Blog

  • வடலூர் வள்ளலார் தெய்வநிலையம்அரசின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருப்பதே நமக்கு நலம்.இது குறித்து நல்ல விசாரம் செய்வோம்.

    வடலூர் வள்ளலார் தெய்வநிலையம்
    அரசின் இந்து சமய அறநிலையத்துறை கீழ் இருப்பதே நமக்கு நலம்.
    இது குறித்து நல்ல விசாரம் செய்வோம்.

    — APJ அருள் @ நா.இளங்கோ.

    வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    நூற்றுஆறு ஏக்கர் நிலத்தில் தர்மசாலை உட்பட எட்டுச்சாலைகளை நிறுவ விருப்பம் கொண்டவர் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள். வருடம் 1867 ல், திருவருட்பிரகாச வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்டது சத்திய தரும சாலை ஆகும். 1872 சத்தியஞான சபையை கட்டினார்கள்.
    30-01-1874 அன்று இரவு, மேட்டுக்குப்பம், திருவறையில் திருக்காப்பிட்டு கொண்டு, சுத்த சன்மார்க்கப் பயனாகிய, அதாவது கடவுள் அருளால் பெற்ற ஒளி தேகத்தில் வள்ளலார் வெளிப்பட்டார்கள்.
    வருடம் 1874 – 1905 :
    அதன் பின்பு, வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை உட்பட மொத்தம் சுமார் 80 காணியிடம் / 106 ஏக்கர் இடம் வள்ளலாருக்கு பின்பு சன்மார்க்க அன்பர்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. வள்ளலாரால் விலக்கி வைக்கப்பட்ட வேத சமயப்பூசாரி மீண்டும் நிலையத்தில் பூசை செய்ய நுழைந்து, பூசாரியானார்.
    சில வருடங்களில், தெய்வ நிலையத்தின் பல ஏக்கர் நிலங்களுக்கு கிஸ்து (வரி) கட்டாமல் (???) விடப்பட்டுள்ளது. இதனால் பல இடங்கள் மீண்டும் அரசுக்கு மாறியுள்ளதை பதிவேட்டில் காண முடிகிறது.
    நிலையத்தின் பல ஏக்கர் இடங்களுக்கு பராமரித்து வந்தவர்கள் கிஸ்து/ வரியை கட்டத் தவறிவிடுகிறார்கள் (அல்லது திட்டமிட்டே கட்டாமல் விடப்படுகிறது.??). இதனால் வள்ளலார் பெயரில் இருந்த பல ஏக்கர் நிலங்கள் அரசுக்கு போய் விடுகிறது.. இதை மீண்டும் மீட்காமல், இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அன்றைய பூசாரி, அதே இடங்களை பல ஏக்கர் நிலங்களை அரசிடமிருந்து தனக்கு, குடும்பத்துக்கு பெற்றுக் கொள்கிறார். இது போக பல ஏக்கர் இடங்கள் இவராலும் மற்றச் சிலராலும் ஆக்கிரமிக்கவும் படுகிறது. அதன்பின்பு இடங்களை சன்மார்க்கச் சங்கங்களே அவரிடமிருந்து விலைக்கு பெற்றுள்ளனர். இப்படியாக 1905 ஆம் ஆண்டுக்குள் சுமார் 34 ஏக்கர் நிலங்கள் பல பெயரில் பட்டாவாக மாறியுள்ளது எனப் பார்க்க முடிகின்றது. ஆக, 1874 — 1905 வருடங்களிலேயே சுமார் முப்பது ஏக்கர் நிலங்கள் சிலர் பெயரில் மாற்றம் ஆகியுள்ளதை காண முடிகிறது.
    வருடம் 1938 :
    அன்பர்களால் தொடர்ந்து “பராமரிக்க முடியாத நிலையில் இருந்து வந்த” மேற்படி நிலையம் 1938 ஆம் ஆண்டு, ஆங்கில ஆட்சி காலத்தில், இந்து சமய அறநிலையத்துறையிடம் வருகிறது. நிற்க!
    அறநிலையத்துறை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் போது நிலையத்திற்கு சொந்தமாக இருந்த இடங்கள் 72 ஏக்கர் மட்டுமே. அதாவது அரசுக்கு வரும் முன்பே, ஒரு சிலரால் 34 ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    நிற்க ! நிலங்கள் மட்டும் அபகரிக்கப்படவில்லை. நிலையத்தில் நடைப்பெற்ற வழிபாடுகளும், வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க நெறிக்கு முரணாகவே இருந்தது. நிலையத்தில் நியமிக்கப்பட்ட சிவாச்சாரியார் அவர்களால் வேத ஆசாரங்கள் படி வழிபாடுகள் மாற்றப்பட்டிருந்தது. முரணான இந்த பூசைகளை பெரியளவில் அன்றைய அன்பர்கள் எதிர்த்ததாக தெரியவில்லை.
    ஆங்கில ஆட்சியில் பல வருடங்கள் இப்படியாகவே தொடர்கிறது. சுதந்திரம் அடைந்து, பல வருடங்கள் கழித்து, மிக சிலரே இதை எதிர்த்து உள்ளனர். துறவி திரு கந்தசாமி அய்யா அவர்கள் இது விசயமாக கோர்ட் வரை சென்றுள்ளார்கள். ஆனால் அவர் மறைவுக்கு பின்பு வேறு எந்த ஒருவராலும் சரியான முறையில் (வழக்கிட்டு) எதிர்க்கப்படவில்லை.
    வருடம் : 1985
    சபையின் பூசாரியாக இருந்த ஒளி சிவாச்சாரியார் மற்றும் சிலர் சுமார் நான்கு முதல் ஆறு ஏக்கர் நிலங்களை சில 1967 ஆம் ஆண்டு ஆவணங்களை தாசில்தாரிடம் காட்டி, தங்கள் பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டனர். இதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது எங்கள் (2012) வழக்குகளே. அவர்கள் காட்டிய ஆவணம் சரியானது அல்ல எனச்சொல்லி பட்டாவை ரத்து செய்துக் கொடுத்தோம். அப்பீல் சென்று அவர்கள் மீண்டும் பட்டாவைப் பெற்றுள்ளனர். அதை எதிர்த்து தற்சமயம் அரசு மேல் முறையீடு செய்துள்ளது. (CASE NO.WA.2780/2024)
    நமது சட்டப் போராட்டம் 2005 – 2025 :
    நமது முயற்சியில் (2005 லிருந்து) என் துணைவியார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் துணையுடன் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. சபை வழக்குகளில் பெறப்பட்ட தீர்ப்புகள் மூலமே முரணான வழிபாடுகள் ஞான சபையில் தடுக்கப்பட்டன. சுமார் ஆறு ஏக்கர் நிலங்களும் மீட்டுக் கொடுக்கப்பட்டன. ஆனால் நில வழக்கில் அப்பீல் இன்றும் நிலுவையில் உள்ளது.
    நமது வழக்குகள் (2006) மூலமாகத்தான், அன்றைய நிலைய அதிர்காரி மற்றும் அறங்காவலர் குழு, வள்ளலாரின் தனி நெறி குறித்து தெளிவாக அப்போது தான் அறிகிறார்கள் எனலாம். முதலில் நமக்கு வேண்டிய தகவல்களை (2004-2005) தர மறுக்கிறார்கள்.அதுவும் அங்கு இருந்த (கணக்குபிள்ளை எனபர்) ஒரு ஊழியர் மிகவும் முட்டுக்கட்டையாக இருந்தார்.
    வேத சமயப்பூசாரியின் செயலை கண்டுக்கொள்ளாமல் இருந்த அன்றைய அறங்காவலர்கள், பின்னாளில் நமது வழக்குகளில் நமக்கு சாதகமாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    அதன்பின்பு, நமது எல்லா வழக்குகளிலும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நமக்கு சாதகமாகவே கோர்ட்டில் வாக்கு மூலங்களை தாக்கல் செய்கின்றனர். சுத்த சன்மார்க்க நெறிக்கு முரணாக பூசை செய்த சிவாச்சாரியாருக்கு எதிராகவே வாதங்களையும் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதுவே (சத்தியம்) உண்மை.
    இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்கள் நமக்கு சாதகமாக (2006) சத்திய ஞான சபை வழக்கில் தீர்ப்பு கொடுத்தார்கள். அதன்பின்பு அப்பீலிலும் திரு ஆணையர் அவர்கள் வள்ளலாரின் வழிபாடு விதிகளை உறுதிபடுத்தி, நமக்கு சாதகமாக தீர்ப்பு கொடுத்து, வேத பூசாரியின் அப்பீலை தள்ளுபடி செய்தார்கள்.
    ஆக, தெய்வ நிலையத்தின் நிலங்கள் இது நாள் வரை காப்பாற்றி வந்தது “இந்து சமய அறநிலையத்துறையே” ஆகும். இத்துறைக்கு நிலையம் வந்த பிறகு ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பதற்கும் நடவடிக்கையை துறை எடுத்துள்ளது. வழக்குகள் நீதிமன்றத்தில் இன்று நிலுவையிலுள்ளது.
    அன்பர்களே !
    இந்து சமய அறநிலையத்துறை என்பது ஒரு அரசு துறையாகும். அரசு என்பது மக்களின் ஜனநாயக அமைப்பு ஆகும். இதற்கான தனிச் சட்டத்திட்டங்கள் உண்டு. சாதாரண ஊழியர்கள் முதல் மேல்நிலை அதிகாரிகள் பலருண்டு. அரசு துறையிடம் ஒரு நிலையம் இருக்கும் போது, அந்நிலையத்தில் தவறுகள் நடக்கும் பட்சத்தில், நாம் எளிதான முறையில் துறையின் அதிகாரிகளிடம் வழக்கு தொடுக்க சட்டம் வழி வகுத்துள்ளது. அடுத்து, நீதிமன்றம் செல்லவும் H.R. & C.E. ACT ல் இடம் உள்ளது. ஆனால் நாம் தான் முறையிட வேண்டும். திரு துறவி கந்தசாமி அய்யாவை தவிர, வேத பூசாரின் முரணான செயல்களை H.R. & C.E. சட்டத்தின் வாயிலாக யார் தட்டிக் கேட்டார்கள்? இன்று H.R. & C.E கீழ் நிலையம் கூடாது என்று இன்றுச்சொல்பவர்கள் சுத்த சன்மார்க்கத் தனி நெறியை நிலை நாட்ட தொடுத்த வழக்குகள் என்ன?
    அன்பர்களே, எங்களின் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுப்பதற்கும், அதில் அனைத்திலும் வென்றதுக்கும் ஒரு முக்கிய காரணம், வள்ளலார் நிலையம் அரசு கட்டுப்பாட்டில் இருந்ததினால் மட்டுமே. எல்லா வழக்குகளிலும் பூசாரி செயலுக்கு எதிராகவே அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். (பூசாரி வள்ளலாரைப் பற்றி வைத்த விஷயங்களை பற்றி இங்கு வேண்டாம். நமது சப்ஜெக்ட் மாறிவிடும்)
    நிற்க! சட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பங்கு என்ன என்றுத் தெரியுமா? நிலையத்தின் சொத்தை பாதுகாப்பது, நிர்வாகத்தை கண்காணிப்பது மட்டுமே. மற்றப்படி நெறிப்படி வழிபாடு, நிலைய மேன்மைத் திட்டம் இதற்கு அதிகாரம் கொண்டது அரசால் நியமிக்கப்படும் “அறங்காவலர் குழுவே”. இதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
    இதன் அடிப்படையில் கூட நாம் போட்ட வழக்குகள் மூன்று உண்டு. அதில் நம் கோரிக்கை யாதெனில்; ஐந்து அறங்காவலர்களும் புலால் உண்ணாதவர்களாக இருக்க வேண்டும். அறங்காவலர்கள் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஐந்தில் மூன்று பேர்கள் வடலூர் நிலையத்தின் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்திலிருந்து தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் வழக்கு. ஆனால், நாம் யாரும் நிலையத்தின் வள்ளலார் ஆரம்பித்த சங்கத்தை மேன்மப்படுத்தவில்லை. மிகக்குறைவாகவே உறுப்பினர்கள் அப்போது இருந்தனர். சரி விசயத்திற்கு வருவோம்.
    இப்படி தான் நாம் போராட வேண்டும். அதாவது, அறங்காவலர் பதவிகள் சுத்த சன்மார்க்கிகளுக்கு வழங்க வேண்டும் என்று கேட்பதை விட்டு விட்டு, மொத்த நிலையத்தையும் எங்களிடம் கொடு என்றால்???
    வள்ளலார் நிலையங்கள் இந்து சமய அறநிலையத் துறையிடமிருந்து அகற்றிவிட்டு, நிலையத்தை நடத்த யார் கையில் கொடுக்க, என்ன திட்டம் உள்ளது? அது குறித்து எந்தொரு தெளிவான அறிக்கையும் இல்லையே? தலைமை சங்கமா? தலைமை சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது ? முதலில் ஆரம்பித்தவர்கள் மீது எல்லோரும் ஒரு குற்றச்சாடை சொன்னார்களே? அந்த குற்றச்சாட்டு என்ன? இப்ப செயல்படும் தலைமை சங்கத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ளாமல் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன? அடுத்து, சமயம் பொய், மதம் பொய், வேத ஆகமம் கூடாது என்ற சுத்த சன்மார்க்கக் கோட்பாட்டுக்கு நேர்மாறாக சமய ஆசாரத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களும் மாவட்ட சங்கங்களில், ஏன், தலைமை சங்கத்தில் உள்ளனரே. அவர்களிடம் வடலூர் நிலையம் சென்றால் என்னவாகும்?
    அடுத்து; வள்ளலார் கிருஷ்ணர் அவதாரம் போல், வள்ளலார் சனாதனத்தின் உச்சம், வள்ளலாருக்கு விழா எடுத்து அங்கு வெளியிட்ட காவி உரையில் திருவருட்பா, வள்ளலாரை பல ஆயிர சிலைகள் செய்து சமயக் கோவிலில் வைத்து வரும் செயல், சுத்த சன்மார்க்க விழா என்றுச் சொல்லி ஆதினங்களும் ஜீயர்களும் அழைத்தல், சுத்த சன்மார்க்கச் சங்கங்களை, பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணா மலை, காசி, கைலாஸ், போன்ற சமய தலங்களில் மற்றும் வளாகத்தில் நடத்துதல், வள்ளலாரால் விட்டுவிடச் சொன்ன சமய ஸ்தோத்திர திருவருட்பாக்களை அச்சிடுதல், ஓதுதல், நமசிவாய என்றுச் சொல்லும் சங்க நிர்வாகிகள், நமக்கில்லை வள்ளலாருக்கு மட்டுமே சாகாநிலை சாத்தியம் என்றுச் சொல்லும் சங்க நிர்வாகிகள், இன்னும் காவி வேஷ்டி, ருத்திராட்ச மாலை, விபூதி குங்குமம் பொட்டு வைக்கும் சங்க நிர்வாகிகள், இப்படி பல வகையில் வள்ளலாரின் கட்டளைக்கு எதிராக செயல்படுவர்கள், இவர்கள் உள்ளனரா இல்லையா ?
    இவர்கள் நாளை சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் ஆவார்களா மாட்டார்களா ? அவர்கள் கையில் வடலூர் நிலையம் சென்றால்……???? (இங்கு யாரையும் மதிப்பு குறைத்தோ, குற்றம் சொல்லியோ, இதை குறிப்பிடவில்லை. நாங்கள் எல்லோரையும் வயதின் அடிப்படையில், அவர்களிடமுள்ள ஜீவகாருண்ய உணர்வு அடிப்படையில் மிக்க மரியாதையை அவர்களுக்கு கொடுப்பவர்களே. ஏன்? சமயத்திலும், மதங்களிலும் உள்ளவர்கள் பலர் மதிக்கக்கூடிய பண்பாளர்கள் உள்ளனர். ஆனால்.. அது வேறு. சுத்த சன்மார்க்கத் தனி நெறி சம்பந்தப்பட்டது வேறு. கடவுள் ஒரு நல்ல நம்பிக்கையே. ஆனால் நம் மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் இல்லையா) உங்களுக்கு தெரியுமா?
    தனித் தன்மையோடு திகழ்ந்திருந்த “இராம கிருஷ்ண மடங்கள்” இன்று, சீரடி சாய் பாபா கோவில்கள், இவைகளில் மாற்றங்களை காணலாம். மதுரையில் அன்று ஜைனக் கோவிலாக இன்று பலி கொடுக்கும் பாண்டி கோவிலாக, வள்ளுவருக்கு காவி உடை, ஏன், நேற்று வரை தனித்தன்மையோடு திகழ்ந்த பாண்டிச்சேரி ஆசிரமம், இன்று அதன் நிலை?, இதன்வரிசையில் நாளை, வள்ளலாரும், வள்ளலார் நிலையமும் ……????.
    நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க தனி நெறியில், ஆசாரமில்லா கருணை வழிபாட்டில், நாம் பயணித்தாலே போதும், அப்போது தெரியவரும் நம் அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்கள் யார் என்று. உண்மைதானே. சுத்த சன்மார்க்க பொது நெறியில் தான் நாம் ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட முடியும். இது வள்ளலார் கட்டளை.
    சரி தான் சார், இப்ப நாம் கேட்கவோ அல்லது போராடவோ எதுவுமே இல்லையா? அப்படி யார் சொன்னா? நிறைய உள்ளது. அவைகள்:
     நியமிக்கப்படும் அறங்காவலர்கள் சுத்த சன்மார்க்கத்தில் நம்பிக்கையுடையவர்களாக இருக்க வேண்டும்.
     வடலூரில் வள்ளலாரால் ஆரம்பிக்கப்பட்ட, இன்றும் அரசால் இயக்கப்பட்டு சந்தா பிரித்து வரும், “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமே” நம் எல்லோரின் தலைமை சங்கம் ஆகும். இதில் தான் நாம் சந்தா செலுத்தி உறுப்பினர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
     மேற்படி சங்கத்தில் உறுப்பினாராக விருப்பம் உள்ளவர்கள் வள்ளலாரின் மூன்று கட்டளைகளை உறுதி மொழியாக தர வேண்டும். அவையாவன;
    –கொலை புலை தவிர்த்துவன்,
    –காமம் குரோதம் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால தடுத்துக் கொள்ள உறு‌தி செய்கிறேன்,
    –சமய மத மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட்டவன.
    –வள்ளலார் கட்டளைப்படி பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழித்து உண்மை அறிவால் நல்ல விசாரம் செய்து, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்வேன். நித்திய வாழ்வு பெறுவதே லட்சியம்.
     மேற்படி வள்ளலார் ஆரம்பித்த சங்கம் அருளால் சரியாக செயல்பட்டு நிலைபெறும். இதன் உறுப்பினர்களிலிருந்து குறைந்தது மூன்று அறங்காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும்.
     வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைப்படியும், நீதிமன்றத்தீர்ப்புகள் அடிப்படையில் நிலையம் பிறழாது நடைப்பெற “நிர்வாகத் திட்டத்தை” தயார் செய்யப்பட வேண்டும்.
     வள்ளலார் விரும்பிய மீதமுள்ள சாலைகளை நிறுவி தர வேண்டும்.
     ஒரு சாலையில் “சுத்த சன்மார்க்க நன்முயற்சி பயிற்சியை” மூத்த சன்மார்க்க அடியார்கள், சாதுக்கள் மூலம் வழங்க வேண்டும்.
     மற்றொரு சாலையில் தினம் மூத்த சன்மார்க்கச் சான்றோர்கள் கொண்டு “சொற்பொழிவுகள் மற்றும் விண்ணப்பங்கள்” வாசிப்பு நடக்க வேண்டும். சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள், திரு அகவல் பாராயணம் தினம் காலை மாலை வேண்டும்.
     மற்றொரு சாலை அமைப்பில் வள்ளலார் சொல்லியப்படி அமைதியாக வடக்கில் அமர்ந்து தெற்கு நோக்கி அக விசாரத்தில் இருக்க “சுத்த மெய்ஞ்ஞான யோக கூடம்” சுமார் 200 பேர் அமருமாறு வேண்டும்.
     நூல்கள், புத்தகங்கள் எப்பொழுதும் கிடைக்கும் வண்ணம் பெரிய புத்தக கூடம் வேண்டும். மூத்த சன்மார்க்க பெரியோர்களின் ஒப்புதல் பெற்ற எங்கள் அன்பர்களின் புத்தகங்களும் கிடைக்க வழி வகை வேண்டும்.
     ஏழைகள், பெரியோர்கள், சிறுவர்கள் வளாகத்தில் அமர்ந்து செல்ல வசதிகள் வேண்டும். மதியம் உட்பட எல்லா ஜோதி தரிசினத்தை மழை வெயில் இவையால் தடைபடாது வரிசையாக நின்று செல்ல பாதை (கோயில்களில் உள்ளது போல்) வேண்டும்.
     ஜோதி பார்க்க நிற்குமிடம் உடனே சரிப்படுத்த வேண்டும்.
     சத்திய தர்ம சாலையில் வழங்கப்படும் உணவு, இடம் மேன்மைப்படுத்தி தர வேண்டும். குறைந்தது 500 பேர் அமரும்படி விரிவுபடுத்த வேண்டும்.
     வள்ளலார் காட்டியது போல் ஜோதி தரிசனத்தை எட்டு கதவுகளும் திறந்து காட்ட வேண்டும். வள்ளலார் உண்மை செய்விக்கும் இடம் என்பதால் தினம் காலை, மாலை, இரவு மூன்று வேளையும் ஜோதி வழிபாடு நடைப்பெற வேண்டும்.
     எங்கள் அன்பர்கள் சாலை உட்பட நிலையங்களில் தொண்டாற்ற முறையான அனுமதியை அறங்காவலர் குழு தர வேண்டும்.
     வள்ளலார் மார்க்கத்தில் சிறப்பு நிறங்கள் வெண்மை பொன்மை இந்த வர்ணங்களில் தான் நிலையச்சுவர்கள் வர்ணம் பூச வேண்டும், சபை சாலை விரிவுப்படுத்த வேண்டும். சுற்றுச்சுவர் அமைத்து வளாகம் சுத்தமாக இருக்க வேண்டும். நிலையத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு, வள்ளலார் ஆரம்பித்த சங்கத்திற்கான தனி கட்டிடம் வேண்டும்.
     சந்தை போல் வியாபார ரீதியில் கடைகளோ, சங்க அமைப்பு பெயரில் கூடாரமோ, ராட்டினங்களோ, எதுவும் வளாகத்தினுள் கூடாது. அடிப்படை அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்.
     அங்குள்ள ஏழைகள் மற்றும் எந்தொரு ஆதரவுமில்லாதவர்கள் கருணை அடிப்படையில் அவர்களுக்கான ஓர் இல்லம் அமைக்க வேண்டும்.
     வள்ளலாரின் மூலிகைகள் குறித்த ஆய்வும், ஏழைகளின் பிணி துன்பம் போக்கும் வகையில் ஓர் மருத்துவமனையும் அமைக்க வேண்டும்.
     (மேற்படி வைக்கப்பட்ட கோரிக்கைகள் பாதிக்கு மேல் அரசு செய்து கொடுக்க ஏற்கனவே சர்வதேச மையத்திட்டத்தில் நிதி ஒதுக்கி உள்ளது என இங்கு சத்தியமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அரசுக்கு நன்றி.)

     மேதகு தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறை தான் நமது திருவருட்பிரகாச வள்ளலாருக்கு பல பெருமைகள் செய்தாலும், எங்களின் நியாயமான முக்கிய கோரிக்கையை ஒன்று உள்ளது;
    அது எதுவெனில்;
     “வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறியானது சாதி, சமயம், மதம், வேத ஆகமம், புராண இதிகாசங்கள் ஆசாரங்கள் எதன் கீழும் வராது விளங்கும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தனி நெறி என்பதை அரசு அறிவிக்க வேண்டும். ஆணையர் மற்றும் நீதிமன்றம் வழக்குகளில் சுத்த சன்மார்க்கத் தனி நெறி உறுதிபடுத்தப்பட்டிருந்தாலும், மேதகு அரசின் அறிவிப்பு வேண்டும்.

    எனவே,
    எல்லா வகையிலும், நமது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருப்பதே நமக்கு நலம். -– நம்மவர்களின் மேலான பார்வைக்கு பணிவுடன்: APJ அருள்

    அன்பர்களே !வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம், எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும். அதே நேரத்தில், சுத்த சன்மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகளாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்றும், இவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களில் மற்றும் வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசார சங்கற்ப விகற்பங்களில் நம் மனம் பற்றக்கூடாது. என்கிறார் வள்ளலார்.

    ஆசாரமில்லா கருணை தனி நெறியாம், சமரச சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி ஒன்றே உலகமெங்கும் வேண்டும், அதனால் இது விரைந்து பரவிட அரசே முன் வந்து தனி வாரியம் அமைக்கும் காலம் விரைவில்.
    உண்மை, நம்புவோம் – ஏபிஜே அருள் 8778874134


    எல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே.
    நம் ஆன்ம நேய சகோதரர்களே. எல்லா சமய மதங்களும் கடவுளை போற்றி நல்லதையே சொல்லுகிறது. ஆனால் சமரச சுத்த சன்மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
    🙏

  • நம்மவர்களா? யோசியுங்கள், இது முக்கியம்.வணக்கம். ஏபிஜே. அருள்

    எல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே. இரக்கமும், சுத்த சன்மார்க்கக் கோட்பாடுகளும் இவை பெற்றிருப்பவர்கள் நம்மவர்கள். இன்று வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உலகில் விரைந்து பரவி வருகிறது. இந்த கருணை நெறி பரவினால் சாதிகளும், வருணாசிரமம், வேத ஆகமங்களும் சமய கட்டுப்பாட்டு ஆசார வகைகளும் இல்லாது போய்விடும்.


    அதனால், வள்ளலார் இருந்த காலத்திலிருந்தே எதிர்ப்புகளும், பொய் பிரச்சாரங்களும், வீண் வாதங்களும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி மீது தொடுக்கப்பட்டே வருகிறது. இந்த தாக்குதல் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ நடைபெறுகிறது.
    இதில் மறைமுக தாக்குதல் என்பது; நம்மவர்கள் போல் காண்பித்துக் கொண்டு, எப்படியெனில்; வேத ஆகமம், சாதி, சமயத்தில் பற்றுள்ளவர்கள் இவர்கள், சுத்த சன்மார்க்கம் என்றப் பெயரிலேயே விழா எடுப்பது, கூட்டம் நடத்துவது, இவை போன்று செய்வார்கள். இவர்கள் தங்களின் சொற்பொழிவில் அல்லது கட்டுரைகளில் வள்ளலாரை ஜீவகாருண்யத்தில் மட்டுமே வெளிப்படுத்துவது, வள்ளலாரையே தெய்வமாக்குவது, சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவது இவை போன்றவைகளை இவர்கள் செய்வார்கள்.
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கருணை நெறியை விரும்பும் மற்றும் தழுவும் நம்மவர்கள் இவர்களை அடையாளம் எப்படிக் காண்பது? என்பதே இன்றைய விசாரம். அன்பர்களே!
    உண்மையான சுத்த சன்மார்க்கக் கூட்டமெனில்;
    அங்கு மூன்று விசயம் இருக்க வேண்டும்.

    1) அச்சங்கத்தினர் ஒவ்வொருவரும் வள்ளலாரால் வகுக்கப்பட்ட தகுதியை, தாங்கள் பெற்றுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்திருக்க வேண்டும். சங்கங்கள் அதை பெற்றிருக்க வேண்டும்.
    2) வள்ளலாரால் செய்து தரப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஒழுக்கம், கூட்டத்தில் ஆண்டவரை நினைந்து எல்லோராலும் விண்ணப்பிக்க வேண்டும்.
    3) நித்திய வாழ்வைப் பெற்றுத்தரும் கருணையின் விருத்திக்கு தடையாக உள்ள பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழித்துக் கொண்டு, உண்மை அறிவைப் பெற்று, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் லட்சியமாகும். இதை எழுத்தாலும், சொல்லாலும் மற்றும் செய்கையாலும் வெளிப்படுத்துவது என் கடமை, என்ற உறுதிமொழியை அளித்தல் வேண்டும்.
    ஆம், இந்த மூன்றும் உண்மை பொது நெறியாம் சமரச சுத்த சன்மார்க்கத்தின் சத்திய கொள்கையை உறுதிச் செய்யும். இந்த மூன்று அடிப்படை விசயத்தை மறைத்துக்கொண்டு மாநாட்டையோ, விழாவையோ, கூட்டத்தையோ நடத்தினால், அவர்கள் நம்மவர்கள் அல்லர். அன்பர்களே!
    உண்மை பொது நெறியை தெரிந்துக்கொள்ள எல்லோரும் வர வேண்டும், மக்களை வரவேற்க வேண்டும், வாரீர் வாரீர் என அழைக்க வேண்டும்.
    ஆனால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலையை, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நம்மவர்கள் தான் நடத்திடக்கூடும். இது வள்ளலாரின் கட்டளை.
    மேலே உள்ள மூன்றும் இங்கே கீழே தரப்பட்டுள்ளது. நன்றி. நல்ல விசாரம் தொடர்ந்து செய்வோம். அன்புடன் ஏபிஜே. அருள்.
    1.சுத்த சன்மார்க்கத்தார்கள் பெற்றிருக்க வேண்டிய மூன்று தகுதிகள்:
    (வள்ளலாரின் சத்திய வாக்கியம் : பக்கம் 411)

    1. சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவன் என்றும்,
    2. காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவன் என்றும்,
    3. கொலை புலை தவிர்த்தவன் ஆவேன் என்று உறுதிமொழி செய்கிறேன்.

    1. எல்லோரும் எடுத்துக் கொள்ளவேண்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க விண்ணப்பம். (வள்ளலாரின் சத்திய வாக்கியம் : பக்கம் 644) :
      “எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
      இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய
      ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!”

    3.சுத்த சன்மார்க்கத்தார்களின் கடமையையும் லட்சியத்தையும்
    (எழுத்தால், சொல்லால், செய்கையால் உறுதி செய்தல்)
    ( வள்ளலாரின் சத்திய வாக்கியம் : At page 418);

    தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருக்கும்
    சமய ஏற்பாடு சாதி ஏற்பாட்டு ஆசாரங்களாகிய;
    சாதி ஆசாரம், குல ஆசாரம், ஆசிரம ஆசாரம், லோக ஆசாரம், தேச ஆசாரம், கிரியை ஆசாரம், சமய ஆசாரம், மத ஆசாரம், மரபு ஆசாரம், கலை ஆசாரம், சாதனம் ஆசாரம், அந்தம் ஆசாரம், சாஸ்திர ஆசாரம் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து போகச் செய்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தைப் பெற்று, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்வது என் கடமை. ஆண்டவரின் அருளை பெறுவதே என் லட்சியம். இது சத்தியம்.


    (கூட்டங்களில் மட்டுமில்லை சங்கங்களும் மேற்படி தகுதி மற்றும் ஒழுக்க உறுதிமொழியை, விண்ணப்பத்தை உறுப்பினர்களிடமிருந்து பெற வேண்டும்.)
    நன்றி: ஏபிஜே அருள் @ இளங்கோ. 8778874134.

  • # வடலூர் சர்வதேச மையம் # உண்மை விளக்கம் #

    # வடலூர் சர்வதேச மையம் # உண்மை விளக்கம் #
     
    அனைவருக்கும் பணிவான வணக்கம். அன்பர்களே, நம்மவர்களே,
    1.  ஏன் சர்வதேச மையத்தை நாம் ஆதரிக்கிறோம்?
    2.  பெருவெளி பற்றி வள்ளலாரின் விளக்கம் என்ன?
    3.  வேத ஆகமம் புராணம் சமயம் இவை மீது நம்பிக்கை கொண்டோர் ஏன் வலிந்து வந்து சர்வதேச மையம் கூடாது என வழக்கிட்டுள்ளார்கள்?
     
    இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துக் கொண்டால், நம் வள்ளலாருக்கு பெருமைகள் சேர்த்த தமிழ்நாடு அரசை நாம் பாராட்ட வேண்டிய காரணம் புரியும். பணிவுடன்: வள்ளலார் வழி அன்பர்கள் மற்றும் சங்கங்கள்.
    கேள்வி
    1: ஏன் சர்வதேச மையத்தை நாம் ஆதரிக்கிறோம்?
    சர்வதேச மையம் என்றால் என்ன? அதில் அறநிலையத் துறை என்ன செய்து தரப் போகிறது? அதில் வருபவை அனைத்தும் வள்ளலார் நெறிப்படி உள்ளதா? இது போன்ற விளக்கங்கள் எதுவும் சங்க அன்பர்களுக்கு ஆரம்பத்தில் தெரியாது என்பதே உண்மை ஆகும். மறுக்கவில்லை. சர்வதேசமையம் கூடாது என வழக்கிட்ட மூவரில் இருவர் பி.ஜே.பி (ஆன்மிகப் பிரிவு) மற்றும் சநாதன இயக்கம் எனத் தெரிய வந்தது.
     
    வழக்கில் திரு ஆணையர் மற்றும் வடலூர் நிலைய நிர்வாகி தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலங்கள் வழியாகத்தான் விபரங்களை நம்மவர்கள் தெரிந்துக் கொண்டோம். அதன் பின்பு தான் இத்திட்டம் மீது திருப்தி ஏற்பட்டது. நிற்க! அதன் பின்பு; நமது ஏபிஜே. அருள் @ இளங்கோ, வழக்கறிஞர் அவர்கள் மூலம் தலைமைச் சங்கமும் மேற்படி வழக்கில் இடை மனுக்கள் தாக்கல் செய்துள்ளது.
     
    அன்பர்களே, வடலூரில் சர்வதேச மையம் என்றப் பெயரில் ஒதுக்கப்பட்ட நிதியில் கீழ்வரும் திட்டங்கள் இடம் பெற்றிருப்பதை நம்மால் காண முடிகிறது.
     
    •  தருமச்சாலையின் கட்டிடத்தை சரி செய்து மேலும் விரிவுபடுத்துதல்,
    •  பெரிய ஆர்ச் கட்டி தருதல், ஆர்ச்-லிருந்து சபை வரை நல்ல ரோடு போடுதல், (ரோட்டிலிருந்து சபை நன்றாக தெரியுமாறு செய்தல்)
    •  சத்திய ஞான சபை கட்டிடத்தில் எந்தொரு மாற்றமும் கிடையாது. சுற்றுப்புறமும் அப்படியே பாதுகாக்கப்படும்.
    •  சிறியவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு சில மணி நேரம் அங்கு அமர்ந்துச் செல்ல வசதிகள்.
    • அடிப்படை சுகாதார வசதிகள் எல்லாம். மிக முக்கியமாக வள்ளலார் விரும்பிய மீதமுள்ள ஆறு சாலைகள் அமைத்து தரவும் முன் வந்ததை வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். அமைக்கப்படும் கட்டிடங்கள் சபையைவிட உயரமில்லாமல் இருக்கும்.
     
    (கட்டப்படும் ஆறுசாலை கட்டிடங்களில் மூன்றுசாலைகள் அதாவது, ஏழைகளுக்கான மருத்துவமனை, முதியோர் இல்லம், தாங்கும் விடுதி இவை இன்று “பி” செட்டிலுக்கு சென்றுவிட்டது.
    மீதமுள்ள மூன்று எதுவெனில்; பாடச்சாலை (சாத்திர சாலை); விசாரக்கூடம் (விவகார சாலை); பயிற்சிக்கூடம் (யோக சாலை) இவைகளைத் தான் கட்டித் தருகிறார்கள். சுமார்
    மூன்றரை ஏக்கர் நிலத்தில் மட்டுமே அமையவுள்ளது. இவைகளே வாக்குமூலத்தில் பிரதானமாக உள்ளது கண்டு மகிழ்ந்தோம். நம்புகிறோம். மேலும்;
     மாதப்பூசம் ஆகட்டும், வருட தைப்பூசம் ஆகட்டும் வரும் மக்கள் படும் கஷ்டம் சொல்லிமாளாது. அதுவும் இங்கு வரும் ஏழைகள் படும்பாடு சொல்லிமாளாது.
     சபை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் முதல் நாள் இரவே வந்து அப்படியே தரையில், பனியில் படுக்கும் நிலை.
     மதியம் காட்டப்படும் ஜோதி தரிசனத்தை கடும் வெயிலில் நடந்து வந்து ஜோதி பார்த்து, சிறிது ஒய்வு எடுக்க இடமில்லாமல் உடனே திரும்பும் மக்கள்.
     சத்திய தருமச் சாலையில் கடும் நெருக்கடி கூட்டத்தில் பசியாற்றிக் கொள்ளுதல், நெறி குறித்து சரியாக தெரிந்துக்கொள்ள வாய்ப்பு இல்லாமல் அப்படியே திரும்ப வைத்தல்,
     இதற்குமுன், திருக்கோயில் எனக்கருதாமல் ஏதோ சந்தை போல் பல நூறு விற்பனைக் கடைகளுக்கு ஏலம் விடுதல், கண்காட்சி கூடாரங்கள், விளையாட்டு ராட்டினங்கள் மற்றும் மற்ற கோயில்களில் நடப்பது போல் சடங்குகளை செய்ய வைத்தல்.
     துறை ஊழியர்களுக்கு போதிய அலுவலக அறைகள் இல்லாதிருத்தல்.
     சிறியவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், பெண்கள், குடும்பத்துடன் வருபவர்கள் இவர்கள் அமரக்கூட வசதி இல்லாமை.
     வள்ளலார் சபை கட்டிய காரணமே, அங்கு உண்மை சொல்லுவதற்கே. ஆனால் அதை சமயக் கோவில் போல் தீபாராதனை சடங்குகள் செய்து ஜோதியை காட்டி மக்களை அனுப்பி விடுதல்.
     வள்ளலாரின் பொது நெறி பரவி விடக்கூடாது என்பதற்காகவே சபையில் மாதம் ஒரு முறை மட்டுமே ஜோதி காட்டி, மற்ற நாட்களில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் வெறுமனே நிலையத்தை வைத்து வருதல்.
     இதையெல்லாம் எப்பொழுது நீங்கி, திருவருட்பிரகாச வள்ளலாரின் தனி நெறி – பொது மார்க்கம் உலகில் வெளிப்பட உள்ளது.?
    இந்நிலையில்தான் இன்றைய தமிழ்நாடுஅரசு, வள்ளலாருக்கு விழா எடுத்து, அவரின் பிறந்தநாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து, வள்ளலார் நிலையத்தை மேன்மைப்படுத்தி கொடுத்து, அவரின் தனி நெறியை உலக அளவில் தெரியபடுத்தும் நோக்கத்தில், சுமார் நூறுகோடிகளை அரசு ஒதுக்கியது என்றால், நமக்கு மகிழ்ச்சி இல்லையா? அரசுக்கு நன்றிச் சொல்லி வரவேற்க வேண்டுமா? வேண்டாமா?
    ஆக, முதல் கேள்விக்கு (ஏன் சர்வதேச மையத்தை ஆதரிக்கிறோம்?) உரிய பதிலை தெரிந்துக்கொண்டோம், சர்வதேச மையம் என்ற பெயரில் வரும் பல திட்டங்கள் நாம் பல வருடங்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான். அதுவும் தலைமை சங்கம் ஆரம்பிக்கும் போது, அன்று, தீர்மானங்களை நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்த கோரிக்கைகளில் பல, இந்த சர்வதேசமையத்திட்டத்தில் உள்ளது. நம் கோரிக்கையை தான் அரசு நிறைவேற்றி உள்ளது.
    நிற்க! இதில் “சில முக்கிய குறைபாடுகளும்” உள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை அல்லது மறைக்கவில்லை. கட்டிடங்களுக்கு பூசும் பூச்சு வர்ணம், ரோடு சைடில் வைக்கும் சில சமய அடையாளங்கள், கட்டிடங்களில் ஆர்ச்சில் சமயக் கோபுரம் போல் அமைப்பு, தினம் ஜோதி காட்டுவது குறித்து சொல்லாமல் உள்ளது, தலைமை சங்கத்திற்கான இடம், இவை குறைபாடுகளே. அவைகளை நாம் உரியமுறையில் எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும், நமக்கென ஒரு இடத்தை பெற வேண்டும்.
    அடுத்த கேள்வி 2: பெருவெளி பற்றி வள்ளலாரின் விளக்கம் என்ன?
    பெருவெளியை கட்டிடங்கள் கட்டி சிதைக்கக்கூடாது, என்பது காணியில் எதுவும் கூடாது என்று சமயமத ஆசாரத்தில் நம்பிக்கைக் கொண்ட அன்பர்கள் (கரிசனம் கொண்டு?) நமக்கான திட்டங்களை எதிர்த்து அவர்கள் தான் வழக்குகள் தொடுத்துள்ளனர்.
    அன்பர்களே, ஒரு ஆன்மிக இயக்கமோ அல்லது அறிவு சபையோ, நிலையமோ தங்களின் கொள்கையை விளக்குவதற்கு, பரப்புவதற்கு, தேவையானவைகளை செய்துக் கொள்கின்றன. உதாரணமாக இஸ்லாமியர் மசூதி, கிறிஸ்தவ சர்ச், சைவ சமய கோயில்கள், வைணவ கோயில்கள், இன்னும் பல மார்க்கங்கள் தங்கள்தங்கள் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் வழிபாடுகள் செய்ய மற்றும் வேண்டுதல்களை செய்ய தேவையான இடங்கள் மற்றும் கட்டிடங்களை கட்டியுள்ளனர். அப்படித்தானே!
    உதாரணமாக; பீர்முகமது தர்கா, வேளாங்கண்ணி மாதா, ஸ்ரீரங்கம் திருச்சி, திருப்பதி ஏழுமலையான், சீரடி சாய்பாபா, பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், இராமேஸ்வரம் கோயில், திருச்செந்தூர் தலம் மற்றும் இன்று கட்டியுள்ள அயோத்தி ராமர் கோவில் வரை, அங்கு எல்லாம் வரும் பக்தர்களுக்கு செய்து கொடுத்துள்ள வசதிகள், காணிக்கையை செலுத்தும் வண்ணம் கட்டிடங்கள், தங்கு விடுதிகள், அலுவலகம், புத்தக கடைகள், பிரசாத கடைகள், உட்கார்ந்து செல்ல இடங்கள், என்று எல்லாம் உள்ளது இன்னும் வசதிகள் பெருகி வருகிறது. அதனால் அவர்களின் மார்க்கங்களின் கொள்கை கோட்பாடுகள் பரவி வருகிறது. அப்படித்தானே!
    நிற்க! அதுபோல் தானே வள்ளலாரின் கருணை நெறி பரவிட தரும சாலை, வழிபாட்டு சபை இவை போக, வள்ளலார் விரும்பிய மீதமுள்ள ஆறு சாலைகள் அதாவது; கருணை அடிப்படையில் மருத்துவ சாலை, உபகார அடிப்படையில் முதியோர்களுக்கான சாலை, தங்கும் விடுதி, அறிவு விருத்தி அடிப்படையில் விசார சாலை, நன்முயற்சி பயிற்சி அடிப்படையில் பாட சாலை மற்றும் சுத்த மெய்ஞான யோகச் சாலை இவையெல்லாம் நிலையம் அமைக்க வேண்டுமா? வேண்டாமா? வள்ளலார் இதை கையெழுத்துப் பதிவேடாகவே செய்துள்ளார்கள்.(பக்கம்:622).
    வள்ளலார் விரும்பியப்படி சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உலகமெங்கும் விரைந்து பரவ வேண்டும். 80 -காணி நிலத்திலே தான் மேற்படி சாலைகளை அமைக்க வள்ளலார் திட்டமிட்டுள்ளதை பெருமானாரின் அறிவிப்பே சாட்சியாக உள்ளது. நிற்க! மீதமுள்ள சாலைகள் அமைய வேண்டுமா? வேண்டாமா? அன்பர்களே!
    அவர்களின் கோயில், நிலையங்களில் அவர்களின் தெய்வம் வீற்றிருக்கும் இடம் (கருவறை) மட்டும் தான் உள்ளதா? வேறு எந்த கட்டிடங்களும் கட்டவில்லையா?
    இருப்பினும் “பெருவெளி” பற்றி வள்ளலார் சொன்ன விளக்கம் என்ன? என தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும். நம் அய்யா ஏ.பி.ஜே.அருள் அவர்கள் தந்த மிகத் தெளிவான விளக்கத்தின் மூலம் பெருவெளி உண்மை அறியலாம். நம் தலைமை சங்கம் கூட நூலாக வெளியிட்டுள்ளது.
    அன்பர்களே! “வேதத்தில்” பெருவெளிக்கான விளக்கம்;
    பெருவெளி என நேரிடையாக வைதீக வேதம் சொல்லவில்லை. ஆனால் லோகங்களை பற்றிச் சொல்லியுள்ளார்கள். அவை பூமிக்கு மேல் ஏழு லோகங்களும், கீழ் ஏழு லோகங்களும் என்கிறார்கள். லோகங்களின் விளக்கமும் தந்துள்ளனர்.
    நிற்க: நம் வள்ளலாரின் கட்டளையானது; (பக்கம்:416): லோகத்தில் லட்சியம் கூடாது, லோகங்களின் கட்டுப்பாட்டு ஆசாரத்தை விட்டொழிக்க வேண்டும். ஒழித்தால் தான் கருணை விருத்தியாகி பொதுநோக்கம் வரும் என்கிறார். அடுத்து,
    “சமயங்களில்” பெருவெளி என்பதற்கான விளக்கம்;
    பூமிக்கு வெளியில் ஏழு வெளிகள் உள்ளன. அவையாவன; சல வெளி, வன்னி வெளி, வாயு வெளி, ஆகாச வெளி, பரை வெளி, பராபர வெளி, சச்சிதானந்த வெளி எனப்படுகிறது. இதற்கான விளக்கம் அருளியுள்ளனர் சமய ஞானிகள். ஆனால்;
    சுத்த சன்மார்க்கத்தில் சொல்லப்படும் பெருவெளி என்பது; மேலே சொல்லப்பட்ட லோகங்கள் ஆகட்டும் அல்லது சமயத்தில் சொல்லப்படும் வெளிகள் ஆகட்டும் இன்னும் வள்ளலாரால் விவரிக்கப்படும் மற்ற வெளிகள் ஆகட்டும், இவையெல்லாம் தன்னகத்தே பெற்று விளங்குகின்ற ஒரு வெளியே “பெருவெளி” என்கிறார் வள்ளலார். பெருவெளியை நம்மால் புறத்தில் சுட்டி காட்ட முடியாது, விவரிக்க முடியாது, வெறும் கண்ணால் பார்க்க முடியாது, சாதாரண அறிவால் உணர முடியாது. இந்த “பெருவெளியில்” தான் எல்லாம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பெருவெளியை தாங்கும் சுக வெளி முழுதும் பரிபூரணமாக நிரம்பியுள்ளது “அறிவு என்னும் மெய்பொருள் அவர் ஆண்டவர்”. ஆண்டவரின் சொரூபம் “ஒளி அருட்பெருஞ்ஜோதி” ஆகும்.
     
    திருஅகவலில் சுமார்-50 இடங்களிலும், ஆறாம் திருவருட்பாவில் 56-பாடல்களுக்கு மேலாகவும், இந்தப் பெருவெளி பற்றி விளக்கியுள்ளார் வள்ளலார். பெருவெளியின் உயர்ந்த விளக்கம் APJ அருள் நூலிருந்து சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.
     
    • கணக்கு வழக்கு அது கடந்தது பெருவெளி
    • வெளி எலாம் விளங்கும் பெருவெளி, கரையில்லாது ஓங்குவது
    • ஒன்றான ஒன்று பெருவெளி பெருவெளியில் ஜோதி மயமே
    • உளத்தே அரு உடைய பெருவெளி, உறைந்த அனுபவ பெரு வெளி
    • வேதம் ஆகமம் உண்மைவெளி தோன்ற உரைக்கவில்லை
    • சமயங்களை கடந்த தனிப்பொருள் வெளி
    • மதங்களை கடந்தது, சுட்டுதற்கு அரிதாம்
    • ஆறு அந்தத்து நிறை ஜோதி அதற்கு அப்பாலும் விளங்கும் வெளி
    • உரை மனம் கடந்தது, தனி வெளி, தனி இயற்கை வெளி
    • மனம் இடம் கொண்ட தெய்வங்களுக்கு அப்பால் விளங்கும் வெளி
    • தகர மெய்ஞ்ஞான தனி வெளி, அளப்பதற்கு அரிது
    • தத்துவங்களை, சாக்கிரங்களை கடந்தது, ஆனந்த அனுபவ வெளி
    • குறி குணங்கள் கடந்த வெளி பெருவெளி, உற்றறிதற்கு அரியது
    • புறம்,புறப்புறம்,அகம்,அகப்புறம் விளங்கும் பெருவெளி
    • மற்ற வெளிகள் எல்லாம் கடந்து அதன் மேல் அப்பாலுள்ளது
    • பெருவெளியில் எல்லாம் தோற்றுவிக்கப்படுகிறது
    • அருட்பெருவெளியில் அமர்ந்துள்ள அருட்பெருஞ்ஜோதி
    • கோடிக்கணக்கான விண்கள் அடங்க விளங்கும் பெருவெளி
    • ஓங்கும் பிண்ட அண்டங்கள் தாங்கும் பெருவெளி
    • பூதவெளி பகுதிவெளி முதல் எல்லா வெளிகளும் விளங்கும் பெருவெளி
    • மற்ற வெளிகள் ஏழும் கலந்து கரையும் தாய் வெளி
    • வெளிக்குள் வெளி கடந்து விளங்குகிறது. மவுனம்,நாதம்,துரியம் கடந்தது
    • எல்லாம் இடங்களும் நீக்கமற ஒளியான வெளி, இவ்வொளியில் சிவமே
    • கண்டமெல்லாம் கடந்து நின்று அகண்டதுமாய் அதுவும் கடந்தது
    • எலாம் கொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுக்கும் வெளி
    • ஒளி, உணர்வு, நிறை, விளைவு, சுத்த அறிவு, எல்லாம், பெருவெளி சிவமே
    • மெய் பொய் இல்லா வெளி சுத்த அறிவான வெளி
    • வெளிப்புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே
    அன்பர்களே! ஆக, பெருவெளியை நம்மால் உணரவோ, பார்க்கவோ முடியாது ஆனால் அருளால் அகத்தில் கண்டு தரிசிக்கலாம். கேள்வி 2 க்கு பதில் கிடைத்து விட்டது. பெருவெளி என்பது என்பது காணி மட்டுமில்லை எல்லாமே பெருவெளி, பெருவெளியில் எல்லாம், எனத் தெரிந்துக் கொண்டோம். இப்பொழுது நம்மிடையே மூன்றாவது கேள்வி எழுகிறது; அது;
    மூன்றாவது கேள்வி : வேத ஆகமம் புராணம் சமயம் மீது நம்பிக்கை கொண்டோர் ஏன் வலிந்து வந்து சர்வதேச மையம் கூடாது என வழக்கிட்டுள்ளார்கள்?
    ஆரிய வேத ஆகமம், சமய. மத, மார்க்கங்கள், இதிகாசம், புராணங்கள், இவற்றில் லட்சியம் கூடாது. கருணை விருத்திக்கு தடையாகவுள்ள சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் இவற்றை விட்டொழிக்க வேண்டும். இவை (13)பதின்மூன்று. அவையாவன : ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம்,
    தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம்,
    கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திர ஆசாரம்.
    இந்த பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழித்தால் தான் பொது நோக்கம் வரும். பொது நோக்கம் உள்ளவரால் மட்டும் செய்யும் அறிவு ஆசார விசாரத்தில் தான், கடவுளின் உண்மை விளங்கி, பேரின்ப பெருவாழ்வுக்கான வரம் அருளப்படும் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். வள்ளலாரின் தனி நெறி வெளிப்பட்டால், அறிவு வழி தோன்றும், வேதஆகமம், சாதி,சமய ஆசாரங்கள் “எல்லாம் ஒழிந்துவிடும். ஆதிக்கம் செலுத்தும்நிலை இல்லாது போகும். எல்லோரும் எல்லாம் பெறுவர்”. நிற்க!
    ஏன் இவர்கள் சர்வதேச மையத் திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று இப்போது புரிகிறதா!
    அன்பர்களே!நம்மவர்களே!
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய திருவருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியானது தனி (பொது) நெறி. மேற்படி நெறியில் உள்ளவை:
    • சாதி, சமயம், மதம், ஆகமம் ஆசாரங்கள் எல்லாம் பொய்.
    • நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு.
    • உண்மை அறிவால் அறியப்படுகின்ற கடவுள் ஒருவரே.
    • அவரின் உண்மை நிலை ஒன்றெனும் ஒன்றே.
    • கடவுளின் அருளுக்கு கருணை ஒன்றே சாதனம்.
    • மற்றவை எல்லாம் எக்காலத்திலும் முக்கியத் தடைகள்.
    • கருணைஎன்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே.
    • கருணை விருத்திக்கு தடையாகவுள்ள பதின்மூன்று சாதி, சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டொழித்து, பொதுநோக்கத்தை வருவித்துக்கொள்ளுதல்.
    • இடைவிடாது கருணை நன்முயற்சி பயிற்சி செய்ய வேண்டும்.
    • நம் ஒருமையில், ஆண்டவரே விரைந்து வந்து உண்மையைத் தெரிவிப்பார்.
    • நம் விரும்பியபடி நித்திய வாழ்வை பெறுவோம்.
    இது சத்தியம்.
     
    எல்லாம், எல்லோரும் கடவுளின் அம்சங்களே. இரக்கமுள்ளவர்கள் நம்மவர்கள்.
    (நன்றி::: சுத்த சன்மார்க்கம் சங்கம், சென்னை. வள்ளுவர் வள்ளலார் மன்றங்கள், வள்ளலார் T.சன்மார்க்க அறக்கட்டளை, ஒளி இயக்கம், வள்ளலார் தயவு தருமசாலை, கருணை சபை-சாலை, வள்ளலார் சாகா கல்வி மையம், அருள் கூடம், ABC ORGANISATION, வள்ளலார் அறிவியல் மையம், & V.U.S.S.S.S.S பெடரேஷன்.) – அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
  • தமிழ் அருளிய தனி நெறி, வள்ளலார் வழி பொது வழி – ஏன்? எப்படி? எதற்கு?

    தமிழ் அருளிய தனி நெறி

    வள்ளலார் வழி பொது வழி

    ஏன்? எப்படி? எதற்கு?

    (APJ ARUL)

    வணக்கம் ஏபிஜே அருள். உண்மை குறித்து நல்ல விசாரம் செய்வோம்.

    அன்பர்களே, வள்ளாலார் என்றாலே ஜீவகாருண்யம், ஒழுக்கம், அன்பு, தயவு, கருணை, ஒருமை, அருள் என்கிறார்கள். ஆனால் வள்ளலார் காலத்து முன்பே இவையெல்லாம் வெளிப்பட்டு விட்டது. சமய ஞானிகளால், தமிழ் சான்றோர்களால் விளக்கப்பட்டு, அவற்றின் வழியில் வாழ்ந்து சிறப்புடன் இருந்துள்ளனரே.

    இந்நிலையில் அதே கருணை, தயவு, ஒருமை இவற்றை கொண்டு எப்படி வள்ளலார் அருளியது தனி நெறி, புதிய மார்க்கம் எனச் சொல்ல முடியும்?.ஆம் உண்மை தான், ஜீவகாருண்யம் என்பது சமய சன்மார்க்கங்களிலும் அதன் இயல்பாக உள்ளது என வள்ளலாரே (உரை நடைப்பகுதி பக்கம்: 406-ல்) சொல்லியுள்ளார்கள். அன்பே சிவம் என்கிறது சைவ சமயம்-ஞானி திருமூலர்.

    ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறது திருக்குறள். கருணையின் சிறப்பை ஜைண சமயம் சொல்லுகிறது. அருள் பெறுதல் பற்றி வேத, சமய மத சன்மார்க்கங்கள் வியம்புகிறது. இப்படி இருக்கையில், மேற்படி வார்த்தைகளைக் கொண்டே வள்ளலார் எப்படி ஒரு புதிய பாதையை, தனி நெறியை கண்டு வெளிப்படுத்தியதாக சொல்ல முடியும்? இது நல்ல விசாரம் தான்.

    ஆதாரங்களுடன் பார்ப்போம். முதலில் எடுத்துக் கொள்வது ஜீவகாருண்யம்:

    ஜீவகாருண்ய ஒழுக்கமானது, எல்லா சமய, மத, மார்க்கங்களுக்கும் பொதுவான (ஆசாரம்) செயல் ஆகும். ஒருவர் எந்தொரு (சமய) நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவரிடம் இருக்க வேண்டிய அடிப்படை தகுதியே ஜீவகாருண்யம். வள்ளலார் சைவ சமயப்பற்றுக் காலத்திலேயே ஜீவகாருண்ய ஒழுக்கம் குறித்து மூன்றுப் பகுதிகள் கொண்ட நூலை எழுதியுள்ளார். ஜீவகாருண்ய ஒழுக்கமுள்ளவரே உண்மையை தெரிந்துக்கொள்ள முடியும் என எல்லா மார்க்கங்களும் நேரிடையாக அல்லது மறைமுகமாக சொல்லியுள்ளதை நாம் ஊன்றி கவனித்தால் தெரிந்துக் கொள்ளலாம். (இறைவீட்டின் திறவுகோல் ஜீவகாருண்யமே. நாம் வணங்கும் இறைவனுக்கு புலால் சம்மதமா? என எனது சிறு நூல் வாங்கி படிக்க வேண்டுகிறேன்.)

    ஜீவகாருண்ய ஒழுக்கத் தகுதியை பெற்றவர்தான் சத்திய ஞான சபை படியில் ஏறுவதற்கே அனுமதிக்கப்படுவர். வள்ளலார் இதை கட்டளையாக சபை வாசல்களில் சொல்லியிருப்பார் – “புலை கொலை தவிர்த்தோர் உள்ளே புகுதல் வேண்டும்”.

    ஆக, ஜீவகாருண்ய அடிப்படை ஒழுக்கம் தவிர, சுத்த சன்மார்க்க தனி நெறியை வெளிப்படுத்தும் மற்ற சொற்களாகிய கருணை, ஒருமை, உரிமை, தயவு, சுத்தம், அருள் என ஒருவாறு சொல்லலாம்.

    “கருணை” : (At page No.416).

    கருணை என்பது; கிருபை, இரக்கம், தயவு, நன்னெறி, நடத்தை என பலப்பொருளை கருணை என்றச் சொல்லுக்கு தமிழ் அகராதி தருகிறது. ஆனால், கருணைக்கான மேற்படி அர்த்தங்களை தவிர, மேலும் ஒரு புதிய அர்த்தத்தை தருகிறார் வள்ளலார்

    கருணை என்பது;

    “எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்து அன்புமே” என்கிறார்.

    மற்ற உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுவது என்பது கருணை என எல்லோரும் அறிவர். ஆனால் வள்ளலார் ஆண்டவரித்து அன்புமே என கருணைக்கான பொருளில் புதிய விளக்கத்தை வள்ளலார் சேர்க்கிறார் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

    சுத்த சன்மார்க்கத்தில் கருணை என்னும் தயவு மட்டுமே சாதனம். மற்ற உயிர்களை தம் உயிர் போல் பாவிப்பது மட்டுமில்லாமல் உண்மை ஆண்டவரின் நிலை கண்டு அவரிடத்து அன்பு வைத்து வேண்டுவதும் கருணை ஆகும்.

    அடுத்து; “ ஒருமை”, அகராதி படி ஒருமை என்பது;

    ஒன்றை, ஒற்றுமை, சகாயம், நிலைபெறுதல், ஏவல் என்கிறது தமிழ் நிகண்டு.

    ஆனால் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் (பக்கம்: 414) யாதெனில்;

    “.. தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில் தானே கூடும் ஒருமை.”

    இங்கு ஒழுக்கம் என்பது ஆசாரம்/செயல்/வழி-மார்க்கம் ஆகும்.

    சுத்த சன்மார்க்கம் என்ற வழியானது எவர் அறிவில் சரியே என ஒத்து வருகிறதோ அவரிடம் ஒருமை வரும் என்கிறார். அந்த ஒருமையில் கருணை நன்முயற்சி இடைவிடாது செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.

    அடுத்து; சுத்தம் என்ற சொல்:

    சன்மார்க்கம், அருட்பெருஞ்ஜோதி, சிவம், விந்து என்ற வார்த்தைகள் வள்ளலாருக்கு முன்பே வெளிப்பட்டு விட்டது. நிற்க! பொதுவாக, சுத்தம் என்றால்; அறிவு, தூய்மை, புனிதம், நெருப்பு, துப்பு என்கிறது அகராதி. ஆனால் வள்ளலார் சுத்தம் என்னும் சொல்லுக்கு புதிய பொருளை தருகிறார்கள். இதோ;

    (பக்கம்:404) சுத்தம் எனபது ஒன்றும் அல்லாதது. அதனால் சுத்த சன்மார்க்கம் யாதெனில்; சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன்பாக (பூர்வம்) வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களைக் கடந்தது. மேலும் சொல்கிறார்; விந்து பரவிந்து இரண்டையும் மறுக்க சுத்த விந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்த சிவம் போலும், சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.

    மேலும், சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதனவல்ல என்கிறார் வள்ளலார். (உ.ம்.: பத்து ரூபாயில் ஒரு ரூபாய் உண்டு ஆனால் ஒரு ரூபாயில் பத்து ரூபாய் கிடையாது).

    அடுத்து சமரசம்:  (பக்கம்:401) என்றால் ஒத்து போதல், ஒழுங்கமைத்தல், ஒற்றுமை என பொருள்படும். ஆனால் வள்ளலார் சமரசம் என்பதை ஐக்கியம் ஆதல் என்கிறார். ஆறு அந்தங்களும் இரண்டில் நான்காக ஐக்கியமாகி, அனுபவத்தில் சுத்த வேதாந்த சித்தாந்தமாய் ஐக்கியமாகி, இதன் அந்தாந்த மாகிய சமரச சுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம் என்கிறார். இதன் அடிப்படையில் தான் சுத்த சன்மார்க்கம் எந்த மார்க்கத்திற்கும் அந்நியமல்ல என்கிறார். அதே நேரத்தில் சுத்த மார்க்கத்தார்கள் சமய மதங்களில், வேதம் ஆகமங்களில் புராண இதிகாச கலைகளில் லட்சியம் வைக்கக் கூடாது. காரணம் அக அனுபவமாகிய சுத்த சன்மார்க்கமே உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம் (பக்கம்:407) என்கிறார் வள்ளலார். 

    அடுத்து இரக்கம்; இரக்கம் என்றால் மற்ற உயிர்களிடத்தில் நாம் காட்டும் தயவு ஆகும். நாம் செய்த இந்த இரக்கச் செயலுக்கு எதிர் வினையாக நாம் இறைவனின் இரக்கத்தை பெற வேண்டும். (பாடலில்) “..என்பால் இரக்கங் கொண்டிலையே..” என்கிறார். இறைவனின் தயவுக்கு நாம் பணிந்து நெகிழ்ந்து அழ வேண்டும் இதுவும் இரக்கம் ஆகும் என்கிறார்.  இதன் அடிப்படையில்தான் கருணை என்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே என்கிறார் வள்ளலார்.

    அன்பு என்றால்; தெரிந்தவர்மாட்டு ஏற்படுகின்ற உணர்வு என்கிறது தமிழ் அகராதி. ஆண்டவரிடத்து அன்பு வைக்க நாம் உண்மை ஆண்டவரை (நிலைப் பற்றி) தெரிந்திருக்கவேண்டும். ஞானிகளால், சான்றோர்களால் இதுவரை அறிந்திடாத போது நாம் நம் தரத்தில் எங்கனம் அறிய முடியும்?. அதனால் தான் வள்ளலார். “இறைவா, நீயே வந்து, உன் உண்மை நிலையை காட்டு” என வேண்டுகிறார். இந்த வேண்டுதல் வைக்க, நாம் முதலில் வள்ளலார் சென்ற வழியை கருத்தில் கொள்ள வேண்டும். ஒருமையுடன் நன்முயற்சி செய்ய வேண்டும்.

    அடுத்து அருள்; வேத ஆச்சிரம வாழ்க்கையில், இறை திருவடியை சமாதி / முத்தி மூலம் அடைந்து பிறவா நிலை வேண்டி பெறுதலே அருள் என்பர். ஆனால், வள்ளலாரோ அருள் என்றால்; மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி, விரும்பிய நித்திய தேகம் பெற்று, பேரின்ப பெரு வாழ்வில் வாழ்தலே அருள் என்கிறார்.

    ஆக,

    சுத்தம், சமரசம், கருணை, ஒருமை, இரக்கம், அருள்பயன் இவற்றிற்கான புதிய உண்மை அர்த்தத்தை அருளால் வள்ளலாருக்கு அறிவிக்கப்பட்டு, தெரிந்துக்கொண்ட வழியே சமரச சுத்த சன்மார்க்கம் என நாம் தெரிந்துக் கொண்டோம்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாருக்கு தமிழ் அருளிய “தனி நெறி”

    ஆசாரமில்லா கருணை நெறியில் பயணித்த வள்ளலார் வழி “பொது வழி”

    நன்றி: APJ அருள் – 8778874134.

     

     

  • முதல் ஐந்து திருமுறைகளை அப்படியே ஓதலாமா? சமய ஸ்தோத்திர அருட்பா கொண்டு தேர் இழுக்கலாமா?தலைமை சங்கம், சான்றோர்கள் முன் வரவேண்டும்

     
    முதல் ஐந்து திருமுறைகளை அப்படியே ஓதலாமா?
    👉 சமய ஸ்தோத்திர அருட்பா கொண்டு தேர் இழுக்கலாமா?
    👉 தலைமை சங்கம், சான்றோர்கள் முன் வரவேண்டும்
    – APJ அருள்.
    👇👇👇👇
    # திருவருட்பிரகாச வள்ளலார் சைவ சமயத்தில் பற்றுக் கொண்டிருந்தார்கள். பல சைவ சமயத் தலங்களுக்கு சென்று, சமய கடவுளர்களைப் போற்றி, நூற்றுக்கணக்கான ஸ்தோத்திரப் பாடல்கள் பாடியுள்ளார்.
    # சமயப்பற்று காலத்திலேயே அவரிடம் ஒரு விருப்பமும், ஒரு தேடுதலும் இருந்து வந்தன.
    சமய கட்டுப்பாட்டு ஆசாரத்தில் அவர் தள்ளியே இருந்து வந்தப் பயனால் அவரின் தேடுதலில் அவர் முன்னேற்றம் கண்டார்.
    👉 அவரின் விருப்பம் எதுவெனில்;
    மரணம் உட்பட எல்லா அவத்தைகளையும் நீக்கிக் கொண்டு, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கிக் கொள்ளுதல்.
    👉 அவரின் தேடுதல் எதுவெனில்; உண்மை கடவுளின் நிலை கண்டு தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல்.
    # அவரின் விருப்பமும் தேடுதலின் விளைவு, அவர் வைத்திருந்த சைவ சமயப்பற்றை கைவிடுகிறார். சைவ சமயம் மட்டுமில்லை உலக சமய மத மார்க்கங்கள் அனைத்தையும் கைவிடச் சொன்னவர் வள்ளலார். மேலும், அவற்றின் ஆசாரங்களை விட்டு ஒழித்துக்கொள்ள சொல்கிறார். உலக ஆசாரங்கள் எதனிலும் பற்றுக் கூடாது என்கிறார். உண்மை கடவுளை தொழுவதே கடமை என்கிறார். “உண்மையை இறைவனே வந்து தெரிவிப்பதாகவுள்ளது” என்கிறார். ஒவ்வொருவரும் கண்ணீர் விட்டு, கருணை நன்முயற்சியில் இடைவிடாது வேண்டச் சொல்கிறது வள்ளலாரின் முடிவான “சுத்தசன்மார்க்கம்”.
    கடவுளின் அருளை பெற்றுத்தரும் கருணை, அதன் விருத்திக்கு தடையாக உள்ள (பதின்மூன்று) சாதி மற்றும் சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை விட்டு ஒழித்துக்கட்டி, உண்மை அறிவு ஆசாரத்தால் விசாரம் செய்து பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். இதுவே “சுத்த சன்மார்க்கக் கொள்கை.”
    நிற்க! இதுவே வள்ளலாரின் ஆன்மிகப் பயணத்தில் ஏற்பட்ட திருப்பம். இதை முதலில் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
    வள்ளலார் தான் இருந்த சமயப்பற்றுக் காலத்தை குறித்து மற்றும் இயற்றிய சமய ஸ்தோத்திரப் பாடல்கள் பற்றி வள்ளலார் சொன்னது என்ன? எனப்பார்க்கும் போது;
    👇
    “…..இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது….”
    மேலும்;👇
    இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.
    மேலும்;👇
    நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது….”
    🙏
    மிகத்தெளிவாக வள்ளலார் எழுதி குறிப்பிட்டுள்ளார்.🙏
    • நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை
    • ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
    • இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.
    • நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.
    • சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.
    • சமய ஆசாரம் உட்பட பதின்மூன்று ஆசாரங்களை விட்டொழியுங்கள்.
    அன்பர்களே,
    சாதி சமயம் வேத ஆசார வகைகள் இவைகள் குறித்து பல நூறுப்பாடல்கள் பாடியுள்ளார் வள்ளலார். வள்ளலார் சமய மதப்பற்றை கைவிட்டுவிட்டு ஒரு புதிய மற்றும் பொது மார்க்கம் கண்டார் என நீதிமன்றமும் தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.
    நிற்க!
    👉 இந்நிலையில் வள்ளலாரை மீண்டும் சமயப் பற்றாளராக காட்ட முயல்வது ஒரு நியாயமான செயல் ஆகாது. அப்படித்தானே.
    👇
    வள்ளலார் இயற்றிய பாடல்களை அச்சிட்டு வெளியிட வேண்டுமென பக்தர்கள் சிலர் வள்ளலாரிடமே வேண்டினார்கள். இக்காலத்தில் வள்ளலார் சமயத்தில் தான் உள்ளார். அதாவது சுத்த சன்மார்க்க வழி உறுதியாகவில்லை எனலாம். தனது விசாரம் சமய மதம் இவை கடந்து செல்வதை அவர்களிடம் சொல்கிறார். இதை காதில் வாங்காது விடாப்பிடியாக அவர்கள் வள்ளலாரிடம் இதுவரை பாடிய சமயப் பாடல்களை அச்சிட்டு வெளியிட அனுமதிக்கேட்டு வற்புறுத்துகிறார்கள். அதில் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபடுகிறார். இவர்களின் செயலால், சமய ஸ்தோத்திரங்கள் உட்பட எல்லா பாடல்களும் திருவருட்பா என்றப்பெயரில் அச்சிடப்படுகின்றன.
    அன்பர்களே!
    வள்ளலார் முடிவான சுத்த சன்மார்க்கக் கொள்கையை வெளிப்படுத்திய பின், வள்ளலாரின் முந்தைய சமய காலத்தில் பாடிய (ஒன்று முதல் ஐந்து திருமுறைகளில்) “சமய ஸ்தோத்திரங்களிலில் மட்டும் தான்” லட்சியம் கூடாது எனச் சொல்கிறோம்.
    முதல் ஐந்து திருமுறைகளில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களை நீக்கி மற்ற பாடல்கள் இந்த சமுகத்திற்கு, அறிவிற்கு பயனைத் தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்,
    • இன்று பலர், சுத்த சன்மார்க்கத்திற்கு எதிராக, வள்ளலாரின் கட்டளைக்கு எதிராக, திருவருட்பா முற்றும் ஓதுதல் என்றப்பெயரில், முதல் ஐந்து திருமுறைகளில் உள்ள சமய ஸ்தோத்திரங்களையும் பாடுகிறார்கள். இது முரணானது தானே.
    • இன்னும் சிலர், முதல் ஐந்து திருமுறைகளையும் (சமய ஸ்தோத்திப் பாடல்கள் நீக்காமல்) தேரில் வைத்து ஒரு ஆசார சடங்குகள் போல் செய்து வருகிறார்கள்.
    • இன்னும் சில பாடகர்கள், (தன்னை சுத்த சன்மார்க்கி எனச்சொல்லி கொண்டு) வள்ளலாரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களையும் மேடையில் பாடி வருகின்றனர்.
    • வள்ளலார் பாடல்கள் தானே என்ற வியாக்கியானம் வேறு பேசி, சமயத்திலேயே வள்ளலாரை காட்டி வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்கம் வெளிப்படாமல் செய்கின்றனர். வேதனையாக உள்ளது.
    சுத்த சன்மார்க்கச் சொன்றோர்கள் அல்லது
    தலைமை சங்கம் முன் வர வேண்டும்.
    அன்பர்களே!
    சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறியை கண்டு அதன் வழியில் சென்று இறையருளை பெற்று பேரின்ப பெருவாழ்வை பெற்றார் வள்ளலார். இந்த பொது தனி வழியை நமக்கு உலகிற்கு வெளிப்படுத்திய நாள் ஒருவாறு சித்திரை முதல் தேதி ஆயிரத்து எண்ணூற்று ஒன்றாம் வருடம் (12-04-1871) ஆகும். இதற்கு பின்பு வள்ளலார் உபதேசித்தவை, பாடியவை, எழுதியவை இவைகளின் மூலம் சுத்த சன்மார்க்க கொள்கையை நாம் தெரிந்துக் கொள்ள போதுமானதாக உள்ளது என்பதை இங்கு நாம் சத்தியமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
    இல்லை..இல்லை.. சமய மதம் சாத்திரம் சாராத பல பாடல்கள் முதல் ஐந்து திருமுறைகளில் உள்ளதும், அது வெளிப்பட வேண்டும் என்பவர்கள் அதற்கான முயற்சியை செய்யாமல், அப்படியே சமய ஸ்தோத்திரங்களையும் சேர்த்துக்கொண்டு பாடுவது, ஓதுவது, அச்சிடுவது, இவை எந்த விதத்தில் நியாயம்? என்றுதான் கேட்கப்படுகிறது.
    “சுத்த சன்மார்க்கச் சொன்றோர்கள்” அல்லது “தலைமை சங்கம்” அல்லது “நிலைய நிர்வாகம்” உடனே முன் வர வேண்டும். ஆம், வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளில் உள்ள சமய, மதம், குலம், மரபு, அந்தம், சாத்திரம், சாதி, ஆச்சிரமம், கலை, சாதனம், தேசம், லோகம் மற்றும் கிரிய ஆசாரம் இவை சார்ந்த ஸ்தோத்திரங்களை (பாடல்களை) அடையாளம் கண்டு, அவைகளை நீக்கி, மற்றப் பாடல்களை எடுத்துதர வேண்டும். ஒழுக்கம் மற்றும் அறிவை விருத்தியாக்கிக் கொள்ள, தத்துவங்களின் உண்மை தெரிந்துக்கொள்ள, மற்றப் பாடல்கள் உதவியாக இருந்து அருளும் என்பதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை.
    முற்றும் ஓதுதல், திருவருட்பா தேர்கள் இழுத்தல் என்று சொல்லி வள்ளலாரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களை கைவிடாது வைத்திருக்கும் செயல் நியாயமாகாது. வள்ளலாரின் கட்டளைக்கு எதிரானது. தெரிந்தோ அல்லது தெரியாமலோ சமய ஸ்தோத்திரப் பாடல்கள் பாடுவது, கருத்தில் கொள்வது இவை சுத்த சன்மார்க்க நெறியை உள்ளது உள்ளபடியாக உலகில் வெளிபடாது மறைக்கும் அநாகரிகச் செயலாகும். உண்மை அறிக, சுத்தசன்மார்க்க பொது தனி நெறி ஓங்குக. – APJ அருள்.
  • முக்கியம் — ஐப்பசி ஏழாம் நாள் வள்ளலார் மகா பேருபதேசம் ஆற்றிய நாள்

    1873 ம் வருடம்  அக்டோபர் 22 ந்தேதி (தமிழ் ஐப்பசி- 7) வடலூர் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் சுத்த சன்மார்க்கத் திருக்கொடி ஏற்றி, ஒரு மகா பேருபதேசம் செய்தார் வள்ளலார். அவர் ஆற்றிய இந்த உபதேசம் சுத்த சன்மார்க்கத்தின் மிக முக்கியப் பகுதியாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்த இனிய நாளில் தான் சில மிக முக்கிய குறிப்புகளை தனது உபதேசத்தில் சுட்டிக் காட்டுகிறார் வள்ளலார். இதுவே இன்றைய நம் நல்ல விசாரம்.

    திருமந்திரம், கொடி, வேதம், ஆகமம், புராணம், சமயம், மதம், கலைகள், சிவாயநம, சொர்க்கம் நரகம், நல்ல விசாரம், திரைகள், தவம், சகோதரத்துவம், தயவு, ஒருமை, உரிமை, அக அனுபவம், இன்னும் பல முக்கிய வார்த்தைகள் குறித்து விளக்கி நீண்ட பேருபதேசத்தை செய்த நாள்.

    ஒருவர் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத் தனி நெறி குறித்து தெரிந்துக்கொள்ள விருப்பம் கொண்டால் முதலில் அவரின் மகா பேருபதேசத்தை ஊன்றி படிக்க வேண்டும். வள்ளலாரின் மகா பேருபதேசத்தில் படிப்பவரின் தேடுதலுக்கு பதில் இருக்குமேயானால் அதாவது அவருக்கு இந்த உபதேசக் குறிப்புகளில் ஒருமை (ACCEPTANCE)  வருமேயானால், அவர் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவராகி (தேர்வாகி) விடுவார். வள்ளலாரின் மகா பேருபதேசத்தில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

    1. சுத்த சன்மார்க்கத்தின் மகா மந்திரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய நாள்.

                                                மகாமந்திரம்:

                               அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி

                               தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி

    1. சுத்த சன்மார்க்கத்திற்கு தனிக் கொடி அருளிய நாள்.               

                            கொடி நிறம் : மஞ்சள் (பொன்) நிறம் கால் பங்கு

                            வெள்ளை (வெண்மை) நிறம் முக்கால் பங்கு.

          சுத்த சன்மார்க்கக் கொடியை கட்டி, அக்கொடிப் பற்றி வள்ளலார் உபதேசித்தது:

     ”…இக்காலமே சன்மார்க்கக் காலம். இதற்கு சாட்சியாக, இப்போது தான், கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்; நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது. அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம், மேற்புறம் மஞ்சள் வர்ணம். அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது. இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்…”

    1. சமயத்தில் வைத்திருந்த லட்சியம் என்னை தூக்கிவிடவில்லை… ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது, ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

    … என்னை எறாநிலை மிசை ஏற்றிவிட்டது யாதெனில்; தயவு. தயவு என்னும் கருணை தான் என்னை தூக்கி விட்டது..” எனத் தெளிவாக உபதேசித்த நாள்.

    1. சுத்த சன்மார்க்கத்தின் நன்முயற்சியும் பயிற்சியும் என்பது நல்ல விசாரமே என்று அறிவித்து, நல்ல விசாரம் குறித்து நீண்ட உபதேசத்தை அருளிய நாள்.
    1. சுத்த சன்மார்க்கத் தனி நெறியை கண்டு உலகிற்கு வெளிப்படுத்திய நாள் சித்திரை 1, 1871 என்பதை உறுதி செய்ய சத்திய வாக்கியம் அருளிய நாள்:

    வள்ளலார் உபதேசித்தது: “.. இரண்டரை வருசமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை….”         (நிற்க! இந்த நாள் அக்டோபர் 1873 லிருந்து 2 ½ வருடங்களை கழித்தால் வரும் மாதம் ஏப்ரல் 1871 ஆகும். வள்ளலார் ஏப்ரல் மாதத்தில் சித்திரை முதல் நாளில் ஓர் அறிவிப்பு வெளியிடுகிறார் (அதாவது 12-04-1871 அன்று). அதில்  25 மாதத்திற்கு மேல் என்று சொல்லியுள்ளார் வள்ளலார். அங்கிருந்து இதை கூட்டினால் வரும் மேல் மாதம் அக்டோபர்  1873 என அறிக. நன்றி APJ அருள்)

    1. தன்னை தெய்வமென எண்ணக் கூடாது என்று கட்டளையிட்டு, அதற்கான விளக்கத்தை அருளிய நாள்.

    உபதேசித்தது: “…தெய்வத்தைத் தெரிந்துக் கொள்ளாது, இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமென சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதர்கள் தெய்வத்தை தெரிந்துக் கொள்ளாததினாலே அல்லவா நம்மை சுற்றுகின்றார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால்; ஒரு பதார்த்தை அனுபவித்தால் அன்றி அந்த பதார்த்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அது போல், தெய்வத்தை உள்ளதுபடி அனுபவித்தால் அல்லது தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கின்ற முக்கிய லட்சியத்திலிருந்து கொண்டு விசாரம் செய்துக் கொண்டிருங்கள் …” என்கிறார்.

    1. எவற்றில்எல்லாம் லட்சியம் வைக்க கூடாது என்பதை தெளிவாக உபதேசித்த நாள். அதற்கான காரணத்தை விளக்கிய நாள்.

    உபதேசித்தது:

    “… நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகளில் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்…”

    “…. இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.”

    “சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையை குழுஉக் குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாக காட்டாது, சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களை சேர்த்து, ஓன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பத்து, பதின்மூன்று, பதினைந்து, பதினாறு, இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்க விட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.. நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய சிவானுபவமே அன்றி வேறில்லை.”

    “ இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களை செய்து அற்ப பிர்யோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டு திருவருள் துணையால், கருணை நன்முயற்சி எடுத்துக் கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை..”

    அன்பர்களே, சுத்த சன்மார்க்கத்தின் தனி நெறியை தெரிந்துக்கொள்ள முதலில் மகா பேருபதேசம் அடுத்து நான்கு விண்ணப்பங்கள், அடுத்து நினைந்து… எனத் தொடங்கும் 28 பாசுரங்கள், 12-04-1871 பின்பு உள்ள கட்டளைகள், அறிவிப்புகள், திருஅகவல் மற்றும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கப் பாடல்கள் இவை காண வேண்டும்.

    அன்பர்களே! வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் நன்கு தெரிந்துக்கொண்டு, உண்மை பொது நெறியை மட்டுமே சார்ந்திருந்து ஒருவர் நல்ல விசாரத்தை தொடர்ந்து செய்து வந்தால், எந்தளவுக்கு முயற்சியுடனே இருந்தாரோ அதற்கு தக்க லாபத்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார் வள்ளலார்.  எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக சுத்த சன்மார்க்கம் விளங்குகிறது. அதே நேரத்தில், நம்மிடையே உள்ள கருணையின்  விருத்திக்கு தடையாக உள்ளது சாதி மற்றும் சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்கிறார் வள்ளலார். மேற்படி ஆசாரங்களை விட்டொழித்து, பொது நோக்கத்தை வருவித்துக் கொள்ள வேண்டும். இதுவே வள்ளலாரின் தனி வழி. அன்புடன்: APJ அருள் 877887413.

  • சுத்த சன்மார்க்கத்தில் “குரு” தேவையில்லை – APJ அருள்

    அவத்தைகளை நீக்கிக் கொண்டு, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி, பேரின்ப பெருவாழ்வில் வாழ்தல் எதனால் பெறக்கூடும்? உண்மை ஆண்டவர் யார்? கடவுளின் உண்மை நிலை என்ன?

    மேற்படியான தேடுதலுக்கு, “குரு” என யாரும் தேவையில்லை என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். இதுவே இங்கு விசாரம்.

    பொதுவாக, உலக சமய மத மார்க்கங்களில் குரு என்பவர் மிக முக்கியமாக கருதப்படுகிறார். குருவே (அல்லது தூதுவர்) சமய மத சன்மார்க்கங்களில் வழிகாட்டியாக உள்ளார். குரு (தூதுவர்) இல்லாமல் இறையருள் அடைதல் முடியாது என்கிறது.

    ஆனால் வள்ளலார் தான் பயணித்த புதிய பாதையில் (சுத்த சன்மார்க்கத்தில்) ஆண்டவரையே குருவாக கொண்டார். இதற்கு காரணம் அவர் கொண்டிருந்த விருப்பமும்  கொள்கையுமே ஆகும். ஆம், சுத்த சன்மார்க்கத்தின் லட்சியமாக உள்ள, அதாவது, எல்லா அவத்தைகளையும் நீக்கி, நித்திய வாழ்வு பெறுதல், அதற்கு வழிதுறை காட்டுபவர் ஆண்டவர் ஒருவரே என்ற கொள்கை. அதனால் இம்மார்க்கத்தில் வழிபாடே எதுவெனில்; “ஆண்டவரே, நீரே விரைந்து வந்து உண்மையை தெரிவிக்க வேணுமாய் வேண்டுவதே.”

    அன்பர்களே, குருவால் போதிப்பது எந்தளவெனில், அவர் எந்தளவு அனுபவம் பெற்றிருந்தாரோ, அந்தளவுக்கு மட்டுமே போதித்து நமக்கு வழி காட்ட முடியும். ஆனால் ஒருவர் முழு உண்மையை தெரிந்துக் கொள்ள விருப்பம் கொண்டிருந்தால், அவர் ஆண்டவரையே குருவாக கொள்ள வேண்டும்.

    இங்கு முழு உண்மை என்பது; உண்மை ஆண்டவரின் சொரூபம் காணல், அண்டம், பிண்டம் உட்பட எல்லா உண்மையும் அறிதல் மற்றும் நித்திய வாழ்விற்கான அருளை ஆண்டவரிடம் பெறுதல் ஆகும்.

    ஆண்டவரின் முழு உண்மையை, ஆண்டவராலேயே தெரிவிக்க முடியும். அப்போதுதான் ஆண்டவர் எல்லாம் வல்லவர். மிகப்பெரியவன் ஆவர் என்பது சரிதானே. இதில் வெற்றியும் கண்டார் வள்ளலார். ஆம், ஆண்டவரே குருவாக இருந்து அனைத்தும் தெரிவித்து, தன்னை ஏறாநிலை மிசை ஏற்றியதாக கூறுகிறார் வள்ளலார்.

    இதோ பாடல் வரிகள் சில…

    அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே…

    (அனித்தம் என்றால் நிலையற்றது/நிலையாமை

    உத்தமசற் குருவே…

    களித்தெனைத் தேற்றிஅருள் செய்தகுருவே..

    நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

    மரபென் றுரைத்தகுருவே…

    ஆம் கடவுளே குருவாக இருந்து நான்கு மரபுகளை சொல்கிறார்.

    ஆக, நெறியை சொல்லி தருபவர் ஆண்டவரே.

    … குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.”

    மேலும்;

     “…அருந்தவத்தால் கிடைத்தகுரு வாகும்அது மட்டோ

            மன்னுறும்என் தனித்தாயும் தந்தையும்அங் கவரே

            மக்கள்பொருள் மிக்கதிரு ஒக்கலும்அங் கவரே. (ஒக்கல் என்றால் உறவு எனலாம்)

    ஆக, சுத்த சன்மார்க்கத்தில் குருவாக இருந்து, எல்லாம் தெரிவித்தது, அருளியது எல்லாம் ஆண்டவரே என்கிறார் வள்ளலார்.

    குரு எங்கே இருக்கிறார்? என்றால்;

    இதோ அவர் இருக்கும் இடத்தை வள்ளலார் அருள் விளக்க மாலையில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

    அடியேன் அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்த அருட் குருவே…”

    உலகெலாம் விளங்க  வைத்தசன் மார்க்கசற் குருவைக்

            கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்

            கோயிலில் கண்டுகொண் டேனே.”

    குளங்கொளும் ஒளியை ஒளிக்குளே விளங்கும்

             குருவையான் கண்டுகொண் டேனே.”

    அன்பர்களே, இதை ஊன்றி விசாரித்து இன்பம் அடைய வேண்டும். மேலும்,

    வள்ளலாருக்கு மற்ற நம்பிக்கை மீது இருந்த இச்சையை எடுத்து விட்டு, ஆண்ட குருவே என்கிறார். அதற்கான பாடல்:

    அருள்விளக்க மாலை:

    இச்சைஒன்றும் இல்லாதே இருந்தஎனக் கிங்கே

      இயலுறுசன் மார்க்கநிலைக் கிச்சையைஉண் டாக்கித்

    தச்சுறவே பிறமுயற்சி செயுந்தோறும் அவற்றைத்

      தடையாக்கி உலகறியத் தடைதீர்த்த குருவே

    எச்சமய முடிபுகளும் திருச்சிற்றம் பலத்தே

      இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே

    முச்சகமும் புகழமணி மன்றிடத்தே நடிக்கும்

      முதல்அரசே என்னுடைய மொழியும்அணிந் தருளே.

    தற்போத இழப்பு:

    அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா

      அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்

    கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்

      குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்.

     

    அபயத் திறன்:

    ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும்

      ஊக்கமும் உண்மையும் என்னைத்

    தான்பெறு தாயும் தந்தையும் குருவும்

      தனிப்பெருந் தெய்வமுந் தவமும்

    வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும்

      மக்களும் மனைவியும் உறவும்

    நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே

      நம்பினேன் கைவிடேல் எனையே.

    இங்ஙனம் ஆண்டவரையே குருவாக கொண்டிருந்த வள்ளலாருக்கு

    மேலும் கிடைத்தது என்ன தெரியுமா? இதோ பாருங்கள்:

    அருட்பெருஞ்ஜோதி அகவல் #

    மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

    யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி

    கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்

    பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

    உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது

    குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே

    பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்

    திரமுற வருளிய திருவருட் குருவே

    மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்

    றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே

    கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்

    குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே

    பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்

    மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே

    பிரம ரகசியம் பேசியென் னுளத்தே

    தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

    பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே

    வரமுற வளர்த்து வயங்குசற் குருவே

    சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே

    நவநிலை காட்டிய ஞானசற் குருவே

    சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்

    அத்தகை தெரித்த வருட்சிவ குருவே

    அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே

    பிறிவற விளங்கும் பெரியசற் குருவே

    கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே

    வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

    காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே

    மாண்பத மளித்து வயங்குசற் குருவே

    செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே

    உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

    உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்

    பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

    சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்

    தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

    சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்

    மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

    எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்

    வல்லா னெனவெனை வைத்தசற் குருவே

    அதனால்,

    நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரையே குருவாக கொண்டு, அவரிடமே உண்மையை  உரைக்க வேணுமாய் உருகி அழுது வேண்ட வேண்டும் என்கிறது சுத்த சன்மார்க்கம்.

    வள்ளலார் எப்படியெல்லாம் வேண்டுகிறார் பாருங்கள்:

    பிரியேன் என்றல்:

    படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே

    பட்டதெல்லாம் போதும்இந்தப் பயந்தீர்த்திப் பொழுதென்

    உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன்

    உடல்உயிரா தியஎல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்

    வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள்

    மணியேஎன் குருமணியே மாணிக்க மணியே

    நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான

    நன்மணியே பொன்மணியே நடராஜ மணியே.

     

    கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே

    கைகுவித்துக் கண்களில்நீர் கனிந்துசுரந் திடவே

    சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த்

    தானேதான் ஆகிஇன்பத் தனிநடஞ்செய் இணைத்தாள்

    தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து

    தானாகி நானாடத் தருணம்இது தானே

    குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய்

    குருவேஎன் குற்றமெலாம் குணமாகக்கொண் டவனே.

    அபயம் இடுதல்:

    குற்றம் பலஆ யினும்நீ குறியேல்

    குணமே கொளும்என் குருவே அபயம்

    பற்றம் பலமே அலதோர் நெறியும்

    பதியே அறியேன் அடியேன் அபயம்

    சுற்றம் பலவும் உனவே எனவோ

    துணைவே றிலைநின் துணையே அபயம்

    சிற்றம் பலவா அருள்வாய் இனிநான்

    சிறிதுந் தரியேன் தரியேன் அபயம்.

    பிள்ளைப் பெரு விண்ணப்பம்:

    தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்

    சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்

    பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்

    ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.

     

    திருவருள் விழைதல்:

    தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்

    சாமியும் பூமியும் பொருளும்

    சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்

    சுற்றமும் முற்றும்நீ என்றே

    சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்

    திருவுளம் தெரிந்ததே எந்தாய்

    நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்

    நீதியோ நின்அருட் கழகோ.

    வந்தருள் புரிக விரைந்திது தருணம்

    மாமணி மன்றிலே ஞான

    சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்

    சுத்தசன் மார்க்கசற் குருவே

    தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல

    தனிஅருட் சோதியை எனது

    சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே

    செய்வித் தருள்கசெய் வகையே.

     

    ஆண்டவர் குருவாக இருந்து உண்மையை உரைத்ததுக்கு மற்றும் அருளியதுக்கு

    நன்றி சொல்கிறார் வள்ளலார், இதோ பாடல்களை பாருங்கள்:

    அருள்விளக்க மாலை:

    எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே

    எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே

    சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே

    சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே

    மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்

    மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே

    பிள்ளைப் பெரு விண்ணப்பம்:

    மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்

    குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே

    பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்

    தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.

    பெற்ற பேற்றினை வியத்தல்:

    சாற்றுவேன் எனது தந்தையே தாயே

    சற்குரு நாதனே என்றே

    போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும்

    பூரணா எனஉல கெல்லாம்

    தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த

    தூயபேர் உதவிக்கு நான்என்

    ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம்

    அப்பநின் சுதந்தரம் அன்றோ.

    வரம்பில் வியப்பு:

    கருமுதற் கருவாய்க் கருவினுட் கருவாய்க்

    கருஎலாங் காட்டும்ஓர் கருவாய்க்

    குருமுதற் குருவாய்க் குருஎலாங் கிடைத்த

    கொள்கையாய்க் கொள்கையோ டளவா

    அருமுதல் அருவாய் அல்லவாய் அப்பால்

    அருட்பெருஞ் ஜோதியாந் தலைவன்

    மருவிஎன் உளத்தில் புகுந்தனன் அவன்தன்

    வண்மையைத் தடுப்பவர் யாரே.

    நன்றி : APJ அருள் – 8778874134

  • சிவம், அருட்பெருஞ்ஜோதி, நடராஜர், சிவ காமவல்லி

    சிவம், அருட்பெருஞ்ஜோதி, நடராஜர், சிவ காமவல்லி – இவை எல்லோருக்குமான பொது சொற்களே…
     
    வள்ளலார் ஒரு புதிய மார்க்கம் சுத்த சன்மார்க்கத்தை கண்டாலும், அவர் சமயத்தின் பல சொற்களை இங்கும் பயன்படுத்திருப்பார்கள். அதனால் அவர் சமயத்தை கைவிடவில்லை என்பர். ஆனால் அப்படியல்ல.
     
    திருவருட்பிரகாச வள்ளலார் ஆரம்பகாலத்தில் சைவ சமயத்தில் பற்றுக் கொண்டு, பல சமய தோத்திரப்பாடல்களை பாடியுள்ளார்கள். சமயப்பற்றுக் கொண்டு பாடிய அப்பாடல்களில் பயன்படுத்திய சிவம், நடராஜர், பதி, சிவகாம வல்லி போன்றவை சமயம் மதம் கடந்து விளங்கும் சுத்த சன்மார்க்கத்திலும் மேற்படி சொல்லை சொல்லியுள்ளார் வள்ளலார்.
     
    சைவம் வைணவம், வைதீகம், பௌத்துவம், சமணம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும், இதிகாசம், புராணங்கள் முதலிய கலைகளிலும், சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அதற்கு காரணம் அவையில் முழு உண்மை உரைக்கவில்லை என்கிறார் வள்ளலார். அதனால் கடவுள்உண்மை காண ஒரு புதிய மார்க்கத்தை (வழியை) சுத்த சன்மார்க்கத்தை கண்டு வெளிப்படுத்தியவரே வள்ளலார்.
     
    சுத்த சன்மார்க்கத்தில் கடவுளை சிவம் என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த சிவத்தை சுத்த சன்மார்க்கத்தில் சுத்த சிவம் என்கிறார். சுத்த சிவம் என்று முதலில் சொல்லியப் பிறகே, சிவம் என்பார். இங்கு சேர்க்கப்பட்டுள்ள “சுத்தம்” என்ற சொல்லுக்கு வள்ளலார் தரும் தனிப் பொருள் யாதெனில்; சுத்தம் என்பது ஒன்றுமல்லாது. மறுக்க வந்தது என்கிறார். (ஆதாரம்: உரைநடைப்பகுதி)
     
    அதாவது; சுத்த சன்மார்க்கம் என்றால் இதற்கு முன் வெளிப்பட்டிருந்த சன்மார்க்கத்தையும் சிவ சன்மார்க்கத்தையும் மறுக்க வந்தது சுத்த சன்மார்க்கம் என்கிறார். அதே போல், சுத்த அருட்பெருஞ்ஜோதி என்பது இதற்கு முன் சொல்லப்பட்ட அருட்பெருஞ்ஜோதியை மறுத்தது. அதாவது அவர் அனுபவத்தில் அருளால் கண்டு அனுபவித்த சொரூபம் அருட்பெருஞ்ஜோதி ஆகும். இதே போல் சுத்த சிவம் என்றால்; சமயத்தில் சொல்லப்பட்டுள்ள சிவத்தையும் பரசிவத்தையும் மறுக்க வந்தது சுத்த சிவம் என்கிறார் வள்ளலார். (இதே போல் மற்றதை கொள்க)
    மேலும், தமிழ் அகராதிப்படி, சிவம் என்பதற்கு பொருள்; மேன்மை, செம்பொருள் என்கிறது. இந்த பொருள் எல்லோருக்கும் பொதுவானது என்பதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.
     
    இந்த வரிசையில் தான் “சிவகாம வல்லி” என்ற சொல்லையும் வள்ளலார் புதிய மார்க்கத்தில் பயன்படுத்தி உள்ளார்கள். சிவ காம வல்லி என வரும் பாடல் வரிகளை முதலில் காண்போம் :
    (ஆறாம் திருமுறைப்பாடல்களிலும் பல சமய ஸ்தோத்திரப் பாடல்களும் கலந்துள்ளன என்பதையும் இங்கு நினவு படுத்துகிறேன்).
     
    • சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம்
    எங்கும் கண்கண்ட தெய்வம்
    • சிவ – காமப்பெண் காதல னே
    • சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
    • மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
    வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
    • எல்லாம் வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
    • மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.
    • சிவகாம வல்லிக் கிசைந்த மணவாளா
    • வாரீர் சிதம்பர வல்லி சிவகாம வல்லி மணாளரே வாரீர்
    • எம் சிவகாம வல்லிமகிழ் மாப்பிள்ளை பாத மலர்.
    • சிவகாம வல்லிக்கு மாப்பிள்ளையே திருவாளன் நான்அவன் சீர்ப்பிள்ளையே.
    • சிவகாம நிமலக் கொடியே அருளுகவே.
    • சிவகாமக் கொடியே அடியேற் கருளுகவே
    • மன்னுகொடிச் சேலைஇட்டான் வாழச் சிவகாம சுந்தரியை
    மாலைஇட்டான் பாதமலர்.
    • சிவகாம சுந்தரியைத் தோள்புணர்ந்த
    நல்லான்தன் தாட்கே நயந்து.
    • தேன்வந்த மங்கை சிவகாம வல்லியொடும் எம்பெருமான்
    இங்குநடஞ் செய்வான் இனி.
    • மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
    விளையாடவும் எங்கள் வினை ஓடவும்
    • சிவகாம வல்லியைச் சேர்ந்தவனே
    சித்தெல்லாம் செய்திடத் தேர்ந்தவனே.
    • மைக் கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
    மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
    • மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி
    மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.
     
    அகராதி படி; சிவம் என்பது மேன்மை (கடவுளையும் குறிக்கும்),
    காமம் என்பதற்கு பொருள் பல வரும் அதில் ஒன்று ஆசை.
    வல்லி என்பதற்கு அளவு, கொடி எனவும் உள்ளது.
    “சிவகாம வல்லி” என்ற சொல் பெண்ணைக் குறிப்பதாக உள்ளது. வள்ளலார் மேலும், தனது பாடல்களில் தலைவி, தோழி, தாய், பெண், ஆண் இவை போன்ற சொற்களையும் பயன்படுத்திக் கொண்டு இறைவனின் உண்மைநிலையை விளக்கி இருப்பார் வள்ளலார் அவர்கள்.
    “சிவகாம வல்லி மண வாளா” வந்தருள்க என்பதில்; மண வாளா என்றால் இறைவன். இறைவன் இங்கு ஆணாகவும், சிற்றணுவாகிய ஆன்மாவை பெண்ணாகவும் (சிவகாம வல்லியாக) எடுத்துக் கொண்டு விளக்கம் செய்விக்கிறார் வள்ளலார். நடராஜர் என்பதையும் இங்கு பயன் படுத்திருப்பார். இது சமயத்தில் காட்டப்பட்டுள்ள நடராஜர் இல்லை. இறைவனின் இயக்கத்தையே நடராஜர் என்றும், ஆன்மஒளிக்குள் உள்ளொளியின் அசைவே நடராஜர் என்கிறார்.
     
    இறைவனை கணவராக/ஆணாக/தலைவனாகவும்/அறிவாகவும்,
    சிற்றறணு ஆன்மாவை/ நம்மை பெண்ணாக/மங்கையாக/தலைவியாகவும்/ அறிவாகவும், மற்றும்
    நமது ஜீவன்/மனம் இவற்றை தோழியாகவும் உருவகப்படுத்தி,
    பல பாடல்கள் இயற்றி, உண்மை விளக்கம் தந்துள்ளார் வள்ளலார்.
     
    வள்ளலார் உறுதியாக உபதேசித்தது;
    தலைவனை தொழுவதே கடமையாகும். இறைவனைத் தவிர மற்றத்தில் லட்சியம் கூடாது. சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை அதாவது எல்லாம் அகத்தில் நடப்பதே உண்மையாகவுள்ளது. பதியாகிய தலைவன், தலைவி காமவல்லியுடன் (ஆன்மானுபவத்துடன்) உள்ளத்து சந்திப்பே இன்பம் ஆகும்.
    • சிவமே ஞானக் கான்பாடிச் சிவகாம வல்லிமகிழ் கின்றதிருக் கணவா
    நல்ல வான்பாட மறைபாட என்னுளத்தே வயங்குகின்ற மன்னா.
     
    • ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை
    வாரீர் சிதம்பர வல்லி சிவகாம
    வல்லி மணாளரே வாரீர்
    மணிமன்ற வாணரே வாரீர்.
    • ஆறாம் திருமுறை / வருவார் அழைத்துவாடி
    மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து
    விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து
    விண்ணார் செஞ்சுட ரே – சுடர் – மேவிய உள்ளொளி யே
    தண்ணார் வெண்மதி யே – அதில் – தங்கிய தண்ணமு தே
    கண்ணார் மெய்க்கன லே – சிவ – காமப்பெண் காதல னே
    அண்ணா தந்தனை யே – அரு – ளாரமு தந்தனை யே.
     
    ஆக, சிவம், நடராஜர், அருட்பெருஞ்ஜோதி, பதி, சிவகாமவல்லி இவையெல்லாம் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய பொது சொற்களே. இயற்கைகையை / இறைவனை பற்றி நினைக்கும் போது வரும் பொது திருவார்த்தைகள் என அறிக.
     
    நன்றி
    APJ அருள்
  • அறிவே கடவுளின் வடிவம் அதனால் நமக்கு அறிவே வழி

    ( வள்ளலார் கண்ட பொது கடவுள் “இயற்கையே” என்ற கட்டுரையின் தொடர்ச்சி – APJ அருள் )

    அன்பர்களே !

    வள்ளலார் கண்ட பொது கடவுள் “ இயற்கையே “. எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ள ஆண்டவரின் வடிவம் இயற்கை உண்மை. இயற்கை உண்மை அறிவாக உள்ளது. அறிவுள் அறிவு அதனுள் சுத்த அறிவின் சொருபமே அருட்பெருஞ்ஜோதி ஆகும் என்கிறது சுத்த சன்மார்க்கம். இயற்கை உண்மை பதியே என்கிறார் வள்ளலார். சுத்த அறிவை அறிவால் பெறுவதே சாதனம்.  அறிவே ஒருமையும் கருணையும் ஆகும். இயற்கை கடவுள் பற்றி முன்பு கண்டோம். அக்கட்டுரையில் இயற்கை பற்றிய சத்திய சொற்களை மீண்டும் நினைவு கூர்வோம்.

    • இறவாத இயற்கை,
    • இயற்கை கடவுள்,
    • இயற்கை உண்மை,
    • இயற்கை விளக்கம்,
    • இயற்கை இன்பம்,
    • இயற்கை நிறைவு
    • இயற்கை முடிபு
    • இயற்கை அருள்
    • இயற்கை தொன்மை
    • இயற்கையுள் இயற்கை
    • இயற்கை வெளி
    • இயற்கை தனிஅனுபவம்
    • இயற்கை சிவம்

    இங்ஙனம் விளங்கும் இயற்கை (கடவுள்) சுத்த அறிவாய் உள்ளது. அறிவு ஒன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளி என்கிறார் வள்ளலார்.

    அன்பர்களே, இந்த உண்மை அறிவு குறித்த விசாரம் தான் இங்கு நான் (APJ அருள்) திருவருள் துணையால் செய்ய உள்ளேன்.

    அறிவு குறித்து பல விளக்கங்கள் நாம் தெரிந்துக் கொண்டிருக்கிறோம். உலகளவில் அறிவு 

    குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து செய்தும் வரப்படுகிறது.

    பொதுவாக, அறிவு என்பது; தகவல்கள், திறமைகள், உண்மைகள் மற்றும் அனுபவங்கள் எனலாம். இவை, நாம் 

    இயற்கையாக (பிறவியால்) பெற்றுள்ள அறிவு (தன் அறிவு), நம்தொடர்பால் பெறப்படும் அறிவு, நல்ல விசாரணையில் வரும் அறிவு (அறிவுக்கு அறிவு) என இதை அறிவு வளர்ச்சி அல்லது உள் அறிவு பெறும் வழிகள் எனலாம். அப்படித்தானே.ஆக, அறிவு என்றால் ஒரு பொருளைப் பற்றிய உண்மை அறிந்திருப்பது, அறிந்துக்கொள்வது,

    நிற்க! தானாக அறியப்படும் அறிவு என்ற ஒரு சுத்த அறிவு ஒன்று உள்ளது. அதாவது தானாக அறிந்து கொள்வது. இது அருளால் நடப்பது என்கிறார் வள்ளலார். நல்ல விசாரம் செய்வோம்.

    நிற்க! புற (படிப்பு) அறிவு, கலை அறிவு இவை பற்றிய விசாரமில்லை. நம் நிலை என்ன ? நம்மை அனுஷ்டிக்கின்ற கடவுளின் நிலை என்ன? எனக் காணும் முயற்சியை சொல்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.

    நமது ஞானிகள் பிண்டம் சார்ந்த அறிவை நான்காக பார்க்கிறார்கள்;

    1. இந்திரிய அறிவு,(பிண்டத்தின் புறப்புறம் – கண் முதலிய இந்திரியங்கள்)
    2. கரண அறிவு, (பிண்டத்தின் புறம் – மனம் முதலிய கரணங்கள்)
    3. ஜீவ அறிவு, (பிண்டத்தின் அகப்புறம் – ஜீவன் )
    4. ஆன்ம அறிவு. (பிண்டத்தின் அகம் ஆன்மா)

    இவை முறையே;

    • ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரிய அறிவு.
    • ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு.
    • ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு.
    • ஒரு பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு.

    நம் விசாரம் “ஆன்ம அறிவு” குறித்து. காரணம் பேரின்ப பெரு வாழ்வை பெற்று வாழ்வதே நம் லட்சியம். இதற்கு உண்மை அறிதல் வேண்டும் என்கிறார் வள்ளலார். பொதுவாக அதாவது இயல்பாகவே இந்த அறிவு பல பிறவிகளில் கிடைக்கும். ஆனால், இப்பிறவியிலேயே பெறுதலே நம் முயற்சி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    இன்னொரு விதமாகவும் வெளிப்படுத்தியுள்ளனர்; ஞான வகை மூன்று;

    உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.

    உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.

    அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.

    உபாய ஞான மென்பது; நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது; சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது; எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு.

    வள்ளலாரின் உபதேசக்குறிப்பில் ;

    கடவுள் உண்மை விளங்கும் சுத்த சிவ நிலையை படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். (அறிவு விளங்குவதில் தான் கடவுள் நிலை காண முடியும் என்கிறார் வள்ளலார், நம் அறிவை கொண்டு சுத்த அறிவைப் பெறுதல்). ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும் என்கிறார்.

    அறிவாகிய கடவுளை அறிவைக் கொண்டு அறிய முடியும். சரிதானே.

    இறவாத இயற்கை கடவுளாக உள்ளது. அக்கடவுளின் வடிவம் இயற்கை உண்மை, இயற்கை உண்மை அறிவாய் உள்ளது. உண்மை அறிவால் தான் உண்மை கடவுளின் நிலை அறியப்படுவதாக உள்ளது என்கிறது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம். அறிவே வழி. இதுவே கருணை சாதனம். இதை நாம் கருத்தில் மீண்டும் கொள்வோம். கொண்டோம்.

    • ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு.
    • உண்மையை தானே தெரிவித்து அருளுவது கடவுளறிவு.

    என் மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்பார் வள்ளலார். ஆக, நம் கொள்ள வேண்டிய அறிவு ஆன்ம அறிவு. இதில் இடைவிடாது நன்முயற்சி செய்தால், ஆண்டவரிடமிருந்து பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம். இதுவே சத்தியம் என்கிறார் வள்ளலார்.

    மனித பிறவிக்கு முன் உள்ள யோனி வர்க்கங்களில் அதாவது தாவரம் முதல் விலங்கு வரை புனலறிவு தான் அருளப்பட்டுள்ளது. புலனறிவால் வாழ முடியும். ஆனால் உள்ள உண்மையை (இயற்கையை/கடவுள் நிலையை) அறிந்துக்கொள்ள முடியாது. கடவுளின் உண்மை நிலை அறிவதே நம் லட்சியம்.

    அன்பர்களே,

    மனித தேகத்தில் தான் ஆறறிவு விளங்க வைக்கப்படுகிறது. வள்ளலார் விண்ணப்பத்தில் விரிவாக விளக்குகிறார். சுருக்கமாக ஒருவாறு காண முயற்ச்சி செய்கிறேன். ( உள்ளபடி முழுமையாக தெரிந்துக் கொள்ள நான்கு விண்ணப்பங்களை ஊன்றி படிக்க வேண்டுகிறேன்).

    “ என்னை சிறிது அறிவு விளங்கசெய்து, மனித தேகத்தில் பிறப்பிக்க வைத்த இறைவா… வந்தனம் வந்தனம் என்கிறார் வள்ளலார்”. – வள்ளலார் அருளிய விண்ணப்பங்கள்

    உயர்வுடையதாகிய ஆறாவது அறிவுள்ள, ஏழாவது பிறவியாகிய மனிதப் பிறவிக்கு, தேகம், ஆன்ம சித்தி கலைகள், உபயோக தத்துவ உறுப்புகள், உட்பட மற்றவைகளையும், இவைக்கான இடங்கள், அதிகரித்தற்கான இடங்கள், தொழில், தொழில் இயற்றும் போது இயைபு, இச்சை,அறிவு முதலிய கருவிகளும், மற்ற எல்லாம் அமைத்து, ஆறாவது அறிவில் சிறிது மட்டும் விளங்கச் செய்து விடுகிறார் ஆண்டவர்.

    நிற்க! நாம் பெற்றுள்ள சிறிய (ஆறாவது) அறிவானது, (அடுத்த மனிதப்) பிறவிகள் தோறும்தான் வளர்ச்சி பெறுகிறது. பிறவிகளுக்கு காரணம் அறிவு விருத்திக்கே. ஒவ்வொரு பிறவிலும் பெற்ற அறிவளவு இன்பம் அருளப்படுகிறது. அதனால் எல்லா நிலையும் அருளே என அறிக.

    நிற்க! இந்நிலையில் தான், வள்ளலார், இப்பிறவிலேயே அறிவை முழு விருத்தியாக்கிக் கொண்டு, உண்மையை முழுமையாக இப்பிறவிலேயே தெரிந்துக் கொள்ள அதி தீவிர விருப்பம் கொள்கிறார். அவ்விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள சமய மதங்களில் வழித்துறை இல்லாததால், ஒரு புதிய வழியை காண்கிறார். அதுவே சுத்த சன்மார்க்கம்.

    இவ்வழியில் வள்ளலார் கண்ட உண்மை யாதெனில்;

    இனி, மேலும் பிறவிகள் இல்லாது, இப்பிறவிலேயே உண்மை நிலை அறிந்துக்கொள்ள இறைவனிடமே வேண்டி அருள் பெறுவதே ஒரே வழி எனக்கண்டார். இறைவன் மட்டுமே உண்மையை விளக்குவதாக உள்ளது. அதனால் இறைவா, நீயே, விரைந்து வந்து, உண்மையை எனக்கு விளக்க வேண்டும், என்னை பேரின்ப பெருவாழ்வில் வாழ வைக்க வேண்டும் என கண்ணீர் விட்டு நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து வேண்டுவதாக உள்ளது என்கிறார் வள்ளலார். சுத்த மெய்ஞ்ஞான யோகப் பயிற்சி இதுவே.

    நிற்க! அறிவின் அடிப்படையில் தான் தேவர்கள், நரகர்கள், மனிதர்கள் என்றழைக்கப்படுகிறது என்கிறார் வள்ளலார். அறிவு நிலைகள் அறிய திருவள்ளுவரின் உரிய அதிகாரங்களை ஊன்றி வாசிக்க வேண்டும்.

    ஆக,

    • கடவுளறிவால் (கடவுளால்) உண்மை தெரிவிக்கப்படும் என்பதால், உண்மை தெரிந்துக் கொள்ளும் இடத்திலிருந்து (ஆன்ம அறிவு கொண்டு) உடனே முயற்சிக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    • மரணம் நெருங்கி வருகிறது, காலம் குறைவாக உள்ளதாலும், இந்திரியங்கள், கரணங்கள், ஜீவன் ஆகிய படி நிலைகள் (இந்திரிய அறிவு, கரண அறிவு, ஜீவ அறிவு) மூலம் முயற்சிப்பதை கைவிடுகிறார்.
    • மேலும், இதுவரை கற்ற, பற்றிய பற்றுகளை பற்றற கைவிட்டு விட வேண்டும். வள்ளலார் கைவிட்டு விட்டதாக தெரிவிக்கிறார். மேலும்,
    • யோகத்தில் ஞானம் என்ற மூன்றாவது சாதனத்தில் நாலாவது நிலையில் முயற்சியை தொடங்கியதாக சொல்கிறார் வள்ளலார்.

    அறியாமல் அறிகின்ற அறிவுள் அறிவாகிய சத்திய அறிவே என்கிறார்.

    • மெய்ப்பொருளாகவும்,
    • அன்பாகவும், கருணையாகவும்,
    • வெளியாகவும், ஒளியாகவும்,
    • உயிரொளியாகவும்,
    • அனுபவமாகவும் இன்பமாகவும்

    இயற்கை வெளிப்படுகிறது என்கிறார் வள்ளலார்.

    வள்ளலாரின் பாடல்களில் அறிவு குறித்த உண்மை காண்போம்;

    • அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
    • அறிவு ஒன்றே வடிவாகி விளங்குகின்ற ஒளியே ..
    • மெய் அறிவு ஆனந்த நிலை விளக்குகின்ற சுடரே
    • சுத்த அறிவான வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே..
    • நின் கருணை உளந்தான் அறிவு …
    • அன்பே அறிவே அமுதே அழியாப் பொன்னே மணியே பொருளே அருளே
    • உயிர்க்குயிர் ஆகிய ஒளியே ஆதியே நடுவே அந்தமே ஆதி நடுஅந்தம் இல்லதோர் அறிவே.
    • என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே …
    • அறிவு ஒரு வகை முதல் ஐவகை அறுவகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
    • அறிவு உறு சித்திகள் அனந்த கோடிகள் பிரிவற விளக்கும் …
    • அறிவவை பலவாய் அறிவன பலவாய் எறிவற விளக்கிடும் ..
    • அறிவுக்கு அறிவினில் அதுவது அதுவதுவாய் எறிவற்று ஓங்கிய …
    • அறிவுருவனைத்தும் ஆனந்தமாயிட பொறியுறு மான்மதற் போதமும் போயிட
    • ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை ..
    • அறிவான தெய்வம் அவ்வறிவுக்கு அறிவாம் அன்பான தெய்வம்…
    • ஆரணஆகமத்தின் அரும்பொருளே அரும்பொருளின் அனுபவமே அறிவு..
    • மனம் தருவானை தவிர்த்தோர் அறிவினில் ஓர் அறிவாய் வயங்குகின்ற.. (தருவானை என்றால் வெளிப்படுத்துதல்)
    • சற்புதர் அறிவில் அறிவென அறிகின்ற அறிவே (சற்= நல்லபுதர்/ சிறிய)..
    • என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என்னறிவின் தன் அறிவாம் உண்மைத் தனி நிலையாம் ..
    • அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்த திரு நடம் நான் காணல் வேண்டும்..
    • எனக்குள்ளும் புறத்தும் மெய்த் துணையாய் விளங்கும் அறிவே …
    • இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி ..
    • அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே..
    • பேரன்பர் அறிவின்கண் அறிவாய் அவ்வறிவில் விளைந்த சிவானந்த அமுது..
    • இயல் உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன்..
    • பிறிவு உற்றறியாய் பெரும் பொருளாய் என் அறிவுக்கு அறிவாம் அருட்..
    • அறிவுக்கு அறிவு தோன்றுமிடம்:
    • பற்றிய பற்றனைத்தினையும் பற்றற விட்ட அறிவாம் பாண்மை ஒன்றே வடிவாகி .. (பாண்மை = முறை / தாழ்ச்சி )
    • மெய் தூரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாம் ( இது விளங்க அறிவுக்கு அறிவு )
    • அருளறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம் மருள் அறிவென்றே வகுத்த மெய்ச் சிவமே

    “அயர்வறு” என்றப் பாடலில் அறிவு விளங்கும் நிலைகளை காண முடிகிறது.

    அயர்வறு பேரறிவு- அவ்வறிவுக்கு அறிவாய் –

    அறிவுஅறிவுள் அறிவாய் – ஆங்கதனுள்ளோர் அறிவாய் –

    மயர்வறுமோர் இயற்கை உண்மை தனியறிவாய் –

    செயற்கை மன்னுமறிவு அனைத்தினுக்கும் வயங்கி …

    பேரறிவு என்பது மறைப்புகள் அறியா அறிவு ஆகும், பேரறிவு உள்ளவர் சமயக் குழியில் விழாதவர் (பாடல் ஆதாரம் : “வெறிக்கும்..”)

    நாம் பெற்றுள்ள சிறிய அறிவு புன்மை அறிவு.

    புன்மை அறிவால் பொய் உரைத்து இகழ்ந்து போதல். கொலை புரிதல், புலை நுகர்ந்து இருத்தல், அலைதரு மனம், எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தல், சமய வலை அகப்படல், மயங்கிய மதி, நல்லோர் நலையல எனவே திரிதல் இவை பெறும் அறிவாகும். (ஆதாரம் பாடல்கள்). இந்த அறிவை விருத்தியாக்கி அதாவது அறிவுக்கு அறிவு அதனுள் சுத்த அறிவு பெற வேண்டும்., சற்புதர் அறிவில் அறிவென அறிகின்ற அறிவே என்கிறார். நிற்க!

    இது தெய்வ திருவருளால் மட்டுமே சாத்தியம். தகுதியுள்ளவர் பெறுவது சத்தியம். கருணை ஒன்றே சாதனம். கருணை என்பது; (புறத்தில்) எல்லா உயிர்களிடத்தும் தயவும், (அகத்தில்) ஆண்டவரிடத்தில் அன்பும். இதற்கு ஒருமை வேண்டும். ஒருமை என்பது; தனது அறிவும் ஒழுக்கமும் (மேற்படி அறிவு வழியும்) ஒத்த இடத்தில் தானே தோன்றுவது என்கிறார் வள்ளலார்.

    மயங்குறாத மெய் விளங்கிய மாமணி விளக்கே ..

    என் உள்ளே அறிவித்த உண்மையால் …

    துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வதலால்

    என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே, 

    -என்கிறார் வள்ளலார்.

     

    எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும்

    இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும்

    மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும்

    விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும்

    இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில்

    இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ

    பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம்

    பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே.

    நன்றி : ஆசிரியர் : APJ அருள் @ N. இளங்கோ 8778874134

    ************************************************************************

    அன்பர்களே, 

    நல்ல விசாரணையில் நாம் உறுதி செய்து, கருத்தில் கொண்டவை;

    Ø  வள்ளலார் கண்ட உண்மை கடவுள் இயற்கை.

    Ø  இறவாத இயற்கை உண்மையின் வடிவம் அறிவு.

    Ø  அறிவின் திருவுருவம் ஒளி, அருட்பெருஞ்ஜோதி.

    Ø  வெளியில் ஜோதிமயம், உயிருக்குயிர் ஒளியே.

    Ø  அறிவால் அருளை பெறுவதே ஒரே வழி.

    Ø  கருணை அருள் அனுபவம் என்பது இயற்கை விளக்கம்

    Ø  எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்பும் என்ற கருணையே வழிபாட்டு சாதனம்.

    Ø  ஒழுக்கம் நிரப்பி, ஆண்டவரே நீரே விரைந்து வந்து உண்மை தெரிவிக்க வேண்டுமென நினைந்து உணர்ந்து கண்ணீரால் நெகிழ்ந்து தொழுதல். இறவா நிலை நாம் பெறுவது லட்சியம்.  

    Ø  நித்திய பேரின்ப வாழ்வை அருளுவது இயற்கை இன்பம்.  

  • வள்ளலார் கண்ட பொது கடவுள் – “இயற்கை“

    திருவருட்பிரகாச வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்ட கடவுள் “இயற்கை கடவுள்” ஆகும். உண்மை கடவுள், ஓர் நித்திய மெய்ப்பொருள். இயற்கை இறவாத இயற்கையாகவுள்ளது. இறவாத இயற்கையை, இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் எனப்பிரித்து, இயற்கை கடவுளின் நிலையை எளிதாக நமக்கு விளக்குகிறார் வள்ளலார்.

    இதுவே இங்கு விசாரம். திருவருள் துணைக்கொண்டு முயற்சிப்போம் (APJ அருள்).

    இந்த இயற்கை கடவுளை வள்ளலார் எப்படி விவரிக்கிறார் என்றால்;

    • இயற்கை உண்மை வடிவனர்,
    • இயற்கை விளக்கத்தவர்,
    • இயற்கை இன்பமானவர்,
    • இயற்கை நிறைவானவர்.

    இயற்கை உண்மை”

    இயற்கை உண்மை என்பது கடவுளின் வடிவம் என்கிறார் வள்ளலார். அவ்வடிவம் அறிவாக உள்ளது. இயற்கை உண்மை விளங்கும் நிலை அருட்பெருஞ்ஜோதி சொரூப நிலையாகும். இந்த இயற்கை கடவுளை ஒவ்வொருவரும் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அனுபவிப்பதே உண்மை அறிவும் உண்மை இன்பமும் ஆகும். இதுவே அக அனுபவம். இயற்கை உண்மை தான் சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பதியாக உள்ளது.

    பாடல் வரி :

    “……. சமரசசன் மார்க்க சத்தியமே, இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று கணிந்துளத்தே கனிந்து நினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொளலாமே.”

    இயற்கை உண்மை அறிவாக விளங்கும் நிலை;

    • அயர்வு அறு பேரறிவாகி,
    • அவ்வறிவுக்கு அறிவாய்,
    • அறிவு அறிவுள் அறிவாய்,
    • ஆங்கு அதனுள்ளோர் அறிவாய்,
    • மயர்வு அறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்.
    • செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்,,

    வழிபாடுஎப்படி செய்வது ? :

    நாம் நம்வழிபாட்டில் இந்த இயற்கை கடவுளையே உள்ளத்தில் கனிந்து நினைந்து உரைக்க வேண்டும். பணிந்து பாட வேண்டும் என்கிறார் வள்ளலார்.

    நாம் எங்ஙனம் கனிந்து நினைந்து பணிந்து வழிபாடு செய்வது? இதற்கும் வள்ளலார் நமக்கு கருணை காட்டுகிறார்கள். கீழ்வருமாறு திருகுறிப்புகளால் இயற்கையை போற்றி வணங்குவோம்.

    • பரம்பரமே, சிதம்பரமே, பராபரமே, வரமே,
    • துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே,
    • துரியமுடி அனுபவமே, சுத்தசித்தாந் தமதாய்த்
    • தணிந்தநிலைப் பெருஞ்சுகமே, இயற்கை உண்மை பதியே,

    மேலும்;

    • உத்தம சற்குருவே,
    • நித்திய வான் பொருளே,
    • எலா நிலைகளும் தான் ஆகி ஏர்உறவே விளங்குகின்றவரே,
    • சாகாக் கல்வி பயிற்றி என்னுள் சார்ந்து விளங்கும் சற்குருவே,
    • எல்லாம் தாமாகி ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவரே.

    நீரே, சமரசசன் மார்க்க சத்தியம். சத்தியம், சத்தியம் என்கிறார் வள்ளலார்.

    அன்பர்களே!, மேற்படி சத்திய சொற்களை தெரிந்து, அதன் பொருள் அறிந்து, மேற்படியாக பணிந்து கணிந்து நினைந்து உள்ளத்தில் உரைத்திட்டால், உரைப்பவர்கள் ஓர் அனுபவம் (காணாத காட்சி காணுதல்) பெறுகிறார்கள் என்கிறது சுத்த சன்மார்க்கம்.

    யாருக்குஇந்த வழிபாடு சாத்தியம்?:

    வள்ளலார் உறுதியாக கீழ்வருமாறு சொல்கிறார்கள் :

    • உண்மை கடவுளை, கடவுளின் உண்மையை நேர் உறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம் என்கிறார் வள்ளலார். (சுத்த சன்மார்க்கமே ஒன்றே வழி)
    • புலைசார் மனத்து உடையவரால் முடியாது. (புலால் உண்ணக் கூடாது)
    • கலைசார் முடிபு கடந்து உணர்வு கடக்க வேண்டும். (சமய மத வேத மற்றும் புராணங்கள் இதிகாசங்களில் லட்சியம் கூடாது)
    • சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள்ளம், ( சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரமில்லா நல்ல விசாரணை வேண்டும்)
    • ஓர்உறவு என்றடைந்து போற்றி மகிழ்ந்திடுபவரிடம், (எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ளுதல் வேண்டும் )
    • உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தவரிடம். (கண்ணீருடன் உண்மையாய் இடைவிடாது வழிபாடு செய்தல் வேண்டும்)

    இங்ஙனம் வழிபாடு செய்யின் நம் உள்ள அறிவினிலே இறைவன் அமர்ந்து அருளுவது சத்தியம் என்கிறார் வள்ளலார்.

    கிடைக்கும்பயன்:

    சுத்த சன்மார்க்க தனி வழியில் கிடைக்கும் பயன்களை பற்றி வள்ளலார் கீழ்வருமாறு சொல்கிறார்கள்:

    • அருட்சோதிநிலைசார் இறைமை அளிக்கப்படும். (இறைமை = உரிமை)
    • எல்லாம்செய் வல்லபம் அருளால் அளிக்கப்படும்.
    • பொன்றா வடிவு கொடுத்து எல்லாம் புரி வல்லபம் தரப்படும். (பொன்றா=அழியாத, என்றும் நிலைத்திருக்கும்)
    • மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல் (எக்காலத்திலும் உலகம் மதிக்கும். மரணப்பயம் தீரும். பேரின்பம் கிட்டும்)
    • உருவும் பொருள் ஒன்று எனத்தெளிந்த உணர்வு பெறுதல்,(கடவுள் ஒருவரே)
    • இறை உரு நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான் அது ஆனேனே

    கடவுள்இடம்:

    துரியநிலை கடந்தது அதன்மேல் சுத்தசிவ நிலையாய் உயர்வு உறு சிற்றம்பலம்.

    சிற்றம்பலம் என்பது; இயற்கை உண்மை + இயற்கை விளக்கம் ஆகும்.

    பூதவெளி பகுதிவெளி முதலா வகுக்கும்

    அடிவெளிகளெலாம் வயங்கு வெளி யாகி

    எண்ணம் உறு மாமவுன வெளியாகி அதன்மேல்

    இசைத்த பரவெளியாகி இயல் உபய வெளியாய்

    அண்ணு (அன்று) உறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

    அமர்ந்த பெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்

    திண்ணம் (உறுதி) உறும் தனிஇயற்கை உண்மை வெளியான

    திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

    கீழ் வரும் பாடலை நாம் பணிந்து பாடி பழக வேண்டும்:

    உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்

    புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்

    குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்

    தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.

    அடுத்து;

    இயற்கைவிளக்கம்:

    பூத விளக்கம்

    பகுதிகளின் விளக்கம்

    தத்துவங்கள் விளக்கம்

    (எலாம் தருவிளக்கம் நேர் ஆதி விளக்கமதாய்ப்)

    பரைவிளக்கம்

    பராபரை விளக்கம்

    அகம் புறமும் பேராசை விளக்கம்

    சுத்த விளக்கம்

    பெருவிளக்கம்

    (எலாம் பெற்றவிளக்கமதாய் சீராட விளங்குகின்ற)

    இயற்கைவிளக்கம் அதாம் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

    ஆக, இயற்கை விளக்கம் என்பது இயற்கைஉண்மையில் அருளால் வெளிப்பட்டுள்ள அனைத்தும் எனப்படும்.

    அடுத்து;

    இயற்கைஇன்பம்:

    இயற்கை உண்மை என்பது சிவம். இந்த உண்மை சிவத்தை அறிதல் வேண்டும்.

    சிவம் கலந்து விளங்கும் நிலையை தான் இயற்கை இன்பம் என்கிறார் வள்ளலார்.

    சுத்த சிவா சாக்கிரம் (சாக்கிராதீதம்) இதில் கிடைக்கும் இன்பம். இயற்கையின் திறம் அறிதலே இன்பம். கடவுளுடன் கலக்கும் நிலை / கடவுளை உணரும் நிலை அது;

    இது தனி உரு ஆகும். இது (நன்மணி) ஒளியானது. இந்த உருஒளியை நம்முள் உணர்ந்து தரிசிக்க, நமக்கு தேன் சுவை கொடுக்கும். இவை திரிபு இன்றி விளங்கும் இன்பம் ஆகும். இதுவே இயற்கை இன்பம். மேற்படி இன்பம் குறித்து விரிக்கில்;

    இந்திரிய இன்பம்

    கரண இன்பம்

    உலக இன்பம்

    உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம்

    ஓர் ஆன்மஇன்பம்

    தனித்த அறிவு இன்பம்

    சத்திய பேரின்பம்

    முத்தி இன்பம், அதன்மேல்

    நடம்பெறு மெய்ப்பொருள் இன்பம்

    நிரதிசய இன்பம்

    ஞான சித்திப்பெரும்போக நாட்டரசி இன்பம்

    திடம்பெற ஓங் கிய இயற்கைத் தனி இன்பம் – என்கிறார் வள்ளலார்.

    இறைவன் நம் உளத்தே அமர்ந்து, தன்மயம் ஆக்கி, அதனால் பொங்கும் ஆனந்த போகம் நாம் பெறுதலே அருள் எனப்படும்.

    ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை

    எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்

    எல்லாஞ்செய் வல்லதாகி

    இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்

    இயற்கையே இன்பமாகி

    அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த

    அருளாகி அருள்வெளியிலே

    அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்

    அருட்பெருஞ் சோதியாகிக்

    கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்

    காட்சியே கருணைநிறைவே

    கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற

    கதியே கனிந்தகனியே

    வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே

    வீற்றிருந் தருளும்அரசே

    மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே

    மேவுநட ராஜபதியே.

    இயற்கை முடிபு

    வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தாம், நாதாந்தம், கலாந்தம், யோகாந்தம் என ஆறு அந்தங்கள் வள்ளலாருக்கு முன்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த ஆறு அந்தங்களின் முடிபு சார்ந்தது இல்லை வள்ளலாரின் சுத்த சன்மார்க்க முடிபு. சுத்த சன்மார்க்க முடிபை இயற்கை முடிபு எனத் தனியாக பெயரிட்டு அழைக்கிறார் வள்ளலார். இதுவரை வேத சமய மத மார்க்கங்களால் வெளிப்பட்டுள்ள மேற்படி ஆறு அந்தங்களின் முடிபுகளை கடந்ததே வள்ளலாரின் இயற்கை முடிபு.

    துங்கம் உற்று அழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்

    சங்க நின்று ஏத்தும் சத்திய ஞான சபைய வா அபய வாழ் வருளே.

    அன்பர்களே,

    • இயற்கை அழிவில்லாது.
    • என்றும் இங்கிறவா இயற்கை என்றுறுமோ…
    • இறந்து இறந்தே இளைத்ததுஎலாம் போதும் இந்த உடம்பே

    இயற்கை உடம்பாகஅருள்.

    • கடவுள் இயற்கைஅருட்செயலோ
    • இல்லைஉண்டெணும் இவ்விருமையும் கடந்தோர் இயற்கை
    • அனாதி இயற்கையோ
    • இறவானைப் பிறவானை இயற்கை யானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின்றேனே.
    • எல்லாஞ்செய் வல்லசித்தின் இயற்கையுந்தந் தனையே.
    • ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்

    உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே

    • இரவு இலாது இயம்பும் பகலிலாது இருந்த

    இயற்கையுள்  இயற்கையே என்கோ

    • அருட்சோதி இயற்கை என்னும்

    துப்பாய உடலாதி தருவாயோ

    வள்ளலார் கண்ட கடவுள் “இயற்கை கடவுள்”. இயற்கை எல்லோராலும் போற்றுதலுக்கு உரியது. எது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ அதுவே பொது எனப்படும். எது பொதுவாக விளங்குகிறதோ அதுவே சிறப்புக்குரியது ஆகும். எது சிறப்புக்குரியதாக ஏற்று பார்க்கப்படுகிறதோ அதுவே மெய்ப்பொருள் எனலாம். அப்படித்தானே.

    இதோ வள்ளலார் சொல்கிறார்கள்:

    எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்

    அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி (அகவல்)

    எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்.

    — நன்றி : APJ அருள் ( 8778874134)

    இயற்கை உண்மை இயற்கை விளக்கம்  இயற்கை இன்பம்:

    குறித்த சில பாடல்கள் :

    திரு அகவல் :

    இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்

    அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

    திருவருட்பா :

    ஆறாம் திருமுறை அம்பலவாணர் அணையவருகை

    இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்

    எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்

    இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்

    எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்

    இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்

    இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்

    இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்

    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

    ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை

    எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்

    எல்லாஞ்செய் வல்லதாகி

    இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்

    இயற்கையே இன்பமாகி

    அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த

    அருளாகி அருள்வெளியிலே

    அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்

    அருட்பெருஞ் சோதியாகிக்

    கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்

    காட்சியே கருணைநிறைவே

    கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற

    கதியே கனிந்தகனியே

    வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே

    வீற்றிருந் தருளும்அரசே

    மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே

    மேவுநட ராஜபதியே.

    இயற்கை உண்மை :

    ஆறாம் திருமுறை மரணமிலாப் பெருவாழ்வு

    பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்

    பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே

    துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே

    துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்

    தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க

    சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று

    கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே

    காணாத காட்சிஎலாம் கண்டுகொள லாமே.

    சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே

    சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை

    நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்

    நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி

    ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை

    எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை

    ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்

    உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.

    ஆறாம் திருமுறை இறை இன்பக் குழைவு

    கலைசார் முடிபு கடந்துணர்வு கடந்து நிறைவாய்க் கரிசிலதாய்க்

    கருணை மயமாய் விளங்குசிதா காய நடுவில் இயற்கையுண்மைத்

    தலைசார் வடிவில் இன்பநடம் புரியும் பெருமைத் தனிமுதலே

    சாகாக் கல்வி பயிற்றிஎன்னுட் சார்ந்து விளங்கும் சற்குருவே

    புலைசார் மனத்துச் சிறியேன்றன் குற்றம் அனைத்தும் பொறுத்தருளிப்

    பொன்றா வடிவு கொடுத்தெல்லாம் புரிவல் லபந்தந் தருட்சோதி

    நிலைசார் இறைமை அளித்தனைநான் பொதுவில் ஞான நீதிஎனும்

    நிருத்தம் புரிகின் றேன்புரிதல் நீயோ நானோ நிகழ்த்தாயே.

    ஆறாம் திருமுறை இனித்த வாழ்வருள் எனல்

    உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம்

    புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண்

    குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்

    தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே.

    தெய்வமணி மாலை:

    அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்

    அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்

    மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை

    மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்

    துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்

    துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்

    உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி

    ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

    ஆறாம் திருமுறை திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

    வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா

    வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி

    எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்

    இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்

    அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்

    அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்

    திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான

    திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

    இயற்கை விளக்கம் :

    சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்

    தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி

    நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி

    நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்

    பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்

    பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்

    சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்

    திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

    இயற்கைஇன்பம்:

    அனுபவ மாலை:

    நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி

    நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம்

    வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர்

    வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த்

    தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த்

    திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே

    தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த

    சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே.

    தெய்வமணி மாலை:

    இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக

    இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்

    தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்

    சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்

    நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்

    ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்

    திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்

    திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

    இயற்கை:

    அருட்பெருஞ்சோதி அட்டகம்

    ஏகமோ அன்றி அனேகமோ என்றும்

    இயற்கையோ செயற்கையோ சித்தோ

    தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ

    திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ

    யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ

    உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்

    ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும்

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே

    திரு அட்டகம்:

    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே

    இதுஅது எனஉரைப் பரிதாய்த்

    தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்

    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்

    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்

    புத்தமு தருத்திஎன் உளத்தே

    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த

    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

    ஆறாம் திருமுறை அருட்கொடைப் புகழ்ச்சி

    மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்

    உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும்

    என்றும் உலவாத

    திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்

    குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

    ஆறாம் திருமுறை அனுபவ மாலை

    கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுதும்

    கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்

    இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்

    இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே

    பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்

    புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே

    நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி

    நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.

    ( – APJ அருள் – 8778874134 )