January 22, 2025
tamil katturai APJ arul

நம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா?

நம் தாண்டவம், ஆட்டம், நாட்டியம் ஆண்டவன் அருளை பெற்றுத் தருமா?

இங்கு என்ன விசாரணை செய்யப் போகிறோம் என்றால் ஆண்டவன் அருள் பெறுவதற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சாதனம் என்ன என்பதே!
ஆண்டவன் அருள் பெறுவதற்கு ஆண்டவரின் நிலை காண வேண்டும் என்கிறார் வள்ளலார் – ஆண்டவர் நம்மிடம் எங்கு உள்ளார்? எந்நிலையில் வீற்றியிருக்கிறார்? என வள்ளலார் வியம்பும் போது;
ஞானசபை யென்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் ளிருக்கும் பிரகாசம் கடவுள். அந்த உள்ளொளியின் அசைவே நடனம். இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும், நடராஜர் என்றும், நடனம் என்றும் சொல்லுகிறது-

ஆக, ஆண்டவரின் நடனத்தை நாம் காணுதல் வேண்டும் –

அதற்கு நாம் எந்த சாதனத்தை கைக்கொள்ள வேண்டும்?

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்.
மேலும், மற்றொரு இடத்தில்;
பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.
மேலும்;
சுத்த சிவநிலை அறிவது எப்படியெனில்:
“ ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்ப முண்டானால், நாம் தாழுங் குணம் வரும். அத்தருணத்தில் திருவருட்சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும்.” என்கிறார் வள்ளலார்-
இங்குள்ள சங்கல்பத்தின் பொருள் என்ன எனப் பார்க்கும் போது;
சங்கல்பத்தின் பொருளும் விரிவும் யாதெனில்:- விரிவாவது ஐந்து: நிர்விகல்பம், சவிகல்பம், சங்கல்பம், விகல்பம், கல்பம். இவற்றுள் நிர்விகல்பமாவது கடவுளறிவு. மேற்படி அறிவின் வியாபகமே சவிகல்பம். சங்கல்ப மென்பது கரணம் யாதொன்றிலும் பற்றாமல் சுத்தமாயிருந்த காலத்தில் தோன்றிய அசைவே சங்கல்பம்; ஒன்றிலும் பற்றாது அசைந்த மேலசைவென்னும் புடைபெயர்ச்சியே சங்கல்பம். நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே சங்கல்பம். விகல்ப மென்பது பிரம சதாசிவ கால அளவைக் குறிக்கிறது. இதில் பலவாக விரிந்த அனுசந்தானங்கள் கல்பம். உள்ளழுந்தல், அதைச் சிந்தித்தல் சிந்தித்தலை விசாரித்தல் இம்மூன்றுமே சங்கல்ப விகல்ப கல்பம்.
ஆக, மொத்தத்தில்;
ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதல்
எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்தல்
கரணம் யாதொன்றிலும் பற்றாமல் இருத்தல்
உள்ளழுந்துதல், சிந்தித்துதல் சிந்தித்தலே விசாரித்தல்
இவையானவையில் நெகிழ்ந்து, உருகி இருப்பதிலேயே கடவுளின் நிலை அறிதல் முடியும்-
இப்பொழுது நீங்களே சொல்லுங்கள், நாம் ஆடுவதினாலும், மற்றவர்களை ஆடச் சொவ்வதினாலும், ஆண்டவனின் நடனத்தை காண முடியாது அல்லது காண வைக்க முடியாது தானே!
ஆண்டவனின் அசைவாகிய நடனம் காண,
ஒழுக்கம் நிரப்பி, இடைவிடாது நன்முயற்சியில் நினைந்து ,உணர்ந்து, நெகிழ்ந்து உள்ளழுந்தி உள்ளத்தில் காண்போம் – அருள் பெறுவோம் – பேரின்ப பெருவாழ்வில் வாழ்வோம்-
ஏபிஜெ அருள் – கருணை சபை-சாலை, மதுரை-

unmai

Channai,Tamilnadu,India