January 22, 2025
tamil katturai APJ arul

‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை-Our Vallalar

உயர்வுடையதாகிய மனித தேகத்தை பெற்றவர்களே!
அறிவுடைய சான்றோர்களே! அன்பர்களே! சகோதரர்களே!
வணக்கம்.

இன்று கடவுள் குறித்த நல்ல விசாரணையை நாம் செய்யப் போகிறோம்.
விசாரணை என்றால் அது உண்மையறிவதற்கான முயற்சியே.
அதுவும் நல்ல விசாரணை செய்ய உள்ளோம்
அதாவது பலனற்ற விசயத்தை பற்றி பேசி வீண்போது கழியாது, நல்ல விசயத்தைப் பற்றி பேச உள்ளோம். அந்த நல்ல விசயம் “கடவுள்”/இறைவன்/ஆண்டவர்
கடவுள் குறித்த நல்ல விசாரணை எதுவெனில்;
கடவுளின் உண்மை என்ன?
உண்மை கடவுள் யார்?
இங்கு, கடவுள் உண்டா? என்ற கேள்வி நம்மில் கிடையாது. கடவுள் உண்டு என்பதில் நம் அறிவு ஏற்கனவே ஒத்தாகிவிட்டது. ஆக கடவுள் உண்டா? என்ற அந்த அடிப்படை விசயத்திற்குச் சென்று நாம் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம்.
ஆக கடவுள் உண்டு ஆனால் உண்மை கடவுள் யார்? அக்கடவுளின் நிலை என்ன? என்பதே நம் நல்ல விசாரணையின் பொருள் ஆகும்.

அன்பர்களே!
நம்மால்,” நம்மைப் பற்றி, நம்மை சுற்றியுள்ள புறத்தை பற்றி அறிந்துள்ளேம். அறிந்துக்கொண்டிருக்கின்றோம்.
எவரேனும் நம்மிடம் ஏதேனும் ஒன்றைக்கொடுத்து இதை பிடியுங்கள் என்றவுடன் பிடித்துவிடுகிறோமா? அல்லது நம்மிடம் உள்ளதை கேட்டவர்களிடம் உடன் அதை கொடுத்து விடுகிறோமா? இல்லையே!
ஆனால் இதுவே கடவுள் என்றுச் சொன்னவுடன் அதை அப்படியே ஒத்துக்கொண்டு சிறுபிள்ளையிலிருந்து வணங்க ஆரம்பித்த நாம் இன்று வரையிலும் அவற்றையே கடவுளாக துதித்து வணங்குகிறோம். அக்கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட சமய மதங்களில் லட்சியம் வைத்து வளர்ந்து வருகிறோம். அச்சமய மத சடங்குகளில் பற்று வைத்து தவறாது அவைகளையும் செய்தும் வருகிறோம். நிற்க! என்றாவது ஒரு நாளாவது நாம் கும்பிட்டு வரும் கடவுள், உண்மையான கடவுள்தானா? நாம் செய்யும் சடங்குகள் மற்றும் சம்பிராதயங்கள் தேவையானதா?என நல்ல விசாரணை செய்தோமா? நமக்கு கடவுள் குறித்து எடுத்துச் சொன்ன நமது பெற்றோர், உறவினர்கள், சுற்றத்தார்கள் இவர்கள் வேறு ஏதேனும் சொன்னால் அதை அப்படியே கேட்பதில்லை. உதாரணமாக; இந்த பெண்ணை கட்டிக்கொள் என்று அன்னையோ, இந்த வேலைக்கு செல், அதைப் படி என்று தந்தையோ, அல்லது நமது உடை, உணவு, சொத்து சம்பந்தமாக நமது பெற்றோர்களோ, உறவினர்களோ அல்லது சுற்றத்தார்களோ சொன்னால் உடன் ஒத்துக்காள்வதில்லை. மேற்படி வரன், வேலை, படிப்பு, உணவு, உடை, சொத்து ஆகியவற்றை நாம் விசாரித்து அவை நம் அறிவுக்கு தெளிவுப் பெற்ற பின்பே ஒத்துக்கொள்கிறோம். அப்படித்தானே!
அப்படித்தான் என்றால், கடவுள் குறித்த விசயத்தில் மட்டும் ஏன் நீங்கள் தெளிவுபடுத்திக்கொள்ளவில்லை. ஏனென்றால், நாம் வணங்கும் கடவுள் “சும்மா” இருக்கும் ஒரு பொருள். நாம் வணங்கி வரும் கடவுள், நம் உடை, உணவு, படிப்பு, வேலை, சொத்து, இன்பம் போன்றது போல் புலனிச்சையில் தொடர்புடையது அல்ல. பொதுவாக நாம் கடவுள் என்பது ஒரு நம்பிக்கை என்றும், அந்த நம்பிக்கையில் நம் மனம் தொடர்பு கொள்கிறது. அத்தொடர்பில் ஏதோ ஒரு திருப்தி. இது இலாபமா? என்பதை விட நம் கடவுள் நம்பிக்கையில் நட்டமில்லை. அதனால்தான் அதில் பலருக்கு விசாரணை இல்லை. சிலர் மட்டுமே முயற்சி செய்தனர். செய்கிறார்கள். தான் வணங்கும் கடவுள்கள் குறித்த உண்மையை தெரிந்துள்ளனர். தெரிந்து வருகிறார்கள்.
எந்தவொரு சமயமும் மதமும் மார்க்கமும் நம்மை எந்தொரு தீயச்செயலையும் செய்யச்சொல்லவில்லை. அச்சமய மத மார்க்கங்களை தோற்றுவித்தவர்கள் அனைவருமே அறிவு படைத்த சான்றோர்கள். ஒழுக்கமுடையோர். அவரவர் பெற்றிருந்த ஒழுக்கம் அறிவுக்கு ஏற்றளவில் உண்மையை அறிந்திருந்தனர். அறிந்தளவே உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் சமய, மத மார்க்கங்களை ஏற்படுத்தினார்கள்.

அன்பர்களே!
இந்த இடம் தான் மிகவும் முக்கிய இடமாகும்.
நம் சமய, மத மார்க்கங்களை நாம் மதிக்காமல் இருக்க முடியுமா? மதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் எந்தளவு உண்மையை அவை வெளிப்படுத்தி உள்ளதோ அந்தளவுக்கு மட்டுமே அவையை மதிக்க முடியும். அதே நேரத்தில் மற்றும் முழு உண்மையை அறிந்திடச் சொல்லும் நம் அறிவை மதிக்காமல் இருக்கலாமா?
ஆனால் நம் சமய மதமார்க்கங்களில் நிர்ணயிக்கப்பட்ட நிலை என்ன? நாம் சார்ந்திருக்கும் சமய, மத, மார்க்கங்கல்ளி நமக்கு விதிக்கப்பட்ட “கட்டுப்பாட்டு ஆசாரங்கள்” நம் அறிவை கட்டுப்படுத்தி அல்லவா வைத்துள்ளது. வளரும் நம் அறிவுக்கு நம் சமய, மத மார்க்கத்தில் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதா?
வளரும் நம் அறிவில் பல உண்மைகள் வெளிப்பட்டாலும், நாம் சார்ந்திருக்கும் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களில் தானே கட்டுப்பட்டு வாழ்கிறோம். வாழ வைக்கப்படுகிறோம். நாம் சார்ந்திருக்கும் சாதி சமய மத மார்க்கங்களில் “விசாரணை”க்கு இடம் கொடுக்கப்படுகிறதா?
புறத்திலே, விஞ்ஞான அடிப்படையில், எவ்வளவு கண்டுபிடிப்புகள்! அக்கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நம்மிடம் எவ்வளவு மாற்றங்கள். விஞ்ஞானத்தில் அறிவு சுதந்திரம் பெற்றுள்ள நாம் ஏன்? அகத்திலே விசாரணை செய்ய நமக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
அன்பர்களே! “இன்று”, “இந்த இடத்தில், இப்பொழுதே பெற்றோம் “சுதந்திரம்” “அறிவு சுதந்திரம்”,
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் சொல்கிறார்கள்.
என் மார்க்கம் “அறிவு மார்க்கம்’’
மார்க்கம் என்றால் வழி
என் மார்க்கத்தில் “அக அனுபவமே உண்மை” என்கிறார்கள்.
“அக அனுபவம்” உண்மை அறிவினால் ஏற்படுகிறது.
அறிவு என்றால் கருணை
கருணை என்பது;
எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவனிடத்தில் அன்புமே!

அன்பர்களே!
கடவுள் அருளால் அறிவு சிறிது தோற்றுவித்த தேகமே, இந்த மனித தேகம்.
நாம் ‘கடவுள் அம்சம்’
கடவுள் என்பவர் ‘பேரறிவு’ ஆவார்.
அக்கடவுள் தனிப்பெருங்கருணை’ ஆவார்.
நாம் பெற்றுள்ள சிறிதறிவில் இந்த பேரறிவின் திறத்தை, இந்த தனிப்பெருங்கருணையின் ஆற்றலை மற்றும் உண்மை நிலையை எங்ஙனம் அறிந்திட முடியும்?
ஒன்றின் உண்மை அறிந்திட என்ன செய்ய வேண்டும்.
விசாரணை தானே? ஆம் விசாரணையில் தான் உண்மை தெரியவரும்.
கடவுளின் உண்மை குறித்து விசாரணை செய்யச் சொல்லும் ஒரே மார்க்கம் திரு அருட்பிரகாச வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!
சுத்தம் என்பது மறுக்க வந்தது.
பூர்வத்தில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பதே சுத்த சன்மார்க்கம் என்கிறார் வள்ளலார்.
சுத்த சன்மார்க்கத்தில் கடவுளாக யாரை வெளிப்படுத்துகிறார் நம் வள்ளலார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையா?
ஆம் ஆனால் இல்லை.
இங்கு ஆம் என்றால், திரு அருட்பிரகாச வள்ளலார் தான் வைத்திருந்த சமயப் பற்றினை கைவிட்டு விட்டு, தான் இயற்றிய சமய ஸ்தோத்திரத் திரு அருட்பா பாடல்களையும் விட்டு விட்டு, ‘கருணை ஒன்றையே’ சாதனமாக கைக்கொண்டு, அக்கருணை விருத்திக்கு தடையாக இருக்கும் சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்களையும் ஒழித்து, இடைவிடாது மேற்க்கொண்ட நல்ல விசாரணையில் உண்மை அறிவுக்கு தென்பட்டவரே ”அருட்பெருஞ்ஜோதியாகிய தனிப்பெருங்கருணை கடவுள்” ஆகும்.
இங்கு இல்லை என்பது;
தான் கண்ட உண்மையை அங்ஙனமே உலகிற்கு உபதேசத்திலும், பாட்டிலும் எடுத்துக்காட்டினாலும், நம்மை கருத்தில் கருத்துச் சொல்லும் கடவுள் யார் தெரியுமா?
எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருள்களையும், மற்றையெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும், எங்கும் பூரணமாகி விளங்குகின்றஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யவேண்டும்.
கடவுளின் நிலை அறிவதற்கு கீழ் வருமாறு கூறுகிறார்கள்.
வள்ளலார் அவர்தம் அனுபவத்தில் கண்ட கடவுளின் நிலைகள் பற்றி பாடல்கள் மற்றும் உபதேசத்தில் சொன்னாலும், இவைகள் (கடவுள் நிலைகள்) படிப்பால் அறியக்கூடாது (முடியாது) என்கிறார். மேலும் உரைநடைப்பகுதியில் (பக்கம் 437: ஆவண எண் 4):-
“ஒழுக்கம்” நிரம்பி, கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்திருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால் இடைவிடாது கருணை நன் முயற்சியில் பழகல் வேண்டும் என்கிறார்கள்.
மேலே சொன்னதின் மூலம், சுத்தசன் மார்க்கத்தில் “ஒழுக்கம் நிரப்பிக்கொள்வதில்தான்” கடவுள் நிலையறிய முடியும் எனத் தெளிவாக அறியமுடிகிறது.
‘ஒழுக்கம்’ என்னவென்று வள்ளலார் ஏப்ரல் 1871க்கு பின்பு சொல்லியுள்ளார்களா எனப் பார்க்கும் போது 11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில் இது பற்றி காண முடிகிறது.
” இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”.
நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மா£க்கங்களில் உள்ளவை. இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்கள? என இங்கு நாம் கண்டறியவேண்டும்.
அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும்
ஏனென்றால் இவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
ஆம், வள்ளலார் ”சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் குறிப்பிட்டது;
‘இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை யாதெனில்:
“இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுகளுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடைய கடமை”
எனவே சுத்த சன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்ய முடிகிறது. ஆக, ஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும்.
இதன் மூலம் வள்ளலார் ஒரு தனி வழியை (மார்க்கத்தை) கண்டு வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
ஆக, சுத்த சன்மார்க்கத்தில் வள்ளலாரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உண்மை பொது நெறி எனப் பார்க்கும்போது;
* உண்மை அறிவால் அறியப்படும் உண்மை கடவுள் ஒருவரே!
* அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
* கடவுளின் நிலையறிய ‘ஒழுக்கம்’ நிரப்பிக் கொள்ள வேண்டும்.
* இவ்வுலகில் காணும் சமய, மத, மார்க்கங்களில் லட்சியம் வைக்கக்கூடாது.
* நம்மிடமுள்ள சாதி சமய “கட்டுப்பாட்டு ஆசாரங்களை” ஒழித்தல் வேண்டும்.
* கடவுள் குறித்து நல்ல விசாரணை செய்தல் வேண்டும்.
* நல்ல விசாரணை என்பது;
உள்ளமுந்துதல்
சிந்தித்தல்
சிந்தித்தலே விசாரித்தல்

unmai

Channai,Tamilnadu,India