வடலூர் தை பூசம் – தமிழக அரசு விடுமுறை 2021
தைப்பூசம் “
அரசு விடுமுறை
இந்நாள் ஏன் சிறந்தது?
— ஏபிஜெ அருள்.
“தை” மாதம், நன்றி சொல்லும் விழா காணும் மாதம்.
நாம் வாழும் இந்த மண்ணைப் பொருத்து பார்ப்போமானால், இம்மாதத்தில் மக்களிடையே மகிழ்ச்சியும் செழிப்பும் நிறைந்திருக்கும். எல்லோருக்கும் பொதுவான முறையில் இயற்கைக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கலிட்டு
நன்றி சொல்லும் விழா காணும் மாதம் தை.
உலகிற்கு பொது மறை தந்த திருவள்ளுவர் தினம் வரும் மாதம்.
அரசியல் வழி பார்க்கையில் குடியரசு தினம் வரும் மாதம்.
இம்மாதத்தில் வரும் பூச நாள் அதாவது ” தைப்பூசம்” மிக சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கையில்
மிக சிறப்பாக இந்த மண்ணில் கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுள் ” முருகன்” கோயில்களில் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்பட்டு லட்ச கணக்கான பக்தர்கள் அவர்களின் முருகப் பெருமானை தரிசித்து மகிழும் நாள்.பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் சேரும் சிறப்பு நாள் என்பர். முருகப்பெருமான் விழாக்களை மனதில் கொண்டு நமது மேதகு தமிழக” தைப்பூச” நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
ஆனால் மேற்படி ” தைப்பூச” நாள்.
வள்ளலார் வழியிலும் சிறப்பான நாள்.
சமய,மத மார்க்கங்களை கடந்து வள்ளலாரால் வெளிப்படுத்திய
” சுத்த சன்மார்க்கத்தின் ” தனி நெறி வெளிப்படுத்தும் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டும் புனித நாளாக கருதப்படுகிறது.
எல்லோரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையில் அக காட்சியை வெளிப்புறத்தில் காட்டும் வகையில் திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டும் நாளும் தைப்பூசமே.
தமிழ் நாட்டில் நடைபெறும் விழாக்களில் வடலூர் தைப்பூச வள்ளலாரின் சத்திய ஞான சபை ஜோதி தரிசனம் சாதி சமய மத வேறுபாடின்றி லட்சோப லட்ச அன்பர்களால் கண்டு களிக்கப் படுகிறது.
ஆம், இயற்கையின் இயற்கையே இறைவன்.
ஒன்றெனும் ஒன்றாகிய ஆண்டவரே முச்சுடர்கள் உட்பட அனைத்திற்கும் ஒளி வழங்கும் உண்மையை சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் எல்லோரும் தெரிந்துக் கொள்வர்என்கிறார் திருவருட் பிரகாச வள்ளலார்.
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் நிலை அறிவது எதில் எனில்;
அறிவுக்கு அறிவாம் சத்திய அறிவில் அறியப்படும் கடவுள் ஒருவரே என்பார்.
மேலும், உண்மை அறியும் ஆன்ம அறிவாலே மட்டுமே கடவுளின் உண்மை நிலை காண முடியும் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
ஒழுக்கம் நிரப்பி, கருணையுடன் இரங்கி, சுத்த சன்மார்க்கம் சார்ந்து இடைவிடாது நன்முயற்ச்சி செய்பவர்களுக்கு, எங்கும் பரிபூரணராக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனே இரங்கி நம் உள்ளஅறிவினிலே தன் சொரூபக் காட்சியை காட்டி உண்மை அறிய செய்கிறார், என்கிறார் வள்ளலார்.
இந்த தைப்பூசநாளில் புறத்தில் சந்திரன் சூரியன் இவைக்கு ஒளி வழங்கும் அருட்பெருஞ்ஜோதி ( சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி) நேர் கோட்டில் நிற்கும் காட்சி நடக்கும் என்பர்.
நம்பிக்கையில் உண்மை எது என அறிய முயற்சித்தால் ( விசாரம் செய்தால்) சத்திய அறிவு தோன்றும். சத்திய அறிவே உண்மை கடவுளின் நிலை காட்டும். என் மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி.
மொத்தத்தில்,
சத்திய ஞான சபை,
தமிழர் பொங்கல்,
வள்ளுவராண்டு,
ஆன்மீக நம்பிக்கை,
இயற்கை திறம்,
மக்களிடம் செழிப்பு,
இவை பெற்ற தை மாதமும்,
அம்மாத பூசநாளும் சிறப்பே.
தைப்பூசம்
அறிவு ஒளி நாள்.
மகிழ்ச்சி நாள்.
இந்த இனிய நாளில் விடுமுறை அளித்து சிறப்பித்த
மேதகு தமிழக அரசுக்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தார் சார்பில் வணக்கமும் நன்றிகளும்.
— கருணை சபை சாலை