பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது
பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது.
— தயவு சரவணானந்தா
பழைய நெறிமுறைகளைப் பயின்று,
அவற்றின் கருத்துக்களை அடிப்படையாய் உளம் கொண்டு, அகவல் அடிகளை ஆராயப்புகின் மெய்ப்பொருள் விளங்காது.
இதில் பழ மரபுகள் ஒட்டியும் தழுவியும், விளக்கியும் சில குறிப்புகள் வந்துள்ள இடங்களில் கூட அருட்பொதுநோக்கு கொண்டு எவரும் ஆய்தல் வேண்டும்.
அப்போதுதான் இந்த அருட்பெருஞ்ஜோதியின் உண்மையே முன்வந்த எல்லாவற்றிற்கும் உரிய உண்மையாய் இருந்து அது அதுவாய் இலங்கினதாகச் சந்தேகமின்றித் தெளிந்து ஏற்றுப் பயனுறலாகும்.
உலகம், மக்கள் எல்லோருக்கும் நல்லின்ப வாழ்வு பெற்றுத் தலைத்து விளங்கற்கரிய இடமாக அருட்பெருங்கடவுளை, அருட்பெருஞ்ஜோதியாக இன்று எவ்வெவருள்ளும் இருந்து விரிந்து விளங்குவதை பேரருள் ஞானத்தாலே உணர்கின்றோம். இவ்வருள் ஞானம் கொண்டு அன்போடு கூடி வாழத் தெரிந்து கொள்ளாததாலேதான், இதுவரை உலக மக்கள் சமுதாயம் அவத்தைப்பட்டு அழிந்தும், அழிவைவிட மேலும் மேலும் பெருகிக்கொண்டும் இருக்கினறதாம்.
பழநெறி முறையால் அருள் வாழ்வுக்குத் தடையே ஏற்படுகின்றது.
அந்தப் பழநெறியையும் கூட முதலில் ஒரு நல்ல குறிக்கோளோடுதான் முன்னோர் வகுத்தளித்தனர். பலரும் அம்மாதிரி சில பலகொள்கை கோட்பாடுகளையும், வந்தனை வழிபாடுகளையும் ஏற்படுத்தினதினால், அவற்றைத் தழுவிய பின்னோர், வேறு வேறு பிரிவினராய்க் கூடி மக்கள் சமுதாயம் ஒன்று பட்டு அகவுரிமையோடு வாழமுடியாது செய்து விட்டனர். அதனால் உலகில் இன்று பேரவத்தையே பெருகி இருக்கின்றதைக் காண்கின்றோம்.
சமய, மத நெறிமுறைகளைக் கைவிடத் துணிகின்றார்களில்லை
இந்நிலை மாறவேண்டும், மாறவேண்டும் என்பதுதான் நல்லோர் எல்லோரும் விரும்புகின்றனர்.
அதே சமயம் தம் சமய, மத நெறிமுறைகளைக் கைவிடத் துணிகின்றார்களில்லை பலரும்.
இதற்கு என்ன செய்வது?
இதற்கு முதலில் செய்ய வேண்டுவது யாதெனின், அருட்பெருஞ்ஜோதியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டியதே முதற்படியாகும். ஒவ்வொருவருக்கும், உடம்பும், உயிரும், உணர்வும், வாழ்வும் தனித்தனியாக இருக்கின்றது. தனித்தனி ஒவ்வொருவரும் நல்லின்ப வாழ்வு பெற உரிமை உடையவர்களே. தன் போல் பிறரும் நலம் விழைவது இயல்பே என்பதை உளம் கொண்டு, எவர்க்கும் துன்பஞ் செய்யாது, அன்பு செய்திருப்பது நம் கடமையாகும். அன்புச் செயலால்தான் மெய் இன்பம் உண்டாகும். இந்த உலகில் எவ்வுயிர்க்கும் இன்பம் உண்டாகவே இயற்கை நியதி முறை ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வியற்கை இன்பச் செயல்முறைக்குக் காரணமாகிய இயற்கை நியதி அல்லது விதிமுறை, பேரன்பு அல்லது அருளின் அடிப்படையில் தோன்றியுள்ளது என்பதை அறிவோம். அந்த அருட்பெரும் அடிநிலையே அருட்பெருஞ்ஜோதியாய் எவர் உள்ளும் இருந்து அன்புச் செயல்புரியத் தூண்டிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, அன்புச் செயல் பெருகப் பெருக அருட்பெருஞ்ஜோதியுண்ணின்று விரிந்து உடம்பும் உயிரும், உணர்வும், வாழ்வும் நிறை இன்பமயமாகி நிலவுவது திண்ணம். இப்படி அருட்பெருஞ்ஜோதியை உளம் கொண்டு வாழ்வதால் முன்னம் விதிக்கப்பட்டிருந்த தடைகளெல்லாம் ஒழிவது திண்ணம்.
அப்போது இந்த அருட்பெருஞ்ஜோதி முறையால், முன்பு எச்சமயத் தலைவர்களும் எதிர்பார்த்திருந்த நன்மையைவிட பன்மடங்கு பெருநன்மை உண்டாவது சத்தியம். இதனால், இந்த அருட்பெருஞ்ஜோதியின் ஏற்பால் யாரும் எந்தவிதமான குற்றமும், குறைவும் கேடும் அடையவே மாட்டார்கள்!
இது நிச்சயம்.
தயவு சரவணானந்தா