சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்
சாதி, சமயம், மதம் பொய் – வள்ளலார்
அக்டோபர் 5, வள்ளலாரின் பிறந்த நாள். 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் வடலூர் அருகில்மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாகபிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம்.
”எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லாப் பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும் எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக்கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைக ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடும் என்ற இறைக்கொள்கையை கொண்டவர் வள்ளலார்.
அதே நேரத்தில், சாதியும் சமயமும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி என்ற வாக்கியத்தை திருஅகவலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார்.
இதன் மூலம், வள்ளலார் கொண்டிருந்த முடிவான கொள்கை உலகில் வெளிப்பட்டுள்ள சமய,மத,மார்க்கங்களின் கொள்கையை சார்ந்தது இல்லை என்பதை சொல்ல வருகிறார் என அறியமுடிகிறது.
தனது பதிவிளக்கப் பாடலில்;
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.
வள்ளலார் ஆரம்ப காலங்களில் சமயத்தின்பால் பற்றுக் கொண்டு பல ஸ்தோத்திரப் பாடல்களை பாடியுள்ளார்கள். ஆனால் ஆண்டவனின் உண்மை நிலை சமய, மதங்களில் சொல்லிருப்பது போல் இல்லை என அவரது தேடல் இருந்து வந்துள்ளது. அப்படியெனில் கடவுளின் உண்மை என்ன? என்று ஒரு புதிய தனி வழியில் இடைவிடாது செய்த முயற்சியில் இருந்திருக்கிறார்கள். உண்மை ஆண்டவரை கண்டேன்,, அருள் பெற்றேன் என்னைப் போல் நீங்களும் பெறுவதாக உள்ளது. இந்த உண்மை வழியை இரக்கத்தால் உங்களால்தெரிவிக்கின்றேன் என்கிறார். அவரின் 12-04-1871 கடிதத்தில் உள்ள வாக்கியங்கள் இதை உறுதிப்படுத்துகிறது. அதில்;
“இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்றபலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானிமுதலானவர்களில் ஒருவரல்ல. இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா கடவுளரும், எல்லாஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்றதனித்தலைமைப் பெரும்பதி” என்கிறார்கள்.
மேலும்;தான் கண்ட நெறியானது;
எல்லா சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக சுத்த சன்மார்க்கம் விளங்குகிறது.
தனது மார்க்கத்திற்கு ”சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு அழைக்கிறார். தன் மார்க்கத்திற்கெனதனிகொடி,சங்கம்,சபை,சாலை,கட்டளைகள், விண்ணப்பங்கள், பாடல்கள்,வழிபாடு முறை,அமைத்துள்ளார்கள்.
உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களால் பலன் ஒன்றுமில்லை. கடவுள் நிலை குறித்த முழு உண்மை இவை உரைக்கவில்லை. இதன் சாத்திரங்கள் கண்மூடி வழக்கமாக உள்ளது. ஆனால்,தான் கண்ட சுத்த சன்மார்க்கம் தனக்கு பேரின்ப பெருவாழ்வை பெற்றுத் தந்தது என்கிறார்கள். அதாவது, உண்மை கடவுளின் அருளால் மரணத்தை தவிர்த்துக் கொண்டேன் என்கிறார். என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம் எனச் சத்தியமிட்டு சொல்கிறார் வள்ளலார். என் மார்க்கத்தில்”சாகா கல்வியை” தவிர வேறு ஒன்றுமில்லை. உலகில் காணும் சமய மத மார்க்கங்களால் ஒரு பயனுமில்லை அதணால், தான் கண்ட சமரச சன்மார்க்கத்தை விரைந்து அடைய வாரீர். . வாரீர். . என்று அழைக்கிறார்.
வெளிப்பட்டு விளங்குகின்ற சாதி,சமய,மதமார்க்கங்களில் இறையருள் பெறுவதற்கு பல சாதனங்கள், சடங்குகள், ஆசாரங்கள் அவையினால் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வை பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. அதனாலேயே சாதியும், சமயமும், மதமும் பொய் என்கிறார் வள்ளலார். தன் மார்க்கத்தில் கருணை ஒன்றே சாதனம் என்றுச் சொல்லும் வள்ளலார் மிக முக்கியமாக வெளிப்படுத்துவது; மேற்படி கருணை விருத்திக்கு சாதி, சமய, கட்டுப்பாட்டு ஆசாரங்கள் தடையாக உள்ளது என்பதேவள்ளலார் கண்ட உண்மையாகும். இதுவே வள்ளலாரின் தனிநெறியின் மிக முக்கியப்பகுதிபார்க்கப்படுகிறது.
ஆசாரங்கள் அவையாவன;
“ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயஆசாரம், மத ஆசாரம், மரபு ஆசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம்முதலிய ஆசாரங்கள்.
ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப்பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்தசித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது” என்கிறார் வள்ளலார்.
உலகில் இதுவரை கடவுள் குறித்து வெளிப்பட்டவை எவ்வாறு உள்ளது என்றும் தான் கண்ட உண்மை கடவுளின் நிலை என்ன என்பதை அவரின்”28 பாசுரத்தில்” குறிப்பிட்டு சொல்கிறார். நான்காவது பாடலில்:
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.
தனது முடிபான கொள்கை அடிப்படையில் வடலூர் பார்வதிபுரத்தில் ஒரு சபையை 1872 ம் ஆண்டு கட்டி அதற்கு ”சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை” எனப் பெயரிடுகிறார்கள். அங்கு கடவுள் விளங்கும் நிலையை விவரித்து காட்டினார்கள். ஆனால் 22-10-1871ல் சித்திவளாகத்தில் அவர் ஆற்றிய மகாபேருபதேசத்தில் கீழ்வருமாறு சொல்வதின் மூலம் அன்று இவரின் முடிபான கொள்கையில் மக்களின் புரிதல் எங்ஙனம் இருந்தது என அறியலாம்;
“ உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை
சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை”
வள்ளலார் என்றாலே இரக்கம், அன்பு, ஜீவகாருண்யம் என்பதிலே பெரும்பாலும் வெளிப்படுத்தப்படுகிறது வள்ளலாரை பற்றி வரும் பல நூல்களும் வள்ளலாரின் இரக்கத்தையும் அவரின் முந்தய சமயப்பற்றில் இயற்றிய ஸ்தோத்திர திருவருட்பாவிற்கு விளக்கங்களும் கொடுக்கின்றன
ஆனால், வள்ளலார் தான் வைத்திருந்த சமயப்பற்றை பற்றி குறிப்பிடும் போது; — –
” …இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவசமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும்சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா!அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான்சொல்லியிருக்கிற – திருவருட்பாவில் அடங்கியிருக்கிற – ஸ்தோத்திரங்களேபோதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும்சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவுமிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவுகொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போதுஎல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும்விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப்பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில்வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்தலக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டதுயாதெனில்: “தயவு” தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டதுஎன்கிறார்க்கி. கருணை என்பது; “ எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்புமே” என்கிறார்கள். அந்த உண்மை கடவுளிடத்தில் அன்பு வைக்க கடவுளின் நிலை காணுதல் வேண்டும். கடவுளின் நிலை காண ஒழுக்கம் நிரப்புதல் வேண்டும். இங்கு ஒழுக்கம் என்று வள்ளலார் குறிப்பிடுவது நெறியாகும். தான் சொல்ல வந்த நெறி குறித்து மக்கள் தெரிந்து கொண்டதை அவர்திருக்கதவந்திருக்காப் பிடுவதற்கு முந்தின இரவில் சித்தி வளாகத்தில் 30-01-1874ல் சொன்னது;
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஓழுக்கம் இன்னதென்றுதெரிந்து கொள்ளவில்லை.யாதெனில், இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள், எல்லாப்பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையேதொழுவீர்கள்”
இன்றும் மிகச்சிலரே வள்ளலாரின் புதிய தனி நெறியை தெரிந்துக் கொண்டிருக்கின்றனர் எனச்சொல்லாம். வள்ளலாரின் இந்த புதிய தனி பொது நெறிக்கு வடலூரில் உள்ள நிலையம் மட்டுமே உள்ளது. இந்து சமய அற நிலைய ஆட்சித்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியில் மற்றும் நிறுவநரின் கட்டளைப்படியே நிலையம் செயல்பட வேண்டும் என நீதிமன்றங்களை நாடி பல வழக்குகளிட்டே அங்கு வழிபாடு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
திருவருட்பிரகாச வள்ளலார் கண்ட சமரச சுத்தசன்மார்க்கம் உண்மை கடவுளின் நிலையறிந்து, அக்கடவுளின் அருளால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளை நீக்கி பேரின்ப பெருவாழ்வில் வாழ வழி காட்டுகிறது .இந்த உண்மை பொது வழியில் நான் சென்று, மரணத்தை தவிர்த்து கொண்டேன் தனி வடிவமாகிய ஒளி தேகத்தை ஆண்டவர் எனக்கு அருளினார். என்னை போல் நீங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்று சத்தியமிட்டு சொல்கிறார் வள்ளலார்.
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
உலகில் தோன்றியுள்ள பல சமய,மத மார்க்கங்கள் யாவும் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியவை. அதில் ஏதேனும் ஒன்றையே மனிதர்கள் தழுவி வருகின்றனர். ஒரு புதிய தனி மார்க்கம் ஒன்று 19ம் நூற்றாண்டில் இங்கு வெளிப்பட்டுள்ளதை நாமும் அந்நிலையத்தை பராமரித்து வரும் அரசும் சரியாக புரிந்திருக்கவில்லை என்பதே உண்மையும், வரலாறும்.
—
E Ramalakshmi @ apjarul
Karunai Sabai-Salai
34, Poombuhar Nagar North Extn.,
Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.