November 18, 2024
Blog

சத்ய ஞானசபை, வடலூர்

சத்ய ஞான சபை 

தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை தோற்றுவித்தார்

வரலாறு

பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது திருவருட்பா என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சத்திய ஞான சபை ஒன்றினை 1872 சனவரி 25 இல் நிறுவினார். இந்த சத்ய ஞான சபை எல்லா சமயத்தவரும் வந்து வணங்ககூடிய ஒரு பொதுவான ஆலயம் ஆகும். ஆயினும் கொலை, புலை (மாமிசம்) தவிர்த்தவர் மட்டுமே சபைக்கு உள்ளே புக அனுமதி உண்டு. இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்துள்ளது. மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார். சத்ய ஞான சபை என்பது மனித உடம்பில் தலைப் பகுதியைக் குறிக்கும்.

ஞானசபை

ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்து காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார். ஞானசபை என்பது அண்டத்தில் அக்கினியை குறிக்கும். கடவுள் நிலையை அறிதல் ஞானசபை அனுபவம் ஆகும்.

எண்கோண வடிவ சபை

தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும். அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இது நமது தேகத்தின் தத்துவ விசார விளக்கமே. அதை புறத்தில் காட்டவே சத்திய ஞான சபையை அமைத்துள்ளார். முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இடைவெளி எட்டடிகளாம். சத்திய ஞான சபையின் உட்புறத்தில் ஆன்ம ஜோதியை உணர முடியாமல் தடுக்கும் இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு ஞான சபை தாய்ச் சுவரின்கண் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரனுபவம் பூரணமாய் பெற்று அருளனுபவ நிலையில் நிற்கும்போதுதான் இந்த இருபத்திநான்கு வாயில்களும் திறக்கப்படும்போதுதான் ஒளிவடிவிலான அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனத்தைப் பெறலாம்.

திசை

சத்திய ஞானசபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஏனெனில் தெற்குத் திசை என்பது சாகாக்கலையும் நித்தியதேகத்தையும் பெறுவதற்கு ஏற்ற திசை ஆகும். தெற்கு பாகம் அக்கினிப்பிரகாசம் உடையது. அதனால் ஞானசித்தியை கொடுக்கும் திசையாகும். இதை குறிக்கும் பொருட்டே சத்திய ஞானசபையை தெற்கு நோக்கி அமைத்துள்ளார்.

ஏழு திரைகள்

இந்த உடம்பிலிருக்கின்ற ஆன்மா சிற்றணு வடிவுடையது. நமது சிற்சபையான புருவமத்தியில் தான் ஆன்மாவை உணர முடியும். இந்த ஆன்மாவானது அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடையது. இது கால் பங்கு பொன்மை நிறமும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் உடையது. இந்த அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடைய ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியாதபடி மாயா சக்திகளாகிய ஏழுதிரைகள் மறைத்துக் கொண்டு இருக்கிறது. அவை:

  1. கறுப்புத்திரை – அசுத்த மாயாசத்தி
  2. நீலத்திரை – சுத்த மாயாசத்தி
  3. பச்சைத்திரை – கிரியாசத்தி
  4. சிவப்புத்திரை – பராசத்தி
  5. பொன்மைத்திரை(மஞ்சள்) – இச்சாசத்தி
  6. வெண்மைத்திரை – ஞானசத்தி
  7. கலப்புத்திரை – ஆதிசத்தி

இந்த ஏழு மாய திரைகள் நமது புருவமத்தியில் உள்ள ஆன்மப்பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழு மாய திரைகளை அகற்றினால்தான் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியும். இந்த உண்மை தத்துவத்தினை குறிக்கும்பொருட்டே சத்ய ஞான சபையில் ஏழுதிரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

சத்திய ஞானசபை பெயர் மாற்றம்

1872 சூலை 18 அன்று நிலையங்களின் பெயர்களை வள்ளலார் மாற்றி அமைத்தார். அதன்படி சத்திய ஞானசபை சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என பெயர் மாற்றம் பெற்றது. அதன் வழிபாட்டு முறைகளும் வகுக்கப்பெற்றன.

தைப்பூசம்

சத்திய ஞான சபையில் 1872 சனவரி 25 (தை 13) வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி முழுநிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள்தான் தைப்பூச விழாவாகும். அன்று ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

இரும்புசங்கிலி

சத்திய ஞானசபையைச் சுற்றி இரும்புச்சங்கிலி வளையமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு நமது மூக்குத்துவாரத்தை ஒத்திருக்கிறது. அது நமது ஒரு நாளைய சுவாசம் 21600-ஜ உணர்த்துகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இந்த இரும்புச் சங்கிலி துருப்பிடிக்காமல் உள்ளது.

unmai

Channai,Tamilnadu,India