சமய, மதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
சமய, மதங்களுக்கும் வள்ளலாரின் மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
எல்லா சமய மதங்களிலும் அதனதன் கடவுளர், தெய்வம், இவர்களே என வெளிப்படுத்தி அக்கடவுளரை/தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால்,
சுத்தசன்மார்க்கத்தில் “ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல் வேண்டும்” என்கிறார் வள்ளலார். இங்ஙனமாக இருந்து, தான் கண்ட கடவுள் பெருங்கருணை கடவுள் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்) என்கிறார்கள். ஒவ்வொருவரும் கடவுள் நிலை காண நன்முயற்சி செய்ய வேண்டும் – தன் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை என்கிறார்கள்.
ஆனால்,
சமய, மத மார்க்கங்களில் கடவுள் அருள் பெறுவதற்கு சாதனமாக பல சடங்கு, சம்பிராதயங்கள், சாத்திரங்கள்,முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் உள்ளன–சமய, மத மார்க்கங்களில் முக்தி, சமாதியில் பலன் முடிகிறது நீண்ட ஆயுள் கைக்கூடுகிறது மரணத்திற்கு பின்பு நரகம், சொர்க்கம் என்றெல்லாம் உண்டு.
சுத்த சன் மார்க்கத்தில் சுவர்க்க நரகம் பற்றி விசாரமில்லை என்கிறார் வள்ளலார். முக்தி அடைதல் என்பதில் லட்சியம் கொண்டு, தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், பூரண சித்தியைப் பெறுவதே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கை. இதை ஆண்டவரே தெரிவித்தார் என்கிறார் வள்ளலார். தன் மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியை தெரிவிப்பதேயன்றி வேறில்லை என்கிறார் வள்ளலார்.
சுத்த சன்மார்க்கத்தில் கடவுளின் உண்மையைத் தெரிவிக்கிற மார்க்கம். மற்றவைகளிலிருந்து
அதீதமாக விளங்கும் மார்க்கம். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஸ்டைகூடல்
என்னும் நான்கும் கடந்து ஆருடராக நிற்பதால் சாதனமொன்றும் வேண்டுவதில்லை
மேற்படி சாத்தியர்களே சுத்ததேகிகள்.
ஆனால், சமயங்களில் அதனதன் கடவுள், தெய்வங்களை அறிய சாத்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலிய கலைகள் உள்ளன. மேலும் பல உபாயங்கள் உள்ளன.
சுத்தசன்மார்க்கிகள் எந்தொரு கலைகளிலும் லட்சியம் வைக்காமல் தலைவனையே தொழுதல் வேண்டும் தலைவனை தொழுவதே தொழிலாக உள்ளது கடமை என்கிறார் வள்ளலார். இங்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது.பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மையாகும். இங்கு கடவுள் நிலையை படிப்பால் அறிய முடியாது. எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுதல் வேண்டும். உண்மையை நம்புதல் வேண்டும் என்கிறார் வள்ளலார்
–சமயங்களில் மதங்களில் புராணங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளர், தெய்வங்கள், ஏற்பாட்டுகர்த்தர்கள், யோகி, ஞானி, மூர்த்திகள், இவர்கள் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடிஎழுத்தருளுகின்ற தனித்தலைமைப் பதியை தான் வள்ளலார் கண்டதாக சொல்கிறார்கள்.
ஆனால்
சமய,மதங்களில் அதன் கொள்கையறிய பல ”நூல்களும்”,
கொள்கையில் பிடித்தம் ஏற்பட பல ”சாத்திரங்களும்”,
கடவுள்,தேவர்களை போற்றி வணங்க ”தோத்திரங்களும்”,
வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம், போன்ற ”கலைகளும்”,
உள்ளன – ஆண்டவரை வேண்டி தவம் இருந்தவர்கள் பலர் – அவர்கள் மேற்கொண்ட வழி தான் பல சமயங்களாகும் – அந்தந்தச் சமயங்களில் இவர்களையே தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வருகிறார்கள் –
வள்ளலாரின் கட்டளையும் விண்ணப்பமும்:
” இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்-
எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத்
தலைவனையே தொழுவீர்கள் “
“சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள்”
“ எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம், முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும் – “
ஆனால்,
சமயங்களில் தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும், தத்துவாதீதத்தைத் தியானித்தும், இடையில் ஜபித்தும், கரணலயமாகச் சாமாதிசெய்தும், தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சுடக்கியும் சாதர்கள் மேற்குறித்த வண்ணம் செய்வார்கள்-
மொத்ததில்;-
சுத்தசன்மார்க்கத்தில் அடிப்படை ஒழுக்கம் பெற்ற தகுதியுடையவர்கள் மற்ற எதிலும் பற்று இல்லாமல் ஓர் உண்மை கடவுள் உண்டென்றும் அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கொண்டு உள்ளழுந்தி,சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்கும் சங்கற்பத்தை ஒவ்வொருவரும் பெற்று ஆண்டவரை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து இடைவிடாதிருந்தால் ஆண்டவரே எல்லா உண்மைகளையும் நமக்கு உரைப்பார் – உண்மை அறிந்தவர்களே அருள் பெற்றவர்கள் ஆவார்கள் – அருளால் பெறப்படும் பயன் மரணமில்லா பெருவாழ்வு ஆகும்-
ஆனால்,
சமயங்களில் சத்துவகுண இயல்பாகிய, கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரிய நிக்கிரகம், ஜீவகாருண்யம் மேற்படி உண்மையை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம்-
அடுத்து மதம்;
சமயாதீத மாவது மதம் – இங்கு நிர்க்குணம் அதாவது முன்னே சொன்ன சத்துவ குணத்தினை பெற்று லட்சிய அனுபவம் பெறுதல் யாதெனில்; கடவுளுக்கு அடிமையாதல், புத்திரானாதல், சிநேகனாதல், கடவுளேதானாதல் இதுவே மதம்-
முடிபாக,
சுத்த சன்மார்க்கத்தில்: ஒரு கோடி அறுபது லட்ச அனுபவங்களின் அனைத்து உண்மையையும் சுத்த சன்மார்க்கத்தில் ஆண்டவரே தெரிவிப்பார் – ஆண்டவர் உண்மையை தெரிவிக்க வேண்டும் என நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பு நிறைந்த கண்ணீரால் விண்ணப்பம் செய்து நன்முயற்சி செய்தலே சுத்த சன்மார்க்கம்-
ஆனால்;
சூல்வண்டி (400 வண்டிச் சுமை ஒரு சூல்வண்டி) ஆயிரங்கொண்ட நூல்கள் கொண்டதே சமய மத மார்க்கங்கள் – இதற்கு ஆயிரம் ஜென்மம் எடுக்க வேண்டியதாக உள்ளது – கலைகளின் உண்மையை சொல்லி கொண்டே வரும் மார்க்கமே சமய, மத மார்க்கங்கள் –
இதோ வள்ளலார் அழைக்கிறார் —
இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்து கொண்டிராதீர்கள் –
சமயமதங்களில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும்- எனவே ஆண்டவர் இடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது-
ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருசம் எட்டு வருசம் பிராயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை அடையலாம்- ஆனால் ஆண்டவரிடத்தில் லட்சியம் வைத்தால் பெரிய பிரயோஜனத்தை பெறலாம்-
சமயங்கள்,மதங்கள்,கலைகள் இவற்றில் பயிலுவோமானால் நமக்கு காலமில்லை–
லாபத்தை பெற அறிவு வேண்டும் – அறிவு என்பது உண்மை அறிதல் – உண்மை அனந்த கோடி – காலமில்லை – இந்த பிறவிலேயே நமக்கு ஆண்டவரே உண்மை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு நன்முயற்சியில் 19 ம் நூற்றாண்டில் ஒருவர் இறங்கி அருள் பெற்று மரணம் தவிர்த்து பேரின்ப பெருவாழ்வு பெற்றார்கள் – இப்படி ஒரு புதிய தனி வழியை கண்டுபிடித்தவர் வள்ளலார் – அவ்வழியின் பெயர் சுத்த சன்மார்க்கம் – என்னை போல் நீங்களும் பெற வேண்டும் என ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையில் தெரிவித்தார்கள் –
ஆக,
சமய,மத,மார்க்கங்கள் என்பதிலிருந்து கடந்து தனி நெறியாக விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்-
சுத்த சன்மார்க்கம் என்பது சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது- சுத்த சிவம் என்பது சிவம், பரசிவம் இரண்டையும் மறுத்தது என்கிறார் திருவருட்பிரகாச வள்ளலார்
—-நன்றி வணக்கம் ஏபிஜெ அருள் – கருணை சபை சாலை –