வள்ளலார் 200 – Dr. ஜெய.ராஜமூர்த்தி
தமிழ்நாடு செய்த தவப்பயனாய் இந்திய துணைக்கண்டத்தில் சிதம்பரத்திற்கு அருகாமையில் உள்ள மருதூர் என்ற சிற்றூரில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 5 ஆம் நாள் ராமையாப்பிள்ளை சின்னம்மை தம்பதிக்கு ஐந்தாவது மகவாக வந்துதித்தார் ராமலிங்கம்.
பின்னாளில் ஆன்மிக உலகில் புதியதோர் எழுச்சியை புரட்சியை செய்த தன் மகனுக்கு வைணவத்தின் அடையாளமான “ராம” என்பதையும் சைவத்தின் அடையாளம் மட்டுமில்லாது சதாசிவத் திருவுருவாம் “லிங்கம்” என்பதையும் இணைத்து இருசமயத்தை ஒருபெயரில் “ராமலிங்கம்” ஆக்கி வைத்துள்ளது வியப்பிற்குரியது .
இந்த ராமலிங்கம்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சாதி,மதம் , சமயம் கடந்த சுத்தசன்மார்க்கம் எனும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையையும், அகிலஉலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி நிலைநாட்டியவர் .
கல்விச்சாலையில் அதிகநாட்கள் படிக்கவில்லை என்றாலும் தனது அண்ணன் சபாபதி பிள்ளை அவர்களிடமும் காஞ்சிபுரம் சாபாபதி முதலியார் என்பவரிடத்திலும் சிலகாலம் கல்வி பயின்றுள்ளார்.
ஆனாலும் ” கற்றதும் நின்னிடத்தே ; கேட்டதும் நின்னிடத்தே “ என்றும் ” “ஓதாமல் உணர்ந்திட ஔியளித்து எனக்கு ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி” என்றும் தாம் இறைவனிடத்தில் பயின்றதாக தனது பாடல்களில் குறிப்பிடுகிறார்.
ஆக அண்ணன் சபாபதி , ஆசிரியர் சபாபதி , தில்லை சபாபதியாம் நடராஜர் என்ற மூவர் இவரோடு சம்பந்தப்பட்டவர்கள்.
பத்து வயதிலேயே இலக்கணத்தரம் வாய்ந்த பாடல்கள் புனையும் ஆற்றலைப் பெற்றிருந்தார் . இவரது “சிவநேச வெண்பா” என்பது நூறு வெண்பாக்களை உள்ளடக்கிய அருட்பாக்கள். தமிழில் வெண்பா எழுதுதல் புலமையில் கைதேர்ந்தோருக்கே கைகூடும். இவரோ தமிழில் உள்ள அனைத்து வகைப் பாடல்களையும் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார் .
இவரது அண்ணன் சபாபதி புராணப்பிரசங்கம் செய்தவர்.சென்னையில் பார்க்டவுனில் உள்ள முத்தியாலுபேட்டையில் சோமு செட்டியார் வீட்டிற்கு பிரசங்கம் செய்ய ஒத்துக்கொண்ட சபாபதிப்பிள்ளையால் உடல்நிலை சரியில்லாததால் போக முடியாத சூழல் ஏற்பட்டது .
அவ்வேளை சிறுவன் ராமலிங்கம் நான்சென்று சொற்பொழிவு நிகழ்த்துகிறேன் என்று சோமுசெட்டியார் வீட்டிற்கு சென்று பெரிய புராணச்சொற்பொழிவை அனைவரும் வியந்து மலைத்துப் போகும் வண்ணம் நிகழ்த்தியுள்ளார்.
அதன் பிறகு இவரது புகழ் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவ ஆரம்பித்துவிட்டது . அவ்வீடு இன்றும் அத்தெருவில் உள்ளது.
அக்காலத்தில் பார்க்டவுன் கந்தகோட்டத்தில் முருகனைப் போற்றி பாடல்கள் பாடிய சிறுவன் ராமலிங்கத்தின் புலமையையும் பக்தியையும் கண்டு கோயிலுக்கு வந்தோர் மெய்சிலித்தார்கள்.
ராமலிங்கத்தின் ஆன்மிக ஞானம் வளர வளர ‘வித்துவான் ராமலிங்கம் பிள்ளை :ஆகி ‘ராமலிங்க சுவாமிகள்’ என அழைக்கப்பட்டு பிறகு வள்ளலார் ஆனார்.
இவரது ஈடுயிணையற்ற உயிர் இரக்கத்தாலும் மனிதர்களுக்கிடையேயான சமத்துவ நோக்கத்தாலும் ” அருட்பிரகாச வள்ளலார்” ஆகி நிறைவான அருள்ஞானஔியைப் பெற்றதன் அடையாளமாக ” திருவருட்பிரகாச வள்ளலார் “என வரலாற்றில் போற்றப்படுகிறார் .
இவர் சித்தர் வரிசைகளில் வைத்து வணங்கப்படும் ஒருவராக விளங்குகிறார். சித்தர்கள் புகட்டிய தத்துவஞானத்தை மேலும் விரிவுபடுத்தி, அதில் ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் உயரிய கோட்பாட்டை உள்ளடக்கிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தைத் தோற்றுவித்தார்.
தாசமார்க்கம் எனும் தொண்டுநெறி,
சற்புத்திரமார்க்கம் எனும் மகன்மைநெறி, சகமார்க்கம் எனும் தோழமை நெறி , சன்மார்க்கம் எனும் ஞான நெறி ஆகிய நான்கு மார்க்கங்களும் சைவ உலகம் அறிந்ததே. இறைவனுக்கு முறையே தொண்டனாகவும் , மகனாகவும் , நண்பனாகவும் , காதலியாகவும் கருதி அவனோடு சேர்ந்து முக்திபெறுவதை சொல்வது மேற்கூறிய மார்க்கங்கள் எனில் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் என்பது இறை என்றும் ஆன்மா என்றும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்து கடவுள்நிலையை அடைந்து சித்தி அடைதல் எனலாம்.
” அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு “ என்பது இவரது பாடல்களில் வருவது. தானே அருட்சோதியாம் சிவநிலை அடைந்த அனுபவத்தை அதாவது மரணமிலாப் பெருவாழ்வை 5818 அருட்பாடல்களின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் .
தொடக்க நிலையில் முருகவழிபாடு பிறகு சிவலிங்க வழிபாடு , அடுத்து மேலான நடராஜர் வழிபாடு என்ற நிலைக்குச் சென்றவர் பின்னர் சமயசமரசத்தை உள்ளடக்கிய ஔிவழிபாட்டை வலியுறுத்தினார்.
ஔிவழிபாடு கூட பக்குவம் வரும்வரை புறத்தே கண்டு வழிபாடு செய்தற்கே அன்றி பக்குவம் அடைந்தபிறகு அதை அகத்தில் எல்லோரும் உணர வேண்டும் என்பதே அவரது விழைவு.
“அருட்பெருஞ்ஜோதி என் அகத்தில் ஓங்கியது “ என்று தான் பெற்ற அனுபவத்தை நமக்கு அருட்பாவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற மகாமந்திரத்தைத் தந்தருளியவர் .
அருட்பெருஞ்ஜோதி என்பதில் ஜோதி என்பது அறிவைக் குறிக்கும் . பெருஞ்ஜோதி என்பது பேரறிவைக் குறிக்கும் . அருட்பெருஞ்ஜோதி என்பது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவு என்கிறார். இந்நிலையில் உள்ள கடவுளை மனிதர்கள் அடைய வேண்டுமெனில் தனிப்பெருங்கருணையைக் கொண்டவர்களாக தயவுநிலையில் இருத்தல் அவசியம் என்பதே இவரது தலையாய போதனை.
கடவுள் ஒருவரே என்பதும் அவரே அருட்பெருஞ்ஜோதி என்றும் கூறும் இவர் சாதிகளை மதங்களை சமயங்களை இன்னும் குலங்கள் கோத்திரங்கள் என்பனவற்றை தவிர்த்து ஒருமைப்பாட்டு உணர்வுடன் வாழ வலியுறுத்துகிறார்.
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் என்பது இவரது மையக்கருத்து . இறந்தவர்ளை எரிக்காமல் புதைக்க வேண்டும் . கருமாதி, திதி முதலிய சடங்குகளுக்குப் பதிலாக அந்நாளில் பசித்த ஏழைகளுக்கு உணவிடுதல் நன்றென்றார்.வேதம் , ஆகமம் புராணம், இதிகாசம் இவைகளை அறிந்துகொள்ள வாழ்நாளை கடத்துவதைவிட தயவு என்ற ஒன்றின் மூலம் இறைமையை எளிதாக அடையமுடியும் என்றார் .
எத்துணையும் பேதமுறாமல் அதாவது எள்ளளவு அதைவிடச் சிறிய அளவு கூட பாகுபாடு கருதாமல் எவ்வுயிரையும் தம்முயிராகக் கருதுபவன் உள்ளத்தில்தான் இறைவன் இருக்கிறான் என்பதும அருட்பாவின் அடிநாதம் .
தயவில் இரண்டு வகைகள் சொல்கிறார்.
ஒன்று மனிதர்களின் பசிப்பிணியையும் துன்பங்களையும் போக்கக் கூடிய பரோபகாரம் . இதில் பசித்தவர்களுக்கு எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உணவிடும் செயலாகும்.
இன்னொன்று அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஆன்மநேயம். இதில் முக்கியமானது உயிர்க்கொலை தவிர்ப்பதும் புலால் மறுத்து உண்ணுதலும் ஆகும் .
சங்கம்;சாலை ;சபை
இவர் சொல்வது மட்டுமன்றி செயல்களாகவும் செய்த சாதனையாளர் . தனது கொள்கைகளை பரப்ப 1865ல் மேற்சொன்ன “சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” கண்டார்
உலகினில் பசி என்று எவர் வந்தாலும் உண்ணக்கூடிய வகையில் அன்னதானம் அளிக்கும் சத்திய தருமச்சாலையை 1867 ல் நிறுவினார்.
புருவமத்தியில் உணரும் அனுபவமான ஔியை புறத்தே காட்ட “சத்திய ஞான சபை “யை 1872ல் ஏற்படுத்தி ஏழுதிரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார்.
இந்த திரைகள் என்பது நம்மை இறைமையை நெருங்கவிடாது செய்கின்ற அஞ்ஞானத்திரைகள் என்கிறார் .
காமம் ,குரோதம், லோபம்,மோகம் ,மதம் , மாச்சரியம் ,கொலை என்கிற பாதக செயல்களை கைவிட்டால் அருள்நிலையாம் கடவுள்நிலை எய்தலாம் என்பது ஞானசபை ஔிவழிபாட்டின் விளக்கம் எனலாம் .
ஔி என்பது அனைத்து சமயத்திற்கும் பொது என்பதால் இச்சபையானது உலகமக்கள் அனைவரும் வந்து வழிபடக்கூடிய இடம் எனலாம் .
உருவம், அருவுருவம் , அருவம் என எந்த நிலையிலும் விளக்கின் சுடரையும் அதிலிருந்து வரும் ஔியையும் கொள்ளலாம்.
தனது மார்க்கத்துக்கென்று மஞ்சளும் வெண்மை நிறமும் கொண்ட சன்மார்க்கக் கொடியையும் கண்டார்.
மூடநம்பிக்கைகள் , சடங்குகள் ,, பூஜை புனஸ்காரங்கள், இடைத்தரகர்கள் இல்லாத எளிய வழிபாடாம் ஔிவழிபாட்டை நடைமுறைப்படுத்தியவர்.
சித்த மருத்துவராக பலருக்கு தீர்க்க முடியாத நோய்களை நீக்கியவர்.மேலும் 485 வகையான மூலிகைகளையும் அவற்றின் பயனையும் உரைநடைநூலில் தந்துள்ளார்.
அட்டமா சித்திகள் செய்ய வல்லவர்.
இரசவாதம் அறிந்தவர்.
மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூல்களைத் தந்நவர்.
ஒழிவிலொடுக்கம் , தொண்டமண்டலச்சதகம் ஆகிய நூல்களை பதிப்பித்தவர்.
தமிழ்நாட்டில் திருக்குறள் வகுப்பை முதன்முறையாக தன்னுடைய முதன்மை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு நடத்தியவர்.
தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் பயிற்றுவிக்க சமரச வேதபாடசாலை நிறுவிய மகான்.
பெண்களுக்கான கல்வியையும் பெண்ணுரிமையையும் பேணியவர்.
தோத்திரப்பாடல்களில் சிறந்த நூலான திருவாசகம் , சாத்திர நூல்களில் சிறந்தான திருமந்திரம் , அறநூல்களில் தலையாய திருக்குறள் என்கிற மூன்று நூல்களின் சாரத்தோடு வள்ளலார் என்கிற உத்தம ஆன்மாவின் அனுபவமாக அவரது’திருவருட்பா’ திகழ்கிறது என்றால் மிகையாகாது.
மருதூரில் பிறந்து இளம்வயதிலேயே தந்தையை இழந்து தனது தாயுடன் அவரது ஊரான பொன்னேரிக்கு அருகில் உள்ள சின்னக்காவனத்தில் தொடக்கத்தில் வாழ்ந்து பிறகு சென்னை ஏழுகிணறு பகுதியில் அண்ணன் சபாபதி வீட்டில் வசித்து 1858 ல் வடலூருக்கு அருகே கருங்குழியில் சிலகாலம் வாழ்ந்தார். பிறகு வடலூரை இருப்பிடமாகக் கொண்டார் . இறுதி நாட்களில் மேட்டுக்குப்பத்தில் வாழ்ந்து சித்திவளாகத்தை அங்கு உருவாக்கினார். சுத்ததேகம் , பிரணவதேகம், ஞானதேகம் எனும் முத்தேக சித்திபெற்ற [மரணமிலாப் பெருவாழ்வு] சித்திவளாகமானது வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் உள்ளது
எளிமையாக வாழ்த்துள்ளார்.எளிமையுடன் இனிமையான பாடல்களையும் புனைந்த அடக்கத்தின் சின்னமாக வாழ்ந்த அருளாளர்.
மனிதர்கள் அவைரும் சமம் என்றும்
வருணப்பாகுபாடுகள் பிள்ளை விளையாட்டு என்றும் , இருட்சாதிகள் சாத்திரங்கள் எல்லாம் குப்பைகள் என்றும் துணிந்து முழக்கமிட்ட தமிழகத்தின் முதல் சமுதாய சீர்திருத்தவாதி வள்ளலார் பிறந்து 200 வருடங்கள் ஆகப்போகிறது.
ஆம் !ஆன்மிகவிடிவெள்ளி, சமத்துவ எழுஞாயிறு , கருணையே வடிவாகக் கொண்ட ஜீவகாருண்ய சீலர், தமிழ் வளர்த்த மாபெரும் புலவர் , சமுதாய சீர்திருத்தச் செம்மல், தமிழ்நாட்டில் வந்துதித்த தவச்செல்வர் வள்ளலாரை ஒவ்வொரு மனிதரும் போற்றி வணங்குவோமாக!
Dr. ஜெய.ராஜமூர்த்தி
தலைவர் .வள்ளலார் தமிழ் மன்றம் .திருவெண்காடு