொண்டு மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர் வள்ளலாரே. மனிதர் எல்லோரும் கடவுள் அருளால் சாகாமல் இருக்கலாம் என்கிறார் வள்ளலார்.”வள்ளலாரின் வழியில்” இடைவிடாது நன்முயற்சியில் நாமும் சாகாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் முயற்சிப்போம்.

    நன்றி :: ஏபிஜெ அருள்

  • வடலூர் சத்ய ஞானசபை ஜோதி தரிசன நாள்காட்டி 2026 Vadalur Sathya Gnana Sabhai Monthly Poosam Calendar 2026

    Vadalur Traffic diversion - Feb1-20262026 Thai poosam Vadalur 

    பூசம் 2025

    ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகளுண்டு. அவை,

    1. கறுப்புத்திரை – மாயாசத்தி
    2. நீலத்திரை – கிரியாசத்தி
    3. பச்சைத்திரை – பராசத்தி
    4. சிவப்புத்திரை – இச்சாசத்தி
    5. பொன்மைத்திரை – ஞானசத்தி
    6. வெண்மைத்திரை – ஆதிசத்தி
    7. கலப்புத்திரை – சிற்சத்தி”

    அந்த திரைகள் என்ன என்பதை அகவலில் விளக்கி உள்ளார் .

    கரைவின் மா மாயைக் கரும் பெருந் திரையால்
    அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
    பேருறு நீலப் பெருந் திரை அதனால்
    ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
    பச்சைத் திரையால பரவெளி அதனை
    அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
    செம்மைத் திரையால் சித்துறு வெளியை
    அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
    பொன்மைத் திரையால பொருளுறு வெளியை
    அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
    வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
    அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !
    கலப்புத் திரையால கருது அனுபவங்களை
    அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

    இந்த ஏழு திரைகளையும் எவ்வாறு விலக்குவது?  என்று நம்பெருமானார் பேருபதேசத்தில் விளக்கியுள்ளார்,

    “பரலோக விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.”

    “ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.”

    இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் – இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், “தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்“.

    “அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் – இதைவிடக் – கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.”

    “ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது.”

    “ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்றத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.”

  • திருவள்ளுவர் ஆண்டு 2050. திருவள்ளுவர் தினம் 16-01-2019

    திருவள்ளுவர் ஆண்டு 2050.
    திருவள்ளுவர் தினம் 16-01-2019.

    திருவள்ளுவ நாயனார் “திருக்குறள்” தவிர அருளிய நூல்கள்;
    -ஞான வெட்டியான்
    -பஞ்ச ரத்தினம்
    – நவரத்தின சிந்தாமணி
    -கற்ப நூல் – குரு நூல் – சர நூல்
    -முப்பு (சூத்திர).

    வள்ளலார் 19 நூற்றாண்டில் தன் சுத்த சன்மார்க்கம் என்பது இறப்பை ஒழிக்கும் மார்க்கம் என்கிறார்.
    என் மார்க்கத்தில் சாகா கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.

    சாகா கல்வி குறித்து ஒருவாறு தேவர் குறளில் சொல்லப்பட்டுள்ளது என்கிறார் வள்ளலார்.
    ஆம்,
    திருவள்ளுவர் எழுதிய “ஞான வெட்டியான்” நூலில் சாகா கலை குறித்து உள்ளது. வள்ளுவர் தெரியப்படுத்திய சாகா கல்வி உண்மையை நல்விசாரணை செய்து இறையருளால் மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர் வள்ளலாரே.
    நாமும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்கிறார்கள்.

    நமது நாட்டில் எந்தவொரு சமயமதங்களும் திருக்குறளை எடுத்திடாத காலக்கட்டத்தில் வள்ளலார் ஒருவரே தனது நிலையத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தினார்கள்.

    எவர் ஒருவர் ஒழுக்கத்தையும் இறைஉண்மையும் தெரிய அறிய அனுபவிக்க ஆசைப்படுகிறார்களோ அவர்கள் வள்ளுவரையும் வள்ளலாரையும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
    ஊர்தோறும் வள்ளுவர் வள்ளலார் மன்றம் ஆரம்பிக்க வேண்டும்.

    அன்புடன்:
    ஏபிஜெ அருள்,
    நிறுவநர் – வள்ளுவர் வள்ளலார் மன்றம்.

  • சத்ய ஞானசபை, வடலூர்

    சத்ய ஞான சபை 

    தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை தோற்றுவித்தார்

    வரலாறு

    பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது திருவருட்பா என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சத்திய ஞான சபை ஒன்றினை 1872 சனவரி 25 இல் நிறுவினார். இந்த சத்ய ஞான சபை எல்லா சமயத்தவரும் வந்து வணங்ககூடிய ஒரு பொதுவான ஆலயம் ஆகும். ஆயினும் கொலை, புலை (மாமிசம்) தவிர்த்தவர் மட்டுமே சபைக்கு உள்ளே புக அனுமதி உண்டு. இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்துள்ளது. மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார். சத்ய ஞான சபை என்பது மனித உடம்பில் தலைப் பகுதியைக் குறிக்கும்.

    ஞானசபை

    ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்து காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார். ஞானசபை என்பது அண்டத்தில் அக்கினியை குறிக்கும். கடவுள் நிலையை அறிதல் ஞானசபை அனுபவம் ஆகும்.

    எண்கோண வடிவ சபை

    தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும். அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இது நமது தேகத்தின் தத்துவ விசார விளக்கமே. அதை புறத்தில் காட்டவே சத்திய ஞான சபையை அமைத்துள்ளார். முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இடைவெளி எட்டடிகளாம். சத்திய ஞான சபையின் உட்புறத்தில் ஆன்ம ஜோதியை உணர முடியாமல் தடுக்கும் இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு ஞான சபை தாய்ச் சுவரின்கண் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரனுபவம் பூரணமாய் பெற்று அருளனுபவ நிலையில் நிற்கும்போதுதான் இந்த இருபத்திநான்கு வாயில்களும் திறக்கப்படும்போதுதான் ஒளிவடிவிலான அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனத்தைப் பெறலாம்.

    திசை

    சத்திய ஞானசபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஏனெனில் தெற்குத் திசை என்பது சாகாக்கலையும் நித்தியதேகத்தையும் பெறுவதற்கு ஏற்ற திசை ஆகும். தெற்கு பாகம் அக்கினிப்பிரகாசம் உடையது. அதனால் ஞானசித்தியை கொடுக்கும் திசையாகும். இதை குறிக்கும் பொருட்டே சத்திய ஞானசபையை தெற்கு நோக்கி அமைத்துள்ளார்.

    ஏழு திரைகள்

    இந்த உடம்பிலிருக்கின்ற ஆன்மா சிற்றணு வடிவுடையது. நமது சிற்சபையான புருவமத்தியில் தான் ஆன்மாவை உணர முடியும். இந்த ஆன்மாவானது அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடையது. இது கால் பங்கு பொன்மை நிறமும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் உடையது. இந்த அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடைய ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியாதபடி மாயா சக்திகளாகிய ஏழுதிரைகள் மறைத்துக் கொண்டு இருக்கிறது. அவை:

    1. கறுப்புத்திரை – அசுத்த மாயாசத்தி
    2. நீலத்திரை – சுத்த மாயாசத்தி
    3. பச்சைத்திரை – கிரியாசத்தி
    4. சிவப்புத்திரை – பராசத்தி
    5. பொன்மைத்திரை(மஞ்சள்) – இச்சாசத்தி
    6. வெண்மைத்திரை – ஞானசத்தி
    7. கலப்புத்திரை – ஆதிசத்தி

    இந்த ஏழு மாய திரைகள் நமது புருவமத்தியில் உள்ள ஆன்மப்பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழு மாய திரைகளை அகற்றினால்தான் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியும். இந்த உண்மை தத்துவத்தினை குறிக்கும்பொருட்டே சத்ய ஞான சபையில் ஏழுதிரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

    சத்திய ஞானசபை பெயர் மாற்றம்

    1872 சூலை 18 அன்று நிலையங்களின் பெயர்களை வள்ளலார் மாற்றி அமைத்தார். அதன்படி சத்திய ஞானசபை சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என பெயர் மாற்றம் பெற்றது. அதன் வழிபாட்டு முறைகளும் வகுக்கப்பெற்றன.

    தைப்பூசம்

    சத்திய ஞான சபையில் 1872 சனவரி 25 (தை 13) வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி முழுநிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள்தான் தைப்பூச விழாவாகும். அன்று ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

    இரும்புசங்கிலி

    சத்திய ஞானசபையைச் சுற்றி இரும்புச்சங்கிலி வளையமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு நமது மூக்குத்துவாரத்தை ஒத்திருக்கிறது. அது நமது ஒரு நாளைய சுவாசம் 21600-ஜ உணர்த்துகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இந்த இரும்புச் சங்கிலி துருப்பிடிக்காமல் உள்ளது.

  • பொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும்

    பொங்கலோ… பொங்கல். சுத்த சன்மார்க்கப் பொங்கல் பொங்கட்டும் — ஏபிஜெ அருள் (2019).

    பொய்யை விட்டு ஒழிக்கும்
    போகி நாள்.
    உண்மை வெளிப்பட்டு பொங்கும் பொங்கல் நாள்.

    பொய்யான சாதிகளும்,
    கற்பனையான சமயங்களும்,

    நம்மிடமிருந்து ஒழிக்கப்பட்டு,
    மெய்யான சுத்த சன்மார்க்கமும்,
    உண்மை கடவுளின் அருளும்
    வந்து சேர்க்கும் “தை”யே வருக!

    தென் மொழி தமிழ் காட்டும்
    தெய்வம் ஒன்றே அது இயற்கையே!
    இயற்கையை வழிபடும் 
    இன்ப பொதுத் திருநாளே வருக!

    இயற்கையின் உண்மை, விளக்கம் இன்பம் இவை பூரணம் இறைவன்.
    இந்த உண்மை கடவுளை காட்டும்
    தமிழே..வாழ்க! தையே… வருக!

    “தை” யில் தைரியம் பிறக்கும்,
    பயம் பூஜ்யமானது.
    பொதுவுடமை சுத்த சன்மார்க்கப்
    பொங்கல் பொங்கியது.

    சாதிசமயமத குலமரபுதேச சாத்திர ஆசாரங்களை விட்டொழித்து,
    போகி நாளை கொண்டாடுவோம்.
    பொதுநோக்கம் இரக்கம் அன்பு
    உள்ளத்துப் பானையிலிட்டு,
    பொங்கல் நாளை கொண்டாடுவோம்.

    உண்மை உரைக்கும் “தமிழ்”
    உண்மை கடவுள் “இயற்கை”
    உண்மை காட்டியவர் “வள்ளலார்”
    உண்மை இன்பம் “தைப்பொங்கல்”.

    நன்றி:: ஏபிஜெ அருள்.

    இவண்:: கருணை சபை சாலை.
    apjarul1@gmail.com
    www.atruegod.org

  • சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872

    சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872

    சத்திய ஞான சபை விளம்பரம் 25 -11 -1872

     உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற  நண்பர்களே!

     அறிவு வந்த கால முதல்

    1. அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,
    2. அடைந்து   அறியாத அற்புத குணங்களையும்,
    3. கேட்டு அறியாத அற்புதக்கேள்விகளையும்,
    4. செய்து அறியாத அற்புச் செயல்களையும்,          
    5. கண்டு  அறியாத அற்புதக்காட்சிகளையும்,
    6. அனுபவித் தறியாத அற்புத அனுபவங்களையும்.,

    இத்தருணந் தொடங்கிக்கிடைக்கப்  பெறுகின்றேன் என்றுணருகின்ற ஓர் சத்தியவுணர்ச்சியாற் பெருங்களிப்புடையேனாகி  இருக்கின்றேன்.நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சயமாகிய ஆன்நேய ஒருமைப்பாட்டு உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

    இயற்கையிற்றானே விளங்குகின்றவராயுள்ளவரென்றும், இயற்கையிற்றானேயுள்ளவராய்  விளங்குகின்ற வரென்றும்,

    இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும்,

    • எல்லா  அண்டங்களையும்,
    • எல்லா உலகங்களையும்,
    • எல்லாப் பதங்களையும்,
    • எல்லாச்சத்திகளையும்,
    • எல்லாச்  சத்தர்களையும்,
    • எல்லாக் கலைகளையும்,
    • எல்லாப் பொருள்களையும்,
    • எல்லாத் தத்துவங்களையும்,
    • எல்லாத் தத்துவி களையும்,
    •  எல்லா உயிர்களையும்,
    • எல்லாச்செயல்களையும். 
    • எல்லா இச்சைகளையும்,
    • எல்லா ஞானங்களையும்,
    • எல்லாப் பயன்களையும்,
    • எல்லா அனுபவங்களையும்
    • மற்றெல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால்
    1. தோற்றுவித்தல்,
    2. வாழ்வித்தல்,
    3. குற்றம் நீக்குவித்தல்,
    4. பக்குவம் வருவித்தல்,
    5. விளக்கஞ்செய்வித்தல், முதலிய

    பெருங்கருணைப் பெருந்தொழில்களை இயற்றுவிக்கின்றவ ரென்றும்,

    எல்லாம் ஆனவரென்றும்,

    ஒன்றும் அல்லாதவரென்றும், 

    சர்வகாருணிய ரென்றும்,

    சர்வவல்லபரென்றும்,

    எல்லாம் உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும் 

    ஒப்புயர்வில்லாத் தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும்

    சத்திய அறிவால்அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம்புற முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவென்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும்வண்ணங்க  எல்லாமாகி விளங்குகின்றார்.

    அவ்வாறு    விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து அருளையடைந்துஅழிவில்லாத சத்திய  சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பல வேறு கற்பனைகளாற்

    பலவேறு  சமயங்களிலும்     

    பல்வேறு மதங்களிலும்

    பலவேறுமார்க்கங்களிலும்

    பல வேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலமும் பிறந்து பிறந்து அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி  விரைந்து விரைந்து பல வேறுஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி  இறந்திறந்து வீண்  போகின்றார்கள்.

     இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல்,

    • உண்மையறிவு,
    • உண்மையன்பு,
    • உண்மையிரக்கம் முதலிய

    சுபகுணங்களைப் பெற்று நற்செய்கை யுடையராய்,எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்பொது நெறியாகி விளங்குஞ் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று, பெருஞ் சுகத்தைதயும்பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு, மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமேதிருவுள்ளங் கொண்டு சத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ்செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து இக்காலந் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகளெல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் என்னுந் திருக்குறிப்பை வெளிப்படுத்தி, அருட்பெருஞ்ஜோதியராய் வீற்றிருக்கின்றார்.

     ஆகலின், அடியிற் குறித்த தருணந் தொடங்கி வந்த வந்து தரிசிக்கப்பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி, இறந்தவர் உயிர்பெற்றெழுதல்மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டுபெருங்களிப்பும்  அடைவீர்கள்.

  • உலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!

    உலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!

    உலகின் மாபெரும் கடவுள் கொள்கை வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!# இந்த வருட தைப் பூசத்தில் நாம் செய்ய வேண்டியது.—- ஏபிஜெ அருள்.

    மற்ற மார்க்கத்தைப் போல் கடவுளை புறமாக காட்டி, கோயிலையோ, சடங்கு சம்பிரதாயங்களையோ வள்ளலார் வடலூர் தன் நிலையங்களில் செய்யவில்லை. சுத்த சன்மார்க்கத்தில்கடவுளின் உண்மை “அக அனுபவமே”என்கிறார் வள்ளலார்.கடவுளின் நிலைக் காண நாம் ஒவ்வொருவரும் நன்முயற்சி செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.அந்த நன்முறையில்;

    1) ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும்.

    2) நல்ல விசாரம் செய்தல் வேண்டும்.

    3) உண்மை அறிய உள்ளழுந்தி சிந்திக்க வேண்டும்.

    4) இறைவனே வந்து உண்மை தெரிவிக்க வேண்டும் என்ற சங்கற்பத்தில் கண்ணீர் விட்டு பணிந்து வேண்டவேண்டும்.

    5) எந்தவொரு ஆசாரத்தையும் கைக்கொள்ளாமல் கருணை ஒன்றை சாதனமாக கொள்ளவேண்டும்.

    6) இந்த வழிபாடு உண்மையாயின் கடவுளின் உண்மை உள்ளத்தில் பதிந்து காணாத காட்சியை (இறைசொரூபம்) கண்டு அருள் பெறுவது சத்தியம்.

    இங்ஙனமாக வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் உள்ளது.இந்த அக அனுபவ உண்மையை தான் சத்திய ஞான சபையில் விளக்கினார்.அதாவது,மனிதன் எவரும், எந்தொரு தாழ்ந்தத் தரத்தில் இருந்தாலும், அவர்கள் தன்னை முதலில் கொலை புலை தவிர்த்துக் கொண்டவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்படி எவர் ஒருவர் கொலை புலை தவிர்த்தவர்களோ அவர்கள் மட்டுமே சத்திய ஞான சபைக்குள் நுழைதல் வேண்டும் என திட்டமாக அறிவிக்கிறார் வள்ளலார்.நுழைந்த பின் நமக்கு உறுதி தரும் மகாமந்திரத்தை மெல்லென துதி செய்தல் வேண்டும்.அதன் பின்பு நாம் கீழ்வருமாறு கருத்தில் கருதி உள்ளழுந்தி சிந்திக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.” ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபடுகிறேன்” (எந்தவொரு ஆசாரம் இங்கு கூடாது).அதன்பிறகு,மார்க்க மரபு நான்கையும்நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு பணிந்து வழிபாடு செய்தல் வேண்டும்.இந்த வழிபாடு உண்மையாயின்திரைகள் விலகும், எங்கும் பரிபூரணமாக நிறைந்து விளங்கும் ஆண்டவர் நமது அகத்தில் பதிந்து, பதியின் அருள் காட்சியை கண்டு அனுபவிக்கலாம்.இந்த உண்மையை தான் ஆண்டவரின் சம்மதத்தோடு சத்திய ஞான சபையை கட்டி நமக்கு விளக்கி காட்டுகிறார்.

    ஆனால், வள்ளலார் அன்று சொன்னது;”உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

    ஆக, அன்பர்களே!இந்த உண்மையை இன்று தெரிந்துக் கொண்ட நாம் வரும் தைப்பூச 21/01/2019 நன்னாளில் வடலூர் பெருவெளியில் வடக்கே வந்து தென்திசை நோக்கி நின்று, சத்திய ஞான சபையாகிய, நமது உடலில் அண்டமாகிய கண்டத்துக்கு மேல் புருவமத்தியில் உண்மை கடவுள் நிலைக் காண ஆசை கொள்ளவேண்டும். 

    அன்பர்களே!மேலே சொன்ன மாதிரி வழிபாடு செய்வோம். ஆன்ம நேயத்தால் வள்ளலார் நமக்கு தெரியப்படுத்தி உள்ள வழியில் இடைவிடாது நன்முயற்சி செய்தால்,நமக்கு எல்லா வகையிலும் நமது திருவருட் பிரகாச வள்ளலார் துணை நிற்பது சத்தியம் சத்தியம் சத்தியம்.சத்திய ஞான சபை மற்ற சமயமத போன்ற கோயில் அல்ல.உண்மையை விளக்கி காட்டும் அறிவு இடம்.அந்த இடத்தில்;நாம், வடக்கு நின்று தென்திசை நோக்குதல்,  ஜீவகாருண்யம் என்ற தகுதியுடன்,கொள்கை என்ற ஒன்றேனும் ஒன்றே என்பது கருத்தில், ஆசாரங்கள் தவிர்த்து கண்ணீர் விட்டு நல்ல விசாரப் பயிற்சி, வள்ளலார் துணையுடன்,நமக்கு அக அனுபவம், ஆண்டவர் காட்சி, சாகாவரம்,இவைபெறுவோம் இது சத்தியம்.

    அன்புடன் ஏபிஜெ அருள்

    கருணை சபை சாலை மதுரை.

    apjarul1@gmail.com      

     www.atruegod.org

  • 2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 2019 நன்முயற்சி தரும் ஆண்டு. 2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு

    2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 
    2019 நன்முயற்சி தரும் ஆண்டு.
    2019 உண்மை கடவுளின் அருள் பெறும் ஆண்டு. –. ஏபிஜெ அருள்.
    இங்கு,
    உண்மை கடவுள் யார் என்றால்,
    இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லப்பட்ட
    எல்லா மூர்த்திகளும்,
    எல்லாத் தேவர்களும்,
    எல்லாக் கடவுளரும்,
    எல்லாத் தலைவர்களும்,
    எல்லா யோகிகளும்,
    எல்லா ஞானிகளும்,
    தங்கள் தங்கள் அநுபவங்களைக் குறித்து எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.
    அன்பர்களே!
    இந்த பதியே உண்மை கடவுள்.
    இந்த பதியின் அருளைத் தான் வள்ளலார் பெற்றார்கள்.நாமும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்கிறார்கள்.
    அன்பர்களே!
    இன்று நாம் கடவுளாக வணங்கப் படுபவர்கள் யார் யார் என்று சிறிது யோசியுங்கள். (கண்டிப்பாக யோசிக்க வேண்டும் என வேண்டுகிறோம்).
    மேலே குறிப்பிட்ட உண்மைப் பதியை கண்டு அருள் பெற தவம்,யோகம் எனப் பல வழிகளில் முயற்ச்சித்தவர்களையே (அதாவது யோகிகள்,ஞானிகள், அடியார்கள்) கடவுளாக்கி விட்டோம். அடுத்து
    சமயங்களில், கடவுளாக நமக்கு காட்டப்பட்டவை எவை?
    சமயங்களில் கடவுளாக காட்டப்பட்டியிருப்பது அனைத்துமே நமது “பிண்ட லட்சணங்களே” என அறிதல் வேண்டும். அதாவது தத்துவ சம்மாரங்கள் ஆகும்.
    ஆம், இதுவே சத்தியம், உண்மை.
    இந்த உண்மையை தெரிந்துக் கொள்ள நேரம் இல்லாமல் மிகப் பெரிய அறிவாளிகள்,முதலாளிகள், உழைப்பாளிகள், இவர்கள் முதல் சாதரணவர்கள் வரை உண்மை கடவுளை வணங்காது, கடவுளின் அருளால் ஒளிப்பெற்று விளங்கும் தத்துவங்களை வணங்குவதால், அத்தத்துவங்களின் அளவு வரை மட்டுமே உண்மையும் சக்தியும் இவர்கள் பெற முடியுமே அன்றி, பூரண சித்தியை பெற முடியாது என்கிறார் வள்ளலார்.
    கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?
    கொஞ்சமாவது ஆசைப்பட வேண்டாமா?
    கொஞ்சமாவது முயற்ச்சிக்க வேண்டாமா?
    உண்மை கடவுளை தேடிய மகான்களை தொடர்ந்து நாம் செல்லாமல், அந்த மகான்களையே கடவுளாக வணங்குவது……?
    உண்மை கடவுளின் அருள் ஒளியால் தோன்றிய இந்த பிரபஞ்சத்தில், நமது உடலில் உள்ள தோற்றங்களையே கடவுளாக பாவித்து வணங்குவது…..?
    எந்தவிதத்தில் இது அறிவுடைமை ஆகும்? எனக்கேட்கிறார் வள்ளலார்.
    அதனால் தான் தன் மார்க்கம் “சுத்த சன்மார்க்கம்” உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்கிறார்.
    எனவே,
    உண்மை கடவுள் யார்?
    அக்கடவுளின் நிலை என்ன?
    அருள் பெறும் வழி என்ன?
    என ஆசைக் கொண்டோர்களை வாரீர்..வாரீர்… என அழைக்கிறார்
    திருவருட் பிரகாச வள்ளலார்.
    உண்மை கடவுளை நான் தெரிந்தேன். அறிந்தேன்.
    அனுபவித்தேன்.
    அருளால் அவத்தைகளை நீக்கி பேரின்ப பெருவாழ்வை பெற்றேன்.
    இது சத்தியம். இது சத்தியம்.
    நீங்கள் எல்லோரும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. இது சத்தியம்.இது சத்தியம் என்கிறார் வள்ளலார்.
    2019 உண்மை வெளிப்படும் ஆண்டு. 
    2019 நன்முயற்சி தரும் ஆண்டு.
    2019 உண்மை கடவுளின் அருள் தரும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல உண்மை பதியே உங்களை பணிந்து வணங்குகிறேன்.
    திருவருட் பிரகாச வள்ளலாரே!
    சுத்த ஞானியே!
    உங்கள் வழியில் நன்முயற்சியில் செல்லும் என்னை வழிநடத்தி விலகாது நின்று உண்மை அறிய துணை புரிய வேண்டுகிறேன். 
    வந்தனம்.வந்தனம்.
    நன்றி: ஏபிஜெ அருள்.

  • “ஆன்மா” என்பது யாது? 

    “ஆன்மா” என்பது யாது? 
    — ஏபிஜெ அருள்
    ( வள்ளலார் சத்திய வார்த்தைகள் உள்ளது உள்ளபடி /அடிப்படையில் )
    “ஆன்மா” பற்றி உபதேசக் குறிப்புகள் 50க்கும் மேலாக வள்ளலார் அருளியுள்ளார்கள்.
    அவற்றில் சில குறிப்புகளை இக்கட்டுரைக்காக காண்போம். (விரிவாக ஏபிஜெ அருள் எழுதிய “ஆன்மா” என்ற புத்தகத்தில் காண்க)
    # பிண்டத்தில் அகம் ஆன்மா.
    # ஆன்மாக்கள் என்பது அணுக்கள்.
    ஆன்மா சிற்றணு.
    # ஆன்மாவின் இயற்கை குணம்
    ” தயை “.
    # ஆன்மாவின் இயற்கை என்பதே
    தர்மத்திற்குப் பொருள்.
    # ஆன்மா இயற்கையோடு
    இருந்தால் சிவமாகலாம்.
    # அருள் வெளியாகிய “ஆன்மா”
    இயற்கையால்
    சிவானுபவத்தைப்
    பெறுவது உண்மை.
    இனி நல்ல விசாரம் செய்வோம். – ஏபிஜெ அருள்.
    “ஆன்மா” என்றாலே நாம் தான். ஆம், நான் சிற்றணுவாகிய ஆன்ம வடிவினன். இந்த வடிவம் பிண்டத்தில் அகத்தில் உள்ளது.
    ஆன்மாவுக்கு இடம்,பிரகாசம்,குணம்,
    வண்ணம், மறைப்புகள் உண்டு.அவை;
    இடம் : 
    அருள் வெளி
    பிரகாசம் : 
    கோடி சூரியப் பிரகாசம் உடையது.
    குணம்: 
    தயை
    வண்ணம் :
    ஆன்மாவின் விளக்க ஸ்தானம் லலாடம் (நெற்றி) வண்ணம் கால் பங்கு பொன் முக்கால் பங்கு வெண்மை.
    மறைப்பு:
    மாயாசக்தியாகிய ஏழு திரைகள்.
    அன்பர்களே,
    ஆன்மா வியாபகமாகிய மனித தேகத்தில் கடவுள் காரியப்படுகிறார்.
    அக் கடவுளை அறிவதற்கு ஆன்ம அறிவை கொண்டே அறிய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    உண்மை அறிதலே ஆன்ம அறிவு.
    உண்மை அறிதல் என்பது அனுபவஞானம்.
    அனுபவ ஞானம் என்பது எதையும் தானாக அறியும் ஆன்ம காட்சி.
    ‌ஆம், இந்த இடம் தான் சுத்த சன்மார்க்கம். நேரிடையாகவே ஆன்மாவில் இருந்து கடவுள் அருளால் அறிய வேண்டியவை அறிந்து அனுபவம் பெற்று பூரணசித்தி பெறுகின்ற வழியே சுத்த சன்மார்க்கம். ஆக, ஆண்டவரின் அருளை விரைந்து பெற ஆண்டவரை காண வேண்டும். ஆண்டவர் காரியப்பட்டுள்ள இடம் மனித தேகத்தில் ஆன்மாவே. ஆன்மா பிரகாசத்தின் உள் பிரகாசம் (உள்ளொளியே) கடவுள்.
    ‌ஆக, அருள் வெளியில் ஆன்மா காட்சியில் உள்ளொளியாக உள்ள பதியின் அருளை, அப்பதியின் அருளாலேயே பெறுகின்ற வழியே வள்ளலார் வழி.
    ‌இந்த வழியின் சாதனம் ஒன்றே ஒன்று. அது தயை என்னும் கருணை.
    ‌இந்த தயவின் விருத்திக்கு தடையாக சாதி சமய கட்டுப்பாடு ஆசாரங்கள் உள்ளது என்ற உண்மையை உணர்ந்து சொன்னார் வள்ளலார். இதுவே வள்ளலாரின் முடிவான முடிவாகிய சுத்த சன்மார்க்கம்.
    ‌ஆன்மாவை, ஆன்மப்பிரகாசத்தினுள் உள்ள “பிரகாசத்தை” (பதியை) மறைந்திருக்கும் திரைகளை நீக்குவதற்கு ஆண்டவரையிடத்திலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
    எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் இறைவனை நம்முள் (ஆன்மாவினுள்) காணும் திருவருள் சம்மதத்தை நாம் ஒவ்வொருவரும் அடைதலே லட்சியம் கடமை.இதனால் நாம் பெறும் பயன் மரணமில்லா பெருவாழ்வு.
    வணக்கம்.
    அடுத்து, சாதனம், பயிற்சி குறித்து விசாரம் செய்வோம்.

    நன்றி: ஏபிஜெ அருள்.