January 22, 2025
tamil katturai APJ arul

மிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்? 

மிக முக்கியம்-சுத்த சன்மார்க்கத்தில் எந்த திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும்? 

– ஏபிஜெ அருள்.

அன்பர்களே, 
வள்ளலாரின் தனி நெறி சுத்த சன்மார்க்கத்தில் திருவருள் திறத்தை ஆன்ம ஞானத்தால் தான் அறிய முடியும். 
அருளுருவமான அறிவே உருவங்கொண்ட சிவத்தை அறிவாலே அறிவது உண்மை என்கிறார் வள்ளலார்.(பக்கம் 371)
இங்கு,
விக்கிரக ஆராதனை,
உபாய வகைகளான அபரமார்க்க காட்சி கூடாது. 
பரமார்க்க மாகிய அக அனுபவமே உண்மை. (பக்கம் 439-திருஅருட்பா உரைநடைப்பகுதி).

சத்திய ஞான சபை அமைப்பு மற்ற சமய மத மார்க்கங்களின் கோயில், சர்ச், மசூதி, மடம், போன்ற எந்தொரு கட்டிட அமைப்பு போல் இல்லை.
சத்திய ஞான சபை வள்ளலாரின் முடிபான தனி நெறி சுத்த சன்மார்க்க அடிப்படையில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு சுத்த சன்மார்க்கத்தார்கள் வழிபாடு எங்ஙனம் செய்ய வேண்டும் என புறத்தில் திருவருள் சம்மதத்தால் வள்ளலாரால் தோற்றுவிக்கப் பட்டதே சத்திய ஞான சபை ஆகும்.
அகத்தில், நம் ஒவ்வொருவரின் ஆன்ம பிரகாசதினுள் உள் ஒளியாக கடவுள் உண்மை காண முயற்சிக்கான அடையாளமே இச்சபை.
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஞான சபை என இங்கு சத்தியமாக அறிய வேண்டும். 
இங்கு இறப்பைத் தவிர்த்துக் கொள்வதற்கு திருவருள் வேண்டி வழிபாடு செய்தல் மட்டுமே உண்டு. ஆக, சாகாக்கல்வி அனுபவம் ஏற்பட தேவரீர் பெருங்கருணை திறத்தை பெற எத்திசை நோக்கி வணங்குதல் வேண்டும் எனப் பார்க்கும் போது, வள்ளலார் உரை நடைப்பகுதி பக்கம் 349ல், சாகாக்கலை (நித்திய தேகத்தையும், ஞான சித்தியையும் ) பெறுகிறதற்கு தெற்கு திக்கை நோக்கி வழிபாடு செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார். 
தெற்கு திசை நோக்கி வந்தனம் செய்யும் போது, திருவருள் விளக்கத்தால் , உண்மை அறிவு விளக்கி உண்மையின்பத்தை அளித்து, சமரச-சுத்தசன்மார்க்க நிலையில் வைத்து சத்திய வாழ்வை அடைவித்து நித்தியர்களாக்கி வாழ்விக்கப் படுகிறோம். 
இந்த சத்தியத்தின் அடிப்படையில் வடதிசை வடலூரில்
சத்திய ஞான சபை அமைத்து தென்திசை பார்வதிபுரம் நோக்கி ஜோதி அமையப் பெற்றது. 
நிற்க, 
இனி நாம் தெற்கு திக்கை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும் என இங்கு அறிவிக்க தெரிந்துக் கொண்டோம். 
அன்பர்களே, 
வடலூர் பெருவெளி (வடக்கு) பார்வதிபுரம் பெருவெளியை (தெற்கு) விட பரந்து பல ஏக்கரில் விரிந்து கிடப்பது இதற்கு தான். 
இனி வடதிசையில் நின்று தெற்கு திசை நோக்கி துதி செய்தல் சிறப்பு ஆகும் என தெரிந்துக் கொண்டோம். 
அதனால் இனி நாம் சத்திய ஞான சபையில் வீற்றிருக்கும் ஆண்டவரை தரிசித்து, திருவருளால் விளக்கம் பெற்று நாம் தென்திசையில் முகம் கொண்டு, சாகா கல்வி நம் அறிவில் விளக்கிட, விண்ணப்பிப்போம். அதனால் சத்திய ஞான சபை நான்கு திசை வாசல்களையும் திறந்திட வேண்டும். வடலூர் வெளி (வடக்கு பக்கம் பரந்த பகுதியில்) வடதிசையில் நின்று, தென்பால் முகம் கொண்டு தியானித்திடுவோம். 

ஆதாரப் பாடல்:

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தாற் பெறலாம்நல்ல வரமே, 

-என்கிறார் வள்ளலார். 

நம் முகம் தென் திசை நோக்கி இருத்தல் வேண்டும்.

அதற்கான பாடல்கள்:-

ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை:

என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை
இன்பால் பெறுகின்றீர் வாரீர்
தென்பால் முகங்கொண்டீர் வாரீர். வாரீர்.

ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி

என்பால் வருபவர்க் கின்றே – அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேன் என்றே
தென்பால் இருந்தது பாரீர் – திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. ஜோதி.

இங்கு சுத்த சன்மார்க்கத்தில் சாகாக்கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் வள்ளலார்.
அதனால், 
தெற்கு நோக்கி
– சாகாக்கலையை (நித்திய தேகத்தையும் ஞானசித்தியையும்) பெறுகிறதற்கு வழிபாடு செய்தல் வேண்டும். இதுவே சத்தியம்.

மற்ற திசைகள் சிறப்பை பார்க்கும் போது :-

கிழக்குத் திக்கை நோக்கித் தியானம் செய்கிறது போகசித்தியைப் பெறுகிறதற்கு.
மேற்கு – சொர்ண சித்தியைப் பெறுகிறதற்கு.
வடக்கு – சித்தசுத்தியைப் பெறுகிறதற்கு

பாடல்: கிழக்கு திசை.

வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்
சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

பாடல் : மேற்கு 

இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசைநோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

பாடல் : தெற்கு 

இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக்கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

பாடல் : வடக்கு

சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

சத்திய ஞான சபையில் அனைத்து வாயில்களும் திறந்து அருட்சோதி தரிசனம் காட்ட வேண்டும்.சபையின் அமைப்பு பற்றிய விளக்கத்தை வந்து தரிசிப்பவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இனி நாம் வடலூர் வடக்கு பெருவெளியில் நின்று, 
பார்வதிபுரம் தென்பால் முகம் கொண்டு , சாகாக்கலையை பெறுகிற சுத்த சன்மார்க்க நன்முயற்சியில் ஞான யோக பயிற்சி நிலையில் இருப்பதற்கான சூழ்நிலை ஏற்படுத்தி கொடுக்க வேணுமாய், 
உரியவர்களாகிய 
உயர்திரு ஆணையர், 
உயர்திரு இணை ஆணைய‌ர்,
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை மற்றும்
திரு செயல் அலுவலர், 
திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர், இந்த சுத்த சன்மார்க்க உண்மை அடிப்படையில் வேண்டுகிறோம். 

ஆதாரத்தின் அடிப்படையில் சமர்ப்பித்து வேண்டும், 
ஏபிஜெ அருள், கருணை சபை. 
நன்றி.

unmai

Channai,Tamilnadu,India