January 22, 2025
உபதேசக் குறிப்புகள்

முருகா முருகா …

முருகா..முருகா…
— ஏபிஜெ அருள்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: , ’முருகா! சண்முக மணியே! ஆறுமுக கடவுளே! கந்தசாமியே! சுப்பிரம் மணியே! வள்ளலார் விந்கம் (சமயப் பற்றுள்ள காலத்தில்) -apj arul-’ எனச்சொல்லும் உரை
( சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து உபதேசித்தது)
— ஆறுமுகப் பெருமான், சண்முகக்கடவுள், கந்த சாமி.
திருச்சிற்றம்பலம்
சண்முக மணி என்பது என்ன? நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதிமணியை
சண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடியிருக்கின்றது. இதை ஆறுமுகம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகமென்பார்கள். ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும், சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே ஷண்முகம் .
ஆறு சோதியாயும், ஆறறிவாயும், ஆறு தலையுடையதாயும் இருப்பதால் முகம் ஆறு. கால் இரண்டென்பது தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷயவுணர்ச்சியும், நிர்விஷய உணர்ச்சியுமேயாம். கை பன்னிரண்டென்பது ஆறாதாரங்களிலுள்ள பிரகாச அப்பிரகாச மாகிய பன்னிரண்டுமாம். தசாயுதம் அபய வரத மென்பவை யாவெனில்: வச்சிரம் என்பது தீக்ஷண்ணியவுணர்ச்சி; வேல் என்பது சத்தி, அருள், அறிவு; மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம்; த்வஜம் என்பது கீர்த்தி; ஸரஸ’ஜம் என்பது தயவு; குக்குடம் என்பது மாச்சரியமில்லாத நிறைவு; பராகம் என்பது பாசநீக்கம்; தண்டம் என்பது வைராக்கிய அறிவு; பாணம் என்பது அன்பு; அபயம் என்பது சமாதான உணர்ச்சி; வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னுஞ் சகிப்பு; கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம்; பல வர்ணமுள்ளதும், விசித்திர வடிவமானதும், மறதி முதலிய குணங்களுக்குக் காரணமானதும், மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்பிரகிருதியே மயிலென்பது.
மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சண்முகம் .
மேலும்….
( சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து மேலும் உபதேசித்தது.👇)
ஆறுமுகம் -சண்முகம்
ஒருமுகம், மூன்றுமுகம், நான்குமுகம், ஆறுமுகம் ஆனதற்குக் காரணம்: ஒன்று மிரண்டு மில்லாத ஒப்பற்ற பரப்பிரமசொரூபம் நம் பொருட்டுக் குழூஉக்குறியாய், பாவனைக்கு ஒன்றென்று நிச்சயிக்கும், பரகாரண நிமித்தம் (?) ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள். சுத்தராஜசம், சுத்ததாமசம், சுத்தசாத்விகமாகிய மூன்று குணங்களின் கூட்ட விளக்கமாகிய முக்குண விளக்கமே மூன்றுமுகம். பசுமனம், சுத்தமனம், உள்மனம், சங்கலிதமனம் என்னும் நான்கு தத்துவங்களின் கூட்டவிளக்கமே நான்கு முகம். சத்த அறிவின் மூலம், ஒளி யறிவின் மூலம், சுவை யறிவின் மூலம், பரிசவறிவின் மூலம், வாசனை யறிவின் மூலம், ஆத்ம அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம்.
மயிலின் காலின்கீழும் வாயிலும் பாம்பு இருப்பதென்ன?
👇
விசித்திரமாயையின் காரியவுருவான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால், மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு வென்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய்ப் பிராணவாயுவினது வேகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது இயற்கைதான்.
படைவீடென்ப தென்ன?
👇
அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும்.
இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்?
👇
ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு – இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் – சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.
பிரமாவைச் சிறையில் வைத்த தென்பது யாது?
👉 சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலையுடைய பிரமாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க வொட்டாமல், சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்பிர மணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல், வளர்தல், குற்றம் நீங்கல், ஒன்றினிடத்தில் மலைவடைதல், தெளிதல் முதலிய பஞ்ச கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறையிட்டது.
ஈசுவரனுக்கு உபதேசித்த தென்ன?
உருத்திர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈசுவர தத்துவத்தினியற்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்திருப்பதால், கிரியாகாரண பூதமாயும் ஞானகாரண அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியையற்ற நிர்விஷய அனுபவம் ஈசுவர தத்துவத்திற்கு – நியதி செய்வது? – சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றித் தோன்றாது. இதுபற்றி யுபதேசஞ் செய்தாரென லாயிற்று.
கங்கையிலுள்ள நாணற்காட்டிற் பிறந்தது என்பது என்ன?
👉ஆன்ம இயற்கைக் குணமாகிய தயவே கங்கை. ஆன்மாவின் அனுபவ மத்திய நிலையாகிய சகித்தலென்னும் – சர்வ விஷயங்களிலும் அகங்கார மென்னும் தலையெடாமல் – கீழ்ப்படிந்த குணமே நாணல். இவ்விரண்டின் மத்தியில், அனுபவத்திற்கு இயற்கை விளக்கமாய் விளங்கும் பகுத்தறிவாகிய விவேகம் தோன்றுவதே உற்பத்தியானது.
பின் கார்த்திகை அரிவை பால் கொடுத்த தென்பதென்ன?
👇
விவேக விளக்கந் தோன்றுங்கால், பெண்பாலின் குணமாகிய சமனையென்னும் சத்தியின் விளக்கத்தால் இன்பமாகிய அமுத கிரணம் விவேகத்திற்கு ஊட்டுவதே பால் கொடுத்தல்.
சுவாமி அம்மையிடத்தில் குழந்தையைக் கொடுக்க, அம்மை குழந்தை ஆறையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கையால் தடவ, முகம் ஆறும் ஒன்றி வேறாயும், உடல் ஒன்றாயும், கால் இரண்டாயும் ஆனதென்ன?
👇
பரமாத்மாவாகிய சுவாமி அருளென்னுஞ் சத்தியுடன், தயவென்னும் நதிக்கரையில், சகிப்பென்னும் நாணற்காட்டில், சமாதி முதலிய காலத்தில்? தோன்றி விளங்கும்போது, சுத்த வாசனா தோற்றமாகிய அறுபொறியாகிய குழந்தையை யருள் வசமாக்க, அருட்சத்தி விகாரமன்றி அவிகாரமாய் அறு பொறியையும் அருட்போதக் கையால் அடக்க, விஷயங்களை அறிந்து தோயாமலிருக்க அறுபொறிகள் ஒன்றாயும், குறிஆறாயும், அனுபவவிளக்கம் சாதனவிளக்கம் இரண்டுந் திருவடியாயுந் தோன்றி, சமாதிநிலை விளங்குவதே.
பிண்டத்தில் இவ்வண்ணமாக இருக்க, அண்டத்தில் இவற்றிற்கு ஊர், ஆலயம், மூர்த்தி, செய்கை முதலியன உண்டாவானேன்? ஆன்மாக்கள் புண்ணிய பாவ கருமங்களால் பேதப்பட்டு, மந்தம் மந்ததரம் ராஜசம் தாமசம் கருமம் முதலிய வேறுபாடுகளால் அனாதி தொடங்கி இன்றளவில் – உயிர்த்திரள் ஒன்றானாலும் – கரணக் கூட்டுறவால் வெவ்வேறு தன்மையாய் விளங்குகின்றன. ஆதலால் மாகருணையுடைய கிருபாநிதியாகிய சிவபெருமான் திருவருளை அங்கையிற் கனியெனவுணர்ந்த அனாதி நித்திய முத்த சித்தராகிய ஈசுவரதத்துவ புவனானுபவ ஈசுவரனால், நாம் உய்யும்பொருட்டு உலகத்தின்கண், பாச நூல்1 பசுநூல்2 அனுபவ நூல்3 என்னும் புராண1 வேத2 ஆகம3 உபநிஷத்துக்கள் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாகக் கர்மகாண்டம், பத்திகாண்டம், உபாசனா காண்டம், தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை முதலிய பேதங்களும், இவற்றிற்கு முக்கியமான ஆசாரம், வருணம், ஆசிரமம் முதலியவைகளும், இவற்றிற்கு ஏதுவான சரியாதி நான்கும், இவற்றிற்கு அடைவாகிய சாலோகாதி நான்கும், இவற்றிற்கு மார்க்கமாகிய தத்துவம், புவனம், பதம், வர்னம், மந்திரம், கலை முதலியனவும் நிர்ணயித்து, பாவநாசத்திற்கு ஏதுவான அனசன சாந்திராயண முதலிய பிராயச் சித்தங்களை விதித்து, இவைகள் செய்வதற்கு யோக்கியமான நதி முதலியவற்றையும், அவற்றிற்கு அங்கமான – தத்துவானுபவங்களாகிய உண்மை நாமங்கள் கெடாதிருக்க – திருப்பெயர் முதலியவைகளை மூர்த்தி ஸ்தல முதலியவைகளுக்கு ஏற்படுத்தி வழங்கச் செய்தார்கள்.
உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் குறிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.
👇
ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது.
👇
அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு(?) மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், உண்மையாகிய விளக்க மென்னும் சண்முகப் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப்படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் – தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.
இவ்வண்ணமாய், அனாதி தொட்டு இன்றுவரை சென்ற நாட்களிலுள்ள அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் யாவரும் அக்கடவுளை உண்மையாய்ப் பத்தி செய்து அவர் அருளைப் பெறவேண்டும்.
நன்றி: கருணை சபை சாலை, மதுரை.
👇முக்கியம்👇
–சமயப் பற்றுள்ள காலத்தில் வள்ளலார் “சண்முகக் கடவுள்” குறித்து உபதேசித்தது. அதன்பிறகு தத்துவங்களை வணங்காது, உபநிஷத்துக்களை தவிர்த்து, இறைவனை உள்ளது உள்ளபடி தெரிந்துக் கொள்ள,
” அறிவால் பணிந்து தணிந்து நெகிழ்ந்து இரக்கத்தால் வழிபாடு செய்தலே”#- உண்மை-# என்கிறார். இவ்வழியில் இறைவன் தன் ஜோதி சொரூபத்தை, நன்முயற்சி யாளர், உள்ளத்தில் காட்டுவதாக உள்ளது என்கிறார் வள்ளலார். இவ்வழிக்கு சுத்த சன்மார்க்கம் எனப் பெயரிட்டு வெளிப்படுத்தினார் வள்ளலார்.
🙏 ஏபிஜெ அருள். )

unmai

Channai,Tamilnadu,India