வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் மதம் சார்ந்த நடவடிக்கைகள் நடத்த அனுமதிக்கக்கூடாது, வள்ளுவர் வள்ளலார் மன்றம் வலியுறுத்தல்
வள்ளுவர் வள்ளலார் மன்ற தலைமை நிலைய செயலாளர் ச.சசாங்கன், இந்து அறநிலையத்துறைக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்‘ என்று பாடிய வள்ளலாரின் வாழ்க்கை பல அற்புதங்கள் நிறைந்தது. வள்ளலார் சமரச சன்மார்க்க ஞானியாகவும், சமயங் கடந்த சமுதாயநலச் சித்தராகவும் விளங்கியவர். அவர் சமயவாதிகளைப்போலவோ, தத்துவக்கொள்கைவாதிகள், துறவிகள், மதகுருமார்களைப்போலவோ மக்களுக்கு ஆன்மிக ஞானத்தை போதனை அளவில் புகட்ட முயன்றவர் அல்ல.
கடலூர் மாவட்டம் வடலூரில் 19-ம் நூற்றாண்டில் அவதரித்த வள்ளலார் தனது நீண்ட ஆன்மிக தேடலின் பலனாக சமரச சத்திய சுத்த சன்மார்க்க சங்கம் என்னும் புதிய மார்க்கத்தை உருவாக்கி அதற்காக தனி நெறிகளை உருவாக்கினார். தான் உருவாக்கிய தனி நெறிகளை கடைபிடித்து சாகாக்கல்வி என்னும் பெருவாழ்வை பெற்றார். வள்ளலாரின் தெய்வ நிலையத்தில் ஜோதி வழிபாடு மட்டுமே நடைபெறும்.
தற்போது வள்ளலாரின் தெய்வ நிலையத்தை இந்து அறநிலைய ஆட்சித்துறை தனது கட்டுப்பாட்டில் பராமரித்து வருகிறது. இந்த தெய்வ நிலையத்தில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிகள் பற்றி பல இடங்களில் மக்களின் பார்வைக்காக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் மீறப்பட்டு வருவதாக வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறிகளை பின்பற்றுவோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இங்கு வள்ளலாரால் அமைக்கப்பெற்ற சத்திய ஞான சபையின் எட்டு கதவுகளையும் திறந்து அவர் செய்தது போல் 24 மணி நேரமும் தடைபடாமல் ஜோதியை காட்ட வேண்டும். சத்திய தருமச்சாலை மேடையில் வள்ளலார் நெறிகளை பின்பற்றுபவர்களை கண்டிப்பாக சொற்பொழிவாற்ற அனுமதிக்கக் கூடாது. சமயம், மதம் சார்ந்த நடவடிக்கைகள் ஏதும் நடத்திட அனுமதிக்கக்கூடாது. வள்ளலாரின் நெறிகளை கற்றுத்தரும் பாடசாலையை உடனடியாக நிறுவவேண்டும். வெளியூர் பயணிகளுக்கு தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். பொதுமக்களுக்கு போதிய கழிப்பறைகள், குளியலறை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.