“சிவம்” என்பது பொது சொல்
“சிவம்” என்பது பொது சொல்– ஏபிஜெ அருள்.
ஆம். சிவம் என்பது எல்லோரும் அழைக்கும் பொது வார்த்தையே என சத்தியமாக நாம் அறிதல் வேண்டும். நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம், சூரியன்,சந்திரன் மற்றும் மலை போன்ற சொற்கள் எங்ஙனம் உலகத்தார் அனைவரும் பொதுவார்த்தையாக எடுத்துக்கொள்வது போல ‘சிவம்’ என்ற சொல்லும் பொது வார்த்தை அதுவும் மெய் வார்த்தை.
நிற்க! சிவம் என்றால் என்ன?
தமிழ் அகராதி படி;
நன்மை, முடிபான விடுதலை (முத்தி), சித்துருவாகிச் சுயம் பிரகாசம் என்கிறது.
ஆக,
இங்ஙனம் பொதுப் (இயற்கையாய் உள்ள) பொருளை தரும் ‘சிவம்’ இன்று ஒரு குறிப்பிட்ட சமய சொல்லாக பார்க்கப் படுகிறது. சிவன், சிவலிங்கம், பரமசிவம், சிவபிரான் இவை உலக மாபெரும் சமயமான சைவசமய கடவுளரை குறிக்கும். சிவபுராணம்,சிவலோகம்,சிவசாதனம்,
சிவாகமம்,சிவராத்திரி இவை அச்சமயம் சார்ந்தவை. ஆனால் ‘சிவம்’ என்றால்; எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கின்ற ஒளி எனப்படும்.
ஆக,
சிவம் என்பது;
இயற்கையாய் எங்கும் நீக்கமன்றி இருக்கின்ற ஒரு மெய் பொருள் ஆகும்.
ஆனால் இன்று ‘சிவம்’ என்றால் சைவ சமய கடவுளாகிய சிவபெருமானை அல்லது சிவலிங்கத்தை குறிக்கப்படுகிறது என்று எண்ணி மற்ற சமயமத மார்க்கத்தார்கள் சிவம் சொல்லை உச்சரிக்க முன் வருவதில்லை.
” சாதியும் மதமும் சமயமும் பொய் ‘என்கிற வள்ளலார், இயற்கையே கடவுளாக கண்டு அதை ‘சிவம்’என்றே அழைக்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பொது கடவுளாகிய இயற்கை ஆண்டவரை ‘சிவபதி’ என்று வள்ளலார் அழைக்கும் போது, எங்கே மனிதர்கள் சைவ சமயக் கடவுளை நினைந்து விடக்கூடாது என்பதற்காக ‘சுத்த சிவம்’ என குறிப்பிட்டு சொல்வதை காணலாம்.
நிற்க!
சூரியன் என்றால் பொது வார்த்தை. பொது கோளம். இங்கு சூரியனை கடவுளாக வழிபடுபவர்களும் உண்டு. அங்ஙனம் அவர்கள் வழிபடுவதால் ‘சூரியன்’ அவர்களுக்கு மட்டுமே என்றா மற்றவர்கள் இருக்கிறார்கள்?
பஞ்சபூதம் என்பது எல்லோருக்கும் உரியது. இதை இயற்கையில் அமைந்ததாக எல்லோரும் பார்ப்பது போல் ‘சிவம்’ என்பது இயற்கையில் எல்லா உயிர்களுக்கும் கிடைக்கும் ‘ஒரு பொது நன்மை’ என்றோ அல்லது இயற்கையில் எங்கும் நிறைந்து விளங்கும் சுயம் சொரூபமாகிய ஒரே மெய் பொருளாகிய பிரகாசம் (ஒளி) என இனி கருத்தில் கொள்வோம்.
இந்த (பொது) ‘சிவம்’ உருவமா, அருவமா,உருஅருவமா என்று வரையறுத்து வெளிப்பட்டுள்ள ஒரு பொருள் அன்று.
இதை,
இயற்கை உண்மையாகவும்
இயற்கை விளக்கமாகவும்
இயற்கை இன்பமாகவும்
விளங்கும் ஒரு மெய் பொருள்.
இதன் உண்மை ‘அக அனுபவத்திலே’ மட்டும் என்கின்றனர் அறிஞர்கள்.
எல்லாம் வல்ல இயற்கையே!
எல்லாம் வல்ல ஆண்டவரே!
இப்படியாக மேற்படி அழைப்பதை பொதுவாக பார்க்கிறமோ அது போல்
எல்லாம் வல்ல சிவபதியே!
என்பதையும் பொதுவாக காண்போம்.
சிவமாகிய இயற்கையை போற்றுவோம்.
சிவ சொரூபம் உள்ளத்தில் உணருவோம்.
மெய் சிவ அருள் ஒளி பெறுவோம்.
கடவுளின் உண்மை உரைக்கும் சுத்த சன்மார்க்கம் சார்ந்து கடவுள் உண்மை நிலை குறித்து நல்ல விசாரணை செய்வோம். — நன்றி ஏபிஜெ அருள்.
‘சிவம்’ என்பது இயற்கை உண்மை,
‘சிவம்’ என்பது இயற்கை விளக்கம்,
‘சிவம்’ என்பது இயற்கை இன்பம்,
ஆகிய எல்லா அண்டங்களுக்கும், எல்லா உலகங்களுக்கும்,எல்லா உயிர்களுக்கும், எல்லா பொருள்களுக்கும் ஒளி வழங்கி நன்மை பயக்கும் ஒரு மெய்பொருள் எனத் தெரிந்துக் கொண்டோம்.
‘சிவம்’ என்பது பொது சொல் என்ற உண்மையை எல்லோரும் தெரிந்திட பகருங்கள். தமிழ் மொழி உண்மை உரைக்கும் மொழி. கடவுளின் உண்மை தெரிந்திட அமைந்த இயற்கை பொது மொழி. தமிழ் பொது வார்த்தை ‘சிவம்’. இச்சிவ உண்மை (இயற்கை) மனிதன் அறிந்து சாதிமதசமய வேறுபாடில்லாமல் இன்பமாக வாழ்வது சத்தியமே.
— அன்புடன் ஏபிஜெ அருள்.
உண்மை
மணமாற்ந்த நன்றிகள்