November 18, 2024
tamil katturai APJ arul

மரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

      

 

மரணமில்லா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் இப்பொழுது எங்கே??? வள்ளலாரையோ, ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே- ஏன் ???

தைப்பூசம் 2017 ல் திருமதி ஏபிஜெ அருள் @ இராமலெட்சுமி வெளியிட்ட கட்டுரை;

மதிப்பிற்குரிய பெரியவர்கள், சான்றோர்கள் அன்பிற்குரிய சகோதர சகோதரிகள், மற்றும் அனைவருக்கும் எனது மற்றும் மதுரை கருணை சபை சாலை சார்பாக வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் –

திருவருட்பிரகாச வள்ளலார், இடைவிடாது நல்ல விசாரணை செய்து, உண்மை கடவுளை கண்டு, அருள் பெற்று, “மரணமில்லா பெருவாழ்வு” பெற்றார்கள் – தான் பெற்ற இந்த பேரின்பவாழ்வை எல்லோரும் பெறும் பொருட்டு ஒரு மார்க்கத்தை நிறுவினார்கள் – அந்த மார்க்கத்தின் பெயர் “சுத்த சன்மார்க்கம்” – என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம் – என் மார்க்கத்தில் “சாகா கல்வியை” தவிர வேறு ஒன்றுமில்லை – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார் நம் வள்ளலார்

இந்த உண்மை எல்லோருக்கு தெரியும் – அப்படித்தானே –

எந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்? சொல்லுங்கள் –

  • ஆண்டவரை ஜோதி சொரூபமாக வள்ளலார் தரிசித்தார்கள்
  • நமது வள்ளலார் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார்கள் 
  • கடவுளின் அருளால் அவர்தம் தேகம் “ஒளிவடிவமாக” மாறியது –

அன்பர்களே !
வள்ளலார் தனக்கு ஒளி வடிவம் கிடைத்த பின்பும், நம்மோடு நம் பார்வையில் தெரியும் படியாக இரண்டரை வருட காலமாக இங்கு இருந்து வந்தார்கள் – எதற்காக?

தனக்கு கிடைத்த இந்த பேரின்ப பெருவாழ்வு, எல்லோரும் பெறவேண்டும் என்ற ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையில் தெரிவிப்பதற்காகவே – தான் சென்ற வழியை மற்றும் கடைப்பிடித்த வழிபாட்டை, அப்படியே உலகத்தார்க்கு உள்ளது படியாக உரைத்தார்கள் –

ஆனால் நடந்தது என்ன? இதோ வள்ளலார் அவர்களே சொல்கிறார்கள் கேளுங்கள் –

“உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை”

எப்படி நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்?
ஏன் அவர்களை சொல்வானேன்?
இன்று நாமும் வள்ளலார் சொல்ல வந்த உண்மையை தெரிந்துக் கொண்டோமா?
இல்லை என்பதே உண்மை- தெரிந்து கொண்டியிருந்தால் நமக்கு ஏது அவத்தைகள் வரும்? பிணி, மூப்பு நாம் பெற்றுக் கொண்டியிருக்கிறோம் –

இன்று நான் தெரிந்து கொள்ள ஆசை கொண்டுள்ளேன் – நீங்கள்?

நாம் கண்டிப்பாக நம் வள்ளலார் சொன்ன உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? பதில் சொல்லுங்கள் –

மரணத்தை தவிர்த்து கொண்ட நம் வள்ளலார் இப்போது எங்கே? திருவருட்பிரகாச வள்ளலாரை இப்பொழுது இங்கே, நீங்கள் காண ஆசை கொண்டு உள்ளீர்களா? இல்லையா?

ஆம் என ஆசை உள்ளவர்கள், சற்று நிமிந்து உட்காருங்கள் –

திருமந்திரத்தை சொல்லி நம் வள்ளலாரை அழைப்போம் –

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருவருட்பிரகாச வள்ளலாரே ! எங்கள் ஆசானே !
உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட சுத்த ஞானியே !
ஆண்டவரின் அருளை பெற்ற வள்ளலாரே!
மரணத்தை தவிர்த்து கொண்ட சுத்த சன்மார்க்கியே !

நீங்கள் இன்று வெளிப்பட வேண்டும் – இது சத்தியம் – இது சத்தியம் –

உங்களை காண ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –
நீங்கள் சொல்லும் உண்மையை தெரிந்து கொள்ள தயாராக உள்ளோம் – இது உண்மை –

ஆண்டவர் உங்களுக்கு உரைத்த அந்த நான்கு மரபுகளை தெரிந்து கொள்ள ஆசை உள்ளவர்களாக உள்ளோம் –

எங்கள் அய்யாவே ! எங்கள் ஆசானே !

எங்களை மன்னியுங்கள் –

இதுகாறும் வீண்காலம் கழித்து கொண்டியிருந்த எங்களை, மன்னித்து, உண்மை கடவுளின் உண்மை குறித்து எங்களுக்கு அறிவியுங்கள் –

இதோ இடைவிடாது நீங்கள் சொல்லிய வண்ணம் எங்கள் அறிவு ஒழுக்கம் ஒத்தவர்களுடன் நல்ல விசாரணைக்கு தயாராகி விட்டோம் – திருவருட்பிரகாச வள்ளலாரே !
எங்களுடனிருந்து, எங்களுக்கு சத்திய அறிவு வெளிப்பட உதவிட வேணுமாய் பிரார்த்திக்கின்றோம் –

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அன்பர்களே !
உண்மை நோக்கி நல்ல விசாரணை செய்வோம் –

உண்மை கடவுளின் சொரூபத்தை கண்ட நம் வள்ளலார்க்கு இன்பமும், வியப்பும் ஏற்பட்டது-

“இன்பம்” என்பது; கடவுளை கண்டது
“வியப்பு” எதனால் ஏற்பட்டது ?

இப்போது, தான் கண்டு கொண்டியிருக்கும் கடவுள்
“அருட்பெருஞ்ஜோதியாகி தனிப்பெருங்கருணை கடவுள்” இதுவரை உலகில் வெளிப்பட்டிருந்த சமய, மத, மார்க்கங்களில் சொல்லப்பட்டியிருக்கவில்லை – என்பதே வள்ளலாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி –

அன்பர்களே, இது குறித்து 12-04-1871 ல் ஒரு கடிதத்தில் அறிவித்துள்ளார் வள்ளலார் –

அன்பர்களே ! நாம் இன்று இப்பொழுதே வள்ளலாரை காண வேண்டுமானால் நாம் செய்ய வேண்டியது “ஒன்றே ஒன்று” தான்

அது அவர் சொன்ன உண்மையை
தெரிந்து, அறிந்து, அனுபவிக்க வேண்டும் –
அவர் கண்ட கடவுளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் –

வள்ளலார் சொன்னபடி வழிபாடு செய்ய வேண்டும் –

நமக்கு சாதனம் ”கருணை” மட்டுமே !

அன்பர்களே !
– இங்கு இருக்கும் நம் எல்லோரிடமும் கருணை உள்ளது-
– கருணை ஒன்றையே இதுநாள் வரை கொண்டு பிரார்த்திக்கிறோம்- அப்படிதானே !

ஆனால், வள்ளலாரையோ ஆண்டவரையோ இன்னும் நம்மால் காண முடியவில்லையே ?
அது ஏன்?
அதற்கு காரணம் என்ன தெரியுமா அன்பர்களே !
நம்மிடம் கருணை உள்ளது – ஆனால்;
நம் கருணை விருத்தியாகமலே உள்ளதை முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் –
அதற்கு என்ன காரணம் ?

அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்வது நம்மிடம் உள்ள “ஆசாரங்களே” காரணம் என்கிறார் வள்ளலார் – வள்ளலார் நமக்கு சுட்டி காட்டியுள்ள ஆசாரங்கள் “13” ஆகும் –
இவையை விட்டொழித்தே ஆக வேண்டும் என்கிறார்கள்-

அன்பர்களே ! உங்களிடம் கேட்கிறேன் –

சத்திய ஞான சபைக்குள் எல்லோரும் உள்ளே சென்று விட முடியாது – உள்ளே புகுதல் வேண்டுமானால் நம்மிடம் என்ன தகுதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்?
“கொலை புலை தவிர்த்தவர்களாக” இருக்க வேண்டும் என்று வள்ளலார் கட்டளையிட்டுள்ளார்கள் – அப்படிதானே?

ஆக, நம்மிடம் அடிப்படை தகுதியாக ஜீவகாருண்யம் உள்ளது – ஜீவகாருண்யம் உள்ளவர்களே ஞான சபைக்குள் செல்ல முடியும்-
அன்பர்களே !
உள்ளே சென்ற பிறகு எது குறித்து விசாரணை செய்ய வேண்டும்? அதே ஜீவகாருண்யம் குறித்தா? இல்லைஆண்டவரின் நிலை காணவே நாம் நன்முயற்சி செய்ய வேண்டும்அதற்கு, “உள்ளழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க” வேண்டும் என்கிறார் நம் வள்ளலார் –
இதற்கு பெயர் ”விசார சங்கல்பம்” ஆகும் –

இதுவே, “வள்ளலார் சொல்லிய உண்மை” ஆகும்-
என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம்என் மார்க்கம் அறிவு மார்க்கம்என் மார்க்கத்தில் அக அனுபவே உண்மைஎன்கிறார்கள் –

இப்பொழுது சொல்லுங்கள்;
“நாம் வள்ளலாரை காண வேண்டுமானால்,
::::::அவர் நம்மிடம் சொல்ல வந்ததை தெரிந்து கொண்டோம் என்று அவரிடம் தெரிவிக்க வேண்டும்::::::

இங்ஙனம் தெரிவிப்பவர்க்கு வள்ளலார் வெளிப்படுவார்
இது சத்தியம் – இது சத்தியம் – இது சத்தியம் –

மீண்டும் ஒரு முறை வள்ளலார் சொல்லிய உண்மை குறித்து காண்போம் –

ஒன்று;
கருணை விருத்தியாகாமல் செய்யும் ஆசாரங்களாகிய சாதி,குலம்,ஆசிரமம்,லோகம்,தேசம்,கிரியை,சமயம்,மதம்,மரபு, கலாசாரம்,சாதனம்,அந்தாசாரம்,சாஸ்திரம் முதலிய ஆசாரங்கள் நம்மிடமிருந்து ஒழிந்து போக வேண்டும் –

இரண்டாவது;
ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்ய வேண்டும் –

மூன்றாவது;
அத்தெய்வத்தை நினைந்தும் உணர்ந்தும்
நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக இடைவிடாது விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டும் என்கிற விசார சங்கல்பத்துடன் முயற்சியுடனிருத்தல் வேண்டும்-

நமது இந்த நன்முயற்சி உண்மையாக தூய்மையாக இருக்குமே யானால் திருவருட்பிரகாச வள்ளலார் நேரில் வந்து நமக்கு துணை புரிவது சத்தியம் – சத்தியம் – சத்தியம் என நம்புதல் வேண்டும் –
நான் “சுத்த சன்மார்க்க நெறி ஒன்றையே” சார்ந்து,
குரோதம் காமத்தை ஞான அறிவினால் தடுத்து கொண்டு, ஆசாரத்தை ஒழித்து தலைவனையே தொழுது கொண்டியிருக்கிறேன்
— என்று நாம் சொல்வோமானால் இன்றே இப்பொழுதே சபை முன்பு அமருங்கள் ஆண்டவர் உண்மை தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு துணை புரிய திருஅருட்பிரகாச வள்ளலாரே நீங்கள் வரவேண்டும் என அடம் பிடித்து உட்காருவோம் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து வேண்டுவோம் –
இது உண்மையாயின் நான் பெறுவேன் – பெறுகின்றேன் – பெற்றேன் –
என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை – பெறுவீர்கள் – பெறுகின்றீர்கள் – பெற்றீர்கள் –
அஞ்ச வேண்டாம் –

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

—-திருமதி ஏபிஜெ அருள்- கருணை சபை சாலை – 09-02-2017[தைபூசம் வடலூர்]

 

Top of Form

unmai

Channai,Tamilnadu,India