”சமயங்கள் பொய்” – எங்ஙனம் வள்ளலாரின் கூற்று சரியாகும்?
”சமயங்கள் பொய்” –
எங்ஙனம் வள்ளலாரின் கூற்று சரியாகும்? – ஏபிஜெ அருள்
சாதி,சமயம் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி என்றும் சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக சமய,மத முதலிய மார்க்கங்கள் உள்ளன என்றும் சொல்லுகிறார் வள்ளலார்-
அதே நேரத்தில் சமயங்களின் குண இயல்பாவது எவை என வள்ளலார் கூறும் போது கொல்லாமை, பொறுமை,சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்ணியம் ஆகும்- இவை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்-
மதங்களில் முக்கிய அனுபவமாக சோகம், சிவோகம், தத்வமசி, சிவத்துவமசி உள்ளது என்கிறார் வள்ளலார்-
மேற்படியான சமயமத சன்மார்க்கங்கள் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு அநந்நியம் (அந்நியமல்ல) என்கிறார் வள்ளலார்- மேலும் கூறுகையில், சுத்தசன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல என்கிறார் வள்ளலார்-
இங்ஙனம் மேற்படியாக சமய,மதங்களை பெருமையாக விவரித்த வள்ளலார் எங்ஙனம் சமய,மதங்களை பொய் எனவும், அவையில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார்?? — இதுவே இன்று விசாரணை ஆகும்-
ஒரு கணக்கு வாத்தியார் மாணவர்களிடம் கீழ்வருமாறு கணக்கு கேள்வியை கேட்டார்:
கேள்வி : 5 + 4 எவ்வளவு ?
இதற்கு ஒரு மாணவன் 5+4 = 8 என்று விடை எழுதினான் –
அதற்கு கணக்கு வாத்தியார் தப்பு என்று அடித்து விட்டார் மார்க் எதுவும் கொடுக்கவில்லை- இதை கண்ட மாணவனின் தந்தையார் மிக கோபமாக வாத்தியாரிடம் வந்து; ஏய் வாத்தி ! என் பையன் போட்ட கணக்கிற்கு ஏன் மதிப்பெண் தரவில்லை? என்றார்- வாத்தியார் நிதானமாக சொன்னார்: விடை தவறு என்றார்- அதற்கு எப்படி தவறாகும் என்றார் பையனின் தந்தை தொடர்ந்து அவரே ஏய் வாத்தி; நீர் சொன்னது கூட்டல் கணக்கு என் பையன் 5 யை விட கூட்டி சொல்லி இருக்கானா இல்லையா? அடுத்து 9 என்ற விடைக்கு அருகில் வந்தான இல்லையா? இப்படி 5 யை விடகூட்டி விடை அருகில் வந்த என் பையனுக்கு மார்க் எதுவும் கொடுக்காமல் மொத்தமா அடித்து விட்டாய்? என்றார் தந்தை- இங்கு கணக்கு வாத்தியார் செய்தது சரியா? தவறா?
அதுபோல்;
இறைவன் அருள் என்றாலே துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போக்கி கொள்வதே என்பது வள்ளலாரின் கணக்கு –
இங்ஙனம் தராத ஒரு நெறியை பொய் என்கிறார் வள்ளலார் –
(இங்கு உலகில் காணும் எல்லா மார்க்கமும் மரணத்தை ஒத்து கொள்கின்றன என்பதையும் மரணத்திற்கு பின் சொர்க்கம் நரகத்தில் நம்பிக்கை உள்ளவை என கருத்தில் கொள்க)
கருணை ஒன்றே சுத்த சன்மார்க்க பயனாகிய மரணமில்லா பெருவாழ்வை பெற்று தரும் ஒரே சாதனம் என்கிறார் வள்ளலார்- அந்த கருணை விருத்திக்கு தடையாக சாதி,சமய ஆச்சாரங்கள் உள்ளன என்பதே வள்ளலார் கண்ட உண்மையாகும் – எனவே சமயங்களில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார் வள்ளலார் –
சமய,மதங்களில் சொல்லப்பட்டுள்ள வழிகளில் (சாதனங்களில்) சாதரண மனிதர்கள் பயணிக்கவோ, செயல்படுத்தவோ முடியாது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை- கடவுளை வணங்குவது என்பது எல்லோராலும் முடியும் சொல்லப்பட்ட சாதன்ங்கள்/ ஆச்சாரங்களால் அருள் பெறுவது எளிதாக இல்லை மற்றும் காலமும் நமக்கில்லை என்பதே சமயங்களில் உள்ளது என்கிறார் வள்ளலார் – அதணாலே அங்கு மரணம், மூப்பு, பிணி தவிர்த்து கொள்ளலாம் என்ற சிந்தனையே அதன் தலைவர், ஞானி, யோகிகளுக்கு ஏற்படவில்லை அல்லது அவர்களின் மரணம் தவிர்த்து கொள்வது அவர்களின் தேடலாக இருந்தது எனலாம்- ஆக, மொத்தத்தில் முழு உண்மையை உரைக்காத அல்லது முழு அருளை பெற்று தராததினால் தான் சமயங்களை பொய் என்கிறார் வள்ளலார்-
இதுவே உண்மை-
உலகில் எத்தனையோ சமய மத மார்க்கங்கள் உள்ளது – ஒன்றொடு ஒன்று சேர முடியாமல் தான் உள்ளது – ஆனால் எல்லா சமய,மத,மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக தன் சுத்த சன்மார்க்க நெறி விளங்குகிறது என்கிறார் வள்ளலார் –
படித்து நாம் தெரிந்து கொள்ளலாமே ! அது உண்மை நெறியா? அல்லது பத்தோடு பதினென்றா ? என்பதை அவரவர் தானே படித்து அறிய முடியும்?
நமக்கு வேண்டியது உண்மையும் மற்றும் சாகாமல் பேரின்ப வாழ்வில் வாழ்வதும் தானே! அது வள்ளலார் சொன்னால் என்ன? எந்த மார்க்கம் சொன்னால் என்ன?-
இன்றே படிப்போம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை
– அன்புடன் ஏபிஜெ அருள், கருணை சபை, மதுரை-