Blog

  • “சாதி” பற்றி வள்ளலார்.

    saathi-poi

    “சாதி” பற்றி வள்ளலார்.

    நான் இந்த சாதி என்ற வாய் சழக்கை தவிர்க்க வேண்டும்.சாதி விட வேண்டும்.சாதி நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் சாதி,குலம், சமயம் மதம் தவிர்த்தவர் உள்ளத்திலே இறைவன் தன்னை வெளிப்படுத்தி அருள் பாலிக்கிறார் என்கிறார் வள்ளலார்.
    தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டது.ஆனால் ஒருவன் அத்தொழிலை தொடர்ந்து செய்யாவிட்டாலும் சாதி ஒட்டிக்கொண்டது. சமயங்களும் சாதியை நிலைநாட்டியது.இந்த அழுத்தமான சாதி பொதுநோக்கத்தை தராது.எல்லாரிடத்திலும் கருணைதராது.கருணை விருத்திக்கு தடையாக உள்ளது என்கிறார் வள்ளலார்.

    “சாதி”விட்டொழிப்போம் சமரசம் காண்போம்.ஆண்டவன் அருள் பெறுவோம்.

    அன்புடன் ஏபிஜெ அருள்.கருணை சபை.


    இதோ வள்ளலாரின் பாடல்கள்.
    ####################
    சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
    #####################
    சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக
    ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ.
    #######################
    சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனிநட ராஜஎன் சற்குரு மணியே.
    #######################
    சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
    ########################
    சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப நீதிஇயல் ஆச்சிரம நீட்டென்றும் – ஓதுகின்ற பேயாட்ட மெல்லாம் பிதிர்ந்தொழிந்த வேபிறர்தம்
    வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.
    #####################
    சாதி ஆச்சிரமா சாரம்
    சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக வழக்குவெளுத் தது
    #####################
    சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
    சத்தியச் சுத்தசன் மார்க்க
    வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே.
    #####################
    சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்
    தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்
    ######################
    இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
    எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தன
    #######################
    சாதி சமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது
    ######################
    சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி – அக்கச்சி
    சோதியைக் கண்டேன டி.
    ########################
    சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
    அன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
    ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
    உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
    சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்
    சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.
    ######################

  • மரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா? இதற்கு பதில் என்ன?

    veg-food-vallalar

    மரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா? இதற்கு பதில் என்ன?
    உயிர் இரக்கம் கொள்ளுங்கள் என நாம் சொல்லும் போது,தாவரத்தை நீங்கள் உண்கிறீர்களே அது தப்பு இல்லையா? என்பதற்கு இந்த விசாரம் பதில் தரும். ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிப்பதும்,பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமலும்,முடிந்த வரை மற்ற உயிர்களுக்கு உபகாரம் செய்தலே.
    ஆக, இங்கு நாம் காண வேண்டியது;
    தாவரங்களுக்கு உயிர் உண்டா? நாம் துன்பம் கொடுக்கிறோமா?
    இதற்கு வள்ளலார் விளக்கம் பார்க்கையில்;
    “ஆம், தாவரங்களுக்கு உயிர் உண்டு.ஆனால் அப்படி அல்ல என்கிறார்கள்.” 
    அதாவது , இவை தொடுஉணர்வு கொண்ட ஓரறிவு உயிர்.ஆனால் தாவரவுடம்பில் உயிரானது, நீர் வழியாக நில பக்குவ அடிப்படையில் அதன் “வித்தில்” ஏறுகிறது. வளர்ந்த தாவரங்கள் அதாவது முளைப்பருவம் தாண்டிய தாவரங்களை உண்பதினால் அவைகளுக்கு துன்பம் ஏற்படாது.காரணம், மனம் என்ற கரண கருவிகள் தாவரங்களுக்கு கிடையாது. நம்மிடம் உள்ள நகங்களை வெட்டும் போது எப்படி வலி ஏற்படாதோ அது போன்று தாவரங்களை வெட்டும் போது துன்பம் அவைகளுக்கு ஏற்படாது. ஆனால் அதற்கு உயிர்,
    நீர் வழியாக அதன் வித்தில் ஏறுகின்றதால் , முளைப்பருவத்தில் 
    தாவரங்களை உண்பது கூடாது என்கிறார் வள்ளலார். வளர்ந்த பின்பு காய் கனி இவை சடமாகி விடுவதாலும், உணவிற்காக இவை எடுத்து பயன்படுத்தும் போது துன்பம் எவையும் இவை பெறாதாலும் இவை இறைச்சி உணவாகாது. — அன்புடன் ஏபிஜெ அருள்.

    வள்ளலாரின் இதுகுறித்த தந்த நீண்ட விளக்கம் அப்படியே கீழே தரப்படுகிறது.

    ” ,,,, ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்
    மர முதலிய தாவங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற் கிடமாகிய சடங்க ளென்பது எப்படியென்னில்:- வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.ஆக,வித்துகள் ,காய் கனி இவை சடமே. ஆனால் நீரால் உயிர்
    வித்தில் ஏறும் காலமான முளைப்பருவத்தில் இவைகளை புசித்தல் கூடாது என்கிறார் வள்ளலார். வளர்ந்த நிலைப்பமுளைகளையே பிடுங்கப்படா தென்று சிலர் சொல்கின்றார்கள்; வித்து காய் இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வதெப்படி யென்னில்:- வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும்.

    வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:- தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை.

    ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.”

    வள்ளலார்.

  • வள்ளலார் தெய்வமா?  மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு வள்ளலார் யார்?

    வள்ளலார் தெய்வமா? 
    மற்ற ஞானிகளுக்கும் வள்ளலாருக்கும் உள்ள வேறுபாடு என்ன? நமக்கு வள்ளலார் யார்?
    — ஏபிஜெ அருள்.

    என்ன இப்படி ஒரு தலைப்பு என நினைக்க வேண்டாம். இதோ வள்ளலாரே சொன்னது;
    “—-“தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!” என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.”
    ஆக,
    வள்ளலார் தெய்வமில்லை. அவதாரமும் இல்லை. வள்ளலார் நம்மை போல் மனிதரே. ஆனால், தனது ஒழுக்கத்தால், சத்திய அறிவால் , இடைவிடாது கருணை நன்முயற்சியில், தனி வழியில், உண்மை கடவுள் நிலை காண சுத்த ஞான யோக நிலையில் இருந்து, உண்மை கடவுளை கண்டு தரிசித்து அருள் பெற்ற முதல் “சுத்த ஞானியே” வள்ளலார்.
    வள்ளலாருக்கும் 
    மற்ற ஞானிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன எனில்;
    மற்ற ஞானிகளும் கடவுள் அருள் பெற ஒழுக்கமும் இரக்கமும் சாதனமாக கொண்டு தவம் செய்தவர்கள் தான்.
    ஆனால் இவர்கள் அனைவருமே,
    1)தத்தம் சமய மதங்கள் காட்டிய கடவுளையே முடிபாக கொண்டு அக்கடவுளையே கருத்தில் ஏற்றிக்கொண்டு அச்சமயம் ஆசார அடிப்படையில் தியானித்ததால், அந்த அளவுக்கு மட்டுமே சித்திகள் பெற்றார்கள். பெற்ற சித்திகளால் பெருமை கொண்டு, மக்களை ஆசீர்வதித்து வந்தார்கள்.
    அல்லது
    2) வள்ளலார் போல் ஆண்டவரை இரக்கத்தால் நன்முயற்சி மற்றும் கடின யோகத்தால் தவமிருந்து பெரியளவு சித்திகளும் (பல நூற்றாண்டுகளாக வாழுதல்) பெற்ற ஞானிகளும் உண்டு. இந்த ஞானிகள் தாங்கள் பெற்ற சித்திகளால் பேரின்பம் அவர்கள் மட்டுமே அடைந்தார்கள். 
    ஆனால்….
    கடவுளை கண்ட வள்ளலாருக்கும் பல சித்திகள் அருளால் கிடைத்தது. பல சித்திகளை பெற்ற வள்ளலார் மீண்டும் கடவுளை நோக்கினார். கடவுள் வள்ளலாரிடம் ; என்ன? என்றதற்கு, 
    வள்ளலார் கீழ்வருமாறு வேண்டினார்:
    “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். என்னைப் போல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்”என்றார் வள்ளலார். 
    இதை கண்ட கடவுள்;
    தன்னிடம் என்ன கருணை உண்டோ அதே கருணையை பொது நோக்கத்தால் பெற்றுத் திகழ்ந்த வள்ளலாருக்கு “பரிபூரண சித்திகள்” முழுவதையும் கொடுத்தருளினார். அவரின் தேகத்தையே தனி வடிவமாக்கி (ஒளி உடம்பு), 
    தன்னை போலவே படைத்தல் முதல் அனைத்து செயல் செய்து மகிழும் நித்திய பேரின்ப பெருவாழ்வை தந்து அருளினார். 
    வள்ளலாரை போல் வேறு எவரும் இங்ஙனமாக மற்ற அனைவருக்குமாக வேண்டி நிற்கவில்லை.
    அன்பர்களே!
    வள்ளலார் பெற்ற பேரின்பத்தை இன்று நாம் பெறுவதற்கு யாதொரும் தடையில்லை. இதை வள்ளலாரே சத்தியமிட்டு நம்மிடம் உரைக்கிறார். தான் வந்த வழியில் எவர் ஒருவர் பழகி நன்முயற்சி மேற்கொள்கிறாரோ அவர் என்னை போல் ஏறாநிலை பெறுவது சத்தியமே என்கிறார்.
    # வள்ளலார் ஆண்டவரை குருவாக கொண்டார். நமக்கும் குரு ஆண்டவரே.
    # வள்ளலார் உண்மை கடவுளை காணும் வரை தன் கருத்தில் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபட்டார்.
    நாமும் இங்ஙனமாகவே கருத்தில் கொள்ள வேண்டும்.
    # எந்தவொரு ஆசாரமில்லாமல் உண்மை அன்பு உண்மை இரக்கம் மட்டுமே வழிபாட்டு சாதனமாக கொண்டார். நமக்கும் இதே சாதனம் தான்.
    சரி, அப்படின்னா,வள்ளலாருக்கும் நமக்கும் உள்ள உறவு?
    ஆம், வள்ளலார் உண்மை கடவுள் குறித்து விசாரிக்கும் போது அவருக்கு துணையாருமில்லை. ஆனால் நமக்கோ வள்ளலார் துணை இருக்கிறது.உண்மை கடவுளை காண உண்மையாக ஆசை உள்ள எவருக்கும் எல்லாவகையிலும் வள்ளலார் துணை இருக்கும் பாக்கியத்தை பெற்றுள்ளதை அவர்கள் சத்தியமாக உணருதல் வேண்டும். 
    ஆக நமக்கு இனி,
    “வள்ளலார் துணை”
    “ஆண்டவர் அருள்”
    (அன்புடன் ஏபிஜெ அருள்).
    சுத்த ஞானி வள்ளலார் துணையுடன்
    சுத்த சிவநிலை 
    கண்டோம், 
    காண்கிறோம், 
    காண்போம்.
    இது சத்தியம். இது சத்தியம்.

  • ஆன்மீகத்தில் குழப்பங்கள்.. ?அரசியலில் சச்சரவுகள்.. ?உலகில் தீவிரவாதங்கள்.. இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே

    ஆன்மீகத்தில் குழப்பங்கள்..
    ?அரசியலில் சச்சரவுகள்..
    ?உலகில் தீவிரவாதங்கள்..
    இவை அனைத்துக்கும் ஒரே தீர்வு இதுவே.
    — ஏபிஜெ அருள்.

    ஆம் இவைக்கு ஒரே தீர்வு “வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே”.

    ஆம்.
    ஆன்மீகத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எங்கள் சமயமே எங்கள் கடவுளே சரி என்பதும், இவரே கடவுள், இதுவே முடிவு என அவரவர் வரையறுத்து கொண்டிருப்பதுமே.
    ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் இந்த குழப்பமே ஏற்படாது. ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் தீர்த்து வைக்கும். நீங்களே பாருங்களேன். 
    இங்கு 
    கடவுளின் உண்மை நிலை நம் உள்ளத்தில் காணுதலே நம் முயற்சியும் பயிற்சியும்.
    அது வரை நாம்,
    “ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபடச் செய்ய சொல்லுகிறது சுத்த சன்மார்க்கம்.”

    அடுத்து அரசியலில் சச்சரவுகள்:

    “ஒழுக்கம்” நிரப்பி கொள்ள வேண்டும் என்றும், இதுவே கடவுளின் அருளை பெற்றுத் தரும் என்கிறது சுத்த சன்மார்க்கம். ஒழுக்கம் உள்ளவர்களால் சச்சரவு ஏது?

    அடுத்து
    உலகில் தீவிரவாதங்கள்:

    எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிப்பது தான் இங்கு சாதனமாக வைக்கப்பட்டு உள்ளது. ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையே இங்கு லட்சியம் ஆகும்.

    ஆக,
    உண்மை அறிவு
    உண்மை அன்பு
    உண்மை இரக்கம்
    பெறுவதினால்

    ?ஆன்மீகத்தில் குழப்பங்கள்,
    ?அரசியலில் சச்சரவுகள்,
    ?உலகில் தீவிர வாதங்கள்

    இவை ஓழிந்து 
    பொது நோக்கம் தழைத்து ஓங்கும். 
    நாம் இப்பொழுதே சுத்த சன்மார்க்கம் சாருவோம்.
    நம்மை போல் எல்லாரும் இன்புற்று வாழ சுத்த சன்மார்க்கத்தை உலகத்தார் அறிய இன்றே பரப்பிடுவோம்.

    நன்றி ஏபிஜெ அருள்.

  • அப்படி இப்படி இல்லை. ஒரே வழி

    அப்படி இப்படி இல்லை. ஒரே வழி
    — ஏபிஜெ அருள்.

    ஒன்று,
    அடுத்தவர் பணத்தில் நல்ல காரியங்கள் செய்து, தன் வாழ்வையும் பார்த்துக் கொள்ளல்,

    மற்றொன்று,
    தன் பணம் செலவழிக்காமல் மற்றவர் பணம் நல்ல வழிக்கு செலவிட இலவசமாக ஆலோசனை சொல்வது;

    அல்லது;
    பாவம் விலகி புண்ணியம் தனக்கு வரும் என்ற அடிப்படையில் மட்டுமே பணம் செலவழித்து நல்ல காரியம் செய்வது.
    நிற்க!
    மேற்படி மூன்றில் குற்றம் மட்டும் நோக்கினால்,
    மூன்று சரியில்லாதவர்கள் அடையாளம் காணலாம்.
    ஆனால், மேற்படி மூன்றில் நல்லது மட்டும் நோக்கினால்,
    மேற்படி மூன்றிலும் நல்ல காரியம் நடந்தது தெரியவரும்.
    எனவே மேற்படி மூன்று நிலையிலும் மனிதன் தன்னை நல்லவர்களாக காட்டி கொள்ள முடியும்.
    இங்ஙனம் உள்ளவர்கள் எல்லா மார்க்கங்களிலும் உள்ளார்கள்.

    ஆனால்,
    சுத்த சன்மார்க்கத்தில் “உண்மை அறிபவர்களாக” இருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    அதாவது;
    ஒவ்வொருவரும் உண்மை தெரிந்து கொள்ளும் முயற்சியுடையவராக இருத்தல் வேண்டும். இதுவே அக அனுபவம் ஆகும். இதற்கு ஆண்டவரின் அருள் மட்டுமே தேவை.
    இந்த உண்மை அறிய விரும்பவர்களிடத்தில் இரக்கம்,அன்பு இவர்களின் இயல்பாகவே இருக்கும். நற்செயல்கள் அவர்களின் அன்றாட செயல்களில் இணைந்தே இருக்கும்.
    நல்லதை நினைக்க, நற்காரியங்கள் செய்ய எவரையும் நாடி எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

    “புலைகொலை தவிர்த்தோர் உள்ளே புகுதல் வேண்டும்” என்ற கட்டளை வாசகத்தை வள்ளலார் சத்திய ஞான சபை முகப்பில் வைத்தார்கள். இந்த ஜீவகாருண்ய தகுதி உடையோர் உள்ளேவந்து சுத்த சன்மார்க்க நெறி (ஒழுக்கம்) தெரிந்து கொள்ள அழைக்கிறார் என சத்தியமாக உணருதல் வேண்டும் முதலில்.

    நற்காரியங்களில் “மட்டுமே” நின்றால் பெற வேண்டிய “பெரிய” லாபம் கிடைக்காது.
    நம்மை நாமே மேலேற்றி கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    அதற்கு,
    நாம் நம் நிலை என்ன? நம்மை அனுஷ்டிக்கும் இந்த கடவுளின் உண்மை நிலை என்ன? என்ற விசாரணையில் உள்ளழுந்தி சிந்தித்திக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    இது காரியப்பட கண்டிப்பாக நம்மிடையே இருக்க கூடாதது “ஆசாரங்கள்”. எதிலும் பற்றில்லாமல் இறைவனையே தொழுவதே தொழிலாக கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார். இந்த தொழிலை கடமையாக கொள்பவனிடத்தில் மட்டுமே “ஒருமை” வரும். ஒருமை வந்தால் தயவு வரும். தயவு வந்தால் ஏறாநிலை மேல் ஏறலாம் என்கிறார் வள்ளலார்.
    சுருங்க கூற வேண்டுமானால்,
    எல்லா உண்மையும் தெரிந்து கொள்ள “ஆசை “மட்டும் இருந்தால் போதும். இறைவனே நம்முள்ளே வெளிப்பட்டு எல்லா உண்மையும் அறிவிக்கிறார் என்ற உண்மையை தான், தான் கண்டதாக சொல்கிறார் வள்ளலார்.
    ….அ..ட இவ்வளவு எளிதான வழி தானா சுத்த சன்மார்க்க வழி என்று நினைக்க தோன்றும்.
    ஆம். எளிதான சாதாரண வழி தான்.
    ஆனால்,
    கீழே வரும் சத்திய வாக்கியங்கள் நம் அறிவில் சரி எனப் பட வேண்டும்.
    அவை;
    1. உண்மை கடவுள் ஒருவரே!
    2. அக்கடவுள் கண்டு சாகா வரம் பெறனும்.
    3. கடவுளை காண இரக்கம் விட்டு பிடிக்கும் கருணை வழி மட்டுமே.
    4. எல்லாரும் இவ்வழியில் வந்து பயன் அடைதல் வேண்டும் என்ற நேயம்.
    மேலே உள்ள 1&2 உண்மை வெளிப்பட
    மேலே உள்ள 3&4 ல்
    நாம் இடைவிடாது பயிற்சி கொள்வதே “சுத்த சன்மார்க்கம்” எனப்படும்.
    இது ஓர் புதிய வழி,தனிநெறி.

    அன்புடன் ஏபிஜெ அருள்,
    கருணை சபை(apjarul1@gmail.com)

    www.atruegod.org

  • சமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை]

    சமூகப் புரட்சி செய்த ஞானி – வள்ளலார் [தினத்தந்தி-சிறப்புக் கட்டுரை]

    Thinathanthi Paper -Link [Below]

    https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/05125642/Social-revolution.vpf

    இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள்
    கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் இருக்கும் மருதூரில் அக்டோபர் 5-ந் தேதி ராமையாப்பிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ராமலிங்கம். எட்டாவது மாதத்திலேயே தந்தையார் காலமானார். ஐந்து குழந்தைகளை காப்பாற்றி வளர்க்க வேண்டி தனது சொந்த ஊர் பொன்னேரி அருகில் சின்னகாவணத்திற்கு ஐந்து குழந்தைகளை அழைத்து சென்ற சின்னம்மையார் அங்கிருந்து சென்னை ஏழு கிணறு வந்து தங்கினர். பின்பு தாயாரையும் இழந்த ராமலிங்கம் தனது அண்ணன் சபாபதிப்பிள்ளை பராமரிப்பில் வளர்ந்தார். சென்னை கந்த கோட்டம், திருவெற்றியூர் கோயில் எனச் சென்று தெய்வங்கள் மீது ஸ்தோத்திரப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார். இந்த ராமலிங்கம் பின்னாளில் வள்ளலார் என மக்களால் அழைக்கப்பட்டார். தெய்வத்தின் மீது அவரால் பல ஸ்தோத்திரங்கள் பாடப்பட்டன. இறைவன் அருள் பெற கருணை ஒன்றே போதுமான சாதனம் என்றார்.
    வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற அவரின் பாடல் வரியில் அவரின் உண்மை இரக்கத்தை காணலாம்.தனது 35-வது வயதில் வடலூர் கருங்குழி வந்து தங்கலானார். அங்கிருந்து அடிக்கடி சிதம்பரம் சென்று வழிபாடு செய்து வந்தார். தான் உண்மை கடவுளை கண்டு தரிசித்தேன் அக்கடவுள் அருளால் மரணத்தை தவிர்த்து தனி வடிவம் ஒளி தேகத்தை பெற்றேன் என அறிவிக்கிறார் வள்ளலார். 1874 ஜனவரி 30-ந் தேதி வடலூர் மேட்டுக்குப்பத்தில் ஒரு அறையினுள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார் வள்ளலார். தான் பெற்ற ஒளி தேகம் போல் எல்லோரும் பெறலாம் என்கிறார்.அதற்கு கருணை ஒன்றே சாதனம் மற்றும் அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டு ஒழியுங்கள். சமய மதங்களில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார் வள்ளலார். முடிவான இந்த கொள்கையை “சுத்த சன்மார்க்கம்” எனப்பெயரிடுகிறார் வள்ளலார்.
    திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இவர் சமூகம், அறிவியல், ஆன்மீகத்தில் புரட்சியை கண்ட ஞானி ஆவார்.சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் நிறைந்திருந்த 19ம் நூற்றாண்டில் வள்ளலார் பல சமூக சீர்த்திருத்தங்களை செய்தவர். பெண்களுக்கு கல்வி, ஆண்பெண் சமத்துவம், முதியோர் கல்வி, விதவை சடங்குகளை மறுத்தல், கருணை இல்லா ஆட்சியை கண்டித்தல் உள்பட பல சமூகப் புரட்சியை செய்தவர் வள்ளலார்.ஆணும் பெண்ணும் வேறுபாடில்லா உயிர்களே என்பதை தனது திருஅகவல் மூலம் விளக்குகிறார் வள்ளலார்.
    பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
    அண்ணுற வகுத்த அருட்பெரும் ஜோதி!”
    மேலும்,
    “பாடக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப்
    பயன்பெற நல் அருள் அளித்தபரம் பரனே!”
    “..கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே!”
    பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பெண்களும் உண்மைகளை தெரிந்துக்கொண்டு உண்மைக் கடவுளை வழிபாடு செய்தல் வேண்டும் என்றவர் வள்ளலார். சமூகம், சமயத்தில் உண்மை புரட்சி கண்ட வள்ளலார் தமிழ் மொழியை இயற்கை உண்மை சிறப்பியல் மொழியாகும்.தமிழ் மொழியில் இயற்கை பற்றியும் கடவுளின் நிலையறிவதும் எளிதாக உள்ளது என்கிறார்.
    அறிவியலில் வள்ளலார் வெளிப்படுத்திய செய்தி மிகவும் பெரிய விசயமாகப் பார்க்கப்படுகிறது. அது இன்றைய விஞ்ஞான முடிவுக்கு மாறாக அண்டம் முடிவாகும் ஒன்றல்ல அது விரிந்து கொண்டே இருக்கிறது என்றவர்.கடவுள் அருளால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவஸ்தைகளை நீக்கிக் கொண்டு நம் தேகத்தை ஒளி உடம்பாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார். என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம். என் மார்க்கத்தில் சாகாக்கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை என்பது மூலம் அதாவது மனிதர் மரணமின்றி வாழலாம் என்றொரு மிகப்பெரிய ஒரு விசயத்தை உலகத்தாருக்கு வெளிப்படுத்துகிறார்.
    வருடம் தோறும் தைப்பூச பெருநாளில் வடலூர் பெருவெளியில் லட்சபோப லட்ச மக்கள் இவர் மேல் நம்பிக்கை கொண்டு ஜோதி தரிசனம் செய்ய வருகிறார்கள். 19ம் நூற்றாண்டில் ராமலிங்க அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதிய தனி மார்க்கம் சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இம்மார்க்க நெறி உலக உயிர்களை பொதுமையில் நோக்க வைக்கிறது. ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ள செய்கிறது. உண்மைக் கடவுள் அருளால் மரணத்தையும் தவிர்த்து, மனிதர் கடவுள் அருளால் ஒரு புதிய ஒளி வடிவத்தை பெறலாம் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி. வள்ளலாரின் பிறந்த நாள்நமக்கு இனிய நாளே.
    ராமலட்சுமி,
    வள்ளலார் ஏபிஜே அருள்கருணை சபை, மதுரை
  • October 5 வள்ளலார் பிறந்த நாள். சாகாநிலை சாத்தியமா? வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா?

    October 5 வள்ளலார் பிறந்த நாள்.
    சாகாநிலை சாத்தியமா?
    வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா?

    அன்பர் சரத் கேட்ட கேள்வி; “ஆண்டவரால் வருவிக்கவுற்றவர் வள்ளலார்”. 
    அதனால் சாகாநிலை பெற்றார். ஆனால் நாம் பெற சாத்தியமில்லை. இதற்கு விளக்கம் தருக, என்றார்.??

    அன்பர்களே,
    வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?

    விசாரம் செய்வோம் வள்ளலார் துணையுடன்..::: (ஏபிஜெ அருள்):

    பலர் இங்ஙனமாகவே பார்க்கிறார்கள்
    வள்ளலார் தெய்வம்.
    ஆண்டவரால் வருவிக்க உற்றவர் அதனால் அவர் ஒரு அவதாரம். அல்லது, நம்மை போல் மனிதர்.இதில் எது உண்மை.?
    நிற்க!

    எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருள் ஒன்றே உள்ளது என்று கருத்தில் கொண்ட உண்மை அன்பர்களுக்கு இந்த விளக்கம் தேவையில்லை.

    நம் வள்ளலார் பிறவிகளால் ஆன்ம பக்குவமும்,
    பிறந்த குடும்பத்தால் சைவ சமயம் தழுவலும் கொண்டார். “ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்த பதார்த்தினுடைய சுவை தெரியாது, ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உள்ளதுபடி அனுபவித்தாலல்லது , தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தை தெரிந்து கொள்ளாததினாலே அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப் பட்டுக் கொண்டே இருந்தேன்” என்கிறார் வள்ளலார்.

    பின் அவர் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? என்றால் ஆம். ஆனால் நாம் நினைப்பது போல் அல்ல.

    “.. ஆண்டவரால் வருவிக்கவுற்றனன்” என்று வள்ளலாரே தெரிவிக்கிறார். 

    ஆனால் அதன் அர்த்தம் சரியாக புரிதல் வேண்டும்.
    காண்போம் இங்கு. 

    ஆரம்பத்தில் அவரிடமிருந்த அளவிலா கடவுள் பக்தி,
    அவர் குடும்பம் சார்ந்த சைவ சமயத்தில் மிக்கப்பற்றுக் கொண்டவராக்கியது.
    சைவ சமயம் மட்டுமில்லாமல் எல்லா சமயமத மார்க்கங்களின் நெறிகளைத் தெரிந்து, அதனதன் உண்மையையும் கண்டார்கள். ஆனால் அவரிடமிருந்த தேடலுக்கு இவை எவையும் விடை தரவில்லை. அதனால் தான் அவர் சைவ சமயத்தில் பற்று இருக்கும் காலத்தில் கூட ,அதன் ஆசாரங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை. வெண்ணிற ஆடையை தான் உடுத்திருந்தார்கள்.
    எந்தொரு மாலையுமோ அணிந்திருக்கவில்லை,
    பூசைகள், சடங்குகள் எதையும் அவர் செய்யவில்லை. ஆனால்அவர் தேடுல்தொடர்ந்து கொண்டே இருந்தது. 
    இந்த தேடல் எதை குறித்து?
    இயற்கையின் உண்மை குறித்து மற்றும் மரணம் என்ற அவத்தை நீக்கி இன்பமாக வாழ வழியை குறித்து. 
    அவரின் தேடலுக்கு சுதந்திரத்தை அவர் பற்றுக்கொண்டியிருந்த சமயக் கொள்கை இடம் தரவில்லை. 
    தான் சுதந்திரமாக சிந்திக்க, தான் சார்ந்த சமயத்தை கைவிட்டு விட்டார்கள். வள்ளலாரின் தேடல் போல், பல ஞானிகள், தலைவர்கள் தேடினாலும் அவர்கள் தங்களின் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை மீற முடியவில்லை.அவைக்கு அவர்கள் கட்டுப்பட்டார்கள். வள்ளலாரை போல் யாரும் முன் வரவில்லை. சமயப்பற்றை வள்ளலார் விட்டு விட்டப்பிறகு வள்ளலாரின் விசாரணை சுதந்திரமாக தொடர்ந்தது. 
    இடைவிடாத கடவுள் உண்மை நிலை குறித்த விசாரம், அதனால் அவரிடம் தானாக ஏற்பட்ட இரக்க(கண்ணீர்) வழிபாடு, இதன் பயன், சத்திய அறிவை அவர் பெற்றார்கள். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஒன்றெனும் ஒன்றாகி அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை தன் உள்ளே பெற்று உண்மை கடவுளின் நிலை கண்டார்கள். அருளால்,முழு உண்மை அவருக்கு வெளிப்பட்டது. இந்த முயற்சி வள்ளலாரின் உண்மை அறிவால் (ஆசையால்) ஏற்பட்டது.
    கடவுள் அருளால் சாகா கல்வி கற்றார்.மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள். 
    இவை அனைத்தும் அகத்தில் தனி வெளியில் நடந்து கொண்டிருக்கும் விசயம். அறியாமை,திரிபு இல்லா இடம்,நாம் உணர்வதற்கு அரிதான இடம் என்கிறார் வள்ளலார் (திரு அகவலில்).
    நிற்க! (முக்கிய இடம்) 
    உண்மை கடவுளை கண்ட வள்ளலார், ஆண்டவரிடம் ஒன்றை வேண்டினார்.
    அஃது;
    ‘என்னைப்போல் எல்லோரும் பேரின்ப பெருவாழ்வு பெற அருள வேண்டும்’ என்று ஆண்டவரிடத்தில் வேண்டினார் வள்ளலார்.
    வள்ளலாரின் வேண்டுதலில் பொது நோக்கமும், உயிர்களிடத்தில் அவர் கொண்ட ஆன்ம நேயமும் வெளிப்பட்டது. 
    தன் கருணை போல் வள்ளலார் பெற்றிருப்பதை கடவுள் கண்டார். இதுவே பரிபூரண அருள். 
    அதனால், தன் நிலையில் வள்ளலாரை வைத்து எல்லாமே அருளினார் கடவுள்.
    உண்மை இன்பம் பெற்றாலும் தன் வேண்டுதலை தனி வெளியில் உள்ள இறைவனிடம் மீண்டும் வைத்தார்; என் போல் இவ்வுலகத்தார்கள் இன்பம் பெறுதல் வேண்டும் என்றார்.
    அதற்கு கடவுள்; 
    உனது ஆசை நிறைவேற்ற 
    நீயே இருப்பாய்.
    நீயே செல்வாய். 
    இந்த வரத்தை, அதாவது, தான் வந்த வழியை உள்ளது உள்ளபடியாக உலகத்தார்களிடம் உரைக்கவும், ஆண்டவர் தெரிவித்த மரபுகள் நான்கையும், சாகாவரம் பற்றியும் நமக்கு தெரிவிக்க ஆண்டவரிடத்தில் அனுமதி பெற்று, தனி வெளியிலிருந்து மீண்டும் இங்கு அறியாமை திரிபு துன்பம் கற்பனை நிறைந்த நாம் உள்ள (அவரும் இருந்த) இந்த வெளிக்கு மீண்டும் வந்ததையே “”வருவிக்கவுற்றது”” ஆகும். 
    2 1/2 வருடகாலம் அவர் சென்ற வழி (மார்க்கம்) குறித்து நம்மிடமிருந்து சொல்லிவந்தார்கள்.
    ஆனால் நமக்கு ….?? 
    ஆம், அன்று தெரிந்து கொள்வாரில்லை.
    அதனால் 30/01/1874, அருளால், தான் பெற்றிருந்த சுத்த தேகத்தில் மீண்டும் தனி வெளியில் சித்திவளாக அறையினுள் தனி சுக வெளிக்கு வெளிப்பட்டார்கள்.
    அன்பர்களே!
    எவர் ஒருவர்; 
    ‘அய்யா நீங்கள் சொன்ன உண்மையை தெரிந்து கொண்டேன். உங்கள் துணையால் உண்மை அறிய ஆசையாக உள்ளேன் என உண்மை அன்புடன் சொல்வேர்களானால், வள்ளலார் அய்யா நேரில் இங்கேயே வெளிப்பட்டு நம் பயிற்சிக்கு உதவிடுவார். 

    சாகா நிலை சாத்தியமா? என்பது அவரவர் அறிவு (உண்மை எது என்று) ஆசை (அவத்தை நீக்க) தேடுதல் (நன்முயற்சி) இவை பொறுத்து சாத்தியப்படும்.

    என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம்-என் மார்க்கத்தில் சாகா கல்வி தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.
    இது சத்தியம். 
    இதுவே உண்மை என்கிறது சுத்த சன்மார்க்கம்.
    நம்புவோம். 

    அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள். நல்லநாளில் 
    நல்ல விசாரணை தொடரட்டும். 
    இதோ வள்ளலார் பாடல் ஒன்று;

    பொய் விட்டு கற்றேன்
    என்று ஊதூது சங்கே
    புண்ணியன் ஆனேன்
    என்று ஊதூது சங்கே
    மெய் தொட்டு நின்றேன் என்று
    என்று ஊதூது சங்கே
    மேல் வெளி கண்டேன் என்றே
    என்று ஊதூது சங்கே

    —அன்புடன் ஏபிஜெ அருள்.கருணை சபை,மதுரை.

    www.atruegod.org.

  • திருவருட் பிரகாச வள்ளலார் கண்டது-சென்றது-பெற்றது என்ன? எதில்? எதை?

    திருவருட் பிரகாச வள்ளலார்
    கண்டது-சென்றது-பெற்றது
    என்ன? எதில்? எதை?


    வள்ளலார் கண்டது 
    புதிய கடவுள் 
    — அதுவே உண்மை கடவுள்
    ” தனிப் பெருங்கருணை “

    வள்ளலார் சென்றது 
    புதிய வழி
    -அதுவே உண்மை பொது வழி
    ” சுத்த சன்மார்க்கம் “

    வள்ளலார் பெற்றது புதிய வரம்
    — அதுவே சாகா வரம்
    ” சாகா கல்வி “

    நன்றி, 
    அன்புடன் ஏபிஜெ அருள்.

  • மகாத்மா காந்தியின் மறுபக்கம். (நம் பார்வையில் காந்தி மகான்)

    மகாத்மா காந்தியின் மறுபக்கம்.
    (நம் பார்வையில் காந்தி மகான்)
    —. ஏபிஜெ அருள்.
    ஆம், தேசம், சுதந்திரம்,எளிமை,போராட்டத்தில் அகிம்சை என்பதில் காந்தி மகான் அவர்களை காணும் உலகத்தார் அவரின் மறுபக்கமாக “சைவ உணவு” கொள்கையில் அவரை காட்டவில்லை.
    அதற்கு முன்,
    புலால் உண்ணாமைக்கும் இரக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ? எனப்பார்க்கும் போது,
    புலால் உணவு மீது நாட்டம் உள்ளவர்கள் எப்படியோ, அது போல் புலால் உணவு மீது நாட்டம் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் பழக்க வழக்க அடிப்படையிலேயே இவர்களின் வழி தோன்றல்கள் அமைவது இயல்பு. புலால் உணவு எங்கள் குலத்திற்கே கிடையாது என்பவர்களை இரக்கம் உள்ளவர்கள் என்பதை விட அவர்கள் புலால் சாப்பிடும் பழக்கம் இல்லாதவர்கள் எனலாம். காரணம், அவர்களின் மற்ற நடவடிக்கையில் இரக்கம் இல்லாமல் இருக்கும். உதாரணத்திற்கு அவர்கள் பட்டு புடவையை தான் விரும்பி அணிவார்கள். கேக் மிக விரும்புவார்கள்.விலங்கு தோலில் ஆன பொருள்களை விரும்பி வாங்குவார்கள். இந்த பழக்கம் சமய மத சந்நியாசிகளிடமும் காணலாம். “இரக்கம் கொள்க” எனும் சத்திய வார்த்தை அவர்களின் நெறியாக காட்டினாலும் அவர்கள் தியானம் செய்வது விலங்குகளின் தோல் மீதே.
    தன் வேண்டுதலுக்கு பிற உயிரை நேர்தல் அல்லது தன் உயிர்க்கு பதில் பிற உயிரை காணிக்கை செய்து கொல்லுதல் இவையே இவர்கள் இரக்க கோட்பாடு. புலால் உண்ணாதவர்கள் புலால் உணவு கடையிலும் சைவ உணவு சாப்பிட சம்மதிப்பவர்களும் உண்டு.
    ஆனால்
    உயிர்இரக்கம் என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிப்பது ஆகும். இரக்கம் அன்பு கருணை தயவு இவை பற்றிய உண்மை விளக்கம் தமிழில் மட்டுமே தெளிவாக காண முடியும் அல்லது எவர் ஒருவர் இயற்கையின் பால் அனைத்து மற்றும் எல்லா உயிர்களின் பால் நல்ல விசாரணை செய்கிறார்களோ அவர்களிடத்தில் “உண்மை இரக்கம்” ஏற்படும். சமய மதங்கள் இரக்கத்தை போதித்தாலும் சமயமதத்தவர்கள் எல்லாரிடத்தில் உண்மை இரக்கம் இல்லை. 
    உண்மை இரக்கத்தை பெற்ற ஒரே மார்க்கம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒன்றே. இம் மார்க்கத்தில் இரக்கம் தகுதியாக கட்டளையாக சாதனமாக உள்ளது.
    உண்மை இரக்கம் தன் அனுபவத்தில் கண்டு நெறியாக கொண்டவரே நம் மகாத்மா காந்தி அவர்கள். முதலில் அவர் சொன்னது;
    எனக்கு தேவையாக உள்ளது சாப்பிடுகிறேன். பின்பு;
    இல்லை நான் புலால் உண்ணாமலிருப்பேன் என்றார்கள். இல்லை உன் தேகவலிமைக்கு சாப்பிடுதல் வேண்டும் என சிலர் அவருக்கு அறிவுரை செய்கிறார்கள்.
    ஆனால் உணவு பற்றிய உண்மை என்ன? என அக விசாரணயில் செய்தவர் காந்தி அவர்கள். நான் உணவு விசயத்தில் பல பரிசோதனைகளை நடத்தினேன் என்கிறார். அவரின் சத்திய சோதனை புத்தகத்தில் சைவம் குறித்த ஆன்ம சோதனை குறிப்பிட்ட பக்கங்களை எடுத்து உள்ளது. ஆனால் இது போதியளவு வெளிப்படுத்தப்படவில்லை என்பது துரதிஷ்டமே.
    இதோ அவரின் வாக்கியங்கள் சில:
    1) தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயர்வானவன் என்றால்,தாழ்ந்த உயிரினங்களைக் தின்று மனிதன் உயிர்வாழ்வது என்பது அவ்வுயர்வின் நோக்கம் அல்ல.
    2) மனிதன் உண்பது உயிர் வாழ்வதற்கே அன்றி சுக அனுபவத்திற்காக அல்ல என்பது என்னிடம் மாற்றத்தை ஏற்படுத்தியது.
    3) ரூசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதே அன்றி நாவில் இல்லை.
    4) மாமிசம் என்பதில் முட்டையும் சேர்ந்ததே என்ற உண்மை கருத்தை கண்டவுடன் அதை சாப்பிடுவதை விட்டு விட்டேன்.
    5) புலால் உணவு ரூசியைவிட, சைவ விரதம் அனுசரித்து வருகிறேன் என்ற உள்ளத்தின் ரூசி தெளிவாக அதிக இன்பத்தையும் சுகத்தையும் தருகிறது.
    6) என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ நான் அதிகம் படித்து விட்டேன் என்ற அகம்பாவமோ எனக்கு போதித்திருக்கக் கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.
    7) பிரதிக்கைஞகள் என்னதான் தெளிவானதாக இருந்தாலும் சரி, சுயநலவாதிகள் தங்களுடைய காரியத்திற்கு ஏற்ற வகையில் அதைப்புரட்டித் திரித்துக் கூறிவிடுகிறார்கள். இவர்கள் உலகத்தையும் கடவுளையும் கூட ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
    8) எவன் ஒருவன் சத்தியத்தை நாடுகிறானோ அவன் ஒருவனே சரியான விதியை பின்பற்றுகிறான்.
    9) சைவ உணவு என்ற கொள்கையே சிறந்தது. இது உயர்வான நோக்கம்.
    மகாத்மா வின் பிறந்த நாளில் மகத்தான உண்மை ஒன்றை (சைவ உணவு) அறிந்திடுவோம். 

    (அன்புடன் ஏபிஜெ அருள்,கருணை சபை. )
    — at Uthangudi.
  • ஓர் வேண்டுகோள் : நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள்

    தோழர்களே!,
    ஓர் வேண்டுகோள் :
    நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். 
    சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன? என்றால் இதோ அதன் விபரங்கள்:- ஏபிஜெ அருள்.

    # உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் கடந்த 19 ம் நூற்றாண்டில் தோன்றியது.

    # இந்த புதிய மார்க்கத்தை தோற்றிவித்தவர் : “திருவருட்பிரகாச வள்ளலார்.”

    # இம்மார்க்கத்தின் பெயர்:

    “சுத்த சன்மார்க்கம்” – பூர்வத்தில் நின்ற சமயமத மார்க்கங்களை மறுக்கும் மார்க்கம்.

    # இம்மார்க்கத்தின் கடவுள்:

    இம்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் சமயமத புராணங்களில் சொல்லப்படும் கர்த்தர்,கடவுளர் இல்லை. இவர்கள் எல்லோராலும் எதிர்பார்த்து கொண்டியிருக்கும் உண்மை கடவுள். “சுத்த சிவம்” சிவம் பரமசிவம் இரண்டையும் மறுத்தது.

    # மார்க்கத்தின் கொடி :

    வெண்மை வர்ணம் மற்றும் மஞ்சள் வர்ணம்.

    # மார்க்கத்தின் சங்கம்:

    சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், வடலூர்
    மார்க்கத்தின் சபை:
    சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை, வடலூர்
    மார்க்கத்தின் சாலை:
    சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை, வடலூர்

    # மார்க்கத்தின் மகாமந்திரம்:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

    # மார்க்கத்தின் மரபுகள்:

    நான்கு.அவையாவன;
    1.சாகாத கல்வியே கல்வி.
    2.ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு.
    3.மலம் ஜந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.
    4. வேகாத காலாதி கண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழிலே மெய்த் தொழில் ஆகும்.

    # மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகள்:

    சாதி சமயம் மத மார்க்கங்கள்.

    # மார்க்கத்தின் சாதனம்:

    கருணை ஒன்றே.

    # மார்க்கத்தின் வழிபாடு:

    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல்.

    # மார்க்கத்தாரின் தகுதிகள்:

    சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமகுரோதம் முதலியவை நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் இம்மார்க்கத்திற்கு உரியவர்கள்.

    # சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்:

    ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை.

    # சுத்தசன்மார்க்கத்தார் கடமை:

    உண்மை கடவுளை தொழுவதே.

    # கடவுள் அருளை வள்ளலார் எங்ஙனம் பெற்றார்?

    இரக்கம் விட்டு பிடித்தேன் என்கிறார்.

    # சுத்த சன்மார்க்கத்தார்கள் தங்களிடமிருந்து ஒழித்துக் கொள்ள வேண்டியது:

    சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்,அவற்றின் ஆசாரங்கள் மற்றும் உலகாசாரங்கள்.

    # சுத்த சன்மார்க்கத்தின் ஆசாரம்:

    பொது நோக்கம்.

    # சுத்த சன்மார்க்கத்தில் பயிற்சி:

    விசாரத்தில் இருப்பது.
    உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரித்தல்.

    # சுத்த சன்மார்க்கம் என்பது;

    உண்மை அறிதல்.
    அக அனுபவமே உண்மை.

    # சுத்த சன்மார்க்கத்தின் முடிபு:

    சாகாகல்வி

    # சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் அருள் என்பது:

    மரணமில்லா பெருவாழ்வு.

    # சுத்த சன்மார்க்க உண்மை கடவுளை உலகிற்கு வெளிப்படுத்திய நாள்:
    12-04-1871.

    # சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலார் பெற்ற தேகம் எப்படி பட்டது?

    தனி வடிவமாகிய ஒளி தேகம்.
    # வள்ளலார் உரைத்த உண்மை:
    தான் பெற்ற மரணமில்லா பெருவாழ்வை எல்லோராலும் பெறமுடியும். இதற்கு ஆசாரங்களை ஒழித்து உண்மை கடவுள் நிலை காண வேண்டும்.
    (நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீரால் உடல் நனைந்து இறைநிலையை உள்ளத்தில் காணுதல்.)
    # முழுமையாக அறிய திருஅகவல், விண்ணப்பங்கள், பேருபதேசம், சுத்த சன்மார்க்கப் பாடல்கள் மூலம் அறிக.

    முற்றும்.

    அன்பர்களே! நான் கண்ட சுத்த சன்மார்க்கம் எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் என்கிறார் வள்ளலார். 
    இந்த இனிய நாளில் நமக்கு தெரிய வந்த இந்த புதிய தனி பொது நெறியை நம் சுற்றதார்களுக்கு தெரிவிப்பதே நம் லட்சியம் ஆகும். 
    அன்புடன்:

    ஏபிஜெ அருள், மதுரை,கருணை சபை.

    அன்பர்களே! ஓர் வேண்டுகோள் :
    நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். சட்ட ரீதியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.நல்ல செய்தி வருவது சத்தியம். வள்ளலாரின் உண்மை பொது நெறி சுத்த சன்மார்க்கம் வெளிப்படும் தருணம் இதுவே.

    நன்றி:

    apjarul.