ஏன்? எப்படி? எதற்கு? – APJ அருள் @ இளங்கோ
சுத்த சன்மார்க்கமே உயர்ந்தது. ஏன்? எப்படி? எதற்கு? – APJ அருள் @ இளங்கோ
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருவருட் பிரகாச வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கமே உயர்ந்தது. காரணம் இம்மார்க்கத்தின் நோக்கம், பெறுகின்ற பயன், மார்க்கத்தார்களின் விருப்பம், தகுதி, முயற்சி இவை உயர்ந்த தரத்தில் உண்மையாகவுள்ளது. யாதெனில்;
- உலக அனைத்து உயிர்களுக்கான மார்க்கம்.
- உலகியலில் பொது நோக்கம் வருவிக்கும் மார்க்கம்.
- உண்மை அறியும் அறிவு மார்க்கம்.
- ஆசாரமில்லா ஒழுக்கம் நிரப்பி கொள்ளும் கருணை மார்க்கம்.
- உண்மை கடவுளை அறிவால் அறிந்துக் கொள்ளும் அனுபவ மார்க்கம்.
- இயற்கை உண்மை கண்டு இயற்கை விளக்கம் தரிசிக்கும் அக வழி.
- கடவுளின் அருளால் அவத்தைகளை நீக்கி, நித்திய வாழ்வுக்கான வழி.
- ஆண்டவரிடத்தில் அன்பு வைக்கும் மார்க்கம்:
இனி இவை குறித்து நல்ல விசாரம் செய்து,
உறுதிப்படுத்தி உள்ளத்தில் உணர்ச்சி பெறுவோம்.
சமரச சுத்த சன்மார்க்கம் என்பதில் உள்ளவை குறித்த வள்ளலாரின் சத்திய வாக்கியங்கள். அப்படியே கீழே தரப்படுகிறது:
1) உலக அனைத்து உயிர்களுக்கான மார்க்கம்.
1.1 ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
1.2 உண்ணாடி உயிர்கள்உறும் துயர் தவிர்த்தல் வேண்டும்
1.3 புரைசேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
1.4 எச்சார்பும் ஆகி உயிர்க்கிதம் புரிதல் வேண்டும்
1.5 எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்.
2) உலகியலில் பொது நோக்கம் வருவிக்கும் மார்க்கம்.
2.1 எனை அடுத்தார் தமக்கெல்லாம் இன்பு தரல் வேண்டும்
2.2 எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும்
2.3 வரைசேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
2.4 ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமைஉளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
2.5 இருளாமை உறல்வேண்டும்.
2.6 இச்சாதி சமய விகற்பங்களெலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
2.7 துடிசேர் எவ்வுலகமும் எத்தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
2.8 கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம் காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
2.9 சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
- உண்மை அறியும் அறிவு மார்க்கம்.
3.1 அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
3.2 ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
3.3 காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
3.4 தனித்த பேரன்பு மெய்அறிவும் நற்சபைக்குரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற வேண்டும்.
- ஆசாரமில்லா ஒழுக்கம் நிரப்பி கொள்ளும் கருணை மார்க்கம்.
4.1 பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
4.2 ஆணவம் ஆதியமுழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்
4.3 அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
4.4 செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
4.5 எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும்
4.6 ஆசாரம் முதலா நவின்ற கலைச்சரிதம் எலாம் பிள்ளைவிளையாட்டே
4.7 எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
4.8 சார் உலக வாதனையை தவிர்க்கும் உள்ளம் வேண்டும்
- உண்மை கடவுளை அறிவால் அறிந்துக் கொள்ளும் அனுபவ மார்க்கம்.
5.1 அன்புருவானவர் இன்புற உள்ளே அறிவுருவாயினீர் வாரீர் அருட்பெருஞ் ஜோதியீர் வாரீர். வாரீர்
5.2 செறிவுடையார் உளத்தே நடஞ் செய்கின்ற அறிவுருவார் இதோ அம்பலத் திருக்கின்றார்
5.3 சாகாத கல்வியே கல்வி
5.4 ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு
5.5 மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்
5.6 வேகாத கால் ஆதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலதாகும்
5.7 அடிமுடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
5.8 அறிவுள் அறியும் அறிவை அறிய அருளும் நிமல சரணம்
- இயற்கை உண்மை கண்டு இயற்கை விளக்கம் தரிசிக்கும் அக வழி.
6.1 இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாம்
6.2 அழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன்மார்க்க சங்கம்
6.3 இயற்கையுண்மை தனிப்பதியே என்று கணிந்து உளத்தே கனிந்து நினைந்து உரைத்திடல் வேண்டும்
6.4 இயற்கை உண்மையே உருவதாய் இன்பம் புணர்ந்திட புணர்ந்தவா
6.5 இயற்கை உருவாளர் அருவாகி ஒளியாகி வெளியாய் ஓங்குகின்றார்
6.6 எய்யாத அருட்சோதி என் கையுறல் வேண்டும்
6.7 அருட்பெருஞ்சோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்
6.8 கண்ணார நினை எங்கும் கண்வத்தல் வேண்டும்.
- கடவுளின் அருளால் அவத்தைகளை நீக்கி, நித்திய வாழ்வுக்கான வழி
7.1 நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும்
7.2 அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
7.3 தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்
7.4 எல்லாஞ் செய்வல்ல சித்தே எனக்களித்தல் வேண்டும்
7.5 எல்லாம் செய்வல்ல திறன் எனக்களித்தல் வேண்டும்
7.6 இறந்த உயிர்தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
7.7 செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
7.8 மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
7.9 எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
7.10 எண்ணியவாறு எந்நாளும் இவ்வுடம்பே இறவாத இயற்கை பெற்றேன்.
- ஆண்டவரிடத்தில் அன்பு வைக்கும் மார்க்கம்:
8.1 தலைவ நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே.
8.2 நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
8.3 எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தை நினதருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
8.4 உனைப் பிரியாதுறுகின்ற உறவது வேண்டுவனே.
8.5 திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
8.6 ஏக சிவபோக அனு போகம் உறல் வேண்டும்
8.7 பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும்
8.8 மருளாய உலகமெலாம் மருள் நீங்கி ஞானமன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்.
8.9 ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
8.10 திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
8.11 பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
8.12 பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
8.13 தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
8.14 படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
8.15 படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
8.16 ஐந்தொழில் நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
8.17 செப்பாத மேனிலை மேல் சுத்தசிவ மார்க்கம்
8.18 எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே.
8.19 உரைசேர் மெய்த்திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.
8.20 ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
8.21 தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்தோங்குகின்ற தன்மையும் வேண்டுவனே.
8.22 உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே.
8.23 பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.
8.24 விமலாதி உடைய ஒரு திருவடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே.
ஆம்,
- உலக அனைத்து உயிர்களுக்கான மற்றும் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாகவும்,
- கட்டுபாட்டு ஆசார வகைகள் ஒழிந்து போய் கருணை மட்டுமே சாதனமாக கொண்ட இரக்க நெறியாகவும்,
- பெரும் பயனாகிய நித்திய பேரின்ப பெருவாழ்வை அருளும் தனி நெறியாகவும் விளங்குகிறது வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம்.
நன்றி: APJ அருள் 8778874134