“சாதி பொய்”- எப்படி?
“சாதி பொய்”.- எப்படி? — ஏபிஜெ அருள்.
இளைஞர்களே! “சாதி பொய்” என அறிவியுங்கள்
“சாதி பொய்”.- எப்படி?பொய்யென நிருபித்தார் “நம்மய்யா.”
ஊரே “நம்மய்யா” வுக்கு மாலைப் போட்டு கொண்டாடி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கியது.
யார் அந்த பெரியவர் “நம்மய்யா”?. “நம்மய்யா” 90 வயது முதியவர்.
ஊர் ஸ்கூல், ஆஸ்பத்திரிக்கு தனது நிலங்களை கொடுத்தவர். தனது நகை கடையில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் இழந்தோர் இவர்களின் கல்யாண செலவுகள், கிராம இளைஞரின் மேல்படிப்பு செலவுகள், கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு இடம் பணம் மொய்யாக செய்பவர். இப்படி பல சேவைகளை செய்யும் தனிமை உடைய தாத்தா தான் இவர். ஊரார் இவரை செல்லமாக அழைக்கும் பெயர் “நம்மய்யா”. இந்த மாப்பட்டி கிராமத்து எல்லார் வீட்லேயும் இவர் படம் உண்டு. சாமியா பார்க்கிறார்களும் உண்டு.
இரவு 10 மணி. பஜாரில் உள்ள தனது பெரிய மருந்து கடையை அடைத்து விட்டு, குளிர்ந்த நிலவு வெளிச்சத்தில் புன்னகையை சுமந்து தளராத மெதுவான நடையில் வீட்டை அடைந்தார் நம்மய்யா.
மறுநாள் காலை ஒரு செய்தியால் நாடே ஒரு பரபரப்பில் ஆனது. அதற்கு காரணம் இந்த ஊர் ‘மாப்பட்டி’ தான்.
மக்களிடம் பிரபலமான இந்த ஊரை சேர்ந்த வேறுபட்ட சாதி சமயத்தை சேர்ந்த அரசியல்வாதி இராசுவும், நடிகர் சூப்பர் பியாலுவுக்கும் இடையில் தலைநகரில் ஏற்பட்ட கருத்து மோதல். இந்த இருவர்களின் தொடர் அறிக்கை மோதலால் அவர்களின் ஆதரவாளர்களும் மோதி ஒருவருக்கொருவர் அடித்து மண்டையை உடைத்துக் கொண்டனர். இருவரின் சொந்த ஊர் இந்த ‘மாப்பட்டியிலும்’ கலவரம் வெடித்தது. கலவரத்தில் இரு பிரிவினரும் பஜார் கடைகளை அடைக்க சொல்லி வரும் போது “நம்மய்யா” கடைக்கும் இரு கோஷ்டினரும் வந்தனர். கம்பு கத்தி வேறுபல ஆயுதத்துடன் நின்ற அனைவருமே இளைஞர்கள். நேற்று தனக்கு நடந்த ஊர் பாராட்டு விழாவில் சாதி சமய வேறுபாடில்லாமல் கலந்து கொண்ட இளைஞர்கள் இன்று ஒருவரைஒருவர் வெட்ட அறுவாளை தூக்கி இருக்கும் காட்சியை கண்டு அவரையறியாமல் அவர் கண்கள் கலங்கின. ஊராரிடம் பாசம் காட்டிய “நம்மய்யா” கண்களில் கண்ணீர் மல்கி ஓடுவதை கண்ட இரு பிரிவு இளைஞர்கள் சிறிது அதிர்ந்தனர்.
அவரிடம்;
அய்யா நீங்கள், சீக்கிரம் கிளம்புங்க, எங்க சாதி தலைவரை கேலி பண்ணின இந்த கீழ் நாய்களை உங்கள் முன்பு வெட்ட மனமில்லை என்று கூட்டத்தின் ஒரு சைடிலிருந்து குரல் வந்தது.
டேய், யாருடா கீழ்நாய்ங்க? உழைக்க துப்பு இல்லாது படத்துல வேசம் போட்டுட்டு எங்க துட்ல வாழற நீ எங்கள தீட்டுக் காரன் சொல்லுவியா? டேய் இன்னிக்கு தொலைசீங்கடா? என்று இந்த சைடு இளைஞர்கள்.
இதை பார்த்த “நம்மய்யா,” தீடீர்னு சத்தமா சிரித்தார்.தொடர்ந்து சிரித்தார்.
கண்ணீர் விட்டுக் கொண்டியிருந்தவரு இப்ப ஏன் பெரிசா சிரிக்கிறாரு? என இரு சைடு இளைஞர்களும் அமைதியானார்கள். அவரிடமே,
“அய்யா” என அழைத்து ;
‘எங்கள பார்த்து ஏன் இப்படி சிரிக்கீறிங்க?’
காரணத்தை சொல்லுங்க அய்யா என்றனர்.
“நம்மய்யா” அவர்களிடம்;
எனது அன்பு செல்லங்களா,
தாத்தா, இப்ப ஒரு உண்மையை சொல்லப் போறேன். அதை கேட்டப் பிறகு உங்களுக்குள் சண்டை போடுவது தான் சரி என்றால் சண்டை போடுங்க. இல்ல, மாற முடியாதுனு சொன்னா, நீங்க இரண்டு சமயத்து சாதி காரங்களும் சேர்ந்து என்னை முதலில் வெட்டிட்டு, உங்களுக்குள் வெட்டிக்குங்க என்று சொல்லி அமைதியானார். திருப்பியும் இருபுறமும் பார்த்து சத்தமாக சிரித்தார். இப்படி வித்தியாசமா சிரிச்சிட்டு இருக்கிற “நம்மய்யாவை” கேள்வி குறியா பார்த்தனர் அனைவரும்.
இத பார்த்த “நம்மய்யா” அவர்களிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்;
‘இன்னிக்கு நம்ம சாதி,சமயம் சேர்ந்தவர்னு நீங்க சொல்ற இராசுவையும், பியாலுவையும் உங்களையும் நினைச்சா, ஒரே சிரிப்பாதான் வருது. இந்த நேரத்துக்கு தான் இத்தனை வருஷமா நான் காத்துட்டு இருந்தேன். உண்மை ஆண்டவரு இப்ப தான் கருணையை காண்பிக்கிறாரு.
நீங்க நான் சொல்றத கவனமா கேட்டு, அப்படி கேட்டத சிந்தித்து பார்ப்போம்னு நீங்க எனக்கு சத்தியம் பண்ணினா, நான் இப்ப ஒரு பெரிய உண்மையை சொல்லுவேன். இல்லைனா உங்களையும், உங்க சாதி தலைவர்களையும், இந்த நாட்டையையும் பார்த்து சிரிக்கிறத தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்றார் நம்மய்யா.
தனது உறுதியான வார்த்தையால் ஏற்பட்ட
இந்த புதிர் இளைஞகளிடம் ஒரு புதிய தாக்கத்தையும் உணர்வையும் ஏற்பட்டதை கண்ட “நம்மய்யா” அவர்களிடம்;
” இம்ம்.. எல்லாரும் சத்தியம் செய்யுங்க..” என்று சத்தமாக சொன்னார். நம்மய்யாவின் இந்த சத்தம்,
அவர்களிடம் ஏற்படுத்திய ஆழ்ந்த அமைதியே அவர்களின் சத்தியமானது.
“நம்மய்யா” தொடர்ந்தார்;
இன்று இந்த மாபிரபஞ்சத்தில் சந்தோசமா வாழ வேண்டி பிறந்த உங்களை அங்ஙனம் சந்தோசமா வாழவிடாமல் உங்களுக்குள் சண்டை ஏற்படுத்தி, துன்பமே இறுதியில் தரும் உங்கள் சாதிகள் சமயங்கள் பொய் பொய்யே.
அவை உங்கள் அறிவால் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல.
பிறப்பால் வரும் சாதி,
குடும்ப வழியில் வரும் சமயம்
இவை என நீங்கள் உணர வேண்டும்.
நீங்கள் என்றாவது சாதி சமய குறித்து விசாரணை செய்து உள்ளீர்களா?
நீங்கள் வாழ வழி வகை செய்யவே உங்களுக்கு நேரம் சரியாக உள்ளது?
இப்பமாவது கொஞ்ச நேரம் ஒதுக்கி நான் சொல்றதில் விசாரிங்க…
” உங்கள் சாதிக்கும் உங்கள் அறிவுக்கும் என்ன தொடர்பு?
எந்த சமயம் உங்களை உண்மையை நோக்கி சிந்தித்து விசாரிக்க சொல்லுது?
வேறுப்பட்ட பல சமயங்கள் உங்களிடையே உள்ளது. ஆனால் உங்கள் எல்லோருக்கும்
ஒரே இன்பம் ஒரே துன்பம் ஒரே சாவு தானே?
இயற்கை படைப்பான சூரியன் சந்திரன் ஐம்பூதங்கள் எல்லாம் நமக்கு பொதுவா இருக்கும் போது, நம் எல்லாருக்கும் ஒரே கடவுள் தானே இருக்க முடியும்.
உங்க சாதி பொய்னு இப்ப நீருபிக்க போறேன், என தன் வயசை மறந்து, நிமிர்ந்து, இளைஞரின் கண்களை பார்த்து தொடர்ந்து பேசினார் “நம்மய்யா”.
” 59 வருசத்துக்கு முன்னாடி நம்ம ஊர் அரசு ஆஸ்பத்திரியில் இரண்டு ஆண் குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தது. அதில் ஒரு குழந்தை பெரிய இடம். ஆஸ்பத்திரி வசதி இல்லைனு மறுநாளே அந்த பெரிய இடத்துகாரங்க குழந்தையுடன் போயிட்டாங்க. அதே
ஆஸ்பத்திரியில் சீரியஸ்ஸாக சேர்த்திருந்த என் அம்மாவின் அருகில் நானிருந்தேன். உயிர்விளிம்பில் இருந்த என் தாயிடம் என் தந்தை யாருன்னு? கேட்டேன்.
அதுக்கு என் தாய்;
‘செல்வத்தை அள்ளி கொடுத்தவங்க நிறைய பேரு, அதுல உண்மையான செல்வமாகிய உன்னை கொடுத்தவங்கள அடையாளம் காண முடியல என்ற என் அம்மாவின் வார்த்தை என்னுள் இடியாக இறங்கியது. அதை கண்ட என் தாய் என் கை பிடித்து;”வாழ்ந்து வந்த பாவ கிணத்தில உன்ன வளர்க்க விரும்பாம இந்த புண்ணிய தமிழ் கிராமத்துக்கு வந்திட்டேனு.. கண்ணீர் விட்டு…. கண்ணு மூடிட்டா. நான் கேட்ட எனது பிறப்பு உண்மையின் சுவையறியாதவனானேன். இந்த பொய் பகட்டான சாதி சமயத் தோலை போர்த்திய தலைவர்கள் மேல் வெறுப்பும், என் போன்ற உண்மையறியாத இளைஞர்கள் மேல் பரிதாபமும் ஏற்பட்டது. மன அமைதி அடைய ஆஸ்பத்திரியின் ஒதுக்கு புறமா நான் போன போது, ஆஸ்பத்திரி பணியில் இருந்த நர்சுகள் இரண்டு பேர் ரகசியமா பேசியது எனக்கு கேட்டது.
அது;
“அக்கா ஒரு தப்பு நடந்துட்டது. நேற்று பிறந்த ஆண் குழந்தைகளை குளிப்பாட்டி அவங்க அம்மாவிடம் வைக்கும் போது தவறுதலா குழந்தையை மாத்தி வைத்துவிட்டேன் நான். விசயம் தெரிந்த பிறகு சரி செய்யவும் முடியல என்னால். இத எப்படி சொல்லனும் தெரியாம நேத்திக்கு இருந்துட்டேன். இன்னைக்கு வந்து பாத்தா பெரிய வீட்டு குழந்த டவுண் ஆஸ்பத்திரிக்கு போய்ட்டாங்கலாம். அக்கா எனக்கு பயமா இருக்கு.
அதற்கு அவள்;
இது பெரிய விசயம் வெளியே தெரிஞ்சா இரண்டு சாதிகாரனும் நம்மள கொன்னுடுவாங்க.நமக்குள்ளயே விட்டுவிடு….போய் ஒன்னும் தெரியாத மாதிரி வேலையைப்பாரு”.
அம்மா இழந்து தந்தையும் தெரியாம சமுதாயத்து மேலே கோபமா கலங்கி இருந்த எனக்கு இந்த விசயத்தில எதுவும் செய்ய பிடிக்கல. பல வருடங்கள் ஓடிற்று.
நீங்க இப்ப சாதி சமய தலைவர்னு யார் மேலே வெறித்தனமா பற்று வைத்து இருக்கிறீங்களோ அந்த இராசுவும், பியாலும் தான், அந்த “மாறி போன குழந்தைகள்”.
இப்ப சொல்லுங்க,
நீங்க சொல்லும் சாதி பொய்யா பொய் இல்லையா? அந்த சாதியை நிலை நாட்டும் சமயமும் பொய் தானே. இத்தனை வருடமா நம்ம சாதி நம்ம தலைவருன்னு சொன்னதுமேல் உள்ள உண்மை என்னாச்சு? இப்ப உங்க சாதி வெறி பொய் ஆயிட்டா ஆகுலையா?
அதே நேரத்திலே
உங்க சாதி சமயம் எல்லாம் கடந்து அப்பா யாருன்னு தெரியாத என்னை போற்றினீங்க. அது தான் மெய். அது தான் அன்பு. உங்க மேலே நான் வைத்த கருணையும் உண்மை. எல்லாரையும் மனித நேயமா பார்த்தேன் என் சொத்தை செலவழிச்சேன். இது நாள் வரை பெரியவங்க இந்த பொய் சாதி சமயத்துக்கு கட்டுப்பட்டு இருந்திட்டாங்க. மறந்திடுங்க. நீங்க விழித்திடுங்க. சந்தோசமா வாழுங்க. இயற்கையை நேசிங்க. உண்மை கடவுளின் நிலை காண நல்ல விசாரம் செய்யுங்கள். மன உணர்ச்சியை தூண்டும் கற்பனையான பொய் சாதியையும், முழு உண்மை உரைக்காத பொய் சமயத்தையும் கைவிட்டு, உண்மையை மட்டுமே நம்ப சொல்லும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
உழைக்காதவன், அடுத்தவர் வருமானத்தை பறிப்பவன், ஆதிக்கத்தையே செய்ய விரும்பவன் இவர்களால், இவர்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில், மற்றவர்களை அடிமையாக்கி அவர்களை வணங்க அவர்களிடம் வேலை வாங்க எல்லாதுக்கும் மேலே அதிகாரம் செலுத்த, ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த சாதி.
இதை நிலை நிறுத்த இதன் அடிப்படையிலேயே சமயம் , அதன் கடவுள்கள் உருவாக்கப்பட்டது என்பதே உண்மை வரலாறு.
இளைஞர்களே! என் செல்வங்களே!
சாதி சமயம் பொய்னு உங்களுக்கு தெரியப்படுத்தவே இத்தனை வருடம் காத்திருந்தேன். நீங்க பொய்யான சாதி சமய மத மார்க்கங்களிலிருந்து விலகி உண்மை கடவுளை காண ஒழுக்கத்தில் இருக்க வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. சாதி சமய மத சண்டை போடுபவன் உண்மை அறிவை பெறாதவன். எல்லாரும் கடவுளின் அம்சமே. நாம் யார்?உண்மை எதுனு? கடவுளிடமே கேட்க நன்முயற்சியில் இருக்க வேண்டும் என உங்கள் அனைவரின் காலில் விழுகிறேன் என்று கீழே விழுந்த எங்கள் அய்யா எழுந்திருக்கவே இல்லை. எங்கள் கால்கள் ஒன்றாக மண்டியிட்டன.
அய்யாவின் உடலை மண்ணுக்குள் வைத்து புதைக்கும் போது,
எங்களுக்குள் இருந்த பொய்யான சாதி சமயமும் ஒழிந்து விட்டது என்பது சத்தியம் சத்தியம்.
— ஏபிஜெ அருள்.