January 22, 2025
tamil katturai APJ arul

‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.

‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.
(குறிப்பு: வள்ளலார் வழியாகிய சுத்த சன்மார்க்கத்தில் இருப்பவர்களுக்குரிய கட்டுரை)

பொதுவாக ஏதேனும் காரணங்கள் சொல்லி மக்கள் சந்தோசமாக இருப்பதில் சந்தோசம் தான். அதன் வரிசையில் இந்த தீபாவளியை நாம் கருதலாமா? என்ற கேள்வி வரும் போது நம் வள்ளலார் இவை குறித்து என்ன சொல்லியுள்ளார்கள் என்பதே சரியாகும். என் மார்க்கம் அறிவு மார்க்கம் மற்றும் உண்மை அறியும் மார்க்கம் என்கிறார்.ஆக, ஒன்றை சொல்லும் போது கேட்கும் போது, அதன் உண்மை என்ன என தெரிந்துக் கொள்பவர்களே நாம்.
இந்த விழா[தீபாவளி] எதன் அடிப்படையில் கொண்டாடப் படுகிறது என்ற உண்மை அறியும் ஆசை உள்ள நம்மவர்கள் மட்டும் கட்டுரையை தொடரலாம். 
இந்த நாட்டில் இந்த பண்டிகை முழுக்க முழுக்க புராணம்,இதிகாச அடிப்படையிலேயே கொண்டாடப் படுகிறது.புராணம் எதுவெனில்; விஷ்ணு புராணம் மற்றும் ஸ்கந்த புராணம் இதிகாசம்: இராமாயணம். இதில் விரதம், நோன்பு உண்டு.சரி நம் சுத்தசன்மார்க்கம் என்ன சொல்கிறது?
வள்ளலாரின் கட்டளை யாதெனில்; வேதம்,ஆகமம், புராணம்,இதிகாசம் போன்ற கலைகளில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்கள். இங்ஙனம் வள்ளலாரின் கட்டளை இருக்கும் போது புராணத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் தீபாவளி சுத்த சன்மார்க்கத்தாருக்கு கிடையாது. கூடாது. சமய நம்பிக்கை உள்ளவர்களின் ஒரு விழா.

ஏன் புராணம், இதிகாசத்தில் லட்சியம் வைக்க கூடாது? இதோ நம் அய்யா கீழ்வருமாறு சொல்கிறார்கள்;
ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழு உக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள், என்கிறார் வள்ளலார். மேலும், அவ்வாறு இதில் பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் இதில் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் நம் அய்யா. அய்யாவின் கட்டளையை ஏற்பவர்கள் தான் சுத்த சன்மார்க்த்தில் இருக்கும் தகுதி பெறுவர் என்பது மிகவும் எல்லோருக்கும் தெரிந்த விதி.

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையேஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தேதீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநாயகனே!”

இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாருஞ் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருட்சோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே.

கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
கூட்டமும்அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளைவிளை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே.”

தோன்றியவே தாகமத்தைச் சாலம்என உரைத்தேம்
சொற்பொருளும் இலக்கியமும் பொய்எனக்கண் டறியேல்
ஊன்றியவே தாகமத்தின் உண்மைநினக் காகும்
உலகறிவே தாகமத்தைப் பொய்எனக்கண் டுணர்வாய்…”

” தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.”

இன்னும் பல பாடல்கள் உள.
நம்மவர்களே, வள்ளலார் வழியில் உள்ளவர்களே, இதிகாசம்,புராணம் இவையில் லட்சியம் வையாதீர்கள். இதில் லட்சியமில்லை என்றால் புராண இதிகாச அடிப்படையில் அமையப் பெற்ற ” தீபாவளி” ஏது?  கூடாத ஒன்றுக்கு ” வாழ்த்து” ஏது.?
வள்ளலார் இந்த உண்மையை தான் சொன்னார்கள். ஆனால்; அன்றைய தினம் அதாவது 22/10/1873 ல் இருந்த நிலைப்பற்றி வள்ளலாரே சொல்கிறார்கள்;
  ” உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”
30/01/1874 ல் சொன்னது; 
“இது காறும் என்னோடு நீங்கள் பழகியும் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் இன்ன தென்று தெரிந்து கொள்ளவில்லை.”
இன்றாவது வள்ளலாரிடம் சொல்வோம்
” அய்யா, நீங்கள் சொல்லவந்ததை இன்று நாங்கள் தெரிந்துக் கொண்டோம்” என்று.
இதோ வள்ளலார் நமக்காக எங்ஙனம் வேண்ட வேண்டும் என்று சொன்னதை இன்று சொல்லி ஆண்டவரிடம் வேண்டுவோம்;
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

நன்றி:அன்புடன் ஏபிஜெ. அருள்,கருணை சபை சாலை.

unmai

Channai,Tamilnadu,India

One thought on “‘தீபாவளியும், சுத்த சன்மார்க்கமும் ‘- ஏபிஜெ அருள்.

  • ManoharanThangavelu

    Beautiful ,nice awakening

Comments are closed.