உள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”

உள்ளே – வெளியே வள்ளலார் சொல்லும் “தயவு”
—- ஏபிஜெ அருள்.
வள்ளலார் உண்மை கடவுளை கண்டார். சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தியவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைத் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியின் “சர்வ சித்தியின்” முழு உண்மையை அகத்திலே தெரிந்து அறிந்து அனுபவம் பெற்றேன் என்கிறார் வள்ளலார். முழு உண்மை அனுபவமே ” பூரண சித்தி” ஆகும்.
பூரண சித்தியை வள்ளலார் பெற்றார். பூரண சித்தியை பெற வள்ளலார் பயன்படுத்திய வழியின் பெயரே ” சுத்த சன்மார்க்கம்”. அவ்வழியில் அவர் சாதனமாக கொண்டது ” தயவு”. தயவு என்னும் கருணை மட்டுமே.
(நம்) தயவை கொண்டு (கடவுள்) தயவை பெறுகின்ற வழிபாட்டை தவிர வேறு ஒன்றுமில்லை சுத்த சன்மார்க்கத்தில். இதுவே வள்ளலார் கண்ட உண்மை.
தயவு இரு வகைப்படும் என்கிறார் வள்ளலார்.
1. கடவுள் தயவு
2. ஜீவ தயவு.
இதோ வள்ளலாரின் விளக்கம்:
# கடவுள்தயை யென்பது;
இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும்.
# ஜீவதயை யென்பது;
தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல்.
ஆக,
வெளியே —
நம் வழிபாடு (சாதனம்) எதுவெனில்;
” எல்லா உயிர்களிடத்தும் தயவும்”,
உள்ளே —
நம் வழிபாடு (சாதனம்) எதுவெனில்;
” ஆண்டவரிடத்தில் அன்பும்”
வெளியே நாம் செய்யும் தயவினால் நமக்கு பக்குவம் ஏற்படுகிறது. பக்குவிகளுக்கே ஆண்டவர் அனுக்கிரகிக்கிறார்.
இந்த அனுக்கிரத்தலே “அருள்” ஆகும். இந்த அருள் அனுபவம் அகத்திலே பெறுவதாக உள்ளது.
அன்பர்களே!
” எல்லா உயிர்களிடத்தும் தயவும்” என்னும் சாதனம் எளிதல்ல.
அது அறிவு,அன்பு, இரக்கம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. மேற்படி யானவற்றில் நாம் உண்மையாக பயிலுதல் வேண்டும்.
முதலில் எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் உணர்வை வருவித்துக் கொள்ளும் நற்குணத்தை பெறுதல் வேண்டும். நற்குணத்தை கொண்டு நற்செய்கைகள் செய்ய வேண்டும். இதுவே சுத்த சன்மார்க்க “சத்திய ஞான ஆசாரம்” ஆகும். இவ்வாசாரத்தால் பொது நோக்கம் வரும். பொது நோக்கம் வந்தால் தயவு விருத்தியாகும். தயவு விருத்தியில் தான் கடவுள் அருள் பெறமுடியும் என்கிறார் வள்ளலார். இங்ஙனம் ஜீவதயவு பெற்ற பக்குவிகளே உள்ளே செல்ல (அக அனுபவம் பெற ) தகுதி பெற்றவர்கள்.
இவ்வளவு முயற்சியும் வள்ளலார் செய்ய தூண்டியது ஆசை எதுவெனில்; “ஆண்டவரின் முழு விளக்கம் தெரிந்து கொள்ளவும், மரணம் தவிர்த்து வாழும் வரம் ஆண்டவரிடம் பெறவும்”.
இங்ஙனம்”ஆசை” உண்டேல் வம்மீன் என்கிறார் வள்ளலார்.
நன்றி ஏபிஜெ அருள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
__ apj arul.