January 22, 2025
Uncategorized

சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம்

இது தானே சரி!!?? ஏபிஜெ அருள்.

(இது சுத்த சன்மார்க்கத்தார்களுடன் ஒரு விசாரம். பொது கட்டுரை அல்ல.)
நம்மவர்களே!
ஜப்பசி 7 நன்னாள்.கொடி நாள். இந்நாளில் ஓர் உண்மையறிவோம்.

திருஅகவல், திருவருட்பா, உபதேச குறிப்புகள் உட்பட அனைத்திலும் உள்ள உண்மை ஆண்டவரின் நிலை, சொரூபத்தை,அக்கடவுளின் தயவை தனது தூய உள்ளத்தால் உள்ளே அகத்தில் அறிந்து அனுபவிக்கிறார் வள்ளலார். அங்ஙனம் கண்ட இயற்கை உண்மை இயற்கை விளக்கத்தை எழுத்தால், பாடலால் பதிவு செய்து உள்ளார் வள்ளலார். வள்ளலார் பெற்ற இந்த அனுபவ உண்மையை அவர்தம் நூல்களை படிப்பதினால் நாம் தெரிந்துக் கொள்ளலாமே அன்றி அறியவோ அனுபவிக்கவோ முடியாது.
இராமலிங்க அடிகளார் மேற்படி உண்மை கடவுளின் நிலை காண தன்னை எப்படி உரியவர் ஆக்கி கொண்டாரோ, அதே போல் எவர் ஒருவர் தன்னை உரியவராக்கி கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே அக அனுபவம் பெற முடியும். அப்படி எனில்; வள்ளலார் பின் ஏன் ?, தான் கண்ட அக அனுபவத்தை நூல்களில் பதிவாக்கி உள்ளார்?
அவைக்கு ஒருவாறு காரணம் இரண்டு..
1) நம்மவர்கள் உண்மை அன்பால் விசாரம் செய்யும் போது, நாம் செய்யும் விசாரத்தை விரைவாக எடுத்து செல்வதற்கும்,செல்லும் பாதையை உறுதி படுத்திக்கொள்ளும் விதமாக நமக்கு கிடைத்த ஓர் துணையே என்றும்,
2) புறத்தில் மற்ற மார்க்க நெறிகளுக்கு ஈடாக, பதில் கொடுக்கும் விதமாக பதியப்பட்ட சாட்சியாகிய ஓர் புற ஆவணமே அவை.மற்றபடி, இம்மார்க்கத்தில் அக அனுபவமே என்கிறார் வள்ளலார்.
நம் நிலை என்ன? நம்மை அனுஷ்டிக்கும் தெய்வத்தின் நிலை என்ன? என்ற விசாரத்தை நாம் ஒவ்வொருமே செய்தே ஆக வேண்டும்.இடைவிடாது இரக்கம்/கண்ணீர் விட்டு நன்முயற்சியில் உள்ளழுந்தி சிந்தித்து சிந்தித்தலை விசாரித்தல் வேண்டும் என்கிறார். நம்
அக அனுபவத்திலே தான் வள்ளலார் கண்ட உண்மைகளான கொடி, ஆன்மா,இறை சொரூபம்,சாகா கல்வி , மரணமில்லா பெருவாழ்வு இவை அனைத்தும் இறை தயவாலே அறியவைக்கப்பட்டு அனுபவமாகுகிறது. தான் பெற்ற அனுபவத்தை நீங்கள் அனைவரும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை இது சத்தியம் என்கிறார். உண்மை அன்பால், உண்மை அறிவால், சுத்த சன்மார்க்கத்தை மட்டுமே சார்ந்து வருபவர்களுக்கு இறை உண்மை அவர்களின் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும் என்ற உண்மையை தான் வள்ளலார் சொல்கிறார்கள்.
இந்த உண்மை கடவுள் தயவால், நமக்கு சாகா கல்வி அக்கடவுளாலே உரைக்கப்படுகிறது. சாகாகல்வி கற்று நம் தேகத்திற்கு ஏற்படுகின்ற மரணத்தை தவிர்த்து இத்தேகத்தை அழியா தேகமான ஒளி தேகமாக்கி கொள்ளலாம் என்கிறார் வள்ளலார்.
ஆக,
நாபி முதல் புருவமத்தியின் உட்புறத்தில் தொங்கும் ஓர் சவ்வை வள்ளலார் போல் நாம் காண அக அனுபவம் பெற வேண்டும்.
நாமாகிய சிற்றணுவின் உண்மை அறிய சுத்த சன்மார்க்கம் மட்டுமே சார்ந்து ஒழுக்கம் நிரப்பி கொள்ள வேண்டும்.
ஆன்மாவை,இறை ஒளி அறிந்து அனுபவித்தவர்கள் என்றால் ஒளிதேகம் பெற்றவர்கள் என்று பொருள்.
மற்றவர்கள் அனைவருமே துன்பம்,பயம்,மூப்பு,பிணி முதலிய அவத்தைகளை பெற்றவர்கள், பெற்றுக்கொண்டிருப்பவர்கள், பெறப்போகிறவர்களே.
இவர்கள் மரணம் அடைவார்கள்.
எனவே தான் வள்ளலார் சொன்ன அனுபவ உண்மைகளை அங்ஙனமே நம்மை வாசிக்கும்படி கட்டளையிட்டார் வள்ளலார். எனவே, வள்ளலார் சொன்ன உண்மையை (உரைநடை,பாடல்,அகவல், விண்ணப்பம் முதலியவை) நாம் வாசிக்க அல்லது மற்றவர்கள் வாசிக்க சொல்லி கேட்க கூடுமே அன்றி வள்ளலார் வெளிப்படுத்திய எவைக்கும் விளக்கத்தை நாம் கொடுக்கவே முடியாது. அல்லது விளக்கி மற்றவர்கள் சொல்வதை கேட்பதில் அல்லது எழுதியதை நாம் படிப்பதில் எல்லாம் (வியர்த்தம் = பலனின்மை) பலனின்மை என்கிறார் வள்ளலார்.
அன்பர்களே! இது தானே சரி!!??.
இதுவே சத்தியம். இதுவே நான் கண்ட வழி என்கிறார் வள்ளலார். இதை அறியாமையிலும் வல்லபதன்மையிலும் மாற்றவோ திரித்து கூறவோ எவருக்கும் உரிமை இல்லை.
அன்பர்களே! இது தானே சரி!?
வள்ளலார் பெயரில் அவர்தம் மார்க்கத்தை சார்ந்தவர் என்ற வகையில் இத்தகைய செயலில் ஈடுபடுவது மிக பெரிய பாவச்செயலே மேலும் இத்தகையவர்கள் வந்ததை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.
அன்பர்களே! இது தானே சரி!?
அக அனுபவம் பெறாதவர்கள் (அவத்தைகளை தவிர்த்துக் கொள்ளாதவர்கள்) வள்ளலாரின் ஆவணங்களில் உள்ளவற்றை அப்படியே வாசிக்க வேண்டுமே அன்றி, விளக்கமோ விளக்கி சொற்பொழிவு செய்பவர்களால் மேல் விளைவை உண்டு பண்ணும். அவர்களும் வந்ததை வாங்கி கட்டி கொள்வார்கள்.
அன்பர்களே!
இது தானே சரி!?
இதுவே சத்தியமாகும்.

அன்புடன் ஏபிஜெ அருள்,கருணை சபை. நன்றி.வணக்கம்.

unmai

Channai,Tamilnadu,India