January 22, 2025
tamil katturai APJ arul

இதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை. (மற்றதை நம்ப வேண்டாம். ஏன்?எதற்கு?எப்படி?)

இதை தான் வள்ளலார் சொன்னார்கள். இதுவே உண்மை.
(மற்றதை நம்ப வேண்டாம், ஏன்?எதற்கு?எப்படி?)
—- ஏபிஜெ அருள்.

சரியை,கிரியை, யோகம்,ஞானம், வேதாந்தம், சித்தாந்தம், கலைகள், வினை,மலம்,சத்து, சித்து,வேதம், ஆகமம்,ஆரணம், பூதங்கள்,அண்டம், பிண்டம், வெளிகள், சித்தி நிலைகள், சாகா கல்வி, சாகா தலை,போகா புனல்,வேகா கால்,தத்துவம், சிவதத்துவம்,சத்தர்கள்,சத்திகள், சித்திகள், பதம் பத்தர்,தியானம், தவம்,மூச்சு பயிற்சி,இடம் வலம், காரணம், காரியம், திரை மறைப்பு, அணுக்கள்,ஒளி, மருந்து, மணி,மந்திரம்.. இன்னும் பல.
ஏ..அப்பா.. இவ்வளவையும் எப்ப படிச்சு..இவை எல்லாம் எப்ப தெரிஞ்சு … தியானம் பண்ணி…கடவுள பார்த்து..அருள் வாங்கி…
நமக்கில்லை.. நமக்கில்லை..அந்த பாக்கியம்.. நமக்கில்லை………
என்ன அன்பர்களே! தலை சுற்றுகிறதா? ஆம், மேலே உள்ள எல்லாவற்றையும் இப்பிறவிலேயே கற்று தெளிவு பெற “காலம் காணாது” என்கிறார் வள்ளலார். 
அப்படியே கற்றாலும் முழுமையாக, உண்மையை கற்றவரில்லை. அதனால் தான் வள்ளலார் சொன்னார்கள்;

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே! என்றார்.

அன்பர்களே!
இந்நிலையில் தான் வள்ளலார் ஒருவரே தொடர்ந்து நன்முயற்சியில் இருந்தார். தான் வைத்திருந்த சமய பற்றை கை விட்டுவிட்டு, தான் கற்றதிலும் நிற்காமல், கடவுளிடம் மட்டுமே கண்ணீர் விட்டு தனக்கு உண்மை விளக்க வேண்டினார். 

அன்பர்களே!

கண்ணீர் விட்டு வேண்டுதலே உண்மை அன்பு. 
உண்மை தெரிய விரும்பும் அறிவே சத்திய அறிவு. 

எல்லோருக்குமே கை கூடும் சாதாரண வழி எதுவோ அதுவே இறைவனின் கருணை வழியாகும். உண்மை பொது வழியாகும். அந்த உண்மை பொது வழியை வள்ளலார் கண்டார். அவ்வழியின் பெயரே “சுத்த சன்மார்க்கம்” ஆகும்.
ஆம், வள்ளலார் கண்ட உண்மை இதுவே.
அது;
” எல்லாமே ஆண்டவராலேயே நமக்கு தெரியப்படுத்தி, நம் தனி அறிவில் விளக்கப்படுகிறது” என்கிறார் வள்ளலார். தனக்கு எல்லாமே பரிபூரணமாக கடவுளால் விளக்கப்பட்டது. இதையே “அருள்” என்கிறார். அருள் வந்தால் தேகம் ஒளியுடம்பாகிறது. மரணமில்லை. இன்பமே வாழ்வாக அமைகிறது என்கிறார் வள்ளலார்.
இதற்கு,
நம்மிடம் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். 
அது;
” ஆண்டவரின் அருள் பெற்றிட உண்மையாய் விரும்புவது மட்டுமே”.
இங்கு “ஆண்டவர்” என்பது ‘உண்மை கடவுள்’ (சமயமத மார்க்கங்களில் உள்ள கடவுளரில்லை).
இங்கு “அருள்” என்பது ‘நித்திய வாழ்வு’.
இங்கு “பெற்றிட” என்பது ‘நன்முயற்சி’.
இங்கு “உண்மையாய்” என்பது ‘மெய் உணர்ச்சி’.
இங்கு “விரும்புவது” என்பது ‘அறிவு’.
இங்கு “மட்டுமே” என்பது ‘முடிபு”.
உண்மை கடவுளை காண்பதும்,
எந்தவொரு சாத்திர ஆசாரமில்லாமல் கருணை மட்டுமே சாதனமாக கொள்வதும்,
மரணம் தவிர்த்து பேரின்பமாக வாழ்வதும்,
இறைவன் அருள் பெற ஒழுக்கத்துடன் நன்முயற்சியில் இருப்பதும்,
இதுவே வள்ளலார் வழி.
மற்றவை அல்ல. அல்ல. 
இது சத்தியம் . (மேற்படி கட்டுரை வள்ளலாரின் பாடல்கள் அடிப்படையில்)
அன்பர்களே!
விசாரம் தொடரும்…

அன்புடன்

ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India