Category: Uncategorized

  • உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
    மாண்புமிகு திரு து.அரிபரந்தாமன் அவர்கள்

    மதுரை கருணை சபை-சாலை நடத்திய முப்பெரும் விழாவில்
    ஆற்றிய உரையில் முக்கிய சிலப்பகுதிகள்:

    அனைவருக்கும் வணக்கம்.
    எல்லோரும் பேசினார்கள் வள்ளலாரை போற்றியும்,
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார்கள்.
    நான் அப்படி இல்லை. ஆனால் வள்ளலாரை நீங்கள் ஒரு கோணத்தில் பார்க்கிறீங்க. நான் ஒரு கோணத்தில் பார்க்கிறேன். நீங்கள் எந்தளவுக்கு வள்ளலாரை நேசிக்கிறீர்களோ அதுக்கு குறைவாக நேசிக்கவில்லை. உங்கள் அளவுக்கு படிக்காவிட்டாலும் ஒரளவு வள்ளலாரை பற்றி தெரிந்துள்ளேன்.
    சுவாமிகள் என்று தன்னை அழைப்பதை வள்ளலார் எடுக்கச் சொன்னார்கள். தான் ஒரு ஆசாமி என்கிறார். வேலாயுத முதலியார் போன்றோர் வள்ளலாரிடம் மன்றாடி பாடல்களை பெற்று தான் வெளியிட்டார்கள். அவரை சாமியாக்கினால் அவர் மார்க்கம் மதமாகி விடும். நான் அவரை தமிழ் தேசியத்தின் ஒர் அடையாளம் என்கிறேன். சாதி சமயங்களை தூக்கி எறிய வேண்டும். பெண்கள் கணவரை இழந்தால் தாலி அறுக்க வேண்டாம். (அப்படியென்றால் தாலி போடவும் தேவையில்லை என்று பொருள். போட்டாலும் அறுக்க தேவையில்லை.) இங்ஙனமாக 19ம் நூற்றாண்டில் ஒலித்த ஒரு கலக குரலே வள்ளலார் குரல். அது புரட்சி குரல். மன்னிக்க வேண்டும். நான் ஒரு நாத்திகன். அதானால் வள்ளலாரை ஒரு புரட்சிக்காராகப் பார்க்கின்றேன்.
    நீங்கள் இந்த 21ம் நூற்றாண்டில் பார்க்காதீர்கள். 19ம் நூற்றாண்டை பாருங்கள். அந்த நூற்றாண்டில் சாதியை, சமயங்களை, மதங்களை, ஆச்சாரங்களை, வேதத்தை, புராணத்தை, இதிகாசத்தை,மூடப்பழக்கங்களை மறுத்து, ஓங்கி ஒலித்த முதல் குரல் வள்ளலாரின் குரல். இந்தியாவில் ஒலித்த முதல் குரலும் வள்ளலார் குரலே. அடுத்ததாக சொல்ல வேண்டுமானால் கேரளத்தில் நாராயணகுரு. அவர், மனிதனே,உனக்கு மனிதன் தான் சாதி; மனிதனே மதம்; மனிதன் தான் கடவுள்; என்றார்.
    வள்ளலாரின் ஆறாம்திருமுறை பாடல்களை தந்தை பெரியார் குடியரசில் பல முறை பதித்து வந்துள்ளார். அக்காலத்தில் மதமும் அரசும் பிண்ணி பிணைந்து கிடந்தது. மன்னர், ராஜாக்கள் மக்களிடையே பெயர் வாங்கிருக்கலாம். ஆனால் அரசு ஏதாவது ஒரு மதம் சார்ந்திருந்தது. சாதியை சாடியதில் வள்ளலாரை போல் யாரும் இல்லை. சாதிகள் குறித்து சமய, மதங்களில் தான் எழுதப்பட்டுள்ளது. சங்க காலத்தை விட 19 ம் நூற்றாண்டில் சாதி இறுகிப் போயிருந்தது. மடங்களில் மட்டுமே கல்வி இருந்தது. எல்லோரும் போய் படிக்க முடியாது. அங்கு சமய நூல்கள் தான் கற்றுக் கொடுக்கப்பட்டது. சங்க இலக்கியங்களோ, திருக்குறளோ, சிலப்பதிகாரமோ, சொல்லிக் கொடுக்கப்படவில்லை. இது குறித்து வ.உ.சாமிநாத அய்யர் அவர்கள்(ஆனந்த விகடனில் வந்தது) எழுதிய சரித்திரத்தில் காணலாம். சேலம் இராமசாமி சாமி நாத அய்யரிடம் பேசும் போது இவை குறித்து காணலாம்.
    இந்த நேரத்தில் வள்ளலார் திருக்குறள் போதித்தார் என்பது சிறப்பு. அன்பு, அருள், கருணை, வாய்மை, புலால் உண்ணாமை, கொல்லாமை, இவைகள் வழிக்காட்டுதலாக உள்ளது. மற்றொரு பிரச்சனையும் 19 நூற்றாண்டில் இருந்தது. வடமொழியின் ஆதிக்கம். வடமொழியின்றி தமிழ் மொழி இயங்காது என்று சிலரால் சொன்ன நேரம். அந்த நேரத்தில் வள்ளலார் தமிழ் மொழி தனித்து இயங்கும் என்கிறார். அவரின் தமிழ் பற்றுக்கு தலை வணங்க வேண்டும். சங்கராச்சாரியாரும் வள்ளலாரும் சந்தித்ததாக சொல்கிற போது, சங்கராச்சாரியார், வடமொழி தான் அனைத்து மொழிக்கும் மாத்ரூ பாஸை (தாய் மொழி) என்கிறார். அதற்கு அதை எதிர்க்காமல் அமைதியாக வள்ளலார் சங்கராச்சாரியாரிடம் வடமொழி மாத்ரூ (தாய்) மொழியென்றால், தமிழ் மொழி பித்ரு பாஸை அதாவது தந்தை மொழி என்று பதில் கொடுத்தார்.
    19 நூற்றாண்டில் கோயிலுக்குள் எல்லோரும் போய் விடமுடியாது. சாதியும் சமயமும் அதுவும் சாதியினால் பல பாதிப்புகள் இருந்தது.ஆனால், அவர் கட்டிய ஞான சபையிலே, தர்ம சாலையிலே, சித்தி வளாகத்திலே எந்த சாதியினரும், எம்மதத்தவரும், எச்சமயத்தவரும் எல்லோரும் வந்து தரிசிக்கலாம் பிரார்த்தனை செய்யலாம். இந்த செய்கையினால் தான் வள்ளலாரை நோக்கி என்னை தள்ளியது. ஞானசபையினுள் சாதி சமய வேறுபாடில்லாமல் கருணை அன்பு இரக்கம் உடையவர்கள், புலால் உண்ணாதவர்கள் எல்லோரும் வரலாம் என உள்ளது. ஆனால் அந்த கண்டிஸன் கூட இல்லாமல், தர்ம சாலைக்கு பசித்த எவரும் வரலாம் என்று உள்ளது. என்னை பாதித்த பாடல்கள் எவை எனச் சொல்ல முற்பட்டால் நேரம் காணாது. சாதி, சமயம், சாத்திரங்கள் தவிர்த்து கடவுளை கருணை, தயவு, இரக்கத்தால் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவரின் சமரச சுத்த சன்மார்க்கம் 1874 க்கு சில ஆண்டுகள் முன்பிலிருந்து தான். அதற்கு முன் அவர் பழுத்த சைவ சமயம். அந்த சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு பாடியது மேலும் பல ஸதலங்களுக்கு சென்று பாடிய சமய ஸ்தோத்திரப் பாடல்கள் தான் 1 முதல் 5 திருமுறையில் அதிகம் உண்டு. இதற்கு வள்ளலார் சொல்கிறார் அதன் பால் சைவ சமயத்தின் பால் நான் கொண்ட அளவில்லா அன்புகளுக்கு எனது ஸ்தோத்திரங்களே சாட்சியாக இருக்கும். அப்போது நான் சிற்றறிவாக இருந்தேன் என்கிறார். அவைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்.
    ஒருமையுடன் என்ற பாட்டை நான் பாடுவேன். அதில் கடைசி வரியை விட்டுவிடுவேன். எத்திராஜ் கல்லூரியில் இது தான் கடவுள் வழிபாடாக உள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர் மீது எனக்கு கோபம் கிடையாது. கருணை, அன்பு, உண்மை பேசுதல் வேண்டும், இரக்கம் வேண்டும் என்கிறார்கள். இன்று மாட்டை கொல்ல கூடாது என்கிறார்கள். மாட்டை மட்டும் ஏன் கொல்லக் கூடாது என்கிறார்கள்?. வள்ளலார் எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்கிறார்.
    நான் பேசும் இந்த இடம் ஒரு மகானின் ஆலயம் என்றார்கள். செருப்பு போட்டு மேலே ஏறக்கூடாது என்ற பலகையில் உள்ளதைக் கண்டு கழற்றி விட்டு தான் ஏறினேன். வள்ளலாரை சைவ நெறியில் அடக்கி விட்டார்கள். அவருக்கு பட்டை போட்டு விட்டார்கள். பட்டை போடக் கூடாது என்று சொல்லவில்லை. என் அப்பா கடைசி வரை பட்டை போட்டிருந்தார்கள். ஆனால் வள்ளலார் சைவ சமயத்தை விட்டு விட்டார்கள். அதணால் தான் அவருக்கு பட்டை போடாதீர்கள் என்கிறேன். வள்ளலார் மேலும் சொல்றதை கேட்டா புரியும். காதிலே, மூக்கிலே கம்மலுக்காக ஓட்டை போடும் சடங்கு கடவுளுக்கு சரியென்றால் மற்ற ஓட்டைகளை போட்டு அனுப்பினதை போல் இதற்கும் ஓட்டை போட்டியிருக்க மாட்டாரா? என்கிறார் வள்ளலார். சாதி, சமய சாத்திரங்களை மறுத்தவருக்கு விக்கிரக வழிபாட்டை முடியாது என்று சொன்னவருக்கு என்ன எல்லாம் நடந்து வந்தது?. இங்கு இருக்கும் ஏபிஜெ அருள் மற்றும் அவர் அன்பர்கள் வழக்கிட்டு மீட்டார்கள். நல்ல காலம் அருள் மற்றும் நீங்கள் சொன்னதை, வள்ளலாரின் நெறியை, இணை ஆணையர் புரிந்துக்கொண்டு ஆணையிட்டார். அதை திரு பிச்சாண்டி உறுதிபடுத்தி அதன்பின்பு நீதிபதி திரு சந்துரு தனது தீர்ப்பில் உறுதி படுத்தினார். அதணால் தான் சொல்கிறேன்.வள்ளலாரை மீண்டும் சைவ சமய சிறைக்குள் அனுப்பி விடாதீர்கள்.
    நீங்கள் வள்ளலாரின் கொள்கையை தொடர்ந்து பேசுங்கள்
    எனக் கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். வணக்கம்.

     

  • வள்ளலார் உடைத்த பூட்டு – ஏபிஜெ அருள்

    No automatic alt text available.

    இனி எத்தனைக் காலம் தான் கடவுளை நாம் ஏமாற்றப் போகிறோம்?-

    ஆம்- பணம் தேடுதல், வேலைப் பழு, பந்த பாசம், தீராத இச்சை, சுகப்போகம், சடங்கு ஆச்சாரங்கள் மூலம் கடவுள் வழிபாடு, முதலிய இவையில் தான் நாம் விழுந்து கிடைக்கிறோம்-

    கடவுள் பக்தி அதிகம்  உள்ளவர்களாக தோற்றத்தில் காட்டுகிறோம்-

    உண்டியலில் ஒரு பெரிய தொகையை போட்டுவிட்டு திருப்தியடைகிறோம்-
    ஏதேனும் ஒன்றை வேண்டிக்கொண்டு காணிக்கை செய்து முடித்து விடுகிறோம்-

    இங்ஙனமாகவே நம் வழிபாடும்- நாம் கொண்டியிருக்கும் நெறியும் உள்ளது-

    இதுவா நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு-
    இதுவா உண்மை அறிவு?

    இதோ வள்ளலார் சொல்கிறார்கள் ;
    இது போல் இனி இராதீர்கள்- காலத்தை வீணில் கழிக்காமல் – நம் நம்முடைய நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கும் கடவுளின் நிலை என்ன? என விசாரம் செய்யுங்கள்- என்கிறார் வள்ளலார்-

    ஆம் அன்பர்களே!
    இன்றைய வேகமான சூழ்நிலையில் ஏனோ தானமாக இனி கடவுளை வழிபாடு செய்யாமலும்,கடமை முடிந்தது என எந்தொரு சடங்கு சம்பிராதயம் செய்யாமல், உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்வோம்-

    பெண்ணை நேரில் பார்த்து கல்யாணம் செய்த நாம்;
    நிலத்தை நேரில் சென்று பார்த்து பத்திரம் பண்ணிய நாம்;
    கொடுத்த பணத்தை எண்ணி பார்த்து வாங்கும் நாம்;
    சுவையை தேடிப்பார்த்து உணவு சாப்பிடும் நாம்;

    கடவுளை மட்டும் நேரில் காண ஆசை இல்லாமல் போனது ஏன்????
    இங்ஙனம் ஆசையில்லாமல் இருக்கும் நம்மிடம் உள்ள பக்தி எப்படி பட்டது? கடவுளை காண வழி வகுக்காத மார்க்கம் என்ன மார்க்கம்?

    இதோ வள்ளலார் அழைக்கிறார்-

    “கடவுள் நிலைக் காண ஆசை உண்டேல் வம்மீன்” – என்கிறார்-

    சுத்த சன்மார்க்கம் சார்ந்து உண்மை கடவுள் நிலை காண்போம்-
    இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் என்கிறார்-

    வள்ளலார் மார்க்கத்தில் ஒவ்வொருவரும் கடவுள் நிலை காணுதல் வேண்டும் என உள்ளது- அக அனுபவமே உண்மை என்கிறது –

    கடவுள் நித்திய வஸ்து என்றால் கடவுளிடத்தில் கடவுளால் தோன்றிய நாம் ஏன் அழிய வேண்டும்? எனச் சிந்தனை வள்ளலாரிடத்தில் மட்டுமே தோன்றிற்று-
    அதன் அடிப்படையிலேயே தொடர்ந்து விசாரித்தார்கள்-
    ஆனால்—-
    உண்மை கடவுள் குறித்த அவரின் விசாரணைக்கு தான் வைத்திருந்த சமய நெறிப்பற்றும் ஆச்சார கட்டுப்பாடுகளும் தடையாக உள்ளன எனக் கண்டார்கள்-
    ஆம் அன்பர்களே! எந்தொரு மார்க்கத்திலும் அதன் கடவுளை தாண்டியோ, சடங்குகளை விட்டோ செல்ல/ சிந்திக்க உரிமையுள்ளதா?

    இந்நிலையிலேயே நம் வள்ளலார் சமயப் பற்றை கைவிட்டார்கள்-
    சடங்கு, ஆச்சாரங்களை விட்டொழித்தார்கள்- இவை கை விட்ட உடன் எந்தொரு கட்டுப்பாடும் வள்ளலாருக்கு இல்லை- உள் அழுந்துவதற்கும், சிந்திப்பதற்கும், சிந்தித்ததை விசாரிப்பதற்கும் தடை ஏதும் ஏற்படவில்லை-

    சமயத்தில் இருந்தால் இவரே கடவுள் என கருத்தில் ஏற்றியே சிந்திப்போம்-
    நமக்குள் ஏற்படும் ஒளியில் சிந்தித்ததே தோன்றும்- ஆனால் அந்த சிற்றொளியை கண்டு பல் இளித்து இறுமாந்து இருந்து விடாதீர்கள் என்கிறார் வள்ளலார்
    – நமக்கு தோன்றிய சிற்றொளி உண்மை கடவுளின் திருவுருவம் அல்ல-

    உண்மை கடவுள் திருவுருவம் காண வள்ளலார் கீழ்வருமாறு வழிபாடு செய்ய சொல்கிறார்கள்;

    “ ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்யின் —” என்கிறார்கள்-

    “கடவுளே! நீங்கள் இருக்கிறீர்கள் என்று எனது மனித அறிவும், பிறவி தோறும் பெற்ற அனுபவமும் உணர்த்துகிறது- நம்பிக்கை என்னிடம் ஏற்பட்டுள்ளது – ஆனால் உங்களை என் அறிவில் அனுபவத்தில் பார்க்க வேண்டும் என்ற வேண்டுதலே உண்மை அறிவு ஆகும்- அப்படித்தானே?
    அன்பர்களே! என்றாவது நாம் சென்று வணங்கும் கோயிலுக்கு சென்று, இன்று நான் என் தெய்வத்தை கண்டு பேசாமல் வரப்போவதில்லை என்று இருந்தோமா? அல்லது ஆசை நமக்கு ஏற்பட்டதா? அந்தளவில் தான் நமக்கு கடவுளையும், சிந்திக்க விடாமல் சடங்குகளையும் செய்ய வைத்து விட்டார்கள்-

    இதோ வள்ளலார் சொல்லுகிறார்கள்;
    “கடவுளின் உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன் – அவன் மறைத்தை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை- அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை- இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை-”
    மேலும் கூறுகையில்;
    சமயங்களிலும், புராணங்களிலும் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்” என்கிறார்-

    வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்தார்-
    கடவுளின் உண்மை கண்டு உலகிற்கு வெளிப்படுத்தினார் வள்ளலார்-
    இங்கு சாதியில்லை – சமய,மத, வேறுபாடில்லை – சடங்குகள் இல்லை –

    அன்பர்களே! உண்மை அன்புடன் அழைக்கின்றேன்!
    வாருங்கள் சுத்த சன்மார்க்கம் சாருங்கள்!

    நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம்- ஏபிஜெ அருள்

  • சாகாகல்வி என்றால்,,,???

    Image may contain: 1 person

    சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி- என்கிறார் வள்ளலார் 

    நிற்க!
    இது உண்மையா ? இது சாத்தியமா ? என்று ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும் மேற்படியாக சொன்ன ஒரே மார்க்கம் வள்ளலாரின் மார்க்கமே

    சாகா கல்வியை இறைவனே உரைத்தார் என்றும், அப்பயனை தான் பெற்றதாக சொல்லுகிறார் வள்ளலார்- மேலும் எல்லோரும் பெறுவதாகவும் உள்ளது என்கிறார்கள்- இந்த உண்மையை ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் தெரிவித்தேன் என்கிறார்கள்-
    மேலும் வள்ளலார் கூறுகையில்; தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிக்கின்றது- அதை தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்- என்கிறார்கள்

    திருவள்ளுவர் எழுதியது திருக்குறள் என எல்லோரும் அறிவோம்-

    நிற்க! திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து பாடல்களில்;

    குறள் 3:
    “ நிலமிசை நீடுவாழ் வார் ”
    (குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்)

    குறள் 4:
    ”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல”
    இதில் இடும்பை என்பது துன்பங்கள் எனப்படும்- சமய சான்றோர்கள் துன்பம் என்றால் பிறவித் துன்பங்கள் என்பர்-
    ஆனால் துன்பங்களில் பெரிய துன்பம் மரணம் தானே! இறைவனின் அருள் பெற்றவர்க்கு மரணம் என்ற துன்பம் கிடையாது என திருவள்ளுவர் சொல்லியுள்ளார்கள் என ஏன் சொல்லக் கூடாது-

    குறள் 6:
    பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார்

    குறள் 8: ”அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது”
    இதில் “பிற ஆழி நீந்தல் = பிறவாகிய கடல்களை நீந்தல், அரிது

    குறள் 10:

    ”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”

    நிற்க!

    மேலே நாம் கண்ட குறள்களில்;
    “பிறவி கடல்” “ நீடுவாழ் வார்” “இடும்பை இல” என கண்டோம்-
    இதற்கு தக்க ஆசிரியர் மூலமாய் தெரிந்து கொள்ளலாம் என்ற வள்ளலாரின் வார்த்தை நினைவில் கொள்ள வேண்டும்-
    ஆனால்;
    ஆனால் திருவள்ளுவர் திருக்குறளை தவிர வேறு பல நூலையும் எழுதியுள்ளார்-
    திருவள்ளுவ நாயனார் திருக்குறள் தவிர அருளிய நூல்கள்;

    -ஞான வெட்டியான்
    -பஞ்ச ரத்தினம்
    – நவரத்தின சிந்தாமணி
    -கற்ப நூல் – குரு நூல் – சர நூல்
    -முப்பு (சூத்திர)

    இதில் ஞான வெட்டியான் – 1500 ல்;

    பாடல் 8 ;
    தசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்
    ஜெகதலத்தி லெனைப்பழித்த செய்திவாறும்
    அசைவதிருந் தாக்கையசை யாதவாறு
    மடி நடுவு முடிவான கற்ப வாறும்
    பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்
    பஞ்சபட்சி யஞ்சு நிலைத் திருந்த வாறும்
    இசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறு
    மிராஜயோ கத்தினருள் காப்புத் தானே-

    (மேற்படி பாடலில் அசைவதிருந் தாக்கையசை யாதவாறு என்பது;
    இந்தத் தேகத்தை அழியாமலிருத்தி வைக்கத் தக்க —- மார்க்கத்தை)

    அடுத்த பாடல் 9;

    யோகாதி யோக நிலைத் திருந்த பேர்க்கு
    முற்பன்மாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்
    வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்
    வெண்சாரை கரு நெல்லி விதித்த போக்கும்
    போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூ நீர்ப் போக்கும்
    பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும்
    ஆகாத மணிதர்களை யகற்றும் போக்கு
    மசடில்லா மாதுரச குளிகை காப்பாம்

    (இங்கு; சாவாப் போக்கும் வேகாத் தலை, போகாப்புனல், உள்ளது-
    வள்ளலார் சொல்வது; சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் இம்மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்று சொன்னதை நினைவில் கொள்க)

    அடுத்த பாடலில் 11;

    ”—-உயிருமுடல் நிலைத்திடவு பாயஞ் சொன்னாள்”

    ஆக; வள்ளலார் சொன்ன சாகாகல்வி ஏற்கனவே திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த “ ஞான் வெட்டியான்” ல் சொல்லப்பட்டுள்ளது-
    அதன் பின்பு சமய,மத,வேதங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள் இவையின் தோன்றலால், ஆதிக்கத்தால் மேற்படி ”சாகாகல்வி” மறைக்கப்பட்டு, பூட்டப்பட்டு விட்டிருந்தது-
    வள்ளலாரின் சத்திய அறிவால் இடைவிடாத கருணை முயற்சியின் பயனால் இறையருளால் அக்கல்வி வெளிப்பட்டுள்ளது- அக்கல்வியால் மரணத்தை வென்ற முதல் சுத்த ஞானியே நம் வள்ளலார்-
    அவர் பெற்ற பயனை நாமும் பெறலாம் எனச் சத்தியம் செய்து சொல்கிறார்கள்-
    நிற்க!
    ஆனால் வள்ளுவர்க்கும் வள்ளலாருக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சமயங்களில், மதங்களில் மார்க்கங்களில் கடவுள் அருளால் நீடுழி வாழலாம் என்றும், சாமாதியடைதல் முக்தியடைதல் மீண்டும் பிறவாதிருத்தல் இவையே கடவுள் அருள் என சொல்லப்பட்டுள்ளது-
    இங்ஙனமாக கொள்கையை கொண்ட சமயத்தில் மதத்தில் பற்று வைத்தால் பற்று வைத்தவர்களால் அச்சமய, மத கட்டுப்பாட்டை மீறி எப்படி சிந்திக்க முடியும்- மரணத்தை ஒத்துக்கொண்டவர்கள் எங்ஙனம் சாகாகல்வி குறித்து விசாரிப்பார்கள்? ஆச்சாரங்களை கைக்கொண்டவர்களிடத்தில் கருணை விருத்தியாகாது என்ற உண்மையையும் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்-

    எனவே, அன்பர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்-

    சரியோ, தப்போ,
    இயலுமோ, இயலாதோ,

    இங்ஙனம், அதாவது, சாகா கல்வியே வள்ளலார் மார்க்க நெறியாக சொல்லப்பட்டுள்ளது- சாகாகல்வி குறித்து பல பாடல்கள், உபதேசங்கள் வள்ளலார் செய்துள்ளார்கள்-
    தான் கொண்டியிருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை வள்ளலார் கண்டார்-
    அம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமயம் ,மதம், மார்க்கங்களை அறிவித்து உள்ளார் என்று சொல்வது தானே சரியாகும்- நியாயம் ஆகும்-
    இது தானே உண்மை-

    அன்பர்களே!

    வள்ளலார் சொல்கிறார்கள்;
    எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-

    நன்றி;
    உங்களுடன் நல்ல விசாரணை செய்ய
    அனுமதித்தற்கு நன்றிகள் பல-

    ஏபிஜெ அருள்- மதுரை

     
  • பொங்கல் விழா! இயற்கையை வணங்கும் விழா!! பொது விழா!!

    Image may contain: 1 person

    பொங்கல் விழா! இயற்கையை வணங்கும் விழா!! பொது விழா!!
    சாதி, சமயம், மதம், ஆச்சாரம் கடந்த ஒரு இன்பத்திருநாள்-
    இயற்கையே இறைவன்.
    இயற்கையே சுத்த சன்மார்க்கம். –ஏபிஜெ அருள்-

    வள்ளலார் மார்க்கத்தில் இயற்கை என்பதற்கு பொருள் என்ன எனப்பார்க்கும் போது, ” இயற்கை” ஒரு முக்கிய முதன்மை மெய் பொருளாக உள்ளது.
    ஆம் அன்பர்களே,
    இயற்கையே இறைவன்.
    இயற்கையே சுத்த சன்மார்க்கம்.
    ”இயற்கை உண்மையை” தான் நம் வள்ளலார் சாதி,சமயம்.மதம் கடந்து செய்த நல்ல விசாரணையில் தெரிந்துக் கொண்டார்கள். அவரின் சத்திய அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும். நன்முயற்சிக்கும் இறைவனால் போதிக்கப்பட்டதே சுத்த சன்மார்க்க மரபுகளும், சாகா கல்வியும் ஆகும்- ”இயற்கை உண்மை” நம்மிடம் அக அனுபவத்தில் வெளி ப்படுவாதாக உள்ளதே அன்றி நமக்கு வேறு ஒருவராலோ அல்லது எந்த ஒரு நூல் வாயிலாகவோ கற்பதாக இல்லை. உண்மை அறிய முதலில் நாம் ஒழுக்கம் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
    ”இயற்கை” யை வள்ளலார் விவரிக்கும் போது:
    இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம், இயற்கை அறிவு என்கிறார்.
    இங்கு, இயற்கை உண்மை என்றால் “ சத்திய திருவுருவம்”
    இயற்கை விளக்கம் என்றால் “சத்திய ஞானசபை’’
    இயற்கை இன்பம் என்றால் ‘” சத்திய திரு நடம்”
    ஆக, மொத்ததில் இயற்கையே, தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுள்! என்கிறார் வள்ளலார்.
    மேலும் பார்க்கையில்;
    இயற்கை உண்மை நிறைவாகியுள்ளதே ’’சுத்த சிவானுபவ வெளி”
    இயற்கை விளக்கம் நிறைவாகி விளங்குவது “அருட்பெருஞ்ஜோதி சொரூபம்”
    ஆக,
    இயற்கையே (உண்மையாகவும், விளக்கமாகவும்) எங்கும் பூரணராகி விளங்குகின்றது.
    இயற்கை நம் உண்மை ஆண்டவர்.
    இயற்கையே நம் வழி (சுத்த சன்மார்க்கம்)
    இயற்கையானது நாம் சாகாமல் இருப்பதே.
    இந்த மரணம் தவிர்த்த இந்த இன்பத்தை பெற நமக்கு குருவாக இருப்பதும் ”இயற்கையே”.

    அன்பர்களே, இப்பொழுது சொல்லுங்கள், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாக விளங்குகிறது தானே.
    ஆக, நாம் செய்ய வேண்டியது;
    எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும்………( நாம் நம்புதல் வேண்டும். இடைவிடாது நன்முயற்சியில் பயிலுதல் வேண்டும்.)
    அன்பர்களே, மேலே நாம் செய்த நல்ல விசாரணையும் கடவுள் அருளால் நம் அறிவில் உணர்ந்து செய்ய அருளப் பெற்றுள்ளோம்.
    தெரிந்துக்கொண்ட இந்த உண்மை, நம் சத்திய அறிவில் அறிந்து, நம் அனுபவத்தில் அனுபவிக்க அருள் செய்யுமாறு இயற்கை ஆண்டவரை துதிப்போம்.
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில்:
    இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கையின்பினரென்றும்,…..
    தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே!…..
    சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்தியப் பெரு விண்ணப்பத்தில்:
    இயற்கை யுண்மை நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ வெளியில், இயற்கை விளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி சொரூபராய், இயற்கை இன்ப நிறைவாகி யோங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக் கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பத்தில்:
    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கையின்ப மென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாகிய தனித் தலைமைக் கடவுளே!
    சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில்;
    உத்தர ஞானசித்திபுர மென்றும் உத்தர ஞான சிதம்பர மென்றும் திருவருளா லாக்கப்பட்ட ஆக்கச் சிறப்புப் பெயர்களும் பார்வதிபுரமென்றும் வடலூரென்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை விளக்க நிறைவாகியுள்ள ஓர் சுத்த சிவானுபவ திருவுருவைத் தரித்து, இயற்கையின்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீரது திருவருட் சமுகத்தில் யான் செய்து கொள்ளுகின்ற சமரசு சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்.
    சில சுத்த சன்மார்க்கப் பாடல்கள்;
    ”இயற்கையுண்மைத் தனிப்பதியே”..
    • இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச்
    சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே…
    • எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
    எல்லாஞ்செய் வல்லதாகி
    • இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
    இயற்கையே இன்பமாகி.
    • மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
    உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும் என்றும் உலவாத
    திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
    குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
    • இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
    எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
    எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
    • இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
    இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
    • இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்.
    முன்னாள்செய் புண்ணியம் யாதோ உலகம் முழுதும்என்பால்
    • இந்நாள் அடைந்தின்பம் எய்திட ஓங்கினன் எண்ணியவா
    றெந்நாளும் இவ்வுடம் பேஇற வாத இயற்கைபெற்றேன்
    என்னாசை அப்பனைக் கண்டுகொண் டேன்என் இதயத்திலே.
    என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
    • ஆதிஅந்தம் தோற்றாத அரும்பெருஞ்சோ தியனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
    ஓதிஎந்த வகையாலும் உணர்ந்துகொளற் கரிதாய்
    உள்ளபடி இயற்கையிலே உள்ளஒரு பொருளே
    ஊதியம்தந் தெனையாட்கொண் டுள்ளிடத்தும் புறத்தும்
    ஓவாமல் விளங்குகின்ற உடையவனே இந்தச்
    • சாதிஇந்த மதம்எனும்வாய்ச் சழக்கைஎலாம் தவிர்த்த
    சத்தியனே உண்கின்றேன்354 சத்தியத்தெள் ளமுதே.
    எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே
    இதுஅது எனஉரைப் பரிதாய்த்
    • தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்
    தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்
    பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்
    புத்தமு தருத்திஎன் உளத்தே
    அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த
    அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
    • இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
    அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
    இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே
    இயற்கைஉடம் பாகஅருள் இன்னமுதம் அளித்தென்
    புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும்
    பூரணமாம் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
    பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த
    பேதையர்போல் எனைநினையேல் பெரியதிருக் கதவம்
    திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே
    சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

    எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-

    ( இனிய நாளில் ஓரு நல்ல விசாரணை உங்களுடன் செய்தமைக்கு நன்றி.–.)

    ஏபிஜெ அருள்

  • நாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி – ஏபிஜெ அருள்

    நாம் (சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி நல்ல விசாரணை செய்துக் கொண்டியிருப்பவர்கள் மற்றும் தழுபவர்கள்) உடனே செய்ய வேண்டிய பணி ஏபிஜெ அருள்

     இவ்விசாரணை இம்மார்க்கத்திற்கு உரியவர்களுக்கான பகுதி: -மன்னிக்கவும்-

            திருவருட்பிரகாச வள்ளலார் தான் கண்ட மார்க்கத்திற்கு ஒரு சங்கத்தையும் நிறுவியுள்ளார்கள்

     அச்சங்கத்திற்குசமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம்என்று திருபெயர் வழங்கி உள்ளார்கள்இதை ஒரு அறிவிப்பு நாள் 18-07-1872 மூலம் அறிவித்து உள்ளார்கள்

    வள்ளலாரின் நிலையங்கள் அனைத்தும் இன்று மேதகு அரசு இந்து சமய அற நிலைய ஆட்சித்துறை கீழ் உள்ளது

    அந்நிலையில் மேற்படி சங்கமும் உயர்திரு நிலைய நிர்வாக அலுவலர் கீழ் செயல் பட்டு வருகிறதுஅச்சங்கத்தில் ஆண்டு, ஆயுள் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சந்தா வசூலிக்கப்பட்டு வருகிறது

    வள்ளலார் தன் மார்க்கத்துக்கு உரியவர்கள் யார்? என வியம்பு போது கீழ் வருமாறு சொல்லுகிறார்கள்:

       ”சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம், மதம், முதலிய் மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்-” என்கிறார் வள்ளலார் –

    ஆனால் மேற்படி சங்கத்தில் யார் பணம் கொடுத்தாலும் உறுப்பினர்களாக நிலையத்தார்கள் சேர்த்து விடுகிறார்கள்- இதணால் மேதகு நீதிமன்றத்தில் வழக்கிட்டு முறையிடப்பட்டதுவள்ளலாரின் சங்கத்தில் சேர்பவர்கள் சமயம், மதம், முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களாக, காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவர்களாக, கொலை புலை தவிர்த்தவர்களாக கருதப்படுவார்கள் என ரசீதில் பின் பக்கம் அச்சடித்தல் வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கையாகும்

     இது குறித்து விசாரிக்கும் படி, அரசுக்கு ஓர் உத்திரவினை மேதகு நீதிமன்றம் உத்திரவிட்டதுஅதன் அடிப்படையில் Asst Commissioner முன்பு நடைப்பெற்றது- பின்பு Join Commissioner க்கு மாற்றப்பட்டது – எந்த பதிலும் இந்நாள் வரை இல்லைஇன்னும் நிலுவையில் தான் உள்ளது

     நல்ல பதில் வரும் என காத்துள்ளோம்வர வேண்டும்

      நிற்க!

    வள்ளலாரால் ஆரம்பிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம் இன்றும் அரசால் நடத்தப்பட்டு வரப்படுகிறதுஆனால் இதில் என்ன முக்கிய விசயம் என்றால் அதில் மிக குறைவான உறுப்பினரகளே உள்ளனர்இந்நிலையில் சன்மார்க்க அன்பர்களிடம் வேண்டுவது யாதெனில்;

    1 – வள்ளற்பெருமான் ஆரம்பித்த இன்று மேதகு அரசு கீழ உள்ளசமரச சுத்த சன்மார்க்கச் சத்தியச் சங்கம்”(வடலூர்) ஒன்றே நம் சங்கம்

    2 – அச்சங்கத்தில் நம்மை உறுப்பினராக்கி கொள்ள வேண்டும்

    3 – வள்ளற்பெருமான் ஆரம்பித்த சங்கத்தின் பெயர் போன்று நாம் சங்கங்களை ஆரம்பித்தல் கூடாது

    4 –நாம் விரும்பும் வண்ணம் மற்ற பெயரில் ஆரம்பித்துக் கொண்டு நெறிப் பணிகளையும் ஜீவகாருண்ய பணிகளையும் செய்யலாம்

     இது எங்களது தாழ்மையான வேண்டுகோள்

     அரசு என்பது தூய்மையானது உண்மையானது பொதுவானது 

    அதன் கீழ் வள்ளலாரின் நிலையங்கள் செயல் படுகின்றன 

    அதில் எந்தொரு குறை இருந்தாலோ, அல்லது இன்னும் சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றாலோ  உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தீர்வு ஏற்படுத்திக் கொள்ளலாம்- அதற்கு அரசு சட்ட விதிகள் நமக்குள்ளது –

     இன்று நிலையம் இந்து சமய அற நிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ளது அதன் சட்ட உறுப்புகள் எல்லா நிலையங்களுக்கும், அவரவர் மார்க்க தனி கொள்கைக்கும் பாதுகாப்பாக உள்ளது என அறிதல் வேண்டும் மேலும் நமது இந்திய அரசு அமைப்பு சட்டம் எல்லாருடையச்ல் தனிப்பட்ட பழக்க வழக்கங்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும் 

    மேலும் எந்தொரு நிலையமும் அதன் ஸ்தாபகர் எழுதிய அடிப்படையிலேயே பராமரிககப்படும் வள்ளலார் எந்தொரு குறிப்பையும்/ scheme யையும் ஏற்படுத்தவில்லை

          வள்ளலார் அவர்கள் சாகா நிலைப் பெற்றவர் சுத்த தேகி அவரே என்றும் சபையையும் சாலையையும் நடத்துகிறார், நடத்துவார் என்பதில் நமக்கு ஏன் சந்தேகம்? மேதகு அரசின் சட்ட உறுப்புகள் மீது ஏன் நம்பிக்கையில்லை? 

        நிலைய நிர்வாகத்தை மேதகு 5 அறங்காவலர்களை அரசு நியமித்து சட்டப்படி நிர்வகித்து வருகிறது மேற்படி 5 அறங்காவலர்கள் சட்டப்படியே சுற்று வட்டாரத்திலிருந்தே நியமிக்கிறார்கள் இதில் சில கோரிக்கை வைத்து சட்டப்படி ஒரு வழக்கிட்டு அதன் அடிப்படையில் ஒரு நீண்ட விசாரணை திரு ஆணையர் அவர்களால் போன வருடம் நடைப்பெற்றதுஅதில் நமது கோரிக்கையானது;

    சட்டப்படி நியமிக்கப்படும் 5 பரம்பரை அல்லாத அறங்காவலர்களில் அனைவரும் கொலை புலை தவிர்த்தவர்களாகவும், மேலும் அதில் குறைந்தது மூன்று பேராவது எங்கள் மார்க்கத்தை சார்ந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்பதே !

    திரு ஆணையர் அவர்கள் தனது ஆணையின் முடிவில் அறங்காவலர்கள் நியமிக்கும் போது உங்கள் கோரிக்கை கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்கள்-

    திருவருட்பிரகாசர் வள்ளலார் மார்க்கம் உலகின் சமய மத மார்க்கங்களிலிருந்து மாறுப்பட்டு எல்லோருக்கும் ஓர் உண்மை பொது நெறியாக உள்ளதால், இந்நிலையம் எங்ஙனம் HR & CE கீழ் வரும் எனக்கருதக்கூடும்

    இந்து என்றால் எவர் ஒருவருவர் முஸ்ஸிலீம், கிறிஸ்து, பாரசீகர்,, யூதர், இல்லையோ மற்றவர்கள் அனைவருமே இந்து என அழைக்கப்படுவர்- இது தான் சட்டத்தின் பால் இந்துக்கு உள்ள அர்த்தம்  

          ஒரு வேளை இச்சட்டத்தின் (HR & CE) தலைப்பில் மாற்றம் வேண்டும் என்றாலும் மனு செய்வோம்- இந்து சமய அற நிலைய மற்றும் மார்க்கங்கள் ஆட்சித் துறை சட்டம்என கோரிக்கை வைத்து வேண்டலாம் வேண்டப்படும்  

         வள்ளலாரின் உயரிய தனி பொது சிந்தனைக்கு சிறப்பு அங்கீகாரம் அளித்து நிலையத்தை தனிப் பார்வையில் பராமரிக்க வேணுமாயும் மேதகு அரசிடம் கோரிக்கை வைத்தும் வேண்டலாம் வேண்டுவோம் – 

    எப்பெயரில் இருந்தாலும் அரசும், அரசு சட்டங்களும் நம் நிலையங்களுக்கு உயரிய சட்ட பாதுகாப்பு ஆகும் என்று அறிக!

    நிலையம் தொடர்ந்து சிறப்புடன் செயல்பட நிலையத்தார்களும், பார்வதிபுர மக்களுக்கும் தொண்டினையும், நன்றியையும் செய்வோமாக! 

     நிற்க! ஆனால் திருவருட்பிரகாச வள்ளலார் ஆரம்பித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் உறுப்பினராகாமல் நாம் சுத்த சன்மார்க்கத்தை சார்ந்திருப்பவர் என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்? அடுத்த முறை வடலூர் செல்லும் போது திரு நிலைய நிர்வாகியை சந்தித்து மேற்படி அச்சங்கத்தில் நம்மை சேர்த்து கொள்வது நமது பணியும் புண்ணியமும் என்று அறிக!

    மேற்படி சங்கத்தில், சுத்த சன்மார்க்கத்தை விரும்புவர்களையும், சாதி சமயம், மதம் சாராதவர்களையும் மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற உங்கள் பதிவை பதிவு செய்தும்,

     தாங்களும், “ நான் ——– (பெயர், ஊர்,விலாசம்) , திருவருட் பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர் என்றும், கொலை புலை தவிர்த்தவர் என்றும், சமய மத மார்க்கங்களில் முற்றும் பற்றற கைவிட்டவர் என்றும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவனும் ஆவேன் என்று  இதன் மூலம் உறுதியளிக்கிறேன்என்று எழுதி கொடுத்திட வேண்டுகிறேன் 

     நல்ல விசாரணையை தொடர்ந்து செய்வோம் 

    அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

    ஏபிஜெ அருள்

     

  • வள்ளலார் வரலாறு [Vallalar History]

    வள்ளலார்

    இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் பிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம்.

    “சமயத்தில் பற்று”

    வள்ளலாரின் குடும்பத்தார்கள் சைவ சமயத்தைத் தழுவி வந்தார்கள். அதனால் வள்ளலார் அச்சமயத்தின் மீது பற்றுக் கொண்டு வாழ்ந்து வளர்ந்து வந்தார்கள். இளம் வயதில் திரு இராமலிங்கம் (வள்ளலார்) அவர்கள் சென்னையில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயம் சென்று கவிகள் பாடி துதித்தார்கள். அக்கோயிலுக்கு “கந்த கோட்டம்” என பெயரிட்டு அழைத்தவர் வள்ளலார் இராமலிங்கம் அவர்களே. அன்பு, ஒழுக்கம், கருணை, இரக்கம் இவை குறித்து இவர் பாடிய பாடல்கள் மிக்க சிறப்புடையதாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    சமயக்கடவுளர்கள் குறித்து பாடல்கள் நிறைய பாடியுள்ளார்கள். புராணங்களை மிகத் தெளிவாகச் சொல்லி ஆற்றிய சொற்பொழிவுகள் ஏராளம். அங்ஙனமாக அவர்தம் இளம்பருவகாலங்கள் சமயத்தில் பற்றுடனும், ஒழுக்கங்களில் மேன்மையுடனும் கடந்தன.

    பன்முக ஞானம்:

       பன்முக ஞானம் பெற்ற திரு.இராமலிங்கம் பின்பு மக்களால் “வள்ளலார்” என்றழைக்கப்பட்டார்கள். அவர் நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகாசிரியர், போதகாசிரியர், ஞானாசிரியர் வியாக்கியானகர்த்தர், சித்த மருத்துவர், சீர்திருத்தவாதி, அருட்கவிஞர், அருள்ஞானி என்று அனைத்து திறமைகளையும் பெற்று தனிச்சிறப்புடன் முதன்மையாக விளங்கினார்கள்.

    நூல்கள்:  

                    மனுமுறைகண்ட வாசகம்

                    ஜீவகாருண்ய ஓழுக்கம்

    உரைநூல்கள்:

                    ஓழிவிலொடுக்கப் பாயிர விருத்தி உரை

                    தொண்ட மண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரை

    பதிப்புகள்:

                    மேற்படியான உரைநூல்கள் பதிப்பித்தார்கள்

                    மேலும் ‘சின்மயதீபிகையை’யும் பதிப்பித்தார்கள்

    வியாக்கியானங்கள்:

                    “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்.

                    “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

    சித்த மருத்துவம்:

                    மருத்துவ குணங்கள் குறித்த அட்டவணை.

                    தாமே பல மருந்துகளை செய்தது.

                    கடிதங்கள் வாயிலாக மருந்து குறிப்புகள்.

                    ரசவாதம் பொன் செய்வதில் வல்லப தன்மை.

    சீர்த்திருத்தங்கள்:

                    புருட(ஷ)ன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

                   மனைவி இறந்தால்   புருடன் வேறு கல்யாணம் செய்ய வேண்டாம்.

                    கர்ம காரியங்கள் ஓன்றும் செய்ய வேண்டாம்.

                    சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்களை விட்டு ஒழியுங்கள்.

    முதன்மையான செயல்கள்:

    • பொது மக்களுக்கு முதன் முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
    • முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர்.

    o    மும்மொழி (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) வகுப்பு நடத்தியவர்.

    o    தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

    o    19ம் நூற்றாண்டில் கடவுள் உண்மையறிய “ஒரு தனி மார்க்கத்தை ”           நிறுவியவர்.

    o    தன்மார்க்கத்திற்கென சங்கம், சபை, கொடி, நெறி, கட்டளைகள், தடைகள் ஆகியவை வகுத்தவர்.

    o    எந்தவொரு மார்க்கமும் வெளிப்படுத்திடாத “மரணமில்லா பெருவாழ்வு” என்ற பெரும்பயன் இறையருளால் பெறலாம் என வெளிப்படுத்தினார்கள்.

    o    இவர் கண்ட மார்க்கத்தின் கடவுள், இதுவரை சமய மத மார்க்கங்களில் வெளிப்படுத்திய கடவுகளில் ஒருவரல்ல என்கிறார்.

    வள்ளலாரின் முடிபான கொள்கையில்உண்மை பொது நெறி

    வள்ளலாரின் முடிபான கொள்கையானது அவர்தம் முந்தைய கொள்கைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. சமயத்தின் மீது வைத்திருந்த பற்றை கைவிட்டு விட்டு ஓரு புதிய வழியை கண்டு, அவ்வழிக்கு “சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உலகிற்கு வெளிப்படுத்தினார்கள்.

                    இளம்பருவத்தில் சமயப் பாடல்கள் பாடியதற்கு காரணம், தனக்கு அப்பொழுது கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார்.

                    சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் “ஒருவரே” என்பது அவர் கண்ட கடவுள் உண்மையாகும். தான் கண்ட கடவுள் உலகில் காணப்படும் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஐயபாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என திட்டவட்டமாக 12.04.1871ல் தன் அறிவிப்பின் மூலமாக உலகிற்கு அறிவித்துள்ளார்கள்.

    நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஓழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஓழுக்கங்களையும் பெற்று சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார். மேலும் அவர் வெளிப்படுத்தியது யாதெனில்;

    ‘கருணை’ என்ற ஓரே சாதனத்தால்

    மட்டுமே கடவுள் உண்மையறிந்து,

    இறையருள் பெற்று, பேரின்ப பெருவாழ்வாகிய

    மரணமில்லா பெருவாழ்வு கைகூடுவதாக உள்ளது.

    அக்கருணை விருத்திக்கு தடையாக

    சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்கள் உள்ளன.

    எனவே மேற்படி ஆசாரங்களை விட்டு ஓழித்து

    சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை

    வருவித்துக் கொள்ள வேண்டும்.

    இதுவே வள்ளலார் கண்ட தனிநெறி.

       மேலும்,  இந்த தனிநெறி எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார். வள்ளலாரின் ‘சுத்த சன்மார்க்கத்தை’ கீழ்வருமாறு சுருங்க கூறலாம்.

    1. சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஓருவரே. அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
    2. சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாகிய சமய மத மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்களிலும் வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசாரங்களிலும் மனம் பற்றக்கூடாது.
    3. கடவுள் நிலையறிவதற்கு “ஓழுக்கம்” நிரம்புதல் வேண்டும்.
    4. இடைவிடாது “கருணை” நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
    5. கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே. அக்கருணைக்கு ஓருமை வரவேண்டும்.
    6. ஒருமை என்பது தனது அறிவும், ஒழுக்கமும் ஒத்த ஆடத்தில் தானே தோன்றுவது.
    7. நம் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன் கூடியாவது, தனித் தனியாவது அல்லது தனியாவது ‘நல்ல விசாரணை’ செய்யுங்கள்.
    8. சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை
    9. சுத்தசன்மார்க்கத்தின் முடிபு “சாகா கல்வியை” தெரிவிப்பது அன்றி வேறு ஒன்றுமில்லை. (என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்).
    10. ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமையே சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்.

     இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து,அவரவர்களையும்உரிமையுடைவர்களாக்கி வாழ்வித்தலே வேண்டும். 

    சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரம்:

    அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

    முடிபான கொள்கையில் வெளிவந்த நூல்களும் நிறுவிய நிலையங்களும்

    நூல்கள்:

    1. திருஅகவல்
    2. திருஅட்டகம்
    3. சுத்தசன்மார்க்கப் பாடல்கள் (ஆறாம் திருமுறை என அழைக்கப்படுகிறது)
    4. சத்திய விண்ணப்பங்கள் நான்கு
    5. 12.4.1871ல் சுத்த சன்மார்க்க கடவுளை வெளிப்படுத்திய அறிவிப்பு
    6. அதன்பின்பு தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்புகள், கட்டளைகள்,

         விளம்பரம், விதிகள்.

    (மேற்படியான அனைத்தும் திரு அருட்பிரகாச வள்ளலாரால் கைப்பட எழுதியவைகள்.)

    மேலும், வள்ளலாரின் உபதேசங்களை அன்பர்களால் கேட்டு எழுதப் பெற்ற “உபதேசக் குறிப்புகள்”.  அதே போல் வள்ளலார் (1873ம் ஆண்டு) ஆற்றிய “மகாபேருபதேசம்” (மெய் அன்பரால் எழுதி வைக்கப்பட்டது.)

    நிலையங்கள்:

     “சத்திய ஞான சபை” (பார்வதிபுரம்)

    [Google map: https://goo.gl/maps/BXRkPjrDcvt],

      “சித்தி வளாகம்.” (மேட்டுக் குப்பம்)

    [Google map: https://goo.gl/maps/g22wrwhfWdJ2],

    “தனி ஒளி வடிவம்” பெற்ற திரு அறை. (மேட்டுக்குப்பம்)

     [Google map: https://goo.gl/maps/g22wrwhfWdJ2],

    வள்ளலாரின் முக்கிய சத்திய வாக்கியங்கள்:

                    தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். (உரைநடை பக்கம் 471)

                    பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் இனி விளங்கும் (அறிவிப்பு நாள் 12.04.1871)

                    இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்களெல்லாம் “சுத்தசன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்”.

                    (அறிவிப்பு நாள். கார்த்திகை மாதம் 1873) கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, வள்ளலார் சொன்னது:-

    “இதைத் தடைபடாது ஆராதியுங்கள். அந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், ‘நினைந்து நினைந்து’ என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய-பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.

                    சத்திய பெரு விண்ணப்பத்தில்:-

    “எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மை கடவுள் ‘ஓருவரே’ உள்ளார் என்றறிகின்ற மெய்யறிவை விளக்குவித் தருளினீர். வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்களென்றும் அவ்வச் சமயங்களிற் பலபட அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். அன்றியும் வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்களென்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்தருளினீர்.”

    சத்திய பெரு விண்ணப்பத்தில்;-

                    இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக்கண்ணே, இயற்கை உண்மை என்கிற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பமென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய் தனித் தலைமைக் கடவுளே!

                    சத்திய ஞான விண்ணப்பத்தில்:-

    தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.  அவையாவன:

    ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால் ஒழிய தயவு விருத்தியாகாது. மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

    (உபதேசக்குறிப்பில் பக்கம் 418) கடவுள் நிலையறிவது எப்படி எனில்;

    ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.

    (பக்கம் 438);      சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.

    சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜப் பழக்கமே சுத்தசன்மார்க்க பழக்கம்.

    30.01.1874ல் முடிபாக அறிவித்தது:-

    திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் வள்ளலார் அறிவித்தது; ”இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்தசன்மார்க்க ஒழுக்கம்             இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”. யாதெனில்;

    இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப்  பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தையதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை.”

    மேலும்;             “இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் அது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்”.வள்ளலார் அவர்கள் ஆரம்ப காலத்தில் சமயத்தில் பற்றுடன்    இருந்தார்கள். அதன்பின்பு அவையில் வைத்திருந்த லட்சியத்தை   கைவிட்டு விட்டு உண்மை பொது நெறியைக் கண்டார்கள் என்பதை   கருத்தில் கொள்ள வேண்டும்.

    வள்ளலாரின் முதல் நான்கு திருமுறையில் உள்ள சமய ஸ்தோத்திர பாடல்கள் மற்றும் அதன்பின்பு சமயத்திலேயே இருந்து வந்த திருவேலாயுத முதலியாரால் வெளியிடப்பட்ட ஐந்தாம் திருமறையில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களிலும் நாம் லட்சியம் வையாது, சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கத்தில் மட்டுமே இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும். வள்ளலார் கட்டளைப்படி, ஒழுக்கத்தில் ஒழுகி, உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரிக்க வேண்டும்.

    அருட்பெருஞ்ஜோதி                                                        அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங்கருணை                                              அருட்பெருஞ்ஜோதி

    — நன்றியுடன்: ஏபிஜெ அருள், கருணை சபை-சாலை, மதுரை, தமிழ் நாடு, இந்தியா apjarul1@gmail

    Karunai Sabai-Salai

    34, Poombuhar Nagar North Extn.,

    Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

    http://www.atruegod.org/wp-content/uploads/2016/11/உண்மை-இரக்கம்-_27-9-2015_.pdf

    http://www.atruegod.org/wp-content/uploads/2016/11/உலக-ஒருமைப்பாட்டுரிமை-தினம்-_27-9-2015_.pdf

  • “யோக மெய்ஞ்ஞானம்- சுத்த சன்மார்க்கத் தொழுகை ”

    ss-tholugai

     

    மிக விரைவில் திருமிகு ஏபிஜெ அருள் நடத்தும்
    “யோக மெய்ஞ்ஞானம்- சுத்த சன்மார்க்கத் தொழுகை ” திருவருளால் வெளிப்படவுள்ளது.
    தைப்பூச விழாவில் இந்த யோக மெய்ஞ்ஞானம்- சுத்த சன்மார்க்கத் தொழுகை வடலூரிலும் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
    வள்ளலார் வழியில் நடைப்பெறும் இந்த சுத்த சன்மார்க்க யோகத்தில் கலந்துக் கொள்ள விரும்பும் நம்மவர்கள் முன்கூட்டியே பதிவு செய்தல் வேண்டும். தக்க அறிவிப்பு விரைவில் வரும். மேற்படி யோகத்தில் கொலை புலை தவிர்த்தவர்களும், வள்ளலார் மார்க்க நெறியில் மட்டும் லட்சியம் வைத்துள்ள நம்மவர்களுக்கு மட்டுமே.
    மேலும் விபரங்களுக்கு செல்: 9442438423 & 9842818242

  • சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் யார்?

    திருஅருட்பிரகாச வள்ளலார் சித்திரை 1ல் எழுதியுள்ள மடல் மூலம் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். உலகத்தார்களுக்கு/நமக்கு சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் யார்? என்று தெளிவான முறையில் சொல்லியுள்ளார்கள். நல்ல விசாரணை செய்வோர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த இனிய நாளில் மீண்டும் ஒரு முறை வாசிப்போம்.
    ”சுத்தசிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லாம் உலகத்தும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன்மேலும் அதன்மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும், சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்த சன்மார்க்க பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இது 29 மாதத்திற்கு மேல்.
    இப்போது வருகிற நமது கடவுள் இங்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
    இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத்தேவர்களும், எல்லாக்கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனிப்தலைமைப் பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னை யடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெறுகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்”.
    பிரஜோற்பத்தி சித்திரை-1

    அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை
    சுத்த சன்மார்க்கப் பெருவாழ்வு வாழ்த்துக்கள்.
    இந்த இனிய நாளில் மீண்டும் ஒருமுறை சத்திய வாக்கியத்தில் உறுதிக்கொள்வோம்.

    1. சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும் கடவுள் உலகில் காணும் சமய,மதம் மார்க்கங்களில் வெளிப்படுத்தியுள்ள கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல.
    2. சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக இருப்பது சமயங்கள், மதங்கள். அச்சமய, மத, மார்க்கங்களின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் நம் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என விண்ணப்பிக்க வேண்டும்.
    3. சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது.
    4. சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது.
    5. சுத்த சன்மார்க்கத்திற்கு பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அ ந ந் நியம். அ ந் நியமல்ல. எல்லா சமய, மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது
    APJ ARUL. 9487417834 apjarul1@gmail.com

  • வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி.

    வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி. (உள்ளது உள்ளபடி – ஏபிஜெ அருள்)

    …..(சுத்த தேகத்தோடு) இந்த மாதிரியான இறவா நிலையே சாகாக் கல்வியின் உண்மையாயிருத்தலின் அதன் இலக்கணம், இலக்கியம், எல்லாம் நமது அருட்ஜோதியாகவே கண்டு கொள்ளப்படுகின்றாதாம். நமது ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி மயமானவர். அவரை அடைவதுவே நம்முடைய குறிக்கோள் அல்லது இலட்சியம். அந்தக் கடவுளரைச் சார்வதற்கு மெய்யருள் தானே மார்க்கமாயிருத்தலின் அப்பதியின் இலக்கணமாகவும் கருவியாகவும் அமைந்துள்ளது. அவ்வருளேயாகும். இது இதுவாய்த் தோற்றுகின்ற யாவும் அந்த அருட்ஜோதியின் பாலிருந்து வெளியுற்றிருப்பதாக இருக்கின்றதாகவும் குறிக்கப் படுகின்றது. இதற்கு மேல் அருட்பெரும்பதியை (சுத்த) சிவமே என்கின்றார்.
    இந்தச் சிவமோ, தொம்பதம் + தத்பதம் + அசிபதம் ஆக இருப்பது.
    நீ அதுவாய் இருக்கின்றாய் என உபதேசிக்கப்படுகின்றதே இதன் கருத்தாம். நீ என்பது சுத்த ஆன்மா;
    இதுவே சிவனது உண்மை வடிவம் ஆம்; அவனது அருள் ஒளியிற் பிறந்து விளங்குகின்ற தேகாதி பிரபஞ்சம். அசிபதப் பொருளாக உள்ளது. இவை மூன்றும் ஒன்று கூடி விளங்குமிடத்து தான் இன்பானுபவம் உண்டாவது சாத்தியம், ஆகையால் தான், தொம்பதமும், உடனுற்ற தற்பதமும், அசிபதச் சுகமும் ஒன்றானான் சிவமே என்றார். இவ்வின்புருவாம் சிவமென்னும் கடவுள் ஒருவர் தானே இவ்வகைத் திரி நிலை கொண்டு திகழ்கின்றதை இன்று திருவருளால் கண்டு பயன் அடைகின்றோம்.
    இவற்றைச் சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்றது.
    என்றாலும் அருள் உண்மை விளங்காத தாலே இம் மூன்றும் இணைந்தே முழுமை பெற்றுத் திகழும் இயல்பு ஏற்கப்படவில்லை.
    பாசம் விட வேண்டும் என்றும், பசு நிலை கெடவேண்டுமென்றும் அப்பொழுதுதான் பதி நிலை கூடும் என்றும் கொண்டு கூறி வாழ்வற்றுப் போக நேர்ந்த தாகும்.
    ஆனால் இப்பொழுது திருவருளாலே நம் அருட்பெருஞ்ஜோதி பதி வெளிப்பட்டு சுத்த சன்மார்க்கிக்குப் பூர்ணத் திருவருளை வழங்கி, பதி, பசு, பாசத்தையே ஞான தேகம், பிரவண தேகம், சுத்த தேகம் என்றும் திரிதேக சித்தி வடிவாக்கி அது கொண்டு பேரின்போடு விளங்கச் செய்து விடுகின்றார். இன்றைய சாகாக் கல்வியின் பயன் இதுவாகும்.
    நமது திருவருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்ஜோதிப் பொது நெறியை திறந்து விட்டார்.
    இந்நெறியில் உற்று உளம் நிறை அருளொடு ஒழுகினால், உண்மையை எல்லாம் உள்ளவாறு கண்டு உயர் பயன் பெறலாம். இவர் வழங்கியுள்ள அருட்பெரு நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல.
    மேலெழுந்த வாரியாகவும் குறுகிய நோக்கோடும், மதமார்க்கப் பற்று கொண்டும், இதனை அறிந்து அடையாது விலகிச் சென்றால் அது அறியாமையே. அன்றியும் ஆண்டவரின் ஆணைக்குச் செவி கொடுக்காது மறுத்துச் சென்று, துன்புற்று அழிவு படுகின்ற செயலே ஆகும். ஆகையால் இந்த அருட்பெருஞ்ஜோதி பதியின் உண்மையை யாவரும் கண்டு கொள்ளவே ஈண்டு இவ்வளவுக்குச் சொல்ல நேர்ந்ததாம்.

  • யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்?

    யாருடைய பசியை நீக்குதல் வேண்டும் என வள்ளலார் குறிப்பிடுகிறார்?
    யாருடைய பசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்ல?

    இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.

    ‘”…ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.”

    இதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து மற்ற சீவர்களுக்கு ஏற்படுகின்ற இந்த அவத்தையை (பசியை) நீக்குதல் நம் உரிமை மற்றும் அடிப்படை ஒழுக்கம் ஆகும்.
    இந்த பசி என்கிற அவத்தையானது பொதுவாக எல்லா சீவர்களுக்கும் உண்டாகும். ஆனால் யாருக்கு/ யாருடைய பசியை நீக்கினால் போதுமானது என விரிவாக பார்க்கும் போது; (பக்கம்123):
    1. ஏழைகள்
    2. பசியினால் பாழகும் உடம்புக்கு
    3. பசியினால் நிலைதடுமாறி அழியும் தருணத்தில் உள்ள குடும்பம்
    4. பசியினால் மயக்கம் அடைபவர்கள்
    5. பசியினால் வருந்தி, பசி நீக்க வழி தெரியாமல் தவிக்கும் மானமுள்ளவர்கள் மற்றும் விவேகிகளானவர்கள்
    6. மற்ற உயிர்களுக்கு சத்துவ ஆகாரம் கொடுத்தல்
    இவர்களை தவிர மற்றவர்கள் அனைவராலும் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத்தக்க வல்லபமுடையவர்கள் ஆதலால் அவர்கள் பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல என்கிறார் வள்ளலார். மேற்படியான இவர்களுக்கு பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே என்று இரங்குவது மாத்திரம் அவசியமென்று அறிதல் வேண்டும்.

    ஆக, பசியை தங்கள் முயற்சியினால் மாற்றிக் கொள்ளத் தக்கவர்களுக்கு பசியை தருமச் சாலையில் பசி நிவர்த்திக்க வேண்டிய அவசியமில்லை.

    ஏழைகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கே அன்னதானமிடுதலே சரியாகும்.

    அங்ஙனம் மட்டும் நடைப்பெறுகின்ற தருமச்சாலைக்கு நம்மால் கூடியமட்டில் பொருள் முதலிய உதவி செய்தல் அவசியம்.இதனால் நம்மை சுத்த சன்மார்க்க நெறி அறிவதற்கான தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
    இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் நம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சேர்வதற்கான தகுதியே என தெரிதல் வேண்டும்.
    அடுத்து உள்ள ஒழுக்கம் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் ஆகும்.

    இந்த சுத்த சன்மார்க்க ஒழுக்கமே இறை வீட்டினுள் நாம் செய்யும் தொழிலாகும்.
    மேலே கண்ட ஜீவகாருண்ய ஒழுக்கம் இறை வீட்டின் திறவு கோல் என்கிறார் நம் வள்ளலார். அப்படியெனில் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்றால் என்ன? பக்கம் 410ல் வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
    ‘ இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்’ இதுவே நம் தொழில் எனவும் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார்.
    ஆக, அன்பர்களே!
    நம் அன்னதான தரும சாலையில் நம்மால் கூடிய மட்டில் நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ளவர்களின் பசியை நீக்குவோம்,
    அடுத்து, நம் ஞான சபையில் நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ளப்படி தலைவனாகிய உண்மைக் கடவுளை மட்டும் கருத்தில் கருதி தொழுவோம்.
    இவை முறையே;
    உண்மையான ஜீவகாருண்யமாகும் மற்றும்
    நம் உண்மைத் தொழிலாகும்
    —–என்றும் அன்புடன் ஏ.பி.ஜெ.அருள்.