வள்ளலாரின் “முடிபான சுத்த சன்மார்க்க கொள்கை” அடிப்படையிலேயே வடலூர் வள்ளலார் நிலையங்கள் நடைபெறவேண்டும்-HR&CE
வள்ளலாரின் “முடிபான சுத்த சன்மார்க்க கொள்கை” அடிப்படையிலேயே வடலூர் வள்ளலார் நிலையங்கள் நடைபெறவேண்டும். நிலைய நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் அதிரடி உத்தரவு.
தமிழக அரசு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் மகத்தான சிறப்பான
ஆணைகள் விபரமாக காண்போம்.
கடந்த 10 வருடங்களாக எத்தனையோ அறவழிப் போராட்டங்கள் பல வழக்குகள் மேற்கொண்டு, இன்று பல நல்ல தீர்ப்புகளை நாம் பெற்றுள்ளோம்.முழுமையான வெற்றி இல்லாவிட்டாலும் பெற்றுள்ள தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் உடையது ஆகும்.
வள்ளலார் தான் பெற்ற ஒளி தேகத்தை வெளிப்படுத்திய நாளுக்கு பின்பு அவர்தம் நிலையங் கள் சமயத்தில் பற்று வைத்திருந்தவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
முதல் மாணக்கர் என்று அழைக்கப்பட்ட திரு. வேலாயுத முதலியாரும் சமயத்தில் அவர் வைத்திருந்த லட்சியத்தை கைவிட்டு விடவில்லை. ஏன் வள்ளலாரின் முழு அன்புக்கு பாத்தியப்பட்ட திரு. கல்பட்டு அய்யா கூட சுத்த சன்மார்க்கத்தை சார்ந்திருக்கவில்லை. சமயத்தின் பல ஆசாரங்களில் அவர் லட்சியம் வைத்திருந்தார்கள். இதற்கு வள்ளலாரின் கீழ்வரும் சத்திய வாக்கியமே ஆதாரம் ஆகும்.
“உண்மை சொல்ல வந்தனனே என்று
உண்மை சொல்லப் புகுந்தாலும்
தெரிந்து கொள்வாரில்லை”. -வள்ளலார் (22.10.1871)
அதன்பின்பு வந்தவர்களும், வள்ளலாரை, அவரால் கைவிடப்பட்ட அவர்தம் முந்தைய சமயக் கொள்கையிலேயே வெளிப்படுத்தினார்கள் என்பதே உண்மையாகும். சிலர், அவரை சமயக் கொள்கையிலும் அதன்பின்பு முடிபான கொள்கையிலும் காட்டினார்கள். பல தமிழ் அறிஞர்கள் வள்ளலாரின் சமய ஸ்தோத்திரப் பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து பல விளக்க உரைகள்எழுதியுள்ளதையும் காணலாம்.
அதன்பின்பு 1935ம் ஆண்டு வள்ளலார் நிலையங்கள் இந்து சமய அறநிலையத்துறை வாரியத்தின் கீழ்கொண்டு வரப்பட்டது. ஆனாலும் எந்தொரு மாற்றமும் இல்லாமல் வள்ளலாரை முந்தைய சமயப் பற்றிலும் முடிபான கொள்கையிலும் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. சமயத்தில் லட்சியம் வைத்துக்கொண்டிருந்தவரும் ஆன்மீக சொற்பொழிவில் பிரசித்துப் பெற்று விளங்கிய உயர்திரு.கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களால் சத்திய ஞானசபை திருப்பணி செய்யப்பட்டது.
அதன்பின்பும் இன்றுவரை பார்த்தாலும் நிலையங்களில் செல்வாக்கு பெற்று விளங்கியவர்கள் அனைவருமே சமயத்தில் லட்சியம் வைத்தவர்களாகவும், சமய ஆசாரங்களை கைகொண்டிருப்பவர்களாகவும் தான் உள்ளார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம்.
ஆனால் எல்லாருமே வள்ளலாரை தெய்வமாக, கருணை கடவுளாக,சீர்த்திருத்த ஞானியாக அல்லது மகானாக கருதினார்கள் என்பதில் ஐயமில்லை.அதே நேரத்தில் வள்ளாரை அவர்தம் முடிபான கொள்கை சுத்த சன்மார்க்கத்தில் தான் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிந்திருக்கவில்லை அதற்கு முயற்சிக்கவும் இல்லை.
இந்நிலையில் நிலையங்களை பராமரிப்பவர்கள் நிலைய நிர்வாகி மற்றும்
அறங்காவலர்களும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கை அறிந்திருக்கவில்லை.
இதற்கு ஆதாரம்; ஆணையில் HR & CE–ன் ஆணையாளரே குறிப்பிட்டது.
“சபையில் வழிபாடுகள் நடைப் பெற்றாலும் வள்ளலாரின் வழியில் நடைபெறவில்லை”
ஆக,
22.10.1871ல் வள்ளலார் குறிப்பிட்டது (உண்மை சொல்ல வந்தனனே சொல்லப்
புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை) இன்று வரையிலும் அப்படியே உள்ளதா?
என்றால் இல்லை. இல்லவே இல்லை. சில அன்பர்கள் வள்ளலாரின் முடிபான சுத்த
சன்மார்க்க உண்மையை தெரிந்துக் கொண்டுவிட்டார்கள். தாங்கள் தெரிந்துக் கொண்ட
உண்மையை உலகத்தார்கள் உள்ளது உள்ளபடி அறிய பல முயற்சிகள் அவர்கள்
எடுக்கிறார்கள்.
மேதகு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், தமிழக அரசு இந்து சமய அறநிலைய
ஆட்சித்துறை விசாரணை மேற்க்கொண்டு பல நல்ல தீர்ப்புகள் வழங்கியது.முழுமையான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், பல முரணான செயல்கள் ஆணைகளால் தடுக்கப்பட்டது. தடுக்கப்படும்.
ஆணைகளை நல்கிய இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கும் மேதகு தமிழக அரசுக்கு நமது நன்றிகள்.
மேதகு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், விழுப்புரம் உயர்திரு. இணை
ஆணையாளரால் பலநாள் விசாரணைக்கு பின்பு 10.09.2013 அன்று வழங்கிய தீர்ப்பு:
ஆணைகளின் முக்கியப் பகுதிகள் மட்டும் இங்கு தரப்படுகிறது.
“திரு. அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர் , நிர்வாகம்
தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 22/1959 பிரிவு 64 (1)ன் கீழ்
தாக்கல் செய்யப்பட்ட மனு”
- கடலூர் மாவட்டம், வடலூர் திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகம் வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறியினை வெளிப்படுத்துவதற்கும் நிலைய கடமையாளர்களான உதவி ஆணையர், செயல்
அலுவலர், அறங்காவலர்கள் ஆகியோர் தெய்வநிலையத்தை முறையாக நிர்வகிக்க ஒரு வழிகாட்டுதல் ஆணை பிறப்பிக்க வேண்டி மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் சாராம்சம்.
- வள்ளலார் தெய்வ நிலையம், இந்து சமய அறநிலையத்துறை வாரியத்தின் கீழ்
12.02.1935ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது எனவும், இந்நிலையத்திற்கு 28.09.1953-ம்
ஆண்டு தனியாக திருத்தப்பட்ட திட்டம் வகுக்கப்பட்டதென்றும், ஆனால் மேற்படி நிலையங்கள் திருஅருட்பிரகாச வள்ளலார் வகுத்த வழிமுறைகள்படி செயல்படவில்லை எனவும், சத்திய ஞானசபையில் நாள்தோறும், வழிபாடு நடைபெற்று வந்தாலும், வள்ளலாரது கொள்கையின்படி அது நடைபெறவில்லைஎனவும், வள்ளலாரது முடிவான நெறிக்கு முரணான சமய விழாக்களும்,
சடங்குகளும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம், பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை முதலிய விழாக்கள் வள்ளலார் சமரச சன்மார்க்க கொள்கையின் கீழ் பொருத்தமில்லாதது என்றும், நெய்விளக்கு ஏற்றுதல், சூடம் ஏற்றுதல், ஜோதிடம், தலைமுடி நீக்கல் ஆகிய நிகழ்வுகள் நீக்கப்பட வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், சீராய்வு மனு எண் 72/2006, நாள் 30.04.2007ல் மற்றும் ஆணையர் கடிதம் ந.க.எண். 696/2008 நாள்
22.05.2008 உத்தரவுகளில் தெய்வ நிலைய நிர்வாகத்திற்கு ஆணையரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், வள்ளலாரது நெறிக்கு முரணாக அவரால் நிறுவப்பட்ட நிலையங்களில் பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்றதாகவும், குறிப்பாக சத்திய ஞானசபையில் 18.07.1872ல் வள்ளலாரால் வகுக்கப்பட்ட விதிகளின்படி நடைபெறவில்லை எனவும், மேற்படி விதிகளுக்கு முரணாக சத்திய ஞானசபையில் சமய கடவுளர்களின் விக்கிரங்கள், சமய சடங்குகள், ஆகம பூஜைகள் பித்தளை விளக்குகள், சமயப் பற்று கொண்டவர்களால் பூஜை நடைபெற்றதாகவும்,
- நிலையங்கள் முன்பு மொட்டை போடுதல், அலகு குத்துதல், சூடம் ஏற்றுதல்,
நெய்தீபங்கள் விற்றல் ஆகியன நடைபெற்றதாகவும்,
- சைவ சமயத்தின் முக்கிய பிரதானமாக விளங்கும் அடையாள குறியீடான விபூதி
வழங்கல் மற்றும் அன்பர்களுக்கு தபால் மூலம் விபூதி பொட்டலம் அனுப்புதல்
நடைபெற்றதாகவும்,
- சமய விழாவான பிரதோச வழிபாடு சமய பிரிவு நாட்களாக தீபாவளி, சஷ்டி,
சதுர்த்தி அனுஷ்ட்டித்தல் நடைபெற்றதாகவும்,
- சமய கோயில்களில் நடைபெறுவது போல், சூட விளக்கு ஏற்றிக்காட்டல், மணி அடித்தல், ஆகியன நடைபெற்றதாகவும், நிலையங்களில் (ஆர்ச்சில்) சிவலிங்க அமைப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாகவும்,
- சத்திய ஞான சபையில் அனுமதி சீட்டுமுன் எல்லோரையும் அனுமதித்ததாகவும்,
மேற்காணும் முரணான செயல்பாடுகளை நீக்க சன்மார்க்கிகள் முயற்சி மேற்கொண்டு திருத்தியமைக்கப்பட்ட திட்டப்பதிவேடு பெற்றும், (ஆர்ச்சில்) அமைக்கப்பட்ட சிவங்கத்தை நீக்க உத்தரவு பெற்றும், தெய்வ நிலையத்தார் வெளிடப்படும் புத்தகங்களில் விபூதி கோலத்தில் உள்ள வள்ளலார் படங்களை வெளியிடுவதை நிறுத்தியும், நுழைவு ரசீதில் “புலைகொலை தவிர்த்தோர் மட்டும் உள்ளே புகுதல்” வேண்டுமென அச்சிடப்பட்டதும் ஆகிய செயல்களை உரிய உத்தரவுகள் பெற்று நடைமுறைப் படுத்தியதாகவும், மனுவில் கூறியுள்ளனர்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவின்படி உதவி ஆணையர்கள் தக்கார், செயல் அலுவலர்கள், ஆகியோர் அந்தந்த நிறுவனத்தை நிறுவியவரின் கோட்பாடு விதிகள்படி நிறுவனம் தொடர்பான செயல்பாடுகளை நிர்வகிக்க கடமைப்பட்டவர்கள் என்றும், ஆனால் இவ்வலுவலர்கள் அவ்வபோது மாறுதல் செல்வதாலும், பொதுவாக இவர்களுக்கு சைவம், வைணவம், மற்றும் முருகன், கிருஷ்ணர், அம்மன் முதலிய சமய கோயில்களை பற்றி மட்டும் தான் அறிந்திருப்பார்கள் என்றும், வடலூரில் மட்டுமே உள்ள சமய மதக்கொள்கையில்லாத முற்றிலும் வேறுபாடான நெறிகொண்ட இந்த திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தின் மார்க்கங்கள், கோட்பாடுகள் போன்றவற்றை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் தான் தெய்வ நிலையத்தில் மேலேக்கூறப்பட்ட முரண்பாடான செயல்பாடுகள் நடைபெற வாய்ப்பாக அமைந்தது என்றும் இம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு 25 25 (Article 25) சமய உரிமை மற்றும் சமயத்தை பரப்புவதற்கான உரிமை உள்ளதெனவும், மேலே குறிப்பிட்ட முரண்பாடான செயல்பாடுகள் நடைபெறாதவகையில் இந்நிறுவனத்திற்கென ஒரு தனி வழிகாட்டி ஆணை வழங்க கோரியுள்ளனர்.
குறிப்பாக, வள்ளலார் தெய்வநிலையத்தில் செய்யக்கூடியவை:
- சுத்த சன்மார்க்கத்தின் முதற்சாதனமாகிய மகா மந்திரம்
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
என்னும் திருமந்திரத்தை மெல்லென துதிசெய்தல்.
- திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல்.
- ஆண்டவரிடத்தில் சத்திய விண்ணப்பங்கள் நான்கும் படித்தல்.
- நிலையங்களில் வள்ளலாரின் கட்டளைப்படி (அறிவிப்பு வருடம் 1873)
“நினைந்து நினைந்து” என்னும் தொடக்கமுடைய 28 பரசுரப்பாடல்கள் பாடி
தெய்வபாவனை தீபத்தில் செய்தல்.
- வள்ளலாரின் பேருபதேசம் வாசித்தல்.
- திருவருட்பிரகாச வள்ளலாரின் வகுத்த விதிப்படி (அறிவிப்பு நாள் 18.07.1872)
சத்திய ஞான சபையில் வழிபாடு நடைபெறல்.
- சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் மேற்படி சபை, சாலை, வளாகம் ஆகிய
இடங்களில் முன் அனுமதி பெற்ற குழுக்களாக அமர்ந்து திருஅகவல் வாசிப்புக்கு
அனுமதித்தல்.
- வள்ளலார் நிறுவிய சமரசுத்த சத்திய சன்மார்க்கத்தில் சேர்க்கப்படும்
அன்பர்கள் உலகில் காணும் சமயமத மார்க்கங்களைக் கைவிட்டவர்கள் என
கருதப்படுவார்கள் என்பதை சந்தாதாரர்களுக்கு தெரியப்படுத்துதல்.
- வள்ளலார் கட்டளைப்படி வாசிப்பு பயிற்சி வகுப்பு நடத்தல்.
குறிப்பாக, வள்ளலார் தெய்வநிலையத்தில் செய்யக்கூடாதவை :
- திருஅருட்பிரகாச வள்ளலாரின் கட்டளைப்படி நிலையங்களில் எந்தவொரு
சமயம், மதம் முதலிய மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் கூடாது.
- சமயக் கோவில்களில் உள்ள சாஸ்திரப்படியான சடங்கு சம்பிரதாயங்கள் மேற்படி
சத்திய ஞானசபை, தருமச்சாலை, சித்திவளாகம் உட்பட நிலையங்களில் செய்யக்கூடாது.
- திருஅருட்பிரகாச வள்ளலார் தான் வைத்திருந்த சமயப் பற்றினை கைவிட்டு
விட்டதினாலும் தனது மார்க்கத்தின் எக்காலத்திற்கும் முக்கியத் தடைகளாக சமயம், மதம், அறிவித்ததினாலும் மேற்படி நிலையங்களில் விபூதி வழங்கல்,வேண்டுதல் ஆகிய முடிகாணிக்கை, நெய் விளக்குகள் ஏற்றல், தேரோட்டம்,அலகு குத்துதல் எதுவும் கூடாது மற்றும் அனுமதிக்கவும் முடியாது.
- எந்தவொரு சமய மத விழா பண்டிகைகள் செய்தல் கூடாது.
- குறிப்பாக சைவ சமயத்தில் லட்சியம் வையாதீர்கள் என வள்ளலார் திட்டவட்டமாக கட்டளை இட்டபடியால் அச்சமயத்தின் திரு அடையாள குறியீடான விபூதி வழங்குதல், விபூதி பொட்டலம் சந்தாதரருக்கு அனுப்புதல் கூடாது.
மேற்கண்ட கொள்கைகளை உள்ளடக்கி தனி வழிகாட்டுதல் ஆணை பிறப்பிக்கவேண்டி தனது கூடுதல் மனுவில் தெரிவித்துள்ளார்.
இம்மனு தொடர்பாக 05.02.2013, 05.03.2013, 16.04.2013, 23.04.2013 மற்றும்
27.08.2013 ஆகிய தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மனு தொடர்பாக வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவரை 27.08.2013 விசாரணை மேற்கொண்டதில் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம் தொடர்பாக ஏற்கனவே விழுப்புரம் இணை ஆணையர் உத்தரவு நட.ந.க.எண். 1426/2008 / ஆ2/ நாள் 18.09.2006 மற்றும் சென்னை ஆணையர் சீராய்வு மனு 71/2006, 72/2006ன் 30.04.2007ம் தேதிய உத்தரவுகளில் தெய்வ நிலைய நிர்வாகம் மற்றும் சத்திய ஞானசபை வழிபாடுமுறை குறித்து தெளிவான உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வுத்தரவுகளின்படியே தற்போது தெய்வ நிலையம்
மற்றும் சத்திய ஞானசபையில் வழிபாடு நடைபெற்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தெய்வ நிலையம் நிர்வாகம் தொடர்பாக விழுப்புரம் இணை ஆணையரது
நட.ந.க.எண். 1426/2008 / ஆ2 / நாள் 18.09.2006ம் தேதிய உத்தரவில்,
திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் சத்திய ஞானசபையில் ஜோதி வழிபாட்டிற்கு மாறாக எவ்விதமான வழிபாட்டு முறையும் கடைப்பிடிக்கக்கூடாது எனவும், வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட ஞானசபை வழிபாட்டு விதி 18.07.1872ன்படி கீழ்கண்ட நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சன்மார்க்க சங்கத்தை சேர்ந்தவர்கள், வள்ளலார் கொள்கைகளை பிறழாமல் கடைபிடிப்பவர்கள் மண், பொன், பெண், ஆசை இல்லாதவர்கள் தான் ஞானசபையை நடைமுறைபடுத்த வேண்டும்.
- இவர்கள் 12 வயதுக்கு குறைவாக உள்ளவரும் அல்லது 72 வயதுக்கு மேற்பட்டு
உள்ளவரும் தான் ஞானசபையை நடைமுறைபடுத்த வேண்டும்.
- இவர்கள் கரண சுத்து, தேக சுத்தி உடையவர்களாக இருக்க வேண்டும்.
- இவர்கள், குளித்துவிட்டு கால் துணி சுற்றிக்கொண்டு உள்ளே சென்று தகர கண்ணாடியில் தீபத்தை ஏற்றிக்கொண்டு உள்ளே சென்று மேடையில் வைக்கவேண்டும்.
- நான்கு நாட்களுக்கு ஒருமுறை கால் துணி சுற்றிக்கொண்டு உள்ளே சென்று தகர கண்ணாடி விளக்கையும், மற்ற இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
- சாதாரணமாக இவர்கள் மேலே குறிப்பிட்ட வேலைகளை தவிர மற்ற வேலைகளை உள்ளே செய்யக்கூடாது.
- ஞானசபையின் திறவுகோல் ஒருவர் கையில் நிரந்தரமாக இருக்கக் கூடாது.ஞானசபையின் வேலை முடிந்தவுடன், இந்த திறவுகோல் ஒரு பெட்டியில் வைத்து அந்த பெட்டியை பூட்டி, அதை பொற்சபை அறையில் வைத்து, அந்த அறையை பூட்டி அந்த அறையின் திறவுகோலை ஆஸ்தான காவல் உத்திரவாதியாய் இருக்கும் நிர்வாக அதிகாரியிடம் அவர் கையில் ஒப்படைக்க வேண்டும்.
- ஞானசபை வளாகத்தில் எந்த வித ஓசையும் எழுப்ப கூடாது.
- ஜோதி தீபம் தகர கண்ணாடியில் தான் காட்ட வேண்டும். எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி காட்ட வேண்டும்.
- ஜோதி தீபம் காட்டும்போது மக்கள் அமைதியாக நின்று சத்தம் செய்யாமல்
“அருட்பெருஞ்ஜோதி” தாரக மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் எனவும், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்ற வள்ளல் பெருமானால் வகுக்கப்பட்ட வழிபாட்டுமுறை மற்றும் கோட்பாடுகள் நடைமுறைபடுத்தும் வகையில் ஞானசபையின் வழிபாட்டு முறை நடைபெற உத்தரவிட்டுள்ளார்.
தெய்வ நிலையம் நிர்வாகம் தொடர்பாக சென்னை ஆணையரது சீராய்வு
மனு 71/2006, 72/2006 நாள் 30.04.2007 தேதிய உத்தரவில் வள்ளல் பெருமான் அருளி சென்ற 18.07.1872ல் ஏற்படுத்தப்பட்ட சபை வழிபாட்டு விதியில் சொல்லியபடி அதாவது ஜோதி தீபம் தகரக் கண்ணாடியில் தான் காட்டவேண்டும் என்றும், எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி காட்ட வேண்டும் என்றும், ஜோதி தீபம் காட்டும்போது மக்கள் அமைதியாக நின்று சத்தம் செய்யாமல், அருட்பெருஞ்ஜோதி தாரக மந்திரத்தை ஓதவேண்டும் என்றும், உபதேசங்களில் வேதம், ஆகமம்,புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்றும், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்றும், வள்ளலார்
குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி சத்திய ஞானசபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது. அவர் வகுத்த சட்டத்திட்ட நெறிமுறைகளின்படி தான் இந்த சபை நடத்தப்படவேண்டும். சத்திய ஞான சபை உள்ளிட்ட வள்ளலார் தெய்வ நிலையங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சமய நிறுவனம் ஆகும் என உத்தரவிட்டுள்ளார்.
எனவே, வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகம் குறித்து மனுதாரரின் கோரிக்கை
தொடர்பாக ஏற்கனவே விழுப்புரம் இணை ஆணையர் மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களால் பல்வேறு நிலைகளில் வழிமுறைகள் கூறப்பட்டுள்ள நிலையில் அவ்வழிமுறைகளே போதுமானதாகும்.இருப்பினும் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்ற செயல் அலுவலருக்குஉத்தரவிடப்படுகிறது.
- சத்தியஞான சபையில் வள்ளலாரால் 18.07.1872ல் வகுக்கப்பட்ட விதிகளின்படி
ஞானசபையில் வழிபாடு நடைபெறவேண்டும்.
- சத்தியஞான சபையில் ஜோதி தரிசனத்தின்போது அகவல் மண்டபத்திற்குள்
செல்ல எவரையும் அனுமதிக்க கூடாது. வெளியில் இருந்தே மகாமந்திரத்தை
மெல்லென துதிசெய்தல் வேண்டும்.
- தெய்வ நிலையத்திற்குட்பட்ட இடங்களில் அருட்பெருஞ்ஜோதி அகவல்
ஓதவேண்டும்.
- நேரிய நிகழ்வுகளில் “நினைந்து நினைந்து” எனும் 28 பரசுரங்களையும்
வள்ளலாரின் பேருபதேசங்களையும் வாசிக்கவேண்டும்.
- வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம்
வைக்க வேண்டாம் எனவும், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும்,
வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்
என்ற வள்ளல் பெருமானால் வகுக்கப்பட்ட வழிபாட்டுமுறை மற்றும்
கோட்பாடுகள் நடைமுறைபடுத்தும் வகையில் ஞானசபையின் வழிபாட்டு முறை
நடைபெறவேண்டும்.
- தெய்வ நிலைய நிர்வாகத்திற்குட்பட்ட ஞானசபையின் முகப்பு மற்றும் இதர
இடங்களில் பக்தர்கள் நெய் விளக்குகள் ஏற்றுதலும், அதற்காக திருக்கோயில்
கட்டணம் வசூப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
- ஞானசபையின் வளாகத்தில் ஜோதிடம் பார்த்தல், மொட்டையடித்தல்,
தேரோட்டம் மற்றும் அலகு குத்துதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம்
கண்காணிக்கவேண்டும்.
- ஞானசபையில் நிர்வாகத்தின் சார்பில் ஆறாந்திருமுறையில் உள்ள திருஅருட்பா
பாடல்களை இசையுடன் பாடவல்ல சன்மார்க்க அன்பர் ஒருவரை நியமனம்
செய்து பூஜை நேரத்தில் அவர் பாடுவதை தொடர்ந்து, பக்தர்கள் பாடவோ
அல்லது கேட்கவோ செய்யும் வகையில் ஓர் ஒழுங்கு முறையை நடைமுறைக்கு
கொண்டுவரலாம்.
- ஞானசபையின் முன்பு அகண்டம் வைத்து அங்கே பக்தர்கள் சூடம் ஏற்றி
வழிபடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஞானசபையில் வைதீக பூஜைகளோ, சூடம்
ஏற்றிக் காண்பிப்பதோ, அர்ச்சனைகளோ, திருநீறு வழங்குதலோ ஏதும்
நடைபெறக் கூடாது. ஞானசபையை தவிர்த்து தெய்வ நிலையத்திற்குட்பட்ட
இதர இடங்களில் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ள விபூதி பிரசாதம்
வழங்கும் பழக்கத்தை அன்பர்கள் மனம் புண்படாமல் ஏற்றுக்கொள்ளதக்க
வகையுள் காலப்போக்கில் சிறிது சிறிதாக நிறுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்படவேண்டும். தெய்வ நிலையத்திற்குட்பட்ட இடங்களில் நாட்டு
சர்க்கரை பிரசாதமாக வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
- வள்ளலார் தெய்வ நிலையத்திற்குட்பட்ட இடங்களில் பிற சமயக் கோவில்களில்
உள்ள சாஸ்திரப்படியான சடங்கு சம்பிரதாயங்கள், சமய மதவிழா பண்டிகைகள்
ஏதும் செய்யக்கூடாது.
Download complete article[PDF file]: வள்ளலாரின் முடிவான சுத்த சன்மார்க்க கொள்கை