November 17, 2024
tamil katturai APJ arul

சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி

சாதி, சமயம், மதம் பொய் என்ற வள்ளலாரின் நெறி எங்ஙனம் எல்லோருக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது ?— Apj Arul
அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் – இது ஒரு நல்ல விசாரணையாகவே கருதுகிறேன் – இவ்விசாரணை நம் பகுதியிலேயே செய்யப்படுகிறது – அன்பர்களே !
உலகில் எத்தனையோ மார்க்கங்கள் (சமயங்கள்/மதங்கள்) உள்ளன – அதனை நிறுவியவர்கள் ”மெய்யறிவு உடையவர்கள்” என்கிறார் வள்ளலார் –மேற்படியான சமய, மத நூல்களின் சரத்தை நம் அறிவில் அறிய வேண்டின் நாம் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என நமக்கு தெரியாது – அவ்வளவு பெரிய விசயம் – திருமூலர், மாணிக்கவாசகர், பெரியாழ்வார், தாயுமானவர், என இங்கும், – மகான் தேவர் இயேசு, – மகான் இறை தூதர் நபிகள் நாயகம் ஸல் – புத்தர் – மகாவீர் – குருநானக் இன்னும் பல கடவுளர், தேவர், யோகிகள், ஞானிகள் உள்ளனர் –
நமது பிறப்பிடம் அதாவது பெற்றோர் சார்ந்த சமய கொள்கையை தான் நாம் ஏற்று வாழ்கிறோம் – மிக மிக குறைந்த அளவு சதவீத மனிதர்கள் தான் தனது ஆரம்ப சமய மத கோட்பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள் – அம்மாற்றத்திற்கும் பல காரணங்கள் உள்ளது – நிற்க !
அன்பர்களே !
மேற்படி சமய, மத, மார்க்கங்களை நிறுவிய, கடவுளர், தெய்வம், தலைவர் ஞானி,யோகி, கர்த்தர் ஆகிய இவர்கள் மீது மனிதர் அனைவருக்கும் பக்தி உண்டு – பக்தி இல்லாவிடிலும் மதிப்பு, மரியாதை உண்டு – ஏனென்றால் எல்லோருமே நமக்கு மேல் நம்மை அனுஸ்டிக்கும் கடவுள் குறித்தே சொல்கிறார்கள் – கடவுள் இவரே, அவர் இங்ஙனமாக உள்ளார் என வெளிப்படுத்துவதில் தான் வேறுபடுகிறார்கள் –
அதே போல் மேற்படி மார்க்கங்களில் பற்று ஏற்படுவதற்கு உள்ள பல வகை வழிபாடு சாதனங்களிலும் இவைகள் மாறுபாடு கொண்டுள்ளது – வெளிப்படுத்திய வழியில் முழு நம்பிக்கையை ஏற்படுத்தி, கருத்தில் ஆழமாக பதிய வைக்கும் அளவுக்கு, கலைகள் பல சொல்லப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் நாம் வைக்கப்பட்டுள்ளோம் அல்லது நமக்கு ஓதப்படுகிறது
அன்பர்களே !
நாம் பற்று வைத்திருக்கும் சமய, மத, கோட்பாடு / வழிபாடு நமது அன்றாட நடவடிக்கையில் ஒன்றாக அமைந்து விட்டது – அதன் கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே வழிபாடு, பழக்க வழக்கங்கள், நம் மனதில் பற்றி விடுகிறது – எந்தொரு காலத்திலும், எதற்காகவும் நாம் வைத்திருக்கும் பற்றை யாரிடமும் விட்டு கொடுக்காத அளவு கருத்தில் பதிந்து விடுகிறது – நாமும் நம் பற்றை விசாரணைக்கு உட்படுத்தியதும் இல்லை –
ஆம் அன்பர்களே ! நாம் வணங்கும் கடவுள், தலைவர்கள் குறித்து ஏன் விசாரணை செய்ய வேண்டும் ? 💡  சொல்லப் பட்டவை அனைத்தும் தலைவர்களும் நல்ல விசயத்தை தானே சொல்லியுள்ளார்கள் ! அதனால் தான் நாம் அவை குறித்து விசாரம் செய்யவில்லை – ஆச்சாரங்கள் மீதும் எந்தொரு விசாரமும் கிடையாது – ஆச்சாரங்கள் அனைத்தும் கட்டுபாட்டு விதிகளை பெற்றுள்ளது –இந்த நேரத்தில், இந்த இடத்தில், இங்ஙனமாக மட்டிலும் சடங்குகள் செய்ய சொல்லும் கட்டுபாட்டு விதியை பெற்றுள்ளோம்–
நீங்களே சொல்லுங்கள் ? ➡  நாம் கொண்டியிருக்கும் கொள்கையின் உண்மை என்ன ? நம் நிலை என்ன ? நம்மை அனுஸ்டிக்கும் கடவுளின் நிலை என்ன? இப்படியாகவா நாம் தினமும் வழிப்பாட்டில் துதித்து, நினைந்து, உணர்கின்றோம்? இல்லையே!

நமக்கு இவரே கடவுள் ? அவரை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும் – தியானத்தில் நமது கடவுளையே தியானிக்கிறோம் – அவ்வளவு தான் – மற்ற எந்தொரு விசாரத்திற்கும் வழி வகை இல்லை –ஆக, கடவுள் குறித்தே எல்லா சமய, மதங்கள் போதித்தாலும் மேற்படி கட்டுப்பாட்டு ஆச்சார அடிப்படையிலேயே நமக்குள் பற்றும், மற்ற சமய, மத, மார்க்கங்களிலிருந்தும் வேறுப்பட்டு, கொள்கை அளவில் எதிராக நிற்கின்றோம் 😳 
நமது இச்சைகளை நிறைவேற்றுவதற்கும் அன்றாட தேவைகளுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இவை போன்றவைகளுக்காக மட்டும் நமக்குள் / மனிதர்களுக்குள் ஒத்து போய் புலனிச்சை செய்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம் – ஆனால் மேற்படி கடவுள் கொள்கையில் சமரசமோ அல்லது இணைதலோ ஏற்படவில்லை காரணம் ஒவ்வொன்றிலும் உள்ள கட்டுபாட்டு ஆச்சாரங்களே ஆகும் –
இந்த உண்மையை தான் வள்ளலார் கண்டு வெளிப்படுத்துகிறார்கள்கடவுளின் அருள் பெற கருணை வேண்டும் என்ற வாசகத்தை எல்லா சமய,மத,மார்க்கங்கள் பெற்றிருந்தாலும், அதில் எந்தொரு உரிமையையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை – முடியாது – ஏனென்றால் ஒவ்வொரு மார்க்கத்திலும் இருக்கும் ஆச்சார கட்டுப்பாடுகள் நம்மை நம் அறிவை கொண்டு கடவுளின் நிலையை விசாரிக்க அனுமதிக்கவில்லை –
இவரே கடவுள் இதுவே வழிபாடு இதுவே முடிவு என்கிறது நாம் சார்ந்திருக்கும் மார்க்கங்கள் யாவும் – அதை அங்ஙனமே எவ்வித விசாரமின்றி ஒத்துக் கொண்டு அதன் வழி நடக்கிறோம் – அங்ஙனம் அவ்வழியில் நடக்கும் போது அந்த சமய,மத,மார்க்க தலைவர்களால், ஞானிகளால், யோகிகளால், கடவுளரால், தேவரால், கர்த்தர்களால் பெறப்பட்ட பயனையே அவ்வழி சார்ந்தோர் பெறமுடியுமே அன்றி அதற்கு மேல் பெறமுடியாது என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை –
நிற்க ! இங்கு கடவுளின் கருணை எது ? என நாம் கேட்க கூடும் – இந்த இடம் தான் நம் அறிவின் அளவும் அது மேலும் விருத்தியாகும் இடமும் ஆகும் – கடவுள் கருணையை பெற நாம் தான் நன்முயற்சி செய்தாக வேண்டும் – கடவுளின் வழி திறந்தே உள்ளது – கடவுள் உண்மை நிலை காண எந்தொரு தடையுமில்லை –நாம் சார்ந்துள்ள சமய,மத,மார்க்கங்களின் ஆச்சார வகைகளே நமக்கு தடை ஏற்படுத்துகின்றன என இங்கு சத்தியமாக அறிதல் வேண்டும்

அன்பர்களே !
இந்த பிரபஞ்சத்தின் உண்மைகள் அதாவது பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் அதில் உள்ளவைகளான அண்டங்கள், உலகங்கள், உயிர்கள், பொருள்கள், இன்னும் பலவற்றையும் நாம் அறிந்திருக்கவில்லை ஆனால் இவை படைத்த இறைவன் இவரே என்று எங்ஙனம் முடிவு செய்துள்ளது நமது மார்க்கங்கள்? நான் சொல்வது நாம் இன்று சார்ந்திருக்கும் சமய,மத,மார்க்கங்களை சுட்டி காட்டுகிறேன் – இப்படி கூற காரணம், உண்மையை ( நம் மற்றும் கடவுளின் உண்மையை ) கற்பனை திரைகளால் அறியாமலும் வல்லப தன்மையாலும் மறைக்கப்பட்டுள்ளது – உண்மை என்றுமே இருந்தது இருக்கிறது இருக்கும் – அதுவே கடவுள் –
உண்மையறிந்தவனுக்கு ஏது அவத்தைகள்? – நமக்கு வெளிப்படுத்தியுள்ள சமய,மத,மார்க்கங்கள் அனைத்துமே உண்மை நோக்கிய பயணமே அன்றி உண்மையின் எல்லை இல்லை என அறிதல் வேண்டும் – அதனதன் தலைவர்கள், ஞானிகள், கர்த்தர்கள், யோகிகள், கடவுளர், தேவர்கள் எந்தளவு சென்றுள்ளார்களோ அந்தளவு மட்டுமே பயனை பெறமுடியுமே அன்றி முழு பயனை அடையவே முடியாது என அறிக – பல சித்திகள் மற்றும் நெடுங்காலம் வாழுதல் போன்றவை நம் மார்க்க நெறியை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் – ஆனால் அதுவா பெரும் பயன்? –எந்தொரு மார்க்கத்தை சார்ந்திருந்தாலும் நம் எல்லாருக்கும் துன்பம்,பயம்,மூப்பு, பிணி, மரணம் பொதுவாகவே வருகிறது – ஏன், அந்த மார்க்கத்தின் தலைவர், யோகி, ஞானி,கடவுளர், தேவர்களுக்கு மரணம் இறுதியாக உள்ளது – எல்லோருமே செத்து அல்லாவா ஒழிந்தனர் அல்லது முக்தி, சாமாதி என்ற அமைப்பில் ஒடுங்கியல்லவா போயினர் என்கிறார் வள்ளலார் இதுவா கடவுளின் உண்மையருள்? இதுவா பெரும் பயன்?
துன்பம், பயம், மூப்பு, பிணி, மரணம் போன்றவை மனிதன் (உயிர்கள்) பெறும் அவத்தைகள் ஆகும் – இந்த அவத்தைகளை போக்கி கொள்வதே நம் முயற்சி – பிறந்த நாம் , ’மரணமில்லாமல் வாழ்வதே சிறப்பு’ என அறிதலே உயர் அறிவாகும் – அந்த உயரறிவை நோக்கியே நம் அறிவு வளர்ச்சியடைகிறது – அதுவே இயற்கை அமைப்பு – இதற்கு பல லட்ச பிறவிகள் வேண்டியுள்ளது – இயற்கையை விதியை வெல்ல முடியாது என்பதே இது வரை கண்ட ஆய்வு முடிவு – வாழும் வரை பிறருக்கு உதவுவதும் அல்லது பிறர் துன்பம் செய்தாலும் சகித்து அடங்கியிருப்பதே ஒருமை (உண்மையின் மேன்மை) என்கிறது நமது முன் மார்க்கங்கள் – ஆனால் இதுவல்ல உண்மையின் முடிவு – அவத்தைகளை நீக்கிக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வு பெறுதலே உண்மையின் மேன்மை – இவ்வின்பம் சத்திய அறிவால் மட்டுமே பெற முடியும் – இந்த பெருவாழ்வு கடவுளின் அருளாலே கிடைக்கிறது – எவர் ஒருவர் கடவுள் நிலை குறித்த நல்ல விசாரணை செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அருள் கிட்டுவதாக உள்ளது – என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்
ஆனால் நாம் சார்ந்திருக்கும் மார்க்கத்தில் கடவுளின் உண்மை குறித்து விசாரிக்க நாம் அனுமதிக்கப் படுகிறோமா ? அனுமதியில்லை – இவரே கடவுள், இதுவே சாதனம், இதுவே முடிவு என்கிறார்கள் – உலகில் வெளிப்பட்டுள்ள எல்லா சமய,மத,மார்க்கங்களிலும் நரகம், சொர்க்கம் உள்ளது – அவை மரணத்திற்கு பின் உள்ள அமைப்புகளாகும் என்கிறார்கள் – இங்ஙனம் இருக்க, ”மரணம் தவிர்த்தல்” என்ற உண்மை அவையில் எங்கு வெளிப்பட்டுள்ளதாக சொல்லமுடியும்? – வள்ளலார் என் மார்க்கத்தில் நரகம்,சொர்க்கம் என்பதில் எந்தொரு விசாரமில்லை என்கிறார் – சாகாதவனே சுத்த சன்மார்க்கி என்கிறார்கள் 
அன்பர்களே !
மனிதன் பிரிந்து பல சமய,மத,மார்க்கங்களை சார்ந்து உள்ளான் – நாம் எந்தொரு மார்க்கத்தில் இருந்தாலும் எல்லா மார்க்கத்தார்கள் என்ன என்ன பெறுகிறார்களோ அவையை தான் எல்லோரும் பெறுகிறோம் – எல்லோருக்குமே துன்பம்,பயம்,மூப்பு,பிணி,மரணம் வந்து சேருகிறது

எல்லா மார்க்கத்திலும் நல்லவர்கள், அறிவு சான்றோர்கள், நீண்ட வாழ்வு பெறுபவர்கள் இருக்கிறார்கள் – அப்படியெனில் மார்க்கங்களிடையே வேறுபட்டிருக்கும் கடவுள் கொள்கை இதற்கு காரணமில்லை – நல்லவர்,அறிவு சான்றோர் ஆகுவதற்கும் நீண்ட வாழ்வு பெறுவதற்கும் ஒழுக்க நெறியும், அன்பும், அவரவர் தத்துவங்களை (உடலை) பராமரித்தலுமே போதுமானதாக உள்ளது என அறிக! – அன்பு, ஒழுக்கம் மேற்படி அனைத்து மார்க்கங்களிலும் உள்ளது என அறிதல் வேண்டும் –ஆனால், இதுவல்ல சுத்த சன்மார்க்க கொள்கை முடிபான முடிபு நோக்கி செல்கிறது – இதுவரை வெளிப்பட்டவையை உள்ளடக்கி மேலும் நல்ல விசாரணை இங்கு மேற்கொள்ளப்படுகிறது –நாம் மேலும் படிகள் ஏற கீழ்ப்படிகளாக முன் மார்க்கங்கள் உள்ளது என்கிறார் வள்ளலார் – சுத்த சன்மார்க்கத்திற்கு மற்ற மார்க்கங்கள் யாவும் அநந்நியம்- அந்நியமல்ல – இம்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே யன்றி இல்லாதன வல்ல – சமயமத அனுபவங்களை கடந்தது என்கிறார் வள்ளலார் – உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் உண்மை கடவுளை குறித்ததே தவிர வேறில்லை – உபாசனாதி வழியாய் வழிபடுவது கொள்கை அல்ல – என் மார்க்கம் உண்மையறிம் அறிவு மார்க்கம் என்கிறார் வள்ளலார் – உண்மையறிய யாருக்கும் யாதொரு தடையுமில்லை – உண்மையறிதலே லட்சியமாக கொள்ள வேண்டும் – அதுவே உண்மையறிவு ஆகும் 

அன்பர்களே ! சமய,மத,மார்க்கங்களிலும் உண்மைகள் உரைக்கப்பட்டுள்ளது ஆனால் முழு உண்மை அவையில் உரைக்கவில்லை – முழு உண்மை உரைக்காததால் தான் சமயம்,மதம் பொய் என்கிறார் வள்ளலார் – நாம் ஒருவருக்கு 1000/- கொடுத்திருந்தோம் சில காலங்கள் கழித்து பணம் வாங்கியவர் நம்மிடம் வாங்கியது 900/- என்கிறார் – அவர் மறதியால் அல்லது வேறு காரணத்திற்காக சொன்னாலும் அவர் பொய் சொல்கிறார் அல்லது தவறாக சொல்கிறார் என்று தானே சொல்வோம் –
நம் வீட்டு பிள்ளைகளை புறப் படிப்பில் 100/100 வாங்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லும் நாம், நாம் கொண்டியிருக்கும் கொள்கையில் உண்மை முழுமையாக இருக்க வேண்டும் என ஏன் சிந்திக்கவில்லை ? பெரிய படிப்பை படிக்க வைக்கும், நாம் சாகாகல்வி குறித்து ஏன் படிக்கவில்லை? – நன்றாக படித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தும் நாம், கடவுள் அருளால் பெறக்கூடிய பெரும் பயனில் (மரணம் தவிர்த்தல்) ஏனில்லை அறிவு? இவை நம்மிடம் இல்லாமல் போனதற்கு இரு காரணங்களே ஆகும் – ஒன்று கொள்கை, மற்றொன்று காலம் – நமது சமய,மத,மார்க்கங்களில் நமக்கு ஏது விசாரணைக்கு அனுமதி? – நமது சமய,மத,மார்க்கங்களின் கட்டுபாட்டு ஆச்சாரங்களில் பற்று கொண்ட பின்பு நமக்கு ஏது காலம்? எனவே தான் அவையில் லட்சியம் வைக்காதீர்கள் என்று கட்டளையிடுகிறார் வள்ளலார் –

அன்பர்களே !
அச்சம் வேண்டாம் – நேற்று வரை கொண்டிருந்த லட்சியத்தை கைவிட்டு மற்றொரு லட்சியத்தில் –?? அஞ்ச வேண்டாம் – சுத்த சன்மார்க்கம் ஓர் உண்மை பொது மார்க்கம் – இங்கு உண்மை கடவுள் நிலை கண்டு அக்கடவுளின் அருள் பெற்று பேரின்ப பெருவாழ்வை பெறுவதே லட்சியம் – நமது முன்னோர்களை தொடர்ந்து தான் இந்த விசாரணை செய்கிறோம் என அறிக – இங்கு வெளிப்படும் நமது உண்மை கடவுள், நமது ஞானிகள், யோகிகள், தலைவர்கள், தேவர், கடவுளர், கர்த்தர் ஆகிய இவர்கள் எதிர்பார்த்தின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதியை தான் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார் – எனவே தான் அஞ்ச வேண்டாம் என்கிறார் வள்ளலார் –

அன்பர்களே !
இது வரை நாம் லட்சியம் கொண்டியிருந்த சமயங்கள், மதங்கள் குறித்து சற்று உற்று நோக்குங்கள் – அவையில் நம் பிண்ட லட்சணத்தை தான் கடவுளாக காட்டியுள்ளதை காணலாம் – இதை அண்டத்தில் காட்டி, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுசனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கின்றார்கள் – அடுத்து உண்மை கடவுளை நோக்கி விசாரணம் செய்து கொண்டிருந்த நம் தலைவர்களை, ஞானிகளை, யோகிகளை நாம் வணங்கும் கடவுளாக ஆக்கி கொண்டுள்ளோம் – இதுவே உண்மை – நம்புங்கள் என சொல்லவில்லை – நீங்களே உற்று நோக்குங்கள் என்றுதான் சொல்லுகிறோம் – , நாம் நம் நிலை மற்றும் கடவுள் நிலை காண ஒவ்வொருவரும் அவரவர் அறிவால் வள்ளலார் மார்க்கத்தில் நல்ல விசாரணை செய்தே ஆக வேண்டும் – கருணை ஒன்றே சாதனமாக உள்ளது – சாதனம் என்றால் பயிற்சி – கருணை என்றால் எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும் என்கிறார் வள்ளலார் – நம் நிலை காணும் போது எல்லா உயிர்களிடத்தும் நமக்கு தயவு ஏற்படும் – அதே போல் கடவுள் நிலை காணும் போது அக்கடவுளிடத்தில் அன்பு வந்து விடும் – அதன் பின்பு அருள் பெறுவதற்கு ஏது தடை? – இங்ஙனமாக வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க உண்மை பொது நெறி உள்ளது –
ஆனால் இதற்கு என்ன வேண்டும்? ஆசை வேண்டும் – எனவே தான் வள்ளலார் ”ஆசை உண்டேல் வம்மீன்” என்றும் ”ஆசை உடையவர்கள்” காலம் தாழ்த்தாது விரைந்து வாரீர் என்கிறார்கள் –

நல்ல விசாரணை தொடரும்…

– ஏபிஜெ அருள் – கருணை சபை மதுரை

unmai

Channai,Tamilnadu,India