January 22, 2025
tamil katturai APJ arul

உபதேசக் குறிப்புகள் – Vallalar preaching

உபதேசக் குறிப்புகள்

1. அண்ட பிண்ட பூர்ண பாவன அனுஷ்டான விதி

அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது. அதனில் காரியத்தாலுள்ள விபரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த அறிவே ஜீவ அறிவு. பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. இதுபோலவே கரணக்காட்சி, ஜீவக்காட்சி, ஆன்மக்காட்சியுமுண்டு. இதுபோல், அண்டத்தில் அகம் அக்கினி, அண்டத்தில் அகப்புறம் சூரியன், அண்டத்தில் புறம் சந்திரன், அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம் – ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தாலுள்ள இடம்:- பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் பரமாகாசம். காரியகாரணமாயுள்ள இடம் நான்கு:- பிண்டத்தில் விந்து, நாதம். அண்டத்தில் மின்னல், இடி. சர்வயோனியிடத்தும், விந்து விளக்கமாகிய மின்ன லிடத்தும், நாத விளக்கமாகிய இடியிடத்தும்; இல்லாதது பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி என்றும், ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாயும்… … மேற் குறித்த அகமாகிய ஆன்மபிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும் பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் – இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன மென்றும் சொல்லுகின்றது. ஆதலால் ஏமம், கனகம், ரஜிதம், ரௌப்பியம் முதலாகச் சொல்வதில் சூரியனிடத்தில் கனகமும் சசியிடத்தில் ரஜிதமும்……இதுபோல் பிண்டத்தில் ஆன்மாகாசம் பொற்சபையென்றும், ஜீவாகாசம் ரஜிதசபை யென்றும் சொல்லுவது. ஆதலால் மேற்குறித்த இடங்கள் யாவற்றிலும் கடவுள் பூரண வியற்கை விளக்கம் காரியமாயும் காரணமாயும் காரியகாரணமாயும் இருக்கின்றது. முக்கிய இடங்களாகிய பிண்டத்தில் நாலும் அண்டத்தில் ஐந்தும் ஆகிய 9 இடத்திலும் கடவுள் விளக்கம் விசேஷ முள்ளது. ஆதலால் நாம் தினம் ஆறு காலத்திலும் மேற் குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்க வேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்த வேண்டும். மேற்குறித்த காலங்கள் சூரிய உதயம், உச்சிப்போது, சாயர€க்ஷ, மாலை, யாமம், வைகறை – ஆகிய காலங்களில் எல்லாம் வல்ல தலைவனை வணங்குதல் வேண்டும்.

கடவுட் பிரகாசம்

அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கிற நான்கிடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தாலுள்ள விவரம்:- பிண்டத்தில் அகம் ஆன்மா, அகப்புறம் – ஜீவன், புறம் – மனம் முதலிய கரணம், புறப்புறம் – கண் முதலிய இந்திரியங்கள். அண்டத்தில் அகம் – அக்கினி, அகப்புறம் – சூரியன், புறம் – சந்திரன், புறப்புறம் – நக்ஷத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் 4, அண்டத்தில் 4, ஆக 8 இடத்திலும் கடவுள் பிரகாசம் காரியத்தா லுள்ளது. ஞானசபையும் நடராஜரும்

ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு. அதன் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்தறிதல் மனஅறிவு. அதன் பிரயோஜனத்தை யறிதல் ஜீவ அறிவு. அந்தப் பொருளினது உண்மையை அறிதல் ஆன்மஅறிவு. ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது.

சூரியன்

ஏமம் கனகம் என்பன சூரியனைக் குறிக்கின்றன. சூரியனிடத்தில் பொன்னிருக்கின்றது.

2. பிண்ட ஒளியும் அண்ட ஒளியும்

பிண்ட ஒளி – அண்ட ஒளி

ஆன்ம ஒளி – அக்கினி ஒளி

ஜீவ ஒளி – சூரிய ஒளி

மன ஒளி – சந்திர ஒளி

கண்ணொளி – நட்சத்திர ஒளி

3. பிண்டாண்ட கிரகண சித்தாந்தம்

இவ்வுலகமும் இவ்வுலகத்திலுள்ள சராசர பேதங்களில் முக்கியமாயுள்ள சரமாகிய ஜீவராசிகளும் கற்பபேதமும் தோன்றி உய்யும் பொருட்டு, அநேகவித வாயுபேதங்கள் அநாதியில் கடவுளால் உண்டுபண்ணப்பட்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை அமுதக்காற்றும் விஷக்காற்றும். அவை விசேஷ வியாபகமா யிருந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் அமுதக்காற்று பிரமாண்ட பகிரண்ட கடாகத்தில் விசேஷ வியாபகமாயும் இருக்கின்றது. விஷக்காற்று மேற்படி பிரமாண்டாதி கடாகத்தில் – ஏகதேசம் நிமிஷகாலம் அல்லது முகூர்த்தம், அசாதாரணத்தில் ஜாமம் வரையில் – வியாபகமாயும் இம்மகா அண்டாதி ஜீவராசிகளிடத்தில் விசேஷ வியாபகமாயும் இருந்து கொண்டிருக்கிறது.

பிரமாண்டாதிகளில் அமுதக்காற்று விசேஷ வியாபகமாயுள்ளதால், அவ்வண்டங்களிலுள்ள சூரிய சந்திர உடுக்கள் முதலியவைகளும் சொற்பகாலத்தில் அழிவடைதலின்றி இருக்கின்றன. விஷக்காற்று ஏகதேச வியாபகமாதலால், கற்பகாலத்தில் வியாப்பியமாயும் வியாபகமாயும் இருத்தலால், அந்தக்காலங்களில் அவை நஷ்டப்படுகின்றன.

மேற்படி விஷக்காற்று கருமை வண்ணமாயும் செம்மை வண்ணமாயும் இரண்டு பாகமாய்ப் பிரியும். இவைகளை இராகு கேதுக்களென வழங்குகின்றனர். இது ஒரு முகூர்த்தம் ஒரு ஜாமம்… அதற்குமேல் இவ்வண்ணமாய், இவ்வண்ட கணிதப்படி, அவ்வண்டங்களிற் கணித காலத்தில் வியாபகமா யிருப்பதுதான் சந்திராதித்த கிரஹண தோஷ காலம். தோஷகாலமென்பது பிரகாசமின்றி இருள் வண்ணமாய்ச் சிலகாலத்தில் முற்றும் மறைந்தும் சிலகாலத்தில் ஏகதேசம் மறைந்தும் இருப்பதால், இவ்வண்ட புருஷனுக்குக் கரணஸ்தானமாகிய சந்திரனும் ஜீவஸ்தானமாகிய சூரியனும் பிரகாசம் மழுங்குகின்றபடியால் தோஷமெனப் பெயர். மேலும் தோஷம் என்பது இருள், அறியாமை, அஞ்ஞானம். விஷக்காற்று வியாபகமாயுள்ளது இவ்வண்டத்திலும் ஜீவர்களிடத்திலும் ஆதலால், ஜீவகோடிராசிகள் சொற்பத்தில் அடிக்கடி நஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அமுதக்காற்று இவ்வண்டத்தில் இரவில் அருணோதயந் தொடங்கி உதயபரியந்தம் வியாபகமாய் இருக்கின்றது. அக்காலத்தில் ஜீவர்கள் நன்முயற்சியி லிருப்பது விசேஷ நலம். தேகாதி பிண்டத்தில் மேற்படி அமுதக்காற்று வியாப்பியமாயிருக்கும். ஒருகால் ஒரு க்ஷண நேரம் அந்தக்காற்று வியாபகமாயிருக்குங்கால், ஜீவர்களுக்கு இது வரையில் தாங்களறியாததான கடவுள்விளக்கம் உண்டாகும். மேற்படி காற்று வியாபகம் ஏகதேசமு மில்லாவிடில் ஜீவர்கள் விஷக்காற்றினால் சதா வியாபகமடைதலில், இந்தச் சொற்ப ஜீவிப்பும் விருத்திக்கு வரமாட்டாது. அமுதக்காற்று வியாப்பியமன்றி வியாபகமாயிருக்குங் காலத்தில், ஜீவர்களுக்கு அறிவுவிளக்கம், மனநெகிழ்ச்சி, இந்திரிய அடக்கம், ஈசுரபத்தி முதலியவும் விளங்கும். அக்காலத்தை அமுதக் காற்றின் வியாபக காலமென்று அறியவேண்டும். இதன்றி இருண்மயமாய் முன் பின் தோன்றாது அறிவின்றி யிருக்குங்காலம் விஷக்காற்று வியாபகமாயிருக்குங் காலமென் றறிய வேண்டும்.

அண்டத்தில் சந்திராதித்த கிரஹண தோஷம்போல் இப்பிண்டத்தில் கிரஹண தோஷம் யாதெனில்:- பிண்ட புருஷனுக்குப் புறமாகிய கரணமென்றும் சந்திரனாகிய தோற்றும் அறிவு, இரும்பில் துரிசு ஏறுவதுபோல், விஷயவாசனையி லழுந்தி ஏகதேசப் பிரகாச விளக்கமுடையதுதான் சந்திரகிரஹணம். இஃதறியாமை. சூரிய கிரஹணமென்பது: அகப்புறமாகிய ஜீவனென்னும் சூரியனாகிய தோற்றுவிக்கும் அறிவு, செம்பிற் களிம்பேறுவதுபோல், விஷயவாசனை மயமாய் யாதுந் தோன்றாது அறிவின்றி நிற்குங்காலம் சூரியகிரஹணம். இஃது மாயாசிருட்டிக்கு இயற்கையானாலும், இரும்பையும் தாமிரத்தையும் பரிசனாதி வேதிகளால் ரவுப்பியாதி ஏமங்கள் செய்வது போல், நன்முயற்சியாகிய சீவகாருண்ய மயமாய்ப் பரிச்சியஞ் செய்தால் மேற்படி துரிசு நீங்கும். மேலும் ஆசாரியர் அனுக்கிரகத்தாலும் நீங்கும். இது பிண்டாண்ட கிரஹண சித்தாந்தம்.

4. அண்ட பிண்ட திசைகள்

1. வடக்குப் பாகம், நக்ஷத்திரப் பிரகாசம்.

2. கிழக்குப் பாகம், சந்திரப் பிரகாசம்.

3. மேற்குப் பாகம், சூரியப் பிரகாசம்.

4. தெற்குப் பாகம், அக்கினிப் பிரகாசம்.

கிழக்குத் திக்கை நோக்கித் தியானம் செய்கிறது போகசித்தியைப் பெறுகிறதற்கு.

மேற்கு – சொர்ண சித்தியைப் பெறுகிறதற்கு.

தெற்கு – சாகாக்கலையை (நித்திய தேகத்தையும் ஞானசித்தியையும்) பெறுகிறதற்கு.

வடக்கு – சித்தசுத்தியைப் பெறுகிறதற்கு.

வடக்கு காற்புறம், தெற்கு தலைப்பாகம்.

இதனால்தான் தெற்கு ஞானத்தில் சிறந்தது; வடக்கு அஞ்ஞானத்தில் அழுந்தியது.

தலை கீழ், கால் மேல் என்பதற்கு நியாயம்:-

அடி கீழ், முடி மேல்.

அடி தலை, முடி கால்.

தலை கிழக்கு, கால் மேற்கு.

கிழக்கு தாழ்ந்தது, மேல் திக்கு உயர்ந்தது.

மேலும் இவற்றை அனுபவத்தால் அறிக.

பிண்ட திசை

கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பனவற்றில்

தலை தெற்கு.

கால் வடக்கு.

நெற்றி கிழக்கு.

முதுகு மேற்கு.

5. அண்ட பிண்ட அமுதங்கள்

அண்ட அமுதம் 4 பிண்ட அமுதம் 4

அக அமுதம் அக அமுதம்

அகப்புற அமுதம் அகப்புற அமுதம்

புற அமுதம் புற அமுதம்

புறப் புற அமுதம் – மழை. புறப்புற அமுதம் – வியர்வை

அண்ட அமுதம் மழை முதலாக 4

பிண்ட அமுதம் வியர்வை முதலாக 4

6. மழை

புகையின் மூன்றாவது கலையின் சீதளசக்தியினால் மழையுண்டாகின்றது. இதுபோல் சூரியகிரண உஷ்ண ஆவியாகிய புகை ஓஷதிகளிலும் நீரிலும் பாரிலும் பொருப்பிலுமுள்ள திரவசக்தியைக் கிரகித்து, வாயுமண்டலத்தில் சேர்த்து, மேலுங்கீழும் உஷ்ணம் நிரம்ப, மத்தியிலுள்ள திரவ அணுக்கள் புழுங்கி நீராய், காலபேத வண்ணம் வாயுவால் பிரேரிக்கப்பட்டு அசைக்கும்போது, கீழுமேலுமுள்ள உஷ்ணவாயு தடிப்பு விலகும்போது, மின்னலாகிய பிரகாசமும், நெருங்கி யொன்றுபடும்போது சத்தமாகிய இடியும், அத்தொனியால் படலம்போல மூடியிருந்த காராகிய மேகம் விலகி வாயுவால் கலங்கிய போது மழையும் உண்டாகும். இதன்றி, மேகம் கடல் ஜலத்தை உண்டு மழைபெய்வ தென்பது பொய்.

7. முச்சுடர் (சூரியன் சந்திரன் அக்கினி)
சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலம் இடம் சத்தி சிவமுமாக வுடையது மருட்டேகம். வலம் சந்திரனாகிய சத்தியாயும் இடம் சூரியனாகிய சிவமாயு மிருப்பது அனுபவம். திரிசிய அனுபவத்திலுள்ள இடம் வலமாகவும் வலம் இடமாகவும் அனுபவந் தோன்றும்.

மேலும் சூரியன் அக்கினியோடு கூடினால் திங்களும், சந்திரன் அக்கினியோடு கூடியபோது பானுவும், சூரியன் மதியோடு கூடிய போது பௌமனும், சந்திரன் பானுவொடு கூடியபோது சௌமியனும், சூரியன் சௌமியனொடு கூடியபோது குருவும், சந்திரன் பௌமனொடு கூடியபோது பிருகுவும், சூரிய சந்திரர்கள் அக்கினியோடு கூடிய போது மந்தனும் தோன்றும். ஆக 7.

மேற்படி சூரியனுக்குக் கலை 16.மேற்படி கலை 16-ல் சந்திரனுக்குக் கலை 4 போக, இருப்பு கலை 12. சூரியன் காரியவுருவன். சந்திரனுக்குக் கலை 16. மேற்படி கலை 16-ல் தாரகைகளுக்குக் கலை 4 போக, சூரியனால் கொடுத்த 4 கலையுஞ் சேர்த்து சந்திரனுக்குக் கலை 16. சந்திரன் காரியகாரண உருவன். சகலன் சூரியன், கேவலன் சந்திரன். அனுபவத்தில் இடம் வலம் போல் மாறும். பிரமத்துவம் சூரியனிடத்திலும், விஷ்ணுத்துவம் சந்திரனிடத்தினும் உள்ளன. அக்கினிக்குக் கலை 64. இப்போது எட்டுக் கலையோடு காரண உருவனாய் மற்றைக் கலைகளை உள்ளடக்கி நீருறு தீப்போல் எங்குமுடையவன். ஆகக் கலை 96. மேற்படி 96 கலையே 96 தத்துவமாய்ப் பிண்ட வடிவாயிற்று.
அக்கினிகலை 64-ன் குணங்கள் சைவத்தில் 64 திருவிளையாடல்கள் ஆகவும், உண்மை அடியார்கள் 63 அதீதம் ஒன்று ஆகவும் வழங்குகின்றன. சந்திரகலை 12-மே வைஷ்ணவ பரத்தில் துவாதச ஆழ்வார்களாக வழங்குகின்றன. மற்ற 20 கலையும் கௌமாரம், பாசுபதம், மஹாவிரதம், சாத்தேயம், காணாபத்தியம், காபாலம், சௌரம், மகம்மதீயம், பௌத்தம், கிறிஸ்துவம் முதலிய சமயங்களில் வழங்குகின்றன. இவற்றின் அனுபவங்களைக் குரு முகத்தில் அறிக.

மேற்குறித்த சோம சூரியர்கள் ஒன்றுபடுவது அமாவாசை, ஒன்றுபட்ட சோமன் ஒவ்வொரு கலையாகச் சூரியனிடத்திலிருந்து விடுபட்டு மேலேறிப் பகிரண்டத்தில் செல்லும்போது 16 கலையும் பூர்த்தியாய்ப் பிரகாசிப்பது பௌர்ணமி. பகிரண்டத்திலிருந்து பிரமாண்டத்திற்கு வியாபகமாகும்போது, சூரிய உஷ்ணம் சோமகலையை ஒவ்வொன்றாகக் கிரகிக்க ஒரு கலையோடு பானுவுடன்சேர்தல் அமாவாசை. மேற்படி சோமகலையைப் பானு கிரகிக்காவிட்டால் இவ்வுலகம் ஜீவிக்காது. சூரியன் பிரமாண்ட பகிரண்ட வியாபகி, சந்திரன் பகிரண்ட பிரமாண்ட வியாபகி, சூரியவியாபகம் தோன்றாது, சந்திரவியாபகந் தோன்றும்.

அனுபவத்தில் சத்தி சிவம்
சூரியன் அக்கினியோடு கூடியபோது சந்திரனாம். சந்திரன் அக்கினியோடு கூடியபோது சூரியனாகும். சூரியன் ஆணாகவும் சந்திரன் பெண்ணாகவும், வலது பாகம் சிவமாகவும் இடது பாகம் சத்தியாகவும் வழங்கி வருவது மருட்டேக நியாயம். வலது பாகம் சத்தியாகவும் இடது பாகம் சிவமாகவு மிருப்பது அனுபவம்.

சந்திரன் சூரியன் அக்கினி

ரூபாரூபி ரூபி அரூபி

காரியகாரணன் காரியன் காரணன்

சோபாமாத்திரன் ஒளிமாத்திரன் பிரகாசமாத்திரன்

சுடாத தன்மை சுட்டுஞ் சுடாத தன்மை சுடுந்தன்மை

கலை 12, தாரகை கலை4 கலை16 கலை 64

அர்த்தவடிவன் வட்டவடிவன் பூர்ண வடிவன்

பிரமாண்ட பகிரண்ட பிரமாண்ட வியாபகி எங்கும் வியாபகி
வியாபகன்

பச்சை வெண்மை பஞ்சவர்ணம்* சுவர்ணம்
கலந்த மேனி

மனஅறிவு சபை ஜீவ அறிவு சபை ஆன்ம அறிவு சபை

மனஒளியே பதி ஜீவ ஒளியே பதி ஆன்ம ஒளியே பதி

*பஞ்சவர்ணங்களாவன:-

வெண்மை ஆதிசத்தி அனுக்கிரகம்

பச்சை பராசத்தி திரோபவம்

செம்மை இச்சாசத்தி சம்மாரம்

கருமை கிரியாசத்தி ஸ்திதி

பொன்மை ஞானசத்தி சிருஷ்டி

8. சிருட்டி நியாயம்

ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் – ஆன்மாகாசத்தில் – அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.

பூதாகாயத்தி லிருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் எழுவகையாய்ப் பிரியும். அவையாவன: வாலணு, திரவவணு, குருவணு, லகுவணு, அணு, பரமாணு, விபுவணு, மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் இருக்கும். இவற்றில் காரியவணு, காரிய காரணவணு, காரணவணு என மூன்றுவகையாய் நிற்கும். யாவையெனில் பக்குவ ஆன்மா, அபக்குவ ஆன்மா, பக்குவாபக்குவ ஆன்மா என மூவகைப்படும். ஆகாயத்திலிருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம். அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமுகத்திலுள்ள அருட்சத்தியேயாம்.

அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு – அருட்சத்தியின் சமுகத்தில் தோன்றிய ஞானங் கிரியை யென்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள. யாவையெனில்: கர்ம தேகம், பிரணவ தேகம், ஞானதேகம், என மூன்று விதம். அப்படி மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம்: பூத ஆகாயத்தி லுண்டான வாயு பேதத்தினால் சோமசூரியாக்கினி யென மூன்று வகை நிற்பன போலுணர்க. அந்த ஆகாயத்தை விரிக்கில் அனந்த பேதமாம். வாயுவின் பேதம் அதுபோலனந்தம். ஒருவாறு அறுபத்து நான்குகோடி பேதம். இவற்றில் அமுதபாகம், விஷபாகம், பூதபாகம், உஷ்ணபாகம் எனப் பலபேதப்படும்.

மேற்படி அணுக்கள் அனந்த வண்ண மாதலால், அனந்த அணுக்கள் சேர்ந்து ஒரு வித்தாய், இவ்வித்து திரவஅணு சம்பந்தமாய் குரு அணுவோடு சேரும்போது, பூதகாரிய அணுவாகிய கிரண உஷ்ணத்தால் ஜீவிக்கும். ஜீவித்த ஓஷதி முதலியன இந்த நியாயத்தால் வர்ணம் ருசி முதலிய பேதப்படுகின்றன. இவ்வண்ணமே பௌதிக பிண்ட அணுக்கள் காரண சூரிய உஷ்ணமாகிய ஜீவ உஷ்ணத்தால் வடிவமாய், பரமகாரணதயையால் ஜீவிக்கின்றன. சிலகாலத்தில் வித்துக்களாதியாம். சிலகாலத்தில் விருக்ஷமாதியாம். எல்லாவற்றிற்கும் ஆதியாயுள்ளது பூதகாரிய அணுவாகிய சூரிய கிரணமேயாம்.

இவ்வண்ணமே, ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும். மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே, மேற்படி ஆகாயம் சந்தானமாதலால், ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும். ஆதலால் பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது. ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக.

9. பக்ஷபேதமும் சிருஷ்டியும்

சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் – ஆக 5. இவற்றில் சம்பு, விபு – இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை. மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவ முள. இதற்குப் பிரமாணம். “அடர்மலத்தடையால் தடையுறும்”, “தடையுறாப் பிரமன்” என்னும் திருப்பாசுரங்களின்* உள்ளக்கிடையா லுணர்க.மேற்படி பக்ஷ சிருஷ்டி விசித்திரங்களாவன: அணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி ஒஷதிகளாலும் பௌதிகங்களாலும் ஆகார மூலமாய் ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு உண்டாக்குவது. மேற்படி பக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன் அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேகசம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது. பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடன் கருத்தரித்தல். மேற்படி பக்ஷத்தில் பக்குவம் கண்ணால் பார்த்த உடனே புணர்ச்சியன்றிக் கருத்தரித்தல். சம்புபக்ஷம் வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல். பிரகிருதி பக்ஷத்தால் சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த்தோன்றுதல். விபுபக்ஷசிருஷ்டி பார்த்தவுடன் திரண முதலானவற்றையும் நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டுபண்ணுவது. மேற்படி சிருஷ்டிகள் பல; வேதாகமங்களிலேயும் பலபட விரிந்தன.

இந்து வேதத்தின் முக்கியாமிசத்தை… கிறிஸ்தவர்கள் 7 நாளில் இந்த உலகத்தைப் படைத்ததாகச் சொல்லுவதின் உண்மை – அது வல்ல – யாதெனில்: சில அனுபவ விஷயங்களை அது விரிக்கின்றது. கைந்நொடிப்பொழுதில் 60-ல் 7 பாகம் கலையில் முடிந்தது. மேற்படி கலைகளாவன பெண்பாகத்தில் 4, ஆண்பாகத்தில் 3 – ஆக 7. ஒவ்வொரு கலையில் தாது அணுவாய்ச் சேர்ந்து, 7-வது கலையில் கரு சம்பூர்ணமாய்ச் சப்த தாதுவுங் கூடிய பிண்டாகும்.


* திருஅருட்பா 3926, 3925


கலை

பெண்பாகத்தில் கலை 4, ஆண்பாகத்தில் கலை 3, ஆகக் கலை 7. ஒவ்வொரு கலையில் ஒவ்வொரு தாது அணுவாய்ச் சேர்ந்து 7-வது கலையில் கரு சம்பூரணமாய்ச் சப்த தாதுக்களும் கூடியபின் பிண்டமாகும்.

சிருஷ்டி வகை

சிருஷ்டிவகை 5: அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம். இவற்றில் சம்பு விபு தவிர மற்றவைகளுக்குப் பக்குவம் அபக்குவம் உண்டு. அணுபக்ஷத்தில் அபக்குவ சிருஷ்டியாவது ஓஷதிகளையும் பவுதிகங்களையும் உள்ளுக்குக் கொடுத்து, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு பிரஜோத்பத்தி செய்வது; பக்குவ சிருஷ்டி புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பதுபோல் அஸ்தத்தால் தடவி ஊன்றிப் பார்த்து, தேக சம்பந்தம் செய்து ஸந்தானத்தை உண்டாக்குவது. பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டியாவது புருஷன் தேகத்தைத் தடவிப்பார்த்த உடனே கருத்தரித்தல்; பரமாணுபக்ஷ பக்குவ சிருஷ்டியாவது கண்ணால் பார்த்தவுடன் கருத்தரித்தல். சம்புபக்ஷ அபக்குவ சிருஷ்டிவாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல். சம்புபக்ஷ* பக்குவ சிருஷ்டியாவது சங்கற்பித்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் கருத்தரித்துக் கீழே பிண்டம் வெளிப்படல். விபுபக்ஷமாவது பார்த்தவுடன் திருண முதலானவற்றை மனுஷ’யனாகச் செய்து, அதில் அனேக விசித்திரங்கள் செய்தல்.


* பிரகிருதி பக்ஷம்?

 


10. மும்மலபேதமும் சிருட்டியும்

ஆணவம் மாயை கன்மம் என மலம் மூன்று. இதில் பக்குவம் 3, அபக்குவம் 3 – ஆக 6. இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக விரிதலின் 18 ஆம். இந்தக் கன்ம பேதத்தால் அருட்சத்தியின் சமுகத்தில் எழுவகைத் தோற்ற முண்டானது. மேற்படி கன்ம மலத்தால் சிருட்டி உண்டாகும் விவரம் ஒருவாறு:- பக்குவ ஆணவம், பக்குவமாயை – இவ் இரண்டினாலும் விஞ்ஞான கலாபேதம். அபக்குவமாயை, அபக்குவ கன்மம், அபக்குவ ஆணவம் கூடிய தேவ நரக பைசாசங்கள். பக்குவ மாயை, அபக்குவ கன்மம் கூடியது ஜீவர்கள். அபக்குவகன்மம், அபக்குவகன்ம ஆணவம், அபக்குவகன்ம மாயை – இவை கூடியது தாவர உயிர்கள். இதை விரிக்கில் பெருகும்.

ஆணவம் மாயை கன்மம்
ஆணவம், மாயை, கன்மம் – இம்மூன்றில் பக்குவம் 3, அபக்குவம் 3 ஆக 6-ல் ஒவ்வொன்றில் மும்மூன்றாக விரிந்தவை 18. பக்குவ ஆணவம் பக்குவமாயை யிவ்விரண்டும் தனித்து நிற்பது விஞ்ஞானகலர். சுரநரக பைசாசங்கள் அபக்குவமாயை அபக்குவ கன்மம் அபக்குவ ஆணவம் கூடித் தடித்தது. ஜீவர்கள் பக்குவமாயை அபக்குவகன்மம். தாவரங்கள் அபக்குவகன்மம் அபக்குவமாயை அபக்குவ ஆணவம் – இந்த மயமாக நிற்றல். 11. எழுவகைப் பிறப்பு
இந்தத் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அது போல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனிபேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது. இத்தேகத்திற்கும் ஏழு பிறவி யுண்டு. யாதெனில்:- கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று, அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று, பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று, குழந்தைப் பருவம் ஒன்று, பாலப்பருவம் ஒன்று, குமாரப்பருவம் ஒன்று, விருத்தப்பருவம் ஒன்று ஆகப் பிறவி 7. இவ்வாறே தாவர முதலியவற்றிற்கு முள. மேலும், ஸ்தூலப் பிறப்பு 7, சூட்சுமப் பிறப்பு 7, காரணப்பிறப்பு 7. ஆதலால், மேற்குறித்த ஸ்தூலப்பிறப்பு, சூட்சுமப் பிறப்பு யாதெனில்: ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி – ஆக பிறப்பு 7. காரணப்பிறப்பு – மனோ சங்கற்பங்களெல்லாம் பிறவி. ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு. அது அற்றால் பிறவியில்லை. எப்படி அறுமெனில்: பரோபகாரம் சத்விசாரம் – இவ்விரண்டாலும் மேற்குறித்தது நீக்கிச் சிவானுபவம் பெறலாம். பிறப்பு

பிறப்பு 7 என்பது ஒவ்வொரு தேகத்திலும் ஏழு பிறப்பு. அதாவது கர்ப்பத்தில் 5 மாதம் வரையில் குழவியாக விருப்பது 1, அவயவாதி உற்பத்திக்காலம்1, பிண்டம் வெளிப்பட்ட காலம் 1, குழந்தைப் பருவம்1, பாலப்பருவம் 1, குமாரப்பருவம்1, விருத்தாப்பியப்பருவம் 1, ஆகப் பிறவி 7. தாவர முதலிய எழுவகைத் தோற்றத்திலும் ஒவ்வொன்றில் ஏழு பிறவி யுண்டு. ஒரு பிறப்பில் இறந்தால், ஒருகற்பகாலம் வரையில் தோற்றமில்லாமல் மண்ணில் மறைந்திருக்கும். மறு கற்பத்தில்தான் மறுபடியுந் தோன்ற வேண்டும். காரணப் பிறப்பு 7, சூட்சுமப்பிறப்பு 7, தூலப் பிறப்பு 7, அன்றியும், சாக்கிரப்பிறப்பு 1, சொப்பனப் பிறப்பு 1, சுழுத்திப் பிறப்பு 1, சாக்கிரத்தில் சொப்பனப் பிறப்பு 1, சாக்கிரத்தில் சுழுத்திப் பிறப்பு 1, சொப்பனத்தில் சொப்பனப்பிறப்பு 1, சொப்பனத்தில் சுழுத்திப் பிறப்பு 1, ஆக 7. இதன்றி மனோ சங்கற்பமெல்லாம் பிறப்புக்களாம்.

ஜென்மம்

பூர்வஜென்மம் என்பது கர்ப்பகோளவாசம். உத்தரஜென்மம் என்பது ஜனனகாலம்.

12. ஆண்பெண் – பெண்ணாண்

ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் இருக்கும்விதம் எவ்வாறெனில்:- பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிருதி, ஆன்மா வென்னும் 7-ம் கூடி., சுக்கில சுரோணித சம்பந்த சப்த தாதுவாய், சிருஷ்டிக்குக் காரணமாயின. ஆதலால் ஆண்பாகம் சேராது பெண்ணுருவப்படாது. பெண்பாகஞ் சேராது ஆணுருவப் படாது. மேலும் ரூப பேதத்தைப் பெண் ஆண் என்பது அறியாமை. மேலும் அறிவினுயர்ச்சி தாழ்ச்சியாலும், சிருஷ்டிக்குக் காரணமான வித்து தங்குவதற்கு க்ஷேத்திரமானதாலும் ஒருவாறு உருவத்தால் கொள்ளலாம்; அனுபவத்தால் கொள்ளப்படாது. அறிவினுயர்ச்சி தாழ்ச்சியென்பது ஜீவஅறிவாகிய மனஅறிவு பெண்ணிடத்தும் ஆன்ம அறிவாகிய அறிவு ஆணிடத்தும் உள்ளது. மேலும் மன அறிவு புத்தி அறிவு என்று சொல்லக்கூடும். மேலும் ஆகாசத்தில் பிருதிவி தோன்றுவது போல் ஸ்திரீ பாகமாகிய பிருதிவியில் ஆகாசமுந் தோன்றும். ஆனதால் அனுபவத்தில் தெரியும்.

ஆண்பெண் பெண்ணான்

ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமென்பது எவ்வாறென்றால் :- பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், பிரகிரதி, ஆன்மா என்னும் 7-ம் கூடிச் சுக்கில சுரோணிதமாய் ஸப்ததாதுவாகி, சிருஷ்டிக்குக் காரணமாயிருப்பன வாதலால், ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணுமிருப்ப துண்மை. ரூப பேதத்தால் பெண் ஆண் என்பது பொய். பெண் ஆண் என்னும் நாம பேதம் வருவானேன்? அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் என்க. ஆன்ம அறிவு ஆண், ஜீவ அறிவு பெண். ஆன்ம அறிவென்பதும் ஜீவ அறிவென்பதும் புத்தி அறிவும் மனஅறிவுமாம். பிரத்தியக்ஷானுபவம் யாதெனில்:- புருஷபாகம் 3-ல் ஆகாசத்தில் பிருதிவியும், பெண்பாகம் 4-ல் பிருதிவியினிடத்தில் ஆகாசமும் தோன்றி அடங்குவது போல், பெண் ஆணாகவும் ஆண் பெண்ணாகவும் நியாயம் உண்டாயிற்று.

13. ஆண்பெண் பருவம்

ஆண் பிள்ளைப்பருவம் 5 பெண் பிள்ளைப் பருவம் 8

சைசவம் 5 வரையில் பேதை 7 வரையில்

வாலிபம் 15 வரையில் பெதும்பை 9 வரையில்

கௌமாரம் 30 வரையில் மங்கை 12 வரையில்

யௌவனம் 40 வரையில் மடந்தை 16 வரையில்

வார்த்திகம் 40-க்கு மேல் அரிவை 25 வரையில்

தெரிவை 30 வரையில்

பேரிளம் பெண் 40 வரையில்

விருத்தை 40-க்கு மேல்

14. கரு உற்பத்தி

கருத்தோன்றும் சுக்கில நியாயம் யாதெனில்:- சுக்கிலம் இரண்டரை வராகனெடை யளவா யிருக்கும். அதில் விஷபாகமாகிய சத்தி 1; சாதாரண மென்னும் பூதமாகிய அறிவு 1; அசாதாரண அமுத மாகிய விந்து அரை – ஆக – இரண்டரை. இதுபோல் பெண்பாலிடத்தும் சுரோணிதமுளது. மேற்கண்ட சுக்கில சுரோணித மிரண்டினும் கடவுள் ஆவியுள்ளது. கோசத்தின் முன் விஷம், அதை அடுத்து பூதம், அதற்கு மேல் அமுதம் உண்டு. இவ்வாறு பெண்பாலிடத்து முண்டு. முன்னுள்ள விஷபாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்; பூதம் வெளிப்பட்டால் வியாதி; அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி. கடவுளருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார். இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை. மேலும், விந்து வளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் – இவற்றாலுங் கர்ப்ப மில்லை.

சுக்கிலம் உண்டாவதற்குக் காரணம்: தினம் ஆகாரங்கொண்டால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும். அந்தத் தட்டின் மேல் கடவுள் கடவுளி என்றிரண்டாகி யிருக்கிறது. உண்ட அன்னத்தை இரண்டரை நாழிகையில் – அந்த அன்னத்திலுள்ள அமுதைப் பிரித்து, ஊட்டவேண்டிய தத்துவத்திற்கு ஊட்டுகின்றது. மறுபடியும் ஐந்து நாழிகைக்குள் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி, இரண்டரை வராகனெடையில் கோசநுனியில் ஒன்றும் நாபியில் ஒன்றும் பிரமரந்திரத்தில் அரையுஞ் சேர்த்து, மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை யுண்டு பண்ணி ஈளை குரும்பை நகத்தூசு தொப்புளழுக்கு கண்பீளை முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது. மேற்படி அன்னத்தை ஏழரை நாழிகைக்குள் – அதிலுள்ள திரவாம்சத்தைப் பிரித்து, உதிரமாக்கி யூட்டுகின்றது. ஏழரைக்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது. ஆதலால், ஆகாரங்கொண்ட ஏழரை நாழிகைக்கு மேல் ஆகாரங் கொள்ளவேண்டும்.

சுக்கில வகை

சுக்கிலம் 3 வகை. அது 2 1/2 வராகனெடை யிருக்கும். விஷம் 1, சாதாரண பாகம் 1, அமுதபாகம் 1/2, ஆக பாகம் 2 1/2. இதுபோலவே ஸ்திரீகளுக்குச் சுரோணித மிருக்கும். சுக்கில சுரோணிதத்தின் மேல் கடவுள் ஆவியுருவா யிருப்பர். தேகசம்பந்த காலத்தில் விஷபாகம் வெளிப்பட்டால் தேக நஷ்டம், சாதாரண பாகம் வெளிப்பட்டால் வியாதி. அமுதபாகம் வெளிப்பட்டால் சந்தான விருத்தி. இந்த நியாயத்தால் சதா தேகசம்பந்தம் செய்தாலும், சந்தான விருத்தி ஏகதேசம்.

சுக்கில சுரோணிதம்

சுரோணிதப் பையிடத்தில் மூன்று மணி சேர்ந்த கொத்து 1 வலது புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து 1 இடது புறத்திலும் இருக்கின்றன. சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கிற காலத்தில் மூன்று சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் ஆண் குழந்தையும் நான்கு சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும். புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும், இடதுபுறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

15. சப்த தாதுக்கள்

ஆணில் 3, பெண்ணில் 4. ஆணில் மூன்றாவன:- ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி – இவைகள் ஒருமித்துச் சுக்கிலமாகத் தடித்துக் கோசத்தடியில் செம்பரத்தம் பூவிதழ் மூன்று மொன்றாயடுக்கியது போலிருக்கும். பெண்ணிடத்தில் நான்காவன:- பிருதிவி, அப்பு, தேயு, இயமானன் என்னும் வாயு – ஆக நான்கும் ஒருமித்துப் பல்லிமுட்டைபோல் 4 பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் யோனிக்குள் இருக்கும். ஆக 7-ம் கூடி ஒருமித்துச் சுக்கில சுரோணித சம்பந்தப்பட்டுப் பிண்டமாம். இது சப்த தாது. மேற்படி தாதுக்களின் பெயர் தோல், அஸ்தி, திசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரசம் – ஆக ஏழு. மேற்படி சத்துக்கள் ஆணிடத்துள்ள இடங்கள் மூளை, தொப்புள், லிங்கத்தடி; பெண்ணுக்குள்ள இடங்கள் மூளை, தொப்புள், உபஸ்தத்தடி, ஸ்தனத்தின் கீழ். புணர்ச்சிக் காலத்தில் இந்தச் சத்துச் சேர்ந்து வெளிப்பட்டால் கர்ப்பமுண்டாம்.

தேக சத்து

ஆண் பிள்ளையின் தேகத்தில் 3 இடங்களில் சத்துண்டு. அவை, 1. மண்டையின் மூளை, 2. கொப்பூழ், 3. இலிங்கத்தின் கீழ்புறம் ஆம். பெண் பிள்ளைக்குத் தேகத்தில் சத்து 4 இடங்களில் உண்டு. அவை, 1. மண்டையின் மூளை, 2. ஸ்தனங்களின் கீழ், 3. கொப்பூழ், 4.குய்யம். தேகத்தைத் திறந்து வைத்திருத்தல் ஆகாது; சத்துக் காய்ந்து போம்.

சப்த தாதுக்கள்

ஆணிடத்தில் 3, பெண்ணிடத்தில் 4 என்பது: ஆணிடத்தில் ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி – இம்மூன்றும் ஒருமித்துச் சுக்கிலமாய், அறிவு சத்தி வித்து என்னும் பாகத்தோடு தடித்து ஓர் மணியாம். பெண்ணிடத்தில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் சூரியன், சந்திரன், அக்கினி, இயமானன் என்னும் உயிர் ஆக நான்கும் சேர்ந்து சுரோணித மாயிற்று. ஆக ஏழுங்கூடிச் சப்த தாதுக்களாயின.

16. பிண்ட இலக்கணம்

தலை அண்டம், மார்பு முதலானவை பிண்டம். அண்டத்தில் பிண்டம் புருவமத்தி, அண்டத்தி லண்டம் பிரமரந்திரம். இதில் சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம். இதில் பிரகாசமாயும் அறிவாயும் பிராணவாயு வாயும்…… இருக்கின்றது. பிண்டத்தில் பிண்டம் இடுப்புக்குங்கீழ் பாதபரியந்தம். பிண்டத்தி லண்டம் பீசம். பிண்டம் வயிறு….. மேற்படி பிண்ட ஸ்தானத்தில் கர்த்தாக்களிருக்கு மிடம் கோசம், தொப்புள், மார்பு; இவர்கள் வண்ணம், நாடி, உஷ்ணம், காற்று, குறி முதலிய பேதங்களாம். ஆதலால், பிரம விஷ்ணு ருத்திர பேதங்கள் அனந்த கோடி. அண்டத்தைப் பார்க்கிலும் பிண்டம் விசாலமுள்ளது. இது போலவே பிரமாண்ட நியாயம்.

இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் 5. அதில் முக்கிய ஸ்தானம் 2. அவை யாவை? கண்டம், சிரம் சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்; இது இறக்காது. கண்டத்திலுள்ளது ஜீவாத்மா என்னும் விசேஷஜீவன்; இது இறந்துவிடும். மேற்படி தேகத்தில் பிரமபேதம் கீழும் மேலு மிருப்பதால், நாமடைய வேண்டிய பதஸ்தானங்கள் எவை என்றால்; அவை கண்டமுதல் உச்சி வரையில் அடங்கியிருக்கின்றன. மேற்படி பதங்களாவன சொர்க்க பூர்வமாக சதாசிவபத மீறாக வுள்ளன. இதற்கு மேல் நாதாதி சுத்த மீறாக உள்ளன. கைலாசாதி பதங்கள் உந்திக்கு மேல் கண்ட மீறாக வுள்ளன; இது சாதாரணபாகம். நரக இடமாவன உந்தி முதல் குதபரியந்தம். கர்ம ஸ்தானம் குத முதல் பாத மீறாக வுள்ளது. இவைகளில் பிரமாதிப் பிரகாச முள்ளது. அனுபவிப்பது கண்டத்தில். இந்தத் தேகத்தில் எமனிருக்குமிடம் குதமாகிய நரகஸ்தானத்துக்கு இடது பாகம். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்திருக்கும்; ஜீவன் மனமுதலிய அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.

பிண்டத்தில் பூர்வமென்பது தலை, உத்தரமென்பது கால். பூர்வமென்பது பூர்வசம்பந்தத்தால் வந்த பெயர். பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணால் பார்த்தல். பிண்டத்திற்குக் கிழக்கு முகம், மேற்கு கால், வடக்கு வலதுகை, தெற்கு இடதுகை; கொடிமரம் தொப்புளடி, மேற்படி மரத்தின் அளவு உண்ணாக்கு, கொடி புருவ மத்திக்குள்ளிருக்கும் வபை, பலிபீடம் தொப்புள், நந்தி என்பது பசு ஆணவமலம், மூலாதாரத்தினது உள்ளங்கமே சிவலிங்கம், வாய் வாசல், புருவமத்தி சபை, அறிவே பதி; ஆதிகால், அநாதிதலை; கீழ் தலை, மேல் கால். ஆதலால், பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் என நான்கு. இதில் பூர்வமென்பது புறப்புறமாகிய நக்ஷத்திரம் போன்ற இந்திரியக் காட்சி. பூர்வபூர்வம் புறமாகிய சசி போன்ற கரணக்காட்சி. உத்தரம் அகப்புறமாகிய பரிதி போன்ற ஜீவக்காட்சி. உத்தரோத்தரம் அகமாகிய அக்கினி போன்ற ஆன்மக்காட்சி. ஆதலால் அகம், அகப்புறம் புறம், புறப்புறம் என்னும் நான்குமே மேற்குறித்த பூர்வாதி உத்தரோத்தரமென வழங்குவது.

பிண்ட நியாயம்
பிண்ட நியாயம். அண்டமென்பது கழுத்துக்கு மேல் சிரம். பிண்டமென்பது கழுத்துக்குக் கீழ் பாதம் வரையில். அண்டத்தில் சோமன் சூரியன் அக்கினி பிரமா விஷ்ணு ருத்திரன் இருக்குமிடம் நெற்றி. பிண்டத்தில் பிரமா, விஷ்ணு, ருத்திரன் இருக்குமிடம் பிரஜாபதி, தொப்புள், மார்பு. இவர்கள் வாயு வடிவம். இதிற் பிரம பேத மனந்தம். விஷ்ணு ருத்திர பேத மனந்தம். அண்டத்தைப் பார்க்கிலும் பிண்டம் விசாலமுள்ளது. இதுபோலவே பிரமாண்ட நியாயம். ஜீவஸ்தானம்

ஜீவனிருக்கிற ஸ்தானம் 5-ல் முக்கிய ஸ்தானம் 2. அவை சிரசு. கண்டம். சிரத்திலிருக்கிற ஜீவன் இறக்கிற தில்லை, கண்டத்திலிருக்கிற ஜீவன் இறக்கும்.

சுவர்க்க நரகம்

மனித தேகமே சுவர்க்கம் நரகம் இருக்கிற இடம். பிரமபதம் விட்டுணுபதம் ருத்திரபதம் மயேசுரபதம் சதாசிவபத முதலிய பதங்களின் இடம் இந்த மனிததேகத்தில் கண்டம் முதல் உச்சி வரையில். இந்தப் பதங்களுக்குச் சுவர்க்கம் என்று பெயர். நரகம் நரகாதிகளுக்கிடம் உந்தி முதல் குத பரியந்தம். இயமனிருக்குமிடம் குதத்திற்கு இடது பாகம்.

ஆன்மாவும் ஜீவனும்

ஆன்மா தனித்தே யிருக்கும். ஜீவன் மன முதலாகிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.

பூர்வோத்தரம்

பூர்வம் என்பது தலை, உத்தரம் என்பது கால். பூர்வம் என்பது பூர்வ சம்பந்தத்தால் வந்த பெயர்.

பெருங்கோயில்

கிழக்கு முகம், மேற்கு கால், வடக்கு வலதுகை, தெற்கு இடது கை, கொடிமரம் தொப்புள், கொடி மரத்தின் அளவு உள் நாக்கு, பலி பீடம் வயிற்றின் மேடு, நந்தி ஆணவம் முதலிய மலங்கள் உள்ள பசு, சிவலிங்கமே மூலாதாரத்தின் உள்ளங்கம்.

ஆதி அநாதி

ஆதி அநாதி, கீழ் மேல் என்பவை கால் – தலை.

காட்சி

பூர்வம் – புறப்புறம், இந்திரியக் காட்சி. பூர்வ பூர்வம் – புறம், கரணக் காட்சி. உத்தரம் – அகப்புறம், ஜீவக் காட்சி. உத்தரோத்தரம் – அகம், ஆன்மக் காட்சி.

17. பிண்டானுபவ இலக்கணம்

மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்குமேல் நாற்சதுரமான ஒரு பையுண்டு. அதில் 16 வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது. அதைத்தான் மானசதடாக மென்று சொல்லுகின்றது. 16-க்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகிறது. அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன்வர்ணமாக இருக்கும். அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும். அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றுக்கு நூற்றிலொரு பங்காக வெகு நேர்மையாக இருக்கும். அதன் வண்ணம் பொன்மயமாயிருக்கும். அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமனென்று சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் அடங்குங் காலம் கேவலகாலம் என்றும் சொல்லப்படும். அந்த ஆவி உண்டாகுங் காலத்தில் செயற்கையானால் கருத்தரிக்கும். அது சிருட்டியென்று சொல்லப்படும்.

அதில் ஆவியுண்டாகத் தொப்புளிலிருந்து ஒரு நாடி தோன்றி அதன் மத்தியில் முகந்து கொண்டிருக்கிறது. அதன் மூலமாய் அக்கினியி ருக்கின்றது. அது மூலாக்கினி என்று சொல்லப்படும். அது தொப்புளிலிருந்து உண்டாவதால் விஷ்ணு தொப்புளிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதன் மேல் இரண்டரை அங்குலத்தில் உந்திக்கு நேராக உட்பாகத்தில் சதுரமாய் ஒரு பையுண்டு. புசித்த அன்னத்தை ஐந்து நாழிகையில் பால் போன்ற ஜலமாய் ருத்திர பாகத்திலுள்ள ஆவி பிரித்து அந்தப் பையில் சேர்க்கின்றது. அதை க்ஷீராப்தி என்று சொல்லுகிறது. அந்தப் பையிலிருக்கும் பால் போன்ற ஜலத்தின் மேல் ஆலிலை வடிவையுடைய வயிற்றி னுட்பாகம் படிவதனால் அதே வண்ணமாக ஓராடை கட்டியிருக்கும். அதை ஆலிலையென்று சொல்கின்றது. அந்த ஆடையின் மேல் ஒரு நரம்பு வட்டமாய்த் தலை தூக்கியிருக்கின்றது. அதைச் சேஷனென்று சொல்லுகின்றது. அந்தக் குண்டலி வட்ட சேஷனென்னும் நாடி மத்தியில் செம்பினது களிம்பு போன்ற பச்சை மேனியா யொரு சத்தியுண்டு. அதை விஷ்ணுவென்றும், அச்சத்தியில் முன் பின் நடுவென்னும் இடத்தில் அதன் காரணச் சத்து பொன் வண்ணமாயும் அரித்திராவண்ணமாயும் குங்கும வண்ணமாயும் மூன்று உள்ளன. அவற்றைச் சீதேவி, பூதேவி, நீளாதேவியெனச் சொல்லுகின்றது. மத்தியில் ஒரு சத்தியிருப்பதால் விஷ்ணு மார்பில் லக்ஷ்மியை வைத்தாரென்பது.

குண்டலிவட்டமான நாடி மத்தியிலுள்ள பச்சை வண்ணமான சத்தியிலிருந்து ஒரு நாடி உண்டாய் இரண்டு தலையாய் விரிந்து ஒரு தலை மேலும் ஒரு தலை கீழும் செல்லுகின்றது. இந்த நாடிகளின் மூலமாய் அந்தச் சத்து மேலே செல்லும்போது பசுமைவண்ணமாகவும் கீழ்ச் செல்லும்போது பீதவண்ணமாகவும் செல்லுகின்றது. மேலே செல்லுவதினால் ஜீவர்களுக்கு ஜீவிப்பும் அதின் சாரம் கெட்டுக் கீழே செல்வதினால் ஜீவிப்பின்மையும் உண்டாகின்றது. மேலே செல்வதில் ஜீவிப்புண்டாகுவதால் காத்தல் தொழிலை உணர்த்துகின்றது. மேலும் மேலே செல்லுகின்றதை விஷ்ணு வைகுந்தம்போகின்றா ரென்றும் கீழே செல்லுகின்றபோது க்ஷீராப்தியில் இருக்கின்றாரென்றும் சொல்லுகின்றது. கீழே செல்லும் நாடி முன் சொன்ன தொப்புள் நாடியுடன் கலப்புண்டாய் பிரமனுக்கு உஷ்ணத்தைத் தருகின்றது.

அன்றியும் இந்தச் சதுரமான பையின் வலப் பாகத்தில் ஒரு பையுண்டு. அந்தப் பையில் அக்கினி நிரம்பிக் காரணமாயிருக்கின்றது. அது புசித்த வஸ்துக்களின் சத்தைக் கிரகித்துக்கொண்டு அந்தசத்தை மலமாக இடது பாகத்தில் சேர்த்து விடுகின்றது. கிரகித்த சத்தை முன்சொன்ன க்ஷீராப்திப் பையில் சேர்க்கின்றது. இதை வடவாக்கினி என்று சொல்லுகின்றது. மேலும் இந்த வெள்ளை ஜலத்தை அக்கிரமமின்றிச் சமப்படுத்திப் பிரளயம் வாராது காத்துக் கொண்டிருக்கின்றது. இந்த உதராக்கினி குறைவுபட்டு க்ஷீராப்தியின் ஜலத்தின் தரங்கெடுமானால் நோயுண்டு.

இந்தப் பையாகிய ஸ்தானத்திற்குமேல் இரண்டரை அங்குலத்தில் இருதயத்தில் மலர்ந்த வாழைப்பூப்போல் ஒரு பையுண்டு. அது வெண்மையாயிருக்கும். இதைக் கைலாய மென்று சொல்லுகின்றது. இந்தப் பையுள் முன் சொன்ன காற்றில் பதினாயிரங் கோடி பங்கிலொரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவியிருக்கும். இதற்குக் காரணாக்கினி யென்று பெயர். இவ்வக்கினியைக் காலசந்திரருத்திரமூர்த்தி யென்பர். இப்பையின் அருகில் இடப் புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பையுண்டு. அந்தப் பை பசுமை வண்ணமாயிருக்கும். அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய்க் காரணாக்கினி அதிகப்படுத்தாமலும் குறைவுபடுத்தாமலும் சமப்படுத்தி வைக்கும். இந்த மலர்ந்த பைக்கும் கீழிருக்கும் க்ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடியுண்டு. அதன் மூலமாய் அதற்கு உஷ்ணங் கொடுத்து நிலையில் வைக்கும். இதனால் ருத்திரனிடத்தில் விஷ்ணு பிறந்ததாய்ச் சொல்லுகின்றது. இந்த நாடி மூலமாக விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் பிரமனிடமாகிய இந்திரியத்திலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனைச் சம்ஹார கர்த்தா வென்று சொல்வது.

இந்த அக்கினிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு. அதில் மூன்றாகப் பிரியும் கிளையுண்டு. அது மூல முதல் பிரமரந்திரம் வரையில் இடம் வலம் நடு வென்று கத்தரிமாறலாய்ப் பிராணாபானனுக்கு இடங்கொடுத்து ஊடுருவி நிற்கும். இந் நரம்புகளுக்குச் சோம சூரி யாக்கினி யென்று பெயர்.

இஃதன்றி இக் குண்டலி வட்ட நரம்பினடியில் நின்று இரண்டு நரம்பு, வலத்தில் அஞ்சு கவருடைய தலையாயும் இடத்தில் ஆறு தலையுடைய கவராயும் நிற்கின்றன. வலத்திலுள்ளது கணபதி யென்றும், இடத்திலுள்ளது சுப்பிரமணிய ரென்றும் பெயர் சொல்லுவது. மேற்படி ஐந்து கவருடைய நரம்பிற்கு அடியில் தலையெடுப்பான நரம்பு கீழ் நோக்கி கிருஷ்ணவர்ணமா யிருக்கும். இந்த நரம்பு இடைவிடாது அசைந்துகொண்டிருக்கும். இந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் இதற்குக் கணபதியென்று பெயர். மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் இரண்டிலும் சித்திதத்துவம் புத்திதத்துவம் உண்டு. இடத்திலுள்ள ஆறு கவருடைய நாடிக்குக் கீழ் அனந்த வண்ணமான நாடி ஒன்றுண்டு. இதற்கு மயூரமென்று பெயர். இந்த நாடியின் அசைவால் எழுபத்தீராயிரம் (72,000) நாடியும் அக்கிரமமின்றி நிலைபெறுகின்ற படியால், இதற்குச் சேனாதிபதி யென்றும் பெயர். மேலும் வலது புறத்து நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரையும் இடதுபுறத்து நாடிக்கு நாற்பது மாத்திரையும் அளவு வித்தியாசமிருப்பதால், இவர்களைச் சோதரர்களாகச் சொல்வதுமன்றி, மேற்படி ருத்திராம்சமாகவே சொல்லுகின்றது.

இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள. மகேசுவர ஸ்தானம் முதல் விந்துஸ்தானம் வரையிலும் முன் போல் இடம் நாடி தொழில் வண்ணம் முதலியவு முள்ளன. நாதஸ்தானந்தொட்டுத் துவாதசாந்தம் வரையில் அனுபவவெளியாகிய ஆகாச பேதமயமா யிருக்கும். அதற்குமேல் அதிகாரண மாத்திரமாய் ஆன்மானுபவத்தில் விளங்கும்.

மேலும் பிரமஸ்தானந் தொடங்கிச் சுத்தசிவஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம், இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் அதற்கு மேல் அக்கினி வண்ணமாயும் இருக்கும். இது அடியிற் பருத்து வர வர நேர்மையாய், இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கணுவாய், ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய், ஆன்மக்காட்சியில் அருகித் தோன்றுவதாய், இரண்டற நிற்கும். இதற்குச் சிவாகார பூரண ஸ்தம்பம் என்று பெயர்.

முன் சொன்ன இருதயாக்கினிப் பை அக்கிரமமாய் விரிந்து, விசேஷ அக்கினி ஜ்வாலை விசிரிம்பித்துக் கீழிருக்கும் க்ஷீராப்திப் பையிலிருக்கும் ஜலத்தைச் சுருட்டிக்கொள்ள, ஜீவனுக்கு மரண காலம் நேரிடும். மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் அருந்தல் பொருந்தல். இவை சமமானால் மிருத்தியு வராது.

18. மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது

இந்த மனிததேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றி நெற்றி முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றா திருப்பதற்கு நியாயம் யாதெனில்: இத்தேகம் பாதாதி பிரமாந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். மேற்படி வாயுவினுடைய பிருதிவி காரியமே தேக வடிவம். ஆதலால், வாயுவின் வர்ணம் செம்மை, கருமை நிற உரோமம் பிருதிவியின் கூறு. தேகத்தில் பிருதிவி வாயு இரண்டும் முக்கிய காரணமானதால், செம்மையும் கருமையுமாகிய உரோமம் உண்டாயிற்று. இது நிற்க. நரை உண்டாவது தத்துவக் கெடுதியால். இத்தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்கும். அவசியம் மேற்படி இடங்களில் ஆண்பாலுக்கு உரோமம் தோன்றும். மேற்படி இடங்கள் எவை எனில்:- கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 2, மேலிமை 2, நாசிக்கு உட்புறம் 2, மீசை 1, மோவாய் கன்னம் 2, காதுக்குட்புறம் 1, இருதயம் 1, கைம்மூலம் 2, உந்தியின் மேல் ரேகை 1, அடிவயிறு 1, லிங்கத்தடி 1, புட்டத்தின் கீழ்ப்புறம் 1, தொடை 2, முழந்தாள் 1, பாதத்தின் மேலிடம் ஒன்று, மேற்படி விரலின் மேலிடம் பலவும் 1, முதுகு 2, விலாப்புறம் 2, முழங்கைக்குங் கீழ் 2, கைவிரலின் மேற்புறம் 1 ஆக 27. இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.

நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது. பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.

திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம், குருதுரியாதீதம் ஆக 5, ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி, சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் – இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.

மேலும் பெண்களுக்கு உரோமம் தோன்றாதிருப்பதற்குக் காரணம் ஆணிடத்தில் 3-ம் பெண்ணிடத்தில் 4-ம் ஆக இருப்பதால், மேற்படி பெண்களுக்குத் தலை, புருவம், இமைக்கீழ் மேல், மூக்கினுட்புறம், கைம்மூலம், லிங்கத்தடி – இவைகள் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றாது அருகியிருக்கும். உரோமம் விசேஷம் மற்ற இடங்களில் உண்டாவது தத்துவக்கெடுதி. மேலும் உரோமம் தோன்றாதிருக்கிற இடங்க ளெல்லாம் விந்துவாகிய பிரகாசம் ஜாஸ்தியா யிருக்கும். மேற்படி விந்துக்கள் மோவாய், மார்பு ஸ்தனத்தின் கீழ்ப்புறம் – இவைகளில் நிரம்பி யிருக்கின்றன. அதனால் பெண்பாகம் உரோமம் இல்லை.

பரமாத்மா ஜீவாத்மா வென்னும் இரண்டின் நித்தியாநித்தியங்களையும் பிண்ட பேதத்தில் உயர்வுதாழ்வையும் காரியகாரண சம்பந்தங்களையும் தெரிவித்தல் யாதெனில்: சாமானியம் விசேடமென்று ஜீவன் இரண்டு. இவற்றில் சிறந்தது சாமானியம். தாழ்ந்தது விசேடம். ஜீவன் இரண்டென்ப தெவ்வாறெனில்: ஆன்ம காரணம் சாமானியம், ஆன்மகாரியம் விசேஷம். சாமானிய மென்பது ஆன்மஅறிவு, விசேட மென்பது மன அறிவு. இவை பூர்வோத்தரமா யிருக்கின்றன. பூர்வமென்பது லிங்கஸ்தானம். உத்தரமென்பது பிந்துஸ்தானம். ஆதலால் சிருட்டிக்குக் காரணம் லிங்கம். ஆதலால், சாமானிய ஜீவன் காரணப் பட விசேஷ ஜீவன் காரியப்படும். விசேஷ ஜீவ சம்பந்தமில்லாத பக்ஷத்தில் சிருஷ்டி காரியப்படாது. இது சாதாரண பாகம். அசாதாரண சம்புபக்ஷ சிருஷ்டியில் சாமானியத்தைக் கொண்டே விசேடத்தை வெளிப்படுத்திக் கொள்ளலாம். சாமானியம் சந்தானம், விசேட மதற்குள் ளடங்கியிருக்கும். பிரமாணம் யாதெனில்: அங்குலிகளில் நகத்திற்கு அடி சந்தானமும், வளர்ச்சி விசேடமும் போல.

மேலும், நெற்றியில் உரோமம் உண்டாகாத வஸ்துக்களெல்லாம் ஆன்மகாரணஅறிவு காரியப்பட்டது. மிருகாதிகளுக்கு உரோமம் உண்டான படியால் ஆன்மகாரண அறிவு காரணகாரணமாய் அருகியிருக்கின்றது. எப்படி எனில்: சர்வேசுரனென்னும் நாமத்தின் பிரத்தியேக ஆத்ம சைதந்நியமாகிய வஸ்து எங்கும் பூரணமாய் இருப்பது இயற்கையுண்மை ஏகதேசம்… ஆதலால், கடவுளை – அறிவதற்கு – ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும். மேற்படி அறிவு ஆன்மவியாபக ஆலயமாகிய மனிதர் தேகத்தில் கடவுள் காரியப்படுவது உத்தமம்.

இதன்றி, சமய மத ஏற்பாட்டில் மகான்கள் குழுக்குறி – அடையாளங் – களாகப் பெயரிட்ட விக்கிரக பேதமாகிய சிலா, லோக, தாரு, தந்த, இஷ்டி முதலியவைகளில் கடவுள் காரியப்படுவது சரியை கிரியாதி பேதம் எட்டில் சரியையில் சரியை கிரியையில் சரியை – இவ்விரண்டையும் செய்கின்ற மந்தர்களினது நியாயம். மேலும் அதில் தோன்றி அனுக்கிரகிப்பதுஞ் சாலம். அருளுருவமான அறிவே உருவங்கொண்ட சிவத்தை அறிவாலே அறிவது உண்மை. மேலும் அனலுக்குச் சரியான கர்ப்பூரம், பஞ்சு, கரி, கட்டை முதலிய வஸ்துக்களில் அக்கினி சீக்கிரம் காரியப்படும். கதலி முதலிய வஸ்துக்களில் காரியப் படுவது தாமசம். அதுபோல், பக்குவான்மாக்க ளிடத்தில் கடவுளருள் வெளிப்பட்டால் சுத்தமாதி மூன்று தேகமும் அத்தருணமே வரும். பக்கவமில்லாதவர்களுக்கு அருள் செய்தால் வாழையினிடத்தில் அக்கினி காரியப்படுவது போலாம். ஆதலால், கடவுளருள் வெளிப்பவதற்கு அபக்குவிகள் தங்கள் செயற்கைக் குணங்களாகிய ராகத் துவேஷாதிகளை நீக்கல் வேண்டும். சினம் வெகுளி முதலியவற்றையும் நீக்கல் வேண்டும்.

சினமென்பது யாது? உள்வேக்காடு, புடநியாயம்போல், இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டம் பண்ணும். வெகுளி யென்பது மீசை துடித்தல், கண்சிவத்தல், கைமுதலிய உறுப்புகள் துடித்தல், வாய் குழறி மேல் விழுந்து கூவுதல் – இஃது ஆயுளை நஷ்டம் பண்ணும். ஆகையால், எவ்வகையிலும் கோபத்தின் பூர்வோத்தரமாகிய சினம் வெகுளி என்னும் கூற்றை ஒழித்தல் அவசியம்.

இதுபோல் மற்றக் கெடுதியாகிய காமக் குரோதாதி சம்பந்தங்களையும் நீக்கல் வேண்டும். காரணமென்பது கரண சம்பந்த முடையது. கரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழிற் றன்மை உடையது, மட்குடத்தைப்போல். மேலும், இலக்ஷணம் அடையாளம், இலக்ஷியம் அடையாளத்தை யுடையது. அங்கம் இலக்ஷணம். ஆதலால், இலக்ஷணம் இலக்ஷியம் அங்கம் காரணம் கரணம் முதலிய சம்பந்தங்களுமொன்று மில்லாது, கெடுதியாகிய தத்துவங்களை அடக்கல்வேண்டும்.

உரோமதத்துவமும் பிந்துஸ்தானமும்

மனித தேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றியும், நெற்றி முதலாகிய இடங்களில் தோன்றாமலுமிருப்பதற்கு நியாயம்: இந்தத் தேகம் பாதாதி பிரமரந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். ஆதலால் அதனுடைய பிருதிவி காரியமே தேகவடிவம். ஆதலால் வாயுவின் கூறு செம்மை. கருமயிர் பிருதிவியின் கூறு. இந்த நியாயத்தால் தேகத்தில் செம்மையும் கருமையும் கூடிய உரோமம் உண்டாயிற்று. நரை தத்துவக் கெடுதியால் நேரிட்ட ஆபாசம்.

இந்தத் தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்குகின்ற இடமாதலால் அவசியம் உரோமம் இருக்கும், மேற்படி இடங்களின் விவரம்: கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 3, மேல் இமை 4, நாசிக்குட்புறம் 5, மீசை 6, கன்னம் 7, காதுக்குட்புறம் 8, இருதயம் 9, கைம் மூலம் 10, உந்தியின் மேல்ரேகை 11, அடிவயிறு 12, லிங்கத்தடி 13, புட்டத்தின் கீழ்ப்புறம் 14, தொடை 15, முழந்தாள் 16, பாதத்தின் மேலிடம் 17, மேற்படி விரலின் மேலிடம் 18, முதுகு 19, 20, 21, விலாப்புறம் 22, 23, முழங்கையின் கீழ் 24, கணுக்கைக்கு மேல் 25, கைவிரலின் மேற்புறம் 26, இந்த இடங்களில் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றுவது தத்துவ ஆபாசம். தத்துவங்களினது உட்புற மலங்களே வாயுவின் பிருதிவியாதலாலும், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரியமில்லாததினாலும் உரோமம் தோன்றுகிறது.

அக்கினி காரியப்பட்ட இடங்களில் உரோமம் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கும் நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதனாலதற்குப் பிந்துஸ்தான மென்றும், அறிவென்றும், பாலமென்றும், முச்சுடரென்றும், முச்சந்தியென்றும், முப்பாழென்றும், நெற்றிக்கண் என்றும், கபாடஸ்தானமென்றும், சபாத்துவாரமென்றும், மகம்மேருவென்றும், புருவமத்திய மூலமென்றும், சிற்சபை யென்றும் பெயராம். ஆதலால் பிந்துவென்பதே ஆன்மா. பிந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம். ஆதலால் உரோமம் அருகியிருக்கிறது.

பிந்து நாதங்கள்

பூர்வத்தில் பிந்துவும் உத்தரத்தில் நாதமுமிருக்கின்றன. பிந்து ஆன்மா; நாதம் பரமான்மா. நாதத்தோடு பிந்து சேர்ந்தால் பிந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. பிந்துவுக்கு இது உத்தரநியாயம். பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்கித் தத்துவங்களைத் தன்வசப் படுத்தியும், தொழில்களைச் செய்வித்தும், தனித்தும், தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கிறபடியால், பிந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும்.

பாலஸ்தானம்

நாம் இருப்பது பாலஸ்தான மாதலால், பாலம் சிறந்தது. இதற்கு அனுபவ சித்திகள் திரயோசாந்தம் வரையில் உண்டு.

பெண் பிறவியும் பிந்து விளக்கமும்

ஆணிடத்தில் பிந்து விளக்கம் மூன்று பங்கும், பெண்ணிடத்தில் பிந்து விளக்கம் நான்கு பங்கும் இருப்பதால், பெண்களுக்குத் தலை, புருவம், இமைக் கீழ் மேல், மூக்கு உட்புறம், கைம்மூலம், லிங்கஸ்தானம் – இவை 7 ஸ்தானங்கள் தவிர மற்ற இடங்களில் உரோமம் தோன்றாது அருகியிருக்கும். பெண்களுக்கு உரோமம் தோன்றாமல் இருக்கிற இடங்களெல்லாம் பிந்து விளக்கமாகிய பிரகாசம் ஜாஸ்தியாக இருக்கும். பெண்களுக்குப் பிந்து இருக்கிற ஸ்தானம் மூன்று: வாய், மார்பு, ஸ்தனத்தின் கீழ். உரோமம் விசேஷம் தோன்றுவது தத்துவ ஆபாசம்.

சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன்
சாமானிய ஜீவன் விசேஷ ஜீவன் ஆக 2. இவற்றில் சிறந்தது சாமானியம்; தாழ்ந்தது விசேஷம். ஜீவன் இரண்டென்பதற்கு விவரம்: ஆன்மகாரணம் சாமானியம்; ஆன்மகாரியம் விசேஷம். சாமானிய மென்பது ஆன்மஅறிவு, விசேஷ மென்பது மனஅறிவு. இது பூர்வோத்தரமாய் இருக்கின்றது. பூர்வமென்பது லிங்க ஸ்தானம். உத்தரமென்பது விந்து ஸ்தானம். சிருட்டி முதலியவைகளுக்குக் காரணம் லிங்க ஸ்தானம். ஆகையால், சாமானிய ஜீவனே காரணப்பட்டு, விசேஷ ஜீவன் காரியப்படும். விசேஷ ஜீவ சம்பந்த மில்லாத பக்ஷத்தில் சிருட்டி நடவாது; இது சாதாரணம். அசாதாரணத்தில், சம்புபக்ஷ சிருட்டியில் சாமானிய ஜீவனைக் கொண்டே விசேடத்தை வெளிப்படுத்திக் கொள்வது. சாமானியம் சந்தான மாதலால் விசேடம் உள்ளடங்கி யிருக்கின்றது. நகத்துக்குச் சந்தானம் அடியும் விசேஷம் வளர்ச்சியும் போலவாம். மிருகாதிகளுக்குச் சாமானியம் காரியப்படாததனால் சாமானியம் இல்லையென்று சொல்லப்பட்டது. கடவுள் காரியப்படுவது

கடவுள் ஆன்ம வியாபகமாகிய மனித தேகத்தில் காரியப்படுவது உத்தமமாக இருக்க, சிலாவிக்கிரக பூத தாரு முதலியவைகளில் வெளிப்படுத்திக்கொள்வது மந்த நியாயம். அதில் தோன்றி அனுக்கிரகிப்பதாகச் சொல்லுவது ஜாலம். காய்ந்த கட்டையினிடத்தில் அக்கினி அதி சீக்கிரம் பற்றுதல்போல், பக்குவர்களாகிய ஜீவர்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால், சுத்தமாதி மூன்று தேகசித்தியும் அத்தருணமே வரும். பக்குவ மில்லாதவர்க்கு அருள் செய்தாலும், வாழையினிடத்தில் அக்கினி செல்வது போலவாம். ஆதலால், கடவுள் அருள் வெளிப்படுவதற்குமுன் அபக்குவர்கள் தங்கள் செயற்கையாகிய ராகத்துவேஷாதி அசுத்தங்களைப் போக்கிக்கொள்வது உத்தமம்.

கோபம்

சினம் வெகுளி யென்பவற்றின் பொருள்: சினம் உள்வேக்காடு, புடநியாயம் போல். இது தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும். வெகுளி மீசை துடித்தல், கண் சிவத்தல், கைகால் உடம்பு துடித்தல் முதலாகியவற்றை வெளிப்படையாகக் காட்டுதல். இதுவும் ஆயுளை நஷ்டம் செய்யும். ஆகையால் எந்த வகையிலுங் கோபங் கூடாது. அதை அவசியம் ஒழிக்க வேண்டியது.

காமக் குரோதங்கள்
காமக் குரோதாதிகள் முதலிய பெருங் குறைகளை அவசியம் நீக்க வேண்டியது. காரணம்

காரணமென்பது கரண சம்பந்தமுடையது. காரணமென்பது ஒற்றுமை வேற்றுமைத் தொழில் தன்மை யுடையது, மட்குடத்தைப்போல்.

இலக்ஷணம்

இலக்ஷணம் அடையாளம்; இலக்ஷியம் அடையாளத்தை உடையது; அங்கம் இலக்ஷணம்.

19. சமய நூல்களின் உண்மை

பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. இதுபோல் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவசித்தியே. மேற்குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தாத்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும். இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களு மமைத்துக் கொள்க. ஒருவாறு.


* சௌராதி சண்டை பரியந்தம் – சூரிய பூசை முதல் சண்டேசுவர பூசை முடிய.

 


புராண ஹ’ருதயம்
பெரியபுராணத்திற் குறித்த 63 நாயன்மார்களும் தத்துவங்களே ஒழிய வேறல்ல. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல. புராணங்களி னிருதயமெல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும். சமய நூல் உண்மை
மாணிக்கவாசக சுவாமிகளும் 63 நாயன்மார்களும் மனிதரல்லர். தத்துவங்கள். தேவாரம் திருவாசகம் முதலியவைகள் மேற்குறித்தவர்கள் பாடியனவல்ல, சித்தர்கள் சில சித்திகளைக் குறித்துக் கற்பனையாய்ச் செய்த சரித்திரம்; அதற்கு மேற்கொள் வேண்டுவதின் பொருட்டுச் சில பாடலுஞ் செய்து, புராணத்தில் மேற்குறித்தபடி பெயரிட்டு, அவர்கள் செய்ததாகப் பரிச்சயஞ் செய்ததே தவிர, உண்மையல்ல. இவற்றிற்குரிய தாத்பரியங்களும் உண்மைகளும் சுத்த சன்மார்க்கத்தில் பகிரங்கமாய் இனி வெளிப்படும். (வேறொரு குறிப்பு)
சூரபத்மனுடைய யுத்தம் முழுமையும் தத்துவ சம்மாரமே. சுப்பிரமணியர் விநாயகர் மயிலின் மேலும் பெருச்சாளியின் மேலும் ஏறினார்களென்கிற தாத்பர்யம் வேறு. அது தெரியாம லந்தச் சுவாமிகளைத் திருவிழாக் காலத்தில் வாகனங்களின் மேல் ஏற்றுதல் தெரியாமை. 20. சமய நூல்களில் பிழை
சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் வெளிப்படும்.
21. கற்பமும் பிரளயமும்

மகா கற்பம் – மூலப்பிரகிருதியினின்று உண்டாம் சிருஷ்டி முதல் பிரமாவின் ஆயுள்வரையில் ஏற்பட்டுள்ள காலம்.

அவாந்தர கற்பம் – சதுர்முகப் பிரமனுடைய ஒரு நாட்குரிய காலம்.

இந்த இரண்டு கற்பத்தின் நடுவே ஒவ்வொரு ஒடுக்கமுண்டாகிறது. அது 1. நித்தியம், 2. நைமித்திகம், 3. பிராகிருதிகம், 4. ஆதியந்தகம் என நால்வகைத்தாம்.

நித்தியப் பிரளயம் – மரணமே நித்தியப் பிரளயம்.

நைமித்திகப் பிரளயம் – பிரமனுடைய கற்பமுடிவிலுண்டாகின்ற ஒடுக்கம்.

பிராகிருதிகப் பிரளயம் – மகத்துவ முதல் விசேட பரியந்தம் ஒடுக்கத்தை யடைவது.

ஆதியந்திகப் பிரளயம் – தத்துவஞானத்தால் யோகிக்கு உண்டாகும் ஒடுக்கம்.

22. கற்பபேதம்

கற்பபேத மென்பது கடவுள் இடபவாகனா ரூடராய் உலகத்திலெழுந்தருளிக் காட்சி கொடுத்தருளுங் காலம். இடப மென்பதற்குப் பொருள் தர்மசுவரூபம். தர்மமென்பது காருண்யம், தயவு, அருள். ஆதலால், அருள் வடிவமான ஆன்மாலய உலகமான தேகத்தின் அனுபவ ஞானம் தோன்றுதல்.

கற்பபேதம்

கற்பபேத மென்பது கடவுள் ரிஷப வாகன ஆரூடராய் உலகத்திலெழுந்தருளிக் காட்சி கொடுத்து அருளுங் காலம். ரிஷப மென்கிறதற்குப் பொருள் தரும சொரூபம், காருண்ணியம், தயை.

23. கலியுகம்
கலியுகத்தின் தாத்பர்யம்:- முதல் யுகத்துக்கு நாள் 8, இரண்டாவது யுகத்துக்கு நாள் 6, மூன்றாவது யுகத்துக்கு நாள் 4, நாலாவது யுகத்துக்கு நாள் 2, ஒரு தினத்திற்கு நாழிகை 60, நிமிஷம் 2,16,000. இரண்டு நாளைக்கு 4,32,000 நிமிஷம். இவ்வண்ணமே 4,6,8, முதலியவற்றிற்கும் கொள்க. ஆக நாள் 20-க்கு நிமிஷம் 43,20,000. இதைக் குழுக்குறியில் வருஷமாகச் சொன்னது. முதல் யுகம் களங்க மார்க்கம்; இரண்டாவது யுகம் திராவக மார்க்கம்; மூன்றாவது யுகம் நவநீத மார்க்கம்; நாலாவது யுகம் பஸ்ம மார்க்கம். ஆதலால், மேற்குறித்த பஸ்மத்தை மேற்குறித்த வருஷத்தில் முடித்து உட்கொண்ட புருஷனாகிய சித்தனுக்குக் கலிபுருஷனென்னு நாமம் வந்தது. மேற்படி பஸ்மத்தை இரண்டு தினத்தில் முடித்து கற்பங்கொண்டு தேகசித்தியைப்பெற்றுத் திரிசியப்படாமல், மேற்படி புருஷன் தனது சங்கல்ப விகல்பங்களால் இவ்வுலகத்தைத் தோன்றலாதி அசைவுகள் செய்வித்து ஆடுகின்றான். இந்தவுலகம் முடிவதற்கு இன்னும் 27 வருடம் இருக்கின்றது: இதற்குமேல் மேல் புருஷன் செயல் நடவாது; ஞான சித்தன் செயல் உண்டாம். ஆங்கிரச வருடம் புரட்டாசி மாதம் 3ஆம் நாள். கலியுக முடிவு
முதல் யுகத்திற்கு நாள் 8. 2-வது யுகத்திற்கு நாள் 6. 3-வது யுகத்திற்கு நாள் 4. 4-வது யுகத்திற்கு நாள் 2. ஆகக் கூடிய நாள் 20-ம் கற்பம் முடிக்கக் கூடும் நாட்கள். 60X60X60=2,16,000 நொடி ஒரு நாள். அதாவது நாள் ஒன்றுக்கு நாழிகை 60, நாழிகை ஒன்றுக்கு வினாடி 60, வினாடி ஒன்றுக்கு நொடி 60 என்றபடி. நாளிரண்டிற்கு 4,32,000 நொடி. இந்த 4,32,000 நொடியும் அத்தனை வருடமாகக் கலியுகத்திற்குச் சொல்லியிருக்கிறது. ஆனால் இந்தக் கலியுகத்திற்கு வருடம் ஐயாயிரந்தான். இந்தக் கலியுகம் முடிவதற்கு இன்னம் இருபத்தேழு வருடமிருக்கிறது. இந்த ஐயாயிர வருஷமும் ஜீவித்திருக்கும்படி, கலியுகத்திற்குக் குறித்த நாளிரண்டில் கல்பஞ் செய்து தேகசித்தியைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய கண்ணுக்குத் தோற்றாமல் வேறு வடிவத்தோடு இருக்கிறவன் கலியுக புருஷன். இவனுடைய சங்கல்ப விகற்பங்களால் இந்த உலகம் இப்போ தசைவு பெற்றிருக்கின்றது. இந்த உலகம் சன்மார்க்க உலகமாக மாறுவதற் கின்னும் பன்னிரண்டு மாதமிருக்கிறது. ஆங்கீரச வருஷம் புரட்டாசி மாதம் 3ஆம் நாள்.

24. கால சங்காரம்

மார்க்கண்டர்க்காக ருத்திரமூர்த்தி இடது காலால் எமனை உதைத்ததற்கு நியாயம்:- மார்க்கண்ட ரென்பது மயக்கமாகிய மறைப்பென்னும் மரணத்தைத் தவிர்த்தது. ருத்திர னென்பது தனித்த ஆன்ம அறிவு. எமனென்பது மயக்கத்தைத் தரத்தக்க வெகுளி சினம் முதலிய. இடது காலால் எமனை யுதைத்த தென்பது: இடது என்பது சந்திர கலை, காலென்பது பிராணவாயு. ஜனன மரணத்தை உண்டு பண்ணுவது சந்திரசூரியசக்தி. ஆதலால், அஞ்ஞான பாசத்தால் சினமாகிற கூற்றுவன் கட்ட, விவேகியென்னும் மார்க்கண்டன் ருத்திரனென்னும் ஆன்மஅறிவோடு கூடவே, மேற்படி ருத்திரன் பிண்டநஷ்டஞ் செய்கின்ற இடகலையை மேலேற்றி, குணங்களாகிய சூலத்தால் கூற்றையொழித்து, அருளாகிய சத்துவ மயமாய் நீடிக்கச் செய்வது – எமசம்மாரம். இடது கால்
இடதுகாலால் இயமனை உதைத்தாரென்பது இடையாகிய சத்தி என்னும் அருளாகிய ஆன்மஇயற்கையால் தேகத்தை நீடித்துக் கொண்டது. 25. சுரர் அசுரர்

சுரர் அசுரர் என்பதற்குப் பொருள்:- சுரர் என்பது அறிவுடைய ஜீவர்கள் முதல் வாசனாதி வஸ்துக்களெல்லாம் சுரர். அகங்காரி முதல் துர்க்கந்த வஸ்துக்களெல்லாம் – பூமிக்கள் தோன்றுங் கந்தமூலம் – அழுக்குடைய வஸ்து – இவைகள் அசுரர். மேலும் அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியால் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர, வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. ஆனால் தயை விசேஷமிருக்க வேண்டுமென்பது அறிவு உயர்ச்சியில் அடங்கிவிட்டது. தேவர்களுக்கு நான்கு கை என்பத தயையின் விசேஷத்தைக் குறித்துச் சொன்னதே தவிர வேறில்லை. தயையே வடிவமாக இருக்கின்ற புண்ணிய தேகிகளே தேவர்கள்…

மனிதரும் தேவரும்
அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல. ஆனால் தயை விசேஷ மிருக்கவேண்டிய தென்பது அறிவு உயர்ச்சியிலடங்கி விட்டது. தேவர்களுக்கு 4 கையென்பது ஈகைபற்றிய தயை விசேஷத்தைக் குறித்துச் சொன்னதே தவிர வேறல்ல. ஆகையால் தயவே வடிவமாக இருக்கிறவர்களே புண்ணிய தேகிகள். அவர்களே தேவர்களு மாவர். சுரர் அசுரர்
சுரர் அசுரர் என்பதற்குப் பொருள்:- சுரர் என்பது திராவகம், வாசனை, மேலேறிய அறிவுடைய ஜீவர்களாம். அசுரர் என்பது குழித்தைலம், அழுக்குடைய வஸ்து, கிழங்கு, துர்வாசனை, துர்வாசனையுடையவர்கள், துர்க்குண மனுஷ’யர்கள். 26. அடி முடி தேடல்

பிரமா அன்னமாகவும் விஷ்ணு வராகமாகவும் உருவங்கொண்டார் என்பதன் பொருள்:- பாச அறிவும் பசுஅறிவும் ஆம். ஒரு பொருளைக் காணுந் தன்மையுடையது பாசஅறிவு. பசுஅறிவாவாது – பொறி புலன்களாலே அறியப்பட்டது ஜீவ அறிவு. மலத்தில் அழுந்துவது பாசம். பகுத்தறிவது பசு. மேலுங் கீழுஞ் செல்லுதலால், பாதாளத்திலும் ஆகாசத்திலும் தேடினாரெனச் சொன்னது. மேலும், ஒவ்வொரு வஸ்துவிலும் பதி பசு பாச லக்ஷணம் உண்டு.

27. பிரம தண்டனை
பிரம தேவனுக்கு ஐந்து முகமாவன: ஆணவம், காமியம், மாயை, திரோதை, மாமாயை. இவைகளில் ஆணவம் என்னும் ஒரு தலை மாத்திரம் பரமசிவத்தினால் அரியப்பட்டது. பிரமதேவனது ஒரு சிரசை வெட்டும்பொருட்டுத் தோன்றின ருத்திரனுக்கு ஐந்து தலையாவன: இச்சை, ஞானம், கிரியை, ஆதி, பரை என்னும் ஐந்துமாம்.

இதுபோல் இராவணனது பத்துத்தலையும் அகங்காராதிகள் என அறிவும்.

28. சரஸ்வதியை மூக்கறுத்தது
பிரமதேவன் பத்தினியாகிய சரஸ்வதியை மூக்கறுத்தது யாதெனில் பிரமதேவனது சிரசில் ஒரு முகமாகிய அகங்கார தத்துவத்திற்கு உபகருவியாவன. அவரது பத்தினியாகிய சரஸ்வதி. மேற்படி கல்வியின் முகப்பை அல்லது முகத்தலையாகிய மூக்கை அறுத்தது என்பது அடக்கியது. இல்லாவிட்டால், அபரஞானமே ஒழியப் பரஞானம் வராது. 29. சந்திர சாபம்
சந்திரனுக்கு இரண்டு தண்டனை என்பது யாதெனில்: கணபதியாகிய அவாவை உல்லங்கனம் பண்ணினதால் சண்டாளத்துவம் நேரிட்டது. சந்திரனுக்குக் கலைகுறைந்ததும் சிவன் சிரசில் தரித்துக் கொண்டதும் யாதெனில்: தக்கனாகிய ஜீவபோதத்திற்குப் பெண்கள் என்னும் உபகரணங்கள் 27. இவற்றை மனமாகிய சந்திரனுக்குக் கல்யாணம் என்னும் செயற்கையைச் செய்து, சமமாகப் பார்க்கும்படித் தக்கன் சொன்னதைத் தடுத்து, கிருத்திகை உரோகிணியாகிய ஆசை மோகம் இரண்டையும் பாராட்டி, மற்றப் பெண்களைச் சந்திரன் அலக்ஷியம் செய்தான்.
செய்யவே, தக்கனது சாபத்தால் பதினாறு கலையின் கண்ணியங்கெட்டு ஒவ்வொன்றாய்க் குறைய பயங் கொண்டு பிரமாவாகிய பாச அறிவினிடத்துச் சொன்னான். பிரமன் தக்கனது பலத்தை எண்ணித் தன்னால் முடியாது என்று பதியாகிய சுத்த அறிவினிடத்தில் சொல்லும்படிச் செய்தான். அங்ஙனம் சொல்லலும், சிவமானது சந்திரனாகிய மனத்தின் வியாபார கலைகளை ஒடுக்கி, ஒரு கலையான சுத்த மனத்தைத் தானாகிய அறிவின் சிரம் என்னும் பிரஞ்ஞையில் தரித்து, சாபம் வீண் போகாமல் ஏறியும் குறைந்தும் இருக்கும்படி செய்தது. இப்படிச் செய்யாவிட்டால் அனுபவம் வராது. 30. தக்ஷ யாகம்
தக்கன் என்பது யான் எனது என்று அகங்கரிக்கும் ஜீவபோதம், தக்கன் யாகத்தை அழித்தது என்பது ஜீவபோதத்தை அழித்தது. 31. சூரபத்ம சம்ஹாரம்
பதுமாசுரன் என்பது: பதுமம் – நாபி, அ – அவா, சுரன் – சுழித்து எழுதல். நாபியினிடமாய் அடங்காமல் எழும்பும் குணத்தை அடக்கியும் தடைபடாதது பத்மாசுரனாகிய அவா. கஜமுகம் என்பது மதம். சிங்கமுகம் என்பது மோகம். இவைகளை வெல்வது ஐந்தறிவாலும் உபசத்தியான பஞ்ச சத்தியாலுங் கூடாது. ஆதலால் சிவத்தால் தடைப்பட்டது. சுப்பிரமணியம் என்னும் ஷண்முகரால் சம்மரிக்க வேண்டியது எப்படி எனில்: பஞ்ச சத்தியோடு அனன்னியமாகிய சம்வேதனை என்னும் அருட்சத்தியையுங் கூட்டிச் சுத்த அறிவே வடிவாகிய ஆறறி வென்னும் முகங்களோடு, சுத்தஞானம் சுத்தக்கிரியை என்னும் சத்தியுடன், கூர்மை பொருந்திய வேல் என்னும் விவேகத்தால், தயாவடிவாய் அவா மோக மதங்களை நாசஞ் செய்வது சூரசம்மாரம். மயில் என்பது மேற்படி தத்துவங்கள் நஷ்டமானாலும் அவற்றின் அக்கிரமம் அதிக்கிரமம் கெட்டுக் கிரமம் மாத்திரம் இருப்பது. பூர்வ வாசனாதிகள் பல வண்ணமாய் விரிந்து ஆடுவது இயல்பாதலால், அவற்றை அசைய வொட்டாது மத்தியில் ஏறி இருப்பதாகிய சுத்த அறிவே ஷண்முகம். விகல்ப ஜாலமே மயில். இவ்வண்ணமே அண்டத்திலும் உண்டு. மேலும், நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் மணிபோல் ஓர் ஜோதி யிருக்கிறது. அந்த ஜோதியே ஷண்முகம். 32. குண்டோதரனுக்கு அன்னமிட்டது

குண்டோதரனுக்கு அன்னமிட்டார் என்பதற்குப் பொருள்: குண்டோதரம் என்பது துத்தநாகக் குடாக்கு, ஓதனமென்பது அன்னம், தரன் என்பது பசியில்லாதவன். மேற்படி நாகத்தைச் சுண்ணஞ்செய்து பசியில்லாதவனுக் களிக்க விசேஷ பசி உண்டாகும். எப்படியெனில்: நாகக்கொட்டையை மைபோலாட்டி, நாகத்திற்குப் பிடிப்பித்துச் சிறுபுடமாய்ப் பத்திட்டு எடுத்து, நாலிலொன்று சூதஞ்சேர்த்து, வட்டாக்கிக் கருந்துளசியால் கவசித்துச் சீலைமண் செய்து, புடமிடச் சுண்ணமாம். இதுபோல் மற்ற விளையாடல் முழுமையும் ஒருவாறு,

கல்ப நியாயம்
நாகக்கொட்டையை அரைத்து நாகத்துக்குக் கவசம் செய்து, சிறுபுடம் 10 போட்டுச் சுறுக்கிட்டு, அதற்கு நாலிலொன்று சூதம் தொந்தித்து, துளிசியிலை அரைத்துக் கவசம் செய்து புடம் போட்டால் சுண்ணமாகும். அதை எடுத்துப் பசியில்லாதவனுக்கு நவநீதத்தில் கொடுக்க இரண்டரை நாழிகையில் பசி உண்டாகும். இதுதான் குண்டோதரனுக் கன்னமிட்ட தென்பது. கல்ப நியாயம். 33. பாற்கடல் கடைந்தது
திருப்பாற்கடல் கடைந்து அமுதபானம் தேவர்கள் செய்யும் பொருட்டு விஷத்தை ருத்திரர் உட்கொண்டா ரென்பதற்குப் பொருள்:- திருப்பாற்கட லென்பது தேங்காய். அமுதமென்பது அதன் ஜலம். தேங்காயின் பாலிலுள்ள எண்ணெயே விஷம். மேற்படி எண்ணெயாகிய விஷத்தைப் போக்குவது முப்பூவாகிய ருத்திரன். ஆதலால், தேங்காய்ப் பாலிலுள்ள விஷமாகிய எண்ணெயை முப்பூவால் போக்குவது ருத்திரன் விஷம் சாப்பிட்டது. மற்றக் கடல்கள் யாவும் இட்சு, மது முதலிய வஸ்துக்களே. இவ்வாறு, அண்டத்தினும் பிண்டத்தினும் பௌதிகத்தினும் தாதுக்களினும் ஓஷதியினும் கடல்கள் உள. திருப்பாற்கடல்
திருப்பாற்கட லென்பது தேங்காய். அமுத மென்பது ஜலம். தேங்காய்ப் பாலைப் பிழிந்து முப்பூவைப் போட அமுதமாம். விஷமுண்டா ரென்பது தேங்காயிலுள்ள எண்ணெயை முப்பூவால் போக்குவதே விஷஞ் சாப்பிடுவ தென்பதற்குப் பொருளாம். கருப்பஞ்சாற்றுக்கட லென்பது கரும்பு, மதுக்கட லென்பது தேன். 34. பாற்கடலில் பள்ளிகொண்டது

ஆகாரம் உண்டவுடனே ஜீரணமாய்ப் பால்வண்ணமாக ஆகாரப் பையில் வெண்மை நிறமாக இருப்பது திருப்பாற்கடல் என்றும், அதனடியில் உண்டாம் பசி – தீவிர சத்தியாகிய உஷ்ணம் – வடவா முகாக்கினி என்றும், இரண்டிற்கும் மத்தியில் உண்டாகிய சீதளம் விஷ்ணு பள்ளிகொண்டது என்றும் சொல்வது. திருப்பாற்கடலில் விஷ்ணு பள்ளிகொண்டது இது தான்.

35. நாராயணன்

நாராயணன் என்பதன் பொருள்: அப்பு தத்துவத்தின் அதிஷ்டான கர்த்தாவென்றும், அப்பு தத்துவத்தில் தோன்றினவன் என்றும், நர விசேஷணப் பிறப்பை உடையோன் என்றும், நரனில் தோன்றினோன் என்றும், மாயாகோஷத்தை அல்லது நடப்பை உயிர்க்கு உண்டு பண்ணுவோன் என்றும், இன்ப சத்தியை உயிர்க்கு ஊட்டுவோன் என்றும் கொள்ளலாம். இன்னும் பலவேறு வகையிலும் கொள்ளலாம். நாரம் ஜலத்தில், அணன் உற்பத்தியானவன், ந மாயையினுடைய, ர கோஷம் – நடப்பு – வியாபாரத்தை, ய – உயிர்களுக்கு, ண – உண்டுபண்ணுகிறவன். ந பிரகிருதியினுடைய; ர சேட்டிப்பை, ந ஆதிசத்தியினுடைய, ர இன்பத்தை…

36. கருடன்

கருடன்மீது விஷ்ணு ஏறியது என்பது: க ஜலம், ரு கருமை, ட வெண்மை. ஆதலால் விளங்கா வெண்மையாகிய ஜலத்தின் பின் தோன்றும் செம்மைக்கு இடையில் கருமையாகிய நீராவியே விஷ்ணு. ஆதலால், சீத வஸ்துக்களெல்லாம் விஷ்ணு; அணுத்துவ மெல்லாம் பிரமா; உஷ்ணத்துவ மெல்லாம் ருத்திரன். இது போல் மற்றத் தத்துவங்களையும் அறியவும்.

37. அயக்கிரீவம்

அயக்கிரீவ மென்பதற்குப் பொருள்: அயம் பிராணவாயு, கிரீவமென்பது கழுத்து. ஆகவே அயக்கிரீவ மென்பது பிராணவாயுவையே கழுத்தாகக் கொண்டது.

அயக்கிரீவம்

மாலின் 10-வது அவதாரம் அயக்கிரீவ அவதாரம், அயம் என்பதற்குப் பொருள் பிராணவாயு, கிரீவம் என்பது கழுத்து, ஆகவே அயக்கிரீவம் என்பது பிராணவாயுவையே கழுத்தாகக் கொண்டது. இப்படியே மற்ற அவதாரங்கள் என்பவற்றிற்கு வெவ்வேறு பொருள் உண்டு.

38. வாமனாவதாரம்

காசிபர் என்பது மனம். இவரது பிள்ளையாகிய மாபலிச் சக்கரவர்த்தியாவது மனதின் மந்தம். அதில் உண்டாகிய சீதம் சாக்கிரத்திலும் சுழுத்தியிலும் நிறைந்து நின்றது. உலகளந்த பெருமாள் ஒருகால் மேலும் ஒருகால் கீழும் அளந்து ஓர் அடிக்கு இடமில்லா திருந்தது. 39. வடுகநாதர்

வடுகநாதர் விஷ்ணுவினுடைய தோலை உரித்துப் போர்த்துக் கொண்டது யாதெனில்: மனத்தில் உண்டான மந்தத்தில் தோன்றின சீதமான விஷ்ணு அகம் புறம் எங்கும் இருப்பதை, அப்படி எங்கும் பரவவொட்டாது, உஷ்ண சத்தி விளங்கிச் சீதபாகத்துக்குக் கவசம் போல் உட்பக்கம் இல்லாமல் மேற்புறமாகப் பரவியிருப்பது ருத்திரனான வடுகநாதர் என்பது.

40. பைரவர் வீரபத்திரர்

வடக்கே பைரவர் இருப்பார் என்பது யாதெனில்: நமது பாதத்தின்கண் உஷ்ணசத்தி விளங்குவதுதான். சிரசிலே வீரபத்திரராவது* இச்சாசத்தி. இதைத் தென்திசையில் வீரபத்திரர் இருப்பதாகச் சொல்லுவது.



* அண்ட முகட்டில் உள்ளது வீரபத்திரபுவனம்.



41. வேதாரண்யம்

வேதாரணியத்தில் கதவு திறக்கப்பட்டதும் மூடப்பட்டதும் யாதெனில்: வேதப்பொருளை மறைத்ததுந் திறந்ததும் எனக் கொள்க. உண்மையை விளக்கியது திறந்தது, மறைத்தது மூடியது.

42. வேதம்

அப்பு தத்துவத்தின் குணம் நான்கில் இருந்துண்டானவையே நான்கு வேதமும்.

43. வேதம் ஆகமம் முதலிய நூல்கள்

வேதம் பதி லக்ஷணத்தை விளக்கும். ஆகமம் பசு லக்ஷணத்தை விளக்கும். புராணம் பாச லக்ஷணத்தை விளக்கும். இதிகாசம் பத்தியை விளக்கும். ஸ்மிருதி கர்மத்தை விளக்கும். மேலும் வேதம் பதி பசு பாசத்தைச் சொல்லும். அதுபோல் ஆகமமும் சொல்லும். வேதம் என்பது நான்கு மகாவாக்கியந்தான். மற்றவை அங்க உபாங்கசாங்கப் பிரத்தியாங்கங்கள். இவைகள் யாவும் மனமடங்கும் துவாரமாம்.

44. வேதாகம வழிகள்

ஒருவன் ஆன்ம லாபம் பெறுவதற்கு இரண்டு மார்க்கம் உண்டு. ஒரு மார்க்கம் படியுள்ளது; ஒரு மார்க்கம் படியில்லாதது. எப்படி எனில்: மெத்தை ஏற வழியிருப்பதுபோல். ஏறிவிட்டால் மேலிடமாகிய அரமியம் ஒன்றே. அவ்வழி, ஆகமவழி சோபான முடையது. வேதவழி சோபானம் இல்லாதது. ஒருவன் ஆகமவழி செல்லாது வேத வழி போகக்கூடாது. ஏனெனில் ஜீவன் உபாசனா துவாரமாய் ஜீவத்துவங் கெட்ட இடத்தில், இரண்டற்று ஒன்றாகிய வேதவழி என்னும் அத்துவைதம் நிலைக்கும். வேதவழியான அத்துவைதம் அனுபவம்; ஆகமவழியான துவைதம் விவகாரம். ஒன்றென விவகரிப்பவரிடத்தில் அனுபவமில்லை. உபதேசரீதியில் சொல்லாது ஒன்றெனப்படவேண்டும்.

45. தேவாரம்

தேவாரம் என்பது: தேவ் – தயவு, ஆரம் – ஒழுங்கு, தயா ஒழுங்கே தேவாரம்.

46. திருவாசம்

திருவாசகம் என்பது: மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.

47. திருமந்திரம்

இந்த மார்க்க உண்மை தெரிய வேண்டுமாகில் திருமந்திரத்தைக் கவனிக்கில் விளங்கும்.

48. திருமந்திரமும் திருவாசகமும்

சாத்திரங்களிற் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இஃது மொத்தம் எண்ணாயிரம்; தோத்திரங்களிற் சிறந்தது திருவாசகம். இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.

49. சிவம் என்பதன் பொருள் சிவம்

சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம். சச்சிதானந்த மென்பது சத்து, சித்து, ஆனந்தம். இதில் சிகரம் சத்து. வகரம் சித்து, மகரம் ஆனந்தம்; சிகரம் எல்லா முள்ளதாய் விளங்குவது, வகரம் எல்லாம் விளங்குவதா யுள்ளது, மகரம் இரண்டினாலும் நிரம்பிய வின்பம்.

சிவம்

சிவம் என்பதற்குப் பொருள் ஸச்சிதானந்தம். ஸச்சிதானந்த மென்பது ஸத்து சித்து ஆனந்தம். சி சத்து, வ சித்து, ம் ஆனந்தம். சி எல்லாம் உள்ளதாய் விளங்குவது, வ எல்லாம் விளங்குவதாயுள்ளது, ம் இந்த இரண்டினாலும் நிரம்பிய இன்பம்.

சிவ

சிவ என்பதற்குப் பொருள் அனாதியாய் மலமில்லாத சர்வ வல்லமை யுடையது. சி என்பதற்குப் பொருள் அனாதியாய் மலமில்லாதது; வ என்பதற்குப் பொருள் சர்வவல்லமை யுடையது.

சிவ

சிவ என்பதன் பொருள் அனாதியாய் மலமில்லாத சர்வ வல்லப முடையது. சி என்பது அனாதியாய் மலமில்லாதது, வ என்பது சர்வ வல்லப முடையது.

சி

மேலும் சி என்னு மெழுத்துக்குப் பொருள் ஒருவாறு: இதிலடங்கிய பீஜம் 5. அவையாவன: தோன்றி அசைதலாகிய விந்து ஒன்று, அதன் புடைபெயர்ச்சி ஒலியாகிய நாதம் 2, அதன் வண்ண வடிவமாகிய வரி அக்கரத்தின் சகரமெய் யென்னும் ச் 3, அதனது குணங்களை வெளிப்படுத்தும் ஆதி அக்கரமாகிய பிரணவ மூல அகரம் 4, இதைத் தன் வண்ணச் சுபாவத்தோடு வெளியில் தோன்றச் செய்வித்து விளக்கும் அருட்பிரணவமாகிய இகரம் 5, ஆகக் கூடிய விந்துக்களைந்தும் ஓருருவமாய்ச் சிகரமாயிற்று. இதன் இலக்கணம் விரிக்கிற் பெருகும். அனுபவத்தா லறிக.

சி

சி என்னு மெழுத்துக்குப் பொருள்: இதன் பீஜாக்ஷரம் 5. அவையாவன: பிந்து, நாதம். சகரஒற்று, அகரம், இகரம். இவை கூடியது சிகரமாகிய ஓர் உருவம் இதற்குப் பொருள் சுத்த சன்மார்க்க காலத்தில் வெளிப்படும்.

50. சிவகுணமும் ஜீவகுணமும்

சிவகுணம் 8 ஜீவகுணம் 8

தன் வயத்தனாதல் பராதீனன்

தூய உடம்பினனாதல் துக்கதேகி

இயற்கை யுணர்வினனாதல் செயற்கை உணர்வினன்

முற்றும் உணர்தல் சிற்றுணர்வினன்

இயல்பாகவே பாசங்களினீங்குதல் பந்தன்

பேரருளுடைமை காடின்னியன்

முடிவிலாற்ற லுடைமை நிர்பவன்

வரம்பிலின்ப முடைமை மலதேகி

51. சிவமாதல்

பசுவென்பது முற்றும் மலமுள்ளது.

ஜீவனென்பது மூன்று பங்கு மலமுள்ளது.

ஆன்மாவென்பது ஒரு பங்கு மலமுள்ளது.

சிவம் முற்றும் மலம் நீங்கியது.

ஆதலால் மலம் முற்றும் நீங்கித் தயா வடிவமாவதே சிவமாதல்.

52. பஞ்சாக்கரம்

சமய சூக்கும பஞ்சாக்கரத்தின் தாத்பரியம் நான்கு, மேற்படி அக்ஷரம் 5: சிவாயநம – இதற்குத் தாத்பரியம் நான்காவன. பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம் ஆக 4. இதில் பூர்வத்திற்கு அர்த்தம்: சிவனை நமஸ்கரிக்கின்றேன். பூர்வபூர்வத்திற்குத் தாத்பரியம்: அனாதியில் மலமில்லாது எல்லாமுடைய சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களைச் சமர்ப்பிக்கின்றேன். மற்ற இரண்டிற்கும் அர்த்தம் அனுபவத்தால் தெரியலாம். இதுபோல் மத சன்மார்க்கத்திற்கும் மேற்படி அக்ஷரமே. அதற்கும் முன்போலவே நான்கு தாத்பரிய முள்ளது. அதில் பூர்வத்திற்குத் தாத்பரியம்: சி என்பது பதி, வா என்பது சத்தி, ய வென்பது ஜீவன், ந வென்பது திரோதை, ம வென்பது மாமாயை; ஆதலால், மாமாயை திரோதை நீங்கி, ஜீவ போத மற்று, அருள் வடிவாய்ச் சிவமாவது. பூர்வபூர்வத்தின் தாத்பரியம்: சி என்பது எல்லாமுடையது, வா என்பது அபிந்நமாகிய அருள், ய வென்பது ஆன்ம சிற்சபை, ந வென்பது சீவன், ம வென்பது பசு; ஆதலால் பசுத்தன்மை கெட்டு, ஜீவபோதம் போய், ஆன்ம வியற்கை வடிவாய்ச் சத்துவமயமாய் எல்லாமுடையதுவாய்ப் பூரணமாய் நிற்றல்; ஒருவாறு. அனுபவத்தில், பரவிந்து பரநாதம் பரத்திலும், அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும். இவ்வளவும் செபமூலமாய்க் கரண சுத்தி வந்து, அக்ஷர முன்னுதலை விட்டு, அறிவாகிருதியாய், கருணையும் சிவமுமே பொருளெனும்படி நிற்றற்கு முதற்றுவாரமாம். மற்ற உத்தரத்தில் ஏம சித்தியும் உத்தரோத்தரத்தில் தேகசித்தியும் சொல்லும். இஃது மத சன்மார்க்க அனுஷ்டானம். இதுபோல் சமயத்திலும் தேகசித்தியும் ஏமசித்தியு முள. மேற்குறித்த சமய மதங்களின் விரிவு அனந்தகோடி. அந்த சித்திகள் யாவும் அவ்வச்சமய மதங்களின் கர்த்தா மூர்த்தி தலைவன் தலைவி முதலியவர்கள் பதப்பிராப்தி வரையிலும் நிற்கும். ஆதலால் மேற்குறித்த இரண்டு சித்தியும் எக்காலத்தும் அழிவுறா திருப்பதாகச் சொல்லுவது சுத்த சன்மார்க்க பூர்வோத்தரம். ஏமசித்தி1 தேகசித்தி ஆகிய இவற்றை மேற்குறித்த சூக்கும பஞ்சாக்கரத்தில் சொல்லுவதற்குப் பிரமாணம்:- “சிவாயநம வெனச் செம்பு பொன்னாயிடும்”2 “சிவாயநமவெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாய மொருநாளு மில்லை.”3 ஆதலால், மேற்குறித்த அக்கரத்தை மகான்கள் குழுக்குறியாக – வரிவடிவாய் – சுட்டினார்கள். இதை அக அனுபவிகள் தத்துவங்களை அறிந்து, அனுசந்தானஞ் செய்வார்கள். சாதகிகளுக்கு நாவினாலுன்னிக் கரண மோய்ந்தால், தத்துவானுசந்தானஞ் செய்யக்கூடும். உலகிகள் நாவினாலுன்னத் தங்கள் மனோரதம் சித்திக்கும். வகர வித்தை4 யுடையவர்கள் மேற்படி அக்கரத்தின் உண்மையைப் பவுதிகம், லோகம், ஓஷதி, லவணம், முதலியவற்றிற் சேர்த்து வகரத்தை முடிப்பார்கள். தகர வித்தை5 யுடையவர்கள் அதுபோலவே அமைத்துக்கொண்டு தேகத்தை நீடிக்கச் செய்வார்கள். ஆதலால் மேற்குறித்த அக்கரங்கள் பரிபாஷை. இதனது உண்மை யாவும் சுத்த சன்மார்க்க சகஜசாத்திய ஞானானுபவிக்கு விளங்கும்.



1. ஏமசித்தி – பொன் செய்யும் வல்லபம்.
2. திருமந்திரம் 903
3. நல்வழி 15 (ஔவையார்)
4. வகரவித்தை – பொன் செய்தல்.
5. தகரவித்தை – தேகசித்தி செய்துகொள்ளல்.



சிவாய நம

சமயத்தில் சிவாயநம வென்னும் வாக்கியத்திற்குத் தாத்பரியம் 4 வகைப்படும்: பூர்வம், பூர்வபூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். பூர்வம்: சிவனை நமஸ்கரிக்கின்றேன் என்பது. பூர்வ பூர்வம்: அனாதியில் மல மில்லாததையும் எல்லாமுடையதாயும் உள்ள சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களைச் சமர்ப்பிக்கிறேன் என்பது. உத்தரம் உத்தரோத்தர மென்னும் பொருளுக்கு விவரம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும்.

பஞ்சாக்ஷரமும் சித்தியும்

சிவாயநம வென்னும் மந்திரத்துக்குப் பொருள் முன்போல் 4 வகை. அதில் பூர்வமாவது: சி என்பது பதி, வா சத்தி, ய ஜீவன், ந திரோதை, ம மாயை. பூர்வ பூர்வமாவது: சி யென்பது எல்லாமுடையது, வ என்பது அபின்னமாகிய அருள், ய ஆன்மாவாகிய சபை, ந ஜீவன், ம பசு, உத்தரத்தின் பொருள்: பரவிந்து பரநாதம் பரத்திலும், அபரவிந்து அபரநாதம் பூர்வத்திலும் வழங்கும். இவ்வளவும் சிவத் தியானமல்ல. தத்துவ அனுசந்தானமே. உத்தரத்தில் ஏமசித்தியும் உத்தரோத்தரத்தில் தேகசித்தியும் சொல்லுவது மத சன்மார்க்க அனுஷ்டானமாம். பஞ்சாக்ஷரத்தில் ஏமசித்தியும் தேகசித்தியும் சொல்வதற்குப் பிரமாணம்: “சிவாயநம வெனச் செம்பு பொன்னாயிடும்” “சிவாயநம வெனச் சிந்தித்திருப்பார்க்கு அபாயம் ஒருநாளுமில்லை”. ஆதலால் பரிபாஷையால் மறுத்தது. மேற்குறித்த ஏமசித்தியும் தேகசித்தியும் எக்காலத்தும் இருக்கும்படியாகச் சொல்வது சுத்த சன்மார்க்கப் பூர்வோத்தரம்.

சிவ சிந்தனை

ஓம் சிவாயநம என்று சதா சிந்தித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இவ்வுலகம் அருட்சத்தி, பொருட்சத்தி, கிரியாசத்தி, யோக சத்தி, ஞானசத்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும். யோகம் செய்தல் வேண்டுவதில்லை. அதில் அழுந்தி விட்டால் மீளுவது கஷ்டம். சதா சிவக்கலப்பாய்க் கிடந்தாலும் மீளுதல் அருமை. மூடம் உண்டாகும். உண்மை.

53. பிரணவம்

ஓம் என்னும் எழுத்து பிரணவம் என்று சொல்லப்படும். படைத்தளித்தழிக்க வல்ல தலைவன் என்பதே அந்த ஓங்காரத்தின் பொருள்.

பிரணவம்

பிரணவத்தின் ஐந்து பாகம் யாதெனில்:- அகரம், உகரம், மகரம், விந்து, நாதம். பஞ்சமி என்னும் வாக்கு பிரணவத்தின்கண் இருந்து தோன்றியது. அதற்கு ஸ்தானம் மூலாதாரம். அதிலிருந்து தோன்றிய மற்ற நான்கும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி. இவற்றிற்கு இடம் நாபி, இருதயம், கண்டம், லலாடம்.

54. அகரம்

மூலாங்கப் பிரணவமாகிய அகர லக்ஷணம் ஒருவாறு:-

ஊன்றல் வாமை.

சுழித்தல் ஜேஷ்டை.

விசிரிம்பித்தல் ரௌத்திரி.

மடித்து மேலேறல் காளி.

அங்கிருந்து கீழ்வரல் கலவிகரணி.

மேல் புடைபெயர்த்தல் பலவிகரணி.

கீழ்த்தாழல் பலப்பிரமதனி.

கீழ் ஊன்றி நிற்றல் சர்வபூததமனி.

வரிவடிவாதல் மனோன்மனி.

இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளுமுள.

அகரம்

அகரமாகிய முதல் எழுத்து உற்பத்தி விவரம்:-

1. விந்து – பெரிய வெளிச்சம், சூரிய வெளிச்சம்.

2. நாதம் – பெரியநாதம்.

3. பரவிந்து – அதில் பாதி வெளிச்சம், சந்திர வெளிச்சம்.

4. பரநாதம் – நாதம்.

5. அபரவிந்து – வெளிச்சம், நக்ஷத்திர ஒளி.

6. அபரநாதம் – நாதம்.

7. திக்கிராந்தம் – அருகியவெளிச்சம், மின்னல் ஒளி.

8. அதிக்கிராந்தம் – சப்தம்.

9. வாமசத்தி

10. ஜேஷ்ட சத்தி.

11. ரௌத்திரி சத்தி.

12. காளி சத்தி.

55. காயத்ரி
காயத்ரி: கா-ய-த்ரி. க ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம். ய வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம். ஆ அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று. அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்க மின்றிக் கடந்தால், ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு. பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று. வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு: இரு – இரண்டு, ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும்; பத்து (பற்று) – பிடி, பற்றினால்; நான்கு – நாலாகிய ஜீவகாருண்யம், ஈசுரபத்தி, பாச வைராக்கியம், பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம்.

மேலும், தத்துவ த்ரேயங்களான மூன்று தேகங்களுக்கும் தத்துவம் யாதெனில்:- வர்ணம் இருபத்துநான்கு. ஆதலால், ஸ்தூலதத்துவம் இருபத்துநான்கு. பாதம் மூன்று, காயத்ரி திரி மூர்த்தி ஸ்வரூபம், இவற்றுள் ஒன்றில் ஒன்றைக் கொடுக்கவந்தது ஒன்று:- 3,3,1 ஆகிய இவற்றைச் சேர்க்க ஏழு ஆகிறது. ஆதலால், சூட்சும தத்துவம் ஏழு. இதற்குச் சத்தி மூன்று. அநுபவசத்தி ஒன்று, சமத்துவம் ஒன்று. ஆக ஐந்து. ஆதலால் காரணதேக தத்துவம் ஐந்து. மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்தால், அனுபவம் விளங்கும். எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம்.

56 தத்துவம்
தத்துவமென்பது: தத்+தவம் = தத்துவம். தத் – அது. அது வென்பது சிவம். த்வம் – அதன்தன்மை. ஆதலால், தத்துவம் என்பது சிவத்தின் தன்மை.
57. குடிலை
குடிலை என்பது மூலப் பிரகிருதி.
58. பூதம்

பூதம் என்பது: பூ-த-ம். பூ அலர்ந்தது, த தடித்தது, ம் கலத்தல், ஆதலால், எங்கும் நிறைந்து அணுவாய்க் கலத்தல் பூதம்.

பூதம் என்பதன் சப்தார்த்தம்
பூதமென்பது யாது? அதனது சொரூப ரூப சுபாவங்களென்ன? பூதம் என்பதற்குச் சப்தார்த்தம்: பூ மலர்ந்தது, பிரகாசம்; த தடித்தது, காரியம்; ம் ஊன்றியது, நிலை. இதற்குத் தாத்பரியம்: நிலை பெற்ற காரியம் பிரகாசம். பூத அக்கினித் தோற்றமென்றும் பெயர். பூதகாரிய அக்கினி என்றும் பெயர். பூ என்பதில் உகர உயிரும் தம் என்பதில் அகர உயிரும் எண்ணில் அ – ம், உ – ம் ஆயின, ஆக தொகை 10. இந்தப் பத்து இடத்திலும் பூதகாரிய அக்கினித் தோற்றம் உண்டு. கல்லுக்குள்ளிருக்கிற நெருப்பு பஞ்சில் காரியப்படுவது போலாம். பத்துப் பொது ஸ்தானங்களாவன: மண், ஜலம், அக்கினி, காற்று, வெளி, பிரகிருதி, மாயை, சூரியன், சந்திரன், நக்ஷத்திரம் ஆக இடம் 10.
59. பௌதிகம்

பௌதிக மென்பது லிங்கமாதி உபரசம் நூற்றிருபதிற்கும், பாஷாணமாதி 64 பாஷாணங்கட்கும், சுக்காதி ஓஷதி மூல பத்திர பீசங்கட்கும் பெயர். இஃது ஒருவாறு பூதகாரிய தேகமாதி தத்துவங்கட்கும் பெயர். பௌ+தீ+அகம் = பௌதீகம். பௌ – மூடல், அகம் – உள், தீ – அக்கினி, ஆதலால் தீயை உள்ளடக்கியது பௌதீகம். தீ என்பது காரண உஷ்ணம்.

பௌதிகங்கள்
பௌதிகங்க ளென்பவை வீரம் பூரம் முதலிய 64 சரக்குகள்.
60. நினைப்பு மறைப்பு
நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்: சந்திரன் அக்கினியோடு கூடி, சூரியபாகத்திலுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும் போது, உண்டாகும் நினைப்பு; சூரியன் அக்கினியோடு கூடி, சந்திர பாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும்போது உண்டாகின்றது மறைப்பு. நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது யாது? ஜனனம், மன அசைவு, ஒன்றை நினைத்தல், சகலகாலம், மேற்படி தத்துவம் வேறொன்றில் பற்றல், தத்துவத்தின் அசைவாகிய ஆவி மேலேறுதல், மேற்படி ஆவி ஏறின இடத்தில் நில்லாது அக்கிரமித்தல். மறைப்பென்பது யாது? மரணம், தூக்கம், மனம் ஒன்றைப்பற்றி உடனே மறைதல், கேவலகாலம், மேற்படி தத்துவத்தின் கூர்மை கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை இல்லாதிருத்தல், மேற்படி ஆவி அக்கிரமித்தல், மனம் ஆபாசப்பட்டுச் சூனியமாதல். மேற்குறித்த நினைப்பு மறைப் பற்று நிரதிசயானந்தமாய் அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்க சாதனம்.
நினைப்பு மறைப்பு
இந்த ஜீவன் அக்கினியின் சூரியபாகத்தி லுண்டாகும் காற்றினால் அசைக்கப்படும்போது நினைப்பும், அக்கினியின் சந்திரபாகத்தில் உண்டாகுங் காற்றினால் அசைக்கப்படும் போது மறைப்பும் உண்டாகின்றன. இதுதான் நினைப்பு மறைப்பு உண்டாவதற்குக் காரணம்.
நினைப்பு மறைப்பு

நினைப்பு மறைப்பு என்பதற்குப் பொருள்: நினைப்பென்பது ஜனனம், மனம் நினைத்தல், சகலம், தத்துவத்தின் ஆவி அதிக்கிரமிக்கிறது. மறைப்பென்பதற்குப் பொருள்: மரணம், கேவலம், தூக்கம், தத்துவத்தின் கூறுபாடு கீழ்ச்செல்லுதல், பிரக்ஞை யில்லாதிருத்தல், அதனது உஷ்ணம் அதிக்கிரமிக்கிறது, மனம் ஆபாசப்பட்டுக் கீழ்ச்செல்லுதல். ஆதலால், நினைப்பு மறைப்பு அற்று, நிரதிசயானந்தமாய் அருள்வடிவமாவதே சுத்தசன்மார்க்க சாதனம் இது ஒருவாறு.

61. விருப்பு வெறுப்பு
விருப்பு வெறுப்பு என்பதற்குப் பொருள்: விருப்பென்பது யாது? ஒன்றை வேண்டிப் பந்தப்பட்டு, பூரண லக்ஷியத்தை விட்டு, அதிசயமாகப் பார்த்து நிற்றல். இந்த விருப்பால் தானுங் கெட்டு, இதர வஸ்துவுங் கெட்டு, சாதனமுந் தடைப்பட்டுவிடும். எவ்வகையிலும் விருப்பென்பது கூடாது. வெறுப்பென்பது யாது? வேண்டாமை, துவேஷம், இதர வஸ்துவைப் பற்றாதிருத்தல். இந்த வெறுப்பால் இதரவஸ்துவிடத்தில் துவேஷந் தோன்றி ஜீவோபகாரத்தைத் தடை செய்யும். ஆகையால் வெறுப்புங் கூடாது. மேற்குறித்த இரண்டு மற்று, சத்துவமயமாய் நிற்றல்வேண்டும்.
விருப்பு வெறுப்பு
விருப்பு வெறுப்பு என்பதற்குப் பொருள்: விருப்பென்பது வேண்டுதல், பந்தம். பூர்ணபாவனையை விட்டு அதிசயமாகப் பார்த்து விரும்புதலால் பூர்ணபாவனை தடைப்பட்டுத் தான் கெடுவன். ஆதலால் விருப்பென்பது எவ்வளவும் கூடாது. வெறுப்பென்பது வேண்டாமை, துவேஷம், எதிர்கண்ட வஸ்துவைப் பற்றாதிருத்தல். இதரவஸ்துவைக் கெடுதலென்று நினைப்பதால் வெறுப்பென்பதும் கூடாது. விருப்பு வெறுப்பு அற்று அருள்வடிவாவதே சுத்த சன்மார்க்கம்.
62. சங்கல்பம்
சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்:- விரிவாவது ஐந்து: நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்ப மென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்; ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்ப மென்பது பிரம சதாசிவ கால அளவைக் குறிக்கிறது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலை விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.

மேற்குறித்த சங்கல்ப மயமா யிருந்தால் சிவானுபவம் பெறலாம். “சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றி னதுதான் வந்துமுற்றும்”* என்றபடி.


* தாயுமானவர் பாடல், கருணாக்கரக் கடவுள், 7.



சங்கல்பம்

சங்கல்ப மென்பது 5 வகை. அதாவது நிர்விகல்பம் 1, சவிகல்பம் 2, சங்கல்பம் 3, விகல்பம் 4, கல்பம் 5. நிர்விகல்பமென்பது கடவுளறிவு. சவிகல்பமென்பது அதினது வியாபகம். சங்கல்பமென்பது யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவாகிய நினைப்பே, முன் அசைவின்றி அசைந்த அசைவாகிய மேலசை வென்னும் புடைபெயர்ச்சியே, எக்காலத்தும் மரணமடைய மாட்டோமென்கிற பிரக்ஞையே. விகல்பம் என்பது பிரம சதாசிவ கால அளவைக் குறித்தது. கல்பம் என்பது மேற் குறித்தவைகளுக்கு அனுசந்தானங்கள். சங்கல்ப விகல்ப கல்பமென்பவை 3 வகை. உள் அழுந்தல் ஆன்ம திருஷ்டி, அதைச் சிந்தித்தல் ஜீவ திருஷ்டி, அதை விசாரித்தல் மனதிருஷ்டி. இந்த மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம். ஆதலால், மனத்தில் யாதொன்றும் இல்லாமல் சுத்த மனமாக, நாம் நஷ்டமடையமாட்டோ மென்று உள்ளழுந்தி நிச்சயித்தலே சங்கல்பம்.

பற்று
மனத்தின் கூறுபாடு 4 வகை: அதாவது ஜீவப்பற்று, பந்துப் பற்று, களத்திரப்பற்று, தேகப்பற்று. தேகப்பற்றாகிய அகப்பற்றுப் போயிருத்தல் சங்கல்பம்.
சங்கல்பம்

சங்கல்பமாவது: சம் – முடிவு; கல்பம் – காலபேதம்; கால முடிவு.

63. தன்னையறிதல்

தன்னையும் தனக் காதாரமான தலைவனையும் கூடஸ்தனையும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

64. கூடஸ்த பிரம ஐக்கியம்

கேவல வேதாந்தத்தில் கூடஸ்த பிரம ஐக்கியத்தின் பொருள். ஜீவசைதன்யம், ஈசுரசைதன்யம், பிரமசைதன்யம், கூடஸ்தசைதன்யம், சர்வசாக்ஷி. இவற்றிற்குப் பிரதிநாமம் மேகாகாசம், ஜலாகாசம், கடாகாசம், தத்துவாகாசம், மஹாகாசம் ஆக ஐந்து. தம்பலப்பூச்சி முதல் மனுஷர்களில் மூடர் பரியந்தம் பரதந்திரர்கள், ஜீவசைதன்யம். சுராசுரர் அறிவுடைய ஜீவர்கள் சுதந்திரர்கள், இவர்கள் ஈசுரசைதன்யம். காரியம் ரூபம் முதலியவற்றோடு கூடிய சுத்ததேகி பிரமசைதன்யம். காரணகாரியம் ரூபாரூபம் முதலியவற்றுடனின்ற பிரணவதேகி கூடஸ்தசைதன்யம். காரணம் அரூபம் முதலியவாக நின்ற ஞானதேகி சர்வசாக்ஷியெனக் கொள்க.

சைதன்னியம்
ஜீவ சைதன்னியம் – மேகாகாசம்

ஈசுர சைதன்னியம் – ஐலாகாசம்

பிரம சைதன்னியம் – கடாகாசம்

கூடஸ்த சைதன்னியம் – தத்துவாகாசம்

சர்வசாக்ஷி – மகாகாசம்

ஜீவ சைதன்னியம் – தம்பலப்பூச்சி முதல் மனிதரில் மூடர் பரியந்தம், பரதந்திரர்கள்

ஈசுர சைதன்னியம் – அசுரர் ராக்ஷசர் உயரறிவுடைய ஜீவர்கள், சுதந்திரர்கள்

பிரம சைதன்னியம் காரிய ரூபத்தோடு கூடிய சுத்ததேகி

கூடஸ்த சைதன்னியம் – காரிய காரண அரூபத்தோடு கூடிய பிரணவதேகி

சர்வசாக்ஷி – காரண அரூபத்தோடு கூடிய ஞானதேகி

65. கடவுள் ஏகம் அனேகம்
கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குப் பொருள்: சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிக ளனேகம்; மதத்தில் பிரமம் ஏகம், ஜீவர்கள் அனேகம்; சாதாரணத்தில் கடவுள் ஏகம், பசுக்கள் அனேகம்; சுத்த சன்மார்க்கத்தில் தனிக்கடவுள் ஏகம், அவ்வருளால் சுத்தமாதி ஞான தேகம் வேறாகப் பெற்ற ஞானிகள் அனேகம் எனக் கொள்க.
கடவுள் ஏகம் அனேகம்

கடவுள் ஏகம் அனேகம் என்பதற்குத் தாத்பரியம்: சமயத்தில் சிவம் ஏகம், பிரமாதிக ளனேகம். சமயாதீதத்தில் சொல்லிய பிரமம் முதல் சுத்தப் பிரமம் வரையிலும் ஏகம், அதைப் பெற்றவர்களனேகம். சாதாரண பாகத்தில் கடவுள் ஏகம், ஜீவர்கள் அனேகம். சத்த சன்மார்க்கத்தில் கடவுள் ஏகம். கடவுளருளால் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற்ற ஞானிகளனேகம்.

66. கடவுள் ஒன்றும் இரண்டும் ஆதல்
கடவுள் ஒன்றல இரண்டல ஒன்றுமிரண்டுமானார் என்பதற்குத் தாத்பரியம்: ஒன்றல – கடவுளானவர் ஒன்றாகிய ஞானதேகியும் அல்ல. இரண்டல – சுத்தப் பிரணவதேகியும் அல்ல. ஒன்றுமிரண்டுமானார் – கடவுளானவர் தன்னருளைப் பெற்ற சுத்த ஞானிக்கு ஞானதேகத்தையும் சுத்தப் பிரணவதேகத்தையுங் கொடுக்க முதற் கருவியாக இருக்கின்றார். இதை அனுபவத்தால் குருமுகத்தில் உணர்க.
67. மூவகை உயிர்கள்

சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் ஆக 3. சகலர் இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை. செயற்கையாகிய காமியம் அல்லது கர்மம் இம்மூன்று முள்ளவர். பிரளயாகல இயற்கையாகிய ஆணவம், இயற்கையில் செயற்கையாகிய மாயை இவ்விரண்டு முள்ளவர். விஞ்ஞானகலர் இயற்கையாகிய ஆணவம் மாத்திரம் உள்ளவர். சகலர் ஜீவர்கள். பிரளயாகலர் கல்ப தேகிகள். விஞ்ஞானகலர் காலாதீதர்கள். சுத்தம் 9, அசுத்தம் 9, ஆக 18.

68. முக்குணம்
தானாக நிற்றல் சத்துவகுணம், ராகத் துவேஷ சம்பந்தமுடையது ராஜசம், சோம்பலாதி ஜீவ இம்சைக் கிடனாவது தாமசம். ஆன்மாவின் செயற்கை ராஜோதமங்கள், இயற்கை சத்துவம். ஜனன மரண ஏது செயற்கையாலுண்டாம்; இயற்கையால் சிவானுபவம் பெறலாம். இதை விரிக்கில், ஒவ்வொன்றும் மும்மூன்றாகும், அனந்தமுமாம்.
சத்துவம் ராஜசம் தாமசம்
தானாக நிற்றல் சத்துவம். இராகத் துவேஷாதிகளோடு கூடியது இராஜசம். ஜீவஹ’ம்சை செய்தல், சோம்பல், நித்திரை முதலியன தாமசம். ஆகையா லியற்கையாகிய சத்துவத்தோடு கூடிச் செயற்கையாகிய ராஜச தாமசத்தைச் சிறுகச் சிறுக நீக்க வேண்டியதில் சதா ஞாபகம் செய்யவேண்டியது.
குணவகை
சத்துவம், ராஜஸம், தாமசம் என்று குணங்கள் 3. ஒவ்வொன்றிலும் 3 சேர்ந்து 9 ஆயின. இந்த 9-ம் சுத்தம் அசுத்தம் என்னும் பேதத்தால் 18 ஆயின.
69. மூன்றாசை

சுத்த சன்மார்க்க லக்ஷிய அனுபவ விருப்ப முடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை, கனவினும் பெண்ணாசை, சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றுங் கூடாவாம்.

70. மூன்று அவஸ்தை
அவஸ்தை மூன்று: ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி. இவற்றில் உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாட ஸ்தானத்தில் நிற்பது ஜாக்கிரம்; சொப்பனமாவது உள்ளம் வாத நாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் இருப்பது; சுழுத்தியாவது உள்ளம் சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் நிற்பது.
71. மூவகை ஞானம்

ஞானமென்பது மூன்று வகைப்படும். அவை உபாயஞானம், உண்மைஞானம், அனுபவஞானம். இவற்றின் தாத்பர்யம்: நக்ஷத்திரப்பிரகாசம் போல் தோன்றிய ஜீவஅறிவே உபாயஞானம்; சந்திரப்பிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்மஅறிவே உண்மைஞானம்; எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுளறிவே அனுபவஞானம். ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது இந்திரியக்காட்சி, இந்திரியஅறிவு; கூடமாக அறிதல் கரணக்காட்சி, கரணஅறிவு; இன்னதென்று தெரிதல் ஜீவக்காட்சி, ஜீவஅறிவு; எதையுந் தானாக அறிதல் ஆன்மக்காட்சி, ஆன்மஅறிவு; இதற்குத் தோன்றுமறிவு 1, தோற்றுமறிவு 1, தோற்றுவிக்குமறிவு 1, பதியறிவு 1. ஆதலால், ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா; அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை; அதன் மயமாதல் காமம்; அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம்; எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.

அவாமாத்திரம்
இந்திரியக்காட்சி என்பது ஒரு வஸ்துவின் நாமரூபமின்றிக் காணுதல்; கரணக்காட்சி என்பது அந்த வஸ்துவைப் பற்றல்; அதை அனுபவிக்கவேண்டு மென்கிற சித்தவிருத்தி உண்டாகிறது ஆசை என்னும் காமம்; அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகம். ஆதலால் எந்த வஸ்துவினிடத்திலும் மோகம் காமம் முதலியவை யின்றி அவா மாத்திரமா யிருத்தல் வேண்டும். சன்மார்க்கத்தில் அவாவும் ஏகதேசத்திலும் கூடாது.
ஞான வகை
உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.

உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.

அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.

உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு. ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.

72. பர அபர ஞானங்கள்

ஞானம் பரஞானம் அபரஞானமென இரண்டு. பரஞான மென்பது முன், சாத்திரஞானம் அல்லது விசாரஞானம், வாசா கயிங்கரியம், சாதனம், வாச்சியார்த்தம். அபரஞானமென்பது பின், அனுபவ ஞானம், சாத்தியம், லக்ஷியார்த்தம். மேலும் பரம் முன், அபரம் பின் சாத்திரம் முன், அனுபவம் பின்; சாதனம் முன், சாத்தியம் பின். ஆதி – முதல், அந்தம் – கடை, அநாதி – ஆதி அந்த மில்லாதது.

73. மூவிடம் (தன்மை முன்னிலை படர்க்கை)
தமிழில் தன்மை முன்னிலை, படர்க்கை என்பவை யாவை? அவற்றின் கருத்து யாது? தன்மை, பண்புச்சொல், சார்புமயமாய் இருத்தலைப்பற்றி – தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்திருப்பதனால் – பண்புச் சொல் ஆகிறது. முன்னிலை என்பது முன்-நிலை, முன் இடங் கூறினது. ஆனால் மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்பது என்னெனில்: படர் – படரும்படியான, கை – இடம், நிலை – அகண்ட இடம். கை என்பது குறுகிய இடம். ஆதலால் பேதாபேதம் குறிக்கும் நிமித்தம் இரண்டாம் இடத்துக்கு முன்னிலை என்றும், மூன்றாம் இடத்திற்குப் படர்க்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும்.
74. பஞ்ச மகா பாதகங்கள்

கள், காமம், கொலை, களவு, பொய் – இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேஷ பாவம். எனினும், கள்ளுண்டவனுக்குக் காமம் உண்டாகாமலிருக்காது, கொலை செய்யத் துணிவு வாராமலிராது, களவு செய்யாமலிரான், பொய் பேச அஞ்சான். ஆகையால், இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இதில் ஒன்றை அடைந்தவ னானாலும் அவனை மற்றவை தொடராம லிரா.

75. பர அபர வாக்குகள்

வாக்கு நான்கு என்பது யாதெனில்:

அபரவாக்கு, பரவாக்கு, துரியவாக்கு, அனுபவ வாக்கு.

இவற்றில் அபரம் ஸ்தூலவாக்கு

பரம் அசரீரிவாக்கு

துரியம் அறிவில் விளங்குவது

அனுபவம் யாவுமாய் விளங்கித் தோன்றுவது.

76. பிபீலிக விகங்க* நியாயங்கள்

ஆன்ம லாபம் அடைவதற்கு நியாயம் இரண்டு. என்னெனில்: பிபீலிகா நியாயம்; விகங்க நியாயம். இவற்றுள் சிறந்தது விகங்கம், பலவகை இம்சையால் போகத் தடைப்பட்டுப் போவது பிபீலிகா மார்க்கம்.



* பிபீலிகம் – எறும்பு, விகங்கம் – பறவை, அன்னம்



77. சித்தாந்த வேதாந்தம்

சிஷ்யன் ஆசாரியனைத் தேடிப் பிடிப்பதான மர்க்கட* நியாயம் போற் காட்டப்பட்ட கோன்கண்ட குடியாகியது சித்தாந்தம். இவ்வழி நின்று ஜீவபோதம் கெட்டவிடத்தில், ஆசாரியனே சிஷ்யனைப் பற்றி இழுப்பதான மார்ச்சால* நியாயம்போல் ஊட்டப்பட்ட கோன் கொண்ட குடியாகியது வேதாந்தமாகிய அத்வைதம்.



* மர்க்கடம் – குரங்கு, மார்ச்சாலம் – பூனை.



78. ஜீவன்முத்தனும் ஞானசித்தனும்

ஜீவன்முத்தன் மனோசாஷ’. ஞானசித்தன் ரோமத்துக்கு ரோமம் சாக்ஷி. இவர் தொழில் எங்கும் சுற்றுதல், யாவுமாய் நிற்றலே.

79. புருஷன்

ஜீவனுக்குப் புருஷன் எனப் பெயர் வருவானேன்? வித்தியாதத்துவத்தில் புருஷன் என்பது விஷயத்தில் அழுந்தி யிருக்கும் எட்டுக் குணங்களைக் குறிப்பிக்கின்றபடியால், தத்புருஷன், மத்தியபுருஷன், புருஷன் என்று வழங்கியது. மேலும் சிவம் என்பது ஒன்றே.

80. சூரியகலை

சாதாரண ஜீவர்கள் சந்திரகலையில் இறப்பதும் பிறப்பதும் இயற்கை. பக்குவர்கள் சூரியகலையில் பிறப்பதும் இறப்பதும் இயற்கை. சூரியகலை அனுபவம் கிடைப்பது கஷ்டம். தினம் சூரிய கலையில் செல்லும்படி மனதை அந்தக் கண்களில் செலுத்தல்வேண்டும்.

சூரியகலை

ஆலமரத்தடியில் சூரியனை வணங்கவேண்டியது என்பது என்னெனில்: சூரியகலையில் தியானம் முதலிய செயல்கள் எல்லாம் செய்ய வேண்டியது பற்றிச் சொன்னது.

81. தியானம்

தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.

82. தீ€க்ஷ

தீ€க்ஷ என்பது யாதெனில்: தீ – மலம், €க்ஷ – ஒழிவு, தீ€க்ஷ – மல ஒழிவு.

83. நித்தியத் துறவு

நித்தியத் துறவென்பது: அறம் பொருள் இன்பம் வீடு – இந்த நான்கையும் நித்தியம் 4 காலங்களிலும் செய்து அனுபவித்துப் பற்றற்று இருப்பதே நித்தியத்தை அடைவதற்கு ஏதுவாக இருக்கின்றது.

84. உடம்பின் அருமை

இந்த உடம்பை அலக்ஷியம் பண்ணாமல் பொன்னைப்போல் பார்க்க வேண்டும்.

85. ஆண்டவர் சோதனை

ஆண்டவர் சோதிக்கின்றார் என்பது பிணி, மூப்பு, பயம், பசி முதலியவற்றால் வருந்தச் செய்விப்பதல்ல. மரணமடையச் செய்விப்பது தான் சோனை.

86. ஞான சிருஷ்டி

இறந்தவர்கள் உயிர்பெற்று வரும்போது அது ஞானசிருஷ்டி ஆதலால், ஞானத்தோடு வருவார்களா முன்னிருந்த அறிவோடுதான் வருவார்களா என்றால்? இந்த மானிடதேகம் ஆண்டவரது சிருஷ்டி அன்று, மாயா சிருஷ்டி. முன்னிருந்த ஞான அஞ்ஞானத்தோடுதான் வருவார்கள். ஆனால் கிஞ்சித்து ஞான விசேஷம் உண்டாயிருக்கும். ஆதலால், மீள தரிசன விசேஷத்தால் மந்தம் நீங்கி ஞானம் விளங்கும்.

87. ஆணவ மல நிவர்த்தி

மனுஷ்ய வல்லபத்தால் தனக்கிருக்கிற அசுத்தங்களை நிவர்த்தி செய்துகொள்ளக் கூடுமா வென்றால்: இது நல்லது இது கெட்டது என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய வாசனையில் கரணங்களைச் செல்ல வொட்டாமல் தடுக்கக்கூடுமே ஒழிய, நிவர்த்திக்கக் கூடாது. அது ஆண்டவரருளால் சுத்ததேகம் பெற்றவர்களால்தான் முடியும். அது அருளொளி கிடைத்தால் அத்தருணமே சுத்தக்கரணமாய் நிற்கும். அசுத்தம் வருவதற்குக் காரணம் யாதெனில் செம்பிற் களிம்பு இயற்கை. அதுபோல் ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை. செம்பிலே களிம்பு இயற்கையா யுள்ளதைப் பரிசனவேதியினால் நிவர்த்தித்து ஏமமாக்குவது போல், மாயாகாரியமான இந்தத் தேகத்தின்கண் உள்ள ஆன்ம இயற்கையாகிய ஆணவமலம் ஆண்டவரருளினால் நீங்கப்பெற்றுச் சுத்த உடம்பாக்கிக் கொள்ளலாம். ஆண்டவர் அருள் அடைவதற்கு, நாம் இடைவிடாது நம்முயற்சியின்கண் பழகுதல் வேண்டும்.

“ஓடாது மாயைநீ ஊடாது நன்னெறி

வீடா தெனச் சொன்னீர் வாரீர்

வாடா திருவென்றீர் வாரீர்*



* திருஅருட்பா 4449



88. அன்புருவம்

கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால், அழுத கண்­ர் மாறுமா? ஆகாரத்தில் இச்சை செல்லுமா?

89. அகங்கார ஒழிவு

தன்னைக் காட்டாது ஒழிக்க வேண்டும்.

90. இகபர காமங்கள்

இகபர காமங்களை விரும்பாமலிருத்தல் வேண்டும்.
91. அபேதம்

தங்களைப் பார்க்கவேண்டு மானால், என்னைப் பாருங்கள், என்னைப் பார்க்கவேண்டு மானால் தங்களைப் பாருங்கள், தங்களைப் பார்த்தால், என்னைப் பார்ப்பீர்கள், என்னைப் பார்த்தால், தங்களைப் பார்ப்பீர்கள்.

92. கவலை

கவலை கூடாது. உள்ளும் புறமும் ஓர் துணையாக வள்ளல் இருப்பதால், வாட்ட மடைவதற்குக் காரணமே இல்லை.

93. கலை அறிவும் அருள் அறிவும்

பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்.

94. ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்

சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.

ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது? வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.

மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

இதன் தாத்பரியம் யாதெனில்: சமரசம் என்பதற்குப் பொருள் – எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.

சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம்.

சமயாதீத மாவது மதம். மத சன்மார்க்கத்தின் பொருள் நிர்க்குண லக்ஷியஞ் செய்வது. நிர்க்குணமாவது பூர்வகுண மாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று லட்சியானுபவம் பெறுதல். யாதெனில்: சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி என்னும் வாக்கியத்தில் முக்கியானுபவம். அனுபவம் என்பது யாது?…. சத்துவகுண நிர்க்குண லட்சியத்திற்கு மார்க்கம் நான்கு: எவை எனில் சத்துவ குணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், இரண்டாவது புத்திரனாகப் பாவித்தல், மூன்றாவது சிநேகிதனைப் போலப் பாவித்தல், நான்காவது தன்னைப்போலப் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாதல், புத்திரனாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல். இது சத்துவகுண லட்சியார்த்த மாகிய மத சன்மார்க்க முடிவு.

சத்துவகுண விளைவு என்பதற்குப் பொருள் சத்துவகுணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞானசித்தியைப் பெறுதல். நெல்லை விதைத்தான் என்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்த்து அனுபவிக்கிற பரியந்தம் அடங்கியிருப்பதுபோல் சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருளெனக் கொள்க. குண நிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம். இம் மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல.

சுத்த சன்மார்க்கந்தான் யாதெனில்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்க மென்னுஞ் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மதானுபவங்களைக் கடந்தது. சத்மார்க்கம் என்னும் பொருட்கு அர்த்தம் நான்கு வகை: அஃது பூர்வாதி உத்தரோத்தர பரியந்தம். இதன் முக்கிய லட்சியம் சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானமாகிய சுத்த சிவ துரியாதீத நிலை பெறில் விளங்கும். ஏகதேசத்தில் ஒருவாறு பூர்வம் என்பதற்குப் பொருள்: சிருஷ்டியாதி அனுக்கிரக மீறாகச் செய்யும் பிரமாதி சதாசிவ மீறாகவுள்ள பஞ்ச கிருத்திய கர்த்தர்களி லொவ்வொரு கிருத்தியத்தின் விரிவு ஐந்தாக விரிந்த கர்த்தர் பேதம் இருபத்தைந்தாக விரிந்த மஹாசதாசிவாந்த அனுபவ காலத்தை அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய கால அளவு எவ்வளவோ அக்கால அளவு சுத்த மகா சதா சிவானுபவத்தைப் பெற்றுச் சுத்த தேகியா யிருப்பது. சத்தென்பது பரிபாஷை அது அனந்த தாத்பர்யங்களைக்கொண்டு ஓர் வாக்கிய பதமாய் நின்றது. மார்க்கம் என்பது யாதெனில்: துவாரம், வழி, வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். ஆதலால், எவ்வகையினும் உயர்வுடையது பாவனாதீத அதீதம், குணாதீதஅதீதம், லட்சியாதீதஅதீதம், வாச்சியாதீதஅதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கம்.

மேற்படி மார்க்கத்தின் ஏகதேசம் அடியிற் குறிக்கும் அனுபவங்கள்: எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும் வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமரவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யக்ஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மேற்குறித்த மார்க்கத்தின் முடிபு. ஒருவாறு.

சத் என்னும் சொல் பரிபாஷை என்பதற்குக் குழூஉக் குறியாக இதன் கீழ்வரும் சில மந்திர வாசக பதவர்ணாதிகளை உணர்க. காரண மாத்திரமாய் விளங்கா நின்ற விந்து நாத முதலியனவும், காரிய காரண மாத்திரமாய் விளங்கா நின்ற அம், அங், சிங், வங், மங், சிவா, வசி, ஓம் முதலியவும், காரிய மாத்திரமாய் விளங்கா நின்ற ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட் ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் இவ்வண்ணம் குறித்த பரிபாஷைகளின் உண்மை ஆன்ம அனுபவத்திலும் வகர தகர வித்தையிலும் விளங்கும்.

மேலும், மேற்குறித்த வண்ணம் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சமாதி செய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்காநின்ற விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் சாதகர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள். சாத்தியர்கட்கே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டைகூடல் என்னும் நான்கும் கடந்து அவர்கள் ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை. மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள். அவர்கள் அனுபவத்தை விரிக்கில் பெருகும்.

சன்மார்க்க சங்கம்

சமரச வேத சன்மார்க்க சங்க மென்பதற்குப் பொருள்: எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவு நூலின் முடிவான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சத்புத்திர மார்க்கம், மித்திர மார்க்கம், சன்மார்க்கம்.

சத்திய மார்க்கம்

ஷடாந்தங்களினது அனுபவம் ஒன்றானாலும் காலம் இடம் முதலியவற்றால் அவை வேறுபடும். ஆதலால் ஷடாந்தங்களு மிப்போது வெளிக்கு வியாபகமில்லாம லிருக்கின்றன. வேதாந்தம் சித்தாந்தம் என்னும் இந்த 2-ல் வேதாந்தத்தில் போதாந்தமும் யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்தமும், கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. ஆதலால் வேதாந்த சித்தாந்தமே சிறந்தது. வேதாந்த அந்தாதீத சித்தாந்த அந்தாதீத சுத்த சன்மார்க்கமே நீடூழி அழியாத சத்திய மார்க்கம்.

சமரசம்

சமரசமென்பது யாது? எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தில் நின்று மருவியதால் சமரசமாயிற்று. இதற்கு நியாயம்: விந்து பரவிந்து இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த விந்துவானது போலும்: சிவம் பரசிவம் இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது போலும்; சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இவ்விரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். ஆகவே ஷடாந்த சமரசசுத்த சன்மார்க்க மென்று மருவியது.

சத்துவகுண லட்சியம்

சன்மார்க்க மென்பது யாது? அது 3 வகைப்படும். சமய சன்மார்க்கம், மத சன்மார்க்கம், சுத்த சன்மார்க்கம்.

சமய சன்மார்க்கமாவது சத்துவகுண லட்சியானு சந்தானம். சத்துவகுண சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய சேர்க்கை யெல்லாம் சன்மார்க்கம். அதாவது சத்போதம், சத்கர்மம், சத்ஸங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சத்ஜனம், சத்செய்கை முதலியவை சத்துவகுண சம்பந்தமானவையாம். சத்துவகுண இயல்பாவது கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இந்த உண்மையைக் கொண்டு சத்துவ குணத்தின் வாச்சியத்தை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்.

சமயாதீத மத சன்மார்க்கம் – நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் 4. சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப்போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம். இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம் நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.

சுத்தம்

சுத்த சன்மார்க்கமாவது குணநிர்க்குண வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதங்களினது அனுபவமன்று. சுத்த சன்மார்க்க மென்பது சத் சன்மார்க்கமேயாம். சுத்தமென்பது ஒன்றுமில்லாதது. ஆதலால், சுத்தமென்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு முன் வந்தமையால், முன் சொன்ன சமயமதங்களைத் தாண்டினது. அதன் அனுபவங்களையும் கடந்தது.

சத்மார்க்கம்

சத்மார்க்கம் என்பதற்குப் பொருள் 4 வகை: பூர்வம், பூர்வ பூர்வம், உத்தரம், உத்தரோத்தரம். ஆதலால் இதன் முக்கிய லக்ஷ்யம் இனிச் சுத்த சன்மார்க்கத்தில் வெளிப்படும். பூர்வம் என்பதற்குத் தாத்பரியம் ஒருவாறு: சிருஷ்டி, ஸ்திதி, சம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகிற பிரமா விஷ்ணு ருத்திரன் மயேசுரன் சதாசிவமென்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, மேற்படி ஸ்திதி, மேற்படி சம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், மேற்படி அனுக்கிரஹம் இதுபோல் 5 ஆக விரிந்த தத்துவங்கள் 25. இந்த இருபத்தைந்தையும் அறுபத்து நாலாயிரத்தில் பெருக்கிய காலம் எவ்வளவோ அவ்வளவு கால பரியந்தம் மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்த தேகியாக இருப்பது. வருஷம் தொகை மொத்தம் ஒரு கோடி அறுபது லக்ஷம்.

சத்தென்பது பரிபாஷை. குழூஉக்குறிப் பெயர். அனந்த தாத்பரியத்தைக் கொண்டு ஓர் மொழியானது. மார்க்கமென்பது வழி. வழியென்பது சத்தென்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம். ஆகையால் எவ்வகையிலும் உயர்வுடையது சுத்த சன்மார்க்கம்.

சன்மார்க்கத்தின் ஏகதேசமென்பது எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது.

சர்வ சித்தி

சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36. அதை விரிக்க ஆறுகோடியாம். இதுபோலவே மதத்தினும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி தேகசித்தி முதலியவை யுண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகிற கர்த்தா மூர்த்திகள் ஈசுவரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்குமேல் இரா.

சமய மதங்களினும் சமரசம் உண்டு. வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம் இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப் பூட்டாக, சமரசசுத்த சன்மார்க்கமென மருவின. இதற்குச் சாதனம் ஒருவாறு ஷடாந்த சமரசம்.

ஆன்மாவுக்கு அனன்னிய அருள் எப்படியோ, அதைப்போல் சுத்த சன்மார்க்கத்துக்கு அனன்னியமாக இருப்பது சர்வ சித்தியாம். சத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.

சுத்த தேகத்தினுடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாய் தெரிவிப்பார்.

பரிபாஷையும் சுத்த சன்மார்க்கமும்

பரிபாஷை – அங், சிங், வங், பங், அம், விந்து, நாதம், சிவ, வசி, ஓம், அரி, அர, சத்து, சித்து, ஆனந்தம், பரிபூரணம், ஜோதி, சிவயவசி, சிவாயநம, நமசிவாய, ஆ, ஈ, ஊ, ஐ, நாராயணாயநம, சிவோகம், சோகம் முதலியவாகச் சமயமதங்களில் குறிக்கப்பட்ட மந்திர தந்திர ரகசிய வாசக வாச்சிய வசன அக்ஷர தத்துவ பவுதிக முதலியவையும் பரிபாஷையாம். மேற்குறித்த வண்ணம் ஜபித்தும், தியானித்தும், அர்ச்சித்தும், உபாசித்தும், சமாதிசெய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது. பாவனாதீதாதீதம், குணாதீதாதீதம், வாச்சியாதீதாதீதம், லட்சியாதீதாதீதம் ஆகிய சுத்த சன்மார்க்கப் பொருளாகிய அருட்பெருஞ் சோதி ஆண்டவரால் இதனது உண்மைகள் இனி வெளிப்படும்.

சாத்திய நிலை

சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

95. சுத்த சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி – தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர் ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் – இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள அணுக்கள் மேற்குறித்தவர்களது பதப்பிராப்தியை – மேற்படி அணுக்கள் – லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள. ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை யுடைய கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள். ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை. மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.

இதற்குப் பிரமாணம்: “சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்” என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், “அறங் குலவு தோழி இங்கே”* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். இதன்றி, திருக்கதவந் திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் “இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது கடமை.



* திருஅருட்பா 5452, 5695



சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.

ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் “சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்” “அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை” என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.

96. சுத்த சன்மார்க்க முடிபு

சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி.

97. சாகாத கல்வி

வேதங்கள் முக்கியம் சாகாதகல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

98. சாகாக்கல்விக்கு ஏது

தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.

(வேறுகுறிப்பு)

ஒருவன் இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருஷம் ஜீவித்திருப்பான். எப்போதுஞ் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய் அருள் வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.

99. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் – இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.



* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். அடிகள் அங்கிருந்த காலத்திற் செய்த உபதேசம்.



100. சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் புருஷார்த்தம்

நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு. அவையாவன:

ஏமசித்தி.

சாகாக்கல்வி.

கடவுணிலை யறிந்து அம்மயமாதல்.

தத்துவநிக்கிரகம் ஆக 4.

ஒழுக்கம்

இவை பெறுவதற்கு ஒழுக்கம் யாதெனில்: நான்கு வகைப்படும்.

1. இந்திரிய ஒழுக்கம்.

2. கரண ஒழுக்கம்.

3. ஜீவ ஒழுக்கம்.

4. ஆன்ம ஒழுக்கம்.

1. இந்திரிய ஒழுக்கம்

இவற்றில் இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம் ஞானேந்திரிய ஒழுக்கமென இருவகைப்பட்டது. கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல்; குரூரமாகப் பாராதிருத்தல்; உருசி விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்; இன்சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவஹ’ம்சை நேரிடுங் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவோபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தானங்களிலும் வேறு இடங்களிலும் சஞ்சரித்தல்; நன்முயற்சியிற்கொடுத்தலெடுத்தலாதி செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிர மாதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச் செய்வித்தல், எவ்விதமெனில், மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல், கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பௌதிக மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ த்யான சங்கற்பத்தாலும் செய்வித்தல், சுக்கிலத்தை அக்கிரம் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் – மந்ததரம், தீவிரதரம் – எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல் செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற் கவசந்தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.

2. கரண ஒழுக்கம்

கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்; இதன் பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப் பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்; தன்மதிப்பில்லாதிருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.

3. ஜீவ ஒழுக்கம்

ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம், தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் பேதம் நீங்கி, எல்லாரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.

4. ஆன்ம ஒழுக்கம்

ஆன்ம ஒழுக்கமாவது: யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனித் தலைவன் ஆதலால் – அவ்வச் சீவர்களில் ஜீவான்மாவே திருச்சபையாய் அதனுள் பரமான்மாவே பதியாய் நிற்பதால் – யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாந் தானாக நிற்றல்.

இவ்வண்ண நின்றால் மேற்குறித்த அரும்புருஷார்த்தங் கைகூடும். ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில், தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது. ஆங்கீரச வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள்.

நான்கு புருஷார்த்தம்

மனிதன் முக்கியமாய்ப் பெற்றுக்கொள்ள வேண்டியன அடியில் குறித்த 4 விஷயங்களாம். அவையாவன: ஏமசித்திசெய்தல், சாகாத கல்வி கற்றல், கடவுணிலையறிதல்-அம்மயமாகுதல், தத்துவநிக்கிரகஞ் செய்தல். இந்நான்கையும் பூரணமாக அடைதல் வேண்டும்.

நான்கு வகை ஒழுக்கம்

ஒழுக்கம் 4 வகையாம். 1. இந்திரிய ஒழுக்கம், 2. கரண ஒழுக்கம், 3. ஜீவ ஒழுக்கம், 4. ஆன்ம ஒழுக்கம்.

1. இந்திரிய ஒழுக்கம்

இவற்றுள் இந்திரிய ஒழுக்கம் ஆவது: கொடிய வார்த்தை முதலியவை யாடாமலும் செவிபுகாமலும் நிற்றல்; நாத முதலிய ஸ்தோத்திரங்களை அதிசயிக்காமல் உற்றுக்கேட்டல்; மற்றவைகளைக் கேளாதிருத்தல். அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல்; கொடூரமானவற்றைக் கேளாதிருத்தல், பாராதிருத்தல்; ருசியின் மேல் விருப்பமில்லா திருத்தல்; சுகந்தம் விருப்ப மில்லாமல் அனுபவித்தல்; இனிய வார்த்தை யாடுதல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவர்களுக்கு இம்சை நேரிடுங் காலத்தில் அதை எந்தவிதத் தந்திரத்திலாவது தடைசெய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி யிருக்கும் இடத்திற்குச் செல்லுதல்; உயிர்களுக்கு உபகார நிமித்தம் சஞ்சரித்தல்; உயிர்களுக்கு மனத்தாலும், வாக்காலும், சரீரத்தாலும், தனத்தாலும் தன் சத்தியின் அளவு மீறாமல் உபகரித்தல்; மலஜலாதிகளை அளவு மீறாமலும் குறையாமலும் கிரமமாய்க் கழியும்படி சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும், ஓஷதிகளாலும், ஆகாரத்தாலும், பௌதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.

2. கரண ஒழுக்கம்

கரண ஒழுக்கமாவது: உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளல்; சிற்சபையின்கண் மனஞ் செல்லுவது தவிர, வேறு எந்தவகை ஆபாசத்திலும் செல்லாமல் அதை இழுத்து மேற்குறித்த இடத்தில், அதாவது, கடவுளிடத்தில் நிறுத்துவது; பிறர்குற்றம் விசாரியாது இருத்தல்; தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களா லுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவமயமாக நிற்றல்; பிறர்மேல் கோபியா திருத்தல்; தனது சத்துருக்களாகிய தத்துவங்கள் – அரிஷ்டவர்க்கங்கள் – மேல் கோபித்தல்; அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலிய இவற்றையே கரண ஒழுக்க மென்பர்.

3. ஜீவ ஒழுக்கம்

ஜீவ ஒழுக்கம்: எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், கோத்திரம், சூத்திரம், குலம், சாத்திரம், தேகமார்க்கம், உயர்வு, தாழ்வு முதலியனவாகிய பேதம் அற்றுத் தானாக நிற்றலாம்.

4. ஆன்ம ஒழுக்கம்

ஆன்ம ஒழுக்கம்: எண்பத்து நான்கு லக்ஷம் யோனிபேத முள்ள ஜீவர்களிடத்திலும் இரக்கம் வைத்து, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாம்.

101. சுத்தசன்மாக்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)

பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. சிவானுபவமாகிய தேகத்திரயம் பெறுவதற்கு மேற்குறித்த இரண்டு துவாரந் தவிர வேறில்லை. மேலும் தயவென்பது இரண்டு வகைப்படும். யாவெனில் கடவுள் தயை ஜீவ தயை ஆகிய இரண்டு. கடவுள் தயை யென்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பட்சி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோம சூரி யாக்கினிப் பிரகாசங்களைக் கால தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல், பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல். ஜீவதயை யென்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.

கடவுள் தயவும் ஜீவ தயவும்

கடவுள் தயை, ஜீவதயை யென்பது: கடவுள்தயை யென்பது இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும். ஜீவதயை யென்பது தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல், அன்னிய ஜீவதோஷ விசாரம் கனவிலும் செய்யாதிருத்தல் முதலியவாம்.

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்”*



* திருஅருட்பா 3503



சன்மார்க்க சாதனம்

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.

102. சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.

பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*

என்பதே என் பிரார்த்தனை யாகும்.



* திருஅருட்பா 3630



103. சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்

ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

கடவுள் மயமாவது

ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

தயவும் கடவுளும்

கடவுள் சர்வஜீவ தயாபரர். ஆகையால் சர்வ வல்லபமுடையவர். அதுபோல் நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லபத்தையும் பெற்றுக் கொள்ளும்படி செய்வார். ஞானிக்குத் தயை அதிகப்பட்டிருப்பதால், அவர் இறந்தவர்களை யெழுப்புதல் முதலிய அற்புதங்களைச் செய்யும் வல்லப முடையவரா யிருக்கின்றார். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை யில்லாதவர்களிடத்துக் கடவுளிருந்து மில்லாமையா யிருக்கிறார். கடவுளிடத்தில் சதா அன்பும் பத்தியும் செலுத்த வேண்டும்.

பத்தி

பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.

(வேறு குறிப்பு)

தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்க ளேற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள் ஆதலால், இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது.

சத்திய ஞானாசாரம்

ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.

104. ஆன்ம இயற்கையாகிய தயாமூலதன்மம்

தர்மமென்பதற்குப்பொருள் சீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரம தர்மம், சாதிதர்மம் முதலியவாக விரியும். இதில் அதிணுண்மை அதின் தன்மை… தன்மை என்பது அதின் சுபாவம். சுபாவமென்பது இயற்கைக் குணம். அதுவென்பது ஆன்மா. ஆதலால், ஆன்மாவுக்கு இயற்கைக் குணம் தயை. ஆன்மாவின் இயற்கையென்பதே தர்மத்திற்குப் பொருள். ஆன்ம இயற்கையோடு இருந்தால் சிவமாகலாம். இதைப் பலவாகத் தர்மமென்று பெயரிட்டார்கள். அருள்வெளியாகிய ஆன்ம இயற்கையால் சிவானுபவத்தைப் பெறுவது உண்மை. இதற்கு வேதாகமங்களில் பலபட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில் சில:- அருட்சத்தி, அருள்வெளி, விருஷபம், தர்மதேவதை, அனாதியியற்கைக்குணம், பரஞானம், அகரவுகரம், அருள்நடம், அன்பு, ஆன்மநெகிழ்ச்சி, ஆன்மஅசைவு, சுத்ததத்துவம், ஆன்மஅறிவின்பேதம் – என இதை விரித்தார்கள். அருள்வடிவாய்ச் சிவமாகிப் பின்னமன்றிப் பூரணமாயிருப்பது நிரதிசயானந்தம். ஆனந்தமென்பது சந்தோஷம். நிரதிசயமென்பது ஆனந்தமின்மை(?). சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.

தருமம்

தர்மமாவது ஜீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரமதருமம், ஜாதிதருமம் முதலாகப் பலவகையாம். இதனது உண்மை ஆன்மாவின் தன்மை. தன்மை என்பது ஆன்மாவின் சுபாவம். சுபாவமென்பது ஆன்மாவின் சுபாவகுணம். சுபாவகுணமென்பது ஆன்மாவின் இயற்கைக்குணம் தயை. ஆன்மாவினியற்கை என்பதே தருமத்துக்குப் பொருள். தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடையமாட்டான்.

அருளொளி

அருள்வெளியில் சன்மார்க்கத்திலுள்ள அனுபவங்களைப் பெறலாம். இதற்கு அருட்சத்தி என்றும், அருள்வெளி என்றும், ரிஷப மென்றும், அதின் தன்மை என்றும், அனாதி இயற்கை என்றும், பரஞான மென்றும், பூர்ண நிஷ்டை என்றும், அகர உகர மென்றும், அருள்நடன மென்றும், ஆன்ம நெகிழ்ச்சி என்றும், ஆன்ம அசைவென்றும் பலபட விரிந்த நாமங்கள் உண்டு. அருள்வெளியின் வடிவாய் உண்மை என்னும் சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்தி லிருப்பதே உண்மை.

ஆனந்தம்

ஆனந்தமென்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷ’ப்பித்துத் தானதிசயமின்றி நிற்றல்.

105. ஜீவகாருண்யமே முத்திக்கு முதற்படி

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையா லடைவதரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தாலல்லது வேறுவகையால் வாராது. ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில்: கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னியவுயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற் படியாயிருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஜீவகாருண்யமும் சித்தியும்

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையாலடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்ணியத்தாலல்லது, வேறு வகையில் வாராது. ஜீவகாருண்ணியத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ணியம் உண்டாவதற்கு மார்க்கம் யாதெனில்: கடவுளினது பெருமையையும் வல்லமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தல்தான். அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாகவிருக்கின்றது. ஆதலாலிதைப் பாதுகாத்தல் வேண்டும்.

106. ஞானசித்தியும் ஒளிநிலையும்

இரவில் தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. ஏனெனில், அஃது பிராண நஷ்டம் பண்ணும். ஆதலால், நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரையில்லாதிருந்தால், ஆயுள் விருத்தியாம். இஃது சாத்தியனுக்கு. சாதகன் ஒருவாறு நித்திரை செய்தல் வேண்டும். கிருகத்தில் இருளில்லாது எங்கும் பிரகாசமாய் தீபம் வைத்தால், மேற்படி இருள் அந்தத் தீபத்தில் அடங்கும். அதுபோல் ஜீவதீபமாகிய நாம் வசிக்கிற கிருகத்தில் பிரகாசமில்லாவிட்டால், மேற்படி இருள் ஜீவப் பிரகாசமாகிய நம்மிடத்தில் சேர்ந்து நஷ்டத்தைப் பண்ணும். அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிற கிருகத்தில் அருட்பிரகாச மில்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் சீக்கிரமாம்.

ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.

மேலும் அந்தச் சுத்தஞானி இறந்த உயிர்களை எழுப்புவதற்குப் பிரமாணம் யாதெனில்: ஒருவாறு தீபப் பிரமாணத்தா லறிக. தீபப் பிரமாணமென்பது யாது? தீபத்தினிடத்தில் காரியஒளி, காரிய காரண ஒளி, காரணஒளி என மூன்று. மேற்படி ஒளியாவன ஒளி, சோபை, பிரகாசம். ஆதலால் கடவுள் காரியமாய்ப் பிரகாசம்போல் சுவர்ணதேகியாய்த் தோன்றினால், அதிதூரத்திலிருக்கிற இருளென்னும் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது பிரகாசமயம். அதுபோல் ஒளி மேற்படி பிரகாசத்திலடங்கிச் சோபை காரிய காரணமாய் இருக்கின்றதுபோல், ஆன்மாக்கள் அஞ் ஞானத்தில் கட்டுண்டு அறிவாகிய தீபத்தைக் கருதினால் மேற்படி அறிவாகிய தீபம் தோன்றின கணமே அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளின் சோபையைக் கண்டால், பஞ்சகிருத்தியமுஞ் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், தக்கணமே அது ஜீவிக்கும். மேலும் பிரகாசம் எங்குமுள்ளது. எந்த இடத்தில் புலை கொலை அகற்றிய சீவர்கள் பிரார்த்தித்தாலும் தக்கணமே அவரது காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்று காரிய உருவமாகிய ஒளி வடிவாய்த் தோன்றி அருள் செய்வர். இதற்குப் பிரமாணம்: சித்தமார்க்கத்திலுள்ள துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் தோய்த்த நூலை நெடுந்தூரங்கட்டி, அங்கங்கு காயாது உபகரணம் பூசி, மனிதர்களை நிற்க வைத்து, மேற்படி சுண்ணத்தை அடியில் காட்டின தக்ஷணமே நுனியில் சிவப்பேறும்.

ஜீவனும் தீபமும்

இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால், அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும். ஆகையால் நாம் வாழ்கிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் தீபம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இருளிருக்கப்படாது. ஒரு வீட்டில் தீபம் வைத்தால் அந்த வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிச்சேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால், அவசியம் தீபம் இருக்க வேண்டியது.

தயா வடிவம்

பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணாற் பார்த்தல். ஒருவன் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணைப் பெற்றுக் கொள்வானானால் அவனுக்கு எல்லாம் பட்டப் பகலைப் போற்றெரியும். அவன்தான் சுத்தஞானி. அந்த நடுக்கண்ணைப் பெற்றுக்கொண்ட சுத்தஞானி தயவோடு ஓர் பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில், அந்தப் பிணம் உயிர் பெற்று மீளவெழுந்திருக்கும். ஒருவனைக் கோபித்துப் பார்த்தால், உடனே அவன் பஸ்பமாய் விடுவான். இதுதான் நடுக்கண் பெற்ற சுத்தஞானிக் கடையாளம். இந்த நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணுக் கொரு கதவும் பூட்டுமிருக்கின்றது. அந்தக் கதவின் பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்கவேண்டும். அருளென்பது பெருந்தயவு. ஆகவே தயவே வடிவமாக இருக்க வேண்டியது.

கடவுள் அனுக்கிரகம்

தீபத்தில் ஒளி, சோபை, பிரகாசம் என்னும் 3-ல் பிரகாசம் காரண அக்கினி, சோபை காரியகாரண அக்கினி, ஒளி காரிய அக்கினி. பிரகாச மயத்தில் கடவுள் காரியமாய் சொர்ணதேகி ஆனாலும், பிரகாசத்தைப் போல் அதிதூரத்திலிருக்கிற இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது.

ஒளியெப்படி அடங்கிச் சோபை காரியகாரணமா யிருக்கிறதோ அதுபோல, ஜீவர்கள் இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில், விளக்கினிடத்து லட்சியம் அதிகரித்த தருணம், ஒளியைக் கண்டால் அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளினது சோபையைக் கண்டால், சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களும் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல் இறந்த ஜீவர்களை ஆண்டவருக்குச் சமீபத்தில் சேர்த்தால் உடனே ஜீவிப்பார்கள். ஆண்டவரது பிரகாசம் எங்கும் உள்ளதால், எந்த இடத்தில் புலை கொலையில்லாமல் ஜீவர்கள் முயற்சி செய்கிறார்களோ, அந்த இடத்தில் கடவுள் வந்து காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்றும் காரிய உருவமாகிய ஒளியாகித் தோன்றி அனுக்கிரகிப்பது சுபாவம். இதற்குப் பிரமாணம்: துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் நனைத்து, அதிக நீளமுள்ள நூலின் ஒரு தலைப்பைச் சுண்ணத்தில் படும்படி நனைத்த உடனே, அந்நூல் முழுமையும் சிவப்பேறுவது போலாம்.

107. தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்

தேகம் நீடிப்பதற்குத் தீபப் பிரமாணம்: அகல் – தேகம், எண்ணெய் – இரத்தம், திரி – சுக்கிலம், பிரகாசம் – ஆன்மா, ஆதலால் மேற்குறித்த தீபத்தினது திரியைத் தூண்டிவிட்டாலும், காற்றுள்ள இடத்தில் வைத்தாலும், காற்றில்லா விடத்தில் வைத்தாலும், பெருந்தீபச் சமீபத்தில் சேர்த்தாலும், விட்டில், பிரமரம், மூஷ’கம், மார்ச்சாலம் முதலிய அஜாக்கிரதையாலும், மேற்படி தீபம் நஷ்டமாகும். புத்திமானிடத்தில் தீபத்தினது உபகரணங்களைக் கொடுத்து ஒரு நாளைக்குத் தீபம் பார்க்கச் சொன்னால், புத்தி விசாலத்தால் மேற்குறித்த அஜாக்கிரதையின்றி, தகளிக்குச் சூடேறாமலும், எண்ணெயில் அழுக்கு ஏறாமலும், வர்த்தி தூசு இறுகல் தளர்ச்சி பருமன் இவைகளில்லாது – சிறு திரி போட்டு, அடிக்கடி தூண்டாமல், தீபத்தை மற்றொரு தினமுமிருக்கச் செய்விப்பான். மேற்குறித்த குற்றங்களோடு தீபமேற்றினால், பதினைந்து வினாடி அல்லது கணம் இதில் சிட்டம் கட்டுவது இயற்கை. தூசு போக்கி வைத்தால், பதினைந்து நிமிஷத்திற்கொருவிசை சிட்டங் கட்டும். விசேஷ அறிவுடையவன் மேற்குறித்த லோகம் முதலியவற்றில் தீபம் வையாது, வைர படிகங்களில் அமைத்த தீபத்தகளியில், மேற்குறித்த தீபோபகரணங்களைத் திராவகமாக்கி, சுத்தாக்கினியால் பிரகாசமுண்டாக்குவான். அப்போது சிட்டமும் பிரகாச நஷ்டமும் நேரிடாது. ஆதலால் நம்முடைய தேகத்தில் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டி அடிக்கடி பெண்ணிடத்தாகிலும் வேறு தந்திரத்தாலாயினும் செலவு செய்து விட்டால், திரிபோய் ஆயுளாகிய பிரகாசம் நஷ்டமாய்விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் – தொள்ளாயிரத்து அறுபது நாழிகைக் கொருதரம் தேகசம்பந்தஞ்செய்து ஆபாசப்பட்ட சிட்டமாகிய சுக்கிலத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். இது மந்தனுக்கு. அதிதீவிர பக்குவியாய் மேற்குறித்த வண்ணம் கடவுளிடத்தில் இலக்ஷியமும் ஜீவர்களிடத்தில் தயவுமுடையவனுக்கு சிட்டம் போன்ற சுக்கிலாபாசம் நேரிடாது. தேகம் நீடிக்கும்.

அதிதீவிர பக்குவி

சீவன் என்கிற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய் விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் எடுத்துவிட வேண்டியது. அதாவது 16 தினத்திற்கு ஒருதரம் தேகசம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்தி விட வேண்டும். ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்ததரத்தையுடையவனுக்கேயன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல.

108. நம்மை நஷ்டஞ் செய்யும் நான்கு

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன: ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் – ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கிலும் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தாலதையடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.

ஜாக்கிரதை

ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் – இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், இவற்றில் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். இதனளவில் ஒரு மனிதன் தன்னை ஸர்வ ஜாக்கிரதையுடன் காக்கவேண்டும். இல்லையாயின் அதி சீக்கிரத்தில் மரண மடைவான்; சந்தேகமில்லை. இல்வாழ்வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது.

தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்

இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன: ஆகாரம், மைதுனம். ஆகாரத்தா லொன்பது பங்கு நஷ்டமும், மைதுனத்தாலொரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது. எப்படியெனில்: பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் ஆகாரம் உண்டு. இது இயற்கை. சிசு, வாலிபம், விருத்தாப்பியம் – இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது. கவுமாரம், யௌவனம் – இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும், நோயாலும் துக்கத்தாலும் தரித்திரத்தாலும் பசியாலும் பயத்தாலும் வேறு அநந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைப்படும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு. பொருந்தல் ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகாரவிஷயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி, சுத்த சத்துவ ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.

109. துர் மரணம்

ஜீவர்களுக்கு வாந்திபேதி மாரடைப்பு முதலியவற்றால் நேரிடும் துர்மரணங்கள் ஆகாரக் குறைவாலும் மிகுதியாலும் அக்கிரம அதிக்கிரமத்தாலும் பொருந்தலாலும் – இவை போன்ற பலவகைக் கெடுதியாலும் உண்டாகின்றன.

110. இல்வாழ்வானுக்கு நியாயம்

மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தை ஒத்திருக்கின்றது. அதாவது, ஊற்றுக்கேணியை இடைவிடாமல் 10 தினம் இறைத்தால், அதன் வருவாய் குறைந்து, அதில் சலமில்லாமல் போய்ப் பிரயோசனப்படாது. அதுபோல் இறைக்காத ஊற்றுக்கேணியிலுள்ள நீரிலழுக்கேறி, அதன் வருவாய் அடைபட்டு, அதன் சுரப்பு நின்றுவிடும். பின்பு அந்தக் கேணியிலுள்ள சலம் சூரிய உஷ்ணத்தினால் கிரகிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும். இதுபோல் இடைவிடாது மைதுனஞ் செய்தால் இந்திரியத்தின் வருவாய் குறைந்து, அருமையாகக் கிடைத்திருக்கின்ற தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். மைதுனம் எந்தக் காலத்தும் இல்லாதிருத்தலினாலும் மேற் குறித்த ஊற்றுக்கேணி நியாயத்தால் கேடுண்டு. அதாவது மைதுனம் எந்தக்காலத்திலுமில்லா திருத்தலினால் இந்திரியத்தின் தன்மை கெட்டு, அதனால் அவ்விந்திரியத்தின் வருவாயடைபட்டு, மிகுந்திருந்த அவ்விந்திரியமும் உஷ்ணத்தினால் வற்றிவிடும். பின்பு தேகம் உடனே போய்விடும்.

111. சந்நியாசமும் காவி உடையும்

மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.

சன்னியாசம்

மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை. குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்…

தயவு

தயவு – சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு – அருள் காருண்ணியம்.

காவிவேஷ்டி

காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்.

112. மகளிர் சமத்துவ நிலை

பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது. மேலும் பேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது. தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால், பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்திருப்பார்கள். “தெய்வந் தொழாஅள்” என்னும் தேவர் குறளால் இதை அறிக.

113. பொதுப் பார்வை

எல்லா உயிரையும் பொதுவாய்ப் பார்ப்பதென்பது தனக்குள்ள ஆகாரத்தைக் கொடுத்துவிட்டுத் தான் பட்டினியிருப்பதல்ல. அப்படி இருந்தால் பாவம். வந்தவர்களின் பசி அறிந்து, தாங்காதவர்களாகில் தனது ஆகாரத்தைக் கொடுத்தும், சகிப்பார்களாகில் எவ்வகையிலாவது முயற்சித்தும் பசியைத் தணிக்கவும். அதற்கும் இடம் இல்லையாகில், பச்சாத்தாபத்துடன் கடவுளைப் பிரார்த்தித்து இன் சொல்லினால் இனிக்கச் செய்து, தான்கெட்டிருப்பதே மேலான புண்ணியம்.

114. வந்தன முறை

ஆசாரியனுக்குச் சிஷ்யன் வந்தனஞ் செய்வதற்கும், பெரியவர்களுக்குச் சிறியவர் வந்தனஞ் செய்வதற்கும், எல்லவர்க்கும் ஞானிகள் யோகிகள் சாந்தர்கள் வந்தனஞ் செய்வதற்கும் காரணமும் அதன் பிரயோசனமும் யாதெனில்:-

வந்தனஞ் செய்வது ஆயுள் விருத்திக்கும் அறிவு விளக்கத்திற்கும் ஆதாரமாயிருக்கின்றது. சிஷ்யனுக்கும் சிறியோருக்கும் ஆசாரியனும் பெரியோரும் வந்தனஞ் செய்தால், ஆயுள் விருத்தியும் அறிவு விளக்கமும் குறைவாகும்.

இதற்குச் சம்பந்தம் யாதெனில், ஒரு ஜீவனுக்கும் திருவிளக்குக்கும் சம்பந்தமிருக்கின்றது. எப்படியெனில்: ஒரு திருவிளக்கு எரிவதற்கு நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை உதவுகிறது போல் ஒரு ஜீவனுக்கு ஆன்ம விளக்கத்துக்கும் மலப் போக்குக்கும் ஆதாரமான நிரஹங்காரமென்கிற நல்ல உஷ்ண சம்பந்தமான தைலத்தை ஊட்டி விளக்கு வைக்க வேண்டியது. ஆனால் மேற்சொன்ன இரண்டுஞ் சந்திக்கும்போது நோக்கமான கெட்ட உஷ்ணத்தைச் சம்பந்தப்படுத்தினால் லாபஞ் செய்யாதோவெனின், செய்யாது. திருவிளக்கு ஜல உஷ்ணத்தையும் காற்றினாலுண்டாக வேண்டிய உஷ்ணத்திற்கு மேற்பட்ட அதிக உஷ்ணத்தையும் பெற்றால் கெடும். அதுபோல், ஜீவனுக்கு மும்மலத்தாலாகிய உஷ்ணத்தையும் இன்னும் பற்பல பேதமுள்ள கெட்ட உஷ்ணத்தையும் சம்பந்தப்படுத்தினால், கெட்டுப் போய்விடும். இது யாவருக்கும் திருஷ்டாந்தமாய் இருக்கிறதல்லவா?

இவற்றால் ஆசாரியனையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியவர்களும் வணங்கினால் ஆயுள் விருத்தியும், சிஷ்யனையும் சிறுவர்களையும் ஆசாரியரும் பெரியவர்களும் வணங்கினால் ஆயுள் குறைவும் உண்டாகுமென்கிற சம்பந்தம் எப்படியெனில்: திருவிளக்கு எரிய – சாதாரண காலத்தில் அதம பக்ஷத்துக்குரிய கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால் விளக்குவைக்கின்றதும், கொஞ்சம் விசேஷ காலத்தில் நல்லெண்ணெயினால் விளக்கு வைக்கின்றதும், கடவுள் சந்நிதானத்திலும் ஞானாசாரியர் சந்நிதானத்திலும் பசுவின் நெய்யிட்டு விசேஷ விளக்கத்தையுடைய விளக்கு வைக்கின்றதும் போல். கொட்டை எண்ணெய் முதலாகியதற் கொப்பாகிய ஒரு ஜீவன் அதமபக்ஷம் மத்திமபக்ஷத்திற்குரிய ஒவ்வொரு மலத்தினாலுண்டாகிய தோஷத்தைப் போக்கிக் கொள்வதில் ஆத்ம விளக்கத்திற்கு ஆதாரமாகிறதும், விசேஷமாய் கடவுளாதி ஆசாரியர் சந்நிதானத்தில் வைக்கும் நெய்விளக்குக்கு ஒப்பான மும்மலப் போக்கான சுத்த நிரஹங்காரமென்கிற தைலத்தை ஆன்மாவுக்கு உண்டாக்கி வைப்பதில் ஜீவவிருத்தியு முண்டாகின்றது. திருவிளக்கு – அதன் உஷ்ண சம்பந்தமான தைலங்களை விட்டுக் கொண்டு வருவதில் விளக்கு எரிந்து கொண்டிருப்பது போலும், அதில் நல்லெண்ணெய் நெய் முதலியவை விட்டெரிப்பதில் விசேஷப் பிரகாசமாய் விளக்கு எரிவது போலும் – ஜீவனுக்கு அதன் உஷ்ண சம்பந்தமான மும்மலப் போக்கையுண்டுபண்ணுவதில் ஜீவிப்பு விருத்தியுண்டாகிறதும், விசேஷமாய் நிரஹங்காரமென்கின்ற சுத்த உஷ்ணத்தையுண்டுபண்ணிக் கொண்டு வருவதில் ஜீவனுக்கு விசேஷ விளக்கத்திற்குரிய ஜீவிப்பிருந்து கொண்டிருக்கின்றதும். இதனால்தான் தைலத்தைக் கொண்டிருக்கிற திருவிளக்கு விருத்தியாவது போல் மும்மலப் போக்கைக் கொண்ட ஜீவனும் ஆயுள் விருத்தியடைகின்றது. ஆதலால் ஆசாரியரையும் பெரியவர்களையும் சிஷ்யனும் சிறியோரும் வணங்குவதில் நிரஹங்கார சக்தி பெறுவதனால் ஜீவனுக்கு ஆயுள் விருத்தியுண்டாகின்றது.

சிஷ்யனையும் சிறியோரையும் ஆசாரியரும் பெரியோரும் வணங்குவதில் ஆயுட்குறைவு எப்படியுண்டாவதெனில்: ஒரு மணிவரையில் எரியத்தக்க எண்ணெயிட்டு எரிவித்திருக்கும் சிறிய திருவிளக்குக்குச் சமீபத்தில் ஒரு பெரிய பந்தத்திற்கு ஒப்பான ஒரு பெரிய திருவிளக்கு வைத்து எரித்தால், 1 மணி நேரம் எரியத்தக்க அந்தத் தீப உஷ்ணத்தைப் பெரிய தீபம் கிரஹ’த்துக்கொள்வதில் ஒருமணி நேரம் எரியவேண்டிய தீபம் அரை மணிக்குள் எரிந்துவிடுவதுபோல், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்குவதில், பெரிய தீவர்த்திக் கொப்பான ஆசாரியர் பெரியோர் என்கின்ற யோக்கியதையோடு, நிர்மல ரஹ’தமான நிரஹங்கார மெனகின்ற மத்தாப்புக் கொப்பான விளக்கத்தைச் சிறிய விளக்கான சிஷ்யன் சிறியோர் முன்னிலைக்கு விளக்கி வைப்பதில், சின்ன விளக்கடைந்த குறைவைப்போல் ஜீவனுடைய ஜீவவிருத்தியைக் குறைக்கின்றது. இந்த நியாயத்தால், ஆசாரியனும் பெரியோரும் சிஷ்யனையும் சிறியோரையும் வணங்கினால், ஆயுள் குறைவை அடையுமென்று திருஷ்டாந்தமாய் இருக்கிறது.

ஆசாரியன் பெரியோர் ஞானி யோகி இவர்கள் சிறியோரையும் சிஷ்யரையும் வணங்கினால் ஆயுள் குறைவு வரமாட்டாது என்றதெப்படியெனின்:- மேற்குறித்தவர்களது விளக்கத்துக்கு மேற்பட்ட விளக்கம் இவர்களுக்கு அகத்திலுண்டாகுமானால் ஆயுள்விருத்திக்குக் குறைவு வரமாட்டாது. இதற்குத் திருஷ்டாந்தம்: சமயச் சார்பில் பரமசிவம் சுப்பிரமணிய சுவாமியிடத்தில் அனுக்கிரகம் பெற்றிருப்பதும், ஞானிகள் மாட்டுச் சம்பந்த சுவாமிகளை அந்தச் சுவாமிகளின் தாய் தந்தையர் வணங்கியதும் அப்பர்சுவாமி முதலியோரும் வணங்கியது முணர்க. மேலும் சமயமதாதீத ஞானிகளுக்கும் சமயமதங்கட்குட்பட்ட பெரியோர்களுக்கும் இவ்வுலகத்தின் கண்ணுள்ள ஜீவராசிகளின் தேக மாதியாவும் தமது பதியின் தூலசூக்கும மாதலாலும், தமது பரிபூரண ஆன்ம அனுபவத்தின்கண் தோன்றிய அனுபவங்களாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாதலாலும், எல்லாம் அவர்கட்குத் தாமன்றி இரண்டற்றிருப்பதாலும், எல்லாவற்றையும் இவர்கள் அத்துவிதத்தில் சிவமெனக் கண்டுணர்தலாலும் – இவர்கள் சென்றவிடமெல்லாம் கண்டு சிவமாயும் தாமாயும் நீக்கமறக் கை கூப்புவது இயற்கை.

ஆதலால், மலசகிதர்களான ஜீவர்கள் மதிப்புடையவர்களாதலால், ஆசாரிய சிஷ்ய பாவத்தில் வணங்கலாதி தொழிலால் ஜீவிப்பின்மையும் விருத்தியும் உண்டாகின்றன. மகான்கள் கை கூப்புவதில் ஆன்மவிருத்தி குறைவுபடாது; ஜீவர்களின் அறிவு விளங்கும். ஏனெனில்: அவர்கள் சங்கல்பம் சுத்தமாதலால், இவர்களை மேலேற்றும்.

115. சுத்த சன்மார்க்க ஆகாரம்

சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துவைக் கொள்ளல் வேண்டும். புழுக்காத வஸ்துக்கள் யாவெனில்:- சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிர முதலிய பஸ்பம். ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை பரியாயத்தில் சர்க்கரையென்று லவணத்தைச் சொல்லுவதுமுண்டு. மேற்படி லவணத்தைத் துரிசு போக்கி ஜய லவணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும். இதன்றி, சத்வ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக்கொள்ளவுங் கூடும்.

சன்மார்க்க ஆகாரம்

நெய் பால் தயிர் மோர் – இவைகளை ஆகாரத்தில் விசேஷம் சேர்ப்பது தேக நஷ்டம். மனிதர்களுக்கு எல்லாத் தாதுக்களிலும் முதல் தாது கொழுப்பு. அதன் சத்து நெய். அதை எடுத்தால் தேக நஷ்டம். இதுபோல் பசுக்களினது முதற்றாது நெய். ஆதலால் அதையெடுப்பது சுத்த சன்மார்க்க மரபல்ல. சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்து கொள்வதற்காவது புறப்புறவமுதம். ஆதலால், ஊற்றுநீர் பொற்றலைக் கரிசலாங்கண்ணி வாழை தென்னை முதலியவற்றின்மேல் பெய்கிற பனிசலம் மழைச்சலம் – இவைகள்தான் சுத்தசலம் அல்லது அமுதம். அல்லது சாதாரண ஜலமுங் கொள்ளலாம். அதாவது மேற்குறித்த ஜலத்தை 5-ல் 3, 5-ல் 2 பாகம் நிற்கக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் இவைகளைச் சேர்த்துக் குடிக்கலாம். இவைகள் தேகவிருத்தி செய்யும். சுத்த சன்மார்க்க மரபிற் குரியது இனிப்புத்தான். ஆதலால் தேன் சர்க்கரை கற்கண்டு வெல்லம் இவைகளை ஆகாரத்தில் சேர்த்துக் கொள்வது உத்தமம்.

உப்பு

தேக நஷ்டஞ் செய்வது உப்பு. உப்பைக் கட்டி யாகாரத்திற் சேர்ப்பது சித்தமார்க்கம்.

சர்க்கரை

சர்க்கரை எந்தக் காலத்திலும் புழுத்தலின்றாகலி னுத்தமவாகாரமாம். மற்ற வஸ்துக்கள் எல்லாம் புழுக்கும்.

சன்மார்க்க ஆகார விலக்கு

சுத்த சன்மார்க்க சாத்தியர்கள் நெய் முதலிய வஸ்துக்கள் கொள்ளப்படாது. அதுபோல் சாதகர்களும்….ஒருவாறு கொள்ளப்படும். ஏனெனில், ஓர் தேகத்திலுள்ள தாதுக்களில் முதல்தாது கொழுப்பு, அதின் அம்சமே பால், அதின் அம்சம் நெய், மேற்படி ஆபாசம் மோர் தயிர். ஆதலால், மேற்படி கொழுப்பு வெளிப்பட்டால், மேற்படி பசுவின்கண் கெடுதியும் நேரும். ஆதலால் கொலை. கன்றுக்கு ஒருவாறு விட்டு பாலை கிரகிக்கலாம். ஆதலால், இஃதால் ஜீவ இம்சை நேருதலால், மேற்படி வஸ்துக்கள் கொள்ளலாகாது; நேராத பக்ஷத்தில் கொள்ளலாம்.

சாதம்

சாதம் வடித்துச் சாப்பிடுதல் நலமா, பொங்கிச் சாப்பிடுதல் நலமா எனில்:- வடித்துச் சாப்பிடுவது அதிலுள்ள எண்ணெய் போய் விடுவதால் நலம். பொங்குவதில் எண்ணெய் போகாது; தாமச குணம் உண்டாகும். இதுபோலவே உப்பு, புளி, மிளகாய் முதலிய வஸ்துக்களின் எண்ணெய் போகச்சுட வைத்துச் சாப்பிடுதல் வேண்டும். பச்சரிசி என்பது இப்போது கொண்டுவருவது அல்ல… மேலும் உஷ்ணத்தை உண்டுபண்ணக்கூடிய ஆகாரங்கள் கொள்ளுதல் வேண்டும்.

116. வெந்நீர்

அண்டத்தையும் பிண்டத்தையும் ஓருங்கே வளர்ப்பது புறப்புற அமுதம். ஆதலால் அஃதே கொள்ளல் வேண்டும். யாதெனில்:- ஊற்றுநீர், பொற்றலை, வாழை, தென்னை முதலியவற்றின் பேரிலுள்ள பனிஜலம், மழைஜலம் – இவைகள் கொள்ளலாம்; சாதாரண ஜலங்கொள்ளுவது கெடுதி. ஏனெனில் மேற்படி ஜலத்தில் மூன்று குணமுண்டு. எனைஎனில்: விஷம், பூதம், அமுதம். இம்மூன்று மொன்றாகவே இருக்கும். எப்படியெனில்: மேல்பாகத்தில் சிலிர்ப்பாகிய விஷமும், அதனடியில் ஏகதேசம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷ உஷ்ணமுள்ள அமுதமும் கூடி ஒன்றாயிருக்கும். மேற்படி ஜலத்தினது குணங்கள் ஆவன: பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும்; அமுதஜலம் பிராணசக்தி செய்யும்; விஷஜலம் தத்துவத்துரிசைப் போக்கும். ஆதலால் இடபேதத்தால் மேற்படி நீர்கள் தனித்தனியாகவுமுள்ளன; ஒவ்வொன்றில் மும்மூன்றாகவும் விரியும். ஆதலால், மேற்படி சுத்தாமுதங்கிடையாத பக்ஷத்தில் இதர ஜலங்களைப் பச்சையாகக் கொள்ளப்படாது; வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும். அந்நீரும் ஐந்து மூன்றும் ஐந்து இரண்டுமாகக் காய்ச்சி, சர்க்கரை வெல்லம் கற்கண்டு – இவைகள் சேர்த்துக் கொள்ளவும். நேராத பக்ஷத்தில், தென்னை நாயுருவி வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது, சூரிய கிரணத்தில் வைத்தாவது, சூரியசரத்தால் பார்த்தாவது, சிகரத்தை உன்னியாவது கொள்ளல் வேண்டுமேயல்லது பச்சையாய்க் கொள்ளப்படாது. சநிநீராடென்று சொல்வது சநி போன்ற கருமையான கருகியநீராலாடென்று சொன்னது. யாதெனில் வெந்நீர், ஒருவாறு ஊற்றுநீர். இதன்றி – மற்றப்படி – சொல்வது தெரியாமை.

வெந்நீர்

சுத்த சன்மார்க்கத்தில் தேகவிருத்தி செய்தல் வெந்நீராதலால். எக்காலத்தும் சுத்தஜலம் சேர்க்கக்கூடாது. பச்சை ஜலத்தினிடத்தில் மூன்று குணமுண்டு: விஷஜலம், பூதஜலம், அமுதஜலம். இந்த மூன்றும் ஒன்றாகவே இருக்கும். ஜலத்தின் மேல் பாகத்தில் விஷமாகிய சிலிர்ப்பும், அதனடியில் கொஞ்சம் சுடுகையுள்ள பூதமும், அதனடியில் விசேஷம் சுடுகையுள்ள அமுதமுமாக இருக்கும். பூதஜலம் தத்துவ விருத்தி செய்யும். அமுதஜலம் பிராணவாயுவை விருத்தி செய்யும். விஷஜலம் ஆபாசநீர்களாகப் பற்றும். ஆதலால் பச்சைஜலம் கொள்ளப்படாது. வெந்நீர் நேரிடாத பக்ஷத்தில், சர்க்கரை நாயுருவி தென்னை வாழை முதலிய வஸ்துக்களைச் சம்பந்தப்படுத்தியாவது கொள்ள வேண்டும்.

குளிர்ந்த ஜலம்

காலங்கடந்து குளிர்ந்த ஜலத்தில் குளித்து ஈர உடையுடன் இருப்பது தேகக்கெடுதி. குளிக்க வேண்டுமானால் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

117. கரிசலாங்கண்ணியும் தூதுளையும்

கரிசாலையை தினந்தோறும் பச்சையாகவாவது சமையல் செய்தல் முதலிய வகையாலாவது சாப்பிட்டு வரவேண்டும். பிரதம உள்ளுடம்பாகியதை நீடிக்கப் பண்ணும். மேற்குறித்த மூலிகையை அலக்ஷியம் செய்யாது ஆசாரியன் திருவடியின் கண்ணே இலக்ஷியம் வைத்து, எவ்வித தந்திரத்தினாலாவது தினம் தினம் உட்கொண்டால், தேகக் கெடுதியாகிய அசக்தம் நீங்கி, தேகம் வலுவுள்ளதாய் நெடுநாளைக்கு இருக்கும். முத்தியடைவதற்கு சகாயமாயுமிருக்கும். மகான்களிடத்தில் அனந்த காலம் காத்தாலும் மேற்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும் உண்மையையும் அனுபவத்தையும் வெளியிடார்கள். பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது. அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும். மேற்குறித்த மூலிகை ஜலமில்லாத இடத்தில் இருக்கிறது விசேஷ நன்று. ஜலமுள்ள இடத்திலுள்ளதில் காரமிராது. தந்தசுத்தி செய்து அண்ணாக்கில் தர்ஜனி விரலால் தேய்க்க – மேற்குறித்த மூலிகையால் – பித்தநீர் கபநீர் வெளியாகி, கண்ணொளி விசேஷ’க்கும். நேராத பக்ஷத்தில் பொற்றலைக் கையாந்தக்கரை கூடும். மேற்குறித்த மூலிகை செந்தூரம் செய்வதற்குச் சிறந்தது. உலர்த்திக் குழித்தயிலம் வாங்கியும் செந்தூரஞ் செய்யலாம். அது போலவே, அறிவை விளக்குவதற்கும், கவனசத்தி உண்டுபண்ணுவதற்கும், கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கிதையுடைய ஓஷதி தூதுளை. அதை மேற்குறித்தபடி அனுஷ்டித்தால் விசேஷ நன்மை செய்யும். கரிசாலை தந்த சுத்தியால் வசீகரமும் நேரிடும். உண்மை.

கரிசலாங்கண்ணியும் தூதுளையும்

கரிசலாங்கண்ணியைப் பச்சையாகவாவது அல்லது சமையல் செய்தாவது தினந்தோறும் அனுஷ்டானம் செய்துவர வேண்டும். தேகம் திடமுள்ளதாகி நெடுநாளைக்கிருக்கும். தூதுளையையுமப்படியே சேர்த்துக் கொண்டு வந்தால், புத்தியை விகாசப்படுத்தும்.

118. பஞ்ச கவ்யம்

பஞ்சகவ்வியத்தின் உண்மை யாதெனில்:- கோமயம், மேற்படி ஜலம், கிருதம், ததி, க்ஷீரம் இவை ஐந்து. இவற்றின் குணம்: மேற்படி மயத்தால் பிருதிவி சுத்தி, ஜலத்தால் ஜலசுத்தி, கிருதத்தால் அக்னி சுத்தி, ததியால் வாயுசுத்தி, பயசால் ஆகாசசுத்தி. இதுபோல் பிண்டத்தில் பிருதிவியாகிய தேகத்திலுள்ள குருக்களையும் அசுத்த மலங்களையும் மேற்படி மயம் போக்கும்; நீர்க்கட்டு கோவை முதலியவற்றை மேற்படி ஜலம் போக்கும்; உஷ்ண ஆபாசம் முதலியவற்றை மேற்படி கிருதம் போக்கும்; அதுபோல் வாயுவின் கெடுதியாகிய மலபந்த முதலியவற்றை மேற்படி ததிபோக்கும். ஆன்மாவாகிய பிராணச் சோர்வை மேற்படி க்ஷீரம் போக்கும்; மேலும் பசு மிருகத்தின் நக்ஷத்திர (?) விருக்ஷத்தின் மூலாதி பலங்களே பஞ்ச கவ்வியங்களாம்.

119. பஞ்ச சபை

ஆண்டவரிருக்கும் பொது ஸ்தானங்கள் 5. இவைகள் பஞ்ச சபைகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

பிருதிவி – பொற்சபை

அப்பு – ரஜிதசபை

தேயு – தெய்வசபை

வாயு – நிருத்தசபை

ஆகாயம் – சிற்சபை

120. பஞ்ச அமுத ஸ்தானங்கள்

சுத்த அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கினடியில் இனிப்புள்ள ஊற்றுஜலம் போலிருக்கும்.

2-வது அமுதம் உள் நாக்குக்குமேல் இளகின இனிப்புள்ள சர்க்கரைப் பாகு போலிருக்கும்.

3-வது மூக்கு முனையில் காய்ச்சின சர்ப்பரைப் பாகு போலிருக்கும்.

4-வது நெற்றி நடுவில் முதிர்ந்த மணிக் கட்டியாகவிருக்கும்.

5-வது மகா இனிப்புள்ள மணிக் கட்டியாகவிருக்கும்; அதிக குளிர்ச்சியாகவுமிருக்கும்.

இந்த 5-வது அமுதத்தையுண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்கள்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள்

யோகானுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் 5.

1-வது அமுதம் நாக்கு நுனியில். பக்குவ ஞானத்தால். சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால்.

2-வது புவனாமுதம் – நாக்குமத்தியில், பக்குவ கிரியையால், ஸ்திதி பிரஞ்ஞை யுணர்ச்சியால்.

3-வது மண்டலாமிருதம் – நாக்கினடியில், பக்குவ இச்சை, சம்சார உணர்ச்சியால்.

4-வது ரகசியாமிருதம் – உள் நாக்கடியில், பக்குவ திரோபவம்.

5-வது மௌனாமிருதம் – உண்ணாக்கு மேல், பக்குவ அனுக்கிரகம். அனுக்கிரகம், சுபாவத்தினது அனுபவம், துரியநிலை.

121. ஏழு திரைகள்

இந்தப் பவுதிக உடம்பிலிருக்கிற நீ யாரெனில்: நான் ஆன்மா, சிற்றணு வடிவன். ஷெ அணு கோடி சூரியப் பிரகாசமுடையது, லலாடஸ்தானமிருப்பிடம், கால்பங்கு பொன்மை முக்கால்பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய 7 திரைகளுண்டு. அவையாவன:

கறுப்புத் திரை மாயாசத்தி.
நீலத்திரை கிரியாசத்தி.
பச்சைத்திரை பராசத்தி.
சிவப்புத்திரை இச்சாசத்தி.
பொன்மைத்திரை ஞானசத்தி.
வெண்மைத்திரை ஆதிசத்தி.
கலப்புத்திரை சிற்சத்தி.*



* கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையால் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
– திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826


122. ரசவாதம் ஏழு. ரசவாதம் 7

ஸ்பரிசவாதம் – குரு சம்பந்தத்தால்
ரசவாதம் – ஓஷதி சம்பந்தத்தால்
தூமவாதம் – புகைவேதியால்
தாதுர்வாதம் – பஞ்சலோகங்களால்
வாக்குவாதம் – சொல்லால்
அக்ஷுவாதம் – பார்வையால்
சங்கல்பவாதம் – தியானத்தால் – செய்யப்படும்.

உபரசவாதம் 7

மந்திரவாதம் – எழுத்துக்கள் சம்பந்தத்தால்
புரீஷவாதம் – மலமூத்திரத்தினால்
தூளனவாதம் – பாததூளிகை சம்பந்தத்தால்
வாயு பிரேரகவாதம் – சுவாச சம்பந்தத்தால்
தேவாங்கவாதம் – உபாசனையினால்
பிரவேச விசிரிம்பித வாதம் – பூத தாதுவால்
தந்திரவாதம் – நிரேதுவாக – செய்யப்படும்.


122. நவநிலை

நவநிலை என்பது அனுபவ மார்க்கம்.

1. விந்து
2. நாதம்.
3. பரவிந்து
4. பரநாதம்
5. திக்கிராந்தம்
6. அதிக்கிராந்தம்
7. சம்மௌனம்
8. சுத்தம்
9. அதீதம்

124. குளிகை மணி ஒன்பது

குளிகை மணி ஒன்பதின் விவரம்:

1. பரம்பரமணி – அண்டத்தையும் அண்ட வஸ்துக்களையும் காட்டுவது.

2. பராபரமணி – பிண்டத்தையும் பிண்ட வஸ்துக்களையும் காட்டுவது.

3. அரும்பெறன்மணி – நினைத்ததை நினைத்தபடி அருளுவது.

4. ககனமாமணி – விண்ணுலக வஸ்துக்களை ஆட்டி வைக்கும்.

5. சரஒளிமணி – மண்ணுலகையும் மண்ணுலக வஸ்துக்களையும் ஆட்டி வைக்கும்.

6. கலைநிறைமணி – எல்லா வுலகத்தும் உலாவுதல்.

7. வித்தகமணி – சர, அசர வஸ்துக்களிடம் விளங்குவது.

8. சித்திசெய்மணி – மகாசித்திகளை நடத்துவது.

9. வளரொளிமணி – அழியாப் பெருவாழ்வு அளிப்பது.*



* அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே
விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே
பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
சார்புற நடத்தும் சரஒளி மணியே
அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே
சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராயுள் விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே
தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா
வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே
– திருஅருட்பா, அருட்பெருஞ்ஜோதி அகவல் 1291-1308.


125. திரயோதச நிலைகள்

திரயோதச நிலைகள் யாவெனில்:

1. பூதநிலை
2. கரணநிலை
3. பிரகிருதி நிலை
4. மோகினிநிலை
5. அசுத்தமாயாநிலை
6. அசுத்தமகாமாயாநிலை
7. சுத்தமாயாநிலை
8. சுத்தமகாமாயாநிலை
9. சர்வமகாமாயாநிலை
10. குண்டலிநிலை
11. பிரணவநிலை
12. பரிக்கிரகநிலை
13. திருவருள்நிலை

ஆக 13. இதற்கதீதத்தில் சுத்த சிவநிலை. இதற்குச் சத்தி, ஆகாயம், நிலை, வெளி, பிரகாசம், அனுபவம், பதம், இடம் முதலிய பெயருள்ளன.

மேலும், வர்னமாகிய எழுத்தாலும், வண்ணமாகிய ரூபத்தாலும், தொழிலாகிய பெயராலும் அனந்தமாக விரியும். இவை யாவும் ராகமென்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும். மேலும் இவைகள் படிப்பால் அறியக்கூடாது. அறிவது எப்படியெனில்: ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.

126. ஞானயோக அனுபவ நிலைகள்

1. படிகமேடை

2. ஆயிரத்தெட்டுக் கமல இதழ்

3. ஓங்காரபீடம்

4. குண்டலிவட்டம்

5. ஜோதிஸ்தம்பம்

6. சுத்தநடனம்

இவற்றை அனுபவத்தினாலறிக. இஃது நிராதார லக்ஷணம்.

127. சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானங்கள்

சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.

128. சகஜ நிலை

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.

129. சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.

மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்… மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். (?) ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.

ஆங்கிரச ஸ்ரீ புரட்டாசி மாதம் 5ஆம் நாள்.

வேதாகமச் சிறப்பு

இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.

பொன்னும் மகத்துவமும்

ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட பொன்னால் செய்த விக்கிரகங்கள் வைத்திருக்கும் தேவாலயங்களில் மகத்துவங்க ளுண்டாகும். மகத்துவத்தின் உயர்வு தாழ்வு பொன்னினது மாற்றுயர்வு தாழ்வாகவேயிருக்கும். மாற்றுயர்ந்த தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தை அடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க மகத்துவங்களுண்டாகும். இது ரகசியம்.

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம். போகாப்புனல் என்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு. மேலும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்கிற தத்துவங்கள் பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4 இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு. இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள் முதலிய ருத்திர மயேசுர சதாசிவ பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த இந்த நாற்பத்துமூன்று நிலைகளில் முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1 கற்பம். இப்படி 43 நிலைகளும் ஏறியனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப் பொருள் சிலர் உப்பு வகைகளின் பேதமென்று சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களே யென்று அறியவேண்டும்.

130. மூவகைச் சித்தி

கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி எனச் சித்திவகை மூன்றாம்.

கர்மசித்தியாவது:-

அணிமா – துரும்பை மேருவாக்குகிறது

மகிமா – மேருவைத் துரும்பாக்குகிறது

கரிமா – மேருவை ஒன்றுமில்லாமல் செய்கிறது

லகிமா – ஒன்றுமில்லாத இடத்தில் அனேகங்களாகச் செய்கிறது

பிராத்தி – வேண்டுவன அடைதல்

ஈசத்துவம் – குளிகை வல்லபத்தாலெங்கும் செல்லுகிறது

பிராகாமியம் – பரகாயப்பிரவேசம்

வசித்துவம் எழுவகைத் தோற்றமாகிய தேவமானுஷ்ய நரக மிருக பக்ஷி ஊர்வன விருக்ஷம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துகிறது.

தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல்; அபரமார்க்கி; சதாசிவாந்த அனுபவம்; சதாசிவகால வரை; பிரேதத்தை உயிர்ப்பித்தல்; சித்தி காலம் 3 3/4 நாழிகை முதல் 3 3/4 வருஷத்திற்குள்.

யோக சித்தி விவரம்:- 64 சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துகிறது; சங்கல்பகுளிகை; பிராணகல்பதேகி; பிரமகாலம்; பராபரமார்க்கி சித்திகாலம் 12 வருஷ முதல் 108 வருஷத்திற்குள்; புதைத்த தேகத்தை நாசமடையாமுன் உயிர்ப்பித்தல்.

ஞானசித்திகளின் விவரம் – அறுபத்து நாலாயிரம் சத்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துகிறது. 647 கோடியாகிய*, 688 கோடி (?) பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டம்போல் நடத்துகிறது; காலம் கடந்தது; அடிநிலை முடிநிலை சுத்தகர்ம, சுத்தயோக, சுத்தஞான சித்திவல்லபங்களைத் தன் சுதந்தரத்தால் நடத்துகிறது.


* ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப்பொருளே
– அருட்பெருஞ்ஜோதி அகவல் 911-2



131. சுத்தமாகி தேகங்கள்

சுத்தமாதி மூன்று தேக விவரம்: சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம்.



சுவர்ண தேகம் பிரணவ தேகம் ஞானதேகம்



காரிய ரூபம் காரிய காரண ரூபம் காரண ரூபம்
பரதேகம் பரம்பர தேகம் எங்கும் பூரண
பர உணர்ச்சி பரம்பர உணர்ச்சி வியாபகம்
பர அறிவு பரம்பர அறிவு பராபர அறிவு
பரத்துவம் பரம்பர தத்துவம் பராபர தத்துவம்
பொன் வண்ணம் 16 முதல் 108 வரையில் அளவு கடந்த மாற்று
அபரஞ்சி மாற்று மாற்று, உரைபடாதது
12 வயது பருவம் 5 முதல் 8 வயது சப்த மயதரிசனம்
நரை, திரை, பிணி, தேகம் தோற்றும், உருவம் தோற்றியும்
மூப்பு, மலம், ஜலம், பிடிபடாது. தோற்றாமலும் இருக்கும்
வியர்வை, ஆகாரம்,
நித்திரை, தாகம்,
சாயை முதலியன
இல்லாமை
ரோம வளர்ச்சி
தாழ்ச்சி இல்லாமை
கர்மசித்தி சர்வ சித்தி சர்வ மகாசக்தி, சர்வ
கல்பதேகி பிராண கல்பதேகி சுதந்தரம்
அபரமார்க்கி பர அபர மார்க்கம் காலாதீதன்


132. சுவர்ண தேகிகள் ஆயுள்

சுவர்ண தேகிகள் ஆயுள்.

ஒரு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு – நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.

இரண்டு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு – எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.

மூன்று மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு – பன்னிரண்டு லக்ஷத்து தொண்ணூற்று ஆறாயிரம்.

நான்கு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு – பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.

ஐந்து மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு – நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதாயிரம்.

ஐந்து பூதங்களின் பேதம் பன்னிரண்டு லக்ஷத்து இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது கோடியாய் இருக்கின்றது.

133. அணுபக்ஷ சம்புபக்ஷ அனுபவ விவரம்

ஐந்து மாற்றுள்ள சுவர்ணதேகி பிரமன் வயசு – நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.

ஆறு மாற்றுள்ள சுவர்ணதேகி விண்டு வயசு – எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.

ஏழு மாற்றுள்ள சுவர்ணதேகி ருத்திரன் வயசு – பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்று ஆறாயிரம்.

எட்டு மாற்றுள்ள சுவர்ணதேகி மயேசுரன் வயசு – பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.

ஒன்பது மாற்றுள்ள சுவர்ணதேகி சதாசிவன் வயசு – நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதினாயிரம்.

இவர் அணுபக்ஷத்தார்.

அணுபக்ஷத்தில் நாற்பத்து மூவாயிரத்து இருநூறு லக்ஷங்கோடி விந்து சத்தியின் அளவு; அளவிறந்த கோடி நாதத்தின் அளவு.

அணுபக்ஷத்தில் பரவிந்து சுத்தமாயையைக் கடந்தது; பரநாதம் சுத்தமகாமாயையைக் கடந்தது.

சம்பு பக்ஷத்தில் பிரமன், விண்டு, ருத்திரன், மயேசுரன், சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்பவற்றில்:

பிரமன், விண்டு – சுத்த மகா மாயையைக் கடந்த ஞான அனுபவ பேதம்.
ருத்திரன் – சித் அனுபவம்
மயேசுரன் – ஆனந்த அனுபவம்
சதாசிவன் – சத் அனுபவம்
விந்து – சிதானந்த அனுபவம்
நாதம் – சதானந்த அனுபவம்
பரவிந்து – சச்சிதானந்த அனுபவம்
பரநாதம் – சிவானுபவம். இவை ஒருவாறு.

உபதேசக் குறிப்புகள் முற்றிற்று

unmai

Channai,Tamilnadu,India