January 22, 2025
Uncategorized

வள்ளலார் வரலாறு [Vallalar History]

வள்ளலார்

இந்தியா, தமிழ்நாடு, கடலூர் மாவட்டம், வடலூர் அருகில் மருதூர் என்ற ஊரில் சைவ சமயம் சார்ந்து வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தில் ஐந்தாவது மகவாக 1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் பிறந்தவர் வள்ளலார். அவரது இயற்பெயர் இராமலிங்கம்.

“சமயத்தில் பற்று”

வள்ளலாரின் குடும்பத்தார்கள் சைவ சமயத்தைத் தழுவி வந்தார்கள். அதனால் வள்ளலார் அச்சமயத்தின் மீது பற்றுக் கொண்டு வாழ்ந்து வளர்ந்து வந்தார்கள். இளம் வயதில் திரு இராமலிங்கம் (வள்ளலார்) அவர்கள் சென்னையில் அமைந்துள்ள ஒரு முருகன் ஆலயம் சென்று கவிகள் பாடி துதித்தார்கள். அக்கோயிலுக்கு “கந்த கோட்டம்” என பெயரிட்டு அழைத்தவர் வள்ளலார் இராமலிங்கம் அவர்களே. அன்பு, ஒழுக்கம், கருணை, இரக்கம் இவை குறித்து இவர் பாடிய பாடல்கள் மிக்க சிறப்புடையதாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமயக்கடவுளர்கள் குறித்து பாடல்கள் நிறைய பாடியுள்ளார்கள். புராணங்களை மிகத் தெளிவாகச் சொல்லி ஆற்றிய சொற்பொழிவுகள் ஏராளம். அங்ஙனமாக அவர்தம் இளம்பருவகாலங்கள் சமயத்தில் பற்றுடனும், ஒழுக்கங்களில் மேன்மையுடனும் கடந்தன.

பன்முக ஞானம்:

   பன்முக ஞானம் பெற்ற திரு.இராமலிங்கம் பின்பு மக்களால் “வள்ளலார்” என்றழைக்கப்பட்டார்கள். அவர் நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகாசிரியர், போதகாசிரியர், ஞானாசிரியர் வியாக்கியானகர்த்தர், சித்த மருத்துவர், சீர்திருத்தவாதி, அருட்கவிஞர், அருள்ஞானி என்று அனைத்து திறமைகளையும் பெற்று தனிச்சிறப்புடன் முதன்மையாக விளங்கினார்கள்.

நூல்கள்:  

                மனுமுறைகண்ட வாசகம்

                ஜீவகாருண்ய ஓழுக்கம்

உரைநூல்கள்:

                ஓழிவிலொடுக்கப் பாயிர விருத்தி உரை

                தொண்ட மண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரை

பதிப்புகள்:

                மேற்படியான உரைநூல்கள் பதிப்பித்தார்கள்

                மேலும் ‘சின்மயதீபிகையை’யும் பதிப்பித்தார்கள்

வியாக்கியானங்கள்:

                “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம்.

                “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை

சித்த மருத்துவம்:

                மருத்துவ குணங்கள் குறித்த அட்டவணை.

                தாமே பல மருந்துகளை செய்தது.

                கடிதங்கள் வாயிலாக மருந்து குறிப்புகள்.

                ரசவாதம் பொன் செய்வதில் வல்லப தன்மை.

சீர்த்திருத்தங்கள்:

                புருட(ஷ)ன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

               மனைவி இறந்தால்   புருடன் வேறு கல்யாணம் செய்ய வேண்டாம்.

                கர்ம காரியங்கள் ஓன்றும் செய்ய வேண்டாம்.

                சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்களை விட்டு ஒழியுங்கள்.

முதன்மையான செயல்கள்:

  • பொது மக்களுக்கு முதன் முதலாக திருக்குறள் வகுப்பு நடத்தியவர்.
  • முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர்.

o    மும்மொழி (தமிழ், வடமொழி, ஆங்கிலம்) வகுப்பு நடத்தியவர்.

o    தமிழ்நாட்டின் முதல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

o    19ம் நூற்றாண்டில் கடவுள் உண்மையறிய “ஒரு தனி மார்க்கத்தை ”           நிறுவியவர்.

o    தன்மார்க்கத்திற்கென சங்கம், சபை, கொடி, நெறி, கட்டளைகள், தடைகள் ஆகியவை வகுத்தவர்.

o    எந்தவொரு மார்க்கமும் வெளிப்படுத்திடாத “மரணமில்லா பெருவாழ்வு” என்ற பெரும்பயன் இறையருளால் பெறலாம் என வெளிப்படுத்தினார்கள்.

o    இவர் கண்ட மார்க்கத்தின் கடவுள், இதுவரை சமய மத மார்க்கங்களில் வெளிப்படுத்திய கடவுகளில் ஒருவரல்ல என்கிறார்.

வள்ளலாரின் முடிபான கொள்கையில்உண்மை பொது நெறி

வள்ளலாரின் முடிபான கொள்கையானது அவர்தம் முந்தைய கொள்கைக்கு முற்றிலும் மாறுப்பட்டது. சமயத்தின் மீது வைத்திருந்த பற்றை கைவிட்டு விட்டு ஓரு புதிய வழியை கண்டு, அவ்வழிக்கு “சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உலகிற்கு வெளிப்படுத்தினார்கள்.

                இளம்பருவத்தில் சமயப் பாடல்கள் பாடியதற்கு காரணம், தனக்கு அப்பொழுது கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கிறார் வள்ளலார்.

                சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் “ஒருவரே” என்பது அவர் கண்ட கடவுள் உண்மையாகும். தான் கண்ட கடவுள் உலகில் காணப்படும் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஐயபாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல என திட்டவட்டமாக 12.04.1871ல் தன் அறிவிப்பின் மூலமாக உலகிற்கு அறிவித்துள்ளார்கள்.

நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஓழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஓழுக்கங்களையும் பெற்று சுத்தசன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளலார். மேலும் அவர் வெளிப்படுத்தியது யாதெனில்;

‘கருணை’ என்ற ஓரே சாதனத்தால்

மட்டுமே கடவுள் உண்மையறிந்து,

இறையருள் பெற்று, பேரின்ப பெருவாழ்வாகிய

மரணமில்லா பெருவாழ்வு கைகூடுவதாக உள்ளது.

அக்கருணை விருத்திக்கு தடையாக

சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்கள் உள்ளன.

எனவே மேற்படி ஆசாரங்களை விட்டு ஓழித்து

சத்திய ஞான ஆசாரமாகிய பொது நோக்கத்தை

வருவித்துக் கொள்ள வேண்டும்.

இதுவே வள்ளலார் கண்ட தனிநெறி.

   மேலும்,  இந்த தனிநெறி எல்லா சமய மத மார்க்கங்களுக்கும் உண்மை பொது நெறியாக விளங்குகிறது என்கிறார் வள்ளலார். வள்ளலாரின் ‘சுத்த சன்மார்க்கத்தை’ கீழ்வருமாறு சுருங்க கூறலாம்.

  1. சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஓருவரே. அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்து மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
  2. சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாகிய சமய மத மார்க்கங்களின் ஆசார சங்கற்ப விகற்பங்களிலும் வருணம், ஆசிரமம் முதலிய உலக ஆசாரங்களிலும் மனம் பற்றக்கூடாது.
  3. கடவுள் நிலையறிவதற்கு “ஓழுக்கம்” நிரம்புதல் வேண்டும்.
  4. இடைவிடாது “கருணை” நன்முயற்சியில் பழகல் வேண்டும்.
  5. கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே. அக்கருணைக்கு ஓருமை வரவேண்டும்.
  6. ஒருமை என்பது தனது அறிவும், ஒழுக்கமும் ஒத்த ஆடத்தில் தானே தோன்றுவது.
  7. நம் அறிவும் ஒழுக்கமும் ஒத்தவர்களுடன் கூடியாவது, தனித் தனியாவது அல்லது தனியாவது ‘நல்ல விசாரணை’ செய்யுங்கள்.
  8. சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை
  9. சுத்தசன்மார்க்கத்தின் முடிபு “சாகா கல்வியை” தெரிவிப்பது அன்றி வேறு ஒன்றுமில்லை. (என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் மார்க்கம் என்கிறார் வள்ளலார்).
  10. ஆன்ம நேய ஒருமைபாட்டுரிமையே சுத்த சன்மார்க்கத்தின் லட்சியம்.

 இத்தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கறிவித்த வண்ணமே அறிவித்து,அவரவர்களையும்உரிமையுடைவர்களாக்கி வாழ்வித்தலே வேண்டும். 

சுத்த சன்மார்க்கத்தின் மகாமந்திரம்:

அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

முடிபான கொள்கையில் வெளிவந்த நூல்களும் நிறுவிய நிலையங்களும்

நூல்கள்:

  1. திருஅகவல்
  2. திருஅட்டகம்
  3. சுத்தசன்மார்க்கப் பாடல்கள் (ஆறாம் திருமுறை என அழைக்கப்படுகிறது)
  4. சத்திய விண்ணப்பங்கள் நான்கு
  5. 12.4.1871ல் சுத்த சன்மார்க்க கடவுளை வெளிப்படுத்திய அறிவிப்பு
  6. அதன்பின்பு தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்புகள், கட்டளைகள்,

     விளம்பரம், விதிகள்.

(மேற்படியான அனைத்தும் திரு அருட்பிரகாச வள்ளலாரால் கைப்பட எழுதியவைகள்.)

மேலும், வள்ளலாரின் உபதேசங்களை அன்பர்களால் கேட்டு எழுதப் பெற்ற “உபதேசக் குறிப்புகள்”.  அதே போல் வள்ளலார் (1873ம் ஆண்டு) ஆற்றிய “மகாபேருபதேசம்” (மெய் அன்பரால் எழுதி வைக்கப்பட்டது.)

நிலையங்கள்:

 “சத்திய ஞான சபை” (பார்வதிபுரம்)

[Google map: https://goo.gl/maps/BXRkPjrDcvt],

  “சித்தி வளாகம்.” (மேட்டுக் குப்பம்)

[Google map: https://goo.gl/maps/g22wrwhfWdJ2],

“தனி ஒளி வடிவம்” பெற்ற திரு அறை. (மேட்டுக்குப்பம்)

 [Google map: https://goo.gl/maps/g22wrwhfWdJ2],

வள்ளலாரின் முக்கிய சத்திய வாக்கியங்கள்:

                தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். (உரைநடை பக்கம் 471)

                பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய் சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் இனி விளங்கும் (அறிவிப்பு நாள் 12.04.1871)

                இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்களெல்லாம் “சுத்தசன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப்பட வேண்டும்”.

                (அறிவிப்பு நாள். கார்த்திகை மாதம் 1873) கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, வள்ளலார் சொன்னது:-

“இதைத் தடைபடாது ஆராதியுங்கள். அந்தக்கதவைச் சாத்திவிடப் போகின்றேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணிற்கழிக்காமல், ‘நினைந்து நினைந்து’ என்னும் தொடக்கமுடைய 28 பாசுர மடங்கிய-பாடலிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்.

                சத்திய பெரு விண்ணப்பத்தில்:-

“எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மை கடவுள் ‘ஓருவரே’ உள்ளார் என்றறிகின்ற மெய்யறிவை விளக்குவித் தருளினீர். வாலிபப் பருவந் தோன்றியபோதே, சைவம், வைணவம், சமணம், பவுத்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த சாதனங்களும், தெய்வங்களும், கதிகளும், தத்துவசித்தி விகற்பங்களென்றும் அவ்வச் சமயங்களிற் பலபட அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகளெல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகளென்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமற்றடை செய்வித்தருளினீர். அன்றியும் வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்களென்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்தருளினீர்.”

சத்திய பெரு விண்ணப்பத்தில்;-

                இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக்கண்ணே, இயற்கை உண்மை என்கிற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பமென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப் பெருங்கருணைத் தனிப் பெரும்பதியாய் தனித் தலைமைக் கடவுளே!

                சத்திய ஞான விண்ணப்பத்தில்:-

தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.  அவையாவன:

ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால் ஒழிய தயவு விருத்தியாகாது. மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

(உபதேசக்குறிப்பில் பக்கம் 418) கடவுள் நிலையறிவது எப்படி எனில்;

ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால், நாம் தாழுங்குணம் வரும். அத்தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும். ஆதலால், இடைவிடாது கருணை நன்முயற்சியில் பழகல் வேண்டும்.

(பக்கம் 438);      சுத்த சன்மார்க்கத்துக்கு அனுபவ ஸ்தானங்கள் கண்டத்துக்கு மேல்.

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜப் பழக்கமே சுத்தசன்மார்க்க பழக்கம்.

30.01.1874ல் முடிபாக அறிவித்தது:-

திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் வள்ளலார் அறிவித்தது; ”இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சுத்தசன்மார்க்க ஒழுக்கம்             இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை.”. யாதெனில்;

இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப்  பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தையதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை.”

மேலும்;             “இப்போது ஆண்டவர் என்னை ஏறா நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் அது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்”.வள்ளலார் அவர்கள் ஆரம்ப காலத்தில் சமயத்தில் பற்றுடன்    இருந்தார்கள். அதன்பின்பு அவையில் வைத்திருந்த லட்சியத்தை   கைவிட்டு விட்டு உண்மை பொது நெறியைக் கண்டார்கள் என்பதை   கருத்தில் கொள்ள வேண்டும்.

வள்ளலாரின் முதல் நான்கு திருமுறையில் உள்ள சமய ஸ்தோத்திர பாடல்கள் மற்றும் அதன்பின்பு சமயத்திலேயே இருந்து வந்த திருவேலாயுத முதலியாரால் வெளியிடப்பட்ட ஐந்தாம் திருமறையில் உள்ள சமய ஸ்தோத்திரப் பாடல்களிலும் நாம் லட்சியம் வையாது, சுத்த சன்மார்க்க பெருநெறி ஒழுக்கத்தில் மட்டுமே இடைவிடாது நன்முயற்சியில் பழகல் வேண்டும். வள்ளலார் கட்டளைப்படி, ஒழுக்கத்தில் ஒழுகி, உள்ளழுந்தி,சிந்தித்து,சிந்தித்தலை விசாரிக்க வேண்டும்.

அருட்பெருஞ்ஜோதி                                                        அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை                                              அருட்பெருஞ்ஜோதி

— நன்றியுடன்: ஏபிஜெ அருள், கருணை சபை-சாலை, மதுரை, தமிழ் நாடு, இந்தியா apjarul1@gmail

Karunai Sabai-Salai

34, Poombuhar Nagar North Extn.,

Uthangudi, Madurai-625 107. Tamil Nadu. India.

Click to access உண்மை-இரக்கம்-_27-9-2015_.pdf

Click to access உலக-ஒருமைப்பாட்டுரிமை-தினம்-_27-9-2015_.pdf

unmai

Channai,Tamilnadu,India