November 18, 2024
tamil katturai APJ arul

சமயம்,மதம் பொய் — வள்ளலார் ஏன்?எதற்கு?எப்படி?

 

சமயம்,மதம் பொய் — வள்ளலார்
ஏன்?எதற்கு?எப்படி? — ஏபிஜெ அருள்.

சுத்தசன்மார்க்கம் என்றாலே “மரணமில்லா பெருவாழ்வை” பெற்றுத்தரும் வழி என்கிறார் வள்ளலார். நான் மிகைப்படுத்தியோ, பொய்யாகவோ இதை கூறவில்லை என்கிறார் வள்ளலார்.
இந்த உண்மையை, அதாவது, மனிதன் கடவுள் அருளால் தெரியவரும் சாகா கல்வியால் , மரணத்தை வென்று, என்றும் அழிவில்லாத தனி வடிவத்தில் வாழலாம் என்ற உண்மையை உரைக்காது போன சமயமத மார்க்கங்களை பொய் என்கிறார் வள்ளலார்.
எனவே தான் சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது என்றும், அதே போல், சுத்தசிவம் என்பது சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது என்கிறார் வள்ளலார். மேலும், வள்ளலார் சமயசன்மார்க்கத்தை பற்றி குறிப்பிடும் போது கொல்லாமை, பொறுமை,சாந்தம்,அடக்கம்,இந்திரி நிக்கிரகம்,ஜீவகாருண்யம் இவை சமய சன்மார்க்கத்தின் இயல்புகளாக உள்ளது என்கிறார் வள்ளலார். ஆனால் சுத்தசன்மார்க்கமோ இதன் அனுபவங்களை கடந்தது. பூரண சித்தியை அடைவதே சுத்தசன்மார்க்க கொள்கை என்கிறார். மேலும், சமயமத சன்மார்க்கங்களில் தத்துவங்களின் (கடவுளர்) காலப் பிரமாண பரிந்தயம் இருக்கும்.அதற்கு மேலிரா. எனவே முழு உண்மை உரைக்காததும் பூரண சித்தியை தராத இவைகளில் லட்சியம் வையாதீர்கள் என வள்ளலார் கட்டளை இடுகிறார்கள்.
மேலும், கடவுளின் அருளுக்கு கருணை வேண்டும். ஆனால் இந்த கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களே என்ற உண்மையை வள்ளலார் கண்டு வெளிப்படுத்துகிறார்.
இதன் அடிப்படையிலேயே வள்ளலார், உள்ளது உள்ளபடியாக கடவுள் உண்மையை உரைக்காத சமய மதங்களை பொய் என்கிறார் என்று அறிய வேண்டும். சமயமதம் பொய் என்றவுடன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இம்மார்க்கத்தை வேறு கோணத்தில் பார்த்து வள்ளலாரை பாராட்டுகிறார்கள். ஆனால், அதே வள்ளலார் சொல்கிறார்கள்; ” நாத்திகம் பேசுவோர் நாக்கு முடநாக்கு “ என்கிறார். அதே போல் வள்ளலாரை அவர்தம் தனி நெறியில் காட்டாமல் அடிப்படை தகுதியிலேயே இரக்கம் கொல்லாமை ஜீவகாருண்யம் இவையில் மட்டும் காட்டுவதினால் தனி நெறி வெளிப்படாமல் போகிறது. இதில் என்ன தவறு என்பீர்கள்? இதனால் ஆசாரத்தில் பற்றுடையவர்களும் வள்ளலார் கொள்கை சார்ந்தவராக சொல்லிக் கொள்வது இதனால் தான்.
வள்ளலார் தான் கண்ட நெறி எல்லோருக்கும் பொதுவாக உள்ளது என்று சொல்லும் அதே நேரத்தில், என் மார்க்கத்தார் யார் என்றால், அவர் , சாதி சமய மத மார்க்கத்தில் முற்றும் பற்றற கைவிட்டவர்களாகவும், ஆசரங்களை விட்டொழித்தவர்களாகவும் , இருக்க வேண்டும் என தகுதிகளை வள்ளலார் வகுத்துள்ளார்கள்.
இதன் அடிப்படையிலேயே கீழ்வருமாறு வள்ளலார் கூறுகிறார்;
என் மார்க்கத்தில் சமய மத மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதனவல்ல.
ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ,அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்கு சமயமத மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.
மேலும், உண்மையை மண்ணைப் போட்டு மறைத்த வேதம்,ஆகமம்,புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்

இதேபோல் மனுசனுக்கு அமைப்பது போல் தெய்வத்துக்கு கை கால் முதலியன அமைத்து கற்பனையானதாகவும், மேலும், பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டுகின்ற சைவம், வைணம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார்.
ஆக,
தெய்வத்தின் உண்மை என்ன? என்ற விசாரமும், 
அவத்தைகளாகிய துன்பம்,பயம்,மூப்பு, பிணி நீக்கி மரணம் தவிர்த்து பேரின்ப வாழ்வுக்கு ஆண்டவரின் அருள் பெறும் வழியே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் ஆகும்.
இது 19 ம் நூற்றாண்டில் வெளிப்பட்ட
புதிய மார்க்கம். தனி நெறி. உண்மை பொது வழி என உணர்க!.

அன்புடன் ஏபிஜெ அருள் கருணை சபை மதுரை.
[email protected]

8778874134

நன்றி.

விரிவாக உபதேச குறிப்புகள் பாடல்கள் முலம் காணலாம்.

unmai

Channai,Tamilnadu,India