November 18, 2024
tamil katturai APJ arul

சுத்தசன்மார்க்க கூட்டத்திற்கு சாதிசமயமதத்தார்களை அழைக்கலாமா?அழைத்தால் எவ்வாறு அழைப்பது?

 

சுத்தசன்மார்க்க கூட்டத்திற்கு சாதிசமயமதத்தார்களை அழைக்கலாமா?அழைத்தால் எவ்வாறு அழைப்பது? 
— ஏபிஜெ அருள்.
நமது வள்ளலார் சொல்கிறார்கள்;
— “வம்மீன் உலகியலீர்”
— “… எப்பாரும் எப்பதமும் எங்கணு நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும்..”
— “…உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக்கொட்டேன்..”
— “…இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர் 
களாயிருந்தாலும் ..நீங்களும் நல் ஒழுக்கத்திற்கு வருவதோடு கூட மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.”
இங்ஙனம் வள்ளலாரின் சத்திய வார்த்தைகள் ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை அடிப்படையில் இருக்கும் போது, மற்ற சாதிசமயமதங்கள் சார்ந்த சகோதரர்களை நமது கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கலாம் . 
அழைக்கவும் வேண்டும்.
நிற்க!
ஆனால் எதற்காக இங்ஙனம் செய்கிறோம்? செய்ய வேண்டும்?
“உண்மையை “
தெரிந்து கொள்வதற்கே. தெரிந்துக்கொண்டு, உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பம் அடைவதற்கே.
ஆக, இது வரை அறிந்திடாத மெய் நெறியை (சுத்தசன்மார்க்கத்தை) கடைப்பிடிக்க வைத்து, மெய்பொருள் (கடவுள் உண்மை) நன்கு உணரவே அழைக்கிறோம் (தெரியாமல் இருக்கும் எல்லோரையுமே நானும் உட்பட.).
ஆனால் உலகிற்கு சாதி சமய மதம் பொய்யே என்ற வள்ளலாரை வெளிப்படுத்துங்கள் என்றும் அவர்தம் புதிய தனி நெறி குறித்து வியம்புங்கள் என விழாவிற்கு வந்த சாதி சமய மதத்தில் லட்சியம் கொண்ட அன்பர்களை சொற்பொழிவு ஆற்றச் சொன்னால் எப்படி இருக்கும்? வள்ளலார் வெளிப்படுத்திய உண்மையை உள்ளபடி உரைப்பார்களா? நிற்க! ஏன் வள்ளலாரை இரக்கம் அன்பில் வெளிப்படுத்தி பேசட்டுமே என நீங்கள் சொல்லக்கூடும். இந்த மாதிரி கூட்டத்தை சமய மதத்தார்கள் கூட்டி செய்தால் சரி. (வள்ளலாருக்கு சமய மத அன்பர்களும் ஏன் கடவுள் மறுப்பாளர்களும் பல விழாக்கள் எடுக்கிறார்கள். நம்மவர்களையும் அழைக்கிறார்கள். அது வேறு) ஆனால் சுத்த சன்மார்க்க கூட்டம் விழா எனப் பெயரிட்டு செய்யும் விழாவில் வள்ளலார் கண்ட கொள்கையை/உண்மையை தான் சொல்ல வேண்டும். இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்;
“அகத்தே கறுத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தடைவித்திட….வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.”
நிற்க! 
வள்ளலார் வெளிப்படுத்தியதும் ஒரே ஒரு உண்மையை தான்.
அது ;”” சாகாகல்வி””. 
(இது குறித்து தனி கட்டுரை வந்துள்ளது.)
இதோ வள்ளலார் சொல்கிறார்கள்;
” என் மார்க்கத்தில் சாகாகல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை.”
— சகாகல்வி என்றால் ‘இறவாதவரம்.’
— இதற்கு கடவுள் அருள் வேண்டும்.
— அருள் பெற கடவுள் உண்மை நிலை உணரவேண்டும்.
— உள்ளபடி உணர உண்மை வழியை (மெய்நெறி) காண வேண்டும்.
— உண்மை வழியில் கருணை ஒன்றே சாதனம். 
— இந்த கருணை நம்மிடம் விருத்தியாகாமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும் என்கிறார்.
வள்ளலார் தெளிவாக 28 பாசுரத்தில் சொல்கிறார்கள்;
“கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே!..”
இங்ஙணமாக வள்ளலாரின் சத்தியவாக்கியங்கள் இருக்கும் போது,
சாதி சமய மதத்தார்கள் எங்ஙனம் மேடையில் இந்த சுத்த சன்மார்க்க உண்மையை தெரிவிப்பார்கள்?. 
இவை அனைத்தும் உலகத்தார்களுக்கு புதியது தனித்தன்மையானது. கண்டிப்பாக நல்ல தேடுதல் உள்ளவர்கள் எந்த நிலையில் இருப்பினும் வள்ளலாரின் கொள்கை தெரிய வரும் போது மிக ஆவலுடன் விரைந்து விசாரிப்பார்கள். காரணம் வள்ளலாரே சொல்கிறார்கள்;
“எல்லா சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்
உண்மை பொது நெறியாக விளங்குவது சுத்த சன்மார்க்கம்.”
எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க சொல்வது, சுத்தசன்மார்க்கம் மட்டுமில்லை. எல்லா ஞானிகளும் பல சமய மதங்களும் தான் என்பதை நாம் இங்கு உணர வேண்டும். இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்; ” கொல்லாமை, சாந்தம், ஜுவகாருண்யம்.. ஆகியவை சமய சன்மார்க்கத்தின் இயல்புகள்” என்கிறார்கள். சுத்த சன்மார்க்கம் மற்ற சமயமத மார்க்க உண்மைகளை படிகளாக்கி கொண்டு, உண்மையை உள்ளது உள்ளபடியாக உணரச் சொல்கிறது. இதோ வள்ளலாரே சொல்கிறார்கள்; “என்மார்க்கம் உண்மை அறியும் அறிவு மார்க்கம்”.
ஆக, சுத்தசன்மார்க்க கூட்டமத்திற்கு எல்லோரையும் அழைப்போம், நானும் நீங்களும் போவோம். எதற்கு? உண்மையை தெரிந்து கொள்வதற்கே. மேடையில் இறவாத வரம் பெற்ற வள்ளலாரின் வழியை (நெறியை) வாசிக்கப்படல் வேண்டும். மெய் நெறி தெரிந்து கொண்டவர்கள் மேலும் உண்மையை அறிய,அனுபவிக்க “ஆசை” கொண்டால் இடைவிடாது விசாரணை செய்யலாம்.இதோ வள்ளலார் சொல்கிறார்கள்;
“நீங்கள் ஒருமித்தாவது,அல்லது தனித்தனியாவது,உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது..நல்ல விசாரணையில் இருங்கள்.” தனது பாசுரத்தில்;
“விண்டதனால் என்இனிநீர் 
சமரசசன் மார்க்க மெய்ந் நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகு சிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாமே
இன்பமுற லாமே.” என்கிறார் வள்ளலார்.
ஆக, 
1) நம்மவர்கள் கூட்டம் வைத்தால் அதில் எல்லோரையும் அழைத்து, வள்ளலார் கண்ட உண்மையை நாம் சொல்லுவோம். வள்ளலார் கட்டளைப்படி வாசிப்போம்.
அடுத்து, 
2) நன்முயற்சி விசாரம் (நெறியில் செல்ல ஆசை ) வைத்தால் வள்ளலார் கட்டளைபடி நம் அறிவு ஒழுக்கத்துக்கு ஒத்தவர்களை மட்டுமே அழைத்து நல்ல விசாரம் செய்வோம்.
அடுத்து
3)வள்ளலாரை அன்பு இரக்கம் ஒழுக்கம் ஜுவகாருண்யம் முதலியவற்றில் போற்றி கூட்டம் ஒன்றை மற்ற அன்பர்கள் வைத்து அழைத்தால் கலந்து கொள்ளலாம். (அங்கு வள்ளலாரை முந்தைய சமய லட்சியத்தில் வெளிப்படுத்தினால் அவர்கள் அனுமதியுடன் அக்கூட்டத்திலேயே, வள்ளலார் தான் வைத்திருந்த சமயப்பற்றை கைவிட்டு விட்டு ஒரு புதிய தனி மார்க்கத்தை நிறுவினார்கள் என அழுத்தமாக பதிவு செய்யலாம்)

— அன்புடன் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India