சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள்ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: 1.ஜாதியாசாரம், 2.குலாசாரம், 3.ஆசிரம ஆசாரம், 4.லோகாசாரம், 5.தேசாசாரம், 6.கிரியாசாரம், 7.சமயாசாரம், 8.மதாசாரம், 9.மரபாசாரம், 10.கலாசாரம், 11.சாதனாசாரம், 12.அந்தாசாரம், 13.சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.
சத்திய ஞானாசாரம்
ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்