Author: unmai

  • வினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    வினை கர்மம் மாயை முதலியவை நம்மை பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    — ஏபிஜெ அருள்.

    வள்ளலார் வழி கடவுள் வழிபாடு செய்பவர்களுக்கு வினை விதி கர்மம் மலங்கள் அனைத்தும் விலகி விடும் என்பது சத்தியம்.

    காரணம் இங்கு கடவுள் நெறியானது வினை விதி கர்மம் மலங்கள் இவை எல்லாம் தவிர்த்து வாழ்வு  அளிக்கும் வகையில் உள்ளது.
    சாகா கல்வி குறித்து விசாரணை நாம் செய்வதால் நமக்கு மயக்கம் என்னும் மாயை தானே விலகி நிற்கும்.
    பொது நோக்கம், எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவர்களாக நாம் இருப்பதால் கன்மம் கெடும் என்கிறார் வள்ளலார்.

    சுத்த சன்மார்க்கம் உண்மை அறியும் வழி. ஆதலால் நமக்கு மறைப்பு எனும் திரோதாயி மலம் வெல்லும் வல்லபம் உண்டு. 
    கருணை நன்முயற்சியால் நாம் கடவுளின் உண்மை நிலை குறித்து விசாரித்து உண்மை கடவுள் அருள் பெறும் லட்சியம் கொண்டவர்கள் ஆதலால் நமக்கு வினை விதிகள் விட்டோடி தலை வணங்கும் என்கிறார் வள்ளலார்.
    சுத்த சன்மார்க்க நெறி நம்மிடம் தூக்கம், துயரம்,அச்சம், இடர் இவை நம்மிடமிருந்து அருளால் போய்விடுவதால் நமக்கு ஏக்கம்,வினை,மாயை,இருள் இவை ஒழிந்து போகும் என்கிறார் வள்ளலார்.
    ஆக, எந்தொரு ஆசாரமில்லாமல்,

    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபடச் செய்ய சொல்லும் சுத்த சன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கு வினை, கர்மம்,மலங்கள் இவை பற்றி ஐயமில்லை ஐயமில்லை.

    அன்புடன் ஏபிஜெ அருள்.

  • இதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம். ஏன்?எதற்கு?எப்படி?)

    இதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை.
    (மற்றதை நம்ப வேண்டாம், ஏன்?எதற்கு?எப்படி?)
    —- ஏபிஜெ அருள்.

    சரியை,கிரியை, யோகம்,ஞானம், வேதாந்தம், சித்தாந்தம், கலைகள், வினை,மலம்,சத்து, சித்து,வேதம், ஆகமம்,ஆரணம், பூதங்கள்,அண்டம், பிண்டம், வெளிகள், சித்தி நிலைகள், சாகா கல்வி, சாகா தலை,போகா புனல்,வேகா கால்,தத்துவம், சிவதத்துவம்,சத்தர்கள்,சத்திகள், சித்திகள், பதம் பத்தர்,தியானம், தவம்,மூச்சு பயிற்சி,இடம் வலம், காரணம், காரியம், திரை மறைப்பு, அணுக்கள்,ஒளி, மருந்து, மணி,மந்திரம்.. இன்னும் பல.
    ஏ..அப்பா.. இவ்வளவையும் எப்ப படிச்சு..இவை எல்லாம் எப்ப தெரிஞ்சு … தியானம் பண்ணி…கடவுள பார்த்து..அருள் வாங்கி…
    நமக்கில்லை.. நமக்கில்லை..அந்த பாக்கியம்.. நமக்கில்லை………
    என்ன அன்பர்களே! தலை சுற்றுகிறதா? ஆம், மேலே உள்ள எல்லாவற்றையும் இப்பிறவிலேயே கற்று தெளிவு பெற “காலம் காணாது” என்கிறார் வள்ளலார். 
    அப்படியே கற்றாலும் முழுமையாக, உண்மையை கற்றவரில்லை. அதனால் தான் வள்ளலார் சொன்னார்கள்;

    கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

    கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

    உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

    உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே! என்றார்.

    அன்பர்களே!
    இந்நிலையில் தான் வள்ளலார் ஒருவரே தொடர்ந்து நன்முயற்சியில் இருந்தார். தான் வைத்திருந்த சமய பற்றை கை விட்டுவிட்டு, தான் கற்றதிலும் நிற்காமல், கடவுளிடம் மட்டுமே கண்ணீர் விட்டு தனக்கு உண்மை விளக்க வேண்டினார். 

    அன்பர்களே!

    கண்ணீர் விட்டு வேண்டுதலே உண்மை அன்பு. 
    உண்மை தெரிய விரும்பும் அறிவே சத்திய அறிவு. 

    எல்லோருக்குமே கை கூடும் சாதாரண வழி எதுவோ அதுவே இறைவனின் கருணை வழியாகும். உண்மை பொது வழியாகும். அந்த உண்மை பொது வழியை வள்ளலார் கண்டார். அவ்வழியின் பெயரே “சுத்த சன்மார்க்கம்” ஆகும்.
    ஆம், வள்ளலார் கண்ட உண்மை இதுவே.
    அது;
    ” எல்லாமே ஆண்டவராலேயே நமக்கு தெரியப்படுத்தி, நம் தனி அறிவில் விளக்கப்படுகிறது” என்கிறார் வள்ளலார். தனக்கு எல்லாமே பரிபூரணமாக கடவுளால் விளக்கப்பட்டது. இதையே “அருள்” என்கிறார். அருள் வந்தால் தேகம் ஒளியுடம்பாகிறது. மரணமில்லை. இன்பமே வாழ்வாக அமைகிறது என்கிறார் வள்ளலார்.
    இதற்கு,
    நம்மிடம் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். 
    அது;
    ” ஆண்டவரின் அருள் பெற்றிட உண்மையாய் விரும்புவது மட்டுமே”.
    இங்கு “ஆண்டவர்” என்பது ‘உண்மை கடவுள்’ (சமயமத மார்க்கங்களில் உள்ள கடவுளரில்லை).
    இங்கு “அருள்” என்பது ‘நித்திய வாழ்வு’.
    இங்கு “பெற்றிட” என்பது ‘நன்முயற்சி’.
    இங்கு “உண்மையாய்” என்பது ‘மெய் உணர்ச்சி’.
    இங்கு “விரும்புவது” என்பது ‘அறிவு’.
    இங்கு “மட்டுமே” என்பது ‘முடிபு”.
    உண்மை கடவுளை காண்பதும்,
    எந்தவொரு சாத்திர ஆசாரமில்லாமல் கருணை மட்டுமே சாதனமாக கொள்வதும்,
    மரணம் தவிர்த்து பேரின்பமாக வாழ்வதும்,
    இறைவன் அருள் பெற ஒழுக்கத்துடன் நன்முயற்சியில் இருப்பதும்,
    இதுவே வள்ளலார் வழி.
    மற்றவை அல்ல. அல்ல. 
    இது சத்தியம் . (மேற்படி கட்டுரை வள்ளலாரின் பாடல்கள் அடிப்படையில்)
    அன்பர்களே!
    விசாரம் தொடரும்…

    அன்புடன்

    ஏபிஜெ அருள்.

  • கடவுளை காண முடியுமா?

     

    கடவுளை காண முடியுமா? — ஏபிஜெ அருள்.

    கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் தான் கேட்கிறேன். கடவுளை காண முடியுமா? வணங்கி வரும் கடவுளை நான் கண்டேன் என்று உண்மையாக சொல்ல முடியுமா? 
    ஆம் அன்பர்களே!
    இது நமக்கு (கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்) மிக முக்கிய கேள்வி ஆகும். ஒருவர் கடவுளை கண்டேன் என்றால் அவர் கடவுள் அருளை பெற்றார் என்பதும் உண்மை. இனி அவருக்கு ஏது அவத்தை. கடவுள் அருளால் அனைத்தும் பெற்றவராகி விடுகிறார். இன்பம் மட்டுமே.துன்பம் ஏது?
    நிற்க!
    கடவுள் இவரே என நம்பிக்கை கொண்டு நாம் தினமும் வணங்கி வருகிறோம். ஆனால் இறைவா உன் நிலை காண வேண்டும் என்று விரும்பியவர்கள் எத்தனை பேர்? இதற்கான வழியை நாம் தழுவி இருக்கும் சமய மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ளதா? இவரே கடவுள் நம்பிக்கை வை. வணங்கு.பயப்படு. வேண்டுதலை வை. சடங்குகள் செய். நல்லது நடக்கும். நாளைக்கும் வா. இதையே செய். புண்ணியம். இறப்புக்கு பின் சொர்க்கம். 
    இதுவே, நமக்கும் கடவுளுக்கும் தினமும் உள்ளது தொடர்பு. இது உண்மை தானே. இது நம்பிக்கை. மனத்தளவு திருப்தி. மன வேதனை போக்கி மன தைரியம் கொடுக்கிறது. கடவுளுக்கு பயந்து நல்லதை செய்ய வைக்கிறது. இதை தவிர….??? 
    இங்கு நாம் வணங்கிய கடவுளின் நிலை என்ன?

    நம் அறிவில் தெரிந்த உண்மை என்ன? 
    நம் நிலை என்ன?

    கடவுளின் உண்மை குறித்து செய்த நல்ல விசாரணை என்ன? 
    இந்த நன்முயற்சிக்கு நாம் இருக்கும் சமயம் அனுமதிக்கிறதா? 
    நம் வழிபடும் தலங்களில் இதற்கான இடம் அனுமதி? 
    இல்லையே!
    அன்பர்களே!
    எங்கும் பரிபூரணமாக நிறைந்துள்ள கடவுளின் உண்மையை காண முயற்சிப்பது தானே அறிவாகும். தன்னை காண முயலும் பக்தனை தானே கடவுள் விரும்புவார்.
    எங்கும் நிறைந்திருக்கும் மெய் பொருள், மிகப் பெரியவராகிய இறைவன், சொல்லால் சுட்டி காட்ட முடியாத, கண்களால் காண முடியாத அற்பதரே ஆண்டவர். இங்ஙனம் விளங்கும் கடவுளை காண முடியுமா ?
    முடியும் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம். அது,
    கடவுளே தன்னை காட்டினால் அன்றி நாம் பார்க்கவே முடியாது.
    “கடவுளே வந்து, நம் ஒவ்வொரு உள்ள உணர்வில் தன்னை, தன் உண்மையை விரித்து காட்டுவார்” என்கிறார் வள்ளலார்.
    நிற்க! ஆனால்…
    காண விரும்பும் கடவுள் இவரே என நாம் முன்பே தீர்மானிக்க முடியுமா?
    அதனால்,
    இதோ வள்ளலார் நம்மை கீழ் வருமாறு கருத்தில் கொள்ள சொல்கிறார்.
    ” ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கொண்டு வழிபாடு செய்தல் வேண்டும்”என்கிறார்.
    அடுத்து,
    நாம் கடவுளை காண உண்மையாய் விரும்ப வேண்டும் என்கிறார்.
    கடவுள் வேறு புறம் வேறல்ல. நமக்கு இந்த அண்ட திறங்களையும், என் நிலையும், மற்ற எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும் என இறைவனிடத்தில் இடைவிடாது கண்ணீர் விட்டு வேண்ட சொல்கிறது சுத்த சன்மார்க்கம்.
    இதற்கு ஒழுக்கம் நிரம்பியவர்களாக, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவர்களாக, நல்ல விசாரம் தவிர வேறு எந்த ஒரு ஆசாரத்திலும் பற்று வையாதவர்களாக நாம் இருக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
    என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம்.
    உண்மை கடவுளை காணும் வழியே சுத்த சன்மார்க்கம்.
    உண்மை கடவுளை கண்டு பேரின்ப வாழ்வில் வாழ்வதே சுத்த சன்மார்க்க கொள்கை. 
    சார்வீர் இனி சுத்த சன்மார்க்கத்தை.


    நன்றி ஏபிஜெ அருள்.

  • எந்த நெறியை பிடிக்கக் கூடாது? எந்த நெறியை பிடிக்க வேண்டும்?

     

    எந்த நெறியை பிடிக்கக் கூடாது?
    எந்த நெறியை பிடிக்க வேண்டும்?
    — ஏபிஜெ அருள்.
    சுத்த சன்மார்க்க நெறியில் ஒரு தனித்தன்மையும், உண்மைக்குறிப்பையும், பொது உணர்வையும், 
    நாம் ஊன்றி தெரிந்துக் கொண்டாலன்றி வள்ளலாரின் சன்மார்க்கக் கொள்கையை அறிந்துக் கொள்ள முடியாது.
    இதோ வள்ளலாரின் முடிபான திருவருட்பாவை வாசித்து வள்ளலார் சொல்ல வந்த உண்மையை உணர்ந்து கொள்ளவோம். நன்றி.

    ஆறாம் திருமுறை / தோழிக் குரிமை கிளத்தல்/

      பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் 
              பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே 
         பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே 
              பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் 
         உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் 
              உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே 
         தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் 
              தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே. 

    —— வள்ளலார்.

  • முதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு

     

    முதன்மை தேர்தல் அதிகாரிடம் மற்றும் அரசிடம் சுத்த சன்மார்க்கக் கொடி குறித்து மனு,
    விபரம் ???:
    1.உயர்திரு முதன்மை தேர்தல் அதிகாரி, நியூ டெல்லி. 
    2. உயர்திரு கேபினட் செகரட்டரி, 
    பாராளு மன்றம். 
    3. திருமிகு முதன்மை செயலாளர், 
    தமிழகஅரசு, சென்னை – 9.
    *********************************
    பணிவுடன் வைக்கும் கோரிக்கை யாதெனில் :
    தமிழ் நாடு, கடலூர் மாவட்டம், வடலூரில் சாதி, சமய, மத, மார்க்கங்களை கடந்து ஓர் உயரிய புதிய பொது மார்க்கத்தை , தனி நெறியை 19 ம் நூற்றாண்டில் திருவருட்பிரகாச வள்ளலார் தோற்றுவித்து உள்ளார்கள். 
    அவர் கண்ட மார்க்கத்தின் பெயர்
    ” சுத்த சன்மார்க்கம்”. 
    தன் மார்க்கத்திற்கென 22/10/1873ல் ஒரு தனி கொடி ஒன்றை அறிமுகப்படுத்தி, அக்கொடியை ஏற்றி ஒரு மகா பேருபதேசம் செய்தார் வள்ளலார். 10 பாரா உடைய ஒரு கொடிப்பாடலும் தந்தருளியுள்ளார்கள். 
    வள்ளலாரின் நிலையங்கள், 19ம் ஆண்டு முதல் தமிழக அரசு, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் 22 அக்டோபர் மாதம் கொடி நாள், நிலைய நிர்வாகத்தால் கொண்டாடப்படுகிறது. மேற்படி
    கொடி, மேற்புறம் மஞ்சள் ஒரு பங்கு, கீழ்ப்புறம் வெள்ளை மூன்று பங்கு என்ற அமைப்பு உடையது. (மாடல் படம் மற்றும் ஒரு கொடியும் இணைக்கப்பட்டுள்ளது). 
    இந்நிலையில் நான் சமர்ப்பிப்பிக்கும் மனு:
    வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் கொடி போல் அல்லது அதன் அமைப்பு, நிறம், அளவு, ஒட்டியது போல் கொடியை எவரும்/அரசியல் கட்சிகள்/மற்ற மார்க்கங்கள், வைத்துக் கொள்ள அங்கீகரித்து விடாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி மனு செய்கிறேன்.
    1. 
    உயர்திரு ஆணையர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை , தமிழக அரசு, சென்னை-34.
    2.
    உயர்திரு நிலைய நிர்வாக செயல் அதிகாரி, திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம், வடலூர்.

    தங்களிடம் வேண்டுவது:, 
    மேலே உள்ள விண்ணப்பத்தை தொடர்ந்து, வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொடியை பற்றி உரியவர்களுக்கு தாங்கள் தெரிவித்து, கொடியை பதிவு செய்திட வேணுமாய் வேண்டுகிறோம்.
    நன்றி
    இராமலெட்சுமி,
    கருணை சபை-சாலை,
    மதுரை.
    *************************** 
    PETITION Sent by me. 
    **************************
    From:
    E. Ramalakshmi,M.A.(sociology),
    Founder of M/s Karunai Sabai Salai,
    34 Poombukar Nagar North Extension,
    Uthangudi, Madurai, 
    Tamilnadu – 625 107

    To:
    1 The Chief Election Commissioner of India,Nirvachan Sadan, Ashoka Road,
    New Delhi.
    2 The Cabinet Secretary of India,
    South Block, Parliament House,
    New Delhi.
    3. The Chief Secretary, 
    State of Tamilnadu, secretariat, 
    Chennai – 9.

    Respected Sir,

    M Sub : – Flag – flag of Sutha Sanmarga –
    not to permit any other
    person/political party etc., to utilise flag which is similar in color, design, appearance and measurements etc., –
    request of – Regarding.
    ——- ******** ——-
    My humble request is that:

    His Holiness Thiruvarutprakasa Vallalar had founded a new marga with separate and Unique doctrine crossing the frontiers of Caste, Religion and other existing Margas available in the world during the 19thCentury at Vadaloor, Cuddalore District, State of Tamil Nadu, India.
    His Holiness Vallalar named his Marga as “ Sutha Sanmargam” and established institutions to propagate his final thoughts. The said institutions are being maintained by the HR & CE Department of Tamil Nadu Government.
    It is submitted that apart from other unique preaches laid down by His Holiness Vallalar, a separate flag was introduced and hoisted on 22/10/1873 and sung a separate flag song consisting of 10 paras. Till this date, the Tamil Nadu Government, Department of HR & CE, celebrates the “ Flag Hoisting Day “ as festival at the Institution on October, 22nd every year.
    It is furhter submitted that the Flag is 1/4 yellow on the top and 3/4 white on the bottom. The flag is used with devotion by the follower of the Sutha Sanmarga. The pictures of the flag of Sutha Sanmarga are enclosed herewith for your kind reference. 
    In this connection, I humbly request that as His Holiness Thiruvarutprakasa Vallalar has designed and prescribed this unique flag to the Sutha Sanmargam, no other persons /
    groups/ sects / political parties etc., can be allowed to use any flag similar to this , for their activities.
    Therefore, we humbly request your good office, not to permit any other persons/groups/ sects / political parties etc., to utilise flags which are similar in colour, design, appearance, measurement, etc., to the flag designed and prescribed by His Holiness Vallalar to the Sutha Sanmarga.
    The receipt of the representation may kindly be acknowledged.
    Thanking you, 
    Yours faithfully,
    E. Ramalakshmi, 
    01-06-2018
    Place: Madurai,Tamilnadu.
    Copy to:
    ********
    1.The Commissioner of HR&CE,
    Nungampakkam, chennai – 34.
    2.The Executive Officer, 
    Thiruarut prakasa Vallalar Deiva Nilayam, Vadalur, Cuda lore Dist.,. 
    (you are humbly requested to take necessary steps in this regard and registering the flag if required in the law).

  • என்ன! நான் மனிதன் இல்லையா?, இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா?

    என்ன! நான் மனிதன் இல்லையா?
    இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா? –ஏபிஜெ அருள்.

    என்ன கேள்வி இது? 
    என்கிறீர்களா.. 
    அன்பர்களே! நம் ஞானிகள் குறிப்பாக வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது, இப்படி தான் கேள்விக் கேட்டு, நல்ல விசாரணை செய்யத் தோன்றுகிறது.
    வள்ளலார் தனது முதல் விண்ணப்பத்தில் பக்கம் 556 ல்;
    ” நாம் ,அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சி இன்றிக் கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே, இவ்வுலகினிடத்து…
    1) தாவர யோனி வர்க்கங்களில்,
    2) ஊர்வன, நீர் வாழ்வன முதலிய யோனி வர்க்கங்களில்,
    3) பறவை யோனி வர்க்கங்களில்,
    4) விலங்கு யோனி வர்க்கங்களில்
    சென்று சென்று பிறந்து பிறந்து இறந்து இறந்து அலுப்படைந்தோம் என்கிறார் வள்ளலார்.
    மேற்படியாக தாவரம்,ஊர்வன,நீர்வாழ்வன, பறவை, விலங்கு பிறவிக்கு அடுத்து எடுக்கும் பிறவி எது???
    மனிதப் பிறவி என்று தானே நினைக்கிறீர்கள்.
    அன்பர்களே,
    அது தான் இல்லை.
    விலங்கு வர்க்கங்களுக்கு பின்பு,
    இரு பிறவிகளில் நாம் பிறந்து பிறந்து இறந்து இறந்து அதன் பின்பே ஏழாவது பிறவி மனித தேகம் நமக்கு வருகிறது என்கிறார் வள்ளலார்.
    அந்த இரு யோனி வர்க்கங்கள் எதுவெனில்:
    —- (பிறவி 5) தேவ யோனி வர்க்கங்கள்
    அதன் பின்பு
    —- (பிறவி 6) நரக யோனி வர்க்கங்கள்.
    இங்கு தேவர்கள் யார்?
    இங்கு நரகர்கள் யார்?
    தேவர்கள் என்பவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
    “பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியவர்கள் தேவர்கள்.
    மேற்படியாக பிறந்து பிறந்து
    அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல்,
    அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
    முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து
    அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ்
    சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம் என்கிறார் வள்ளலார்.
    அடுத்து,
    நரக யோனி வர்க்கங்கள். 
    இவர்கள் யார் எனில்:
    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

    ” காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார்”முதலியவர்கள் நரகர்கள் என்கிறார்.

    மேற்படியாக நரகர்களாகப் பிறந்து பிறந்து, பயப்படல், சிறைப்படல், சிதைப்படல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;” 
    ஆக,
    எவர் ஒருவர் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் தேவர்கள்.
    அடுத்து,
    எவர் ஒருவர், பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் நரகர்கள்.

    இப்படி பார்க்கையில்,
    நான் இப்பொழுது மனித பிறவியில் உள்ளேனா..??……?? என்றால்..
    இல்லை.
    ஆம்.
    எனது நாட்டுடன் பக்கத்து நாடு போர்.
    என் நாடும் போரிடுகிறது. எல்லா நாட்டிலும் போர். போரிலே எதிரிகளைக் கொல்கிறோம். நம்மிலும் பலர் சாகுகிறார்கள். 
    நம் சமயப் புராணங்களில்,புனித நூல்களிலும் போர்,எங்கும் போர்மயம். கற்பனை படைப்பான சினிமாவிலும் போர் காட்சிகள். போர் புரிந்த அரசர்கள் பற்றியே என் படிப்பும் உள்ளது. 
    அப்படி எனில் நான் யார்? நாம் யார்?தேவர். தேவர்கள்.
    ஆனால் இன்று (இனி),
    பல நூறு, ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான போரை நாம் வெறுக்கிறோம். போர் கூடாது. இவை தவறு எனத் தெளிந்து வாழும் அறிவை இன்று பெற்றேன். ஜனநாயக அரசியல் ஆட்சி முறை. பொது சட்டம் இன்று உள்ளது .
    ஆனால், ஆனால்….
    சுயநலம் போகவில்லை. பதவி, பணத்திற்கு கொலை நடக்கிறது.
    ஏழைகள் பயப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள். அப்படி எனில், நான்,நாம் நரகப் பிறவியில் உள்ளேன். உள்ளோம்.
    அன்பர்களே!
    ஆக, தேவர்,நரகர் பிறவிகளில் சென்று சென்று பிறந்து பிறந்து அதன் பின்பே மனிதப்பிறவிக்கு வருவதாக வள்ளலார் முதலிய ஞானிகள் சொல்லியுள்ளனர்.
    இதுவே இயற்கை. 
    கடவுள் படைத்துள்ள அமைப்பு இது ஆகும்.
    மனித தேகமே, அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர் அறிவுடையது என்கிறார் நம் வள்ளலார்.
    அன்பர்களே!
    அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் வள்ளலார் இருக்க கவலை எதற்கு?
    அன்பர்களே,
    நாம் இன்று,
    அலைப்படவில்லை,அகப்படவில்லை,
    அகங்கரிக்கவில்லை,
    அதிகரிக்கவில்லை,
    மறந்து -நினைந்து நிற்கவில்லை, மயக்குறவில்லை,
    போரிடவில்லை, கொலை செய்யவில்லை,
    கொலைப்படவில்லை.
    எனவே நாம் தேவ யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

    நாம் இன்று காட்டில் திரியவில்லை
    திருடவில்லை,கொலை செய்யவில்லை அதனால் பயப்படவில்லை சிறைப்படவில்லை, சிதைப்படவில்லை .எனவே நாம் நரக யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.
    ஜீவகாருண்யம், அன்பு, அறிவு, இரக்கம் உடையவர்களாக இன்று உள்ளோம்.
    அண்ட திறங்களை அறிய ஆசை உள்ளவர்களாக உள்ளோம். 
    எல்லா உயிர்களையும் நம் உயிர் போல் பாவிக்கிறோம்.
    கடவுளின் உண்மை குறித்து நல்ல விசாரணை செய்கிறோம்.
    ஆம் நான் மனிதன்.
    நாம் மனிதர்.
    அன்பர்களே! 
    வள்ளலார் அவர்கள் மற்றொரு இடத்தில் சொல்லியதை இங்கு நினைவு கூர்வோம்: (பக்கம்:377) அதாவது; “அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.”என்கிறார் வள்ளலார்.
    எனவே நாம் மனித தேகம் எடுத்துள்ளோம் என்றுச் சொல்லுவோம். 
    கருணை என்ற உயர்ந்த அறிவை பெற்று இடைவிடாது நன்முயற்சி செய்வோம். வள்ளலாரின் கட்டளைப்படி ஆச்சாரங்களில் மனம் பற்றாமல் இருந்து, கடவுளையே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு தொழுவோம். 
    ‌கடவுள் அருள் பெறுவோம். 
    பெருவாழ்வில் வாழுவோம்.
    நன்றி.
    அன்புடன் உங்கள் 
    ஏபிஜெ அருள்.
    கருணை சபை சாலை,மதுரை.

    For more kindly visit
    www.atruegod.org

  • உண்மையை நம்புதல் வேண்டும் -வள்ளலார்

    உண்மையை நம்புதல் வேண்டும் – வள்ளலார்

    : அந்த உண்மை :

    ‌ இறைவன் ஒருவரே. எங்கும் பரிபூரணமாக நிறைந்திருக்கும் “ஓர் உண்மை கடவுள்” உண்டென்றும், உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.

    ‌ ஒழுக்கம் நிரம்பி, கருணை ஒன்றையே சாதனமாக கொண்டு, இரக்கம் விட்டு இறையருள் பெறுதல் வேண்டும்.

    ‌சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் கூடாது. ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையை லட்சியமாக கொள்ளுதல் வேண்டும். ஆசார வகைகளை விட்டொழித்து, பொது நோக்கம் வருவித்துக் கொள்ள வேண்டும்.

    ‌சாகா கல்வி கற்க, அண்ட திறங்கள் அறிய, உண்மை கடவுளின் நிலை காணஆசைக் கொள்ள வேண்டும்.

    ‌இறவாப் பெருவாழ்வு அருளால் பெற, நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து,அன்பால் துதித்து கண்ணீர் விட்டு வேண்டுதல் வேண்டும்.

    நல்ல விசாரணையை, ‌உள்ளழுந்துதல், சிந்தித்தல், சிந்தித்தலை விசாரித்தல் ஆகிய நன்முயற்சியை இடைவிடாது செய்தல் வேண்டும். 
    – – வள்ளலார்.

    (நன்றி APJ Arul)

  • வள்ளலார்

    வள்ளலார்

    இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் பிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம்.

    “சமயத்தில் பற்று”

    வள்ளலாரின் குடும்பத்தார்கள் சைவ சமயத்தைத் தழுவி வந்தார்கள். அதனால் வள்ளலார் அச்சமயத்தின் மீது பற்றுக் கொண்டு வாழ்ந்து வளர்ந்து வந்தார்கள். இளம் வயதில் திரு இராமலிங்கம் (வள்ளலார்) அவர்கள் சென்னையில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயம் சென்று கவிகள் பாடி துதித்தார்கள். அக்கோயிலுக்கு “கந்த கோட்டம்” என பெயரிட்டு அழைத்தவர் வள்ளலார் இராமலிங்கம் அவர்களே. அன்பு, ஒழுக்கம், கருணை, இரக்கம் இவை குறித்து இவர் பாடிய பாடல்கள் மிக்க சிறப்புடையதாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    சமயக்கடவுளர்கள் குறித்து பாடல்கள் நிறைய பாடியுள்ளார்கள். புராணங்களை மிகத் தெளிவாகச் சொல்லி ஆற்றிய சொற்பொழிவுகள் ஏராளம். அங்ஙனமாக அவர்தம் இளம்பருவகாலங்கள் சமயத்தில் பற்றுடனும், ஒழுக்கங்களில் மேன்மையுடனும் கடந்தன.

    பன்முக ஞானம்:

    பன்முக ஞானம் பெற்ற திரு.இராமலிங்கம் பின்பு மக்களால் “வள்ளலார்” என்றழைக்கப்பட்டார்கள். அவர் நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகாசிரியர், போதகாசிரியர், ஞானாசிரியர் வியாக்கியானகர்த்தர், சித்த மருத்துவர், சீர்திருத்தவாதி, அருட்கவிஞர், அருள்ஞானி என்று அனைத்து திறமைகளையும் பெற்று தனிச்சிறப்புடன் முதன்மையாக விளங்கினார்கள்.

    நூல்கள்:

    மனுமுறைகண்ட வாசகம்

    ஜீவகாருண்ய ஓழுக்கம்

    உரைநூல்கள்:

    ஓழிவிலொடுக்கப் பாயிர விருத்தி உரை

    தொண்ட மண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரை

    பதிப்புகள்:

    மேற்படியான உரைநூல்கள் பதிப்பித்தார்கள்

    மேலும் ‘சின்மயதீபிகையை’யும் பதிப்பித்தார்கள்

    வியாக்கியானங்கள்:

    “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்.

    “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

    சித்த மருத்துவம்:

    மருத்துவ குணங்கள் குறித்த அட்டவணை.

    தாமே பல மருந்துகளை செய்தது.

    கடிதங்கள் வாயிலாக மருந்து குறிப்புகள்.

    ரசவாதம் பொன் செய்வதில் வல்லப தன்மை.

    சீர்த்திருத்தங்கள்:

    புருட(ஷ)ன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

    மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணம் செய்ய வேண்டாம்.

    கர்ம காரியங்கள் ஓன்றும் செய்ய வேண்டாம்.

    சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்களை விட்டு ஒழியுங்கள்.

    முதன்மையான செயல்கள்:

    பொது மக்களுக்கு முதன் முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
    முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர்.
    o மும்மொழி (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) வகுப்பு நடத்தியவர்.

    o தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

    o 19ம் நூற்றாண்டில் கடவுள் உண்மையறிய “ஒரு தனி மார்க்கத்தை ” நிறுவியவர்.

    o தன்மார்க்கத்திற்கென சங்கம், சபை, கொடி, நெறி, கட்டளைகள், தடைகள் ஆகியவை வகுத்தவர்.

    o எந்தவொரு மார்க்கமும் வெளிப்படுத்திடாத “மரணமில்லா பெருவாழ்வு” என்ற பெரும்பயன் இறையருளால் பெறலாம் என வெளிப்படுத்தினார்கள்.

    o இவர் கண்ட மார்க்கத்தின் கடவுள், இதுவரை சமய மத மார்க்கங்களில் வெளிப்படுத்திய கடவுகளில் ஒருவரல்ல என்கிறார்.

    வள்ளலாரின் முடிபான கொள்கையில்“உண்மை பொது நெறி”

    வள்ளலாரின் முடிபான கொள்கையானது அவர்தம் முந்தைய கொள்கைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. சமயத்தின் மீது வைத்திருந்த பற்றை கைவிட்டு விட்டு ஓரு புதிய வழியை கண்டு, அவ்வழிக்கு “சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உலகிற்கு வெளிப்படுத்தினார்கள்.

    இளம்பருவத்தில் சமயப் பாடல்கள் பாடியதற்கு காரணம், தனக்கு அப்பொழுது கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார்.

    சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் “ஒருவரே” என்பது அவர் கண்ட கடவுள் உண்மையாகும். தான் கண்ட கடவுள் உலகில் காணப்படும் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஐயபாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என திட்டவட்டமாக 12.04.1871ல் தன் அறிவிப்பின் மூலமாக உலகிற்கு அறிவித்துள்ளார்கள்.

    நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஓழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஓழுக்கங்களையும் பெற்று சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார். மேலும் அவர் வெளிப்படுத்தியது யாதெனில்;

    ‘கருணை’ என்ற ஓரே சாதனத்தால்

    மட்டுமே கடவுள் உண்மையறிந்து,

    இறையருள் பெற்று, பேரின்ப பெருவாழ்வாகிய

    மரணமில்லா பெருவாழ்வு கைகூடுவதாக உள்ளது.

    அக்கருணை விருத்திக்கு தடையாக

    சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்கள் உள்ளன.

    எனவே மேற்படி ஆசாரங்களை விட்டு ஓழித்து

    சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை

    வருவித்துக் கொள்ள வேண்டும்.

    இதுவே வள்ளலார் கண்ட தனிநெறி.

    மேலும், இந்த தனிநெறி எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார்.

    வள்ளலாரின் ‘சுத்த சன்மார்க்கத்தை’ கீழ்வருமாறு சுருங்க கூறலாம்.

    சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஓருவரே. அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
    சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாகிய சமய மத மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்களிலும் வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசாரங்களிலும் மனம் பற்றக்கூடாது.
    கடவுள் நிலையறிவதற்கு “ஓழுக்கம்” நிரம்புதல் வேண்டும்.
    இடைவிடாது “கருணை” நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
    கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே. அக்கருணைக்கு ஓருமை வரவேண்டும்.
    ஒருமை என்பது தனது அறிவும், ஒழுக்கமும் ஒத்த இடத்தில் தானே தோன்றுவது.
    நம் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன் கூடியாவது, தனித் தனியாவது அல்லது தனியாவது ‘நல்ல விசாரணை’ செய்யுங்கள்.
    சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை
    சுத்தசன்மார்க்கத்தின் முடிபு “சாகா கல்வியை” தெரிவிப்பது அன்றி வேறு ஒன்றுமில்லை. (என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்).
    ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமையே சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்.
    இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து,அவரவர்களையும்உரிமையுடைவர்களாக்கி வாழ்வித்தலே வேண்டும்.

    சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரம்:

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    முடிபான கொள்கையில் வெளிவந்த நூல்களும் நிறுவிய நிலையங்களும்

    நூல்கள்:

    திருஅகவல்
    திருஅட்டகம்
    சுத்தசன்மார்க்கப் பாடல்கள் (ஆறாம் திருமுறை என அழைக்கப்படுகிறது)
    சத்திய விண்ணப்பங்கள் நான்கு
    12.4.1871ல் சுத்த சன்மார்க்க கடவுளை வெளிப்படுத்திய அறிவிப்பு
    அதன்பின்பு தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்புகள், கட்டளைகள்,
    விளம்பரம், விதிகள்.

    (மேற்படியான அனைத்தும் திரு அருட்பிரகாச வள்ளலாரால் கைப்பட எழுதியவைகள்)

    மேலும், வள்ளலாரின் உபதேசங்களை அன்பர்களால் கேட்டு எழுதப் பெற்ற “உபதேசக் குறிப்புகள்”. அதே போல் வள்ளலார் (1873ம் ஆண்டு) ஆற்றிய “மகாபேருபதேசம்” (மெய் அன்பரால் எழுதி வைக்கப்பட்டது.)

    நிலையங்கள்:

    “சத்திய ஞான சபை” (பார்வதிபுரம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா),

    “சித்தி வளாகம்.” (மேட்டுக் குப்பம்)

    “தனி ஒளி வடிவம்” பெற்ற திரு அறை. (மேட்டுக்குப்பம்)

    வள்ளலாரின் முக்கிய சத்திய வாக்கியங்கள்:

    தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். (உரைநடை பக்கம் 471)

    பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் இனி விளங்கும் (அறிவிப்பு நாள் 12.04.1871)

    இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்களெல்லாம் “சுத்தசன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்”.

    (அறிவிப்பு நாள். கார்த்திகை மாதம் 1873) கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, வள்ளலார் சொன்னது:-

    “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். அந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், ‘நினைந்து நினைந்து’ என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய-பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.

    சத்திய பெரு விண்ணப்பத்தில்:-

    “எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மை கடவுள் ‘ஓருவரே’ உள்ளார் என்றறிகின்ற மெய்யறிவை விளக்குவித் தருளினீர். வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்களென்றும் அவ்வச் சமயங்களிற் பலபட அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். அன்றியும் வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்களென்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்தருளினீர்.”

    சத்திய பெரு விண்ணப்பத்தில்;-

    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக்கண்ணே, இயற்கை உண்மை என்கிற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பமென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய் தனித் தலைமைக் கடவுளே!

    சத்திய ஞான விண்ணப்பத்தில்:-

    தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன:

    ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால் ஒழிய தயவு விருத்தியாகாது. மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

    (உபதேசக்குறிப்பில் பக்கம் 418) கடவுள் நிலையறிவது எப்படி எனில்;

    ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.

    (பக்கம் 438); சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.

    சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜப் பழக்கமே சுத்தசன்மார்க்க பழக்கம்.

    30.01.1874ல் முடிபாக அறிவித்தது:-

    திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் வள்ளலார் அறிவித்தது; ”இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்தசன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”. யாதெனில்;

    இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தையதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை.”

    மேலும்; “இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் அது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்”.வள்ளலார் அவர்கள் ஆரம்ப காலத்தில் சமயத்தில் பற்றுடன் இருந்தார்கள். அதன்பின்பு அவையில் வைத்திருந்த லட்சியத்தை கைவிட்டு விட்டு உண்மை பொது நெறியைக் கண்டார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    வள்ளலாரின் முதல் நான்கு திருமுறையில் உள்ள சமய ஸ்தோத்திர பாடல்கள் மற்றும் அதன்பின்பு சமயத்திலேயே இருந்து வந்த திருவேலாயுத முதலியாரால் வெளியிடப்பட்ட ஐந்தாம் திருமறையில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களிலும் நாம் லட்சியம் வையாது, சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கத்தில் மட்டுமே இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும். வள்ளலார் கட்டளைப்படி, ஒழுக்கத்தில் ஒழுகி, உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரிக்க வேண்டும்.

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

    — நன்றியுடன்: ஏபிஜெ அருள், கருணை சபை-சாலை, மதுரை, தமிழ் நாடு, இந்தியா apjarul1@gmail.com