November 18, 2024
Uncategorized

வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி.

வள்ளலார் நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல. சுத்த சிவமே நம் சிவம் –- திண்டுக்கல் சுவாமி. (உள்ளது உள்ளபடி – ஏபிஜெ அருள்)

…..(சுத்த தேகத்தோடு) இந்த மாதிரியான இறவா நிலையே சாகாக் கல்வியின் உண்மையாயிருத்தலின் அதன் இலக்கணம், இலக்கியம், எல்லாம் நமது அருட்ஜோதியாகவே கண்டு கொள்ளப்படுகின்றாதாம். நமது ஆண்டவர் அருட்பெருஞ்ஜோதி மயமானவர். அவரை அடைவதுவே நம்முடைய குறிக்கோள் அல்லது இலட்சியம். அந்தக் கடவுளரைச் சார்வதற்கு மெய்யருள் தானே மார்க்கமாயிருத்தலின் அப்பதியின் இலக்கணமாகவும் கருவியாகவும் அமைந்துள்ளது. அவ்வருளேயாகும். இது இதுவாய்த் தோற்றுகின்ற யாவும் அந்த அருட்ஜோதியின் பாலிருந்து வெளியுற்றிருப்பதாக இருக்கின்றதாகவும் குறிக்கப் படுகின்றது. இதற்கு மேல் அருட்பெரும்பதியை (சுத்த) சிவமே என்கின்றார்.
இந்தச் சிவமோ, தொம்பதம் + தத்பதம் + அசிபதம் ஆக இருப்பது.
நீ அதுவாய் இருக்கின்றாய் என உபதேசிக்கப்படுகின்றதே இதன் கருத்தாம். நீ என்பது சுத்த ஆன்மா;
இதுவே சிவனது உண்மை வடிவம் ஆம்; அவனது அருள் ஒளியிற் பிறந்து விளங்குகின்ற தேகாதி பிரபஞ்சம். அசிபதப் பொருளாக உள்ளது. இவை மூன்றும் ஒன்று கூடி விளங்குமிடத்து தான் இன்பானுபவம் உண்டாவது சாத்தியம், ஆகையால் தான், தொம்பதமும், உடனுற்ற தற்பதமும், அசிபதச் சுகமும் ஒன்றானான் சிவமே என்றார். இவ்வின்புருவாம் சிவமென்னும் கடவுள் ஒருவர் தானே இவ்வகைத் திரி நிலை கொண்டு திகழ்கின்றதை இன்று திருவருளால் கண்டு பயன் அடைகின்றோம்.
இவற்றைச் சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்றது.
என்றாலும் அருள் உண்மை விளங்காத தாலே இம் மூன்றும் இணைந்தே முழுமை பெற்றுத் திகழும் இயல்பு ஏற்கப்படவில்லை.
பாசம் விட வேண்டும் என்றும், பசு நிலை கெடவேண்டுமென்றும் அப்பொழுதுதான் பதி நிலை கூடும் என்றும் கொண்டு கூறி வாழ்வற்றுப் போக நேர்ந்த தாகும்.
ஆனால் இப்பொழுது திருவருளாலே நம் அருட்பெருஞ்ஜோதி பதி வெளிப்பட்டு சுத்த சன்மார்க்கிக்குப் பூர்ணத் திருவருளை வழங்கி, பதி, பசு, பாசத்தையே ஞான தேகம், பிரவண தேகம், சுத்த தேகம் என்றும் திரிதேக சித்தி வடிவாக்கி அது கொண்டு பேரின்போடு விளங்கச் செய்து விடுகின்றார். இன்றைய சாகாக் கல்வியின் பயன் இதுவாகும்.
நமது திருவருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்ஜோதிப் பொது நெறியை திறந்து விட்டார்.
இந்நெறியில் உற்று உளம் நிறை அருளொடு ஒழுகினால், உண்மையை எல்லாம் உள்ளவாறு கண்டு உயர் பயன் பெறலாம். இவர் வழங்கியுள்ள அருட்பெரு நெறி, எந்த ஒரு சமய மதச் சார்பும் கொண்டதல்ல.
மேலெழுந்த வாரியாகவும் குறுகிய நோக்கோடும், மதமார்க்கப் பற்று கொண்டும், இதனை அறிந்து அடையாது விலகிச் சென்றால் அது அறியாமையே. அன்றியும் ஆண்டவரின் ஆணைக்குச் செவி கொடுக்காது மறுத்துச் சென்று, துன்புற்று அழிவு படுகின்ற செயலே ஆகும். ஆகையால் இந்த அருட்பெருஞ்ஜோதி பதியின் உண்மையை யாவரும் கண்டு கொள்ளவே ஈண்டு இவ்வளவுக்குச் சொல்ல நேர்ந்ததாம்.

unmai

Channai,Tamilnadu,India