January 22, 2025
tamil katturai APJ arul

சாகாகல்வி என்றால்,,,???

சாகாகல்வி என்றால்,,,???

சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை- சாகின்றவன் சுத்தசன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன்சாகாதவனே சுத்த சன்மார்க்கி– என்கிறார் வள்ளலார் –

நிற்க!
இது உண்மையா ? இது சாத்தியமா ? என்று ஒரு பக்கம் சந்தேகம் இருந்தாலும் மேற்படியாக சொன்ன ஒரே மார்க்கம் வள்ளலாரின் மார்க்கமே-

சாகா கல்வியை இறைவனே உரைத்தார் என்றும், அப்பயனை தான் பெற்றதாக சொல்லுகிறார் வள்ளலார்- மேலும் எல்லோரும் பெறுவதாகவும் உள்ளது என்கிறார்கள்- இந்த உண்மையை ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் தெரிவித்தேன் என்கிறார்கள்-
மேலும் வள்ளலார் கூறுகையில்; தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிக்கின்றது– அதை தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்- என்கிறார்கள்

திருவள்ளுவர் எழுதியது திருக்குறள் என எல்லோரும் அறிவோம்-

நிற்க! திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து பாடல்களில்;

குறள் 3:
“ நிலமிசை நீடுவாழ் வார் ” 
(குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்)

குறள் 4:
”வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல”
இதில் இடும்பை என்பது துன்பங்கள் எனப்படும்- சமய சான்றோர்கள் துன்பம் என்றால் பிறவித் துன்பங்கள் என்பர்-
ஆனால் துன்பங்களில் பெரிய துன்பம் மரணம் தானே! இறைவனின் அருள் பெற்றவர்க்கு மரணம் என்ற துன்பம் கிடையாது என திருவள்ளுவர் சொல்லியுள்ளார்கள் என ஏன் சொல்லக் கூடாது-

குறள் 6:
பொறிவாயில் ஜந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார்

குறள் 8: ”அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது”
இதில் “பிற ஆழி நீந்தல் = பிறவாகிய கடல்களை நீந்தல், அரிது

குறள் 10:

”பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்”

நிற்க!

மேலே நாம் கண்ட குறள்களில்;
“பிறவி கடல்” “ நீடுவாழ் வார்” “இடும்பை இல” என கண்டோம்-
இதற்கு தக்க ஆசிரியர் மூலமாய் தெரிந்து கொள்ளலாம் என்ற வள்ளலாரின் வார்த்தை நினைவில் கொள்ள வேண்டும்-
ஆனால்; 
ஆனால் திருவள்ளுவர் திருக்குறளை தவிர வேறு பல நூலையும் எழுதியுள்ளார்- 
திருவள்ளுவ நாயனார் திருக்குறள் தவிர அருளிய நூல்கள்;

-ஞான வெட்டியான்
-பஞ்ச ரத்தினம்
– நவரத்தின சிந்தாமணி
-கற்ப நூல் – குரு நூல் – சர நூல்
-முப்பு (சூத்திர)

இதில் ஞான வெட்டியான் – 1500 ல்;

பாடல் 8 :
தசநாடி சுவாசமதுஞ் ஜெனித்த வாறுஞ்
ஜெகதலத்தி லெனைப்பழித்த செய்திவாறும்
அசைவதிருந் தாக்கையசை யாதவாறு
மடி நடுவு முடிவான கற்ப வாறும்
பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்
பஞ்சபட்சி யஞ்சு நிலைத் திருந்த வாறும்
இசையுந்தச தீட்சைமதி ரவியின் வாறு
மிராஜயோ கத்தினருள் காப்புத் தானே

(மேற்படி பாடலில் அசைவதிருந் தாக்கையசை யாதவாறு என்பது;
இந்தத் தேகத்தை அழியாமலிருத்தி வைக்கத் தக்க —- மார்க்கத்தை)

அடுத்த பாடல் 9:

யோகாதி யோக நிலைத் திருந்த பேர்க்கு
முற்பன்மாங் கற்பமுண்டு சாவாப் போக்கும்
வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்
வெண்சாரை கரு நெல்லி விதித்த போக்கும்
போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூ நீர்ப் போக்கும்
பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும்
ஆகாத மணிதர்களை யகற்றும் போக்கு
மசடில்லா மாதுரச குளிகை காப்பாம்

(இங்கு; சாவாப் போக்கும் வேகாத் தலை, போகாப்புனல், உள்ளது-
வள்ளலார் சொல்வது; சாகாத்தலை, வேகாக்கால்,போகாப்புனல் இம்மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும் என்று சொன்னதை நினைவில் கொள்க)

அடுத்த பாடலில் 11;

”—-உயிருமுடல் நிலைத்திடவு பாயஞ் சொன்னாள்”

ஆக; வள்ளலார் சொன்ன சாகாகல்வி ஏற்கனவே திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த “ ஞான் வெட்டியான்” ல் சொல்லப்பட்டுள்ளது
அதன் பின்பு சமய,மத,வேதங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள் இவையின் தோன்றலால், ஆதிக்கத்தால் மேற்படி ”சாகாகல்வி” மறைக்கப்பட்டு, பூட்டப்பட்டு விட்டிருந்தது-
வள்ளலாரின் சத்திய அறிவால் இடைவிடாத கருணை முயற்சியின் பயனால் இறையருளால் அக்கல்வி வெளிப்பட்டுள்ளது- அக்கல்வியால் மரணத்தை வென்ற முதல் சுத்த ஞானியே நம் வள்ளலார்
                 “அவர் பெற்ற பயனை நாமும் பெறலாம் எனச் சத்தியம் செய்து சொல்கிறார்கள்”
நிற்க!
ஆனால் வள்ளுவர்க்கும் வள்ளலாருக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய சமயங்களில், மதங்களில் மார்க்கங்களில் கடவுள் அருளால் நீடுழி வாழலாம் என்றும், சாமாதியடைதல் முக்தியடைதல் மீண்டும் பிறவாதிருத்தல் இவையே கடவுள் அருள் என சொல்லப்பட்டுள்ளது-
இங்ஙனமாக கொள்கையை கொண்ட சமயத்தில் மதத்தில் பற்று வைத்தால் பற்று வைத்தவர்களால் அச்சமய, மத கட்டுப்பாட்டை மீறி எப்படி சிந்திக்க முடியும்- மரணத்தை ஒத்துக்கொண்டவர்கள் எங்ஙனம் சாகாகல்வி குறித்து விசாரிப்பார்கள்? ஆச்சாரங்களை கைக்கொண்டவர்களிடத்தில் கருணை விருத்தியாகாது என்ற உண்மையையும் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தி உள்ளார்கள்-

எனவே, அன்பர்கள் சிறிது சிந்திக்கவேண்டும்-

சரியோ, தப்போ,
இயலுமோ, இயலாதோ,

இங்ஙனம், அதாவது, சாகா கல்வியே வள்ளலார் மார்க்க நெறியாக சொல்லப்பட்டுள்ளது– சாகாகல்வி குறித்து பல பாடல்கள், உபதேசங்கள் வள்ளலார் செய்துள்ளார்கள்-
தான் கொண்டியிருந்த சமயப் பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை வள்ளலார் கண்டார்
அம்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடையாக சமயம் ,மதம், மார்க்கங்களை அறிவித்து உள்ளார் என்று சொல்வது தானே சரியாகும்- நியாயம் ஆகும்-
இது தானே உண்மை-

அன்பர்களே!

வள்ளலார் சொல்கிறார்கள்;
எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-

நன்றி;
உங்களுடன் நல்ல விசாரணை செய்ய 
அனுமதித்தற்கு நன்றிகள் பல

கருணை சபை, ஏபிஜெ அருள்- மதுரை

unmai

Channai,Tamilnadu,India

One thought on “சாகாகல்வி என்றால்,,,???

  • Satshidhanandan

    உண்மை விளக்கம் அளித்த உத்தமிக்கு நன்றி நாமெல்லாம் நாளெல்லாம் நல்அருள் பெறுவோம் வள்ளலார் வாரி வாரி வழங்கிய சுத்த சன்மார்க்க சத்தியப் பேறறிவால் பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம். இது சத்தியம். நம் அனைவருக்கும் சாத்தியமே வள்ளலார் அனுபவ ஈட்டில் வரும் கூற்று.!!!
    புத்தியஞ் சேல்சற்று மென்னஞ்ச மேசிற் பொதுத்தந்தையார்
    நித்தியஞ் சேர்ந்த நெறியிற் செலுத்தினர் நீயினிநன்
    முக்தியும் ஞானமெய்ச் சித்தியும் பெற்று முயங்கிடுவாய்
    சத்தியஞ் சத்தியஞ் சத்தியஞ் சத்தியமே.
    வள்ளலார் வழி வாழும் APJ ARUL
    அவர்களை வாழ்த்தி மகிழும் சத் சித் ஆனந்தன்

Comments are closed.