உண்மை”அன்னதானம்” எது? வள்ளலார் சொல்லும் “ஜீவகாருண்யம்” எது?. யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்?
உண்மை”அன்னதானம்” எது?
வள்ளலார் சொல்லும்
“ஜீவகாருண்யம்” எது?.
யாருடைய பசியை நீக்குதல் வேண்டும்? எவர் பசியை குறித்து யோசிப்பது அவசியமல்ல.
—- ஏபிஜெ அருள்.
இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.
‘”…ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத “ஏழைகளுக்கு” பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.”
இதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து மற்ற சீவர்களுக்கு ஏற்படுகின்ற இந்த அவத்தையை (பசியை) நீக்குதல் நம் உரிமை மற்றும் அடிப்படை ஒழுக்கம் ஆகும்.
ஆனால்…….
நிற்க!
இந்த பசி என்கிற அவத்தையானது பொதுவாக எல்லா சீவர்களுக்கும் உண்டாகும். அப்படித்தானே.
ஆனால், யாருடைய பசியை நீக்கினால் போதுமானது என விரிவாக பார்க்கும் போது;.
19 தலைப்புகளில் வள்ளலார் தெளிவாக விளக்குகிறார்.
# ‘ஏழைகளுக்கு.”.
ஏழைகளின் பசியை போக்குவதே ஜீவகாருண்யம் என்கிறார் வள்ளலார்.
ஏழைகள் தவிர வேறு எவரின் பசியை போக்கலாம் என வள்ளலார் சொல்கிறார்கள் எனப் பார்க்கும் போது;
# பசியினால் தேகம் பாழகும் தருணத்தில் உள்ளவர்களுக்கு
# பசியினால் நிலைதடுமாறி உடல் உறுப்புகள் அழியும் தருணத்தில் உள்ளவர்களுக்கு
# பசியினால் மயக்கம் அடைபவர்களுக்கு
# பசியினால் களைந்து உயிரொடுங்கி மூர்ச்சை மூடிய காலத்தும் அயலாரை கேட்பது துணியால் கடவுளை நினைத்து நினைத்து நெருப்பில் படுத்து நித்திரை செய்யத் தொடங்குவாரைப் போல், அடிவயிற்றில் கொடிய பசி வைத்துப் படுக்கத் தொடங்குகின்ற விவேகிகளுக்கு
# பகற்போதும் போய் விட்டது.பசியும் வருந்துகின்றது.வேறிடங்களில் போக வெட்கம், வாய்திறந்து கேட்க மானம் வலிக்கின்றது. வயிறு எரிகின்றது.உயிரை விடுவதற்கும் உபாயம் தெரியவில்லை. இவ்வுடம்பை ஏன் எடுத்தோம்? என்று மனமும் முகமும் சோர்ந்து, சொல்வதற்கு நாவெழாமல் உற்பாத சொப்பனம் கண்ட ஊமைப்போல் என்று மனம் மறுகுகின்ற மானிகளாகிய ஜீவர்களுக்கு,
ஆகாரம் கொடுத்து பசியாற்றுவித்தல் அவசியம் என்கிறார் வள்ளலார்.
ஆக,
” ஏழைகளுக்கும்”,
மேற்படியாக வருத்தமும், ஆபத்தும் வந்தவர்களுக்கும்,
மட்டுமே செய்யும் அன்னதானமே “ஜீவகாருண்யம்”.
இவர்களை தவிர, மற்றவர்கள் அனைவராலும் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத்தக்க வல்லபமுடையவர்கள் ஆதலால் அவர்கள் பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல என்கிறார் வள்ளலார். மேற்படியான இவர்களுக்கு பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே என்று இரங்குவது மாத்திரம் அவசியமென்று அறிதல் வேண்டும் எனத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளார் வள்ளலார்.
ஆக, பசியை தங்கள் முயற்சியினால் மாற்றிக் கொள்ளத் தக்கவர்களுக்கு, அவர்களின் பசியை தருமச் சாலையில் பசி நிவர்த்திக்க வேண்டிய அவசியமில்லை.
இது போக, மற்ற உயிர்கள் அதாவது “சத்துவ” ஆகாரத்தால் பசி நிவர்த்தி செய்துக் கொள்ள தக்க மிருகம், பறவை, ஊர்வன,தாவரம் என்கின்ற உயிர்களுக்கு பசி வந்த போது, பசியை நிவர்த்தி செய்தல் வேண்டும்.
ஆக,
ஏழைகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கே அன்னதானமிடுதலே சரியாகும்.
அங்ஙனம் “மட்டும்” நடைப்பெறுகின்ற தருமச்சாலைக்கு நம்மால் கூடியமட்டில் “பொருள்” முதலிய உதவி செய்தல் அவசியம். இந்த விளக்கம் தெரிந்துக் கொள்வது, நம்மை சுத்த சன்மார்க்க நெறி அறிவதற்கான தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதற்கே.
இங்ஙனம் செய்வது ஜீவகாருண்ய புண்ணியம் என்கிறார் வள்ளலார். இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சேர்வதற்கான தகுதி என தெரிதல் வேண்டும்.
அதாவது, இறை வீட்டின் திறவுகோல்”ஜீவகாருண்யம்” ஆகும். வீட்டை திறந்து உள்ள சென்று செய்யும் அகப்பயிற்சியே சுத்த சன்மார்க்க பயனாகிய “நித்திய வாழ்வை” பெற்றுத்தரும்.
அந்த ஒழுக்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” ஆகும்.
இந்த சுத்த சன்மார்க்க ஒழுக்கமே இறை வீட்டினுள் நாம் செய்யும் தொழிலாகும், கடமையாகும்
என்கிறார் நம் வள்ளலார். அப்படியெனில் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்றால் என்ன?
பக்கம் 410ல் வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
‘ இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் “தலைவனையே” தொழுவீர்கள்’ இதுவே நம் தொழில் எனவும் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார்.
ஆக, அன்பர்களே!
(புறத்தில்)
நம் அன்னதானப்பணி தரும சாலையில் “நம்மால் கூடிய மட்டில்” அதுவும், நம் வள்ளலார் “குறிப்பிட்டுள்ளவர்களின்” பசியை நீக்குவோம்,
அடுத்து,
(அகத்தில்)
நம் ஞான சபையில் (நம்முள்),
நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ள படி ஒரே தலைவனாகிய உண்மைக் கடவுளை மட்டும் கருத்தில் கருதி தொழுவோம்.
இதுவே வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க தனி நெறி.
—–என்றும் அன்புடன் ஏ.பி.ஜெ.அருள்.