Blog

  • பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது

    பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது.
    — தயவு சரவணானந்தா
    பழைய நெறிமுறைகளைப் பயின்று,
    அவற்றின் கருத்துக்களை அடிப்படையாய் உளம் கொண்டு, அகவல் அடிகளை ஆராயப்புகின் மெய்ப்பொருள் விளங்காது.
    இதில் பழ மரபுகள் ஒட்டியும் தழுவியும், விளக்கியும் சில குறிப்புகள் வந்துள்ள இடங்களில் கூட அருட்பொதுநோக்கு கொண்டு எவரும் ஆய்தல் வேண்டும்.
    அப்போதுதான் இந்த அருட்பெருஞ்ஜோதியின் உண்மையே முன்வந்த எல்லாவற்றிற்கும் உரிய உண்மையாய் இருந்து அது அதுவாய் இலங்கினதாகச் சந்தேகமின்றித் தெளிந்து ஏற்றுப் பயனுறலாகும்.
    உலகம், மக்கள் எல்லோருக்கும் நல்லின்ப வாழ்வு பெற்றுத் தலைத்து விளங்கற்கரிய இடமாக அருட்பெருங்கடவுளை, அருட்பெருஞ்ஜோதியாக இன்று எவ்வெவருள்ளும் இருந்து விரிந்து விளங்குவதை பேரருள் ஞானத்தாலே உணர்கின்றோம். இவ்வருள் ஞானம் கொண்டு அன்போடு கூடி வாழத் தெரிந்து கொள்ளாததாலேதான், இதுவரை உலக மக்கள் சமுதாயம் அவத்தைப்பட்டு அழிந்தும், அழிவைவிட மேலும் மேலும் பெருகிக்கொண்டும் இருக்கினறதாம்.

    பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது.

    அந்தப் பழநெறியையும் கூட முதலில் ஒரு நல்ல குறிக்கோளோடுதான் முன்னோர் வகுத்தளித்தனர். பலரும் அம்மாதிரி சில பலகொள்கை கோட்பாடுகளையும், வந்தனை வழிபாடுகளையும் ஏற்படுத்தினதினால், அவற்றைத் தழுவிய பின்னோர், வேறு வேறு பிரிவினராய்க் கூடி மக்கள் சமுதாயம் ஒன்று பட்டு அகவுரிமையோடு வாழமுடியாது செய்து விட்டனர். அதனால் உலகில் இன்று பேரவத்தையே பெருகி இருக்கின்றதைக் காண்கின்றோம்.

    சமய, மத நெறிமுறைகளைக் கைவிடத் துணிகின்றார்களில்லை

    இந்நிலை மாறவேண்டும், மாறவேண்டும் என்பதுதான் நல்லோர் எல்லோரும் விரும்புகின்றனர்.
    அதே சமயம் தம் சமய, மத நெறிமுறைகளைக் கைவிடத் துணிகின்றார்களில்லை பலரும்.

    இதற்கு என்ன செய்வது?

    இதற்கு முதலில் செய்ய வேண்டுவது யாதெனின், அருட்பெருஞ்ஜோதியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டியதே முதற்படியாகும். ஒவ்வொருவருக்கும், உடம்பும், உயிரும், உணர்வும், வாழ்வும் தனித்தனியாக இருக்கின்றது. தனித்தனி ஒவ்வொருவரும் நல்லின்ப வாழ்வு பெற உரிமை உடையவர்களே. தன் போல் பிறரும் நலம் விழைவது இயல்பே என்பதை உளம் கொண்டு, எவர்க்கும் துன்பஞ் செய்யாது, அன்பு செய்திருப்பது நம் கடமையாகும். அன்புச் செயலால்தான் மெய் இன்பம் உண்டாகும். இந்த உலகில் எவ்வுயிர்க்கும் இன்பம் உண்டாகவே இயற்கை நியதி முறை ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வியற்கை இன்பச் செயல்முறைக்குக் காரணமாகிய இயற்கை நியதி அல்லது விதிமுறை, பேரன்பு அல்லது அருளின் அடிப்படையில் தோன்றியுள்ளது என்பதை அறிவோம். அந்த அருட்பெரும் அடிநிலையே அருட்பெருஞ்ஜோதியாய் எவர் உள்ளும் இருந்து அன்புச் செயல்புரியத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, அன்புச் செயல் பெருகப் பெருக அருட்பெருஞ்ஜோதியுண்ணின்று விரிந்து உடம்பும் உயிரும், உணர்வும், வாழ்வும் நிறை இன்பமயமாகி நிலவுவது திண்ணம். இப்படி அருட்பெருஞ்ஜோதியை உளம் கொண்டு வாழ்வதால் முன்னம் விதிக்கப்பட்டிருந்த தடைகளெல்லாம் ஒழிவது திண்ணம்.
    அப்போது இந்த அருட்பெருஞ்ஜோதி முறையால், முன்பு எச்சமயத் தலைவர்களும் எதிர்பார்த்திருந்த நன்மையைவிட பன்மடங்கு பெருநன்மை உண்டாவது சத்தியம். இதனால், இந்த அருட்பெருஞ்ஜோதியின் ஏற்பால் யாரும் எந்தவிதமான குற்றமும், குறைவும் கேடும் அடையவே மாட்டார்கள்!

    இது நிச்சயம்.

    தயவு சரவணானந்தா

  • மதசார்பின்மைக்கான முதல் குரல் கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலாரிடமிருந்தே வந்தது

    நீதிபதி திரு அரிபரந்தாமன் தனது அரசியலமைப்புச் சட்டமும் மதசார்பின்மையும் புத்தகத்தில்….
    “… மதசார்பின்மை என்பது மதத்திற்கு எதிரானதோ அல்லது கடவுள் மறுப்பு வாதமோ அல்ல என்பதை முதலில் நான் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
    மதசார்பின்மைக்கான முதல் குரல் கடவுள் நம்பிக்கை கொண்ட வள்ளலாரிடமிருந்தே வந்தது:
    தமிழ்நாட்டிலிருந்து எழுந்த மதச்சார்பின்மைக்கான குரல் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒருவரிடமிருந்தே வந்தது.
    ‘பெரியாரின்’ கடவுள் பற்றிய கருத்துக்கள் உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரிந்து தான் இருக்கும். அத்தகைய ஒருவர் தான் மதசார்பின்மை நெறியாளர் என்று அவரைப் போற்றியதோடு, அவர் எழுதிய புரட்சிகரமான பாடல்களை எல்லாம், தான் நடத்தி வந்த குடியரசு நாளிதழில் பலமுறை வெளியிட்டு வந்ததோடு ,அந்த பாடல்களை இலவசமாக மக்களிடையே விநியோகித்தும் வந்தார்.அவர்தான் “வள்ளலார்” என்று பரவலாக அறியப்பட்ட ராமலிங்க அடிகளார் ஆவார்.
    ‘மகாகவி பாரதியார்’
    கூட அவரை ‘மகத்தான சமூக சீர்த்திருத்தவாதி’ என்று போற்றிப் புகழ்ந்துரைத்தார்.
    ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டியிருந்த வள்ளலார் அனைத்து மதங்களையும், சாதிகளையும், நால் வருணத்தையும், சடங்குகளையும், வேதங்களையும், புராணங்களையும் குப்பைகள் என்று வர்ணித்ததோடு அவற்றை நிலத்தில் ஆழப்புதைத்து உரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
    “இருட் சாதித் தத்துவ சாத்திரக் குப்பை
    இருவாய் புன்செயில் எருவாக்கிப் போட்டு…”
    அந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் இயங்கி கொண்டிருந்த மடங்கள், கோயில்கள், ஆகியவற்றிற்கு நேர் விரோதமாக ” சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை அவர் உருவாக்கியதோடு, துறவிகளின் காவி உடைக்கு பதிலாக வெள்ளை உடையை அணிந்து தன் உடலை மறைத்துக் கொண்டார்….நீதிபதி அரிபரந்தாமன்
    *(apj)*

  • உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை!

    வள்ளலார் முடிபாக
    சொன்னது இது தான். — ஏபிஜெ அருள்.

    22/10/1873 ல் வள்ளலார் சொன்னது;
    “உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.”
    30/01/1874ல் சொன்னது;
    ” இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த)சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.
    நிற்க! ஆக
    வள்ளலார் சொல்ல வந்ததை
    தெரிந்து கொள்ளாதவர்களாக (முயற்சிக்காதவர்களாக) இருந்தோம்.
    இந்நிலையில் வள்ளலார் மீண்டும் நம்மிடம் கீழ்வருமாறு சொல்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
    அது;
    சித்திவளாகத்தில் உள்ளிருந்த விளக்கை திருமாளிகைப் புறத்தில் வைத்து,
    “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்த கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்றப் படியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய பாடலிற் கண்டபடி தெய்வ பாவணையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.’”
    அன்பர்களே!
    வள்ளலார் சொல்ல வந்த உண்மை,
    சுத்த சன்மார்க்க நெறி, கடவுள் அருள்
    எல்லாம் இந்த “நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பாசுரப் பாடல்களில் தான் உள்ளது என்பதை சத்தியமாக இன்று அறிந்து உணர்வோம்.
    எவர்க்கெல்லாம் வள்ளலார் சொல்ல வந்த உண்மை, உண்மை கடவுளின் நிலை, பேரின்ப பெருவாழ்வு பற்றி தெரிந்து கொள்ள “ஆசை” உள்ளவர்கள் இன்றே 28 பாசுரப்பாடல்களை வாசிப்போம் பாடுவோம் கடவுள் அருளை பெறுவோம்.
    அன்புடன்:
    ஏபிஜெ அருள்.
    28 பாசுரப்பாடல்களுக்கு (ஞான சரியை என்ற தலைப்பில் ஆறாம் திருமுறையில்)
    http://www.atruegod.org/vallalar/ இதை கிளிக் செய்து காண்க

  • வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?

    வள்ளலார் வருவிக்க உற்றவரா? தெய்வமா? அல்லது நம்மை போல் மனிதரா?.— apjarul.
    அன்பரின் கேள்வி:-
    அன்பர் சரத் கேட்ட கேள்வி; வள்ளலார் ஆண்டவரால் வருவிக்கவுற்றவர். அதனால் அவருக்கே சாகாநிலை சாத்தியம். இதற்கு
    விளக்கம் தருக என்றார்.??
    விசாரம் செய்வோம் வள்ளலார் துணையுடன்..::: (ஏபிஜெ):

    பலர் இங்ஙனமாகவே கேட்கிறார்கள். வள்ளலார் தெய்வமா? ஆண்டவரால் வருவிக்க உற்றவரா? அல்லது நம்மை போல் மனிதரா?.
    (எங்கும் பரிபூரணமாக விளங்கும் ஒரே மெய் பொருளே உள்ளது என்று கருத்தில் கொண்டவர்களுக்கு இந்த விளக்கம் தேவையில்லை). வள்ளலார்
    பிறவிகளால் ஆன்ம பக்குவமும்,பிறந்த குடும்பத்தால் சைவ சமயம் தழுவலும் கொண்டவர் வள்ளலார். ஒரு பதார்த்தின் சுவை அறியாதவர், தன்னை தெய்வமாக பார்க்கிறார் என்கிறார் வள்ளலார். பின் அவர் ஆண்டவரால் வருவிக்கவுற்றவரா? என்றால் ஆம்.
    தான் ஆண்டவரால் வருவிக்கவுற்றனன் என்று வள்ளலாரே தெரிவிக்கிறார். ஆனால் அதன் அர்த்தம் சரியாக புரிதல் வேண்டும்.
    காண்போம் இங்கு.
    ஆரம்பத்தில் அவரிடமிருந்த அளவிலா கடவுள் பக்தி அவர் குடும்பம் சார்ந்த சைவ சமயத்தில் மிக்கப்பற்றுக் கொண்டவராக்கியது.
    சைவ சமயம் மட்டுமில்லாமல் எல்லா சமயமத மார்க்கங்களின் நெறிகளைத் தெரிந்து, அதனதன் உண்மையையும் கண்டார்கள். ஆனால் அவரிடமிருந்த தேடலுக்கு இவை எவையும் விடை தரவில்லை. அதனால் தான், அவர் சைவ சமயத்தில் பற்று இருக்கும் காலத்தில் கூட அதன் ஆசாரங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை. வெண்ணிற ஆடையை தான் உடுத்திருந்தார்கள். எந்தொரு மாலையுமோ அணிந்திருக்கவில்லை,
    பூசைகள் செய்யவில்லை.அவர் தேடல் தொடர்ந்தது. தேடல் எதை குறித்து?இயற்கையின் உண்மமை குறித்து மற்றும் மரணம் என்ற அவத்தை நீக்கி இன்பமாக வாழ வழியை தேடி தேடல். அவரின் தேடலுக்கு சுதந்திரம் அவர் பற்றுக்கொண்டியிருந்த சமயக் கொள்கை இடம் தரவில்லை. தான் சுதந்திரமாக தேடலை தொடர, தான் சார்ந்த சமயத்தை கைவிட்டு விட்டார்கள். வள்ளலாரின் தேடல் போல், பல ஞானிகள், தலைவர்கள் தேடினாலும் அவர்கள் தங்களின் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களை மீற முடியவில்லை. கட்டுப்பட்டார்கள். வள்ளலாரை போல் யாரும்
    முன் வரவில்லை. சமயப்பற்றை விட்டப்பிறகு வள்ளலாரின் விசாரணை சுதந்திரமாக தொடர்ந்தது. இடைவிடாத விசாரம் கண்ணீர் வழிபாடு, இதன் பயன், சத்திய அறிவை பெற்றார்கள். எங்கும் நீக்கமற நிறைந்து விளங்கும் ஓன்றெனும் ஓன்றாகி அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை உள்ளே பெற்று உண்மை கடவுளின் நிலை கண்டார்கள். முழு உண்மை வெளிப்பட்டது. இந்த முயற்சி வள்ளலாரின் அறிவால் (ஆசையால்) ஏற்பட்ட ஒன்று. கடவுள் அருளால் சாகா கல்வி கற்றார்.மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள்.

    உண்மை கடவுளை கண்ட வள்ளலார், ஆண்டவரிடம் ஒன்றை வேண்டினார். அஃது;
    ‘என்னைப்போல் எல்லோரும் பேரின்ப பெருவாழ்வு பெற வேண்டும்‘ .

    வள்ளலாரின் வேண்டுதலில் பொது நோக்கமும் உயிர்களிடத்தில் அவர் கொண்ட உண்மை அன்பும் வெளிப்பட்டது. தன் கருணையை போல் வள்ளலார் பெற்றிருப்பதை கடவுள் கண்டார். இதுவே பரிபூரணம். அதனால், கடவுள் தன் நிலையில் அவரை வைத்து எல்லாமே அருளினார். உண்மை இன்பம் பெற்றாலும் தன் வேண்டுதலை தனி வெளியில் உள்ள இறைவனிடம் மீண்டும் வைத்தார்; என் போல் இவ்வுலகத்தார்கள் இன்பம் பெறுதல் வேண்டும் என்றார்.

    உன் ஆசை நிறைவேற்ற நீயே இருப்பாய்.நீயே செல்வாய். இந்த வரத்தை அதாவது, தான் வந்த வழியை உள்ளது உள்ளபடியாக உலகத்தார்களிடம் உரைக்க, ஆண்டவரிடத்தில் அனுமதி பெற்று, தனி வெளியிலிருந்து மீண்டும் இங்கு நம்மிடம் வந்ததையே “”வருவிக்கவுற்றது”” ஆகும்.
    2 1/2 வருடகாலம் அவர் சென்ற வழி (மார்க்கம்) குறித்து நம்மிடமிருந்து சொல்லிவந்தார்கள்.
    ஆனால் நமக்கு ….??
    ஆம், அன்று தெரிந்து கொள்வாரில்லை.
    அதனால் 30/1/17 , அருளால் தான் பெற்றிருந்த சுத்த தேகத்தில் மீண்டும் தனி வெளியில் வெளிப்பட்டார்கள். அன்பர்களே!
    எவர் ஒருவர்;
    ‘அய்யா நீங்கள் சொன்ன உண்மையை தெரிந்து கொண்டேன். உங்கள் துணையால் அறிய ஆசை எனச் சொல்வேர்களானால், வள்ளலார் அய்யா நேரில் வந்து நம் பயிற்சிக்கு உதவிடுவார்.
    இது சத்தியம். இதுவே உண்மை . நம்புவோம். அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த நாள். நல்லநாளில்
    நல்ல விசாரணை தொடரட்டும்.
    ஊதூது சங்கே…

    —அன்புடன் ஏபிஜெ அருள்.மதுரை.

  • வள்ளலாரின் ‘மகா பேருபதேசம்’

    அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    22-10-1873 அன்று வடலூர் சித்திவளாகத்தில் நமது வள்ளலார், தான் கண்ட சுத்த சன்மார்க்கத்திற்கு கொடி கட்டி, ஒரு மகா பேருபதேசம் ஆற்றினார்கள்.
    அந்நாளில் நாமும் ஒரு தடவை மீண்டும் வாசிப்போம். கண்டிப்பாக இந்த உபதேசத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
    நண்பர்கள்,
    உறவினர்கள்,
    நம்முடன் பணி புரிபவர்கள்,
    எல்லோருக்கும் share செய்யுங்கள்.
    வள்ளலார் 19 ம் நூற்றாண்டில் வெளிப்படுத்திய புதிய தனி
    நெறி உலகத்தார் அறியட்டும்.
    கீழே லிங் தரப்பட்டுள்ளது.
    கிளிக் செய்து வாசிப்போம்.
    (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.) நன்றி,அன்புடன் ஏபிஜெ அருள்.
    http://www.atruegod.org/2017/01/22/பேருபதேசம்-தமிழ்-great-sermon-english

  • சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம்

    இது தானே சரி!!?? ஏபிஜெ அருள்.

    (இது சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம். பொது கட்டுரை அல்ல.)
    நம்மவர்களே!
    ஜப்பசி 7 நன்னாள்.கொடி நாள். இந்நாளில் ஓர் உண்மையறிவோம்.

    திருஅகவல், திருவருட்பா, உபதேச குறிப்புகள் உட்பட அனைத்திலும் உள்ள உண்மை ஆண்டவரின் நிலை, சொரூபத்தை,அக்கடவுளின் தயவை தனது தூய உள்ளத்தால் உள்ளே அகத்தில் அறிந்து அனுபவிக்கிறார் வள்ளலார். அங்ஙனம் கண்ட இயற்கை உண்மை இயற்கை விளக்கத்தை எழுத்தால், பாடலால் பதிவு செய்து உள்ளார் வள்ளலார். வள்ளலார் பெற்ற இந்த அனுபவ உண்மையை அவர்தம் நூல்களை படிப்பதினால் நாம் தெரிந்துக் கொள்ளலாமே அன்றி அறியவோ அனுபவிக்கவோ முடியாது.
    இராமலிங்க அடிகளார் மேற்படி உண்மை கடவுளின் நிலை காண தன்னை எப்படி உரியவர் ஆக்கி கொண்டாரோ, அதே போல் எவர் ஒருவர் தன்னை உரியவராக்கி கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே அக அனுபவம் பெற முடியும். அப்படி எனில்; வள்ளலார் பின் ஏன் ?, தான் கண்ட அக அனுபவத்தை நூல்களில் பதிவாக்கி உள்ளார்?
    அவைக்கு ஒருவாறு காரணம் இரண்டு..
    1) நம்மவர்கள் உண்மை அன்பால் விசாரம் செய்யும் போது, நாம் செய்யும் விசாரத்தை விரைவாக எடுத்து செல்வதற்கும்,செல்லும் பாதையை உறுதி படுத்திக்கொள்ளும் விதமாக நமக்கு கிடைத்த ஓர் துணையே என்றும்,
    2) புறத்தில் மற்ற மார்க்க நெறிகளுக்கு ஈடாக, பதில் கொடுக்கும் விதமாக பதியப்பட்ட சாட்சியாகிய ஓர் புற ஆவணமே அவை.மற்றபடி, இம்மார்க்கத்தில் அக அனுபவமே என்கிறார் வள்ளலார்.
    நம் நிலை என்ன? நம்மை அனுஷ்டிக்கும் தெய்வத்தின் நிலை என்ன? என்ற விசாரத்தை நாம் ஒவ்வொருமே செய்தே ஆக வேண்டும்.இடைவிடாது இரக்கம்/கண்ணீர் விட்டு நன்முயற்சியில் உள்ளழுந்தி சிந்தித்து சிந்தித்தலை விசாரித்தல் வேண்டும் என்கிறார். நம்
    அக அனுபவத்திலே தான் வள்ளலார் கண்ட உண்மைகளான கொடி, ஆன்மா,இறை சொரூபம்,சாகா கல்வி , மரணமில்லா பெருவாழ்வு இவை அனைத்தும் இறை தயவாலே அறியவைக்கப்பட்டு அனுபவமாகுகிறது. தான் பெற்ற அனுபவத்தை நீங்கள் அனைவரும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை இது சத்தியம் என்கிறார். உண்மை அன்பால், உண்மை அறிவால், சுத்த சன்மார்க்கத்தை மட்டுமே சார்ந்து வருபவர்களுக்கு இறை உண்மை அவர்களின் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும் என்ற உண்மையை தான் வள்ளலார் சொல்கிறார்கள்.
    இந்த உண்மை கடவுள் தயவால், நமக்கு சாகா கல்வி அக்கடவுளாலே உரைக்கப்படுகிறது. சாகாகல்வி கற்று நம் தேகத்திற்கு ஏற்படுகின்ற மரணத்தை தவிர்த்து இத்தேகத்தை அழியா தேகமான ஒளி தேகமாக்கி கொள்ளலாம் என்கிறார் வள்ளலார்.
    ஆக,
    நாபி முதல் புருவமத்தியின் உட்புறத்தில் தொங்கும் ஓர் சவ்வை வள்ளலார் போல் நாம் காண அக அனுபவம் பெற வேண்டும்.
    நாமாகிய சிற்றணுவின் உண்மை அறிய சுத்த சன்மார்க்கம் மட்டுமே சார்ந்து ஒழுக்கம் நிரப்பி கொள்ள வேண்டும்.
    ஆன்மாவை,இறை ஒளி அறிந்து அனுபவித்தவர்கள் என்றால் ஒளிதேகம் பெற்றவர்கள் என்று பொருள்.
    மற்றவர்கள் அனைவருமே துன்பம்,பயம்,மூப்பு,பிணி முதலிய அவத்தைகளை பெற்றவர்கள், பெற்றுக்கொண்டிருப்பவர்கள், பெறப்போகிறவர்களே.
    இவர்கள் மரணம் அடைவார்கள்.
    எனவே தான் வள்ளலார் சொன்ன அனுபவ உண்மைகளை அங்ஙனமே நம்மை வாசிக்கும்படி கட்டளையிட்டார் வள்ளலார். எனவே, வள்ளலார் சொன்ன உண்மையை (உரைநடை,பாடல்,அகவல், விண்ணப்பம் முதலியவை) நாம் வாசிக்க அல்லது மற்றவர்கள் வாசிக்க சொல்லி கேட்க கூடுமே அன்றி வள்ளலார் வெளிப்படுத்திய எவைக்கும் விளக்கத்தை நாம் கொடுக்கவே முடியாது. அல்லது விளக்கி மற்றவர்கள் சொல்வதை கேட்பதில் அல்லது எழுதியதை நாம் படிப்பதில் எல்லாம் (வியர்த்தம் = பலனின்மை) பலனின்மை என்கிறார் வள்ளலார்.
    அன்பர்களே! இது தானே சரி!!??.
    இதுவே சத்தியம். இதுவே நான் கண்ட வழி என்கிறார் வள்ளலார். இதை அறியாமையிலும் வல்லபதன்மையிலும் மாற்றவோ திரித்து கூறவோ எவருக்கும் உரிமை இல்லை.
    அன்பர்களே! இது தானே சரி!?
    வள்ளலார் பெயரில் அவர்தம் மார்க்கத்தை சார்ந்தவர் என்ற வகையில் இத்தகைய செயலில் ஈடுபடுவது மிக பெரிய பாவச்செயலே மேலும் இத்தகையவர்கள் வந்ததை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
    அன்பர்களே! இது தானே சரி!?
    அக அனுபவம் பெறாதவர்கள் (அவத்தைகளை தவிர்த்துக் கொள்ளாதவர்கள்) வள்ளலாரின் ஆவணங்களில் உள்ளவற்றை அப்படியே வாசிக்க வேண்டுமே அன்றி, விளக்கமோ விளக்கி சொற்பொழிவு செய்பவர்களால் மேல் விளைவை உண்டு பண்ணும். அவர்களும் வந்ததை வாங்கி கட்டி கொள்வார்கள்.
    அன்பர்களே!
    இது தானே சரி!?
    இதுவே சத்தியமாகும்.

    அன்புடன் ஏபிஜெ அருள்,கருணை சபை. நன்றி.வணக்கம்.

  • உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் (வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் )

    தோழர்களே!,
    உலகில் ஒரு புதிய தனி மார்க்கம் கடந்த 19 ம் நூற்றாண்டில் தோன்றியதை உலகிற்கு இன்றே அறிவியுங்கள் – ஏபிஜெ அருள்.

    # அந்த மார்க்கத்தை தோற்றிவித்தவர் : “திருவருட்பிரகாச வள்ளலார்.”

    # அம்மார்க்கத்தின் பெயர்:
    “சுத்த சன்மார்க்கம்”

    # மார்க்கத்தின் கொடி :
    வெண்மை வர்ணம் மற்றும் மஞ்சள் வர்ணம்.

    # மார்க்கத்தின் சங்கம்:
    சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.
    மார்க்கத்தின் சபை:
    சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை.

    # மார்க்கத்தின் சாலை:
    சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை.

    # மார்க்கத்தின் மகாமந்திரம்:
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

    # மார்க்கத்தின் மரபுகள்:
    நான்கு.அவையாவன;
    1.சாகாத கல்வியே கல்வி.
    2.ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு.
    3.மலம் ஜந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்.
    4. வேகாத காலாதி கண்டு எப்பொருளும் விளையவிளைவித்த தொழிலே மெய்த் தொழில் ஆகும்.

    # மார்க்கத்தின் எக்காலத்தும் முக்கியத் தடைகள்:
    சாதி சமயம் மத மார்க்கங்கள்.

    # மார்க்கத்தின் சாதனம்:
    கருணை ஒன்றே.

    # மார்க்கத்தின் வழிபாடு:
    ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல்.

    # மார்க்கத்தாரின் தகுதிகள்:
    சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமகுரோதம் முதலியவை நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் இம்மார்க்கத்திற்கு உரியவர்கள்.

    # சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்:
    ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை.

    # சுத்தசன்மார்க்கத்தார் கடமை:
    உணமை கடவுளை தொழுவதே.

    # சுத்த சன்மார்க்கத்தார்கள் ஒழித்துக் கொள்ள வேண்டியது:
    சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.

    # சுத்த சன்மார்க்கத்தின் ஆசாரம்:
    பொது நோக்கம்.

    # சுத்த சன்மார்க்கத்தில் பயிற்சி:
    விசாரத்தில் இருப்பது.
    உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரித்தல்.
    நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீரால் உடல் நனைந்து இறைநிலையை உள்ளத்தில் காணுதல்.அக அனுபவமே உண்மை.

    # சுத்த சன்மார்க்கத்தின் முடிபு:
    சாகாகல்வி

    # சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் அருள்:
    மரணமில்லா பெருவாழ்வு.

    # சுத்த சன்மார்க்க உண்மை கடவுளை உலகிற்கு வெளிப்படுத்திய நாள்:
    12-04-1871.

    # சுத்த சன்மார்க்கத்தால் வள்ளலார் பெற்ற தேகம்.
    தனி வடிவமாகிய ஒளி தேகம்.

    (மேற்படி வாசகங்கள் வள்ளலாரின் சத்திய வாக்கியங்கள்.உள்ளது உள்ளபடி)
    அன்பர்களே! நான் கண்ட சுத்த சன்மார்க்கம் எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்கும் என்கிறார் வள்ளலார்.
    இந்த இனிய நாளில் நமக்கு தெரிய வந்த இந்த புதிய தனி பொது நெறியை நம் சுற்றதார்களுக்கு தெரிவிப்பதே நம் லட்சியம் ஆகும். — அன்புடன்: ஏபிஜெ அருள், மதுரை,கருணை சபை.
    அன்பர்களே! ஓர் வேண்டுகோள் :
    நீங்கள் எந்த (சமய) பிரிவை சேர்ந்தவர் எனக்கேட்டால், “சுத்த சன்மார்க்கம்” எனச் சொல்லுங்கள். சட்ட ரீதியாக இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நல்ல செய்தி வருவது சத்தியம். வள்ளலாரின் உண்மை பொது நெறி
    சுத்த சன்மார்க்கம் வெளிப்படும் தருணம் இதுவே.

    நன்றி:apjarul.

  • திருவருண் மெய்ம்மொழி

    திருவருண் மெய்ம்மொழி 
    ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும்
    அருட்பிரகாசத்
     தந்தையார் திருவருண் மெய்ம்மொழி

    உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:

    இயற்கையிற்றானே விளங்குகின்றவராய் உள்ளவரென்றும், இயற்கையிற்றானே உள்ளவராய் விளங்குகின்றவரென்றும், இரண்டு படாத பூரண இன்பமானவ ரென்றும், எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லாப் பதங்களையும், எல்லாச் சத்திகளையும், எல்லாச் சத்தர்களையும், எல்லாக் கலைகளையும், எல்லாப் பொருள்களையும், எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும், எல்லா உயிர்களையும், எல்லாச் செயல்களையும், எல்லா இச்சைகளையும், எல்லா ஞானங்களையும், எல்லாப் பயன்களையும், எல்லா அனுபவங்களையும், மற்றை எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல், வாழ்வித்தல், குற்றம் நீக்குவித்தல், பக்குவம் வருவித்தல், விளக்கஞ் செய்வித்தல் என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங் கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவரென்றும், எல்லாம் ஆனவரென்றும், ஒன்றும் அல்லாதவ ரென்றும், சர்வ காருண்ய ரென்றும், சர்வவல்லபரென்றும், எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே, அகம், புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்தமெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில், அறிவா ரறியும் வண்ணங்களெல்லாமாகி விளங்குகின்றார்.

    அவ்வாறு விளங்குகின்ற ஒருவரேயாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல், பலவேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும் பலவேறு மதங்களிலும் பலவேறு மார்க்கங்களிலும் பலவேறு லக்ஷியங்களைக் கொண்டு, நெடுங்காலம் பிறந்து பிறந்து, அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவு மின்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்திலழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்; வீண்போகின்றோம்.

    ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு, உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுபகுணங்களைப் பெற்று, நற்செய்கை உடையவர்களாய், எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும் பெருங்களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு – மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையைச் சித்திவளாகம்என்னும் இச்சந்நிதானத்திற் கடுத்த உத்தரஞானசிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து, “இக்காலந்தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்தருளித் திருவிளையாடல் செய்தருள்கின்றோம்” என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினுஞ் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணையங் கடலாராகிய அருமைத் தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்தப்பட வெளிப்படுத்தி, அருட் பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித் தருளி, அரிய அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்லசித்தத் திருக்கோலங்கொண்டு, அருளர சாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளு நிமித்தம், ஈரேழு பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள் யாவரும் ஒருங்கே, இஃது என்னை! இஃது என்னை! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாயிருத்தலினால் – அங்ஙனம் வெளிப்படுந் திருவரவுபற்றி எதிர்பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லவரும் மேற்குறித்த அசிந்திய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்திற்றானே, சுத்தசன்மார்க்க அரும்புருஷார்த்தங்களின் பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம், பிரணவ தேகம், ஞானதேகம் என்னும் சாகாக்கலானுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும், கடவுள் ஒருவரே என்றறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி, ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பசித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்தசன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்குரிய உண்மை ஒழுக்கங்களில் நாமெல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியமாகலில், அவ்வொழுக்கங்கள் இவை என உணரவேண்டுவது.

    சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.

    அவற்றுள் இந்திரிய ஒழுக்கம் என்பது – நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும்ஞானேந்திரிய ஒழுக்கமும்; இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் – என்றால் – சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.

    கரண ஒழுக்கம் என்பது – சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.

    ஜீவ ஒழுக்கம் என்பது – எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.

    ஆன்ம ஒழுக்கம் என்பது – எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.

    இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும். அன்றியும்-

    இவ் வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று, இடந் தனித்திருத்தல், இச்சையின்றி நுகர்தல், தெய்வம் பராவல், பிறவுயிர்க்கிரங்கல், பெருங்குணம் பற்றல், பாடிப்பணிதல், பத்தி செய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிப்பழகி இருத்தல் வேண்டும். அன்றியும்-

    சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர்கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவசித்தி விகற்ப பேதங்களென்றும், அவ்வச் சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக் கற்பனைக் கலைகளென்றும், வேதாந்தம் சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்கானுபவ லேசசித்தி பேதங்க ளென்றும் கேள்விப்பட்டிருக்கின்றனம். ஆகலின், அத் திருவார்த்தைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டு, அவ்வவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப்பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி, அவ்வச் சமய மதாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாது நிற்றலும், அவற்றில் சத்தியவுணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும். அன்றியும்-

    உலகியற்கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், பொதுப்பட நல்லறிவு, கடவுள் பத்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று, உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலியவாகக் குறித்த நற்செய்கைகளையும் உள்ளபடி பெற்று,சித்திவளாகம் என்னும் இம்மஹா சந்நிதானத்திற்றானே தரிக்கப்பெறவும்; உலகமுகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்; நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய், எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித் தருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம்புனைதல் முதலிய திருப்பணியினிடம் நமது கரணேந்திரியங்களை விடுத்துக் குதூகலத்துடன் விந்துவிளக்கம் நாதஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்; ஆண்டவனாரது அருளற்புத ஞானசித்தத் திருமேனியின் மங்கலத் திருக்கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங்குளிர ஆனந்தக் கண்­ர்கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெறும் பெரும் புண்ணிய முடையவர்களாய் எதிர்படவாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்:

    நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமையுடையவர்களாகி, அறிவுவந்தகால முதல் கண்டறியாத அற்புதக் காட்சிகளையும், கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும், அறிந்தறியாத அற்புத அறிவுகளையும், அடைந்தறியாத அற்புதக் குணங்களையும், செய்தறியாத அற்புதச் செயல்களையும், அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும் – வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தி னுள்ளே – பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

    இது சத்தியம், இது சத்தியம், இது சத்தியம்.
    இங்ஙனம் நமது ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலையிலக்கான பொய்யாப் பெருமொழி யென்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த மந்திரத் திருவருண் மெய்ம்மொழிகளின் சுருக்கம். 
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
     
    திருச்சிற்றம்பலம்

    திருவருண் மெய்ம்மொழி முற்றிற்று

  • வள்ளலார் இராமலிங்க அடிகள் – “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

    தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

    திருச்சிற்றம்பலம்

    தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடைத்து. த், ம், ழ்: ஜடசித் கலை. அ, இ: சித்கலை
    அ அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.

    இ பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்கரமாம்.

    பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக் குரை:

    த் ஏழாவது மெய்;

    ம் பத்தாவதாகும்;

    ழ் 15-வது இயற்கை உண்மைச் சிறப்பியல் அக்கரமாம்.

    ஐந் தலகுநிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புபக்ஷத்தாரால் அனாதியாய் – சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் – கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை யென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை:-
    த் – அ:- தத்வரூபாதி சிவபோகாந்தமான தசகாரிய இயற்கை உண்மைக் கட்டளை நிலையில், முன் அலகு நிலைப்பொருள் கூறியவிடத்துக் குறித்த ஏழாவது நிலையாகிய த் என்பது சிவரூப இயற்கையுண்மைக் கட்டளையாம். அ – அகண்டாகார சித்கலா ரூப ஓங்காரத் துட்பொருட் பிரதம விலக்கிய வியக்தி அக்கரம். பன்னீருயிர் நிலையிற்றலையாய முதலக்கர மாதலில், அதுவே பிரமாதி பரசிவாந்த நவநிலைக்கும் அனாதியாதி காரணமாயுள்ள இயற்கையுண்மைப் பரிபூரணப் பொருளிலக்காம். என்னவே, சிவரூபமாகும் தகராகாசத்தில் சுத்த சிவமாகும் அருட்ஜோதியிணைந்துள்ள பூரணானந்த ஸ்வரூப பரபதி வியக்தமாயிற்று.
    ம் :– சங்கார ப்ரணவமாகிய மகாரம் முக்தான்மாக்களுக்கு ஒளிவண்ணச் சதானந்தமாயும் பெத்தான்மாக்களுக்கு இருள் வண்ணமலரூபமாயும் இருந்து கற்பாந்தப் பிரளய முடிவின் சிருஷ்டி திதியாதிகளில் சிதான்ம சக்தியாகிய ஜீவனுக்கு அதிகரணமாகவும், முற்குறித்த பத்தாவது நிலயமாகிய ஆன்மாதாரமாகியும் உள்ளதெனப் பொருளாம்.

    – பன்னீருயிர்நிலைகளில் மூன்றாம் நிலை உயிராகிய இகாரம் திரிகலா ஆன்மவருக்கத்தில் அபரமாகிய சகலாகலரையும் பரமாகிய பிரளயாகலரையும் கீழ்ப்படுத்தி அவ்விரு கூட்டத்தாருக்கும் மேற்பட்டு நின்ற சுத்த விஞ்ஞானகலராகிய சிதாத்மாக்களைச் சுட்டுகின்றதாம். என்னவே, ஆதார ஆதேயக் கூட்டுறவால் என்றுந் தோன்றி விளங்கும் சிதான்ம வருக்கங்கள் பரபதி லக்ஷியமாகிய பூரணானந்தத்திற்கு அனுபவிகளாக உரியவர்களெனக் குறிக்கொள்ளல் வேண்டும்.
    ழ்:– இந்தச் சிறப்பியல் அக்கரம் பதினெண் மெய்களில் பக்ஷமுடிபின் எண் குறிப்பில் நின்று, சிவயோக பூமியாகிய பரதகண்டத்தில் பௌராணிக தத்துவத்தாற் குறிக்கப்பட்ட ஐம்பத்தாறு தேசங்களுள் சுதேசந்தவிர மற்ற ஐம்பத்தைந்து தேச பாஷைகளிலும் இல்லாததாயும், பதினெண்ணிலமாகக் குறிக்கப்பட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் இருமைக்கும் ஒற்றுமை யுரிமையாயும், முத்துறைத் தமிழுக்குள் முதன்மைத் துறையானதும் இருக்கு யஜுர் சாமம் என்னும் சமஸ்கிருத வேதாத்திரயப் பொருள் அனுபவத்தை எளிதில் கற்றுணர்ந்து தெளிந்து அனுபவித்ததற்குப் பரமேசுரனது திருவருளைப் பஞ்சாக்ஷர முத்தொழிற் காரியமான பஞ்சதசாக்கரியால் பிரத்தியக்ஷானுபவம் சித்திக்கச் செய்யும் நிலயமானதும், ஸ்ரீமாணிக்கவாசகர், சம்பந்தர், நாவரையர், சுந்தரர், திருமூலர் முதலிய மகாபுருஷர்களால் சாத்திர தோத்திரங்களாக அருளிச்செய்யப்பட் டிருக்கும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் என்னும் பரமார்த்த ரகசியங்களை உடையதும், பலநாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து சகபாடிகளோடு சூழ்ந்து சுர ஒலிபேதங்களைத் தேர்ந்து உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ’யம், வியாக்கியானம், டீக்கா, டூக்கா, டிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேட வேண்டியதாயும், அவ்வவைகளையும் தேடிக் கைவரினும் அக்கருவிகளால் போதகம் பெறவேண்டியதற்குப் பாஷ’யகாரர்கள் வியாக்கியானகர்த்தர்கள் டீக்காவல்லபர்கள் டூக்காசூசகர்கள் முதலிய போதக உபபோதக ஆசாரியர்கள் கிட்டுவது அருமையில் அருமையாயும் இருக்கிற ஆரியம் மகாராட்டிரம் ஆந்திரம் என்ற பற்பல பாஷைகளைப் போலாகாமல், பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னுஞ் சந்தி அதிசுலபமாயும், எழுதவும் கவிசெய்யவும் மிக நேர்மையாயும், அக்ஷர ஆரவாரம் சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்கார மின்றி எப்பாஷையின் சந்தசுகளையும் தன் பாஷையுள் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தற்பாஷைக்கே அமைவுற்ற ழ், ற், ன் என்னும் முடிநடு அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தைச் சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமைச் சிறப்பியல் ஒலியாம்.
    உரை கூறிப்போந்த சுத்தசித்தாந்த ஆரிடரீதி முப்பதவுரைப் பொழிப்பு:- மருளியற்கை மலஇருளைப் பரிபாகசத்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலாசத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.
    இதன் கருத்து யாதெனில்:- தமிழ்ப்பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்.

    திருச்சிற்றம்பலம்

     

     

  • “சிவம்” என்பது பொது சொல்

    “சிவம்” என்பது பொது சொல்– ஏபிஜெ அருள்.

    ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும். நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம், சூரியன்,சந்திரன் மற்றும் மலை போன்ற சொற்கள் எங்ஙனம் உலகத்தார் அனைவரும் பொதுவார்த்தையாக எடுத்துக்கொள்வது போல ‘சிவம்’ என்ற சொல்லும் பொது வார்த்தை அதுவும் மெய் வார்த்தை.

    நிற்க! சிவம் என்றால் என்ன?
    தமிழ் அகராதி படி;
    நன்மை, முடிபான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது.
    ஆக,
    இங்ஙனம் பொதுப் (இயற்கையாய் உள்ள) பொருளை தரும் ‘சிவம்’ இன்று ஒரு குறிப்பிட்ட சமய சொல்லாக பார்க்கப் படுகிறது. சிவன், சிவலிங்கம், பரமசிவம், சிவபிரான் இவை உலக மாபெரும் சமயமான சைவசமய கடவுளரை குறிக்கும். சிவபுராணம்,சிவலோகம்,சிவசாதனம்,
    சிவாகமம்,சிவராத்திரி இவை அச்சமயம் சார்ந்தவை. ஆனால் ‘சிவம்’ என்றால்; எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி எனப்படும். 
    ஆக,
    சிவம் என்பது; 
    இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள் ஆகும்.

    ஆனால் இன்று ‘சிவம்’ என்றால் சைவ சமய கடவுளாகிய சிவபெருமானை அல்லது சிவலிங்கத்தை குறிக்கப்படுகிறது என்று எண்ணி மற்ற சமயமத மார்க்கத்தார்கள் சிவம் சொல்லை உச்சரிக்க முன் வருவதில்லை.
    ” சாதியும் மதமும் சமயமும் பொய் ‘என்கிற வள்ளலார், இயற்கையே கடவுளாக கண்டு அதை ‘சிவம்’என்றே அழைக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பொது கடவுளாகிய இயற்கை ஆண்டவரை ‘சிவபதி’ என்று வள்ளலார் அழைக்கும் போது, எங்கே மனிதர்கள் சைவ சமயக் கடவுளை நினைந்து விடக்கூடாது என்பதற்காக ‘சுத்த சிவம்’ என குறிப்பிட்டு சொல்வதை காணலாம்.
    நிற்க!
    சூரியன் என்றால் பொது வார்த்தை. பொது கோளம். இங்கு சூரியனை கடவுளாக வழிபடுபவர்களும் உண்டு. அங்ஙனம் அவர்கள் வழிபடுவதால் ‘சூரியன்’ அவர்களுக்கு மட்டுமே என்றா மற்றவர்கள் இருக்கிறார்கள்? 
    பஞ்சபூதம் என்பது எல்லோருக்கும் உரியது. இதை இயற்கையில் அமைந்ததாக எல்லோரும் பார்ப்பது போல் ‘சிவம்’ என்பது இயற்கையில் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும் ‘ஒரு பொது நன்மை’ என்றோ அல்லது இயற்கையில் எங்கும் நிறைந்து விளங்கும் சுயம் சொரூபமாகிய ஒரே மெய் பொருளாகிய பிரகாசம் (ஒளி) என இனி கருத்தில் கொள்வோம்.
    இந்த (பொது) ‘சிவம்’ உருவமா, அருவமா,உருஅருவமா என்று வரையறுத்து வெளிப்பட்டுள்ள ஒரு பொருள் அன்று.
    இதை,
    இயற்கை உண்மையாகவும் 
    இயற்கை விளக்கமாகவும் 
    இயற்கை இன்பமாகவும் 
    விளங்கும் ஒரு மெய் பொருள்.
    இதன் உண்மை ‘அக அனுபவத்திலே’ மட்டும் என்கின்றனர் அறிஞர்கள்.
    எல்லாம் வல்ல இயற்கையே!
    எல்லாம் வல்ல ஆண்டவரே!
    இப்படியாக மேற்படி அழைப்பதை பொதுவாக பார்க்கிறமோ அது போல்
    எல்லாம் வல்ல சிவபதியே! 
    என்பதையும் பொதுவாக காண்போம்.
    சிவமாகிய இயற்கையை போற்றுவோம்.
    சிவ சொரூபம் உள்ளத்தில் உணருவோம்.
    மெய் சிவ அருள் ஒளி பெறுவோம்.
    கடவுளின் உண்மை உரைக்கும் சுத்த சன்மார்க்கம் சார்ந்து கடவுள் உண்மை நிலை குறித்து நல்ல விசாரணை செய்வோம். — நன்றி ஏபிஜெ அருள்.
    ‘சிவம்’ என்பது இயற்கை உண்மை,
    ‘சிவம்’ என்பது இயற்கை விளக்கம்,
    ‘சிவம்’ என்பது இயற்கை இன்பம்,
    ஆகிய எல்லா அண்டங்களுக்கும், எல்லா உலகங்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும், எல்லா பொருள்களுக்கும் ஒளி வழங்கி நன்மை பயக்கும் ஒரு மெய்பொருள் எனத் தெரிந்துக் கொண்டோம்.
    ‘சிவம்’ என்பது பொது சொல் என்ற உண்மையை எல்லோரும் தெரிந்திட பகருங்கள். தமிழ் மொழி உண்மை உரைக்கும் மொழி. கடவுளின் உண்மை தெரிந்திட அமைந்த இயற்கை பொது மொழி. தமிழ் பொது வார்த்தை ‘சிவம்’. இச்சிவ உண்மை (இயற்கை) மனிதன் அறிந்து சாதிமதசமய வேறுபாடில்லாமல் இன்பமாக வாழ்வது சத்தியமே.

    — அன்புடன் ஏபிஜெ அருள்.