அருள் என்றால் என்ன? எங்குள்ளது ? “அருள்” பற்றி வள்ளலார்
அருள் என்றால் என்ன?
எங்குள்ளது ? “அருள்” பற்றி வள்ளலார் – – ஏபிஜெ அருள்.
எல்லா சன்மார்க்கங்களிலும் முக்கிய சொல் “அருள்” ஆகும்.
அவரவர் சமய மத மார்க்க கடவுளரின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வர்.
அன்பர்களே,
எல்லா மார்க்கங்களிலும் எல்லோரும் தங்களுக்கு வேண்டியதை, இறைவன் தருவதையே
“அருள்” என்கிறோம்.
பொதுவாக, நல்ல வாழ்க்கை, படிப்பு, பதவி, வசதி,
வயதானால், நோய் குணமாதல், நீண்ட ஆயுள்
முடிபான காலத்தில், நல்லபடியாக மரணம், சொர்க்கம் வேண்டுதல்,
பக்தி முதிர்வில், சமாதி, முக்தி அடைய முயற்சித்தல்,
முதலிய இவைகளை, இறைவன் அருள வேணுமாய் வேண்டுகிறார்கள்.
ஆனால், சுத்த சன்மார்க்கத்தில், “அருள்” பற்றிய உண்மை குறித்து வள்ளலார் சொல்லும் போது:
”அருள்க, அருள்க, மெய் ஞானம் முழுவதையுமே”
” உலகில் அருள் விளக்கல் வேண்டும்.”
”இடர்தீர் நெறியே அருள்வாய்”
”அழிவுறா அருள் உடல் உறுமாறே”
— இங்ஙனமாக அருள் பற்றிய விளக்கம் வள்ளலார் தருகிறார்.
அன்பர்களே,
ஆக, சுத்த சன்மார்க்கத்தில், அருள் என்பது, இறைவனிடம் நமக்கு வேண்டியதை கேட்பது மட்டுமில்லை, இயற்கை உண்மையறிதலும், இறைவன் உண்மை நிலை காண்பதும் ஆகும்.
மேலும், இறைவன் அருள் எத்தகையது, எங்குள்ளது? எனப் பார்க்கும் போது,
அகம், புறம் எங்கும் நிறைந்திருக்கும் அருள் ஒளி வண்ணம்.
எல்லா நிலைகளும் தன்
அருள் வெளியில் நிலைக்க வைக்கும் தனிக் கடவுள் ஒருவரே என்கிறது சுத்தசன்மார்க்கம்.
இந்த உண்மை தெரிந்து அறிந்து அனுபவிக்க ஆசைப்படும் அறிவே சத்திய அறிவு.
“நின் அருள் மேல் உற்ற பேராசை”
“கொடுத்தருள் நின் அருள் ஒளியை” என்கிறார் வள்ளலார். மேலும், “ஆசை உண்டேல் வம்மீன்” என்கிறார்.
அருள் வெளி உண்மையை நம் உள்ளத்திலிருந்து உணர்த்தி, உண்மை அறிவினில் விரித்துக் காட்டுவது ஆண்டவரின் திருவருளே.
“.. செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க,.. “(6ம் திருமுறை).
சுத்த சன்மார்க்கத்தில் இறைவனிடம் வேண்டுவது:
இத்தேகத்திற்கு நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி பேரின்ப பெருவாழ்வை “அருள” வேண்டும்.
இந்த அருளை (நன்மைகளை) பெற
கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்கிறார் வள்ளலார்.
ஆக, கடவுள் நிலை காண நன்முயற்சி இடைவிடாது செய்தல் வேண்டும் என்கிறது சுத்த சன்மார்க்கம்.
“பரை வெளிக்கு அப்பால் விளங்கு தனி வெளியில்…அருட்சோதி ” என்கிறார்.
மொத்தத்தில், சுத்தசன்மார்க்கத்தார் ஒழுக்கம் நிரப்பி,
தயை உடையவராகவும்,
உண்மை தெரிந்து கொள்ள ஆசை உடையவராகவும் இருந்து, இடைவிடாது கருணை நன்முயற்சியில் இருப்பதே அருள் (நன்மையும், உண்மையும்) பெறுவதற்கான வழி ஆகும்.
” தயை உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே”
” அருளுடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே” என்கிறார் வள்ளலார்.
அன்புடன்: ஏபிஜெ அருள்.