Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cm-answers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6114
சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன? – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
December 21, 2024
tamil katturai APJ arul

சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன?

சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன? – ஏபிஜெ அருள்.

22-10-1873ல் வள்ளலார் சொன்னது;
தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் – இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன? இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் – இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன? கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் – இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள். இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.
இப்படியே “காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் – ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் – காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா” என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.
இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. 
மேலும்,
வள்ளலார் உபதேசித்தது;
ஞான வகை மூன்று;
உபாய ஞானம் – ஜீவஅறிவு, நக்ஷத்திரப் பிரகாசம்.
உண்மை ஞானம் – ஆன்மஅறிவு, சந்திரப் பிரகாசம்.
அனுபவ ஞானம் – கடவுளறிவு, சூரியப் பிரகாசம்.
உபாய ஞான மென்பது நக்ஷத்திரப் பிரகாசம்போல் தோன்றிய ஜீவஅறிவு. உண்மை ஞான மென்பது சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஆன்மஅறிவு. அனுபவ ஞான மென்பது எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள்அறிவு. ஆகையால் கடவுளை ஆன்மஅறிவைக் கொண்டு அறியவேண்டும்.
ஒரு வஸ்துவினிடத்தில் பற்றுதல் அவா; அதை அனுபவிக்க வேண்டுமென எழுந்தது ஆசை; அதன் மயமாதல் காமம்; அதைத் தன்வசப்படுத்த எழுவது மோகம்; எந்த வஸ்துவிடத்திலும் மோகமாதிக ளின்றி அவாமயமாய் நிற்றல் வேண்டும்.
சன்மார்க்கத்தில் அவாவும் ஏகதேசத்திலும் கூடாது.

அடுத்து, சத்தியப் பாடல்களில் (சுத்தசன்மார்க்கப் பாடல்) காண்போம்.

6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்

  சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
   புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
  பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
  உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

#6-147 ஆறாம் திருமுறை / அனுபவ மாலை

சரியைநிலை நான்கும்ஒரு கிரியைநிலை நான்கும்
தனியோக நிலைநான்கும் தனித்தனிகண் டறிந்தேன்
உரியசிவ ஞானநிலை நான்கும்அருள் ஒளியால்
ஒன்றொன்றா அறிந்தேன்மேல் உண்மைநிலை பெற்றேன்
அரியசிவ சித்தாந்த வேதாந்த முதலாம்
ஆறந்த நிலைஅறிந்தேன் அப்பால்நின் றோங்கும்
பெரியசிவ அனுபவத்தால் சமரசசன் மார்க்கம்
பெற்றேன்இங் கிறவாமை உற்றேன்காண் தோழி.

6-113 ஆறாம் திருமுறை / அம்பலவாணர் வருகை

ஊக மிலேன்பெற்ற தேகம் அழியாத
யோகம் கொடுத்தீரே வாரீர்
போகம் கொடுத்தீரே வாரீர். வாரீர்

திருக்கதவந் திறத்தல்:

பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ
பூணவிழைந் தேனோவான் காணவிழைந் தேனோ
மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன்
விளையாட்டென் பதுஞானம்விளையும்விளை யாட்டே
பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது
பண்பறிந்தே நண்புவைத்த பண்புடையோய் இன்னே
செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

#6-019 ஆறாம் திருமுறை / பிள்ளைச் சிறு விண்ணப்பம்

சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசைசற் றறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்
உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் உள்ளம்நீ அறிந்ததே எந்தாய்.

#6-020 ஆறாம் திருமுறை / பிள்ளைப் பெரு விண்ணப்பம்

சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.

#6-021 ஆறாம் திருமுறை / சுத்த சன்மார்க்க வேண்டுகோள்

அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.

#6-043 ஆறாம் திருமுறை / இறை திருக்காட்சி
271. சிதம் – ஞானம்
272. அத்து – செந்நிறம். முதற்பதிப்பு.

#6-049 ஆறாம் திருமுறை / இறைவனை ஏத்தும் இன்பம்

யோகமெய்ஞ் ஞானம் பலித்தபோ துளத்தில்
ஓங்கிய காட்சியே என்கோ
ஏகமெய்ஞ் ஞான யோகத்திற் கிடைத்துள்
இசைந்தபே ரின்பமே என்கோ
சாகலைத் தவிர்த்தென் தன்னைவாழ் விக்கச்
சார்ந்தசற் குருமணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணிமா
மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

#6-057 ஆறாம் திருமுறை / அனுபவ நிலை

இனியே இறையும் சகிப்பறி யேன்எனக் கின்பநல்கும்
கனியேஎன் தன்இரு கண்ணேமுக் கண்கொண்ட கற்பகமே
தனியேஎன் அன்புடைத் தாயேசிற் றம்பலம் சார்தந்தையே
முனியேல் அருள்க அருள்கமெய்ஞ் ஞானம்முழுதையுமே.

#6-063 ஆறாம் திருமுறை / திருப்பள்ளி எழுச்சி

துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா
சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார்
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.

#6-064 ஆறாம் திருமுறை / திரு உந்தியார்

ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது
தீனந் தவிர்ந்ததென்று உந்தீபற
சிற்சபை கண்டேன்என்று உந்தீபற.

#6-067 ஆறாம் திருமுறை / சிற்சத்தி துதி

வெறிக்கும் சமயக் குழியில்விழ விரைந்தேன் தன்னை விழாதவகை
மறிக்கும் ஒருபே ரறிவளித்த வள்ளற் கொடியே மனக்கொடியைச்
செறிக்கும் பெரியர் உளத்தோங்கும் தெய்வக் கொடியே சிவஞானம்
குறிக்கும் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே.

#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை

வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
மனமிக மயங்கிஒருநாள்
மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
மறந்துதுயில் கின்றபோது
நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
நன்றுற எழுப்பிமகனே
நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
நலிதல்அழ கோஎழுந்தே
ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
டின்புறுக என்றகுருவே
என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே
ரின்பமே என்செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
வித்தையில் விளைந்தசுகமே
மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
மேவுநட ராஜபதியே.

#6-097 ஆறாம் திருமுறை / நடராஜபதி மாலை

நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
நின்வார்த்தை யாவும்நமது
நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
நெஞ்சம்அஞ் சேல் உனக்கே
ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
அழியாத நிலையின்நின்றே
அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
ஆடிவாழ் கென்றகுருவே
நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
நான்இளங் காலைஅடைய
நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
நண்பனே துணைவனேஎன்
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
ஒருவனே அருவனேஉள்
ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
ஓங்குநட ராஜபதியே.

#6-110 ஆறாம் திருமுறை / தனித் திருஅலங்கல்

எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லா போகமும் என்போகம் ஆயின
எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

#6-127 ஆறாம் திருமுறை / அருள் அற்புதம்

வெவ்வினைக் காடெலாம் வேரொடு வெந்தது
வெய்ய மாமாயை விரிவற்று நொந்தது
செவ்விய ஞானம் சிறப்புற வந்தது
சித்திகள் யாவையும் செய்திடத் தந்தது அற்புதம்

அன்பர்களே!
சுத்தசன்மார்க்கத்தில் முடிபாக வள்ளலார் சொல்வது இதோ;
சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.
ஆங்கிரச ஸ்ரீ புரட்டாசி மாதம் 5ஆம் நாள்.

அன்புடன்: ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India

One thought on “சரியை,கிரியை,யோகம், ஞானம் பற்றி சுத்தசன்மார்க்கத்தில் (வள்ளலார்) சொல்வது என்ன?

Comments are closed.