சுத்த சன்மார்க்க ஆண்டு 155

சித்திரை-1 சுத்த சன்மார்க்க நாள்
சுத்த சன்மார்க்க ஆண்டு 155
*****************************************
வள்ளலார் தனது மார்க்கத்தை பற்றி குறிப்பிடும் போது;
“சுத்த சன்மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம்“ என்கிறார்.
திருவருட் பிரகாச வள்ளலார் தனது மகா பேருபதேசத்தில் (ஜப்பசி 7,1873) உபதேசித்தது;
“ உண்மை சொல்ல வந்தனனே என்றுஉண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
அடுத்து;
30-12-1874 அன்று, மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில்;
கடவுள் அருளால் பெற்றிருந்த ஒளி தேகத்தில் வள்ளலார் வெளிப்படும் முந்தின இரவு 12 மணிக்கு தன்னை சூழ்ந்திருந்த மக்களை நோக்கி ;
“ இதுகாறும் என்னோடு பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லையே …… “ என்கிறார் வள்ளலார்.
நிற்க!
ஆக, நாம் இப்போது வள்ளலார் சொன்ன உண்மை என்ன? என்ற கேள்வியை நம்முள் எழுப்பி விடை காண வேண்டும். அப்படித்தானே!
அந்த உண்மை எதுவெனில்; அது அவர் கண்ட “சமரச சுத்த சன்மார்க்கமே”.
நிற்க! சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கியத்தடைகளாக சமய மத மார்க்கங்களை அறிவிகிறார் வள்ளலார். அதாவது;
— சைவம் வைணவம் போன்ற சமயங்களிலும்,
— வேதாந்தம் சிந்தாந்தம் போன்ற மதங்களிலும்,
— வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும்,
லட்சியம் வைக்க வேண்டாம் என உபதேசித்து உள்ளார். உபதேசம் மட்டுமில்லாமல் பாடல்கள், விண்ணப்பங்கள், கடிதங்கள், அறிவிப்புகள் இவை மூலமும் அறிவித்து உள்ளார்கள்.
முதல் விண்ணப்பத்தில்;
“ … இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். “
ஆக, வள்ளலார் தான் வைத்திருந்த சைவ சமயப் பற்று உட்பட அனைத்து பற்றைகளையும் கைவிட்டு விட்டார், கைவிடச் சொல்கிறார்.
சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு பல ஸ்தலங்கள் சென்று, பல நூறு சமய ஸ்தோத்திரப் பாடல்களும் அதே போல், தத்துவங்களை போற்றி உபதேசித்தும், பாடியுள்ளார் வள்ளலார். இங்ஙனம் இருக்க, வள்ளலாரின் முடிபான சுத்த சன்மார்க்க காலத்தை எப்படி அறிய ?
ஆம், இந்த கேள்வி மிக முக்கியம் ஆகும்.
திருவருட் பிரகாச வள்ளலார் சில கால குறியீடுகளை தந்துள்ளார்கள்.
சித்திரை முதல் தேதி 1871 அன்று வள்ளலாரின் கடித அறிவிப்பில்;
”சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லாம் உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக் காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்க பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்கு மேல்.
இப்போது வருகிற நமது கடவுள் இங்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச்சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனிப்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்”.
-பிரஜோற்பத்தி சித்திரை-1
ஆம், 12-04-1871 சித்திரை 1 அன்று நம் வள்ளலார் வெளியிட்ட மேற்படி அறிவிப்பு கடிதம் மூலம், அவர் கண்ட புதிய வழியை (மார்க்கத்தை) உலகிற்கு வள்ளலார் வெளிப்படுத்திய நாளாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது எனலாம்.
இதிலுள்ள “…29 மாதத்திற்கு மேல் ..” (2 வருடம் மற்றும் 5 மாதங்கள், இதற்கு மேல்) இந்த காலத்தை இங்கிருந்து கூட்டி அதன் மேல் மாதத்தை பார்த்தால் அக்டோபர் 1873 என வருகிறது. வள்ளலார் 1873 ஜப்பசி 7 (22-10-1873) அன்று மகாபேருபதேசம் ஆற்றியுள்ளார்.
சுத்த சன்மார்க்கத்திற்கென ஒரு தனி கொடியை ஏற்றி, கொடி பாடலையும், மகாமந்திரமும் அருளிய நந்நாள் ஆகும். நிற்க! இந்நாளில் வள்ளலார் ஒரு அளவு குறியீடு சொல்லியுள்ளார். இது நமது இந்த விசாரத்தை உறுதிபடுத்தி, முடித்து வைக்கிறது எனலாம்.
ஆம், மகாபேருபதேசத்தில் வள்ளலார் சொல்கிறார்கள் ;
“..இரண்டரை வருசமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன். இனி சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டு இருப்பார்கள் ..”
இந்த 2 ½ வருடத்தை அதாவது 2 வருடம் 6 மாதங்களை இந்த அக்டோபர் 1873 லிருந்து கழித்தால் வரும் மாதம் ஏப்ரல் மாதம் 1871 ஆகும். அது தான் நாம் ஏற்கனவே கண்ட சித்திரை 1. 1871 கடித அறிவிப்பு ஆகும்.
மேலும், சுத்த சன்மார்க்க தனி நெறியை வெளிப்படுத்திய பின்பு 18-07-1872 அன்று, வள்ளலார் தனது சாலைக்கு “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தரும சாலை” என்றும், சபைக்கு “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை “ என்றும், சங்கத்திற்கு “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்றும் பெயர் மாற்றியதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, வள்ளலார் பல காலங்கள் இடைவிடாது செய்த கருணை நன்முயற்சியில் அருளால அறிவிக்கப்பட்ட உண்மையை (சமரச சுத்த சன்மார்க்கத்தை) வெளி உலகிற்கு வெளிப்படுத்திய நாள் ஒருவாறு சித்திரை 1, 1871 எனலாம். அப்படியெனில்; சுத்த சன்மார்க்க ஆண்டு 155.
மேலும்,
சித்திரை-1,1871-க்கு பின்பு, வள்ளலார் ஆற்றி உரைகள், எழுதியவை, பாடியவை, அனைத்தும் அவரின் முடிபான சமரச சுத்த சன்மார்க்கத்தையே வெளிப்படுத்துகிறது. அவையாவன;
திருஅகவல்
திருஅட்டகம்
நான்கு விண்ணப்பங்கள்
28 பாசுரங்கள் உட்பட 1871 க்கு பின்பு பாடிய பாடல்கள்
12-04-1871க்கு பின்பு ஆற்றிய உபதேசங்கள்
12-04-1871 கடிதமும் அதன் பின்பு வெளிவந்த கடிதங்கள், அறிவிப்புகள், கட்டளைகள், விதிகள்
சத்திய ஞான சபை மற்றும் சபைக்கான விதிகள்
18-07-1872 அன்று வெளிவந்த அறிக்கை மூலம் சாலை, சங்கம், சபைக்கு பெயர் மாற்றம் செய்கிறார்.
மகாபேருபதேசம்.
ஆக, வள்ளலார் தான் கண்ட புதிய வழியை (வழி என்றால் மார்க்கம்) சுத்த சன்மார்க்கத்தை உலகிற்கு வெளிப்படுத்திய நாள் சித்திரை முதல் தேதி (1871). அதனால் சுத்த சனமார்க்க சுத்த சன்மார்க்க தினம் சித்திரை-1 என்றும் சுத்த சன்மார்க்க ஆண்டு 155/2026 என்போம். ஆம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய உண்மை பொது நெறி சுத்த சன்மார்க்கம் என்பதை உலகிற்கு விரைந்து எடுத்துச் சென்று, “கருணை” ஆட்சி பரவி எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
— அருளால் ஆய்வு – APJ அருள் @ நா.இளங்கோ.