November 18, 2024
tamil katturai APJ arul

கடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ???

கடவுள் — கடவுள் — என்கிறார்களே யார் தான் அந்த கடவுள் ???

– இந்த கடவுளே கடவுள் என்கிறார் இந்த ஆத்திகர் –
அவர் சொல்லும் கடவுள் கடவுள் இல்லை, எங்கள் கடவுளே கடவுள் என்கிறார் அந்த ஆத்திகர் –
இவர்கள் சொல்லும் கடவுளர் கிடையாது – எந்த கடவுளும் கிடையாது என்கிறார்கள் நாத்திகர்கள் –
கண்ணுக்கு புலப்படாத ஒன்றின் மேல் எனக்கு கவலையில்லை, மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கி இன்பமாக இருக்க முயற்சிப்பதே சரி என்கிறார்கள் சில மார்க்கத்தினர் –
(எதைப்பற்றியும் சிந்தனை இல்லாதவர்களும் இங்கு உண்டு- ஆனால் அது குறித்து இங்கு விசாரணை வேண்டாம் அவர்களுடனும் இங்கு விசாரணை இல்லை)
இதில் எது உண்மை? எதை நம்புவது?
தான் பிறந்த குடும்பம் எந்த சமய, மத, மார்க்கத்தை தழுவி வருகிறதோ, அம்மார்க்கத்தின் கடவுளரை அல்லது நெறியை பின் பற்றி கடைசி வரை வருபவர்களின் சதவிதமே 97% மேல் உள்ளதை எவரும் மறுக்க முடி;யாது- அப்படித்தானே?
மிக குறைந்த சதவிகிதத்தனரே ஆத்திக எண்ணத்திலிருந்து நாத்திகத்திற்கும், நாத்திக எண்ணத்திலிருந்து ஆத்திக எண்ணத்திற்கும் மாறுகிறார்கள் –
அதே போல் மிகச் சில எண்ணிக்கையிலே மார்க்கம் விட்டு மார்க்கம் மாறுகிறார்கள் –
மேற்படியான மாற்றத்திற்கு கூட எந்தொரு விசாரணையும் அறிவு பூர்வமாக செய்து அதில் ஒரு முடிவை எடுத்து மாறினார்களா என்றால் அது கிடையாது- ஏதோ ஒரு செளகரித்திற்காக அல்லது பலனுக்காக அல்லது அங்குள்ள சடங்கின் மேல் விருப்பம் கொண்டோ அல்லது வேறு ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் மாறியுள்ளதை காணலாம் – அப்படித்தானே? –
நிற்க!
எல்லா சமய, மத, மார்க்கங்களும் நல்ல விசயங்களே வியம்புகிறது – அல்லது எந்தொரு மார்க்கமும் தீயதை செய் என கூறவில்லை என்போமா -மனிதர்களின் இச்சைகளை பூர்த்தி செய்வது, நல்லது நடக்க வேண்டுமானால் சடங்குகள் செய் எனச் சொல்வது – மனம் அடங்க பயிற்சி – காருண்யம், அன்பு,இரக்கம்,சாந்தம், என்பவைகளும் உள்ளது – இவைகள் குறித்து வியம்புவதில் மார்க்கங்களுக்குள் அளவு மாறுகிறது- மேலும், வெளிப்படுத்தப்பட்ட கடவுளை வணங்க வைக்கப் படுகிறோம் – மற்றவையில் நம்பிக்கை வைக்க கூடாது என்றும் கட்டளை உள்ளது –
நிற்க!
இதில் எது உண்மை? கண்டிப்பாக எல்லாமே உண்மையாக முடியாது – அப்படித்தானே ? அப்படியானால் எது உண்மை?
இதில் எழும் கேள்விகள் மூன்று –
1- கடவுள் உண்டா? இல்லையா?
2- கடவுள் உண்டு என்றால் உண்மை கடவுள் யார்?
3- கடவுள் இல்லை என்றால் மனிதனின் விசாரணை அறிவு எதை குறித்து?

இவையே இங்கு தீர்மானிக்கப்படவேண்டியது ! அப்படித்தானே !
ஆம் என்பவர்களுடன் விசாரணை மேலும் தொடர்வோம் –
1) கடவுள் உண்டா? இல்லையா?
எதை நினைத்து இங்கு “கடவுள்” என்கிறோம்? என்ற கேள்விக்கு முதலில் பதில் காணவேண்டும் – அப்படித்தானே?
– சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் உண்டா இல்லையா?
– பொதுவாக கடவுள் உண்டா இல்லையா?
இங்கு சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்ட கடவுள் உண்டா இல்லையா? என்ற விசாரணை தலைப்பு 2 ல் செய்து கொள்வோம்? கடவுள் உண்டா ? இல்லையா? என்ற பொதுவான ஒரு விசாரணை இது – குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஆத்திகமா? நாத்திகமா? என்று முடிவு செய்ய வேண்டும் –
(இங்கு நாம் விசாரணை செய்யும் போது நாம் பற்றுக்கொண்டுள்ள அல்லது நம்மை பற்றியுள்ள நம்பிக்கையை சற்று தள்ளி வைத்து, வள்ளுவர் குறளில் சொல்லிய அதாவது எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்ற அடிப்படையில் செல்கிறோம் என்று கவனத்தில் கொள்வோம் – அப்படிதானே – ஆம் என்பவர்களுடன் விசாரணை தொடர்கிறது)
ஆக, ஆத்திகமா? நாத்திகமா? என்று முடிவு செய்ய வேண்டும்-
ஆத்திகம் என்பது என்ன? அதன் விளக்கம் நாம் சமய, மத, மார்க்கங்களை கடந்து தான் காண வேண்டும் – இது முக்கியம் என கருதுகிறேன் – காரணம் நாம் கொண்டியிருக்கும் சமய,மத,மார்க்க கடவுளரை குறித்து தலைப்பு 2ல் காண உள்ளோம் – அதனால் தான் இங்கு பொதுவாக சமய, மத, மார்க்கங்களை கடந்த விசாரணை வேண்டும் என்றேன் –
ஆத்திகம் என்பது;
நாம் யார்? நம் நிலை என்ன? நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் ஆண்டவரின் நிலை என்ன? என்ற விசாரணையின் முடிவு செய்த ஒன்றில் நம்பிக்கை எனலாமா?
நாத்திகம் என்றால் என்ன?
மேற்படி செய்த விசாரணையின் முடிவை மறுப்பவர்கள் எனலாமா?
இந்த மேற்படி விளக்கத்தின் அடிப்படையிலேயே ஆத்திகர் என்றும் நாத்திகர் என்றும் உலகில் பெயரிட்டு அழைக்கிறார்கள் என்பதே 99% சதவித பொருளாக உள்ளது – அப்படித்தானே?
ஆனால்; மற்றொரு அறிவு விசாரணையில் ஆத்திகம், நாத்திகம் வேறு கோணத்தில் செல்கிறது – அது என்ன?
ஆத்திகம் என்பது; ஒரு சக்தி அல்லது பல சத்திகள் உள்ளது என்றும்; நாத்திகம் என்பது; அப்படி எதுவும் இல்லை என்று மறுப்பதும் என உள்ளது-
ஆக, பொதுவாக ஒரளவுக்கு நாம் முடிவு செய்வோம் – அது ஒன்றை விசாரித்து அல்லது ஏதேனும் வழியில் முடிவு செய்து மேற்படி விசாரித்ததில்,முடிவு செய்ததில் நம்பிக்கை வைப்பதை ஆத்திகம் என்றும், அதை மறுப்பது நாத்திகம் என்று கொள்வோம் இந்த விசாரணையில் –
ஆக, சக்தி ஒன்று அல்லது சத்திகள் பல இருந்து இந்த அண்டங்களை, உலகங்களை,உயிர்களை,பொருள்களை தோற்றுவித்து,வாழ்வித்து,குற்றம் நீக்குவித்து,பக்குவம் வருவித்து,,விளக்கம் செய்வித்து வருகிறது– அந்த சக்தியை, சத்தர்களை ஆண்டவர் என்றும் தெய்வங்கள் என்றும் சொல்கிறோம் –
அல்லது இப்படி காண்போம் –
நாம் உள்ளோம் நாம் இயங்குகிறோம்
நம்மை சுற்றி மற்றவை உள்ளது அவை இயங்குகிறது
இங்கு உள்ளதின் நிலை என்ன? நம்மை சுற்றி உள்ளதின் நிலை என்ன?
மொத்ததில் நாம், நம்மை சுற்றி உள்ளதை இயற்கை என்போமா?
இயற்கை உண்மை (உள்ளது) இயற்கை விளக்கம் (இயக்கம்) மீது நம்பிக்கை வைத்து அதையே கடவுளாக வணங்கும் கொள்கை இங்கு ஆத்திகம் என வைத்துக் கொள்வோம் –
அதனை அறிவது கடவுளின் நிலை அறிவது என்றும்;
அதன் நிலையறிவதில் நமக்கு இன்பம் கிடைப்பதாக உள்ளது அருள் என்றும்;
இயற்கையின் உண்மை அறிந்த பயனால் பல நன்மைகள், இன்பங்களை பெறுவதாக உள்ளது என்பதே; இங்கு ஆத்திகம் என்போம் –
இங்ஙனம் ஆத்திகத்திற்கு பொருள் இங்கு கொள்ளப்படுகிறது என்றால் இந்த ஆத்திக நம்பிக்கையில் என்ன தவறு? – என்ன பொய்? – என்ன அறியாமை? இதை எங்ஙனம் மறுக்கும் விசாராணை வரும்?
சக்தி என்றால் என்ன? இயக்கத்தின் காரணம் ஆகும்-
எதை இயக்குகிறது? உள்ளதை இயக்குகிறது –

இயற்கை என்றால் என்ன?
உள்ளதும் இயக்கமும் –
உள்ளதும் இயக்கமும் என்பது ஒன்றா இரண்டா? என்றால்;
இது மிகப்பெரிய விசாரணையில் காண வேண்டிய ஓர் உண்மையாகும் –
(அது தனி விசாரணையில் பார்ப்போம்)
ஆக,ஆண்டவர் யார்?
உள்ளதும் இயக்கமாகிய அவரே “ஆண்டவர்” என இங்கு இந்த விசாரணையில் முடிவு செய்யப்படுகிறது –
இதில் என்ன மறுப்பு? மறுப்பு இருந்தால் அது இந்த முடிவின் எதிராக உள்ள நாத்திகம் ஆகும் – அப்படித்தானே –

உள்ளது என்பதில் என்ன மறுப்பு? இயக்கம் என்பதில் என்ன மறுப்பு?
உள்ளது இயக்கமாகிய இயற்கையில் என்ன மறுப்பு?
ஆக, நாம் செய்த இந்த விசாரணையில்,
“ இயற்கை உண்மை, இயற்கை விளக்கமே” ஆண்டவர் என்கிறோம் –
இந்த ஆண்டவர் உண்டு என்று அறிந்து அறிவு பெற்றவர்களாக நாம் அனைவருமே உள்ளோம் – அப்படித்தானே – ஆக, இந்த கடவுள் கொள்கையில் நாத்திகம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம் – இங்ஙனமாக கேள்வி ஒன்றுக்கு ஆண்டவர் உண்டு என்ற பதில் காணப்படுகிறது- இங்கு வெளிப்பட்ட “ உண்மை ஆண்டவராகிய இயற்கை உண்மை,விளக்கம்” குறித்து நல்ல விசாரணை செய்வதே மனித வாழ்வின் லட்சியம் என்றும் அதுவே உண்மையறிவு எனவும் இங்கு முடிவு எட்டப்படுகிறது –
இல்லை – மறுப்பு உள்ளது என்ற சொல்லவும் உரிமை உண்டு –
அவர்கள் உரிமையை மதிக்கிறோம் – மேலும் தொடரும் இவ்விசாரணை அவர்களுடன் இல்லை –
கேள்வி 2 மற்றும் 3 ற்கான விசாரணை நம் அறிவு நம்பிக்கை ஒத்தவர்களுடன் தொடரும் —

நன்றி அன்புடன் ஏபிஜெ அருள்

unmai

Channai,Tamilnadu,India