January 22, 2025
tamil katturai APJ arul

தூங்குபவரை எழுப்பி விடலாம். தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது

ஊர் பக்கத்திலிருந்த வள்ளலார் சபைக்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒருவரிடம் வள்ளலார் குறித்து விளக்கும் படி எனது தோழி கேட்டுக் கொண்டாள். அவரிடம் நான் பேச ஆரம்பித்தேன். அய்யா வள்ளலார் சமய பற்றை கைவிட்டுவிட்டார். உடனே அவர் என்னத்தை விட்டுவிட்டார்? அதற்கு நான்: ஆரம்ப காலத்திலிருந்த சமய பற்றை என்றேன். உடனே அவர்: என்ன சமயப் பற்றை? அய்யா… என்றேன். அதற்கு என்ன அய்யா?என்றார். அதாவது…. என்றேன். என்ன அதாவது ? என்றார். எனது தோழியை பார்த்தேன். அப்பொழது தான் புரிந்தது நம்மை மாட்ட வைத்துள்ளார்கள் என்று.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற பெரியோரின் வாக்கு ஞாபகத்துக்கு வந்தது.
நான் அவரிடம் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தேன். அய்யா, வள்ளலார் ஆரம்ப காலத்தில் சைவ சமயத்தில் பற்றுக்கொண்டு இருந்தார்கள். சமயப் பற்றுடன் இருந்தாலும், எந்தொரு சமய ஆச்சாரத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவே இல்லை. காரணம் தனக்கு வெளிப்படுத்திய,/காட்டிய கடவுள் நிலையையும் கடந்து ஓர் உண்மை இருப்பதாக உணர்ந்தார்கள். ஓர் புதிய வழியில் இது குறித்து விசாரணை செய்ய தொடங்கி விட்டார். இடைவிடாத நன்முயற்சியில் இறங்கிய அவருக்கு ஆண்டவர் உண்மையை, வெட்ட வெளிச்சமாக அவருக்கு காட்டினார். தான் சென்ற வழியில் எல்லாரும் சென்று தன் போல் எல்லாரும் பயன் பெறுதல் பொருட்டு அதற்கு சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு வெளிப்படுத்தினார்கள். அவ்வழி தனி வழி புதிய வழியாக மட்டுமில்லை உணமை பொது வழியாகவும் உள்ளது.
திருவருட்பாவில் உள்ள சமய ஸ்தோத்திரப்பாடல்களில் லட்சியம் வையாதீர்கள் என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
சமயத்தில் பற்று வைத்திருந்த காலத்திலிருந்தே உண்மைக் கடவுளின் நிலை குறித்து விசாரணையை தொடங்கினாலும் நமக்கு உலகிற்கு வெளிப்படையாக 12-04-1871 ல் ஓர் அறிவிப்பு மூலம் பிரகடனம் செய்தார்கள். (அறிவிப்பை வாசித்து உணர்க.) உண்மைக் கடவுளின் நிலை குறித்தே எல்லா சமய,மத,மார்க்கங்களும் சொல்ல/காண/வெளிப்படுத்த தான் முயல்கின்றன. எல்லா ஞானிகளும், யோகிகளும், தெய்வங்களும், கர்த்தரும், தங்கள், தங்கள் அனுபவங்களை குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் நம் வள்ளலார் கண்டு வெளிப்படுத்தினார்கள். எந்தொரு சமய,மத வழியை,ஆச்சாரங்களை பின் பற்றாமல் ஓர் உண்மை பொது வழியில் (சுத்த சன்மார்க்க வழி) தான் கடவுள் உண்மையை கண்டார்கள் அருள் பெற்றார்கள்.
அவரை மதித்து அவர் அருகில் அமர்ந்து பணிவுடன் சமர்பித்துக்கொண்டிருந்த என்னை குறிக்கிட்டு: “ அப்படின்னா என் கேள்விகளுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்” என்றார்.
கேள்வி 1. வள்ளலார் விபூதி பூசியிருந்தாரா இல்லையா? மற்றவர்களுக்கு கொடுத்து நோய் போக்கினாரா இல்லையா?
கேள்வி 2. வள்ளலார் சிவம், சிவ சிவ என்பது சைவசமய கடவுள் இல்லாமல் வேறு ஏது?
கேள்வி 3. நடராஜர் என்கிறாரே!
கேள்வி 4. திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?
கேள்வி 5. சிவகாமவல்லி என்பது யாரை?
கேள்வி 6: கடித்தில் சிதம்பரம் என்கிறாரே?
கேள்வி 7: சமயதலங்களுக்கு சென்று வழிப்பட்டாரா இல்லையா?
கேள்வி 8: கல்பட்டு அய்யா, வேலாயுத முதலியார் மற்றும் ரத்ன ஓதுவார் இவர்களின் அறிக்கைகள் இப்படி உள்ளதே?,
கேள்வி 9: சத்திய ஞாசபையில் சபாபதி சிவாச்சாரியார் முதல் பல நூற்றாண்டுகள் வரை வழிபாடுகள் ஆகமவிதிப்படி தானே நடந்த்து.
கேள்வி 10. வள்ளலார் சமயக்கடவுள்கள்,(கணபதி,முருகன், பரம், பைரவர் உட்பட) பற்றி சொல்லியுள்ளார்களே? தைப்பூசத்தை தானே தேர்ந்து எடுத்துள்ளார்.?
அய்யா உங்கள் கேள்விகளுக்கு என்னால் என அனுபவத்தில் பதில் தர இயலாது
அய்யாவின் சத்திய வாக்கியத்தை மற்றும் அகராதி கொண்டுதான் என்னால் பதில் தருவேன் என்றேன்.நான் பதில் அளித்து விட்டால் நான் கேட்பதை தரவேண்டும் என்றேன். என்ன வேண்டும் என்றார். பதில் கொடுத்து பெற்றுக்கொள்கிறேன் என்றேன்.
ம்ம்ம்ம்.. பதில் சொல்லு.. பதில் சொல்லு…என்று பக்கத்திலிருந்த பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து குடித்து விட்டு எனக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தார். வாங்கி குடித்து விட்டு நன்றி கூறினேன். இருக்கட்டும் இருக்கட்டும் பதில் சொல்லு… என்றார்.
கேள்வி 1. வள்ளலார் விபூதி பூசியிருந்தாரா இல்லையா? மற்றவர்களுக்கு கொடுத்து நோய் போக்கினாரா இல்லையா?
பதில் : வள்ளலார் விபூதி அணிந்திருந்தார்கள். மற்றவர்களுக்கும் விபூதி கொடுத்தார்கள். மறுக்கவில்லை.
கருங்குழியிலிருந்து வடலூர்க்கு சென்று உரைகிறார்கள். உண்மை கடவுள் குறித்து விசாரணையில் எப்போதிலிருந்து இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக அன்பர்கள் உணர முடியாவிட்டாலும், வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் சென்று உரையத்தொடங்கிய காலத்திலிருந்து (1870 லிருந்து) வள்ளலார் தன்னை முழுமையாக சமய பற்றிலிருந்து விலக்கிக் கொள்கிறார்கள். விபூதி அணியவில்லை. கொடுக்கவும் இல்லை. மிகத்தெளிவாக 12-04-1871 ல் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். நீங்களே படியுங்கள் என்று உரை நடைப்பகுதி பக்கம் 547 யை எடுத்து கொடுத்தேன். அதன் பின்பு 22-10-1874ல் ஆற்றிய மகாபேருபதேசத்தை எடுத்து கொடுத்தேன். கைப்பட எழுதிய விண்ணப்பத்தினை (பக்கம் 556) (சமயப்பற்றை விட்ட செய்தியை) எடுத்து கொடுத்தேன். பாடல்கள் எடுத்துக் கொடுத்தேன்.
சரி….சரி…. அடுத்த கேள்விக்கு பதில் சொல்லு…
கேள்வி 2. வள்ளலார் சிவம், சிவ சிவ என்பது சைவசமய கடவுள் இல்லாமல் வேறு ஏது?
சென்னைப் பல்கலைகழகம் வெளியிட்ட தமிழ் அகராதி வால்யூம்/பக்கம் எடுத்து காண்பித்தேன்.
சிவம் : நன்மை என்றும் சித்துருவாகி சுயம் பிரகாசமாய் நிற்கும் சிவலொரூபம் (திரு 51.1)
தூய அறிவுருவாக இருக்கும் இறைவன், கடவுள் என்று பொருள் என இருந்தது.
சிவ சிவ என்பதற்கு ”ஓர் இரக்க குறிப்பு”.
சிவஞானம் என்பதற்கு பதியுணர்வு என்கிறது அகராதிகள்.
அய்யா கேள்வி 3க்கு செல்லவா?
ம்ம்ம்..ம்ம்.. போ..போ..
கேள்வி 3,4,5 & 6 நடராஜர் என்கிறாரே! திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?. சிவகாமவல்லி என்பது யாரை? கடித்தில் சிதம்பரம் என்கிறாரே?
சமயத்தார்கள் ” வாயு பகவான் “ என்றதினால் வாயு என்றச்சொல்லை எவரும் பயன்படுத்த கூடாது என்பதை சொல்லமுடியாதோ அது போல் நடராஜரும். நடம் என்பது கூத்து நடமாடுதல் ராஜர் என்பது மிகச்சிறந்தவன். நடமாடுதல் என்பது பரவியிருத்தல். ஆக, எங்கும் பரவியிருந்து எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டே ஒருமைத் திரு நடச்செய்கையை செய்யும் மிகச்சிறந்தவனை “ நடராஜர்’ என்று திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் குறிக்காமல் எப்படி வேறு மாதிரி குறிப்பிட முடியும்? நீங்களே சொல்லுங்களேன் அய்யா?
கேள்வி 4. திருசிற்றம்பலம் என்பது சைவசமய வார்த்தை தானே?
மேலே சொன்னமாதிரி தான். திருச்சிற்றம்பலம் என்பது “ சிற்சபை”. சிற்சபை என்ன என்பதை பக்கம் 346 உட்பட பலப்பாடல்களில் வள்ளலார் விளக்குகிறார்கள். நம் சரவணானந்தா அய்யா அவர்கள் சொல்கிறார்கள்; சிதம்பரம் என்றால், சித் + அம்பரம் = ஞான ஆகாசம் நம் பதியின், அருள் ஞானம் விளங்கும் அக ஆகாசமே சுட்டப்படுவதாம்.
சிவத்தின் ஆற்றலை அல்லது சிவத்தின் தன்மையை உணரும் ஆற்றலை சிவகாமி ஆகும். வல்லி என்பது கல்யாணம் எனப்படும். சிவகாம வல்லி மணவாளா. சமய ஸ்தோத்திரப்பாடல்களில் பயன்படுத்திய சிவகாம வல்லி வார்த்தையையே வேறுவகையாக பொருள் கொண்டிருப்பதை தக்க ஆசிரியர்க் கொண்டு அறியலாம். அல்லது நாமே ஊன்றி பாடும் போது அறியலாம். பொது பெயர்களையே வல்லவர்கள் கற்பனைகளுக்கும், த்த்துவங்களுக்கு கொடுத்து, உண்மையை மறைத்துள்ளார்கள் என்கிறார் வள்ளலார்.
திண்டுக்கள் தயவு அய்யா சொல்கிறார்கள்;.
“…புனைப்பெயர்கள் எல்லாம் பொருள் தெரிந்தே ஆக்கப்பட வேண்டும். முன்னோர் கற்பித்தனவாகக் கொண்டு ஓதல் சிறப்பன்றாம்….”” .
கேள்வி 7: சமயதலங்களுக்கு சென்று வழிப்பட்டாரா இல்லையா?
ஆரம்ப காலங்களில் சமய தலங்களுக்கு சென்றார்கள். அத்தெய்வங்களை பற்றி ஸ்தோத்திரங்கள் பல பாடியுள்ளார்கள்
சுத்தசன்மார்க்க வழியில் செல்லும் வரை இங்ஙனம் நடைப்பெற்றது. அதன்பின்பு அதாவது 1870 க்கு பின்பு எந்தொரு தலங்களுக்கும் செல்லவே இல்லை. சமய ஸ்தோத்திரம் எதுவும் பாடவில்லை.
கேள்வி 8: கல்பட்டு அய்யா, வேலாயுத முதலியார் மற்றும் ரத்ன ஓதுவார் இவர்களின் அறிக்கைகள் இப்படி உள்ளதே?,
திருவருட்பிராகச வள்ளலார் என்னச் சொன்னார்கள்? எனப் பார்க்க வேண்டுமே அன்றி அருகில் இருந்தவர்களின் சொல்கள், செய்கைகள் வள்ளலாரின் சொல்கள் செய்கைகள் ஆகாது. இவர்கள் கூட வள்ளலாரின் முடிபான நெறியை அறிந்தவர்களாக இல்லை என்பதே உண்மை. அதற்கு வள்ளலாரின் சத்திய வாக்கியமே சான்று: “உண்மைச் சொல்ல வந்தனனே என்றுச் சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
கேள்வி 9: சத்திய ஞாசபையில் சபாபதி சிவாச்சாரியார் முதல் பல நூற்றாண்டுகள் வரை வழிபாடுகள் ஆகமவிதிப்படி தானே நடந்த்து.
இன்று இவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. குத்து விளக்கு, லிங்கம், சிலைகள், பூசை கருவிகள், எல்லாம், அகற்றப்பட்டுவிட்டது நிலையத்தார்களால். இதுவரை வள்ளலாரின் நெறி படி நிலையம் நடைப்பெறவில்லை என்பதை அற நிலையத்துறையே ஒத்துக்கொண்டது. ஆணயையும் பிறப்பித்துள்ளார்கள்.
கேள்வி 10. வள்ளலார் சமயக்கடவுள்கள்,(கணபதி,முருகன், பரம், பைரவர் உட்பட) பற்றி சொல்லியுள்ளார்களே? தைப்பூசத்தை தானே தேர்ந்து எடுத்துள்ளார்.?
அய்யா அவைகள் சிறு குழந்தைக்கு கூட புரியும் படியுள்ளது. எல்லாமே தத்துவங்களே என்கிறார்கள். த்த்துவ சம்மாரமே என்கிறார்கள். உண்மைக் கடவுளுக்கு மனிதன் போல் மூக்கு, வாய் கை, கால்கள் கிடையாது என்று. இவைகளை படித்தாலே தெரிந்துவிடும். தை மாசம் குறிப்பிட்ட சமயத்தார்களூக்கு உரியது போல் சொல்கீறீர்கள். இயற்கையின் உண்மைகள் எல்லா உயிர்களுக்குமே சொந்தம். அதன் விளக்கங்கள், சிறப்புகள், எவர் அறிந்தாலும் எல்லோருக்குமே. முடிபாக சொல்ல வேண்டுமானால் முடிபான உண்மை பொது நெறி அறிய 1871 க்கு பின் உள்ளவைகளே போதுமானது ஆகும். எல்லாம் தெரிந்து, அறிந்து, அனுபவிக்க இவைகளே போதுமானது ஆகும். வள்ளலாரின் குரு ஆண்டவரே! நமக்கும் குரு ஆண்டவரே! இந்த உண்மை அறிய, அனுபவிக்க என்றும் விலகாது நமக்கு துணை நிற்பவர் நம் திருவருட்பிரகாச வள்ளலார்.
பணிவுடன் சொல்லி நிமிர்ந்தேன். கைகட்டி வாய் பொத்தி குறிப்பால் வரையப்பட்ட வள்ளலாரின் படம் முன்பு நின்றிருந்தார்.
சபையின் ஸ்தாபகர் சத்தமாக கூறினார்: “ சாப்பாடு ரெடி வாருங்கள் “
எல்லோருமே விரைவாக எழுந்திருந்தோம். வேற்றுமையின்றி ஒத்துவர்களாக பக்கம் பக்கம் அமர்ந்திருந்தோம். பச்சை விரிக்கப்பட்ட்து. வெண்மை போடப்பட்ட்து. மஞ்சள் ஊற்றப்பட்ட்து. அனைத்து கலரும் வைக்கப்பட்ட்து. கண் ஒளிப்பெற்றது. மனம் மகிழ்ந்தது. ஜீவன் திருப்தி கொண்டது. ஆனால் ஆன்ம அறிவு (உண்மை அறிய )வெளிப்பட்டமாதிரி தெரியவில்லை எனக்கு. எனக்கு மட்டுமே.
நல்ல விசாரணைக்கு வித்திட்ட அவரை தேடினேன். பிசியாக இருந்தைக் கண்டேன். நானும் பிசியானேன். (இன்சொல்லாடல் வேண்டும்).அவரின் ஆதரவை பரிசாக கேட்க காத்திருப்பேன். நன்றி. என்றும் உங்களின் ஆதரவில் ஏபிஜெ அருள்..

unmai

Channai,Tamilnadu,India