“தனி நெறியே”–ஏபிஜெ அருள் (கருணை சபையில் நல்ல விசாரணை)
ஞாயிறு 01-04-2018
கருணை சபை-சாலையில் நல்ல விசாரணை :: மதுரை கருணை சபை சாலையில் ஏபிஜெ அருள்
அன்பர்களுடன் செய்த நல்ல விசாரம் ::
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அனைவருக்கும் வணக்கம்,
இனிய மாலைப் பொழுது. ஞாயிறு தோறும் நடைப்பெறும் இந்த நல்ல விசாரணையில் இன்று விசாரம் செய்யும் சுற்று நான் பெற்றுள்ளேன்.பாக்கியம். நம் மார்க்கத்தில் நல்ல விசாரமே பயிற்சி, உண்மை அன்பால் கண்ணீர் விடுதலே சாதனம். இதுவே வள்ளலாரின் தனி வழி.
ஆம், இன்று விசாரம் ” தனி ” என்ற வார்த்தை குறித்தே.
முதலில் ஒன்றை நாம் உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
நாம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தை நம்பிக்கை கொண்டு சார்ந்து, அதன் தனி நெறியை மட்டுமே கருத்தில் கருதி, திருவருள் பெறும் நன்முயற்சியில் உள்ளவர்கள்.
வள்ளலார் வழி என்றால் அது வள்ளலாரின் சத்திய வார்த்தை பாதை. வள்ளலார் தான் தெரிவிக்கிறார்; “ என் நெறி தனி நெறி” என்று. அதனால், உடனே நாம் கருத்தில் கொள்கிறோம் சுத்த சன்மார்க்க நெறி ஒரு தனி நெறி என்று. நிற்க! சுத்த சன்மார்க்க நெறியை வள்ளலாரால் எங்ஙனம் தனி நெறி எனச் சொல்லப்பட்டது என்ற விசாரத்திற்கு உரிமை உண்டு. அதுவே நல்ல விசாரணை.
தனி என்ற வார்த்தையின் பொருள், மற்றவற்றிலிருந்து வேறுபட்டு, தனித்து உள்ளது என்று பொருள் என நமக்கு நம் அறிவில் படும். ஆனால் அப்படியல்ல.
தனி என்ற வார்த்தை வள்ளலாரால் சொல்லப்பட்ட சத்திய வார்த்தை. அதனால் முதலில் நம் அறிவில் அது சரியானது தான் என்ற கருத்து ஏற்பட வேண்டும். அதுவே நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் தான் “தனி” என்ற வள்ளலாரின் சத்திய வார்த்தையின் உண்மைப் பொருள் நம் நெறி மூலமே அறிவினில் விரிகிறது. இது சத்தியம். இங்ஙனம் உண்மை வெளிப்படவில்லை என்றால் நம் மார்க்கப் பயிற்சியாகிய நல்ல விசாரத்தில் மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும். இதுவே ஆண்டவரின் கருணை. உண்மை அறிய நமக்கு வேண்டியது நம்பிக்கையும் நன்முயற்சியும்.
ஆம், நல்ல விசாரம் செய்வோம்.
திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தனது பாடல்களில் (எண்கள்: 136 & 813) தனி நெறி என குறிப்பிட்டுள்ளார்கள்.இதோ;
ஆறாம் திருமுறை பாடல் எண் 136 /
திருவருள் விழைதல்
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
ஆறாம் திருமுறை பாடல் 813 /
பொதுநடம் புரிகின்ற பொருள்
சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே பொதுநடம் புரிகின்ற பொருளே.
அகராதியின் படி ”தனி” என்ற வார்த்தையின் உண்மை பொருள் என்னவென்றால்; ஒற்றை (singleness); ஏகாந்தம் (solitude); ஒப்பின்மை (Uniquence) என்கிறது
நம் வள்ளலார் தனது பாடல்களில், விண்ணப்பங்களில்,உபதேசத்தில்; உண்மை கடவுள் ”பெருங்கருணை” திறத்தை சொல்லும் போது ஒன்றொனும் ஒன்றாகிய, ஏகரென்றும், ஓப்புயர் வின்றி என்கிறார்கள்.
தன் மார்க்கத்தில் வெளிப்படும்பதியை தனிப்பதி என்றும், தான் கண்ட அருட்பெருஞ்ஜோதியை தனி அருட்பெருஞ்ஜோதி என்றும், தான் கண்ட நடராஜரை தனி நடராஜர் என்றும், தான் பெற்ற அமுதம் தனி அமுதம் என்றும், தனக்கு வெளிப்பட்ட வெளி தனிவெளி என்றும், தான் சொல்லும் தெய்வம் தனித்தெய்வம் என்றும், தான் குறிப்பிடும் சிவம் தனிச்சிவம் என்றும், தான் தரிசித்த சோதி தனிச்சோதி என்றும், தான் பெற்ற வடிவம் தனி வடிவம் என்றும், தனக்கு கிடைத்த அருள் தனி அருள் என்றும் இங்ஙனம் பல தனி உண்மைகளை நமக்கு பாடல்கள் மூலம் சொல்லியுள்ளார்கள். எதற்காக? வள்ளலார் குறிப்பிடும் சிவம், ஜோதி, வெளி, நடராஜர், அருள், நிலை முதலிய இவை ஏற்கனவே சமய,மத மார்க்கங்களில் சொல்லப்பட்டுள்ளதே என்பவர்களும் உண்டு. அதை மறுக்கும் அடிப்படையிலும், மேலும் தனி என்ற சொல்லின் தனி மேன்மைப் பொருளிலும் வள்ளலார் இந்த தனி என்ற சத்தியச் சொல்லை பயன்படுத்தி, நமக்கு உண்மையை தெரியப்படுத்தி உள்ளார்கள்.
தனி நெறி என்பது மற்ற நெறியுடன் ஒப்புயர் இன்றி விளங்கும் நெறி என்றும், ஒன்றெனும் ஒன்றாகிய ஏகராகிய கடவுளை வெளிப்படுத்தும் மார்க்கம் என்றும் பொருள் படும்.
வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க தனி நெறி எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார். சமய,மத அனுபவங்களை கடந்தது.பக்கம் 404: இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல என்கிறார் வள்ளலார்.
வள்ளலார் தெளிவாக சொல்கிறார்கள் மார்க்கங்கள் மூன்று வகைப்படும். பக்கம்: 406
1.சமய சன்மார்க்கம், 2. மத சன்மார்க்கம், 3. சுத்த சன்மார்க்கம்.
இந்த சுத்த சன்மார்க்கம் திருவருள் சம்மதத்தால் 19ம் நூற்றாண்டில் வள்ளலாரால் வெளிப்படுத்திய மார்க்கம். அதனால் இது நமக்கு புதிய மார்க்கம்.
இனி சொல்வோம் வள்ளலார் கண்ட உண்மை பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கம் 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு புதிய மார்க்கம் – தனி நெறி. உலகத்தார்களிடம் இந்த நெறி விரைந்து வெளிப்பட நன்முயற்சி செய்வோம். தனி நெறியின் பயனாகிய மரணமில்லா பெருவாழ்வை பெறுவதற்கு அதி தீவிர விருப்ப முயற்சி கொள்வோம்.
நன்றி அன்புடன் ; ஏபிஜெ அருள், கருணை சபை, மதுரை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
( ஏபிஜெ அருள் எழுதி வெளி வந்துள்ள புதிய நூல் “ வள்ளலார் – சுத்த சன்மார்க்கம் ” பெற்று தனி நெறியின் உண்மையை உள்ளது உள்ளபடி தெரிந்துக் கொள்வோம். தபாலில் பெறுவதற்கு :
9884265254 – ரவி / 863743 6345 – சசாங்கன்
விரைவில் …..
விரிவாக …
“திருவருட் பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் – தனி நெறி”
– ஆய்வு நூல் — ஏபிஜெ அருள் –
நன்றி : வள்ளுவர் – வள்ளலார் மன்றம் )
Karunai Sabai-Salai
எங்ஙனம்? எதற்கு? (பகுதி: 1) – ஏபிஜெ. அருள்.
மார்க்கம் என்றால் வழி.
சன்மார்க்கம் 3 வகைப்படும் என்கிறார் வள்ளலார்.
1. சமயசன்மார்க்கம்,
2. மதசன்மார்க்கம்,
3. சுத்தசன்மார்க்கம்.
சுத்தசன்மார்க்கம்: சுத்தம் என்பது ஒன்றுமல்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு பூர்வம் வந்ததால், சமயமத அனுபவங்களை கடந்தது
என்கிறார் வள்ளலார்.
மற்ற மார்க்கங்களை (வழிகளை) மறுக்க வந்தது எனப்படுகிறது.
மேலும்,
என் மார்க்கம் உண்மை அறியும் மார்க்கம் என்கிறார்.
எந்த உண்மையை புதியதாக அறிவிக்கிறார் வள்ளலார் ?
ஆம், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் ஆகும்.
எதை அடைய இப்புதிய வழியை வள்ளலாரால் 19ம் நூற்றாண்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.?
அது எதுவெனில்: இதோ வள்ளலார் சொல்கிறார்கள்:
“.. இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்
என ஆண்டவரிடத்தில் விண்ணப்பிக்கிறார் வள்ளலார்.” இதை பெறும் வழியை சொல்வதே “சுத்தசன்மார்க்கம் “.
மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி, மேற்படி பேரின்ப சித்திக் பெருவாழ்வை எதனால் பெறக்கூடும்?
இதற்கு சுத்தசன்மார்க்கத்தில் வள்ளலார்க்கு திருவருளால் அறிவிக்கப்பட்டது யாதெனில்:
“.. வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது. எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடும்..”
ஆக,
சுத்த சன்மார்க்கம் என்றாலே “சாகாக்கல்வி” தான்.
மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி, மேற்படி பேரின்ப சித்திப் பெருவாழ்வை பெறுதல். இங்ஙனமாக எவருக்கு மரணம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கிறதோ, அவர்களுக்கான உண்மை வழியை கண்டு வெளிப்படுத்தியவரே வள்ளலார்.
இவ்வழி உண்மை பொது வழியாக உள்ளது.
எனவே சுத்தசன்மார்க்கம் “ஒரு புதிய மார்க்கம்” எனக் கண்டோம்.
நிற்க,
உலகில் காணும் வேறு எந்தொரு சமயமதமங்கள், சாத்திரங்களில் இப்பெரும் பயனுக்கான வழி கிடையாது. சொர்க்கம், நரகம் இவையே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து,
எங்ஙனம் தனி நெறி எனக் காண்போம்.
தொடரும்… ஏபிஜெ அருள்.
(வள்ளலார்க்கு பின் எவர் ஒளி தேகம் தனிவடிவம் பெற்றனர்? வள்ளலார் மரணம் எய்தவில்லை என்றால் இப்பொழுது அவர் எங்கே?
எங்ஙனம்? எதற்கு? (பகுதி: 2) – ஏபிஜெ. அருள்.
“தனி நெறி” என அறிவிக்க வேண்டும். எங்ஙனம்? எதற்கு?
எதற்கு நம் வள்ளலார் மார்க்கம் புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்ய வேண்டும்?
நம் வள்ளலார்க்கு முன்பு இருந்த சன்மார்க்கங்கள் இரண்டு
1.சமய சன்மார்க்கம்
2.மத சன்மார்க்கம்.
3வது புதிய மார்க்கத்தை நம் வள்ளலார் 19ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கிறார். மேற்படியாக சன்மார்க்கங்கள் மூன்று என்கிறார் வள்ளலார்.
இப்படி ஒரு புதிய மார்க்கம் தோன்றியுள்ளதை உலகிற்கு விரைந்து வெளிப்பட செய்ய வேண்டும் என ஆன்ம நேயம் கொள்ளுதலும் நம் தகுதியில் ஒன்றே. இதை விரைந்து வெளிப்படுத்தும் திறனை கொண்டது அரசுகளே. அரசு நம் மார்க்கத்தை ஒரு புதிய மார்க்கம் எனவும் தனி நெறி எனவும் விளம்புகை செய்தால் நமக்கு பல சட்டப் பலன்களும் உதாரணமாக சான்றிதழில் நாம் “சுத்த சன்மார்க்கம்” சார்ந்தவர் என்று போட அனுமதியும், இதன் மூலம் உலகில் அனைத்து நாட்டவர்க்கும் நமக்கு தெரிந்த உண்மை பொது நெறி விரைந்து வெளிப்பட்டும், நம் வடலூர் நிலையங்கள் அரசின் கீழ் ஒரு சிறப்பு பார்வையிலும், நியமிக்கப்படும் அறங்காவலர்கள் நம்மவர்களாகவும் நியமிக்கப்படுவர். நம் நிலைய வருமானத்தை நம் தனி கொள்கை, நிலைய வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். நிலையத்தில் முரணான வகையில் சமயமத சடங்குகள் நடக்காது. நிற்க, நிலையம் வள்ளலாரின் சுத்தசன்மார்க்க நெறிப்படி நடக்க வேண்டும் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த 12 வருடங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் சத்திய ஞானசபை வழக்கு நிலுவையில் தான் உள்ளது. அந்த வழக்கில் வள்ளலார் சமயத்தை கைவிடவில்லை எனவும், அவர் பூசாரிகளிடம் லிங்க விக்கிரகத்தை கொடுத்து ஞானசபையில் வைத்து வழிபடச் சொன்னார் என்பதே எதிர்தரப்பு வாதம். இப்படிப்பட்ட முரண்பட்ட விசயங்கள் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின், வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் எனவும் அவர்தம் நெறி தனி நெறி எனவும் சட்டப்படி அரசு முடிவு செய்ய வேண்டும். மாநில அரசவைக்கு அதிகாரம் உள்ளது என்று நாம் ஒரு உதாரணத்திற்காக கர்நாடகா அரசு லிங்காயத்தை தனி மதம் என அறிவித்ததை எடுத்துச் சொல்லப்பட்டது. அரசு செய்யாத பட்சத்தில், மேதகு நீதிமன்றம் நாடுவோம். ஆக, சுத்தசன்மார்க்கம் சார்ந்தவர்களுக்கும் பல பயன்களும், மகிழ்ச்சியும், இம்மார்க்கத்தை விரைந்து அறிந்திடஉலகத்தார்க்கும் பயன் கிடைக்கும்.
நேரத்தை வீணடிக்காமல் விசாரம் செய்வோம்.
நெறி என்றால் கொள்கை, கோட்பாடு எனப்படும். வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் எந்த சமய மதக் கோட்பாட்டை சொல்கிறது என்றால், இம்மார்க்கம் தனி நெறி, கொள்கையை சொல்கிறது. எல்லாவற்றையும் உள்ளடக்கி கடந்து தனி நெறியாக உள்ளது.
வள்ளலார் மிக அதிகளவில் பயன்படுத்திய வார்த்தையில் ஒன்றுதான் “தனி” என்ற சொல்.
இம்மார்க்கத்தில் செல்லப்பட்டுள்ள சத்திய வார்த்தைகள் அனைத்தும் தனித் தன்மை, தனிப்பொருள் கொண்டது. உ. ம்:
தனி அறிவு, தனி இயற்கை, தனி அனுபவம், தனி அருட்பெருஞ்ஜோதி, தனிக்கருத்து, தனி வெளி, தனிச்சுடர்,
தனி நடராஜர், தனிப்பெருங்கருணை,
தனி அருள், தனி ஞானசபை, தனிவடிவம், தனிச்சோதி, தனிநடம், இதை போல் நூற்றுக் கணக்கான “தனி” யுடன் கூடிய வார்த்தைகளை காணலாம். ஆக, வள்ளலார் சொல்லிய கொள்கை, நெறி தனித்தன்மை கொண்டதும் அதே நேரத்தில் என் நெறி எல்லா சமயமத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக உள்ளது என்கிறார் வள்ளலார் . இங்ஙனம் ஒரு தனிப்பெயரை தன் மார்க்கத்திற்கு கொடுப்பது மூலம் வள்ளலாரின் மார்க்கம் ஒரு புதிய மார்க்கம் ஆகும்.
தன் நெறி “தனி நெறி” எனத் தெளிவாக கீழ்வருமாறு பாடல்கள் மூலம் அறிவிக்கிறார் வள்ளலார்.
#6-013 ஆறாம் திருமுறை / திருவருள் விழைதல்
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் தனிநெறி உலகெலாம் தழைப்பக்கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்புண்ணியம் பொற்புற வயங்க அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.
ஆறாம் திருமுறை / பொதுநடம் புரிகின்ற பொருள்
சிதத்தொளிர் பரமே பரத்தொளிர் பதியேசிவபத அனுபவச் சிவமே
மதத்தடை தவிர்த்த மதிமதி மதியே
மதிநிறை அமுதநல் வாய்ப்பே
சதத்திரு நெறியே தனிநெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப்பெரு வரமே புகற்கருந் தரமே
பொதுநடம் புரிகின்ற பொருளே.
தன் மார்க்கம் “தனி” என்பதற்கு பாடல்:
ஆறாம் திருமுறை / ஜோதியுள் ஜோதி
தருநெறி எல்லாம்உள் வாங்கும்
சுத்தசன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோங்கும்
திருநெறிக் கேசென்று பாரீர் –
திருச்சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
இந்த தனி நெறியில், தனிப் பதி,
புதிய மற்றும் பொது வழி, தனிப்பெரும்பயன் உள்ளது.
#நாம் இத்தனி நெறியில் கருணை நன்முயற்சியில் இடைவிடாது பயில்வோம்.
# மற்றவர்களுக்கு இவ்வுண்மையை எடுத்துரைப்போம்.
# புதிய மார்க்கம் மற்றும் தனி நெறி எனவும் மத்திய அரசு விளம்புகை செய்ய மாநில அரசை பரிந்துரைக்க வேண்டுமாம்.
# இதன் மூலம் இனி நாம் சுத்தசன்மார்க்கம் சார்ந்தவரென்று அரசிடம் பதிவு செய்வோம்.
#வள்ளலார் கட்டளைப்படி சாகாகல்வி கற்க தீவிர விருப்பம் கொள்வோம்.
நன்றியுடன் : ஏபிஜெ அருள்.
பார்க்க Blog Posts: www.atruegod.org)