Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cm-answers domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /var/www/wp-includes/functions.php on line 6114
சுத்த சன்மார்க்க நன்முயற்சி (பயிற்சி) வகுப்பு – வள்ளலார் – சுத்த சன்மார்க்கம்– கடவுள் ஒருவரே – சாகாகல்வி- ஓர் உண்மைக்கடவுள்
December 21, 2024
Uncategorized

சுத்த சன்மார்க்க நன்முயற்சி (பயிற்சி) வகுப்பு

சுத்த சன்மார்க்க நன்முயற்சி (பயிற்சி) வகுப்பு ஆரம்பம். (1) -ஏபிஜெ. அருள்

http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020603B

முதல் நாள் வகுப்பு -1.

அன்பர்களே!
திருஅருட்பிரகாச வள்ளலாரே நமக்கு துணை.
அவர்தம் நெறியிலேயே நம் பயிற்சி.
வகுப்பில் சேர்ந்திருப்பவர்கள் அனைவருமே கீழ்க்காணும் தகுதியை ஏற்கனவே பெற்றவர்களாக கருதுகிறோம்.

அதாவது;

1. 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
2. நல்லறிவு கடவுள் பக்தி உடையவர்கள்
3. உயிரிரக்கம் பொது நோக்கம் கொண்டவர்கள்
4. திரிகரண அடக்கம் பெற்றவர்கள். – முதலிய நற்குண ஒழுக்கங்கள்

மேலும்;
1.உண்மையுரைத்தல்,
2.இன்சொல்லாடல்,
3.உயிர்க்குபகரித்தல் — முதலிய நற்செய்கை ஒழுக்கங்கள் பெற்றவர்கள்.
அன்பர்களே, மேலே சொன்ன ஒழுக்கங்களை பெற்று உள்ள நாம் நன்முயற்சி பயிற்சி வகுப்புக்கு உரியவர்களாகி விட்டோம். (மேற்படிச் சொல்லப்பட்ட தகுதிகள் வள்ளலாராலேயே வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.)

விண்ணப்பம்:

திருமந்திரம் சொல்வோம்:

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

(சம்மணம் அல்லது நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்து உட்கார வேண்டும்.
நம் கைகள் நம் அய்யா வைத்திருப்பது போல் வைக்கவும்.)
(முதலில் உரக்கச் சொல்லிக் கொள்ளலாம் பின்பு மெல்லனெ விண்ணப்பித்தலே வேண்டும்)

இதோ விண்ணப்பம் செய்வோம்:

”நாங்கள் பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் அவலமும் களைப்பும் துன்பமும் திருவுளத்தடைத்து, இரங்கியருளி,
அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய
இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைம்மாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.
கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.”
உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜனங்களுக்காக ஆண்டவராகிய உங்களிடத்தில் விண்ணப்பித்து தேவரீர் திருவருளைப் பெற்ற திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் கண்ட உண்மை பொது நெறியிலேயே உங்களின் திரு நிலைக் காண
இன்று விசாரம் செய்கிறோம். எங்களை அங்கீகரித்து அருள வேண்டும்.

:வழிபாடு:

அன்பர்களே!
கீழ்க்காணும் திருவாசகத்தை நாம் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

(ஆரம்பத்தில் இவ்வாசகத்தை உரக்கச் சொல்லாம். பின்பு மெல்லென சொல்லுதலே வேண்டும்.)

இதோ, சொல்லுவோம்;

“எல்லா அண்டங்களையும்,
எல்லா உலகங்களையும்,
எல்லாஉயிர்களையும்,
எல்லாப் பொருள்களையும்,
மற்றையெல்லாவற்றையும்
தோற்றுவித்தும், விளக்கம் செய்வித்தும்,
துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும்,
பலன் தருவித்தும், எங்கும் பூரணராகி விளங்குகின்ற
“ஓர் உண்மைக்கடவுள்” உண்டு.
அக்கடவுளை உண்மையன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்கிறேன்.
அக்கடவுள் திருவருள் என் கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்கும் என்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை நான் பெறுதல் முடியுமென்றும்,
என் அறிவில் தேவரீர் திருவருளால்
உண்மைப்பட உணர்த்தியருளப் பெற்றேன் இன்று.
அன்பர்களே!
மேற்படி திரு வாசகங்கள் அனைத்தும் நம் வள்ளலார் ஆண்டவரிடத்தில் வைத்த விண்ணப்ப வாசகங்களே என அறிக.
நாம் எப்பொழுதெல்லாம் திரு விளக்கை தெய்வபாவனை செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் இத் திருவாசகங்களை வாசித்து வழிபாடு செய்தல் வேண்டும்.

இன்றைய வகுப்பு முற்றிற்று.

இன்றைய வகுப்பு மூலம் நாம் கருத்தில்கொண்டவை:
1. கடவுள் ஒருவரே!
2. உண்மை அன்பால் கருத வேண்டிய கடவுள் எங்கு உள்ளார்
3. எங்ஙனம் துதித்து, நினைந்து, உணர வேண்டும்
4. கடவுள் திருவருளால் என்னன்ன அவத்தைகள் நீங்கும்
5. கடவுள் திருவருளால் நாம் அடைவது எது
மேற்படியானவைக்கு மேலே கண்ட வாசகத்திலிருந்தே பதில் சொல்ல வேண்டும்.
வகுப்பில் சேர்ந்து உள்ளவர்கள் தங்களின் முகவரி, செல் நம்பரை செல் மூலம் (9487417834 க்கு) எஸ் எம் எஸ் அனுப்பி பதிவு பண்ணிக் கொள்ள வேண்டுகிறோம்.
மாதத்தில் 2 அல்லது 3 முறை தான் வகுப்பு உண்டு.
வகுப்பில் சொல்லப்பட்டவையை அடுத்த வகுப்புக்குள் ஊன்றிப் படித்து கருத்தில் கொள்ள வேண்டும். (இது மிக முக்கியம்).
சந்தேகங்களை தபால் மூலம்/ எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பவும்.
மீண்டும் சத்தியம் செய்து சொல்கிறேன். வகுப்பின் பாடங்கள் அனைத்தும் வள்ளலாரின் கட்டளைப்படியே. ஆதாரத்துடனே எடுத்துரைக்கப்படும். ஆதாரம் விரும்புவர்களுக்கு எடுத்து உரைக்கப்படும்.
ஆதாரங்கள் அனைத்தும் புத்தகத்தில் வரும்.
(முழு வகுப்புகள் அடங்கிய புத்தகத்தை/ & ஆடியோவை செலவு ஏற்று வெளியிட விருப்பம் உள்ளவர்கள் முன் வர எதிர்பார்க்கிறோம்.)
ஏபிஜெ. அருள்

——————————————————————————————————–

“பயிற்சி” -: வகுப்பு நாள் : 2 – நல்ல விசாரணை — ஏபிஜெ அருள்.

http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020609B

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
(ஒன்றை பணிந்து சமர்பிக்கின்றேன். அன்பர்களே!
எனக்கு எல்லாம் தெரிந்துக்கொண்டு இந்தப் பயிற்சியை ஆரம்பித்துள்ளேன் எனக்கருதவேண்டாம்.எப்படியாவது வள்ளலார் அய்யா நமக்கு சொல்லவந்த உண்மையை தெரிந்துக் கொள்ள நான் முயற்சி எடுத்துள்ளேன்.என்னுடன் என்னைப்போல் ஆசைக் கொண்டவரையும் அழைத்தேனே அன்றி வேறு ஒன்றுமில்லை – சகோதரி ஏபிஜெ அருள்)
தரையில் ஒரு விரிப்பில் சம்மணம் அல்லது நாற்காலியில் அமர்ந்து கால் மாட்டில் விரிப்பு வேண்டும். நிமிர்ந்து உட்காரவோம்.
நம் கைகளை நம் அய்யா வைத்திருப்பது போல் வைப்போம்.

திருமந்திரம் சொல்வோம்:

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

இதோ விண்ணப்பம் செய்வோம்:

அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
சிறிது நேரம் அமைதியாக இருந்து நமக்குள் உள்ளழுந்துவோம்.

உள்ளழுந்தியுள்ள நாம்,

சிந்தனையில்,
நாம் யார்?
நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கின்ற கடவுளின் நிலை என்ன?

அன்பர்களே! மிக முக்கியம்:
எவர் ஒருவர் மனத்தில் மற்ற எந்தொரு விசாரமின்றி நாம் யார்?
நமக்கு மேல் நம்மை அனுட்டிக்கின்ற கடவுளின் நிலை என்ன?
என்பதில் மட்டும் சிந்தித்து விசாரிக்கிறார்களோ அவர்களுக்கு
உண்மை உள்ளத்தில் பதியும் என்கிறார் நம் வள்ளலார்.

நாம் யார்??? நாம் யார்???

இதோ நம் வள்ளலார் நாம் யார் என விளக்குகிறார்கள்:

இயற்கையே அஞ்ஞான விருளில், அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதிக வுடம்பிற் சிறிதறிவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்கத் தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே யறிவாய்க், குற்றமே யனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமுகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய்க் குற்றமே குறிக்குமென்றறிந்தோ மாயினும், குற்றங் குறியாத வகை விண்ணப்பஞ் செய்தற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் துணிவு கொண்டு விண்ணப்பிக்கின்றோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கை யாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங் குறியாது கடைக்கணித் தருளிக் கருணை செய்தல் வேண்டும்.
அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம்போக, அவ்விருணைவிட்டு நீங்கிய காலத்தே,

இவ்வுலகினிடத்து புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல் கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவர யோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

பின்னர் எறும்பு, செல், புழு. பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து. கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்கு யோனிவர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்.

பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர். சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைப்படுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;
பின்னர் காட்டகத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராகப் பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தோம்;
அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் அவலமும் களைப்பும் துன்பமும் திருவுளத்தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைம்மாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.
உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

நான் யார் என்று இன்று தெரிந்துக் கொண்டேன்.
நான் யார் என்று இன்று தெரிந்துக் கொண்டதால்
எல்லா உயிர்களும் என் உயிர் போல்
என இன்று அறிந்து அனுபவிக்கின்றேன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
எல்லா உயிர்களிடத்தும் தயவு செலுத்துகின்றேன்.
அன்பர்களே!

திருமந்திரம் சொல்வோம்:

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

வகுப்பு 1 & 2 உள்ள குறிப்புகளை பல முறை ஊன்றி படிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகமிருந்தால் நம் வகுப்பில் சேர்ந்துள்ள அன்பர்களிடம் அது குறித்து சொல்லி விசாரித்துக்கொள்வோம்.
தினமும் வகுப்பு 1 & 2 ல் உள்ள விண்ணப்பங்களை வாசித்து கருத்தில் ஏற்றியே ஆக வேண்டும்.
இது சத்தியம்.
வகுப்பு தொடரும்…… அன்புடன் .ஏபிஜெ அருள். மதுரை.

பல அன்பர்கள் வகுப்பில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
விருப்பம் உள்ளவர்கள் பெயர் , விலாசம், செல் நம்பர் கீழ் வரும் செல்க்கு அனுப்பவும். 9487417834 (செல் போனில் விசாரணை தவிர்க்கவும்.)
அடுத்த வகுப்பில் சந்திப்போம். மீண்டும் நன்றி.

——————————————————————————————————-

CLASS: 3 ”பயிற்சி வகுப்பு” நாள் 3. நல்ல விசாரணை.—ஏபிஜெ.அருள்.

http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020645B

எல்லோருக்கும் வணக்கம். உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களை எக்காலத்தும் முக்கிய தடையாக அறிவிக்கிறது சுத்த சன்மார்க்கம். அதே நேரத்தில் எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குகிறதும் சுத்த சன்மார்க்கமே- இந்த சிறப்பின் உண்மையை தான் நாம் வகுப்புகளில் தெரிந்துக் கொள்ளப் போகிறோம்,
அன்பர்களே!!. இன்றைய விண்ணப்பம் வாசிப்போம். (வள்ளலார் கைப்பட எழுதியது)
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
வள்ளலாரின் மேலும் ஒரு சத்திய வாக்கியத்தை வாசிப்போம்:
””எல்லாச் சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்குகிறது சுத்த சன்மார்க்கம்.””

முதல் வகுப்பில் கடவுள் யார்? என்று கருத்தில் கருத வேண்டும் என்று குறித்தும்,
இரண்டாம் வகுப்பில் நாம் யார்? என்றும் ஓரளவு தெரிந்துக் கொண்டோம்.
மேற்படி 2 நாட்கள் வகுப்பில் தெரிந்துக் கொண்டதை தலைப்பாக காண்போம்.
கடவுள்: கடவுள் ஒருவரே!
நாம் : பலப் பிறவிகளில் பிறந்து பிறந்து இறந்து இறந்து பின் உயர்வுடையதாகிய இந்த மனித தேகத்தில் வந்துள்ளோம்.
ஒவ்வொருவரும் உண்மையன்பால் கடவுளை கருத்தில் கருத வேண்டும்.
அன்பர்களே!!
வள்ளலாரின் மார்க்கத்தில் கருத்தில் கருதப்பட வேண்டிய கடவுள் ஒருவரே!
அதாவது தெய்வம் ஒன்றே!
அதாவது தனிக்கடவுள் ஒருவரே!
இந்நிலையில் வள்ளலார் மார்க்கத்தில் உரியவர்களாக்கிக் கொண்ட நமக்கு நம் அறிவில் பதிய வைக்க வேண்டியது:- கடவுள் ஒருவரே!
அன்பர்களே! இதை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
அடுத்து,
இந்த வகுப்பில் காண இருப்பது யாதெனில்:
அந்த ஓர் உண்மைக் கடவுளை நாம் காண என்னச் செய்ய வேண்டும்?
எந்தொரு மார்க்கத்திலும் கடவுளை காண்க என அறிவுறுத்தப் படவில்லை. காரணம் கடவுள் (கள்) இவர்களே என வெளிப்படுத்தி, அவர்களை வணங்கி, ஆச்சாரங்கள் மூலமாக வழிபாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு கருத்தில் கருதப்பட்டுள்ள அந்த ஓர் உண்மைக் கடவுளை நாம் தான் காண வேண்டும்.
ஆக,
வள்ளலாரின் மார்க்கத்தில் அருள் பெறுவதற்கு நம் அறிவில் கடவுளின் நிலையை அறிந்தே ஆக வேண்டும்.
வள்ளலார் அவர்தம் இடைவிடாத நன்முயற்சியில் சத்திய அறிவில் கடவுளின் நிலையை கண்டார்கள்.
அங்ஙனம் கண்ட அந்த உண்மை கடவுளை நமக்கு அகவல், பாடல்கள், குறிப்புகள் மூலம் சொல்லியுள்ளார்கள்.
இங்ஙனம் வள்ளலார் கண்டது போல் நம் ஒவ்வொருவரையும் கடவுளின் நிலையை காணச் சொல்கிறார்கள்.எனவே தான் வள்ளலார் தன் மார்க்கத்திற்கு சமயங்கள், மதங்கள், மார்க்கங்களை எக்காலத்தும் முக்கியத் தடைகளாக அறிவித்து உள்ளார்கள். (பார்க்க முதல் விண்ணப்பம்)
நிற்க! வள்ளலார் அவர்தம் அறிவில் கண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்தான் ஒவ்வொருவரும் காண்போம். ஏன்னென்றால் கடவுள் ஒருவரே.
ஆனால் வள்ளலார் அறிவித்த, அனுபவித்தில் கண்ட ஆண்டவர் மற்றும் அவர் பெற்ற அருள் அவருக்கே அன்றி நமக்கு இல்லை என அறிதல் வேண்டும். நம் முயற்சியில் காணாமல் நாம் கடவுளின் அருளைப் பெறவே முடியாது. இது சத்தியம்.
என்ன அன்பர்களே! புரியுது ஆனா புரியவில்லையா?
இதுவே உண்மை. இந்த உண்மையில் நம்மை தெளிவு படுத்தாமல், நாம் மேல் விசாரணைக்கு செல்ல முடியாது. அதாவது, ஒவ்வொருவரும் நல்ல விசாரணை இதில் செய்தே ஆக வேண்டும்.
நல்ல விசாரணையில் கடவுளின் உண்மை ( நிலை) அறிதல் வேண்டும்.
இந்த தனி வழியை கண்டு அதில் நன்முயற்சி செய்து உண்மை கடவுளை காண்கிறார் வள்ளலார். இந்த வழியை அங்ஙனமே ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையால் எல்லாருக்குமே நமக்கெல்லாம் அறிவித்த மகானே நம் வள்ளலார். வள்ளலாரிடம் வெளிப்பட்ட இந்த கருணைப்போல் எவரிடமும் வெளிப்படவில்லை.
அதணாலேயே ஆண்டவர் தன் இயலையே வள்ளலாருக்கு அருளுகிறார்கள்.
அன்பர்களே!
பாருங்கள் நம் அய்யாவின் கைகளை.
கடவுளின் அருள் பெற்றாலும் மற்ற….வர்களைப் போல் ஆசிர்வாதம் பண்ணாமல் இருக்கும் நிலையை.. காரணம் தாம் என்னப் பெற்றோமே அதை எல்லோருமே பெறும் நிலையிலுள்ளது என்ற உண்மையை வள்ளலார் உணர்ந்திருந்தே.
அய்யாவின் அருகிலேயே முழுஅன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான சிலர் இருந்தார்கள். அதில் ஒருவர் திரு கல்பட்டு அய்யா. வள்ளலார் பெற்றது போல் பெரும்பயனாகிய மரணமில்லா பெருவாழ்வை அவர்கள் ஏன் பெறவில்லை. அல்லது வள்ளலாரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்தியப்பட்டிருந்த அவருக்கு ஏன் வள்ளலார் அந்த பயனை கொடுக்கவில்லை. கல்பட்டு அய்யா இறந்தார்கள். அவரின் சமாதி தருமச்சாலை அருகில் உள்ளது. (இதை நமக்குள் வகுப்பில் உள்ளவர்கள் விசாரணைக்கு தான் எடுக்கிறோமே அன்றி அந்த பெரியவரை, சான்றோரை குறை கூறுவதாக எடுக்க கூடாது. அவரி(களி)ன் அன்பு,பணிவு,கருணைக்கு நாம் சிறிதும் அருகதையாக மாட்டோம்.) இதை நாம் எதற்காக குறிப்பிடுகிறோம் என்றால்; வள்ளலார் பெற்ற மரணமில்லா பெருவாழ்வை. நாமும் பெற வேண்டுமானால் நம் அய்யா வள்ளலார் என்ன செய்தார்களோ அல்லது எங்ஙனம் நம்மை செய்ய சொல்கிறார்களோ அங்ஙனம் செய்தாலன்றி கைக்கூடாது. இது சத்தியம்.

எத்தனை அறிஞர்கள், சான்றோர்கள்,ஞானிகள் இருந்தார்கள். அவர்களால் சுத்த சன்மார்க்கம் குறித்து பல உரை நூல்கள், உபதேசங்கள், நமக்கு கிடைத்துள்ளன. நமக்கு மிக பயனுள்ளதாக இருக்கின்றன. ஆனால் அவர்கள் வள்ளலாரைப் போல் ஒளி தேகம் ஏன் பெறவில்லை. இறந்தார்கள். சமாதியானர்கள். இன்றும் நம்மைச் சுற்றி எத்தனை அறிஞர்கள், சான்றோர்கள்,ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களால் பல நன்மைகள் நமக்கு உள்ளது. ஆனால் மூப்பு, பயம், துன்பம் அவர்களை வந்துடைகிறதே. நாளை நமக்கும்.
ஆனால்’
”””தன்னைப் போல் எல்லாரும் பெறக்கூடியதாக உள்ளது””” என சத்தியம் செய்கிறார் நம் வள்ளலார்.
அப்படியென்றால் என்ன தான் செய்வது??
நாம் வள்ளலாரின் மீது அவர்தம் வழியின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளவர்கள்.
அன்பர்களே!
இதற்கான பயிற்சியை தான் நமக்கு வள்ளலார் சத்திய ஞான சபையில் தருகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு சத்திய ஞான சபைக்கு செல்லுங்கள்.
அங்கு வெளிப்பட்டுள்ள அனைத்துமே நம் விசாரணக்கே (பயிற்சிக்கே). வள்ளலார் குறிப்பிட்டுள்ள ஒழுக்கத்தை நிரப்பிக் கொண்டவர்களாக நாம் இங்கு இருந்தோம் என்றால், நமக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுக்க வள்ளலார் வருவது சத்தியம். நம் வள்ளலார் அனைத்தையும் நமக்கு அங்கு விளக்கமாக தெரிவிக்கிறார்கள். தகுதியாக வருபவர்கள் உள்ளத்தில் வள்ளலார் வெளிப்படுகிறார். வெளிப்படுவார்.
இது சத்தியம். இது சத்தியம்.
இதணால் தான் வள்ளலார் தன் மார்க்கத்தை கீழ்வருமாறு கூறுகிறார்கள்:
என் மார்க்கம் அறிவு மார்க்கம்.
என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை. —- தொடரும்.

இன்றைய வகுப்பு முடிந்தது. அடுத்த வகுப்பில் நம்மை தகுதியாக்கும் ஒழுக்கம் குறித்து காண்போம். ——- அன்புடனும் பணிவுடனும் ஏபிஜெ.அருள்.
பல அன்பர்கள் வகுப்பில் சேர்ந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
விருப்பம் உள்ளவர்கள் பெயர் , விலாசம், செல் நம்பர் கீழ் வரும்
செல்க்கு அனுப்பவும். 9487683114 (செல் போனில் விசாரணை தவிர்க்கவும்.)
கேள்விகள் இருப்பின் இ மெயில் apjarul1@gmail.comஅனுப்பலாம். வகுப்பில் சேர்ந்தவர்கள் மட்டுமே விசாரணைக்கு அனுமதிக்கப்படுவர்.
அடுத்த வகுப்பில் சந்திப்போம். மீண்டும் நன்றி.

——————————————————————————————————-

வகுப்பு நாள்: 4 : நல்ல விசாரணைப் பயிற்சி : ஏபிஜெ. அருள்.

http://www.vallalarspace.com/KarunaiSabai/c/V000020708B

வகுப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
“ இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, பூரண சித்தியைப் பெற வேண்டுவது சன்மார்க்கக் கொள்கை.” கொள்கை அடிப்படையில் நமது வகுப்பு தொடரட்டும்.
எனக்கு ஆதரவு அளித்த/அளித்துக்கொண்டியிருக்கிற சான்றோர்கள், பெரியவர்கள், புதியவர்கள் பலர் குறிப்பாக இளைஞர்கள்,இளைஞிகள், மற்றும் அயல் நாடுகள்; பர்மா, அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமுதாபி, சிலோன், போன்றப் பல நாட்டிலிருந்து அன்பர்கள் மற்றும் மிகப்பெரியவர்கள் பலர் எனக்கு தொலைப்பேசி, மின்னஞ்சல், ஸ்கைப் மூலம் தொடர்புக் கொண்டு நல்ல விசாரணை வகுப்பு தொடர வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தனர். நான் அவர்களிடம் மிகத்தெளிவாக தெரிவித்ததது யாதெனில்: ”நான் வள்ளலார் நெறியை அறிந்து, அனுபவித்து சொல்லவில்லை. தெரிந்ததை அங்ஙனமே உள்ளது உள்ளபடியே என் உள்ளத்தில் நிறுத்தி கொள்ளும் போது, என்னைப் போல் விருப்பம் கொண்ட ஒத்த அறிவு, ஒழுக்கம், கருத்து உடையவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் விருப்பத்திலேயே இந்த வகுப்பு என்றேன்.
நான் எவரையும் தாழ்வாக பார்க்கவில்லை. பார்க்க முடியாது.காரணம், அந்த தாழ்வான நிலையிலிருந்தும், அறியாமையிலிருந்தும் தான் நான் மற்றும் எல்லாருமே வந்தோம். வருகிறோம் என்பதை ஏற்கனவே தெரிந்துள்ளேன். எனது தூய்மையான எண்ணத்தை நீங்கள் முழுமையாக புரிந்துக் கொண்டது என் பாக்கியமே.
இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்த இந்த இனைய தளம், அதன் எம்.டி மற்றும் டீமுக்குமே எல்லா பாராட்டுதல்களும்.உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களும் சேரும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
நமது வகுப்புக்கு எல்லாம் வல்ல நம் வள்ளலார் என்றும் ஆசிரியராக வந்திருந்து, நாம் எல்லாரும் உண்மை வழியை (சுத்த சன்மார்க்கத்தை) தெரிந்துக் கொள்ள செய்விப்பார். இது சத்தியம். இது சத்தியம்.
அன்பர்களே, இந்த வகுப்பு நமக்கு மிக மிக முக்கியம்.
இதை கருத்தில் கொண்டால் வள்ளலார் கண்ட மார்க்கத்தின் கொள்கையை நாம் தெரிந்தவர்களாகுவோம். கண்டிப்பாக இந்த சுத்த சன்மார்க்க பயிற்சியில் நமக்கு திருவருள் கைக்கூடும்.

இன்றைய நம் வகுப்பு பாடத்திற்கு ஆதாரமாக எடுத்துள்ளவை. உரை நடைப் பகுதி & முதல் விண்ணப்பம் & மகாபேருபதேசம்.
சுத்த சன்மார்க்க சாதனம்:
சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்:
பரோபகாரம், சத்விசாரம்,
பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது.
கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல்.
இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.
அன்பர்களே!

நம் சிறுமைகள் எவை? நமக்கு தெரிந்தும் மற்றும் தெரியாமலேயே நம்மிடம் ஒட்டியுள்ள சிறுமைகளில் முக்கியமானது;
சாதி,குலம்,சாத்திர சடங்குகள், குரோதம், காமம் முதலியவை.
நாம் சொல்லலாம் என்னிடம் இவை இல்லைஎன்று. இது அவரவர் முடிபுக்கு அறிவுக்கு விட்டுவிடுவோம்.
இந்த வகுப்பில் அந்த கட்டுப்பாட்டு ஆச்சாரங்களை குறித்தும், ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ளவது குறித்தும் முடிந்த வரை நம் வள்ளலாரின் சத்திய வாக்கியங்களைக் கொண்டு காண உள்ளோம்.
நம் அய்யா சொல்கிறார்கள் இதோ: (பக்கம்:418):
”தத்துவவொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.

தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது”
ஆக நம்மிடம் ஒழிந்து போக வேண்டிய ஆச்சாரங்கள் (முக்கியமானவை):
.
1.ஜாதியாசாரம், 2.குலாசாரம், 3.ஆசிரமாசாரம், 4.லோகாசாரம், 5.தேசாசாரம், 6.கிரியாசாரம், 7.சமயாசாரம், 8.மதாசாரம், 9.மரபாசாரம், 10.கலாசாரம், 11.சாதனாசாரம், 12.அந்தாசாரம், 13.சாத்திராசாரம்,
இந்த ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும்.
பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும்.
பொது நோக்கம் வருவித்துக்கொள்ளல் வேண்டும்.
சாதி, குலம், ஆசிரமம், லோகம், தேசம், கிரியா, சமயம், மதம், மரபு, கலா, சாதனம், அந்தம், சாத்திரம் என்றால் என்ன? இதில் சிலது தெரியும்.
ஆசாரம் என்றால்; ”வழக்கம்” எனப்படும்.
1. ஜாதி : வருணம், இனம் ( இனப்பழக்க வழக்கங்கள்)
2. குலம் : குடி (வீடு) (குலப்படியான வழக்கம், வீட்டு முறை)
3. ஆசிரமம் : ஆச்சிரமம். வாழ்க்கை முறை / உறைவிடம்
4. லோகம் : உலகம் (உலகத்தாரொழுக்கம்- உலக பழக்க வழக்கம்)
5. தேசம் : நாடு ( நாட்டு வழக்கம்)
6. கிரியை : செய்கை – உபாயம் – சடங்கு விதி (உபாய வழி வழக்கம்)
7. சமயம் : சைவம், வைணவம், பெளத்துவம் போன்ற சமயங்களின்
வழக்கங்கள்
8. மதம் : வேதம், சித்தாந்தம் போன்ற மதங்களின் வழக்கங்கள்.
9. மரபு ; பாரம்பரியம், பழமை, ( பழமையான, பாரம்பரியமான வழக்கம்)
10.கலா : பண்பாடு ( பண்பாடு, மொழி பழக்க வழக்கம்)
11.சாதனம் : கருவி, சின்னம், பயிற்சி (இவைகளின் வழக்கம்)
12 அந்த : உள்ளடங்கிருத்தல் (முடிவாக மரணமே என்ற அஞ்ஞான
வழக்கம்/முக்தி)
13. சாத்திரம் : சமய,மத நூல்கள் அடிப்படையில் பழக்க வழக்கங்கள்.
ஆச்சாரங்களை விட்டொழிக்க வேண்டும். விட்டொழிக்காமல் கருணையை விருத்தி செய்ய முடியாது. கருணை நம்மிடம் விருத்தியாகவில்லை என்றால் உண்மை நம் உள்ளத்தில் பதியாது.
இதை பல இடங்களில் உறுதி செய்யலாம்.
வள்ளாலாரின் சத்திய சிறு விண்ணப்பம்: பக்கம் 556 கடைசி பாரா.
“எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.”
மீண்டும் வாசியுங்கள்: “……முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும்,…..”
இங்கு, சங்கற்பம் என்றால்;- மனோ நிச்சயமான கொள்கை, கருத்து
விகற்பம் என்றால்:- மனோ மாறுபாட்டிலுள்ள வழக்கங்கள்.
அன்பர்களே! இங்ஙனம் வள்ளலார் சொல்லிருக்க, மற்ற சமய,மத மார்க்கங்களின் கொள்கை மற்றும் உலக பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்கு எக்காலத்தும் முக்கியத்தடைகளா இல்லையா?
இன்னொரு இடத்திலும் இதை உறுதி செய்வோம்.. பக்கம் : 410 அதுவும் திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் நம் வள்ளலார் கீழ் வருமாறு சொல்கிறார்கள்:
“இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்துக் கொள்ளவில்லை.”
யாதெனில்;
இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்” என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக உடையது கடமை.”
அன்பர்களே! இந்த உண்மை நம் வள்ளலார் சொன்னாலும் நாம் கடைப்பிடிக்கிறோமா? சிந்தியுங்கள். விசாரியுங்கள்?
அன்பர்களே! உண்மையாக நான் இந்த இடத்தில் அழுகிறேன். கண்ணீர் வழிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நெறி குறித்து ஆடியோ பதிவு செய்யப்பட்டது. இந்த வரியை நான் வாசித்த போது இதே போல் அழுதேன். ஏங்கி ஏங்கி அழுதேன். உள்ளத்தில் ஓர் உணர்ச்சி உண்டாகியது. பதிவு சில மணி நேரம் தடைப்பட்டது. தொடர்ந்து வாசித்தேன்.
பேருபதேசத்தில் ஒரு சத்திய வாக்கியம்: அது இதோ:
பக்கம்: 475:
”உண்மை சொல்ல வந்தனனே என்று
உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துக் கொள்வாரில்லை.”
நாம் அந்த உண்மையை இன்று இந்த வகுப்பில் தெரிந்துக் கொண்டோம். உரக்க சொல்லுங்கள் நம் அய்யாவிடம்.
அன்பர்களே! உண்மையை தான் தெரிந்துக் கொண்டுள்ளோம் என்பதினால் சுத்த சன்மார்க்கப் பயன் கிட்டாது. அந்த உண்மையை நாம் அறிய வேண்டும். அகத்தில் அனுபவிக்க வேண்டும். என் மார்க்கம் அறிவு மார்க்கம். என் மார்க்கம் உண்மையறியும் மார்க்கம். என் மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை (பக்கம்439) என்கிறார் நம் வள்ளலார்.
பக்கம்: 419;
“…ஆச்சாரங்களை விட்டொழித்திப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது…”
அன்பர்களே!
நம் மார்க்கத்தில் எங்கும் பரிபூரணராக நிறைந்துள்ள ஓர் உண்மைக் கடவுளை நம் ஒவ்வொருவரும் உள்ளத்தில் (அகத்தில்) காணச் சொல்வதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
ஆக, அந்த உண்மைக் கடவுள் குறித்து பார்ப்பதற்கு முன்பே நாம் எங்ஙனம் உண்மைக் கடவுள் நிலைக் குறித்து வியம்ப முடியும்? நம் வள்ளலார் அவர் கண்ட உணமையை பாடல்கள், விண்ணப்பங்கள், உபதேசம் மூலமாக பதிவு செய்துள்ளார்கள். ஆனால் நாமோ அதை மனப்பாடம் பண்ணிக்கொண்டு கடவுள் நிலை இங்ஙனமே என்று நம்மிடையே விவாதிக்கிறோம். அன்பர்களே! உண்மைக் கடவுளின் நிலை கண்டவுடனே நமக்கு பிணி, மூப்பு, துன்பம் ஏது? பிணி,மூப்பு,பயம்,துன்பம் நம்மிடம் உள்ளது என்றால் நாம் இன்னும் கடவுளின் நிலை காணாதவர்களே! அப்படித்தானே அன்பர்களே!
அன்பர்களே!
இது ஏதோ ஒரு கட்டுரை என நினைத்து படித்தால் பிரோயஜனம் ஏற்படாது. ஒவ்வொருவரும் உள் அழுந்தி, சிந்தித்து, சிந்தித்தலை விசாரிக்க வேண்டும். இதுவே சுத்த சன்மார்க்கத்தின் சங்கல்பம் ஆகும். (ஆதாரம் பக்கம்:392).
வகுப்பு தொடரும்…… வணக்கம்; ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India