January 22, 2025
tamil katturai APJ arul

என்ன! நான் மனிதன் இல்லையா?, இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா?

என்ன! நான் மனிதன் இல்லையா?
இன்னும் மனிதப் பிறவியே தோன்றவில்லையா? –ஏபிஜெ அருள்.

என்ன கேள்வி இது? 
என்கிறீர்களா.. 
அன்பர்களே! நம் ஞானிகள் குறிப்பாக வள்ளலாரின் சத்திய வாக்கியத்தினை வாசிக்கும் போது, இப்படி தான் கேள்விக் கேட்டு, நல்ல விசாரணை செய்யத் தோன்றுகிறது.
வள்ளலார் தனது முதல் விண்ணப்பத்தில் பக்கம் 556 ல்;
” நாம் ,அஞ்ஞான இருளில் ஒன்றும் தெரியாது உணர்ச்சி இன்றிக் கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே, இவ்வுலகினிடத்து…
1) தாவர யோனி வர்க்கங்களில்,
2) ஊர்வன, நீர் வாழ்வன முதலிய யோனி வர்க்கங்களில்,
3) பறவை யோனி வர்க்கங்களில்,
4) விலங்கு யோனி வர்க்கங்களில்
சென்று சென்று பிறந்து பிறந்து இறந்து இறந்து அலுப்படைந்தோம் என்கிறார் வள்ளலார்.
மேற்படியாக தாவரம்,ஊர்வன,நீர்வாழ்வன, பறவை, விலங்கு பிறவிக்கு அடுத்து எடுக்கும் பிறவி எது???
மனிதப் பிறவி என்று தானே நினைக்கிறீர்கள்.
அன்பர்களே,
அது தான் இல்லை.
விலங்கு வர்க்கங்களுக்கு பின்பு,
இரு பிறவிகளில் நாம் பிறந்து பிறந்து இறந்து இறந்து அதன் பின்பே ஏழாவது பிறவி மனித தேகம் நமக்கு வருகிறது என்கிறார் வள்ளலார்.
அந்த இரு யோனி வர்க்கங்கள் எதுவெனில்:
—- (பிறவி 5) தேவ யோனி வர்க்கங்கள்
அதன் பின்பு
—- (பிறவி 6) நரக யோனி வர்க்கங்கள்.
இங்கு தேவர்கள் யார்?
இங்கு நரகர்கள் யார்?
தேவர்கள் என்பவர்கள் யார் எனில்:
இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
“பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியவர்கள் தேவர்கள்.
மேற்படியாக பிறந்து பிறந்து
அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல்,
அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல்
முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து
அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ்
சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம் என்கிறார் வள்ளலார்.
அடுத்து,
நரக யோனி வர்க்கங்கள். 
இவர்கள் யார் எனில்:
இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

” காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார்”முதலியவர்கள் நரகர்கள் என்கிறார்.

மேற்படியாக நரகர்களாகப் பிறந்து பிறந்து, பயப்படல், சிறைப்படல், சிதைப்படல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;” 
ஆக,
எவர் ஒருவர் அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் தேவர்கள்.
அடுத்து,
எவர் ஒருவர், பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளில் உள்ளோமோ அவர்கள் நரகர்கள்.

இப்படி பார்க்கையில்,
நான் இப்பொழுது மனித பிறவியில் உள்ளேனா..??……?? என்றால்..
இல்லை.
ஆம்.
எனது நாட்டுடன் பக்கத்து நாடு போர்.
என் நாடும் போரிடுகிறது. எல்லா நாட்டிலும் போர். போரிலே எதிரிகளைக் கொல்கிறோம். நம்மிலும் பலர் சாகுகிறார்கள். 
நம் சமயப் புராணங்களில்,புனித நூல்களிலும் போர்,எங்கும் போர்மயம். கற்பனை படைப்பான சினிமாவிலும் போர் காட்சிகள். போர் புரிந்த அரசர்கள் பற்றியே என் படிப்பும் உள்ளது. 
அப்படி எனில் நான் யார்? நாம் யார்?தேவர். தேவர்கள்.
ஆனால் இன்று (இனி),
பல நூறு, ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான போரை நாம் வெறுக்கிறோம். போர் கூடாது. இவை தவறு எனத் தெளிந்து வாழும் அறிவை இன்று பெற்றேன். ஜனநாயக அரசியல் ஆட்சி முறை. பொது சட்டம் இன்று உள்ளது .
ஆனால், ஆனால்….
சுயநலம் போகவில்லை. பதவி, பணத்திற்கு கொலை நடக்கிறது.
ஏழைகள் பயப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள். அப்படி எனில், நான்,நாம் நரகப் பிறவியில் உள்ளேன். உள்ளோம்.
அன்பர்களே!
ஆக, தேவர்,நரகர் பிறவிகளில் சென்று சென்று பிறந்து பிறந்து அதன் பின்பே மனிதப்பிறவிக்கு வருவதாக வள்ளலார் முதலிய ஞானிகள் சொல்லியுள்ளனர்.
இதுவே இயற்கை. 
கடவுள் படைத்துள்ள அமைப்பு இது ஆகும்.
மனித தேகமே, அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயர் அறிவுடையது என்கிறார் நம் வள்ளலார்.
அன்பர்களே!
அச்சம் கொள்ளத் தேவையில்லை. நம் வள்ளலார் இருக்க கவலை எதற்கு?
அன்பர்களே,
நாம் இன்று,
அலைப்படவில்லை,அகப்படவில்லை,
அகங்கரிக்கவில்லை,
அதிகரிக்கவில்லை,
மறந்து -நினைந்து நிற்கவில்லை, மயக்குறவில்லை,
போரிடவில்லை, கொலை செய்யவில்லை,
கொலைப்படவில்லை.
எனவே நாம் தேவ யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.

நாம் இன்று காட்டில் திரியவில்லை
திருடவில்லை,கொலை செய்யவில்லை அதனால் பயப்படவில்லை சிறைப்படவில்லை, சிதைப்படவில்லை .எனவே நாம் நரக யோனி வர்க்கங்களை கடந்து விட்டோம்.
ஜீவகாருண்யம், அன்பு, அறிவு, இரக்கம் உடையவர்களாக இன்று உள்ளோம்.
அண்ட திறங்களை அறிய ஆசை உள்ளவர்களாக உள்ளோம். 
எல்லா உயிர்களையும் நம் உயிர் போல் பாவிக்கிறோம்.
கடவுளின் உண்மை குறித்து நல்ல விசாரணை செய்கிறோம்.
ஆம் நான் மனிதன்.
நாம் மனிதர்.
அன்பர்களே! 
வள்ளலார் அவர்கள் மற்றொரு இடத்தில் சொல்லியதை இங்கு நினைவு கூர்வோம்: (பக்கம்:377) அதாவது; “அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே யெந்தக் காரணத்தினாலும் அல்ல.”என்கிறார் வள்ளலார்.
எனவே நாம் மனித தேகம் எடுத்துள்ளோம் என்றுச் சொல்லுவோம். 
கருணை என்ற உயர்ந்த அறிவை பெற்று இடைவிடாது நன்முயற்சி செய்வோம். வள்ளலாரின் கட்டளைப்படி ஆச்சாரங்களில் மனம் பற்றாமல் இருந்து, கடவுளையே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து கண்ணீர் விட்டு தொழுவோம். 
‌கடவுள் அருள் பெறுவோம். 
பெருவாழ்வில் வாழுவோம்.
நன்றி.
அன்புடன் உங்கள் 
ஏபிஜெ அருள்.
கருணை சபை சாலை,மதுரை.

For more kindly visit
www.atruegod.org

unmai

Channai,Tamilnadu,India