மரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா? இதற்கு பதில் என்ன?
மரம்,புல்,நெல் முதலிய இவைகளும் உயிர்கள் தானே, அப்படியிருக்க தாவரங்களை உண்பதும் இறைச்சி உணவு ஆகாதா? இதற்கு பதில் என்ன?
உயிர் இரக்கம் கொள்ளுங்கள் என நாம் சொல்லும் போது,தாவரத்தை நீங்கள் உண்கிறீர்களே அது தப்பு இல்லையா? என்பதற்கு இந்த விசாரம் பதில் தரும். ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவிப்பதும்,பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமலும்,முடிந்த வரை மற்ற உயிர்களுக்கு உபகாரம் செய்தலே.
ஆக, இங்கு நாம் காண வேண்டியது;
தாவரங்களுக்கு உயிர் உண்டா? நாம் துன்பம் கொடுக்கிறோமா?
இதற்கு வள்ளலார் விளக்கம் பார்க்கையில்;
“ஆம், தாவரங்களுக்கு உயிர் உண்டு.ஆனால் அப்படி அல்ல என்கிறார்கள்.”
அதாவது , இவை தொடுஉணர்வு கொண்ட ஓரறிவு உயிர்.ஆனால் தாவரவுடம்பில் உயிரானது, நீர் வழியாக நில பக்குவ அடிப்படையில் அதன் “வித்தில்” ஏறுகிறது. வளர்ந்த தாவரங்கள் அதாவது முளைப்பருவம் தாண்டிய தாவரங்களை உண்பதினால் அவைகளுக்கு துன்பம் ஏற்படாது.காரணம், மனம் என்ற கரண கருவிகள் தாவரங்களுக்கு கிடையாது. நம்மிடம் உள்ள நகங்களை வெட்டும் போது எப்படி வலி ஏற்படாதோ அது போன்று தாவரங்களை வெட்டும் போது துன்பம் அவைகளுக்கு ஏற்படாது. ஆனால் அதற்கு உயிர்,
நீர் வழியாக அதன் வித்தில் ஏறுகின்றதால் , முளைப்பருவத்தில்
தாவரங்களை உண்பது கூடாது என்கிறார் வள்ளலார். வளர்ந்த பின்பு காய் கனி இவை சடமாகி விடுவதாலும், உணவிற்காக இவை எடுத்து பயன்படுத்தும் போது துன்பம் எவையும் இவை பெறாதாலும் இவை இறைச்சி உணவாகாது. — அன்புடன் ஏபிஜெ அருள்.
வள்ளலாரின் இதுகுறித்த தந்த நீண்ட விளக்கம் அப்படியே கீழே தரப்படுகிறது.
” ,,,, ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிசமென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்
மர முதலிய தாவங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற் கிடமாகிய சடங்க ளென்பது எப்படியென்னில்:- வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.ஆக,வித்துகள் ,காய் கனி இவை சடமே. ஆனால் நீரால் உயிர்
வித்தில் ஏறும் காலமான முளைப்பருவத்தில் இவைகளை புசித்தல் கூடாது என்கிறார் வள்ளலார். வளர்ந்த நிலைப்பமுளைகளையே பிடுங்கப்படா தென்று சிலர் சொல்கின்றார்கள்; வித்து காய் இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வதெப்படி யென்னில்:- வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும்.
வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:- தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை.
ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.”
—வள்ளலார்.