January 22, 2025
tamil katturai APJ arul

’ஒருமை’ என்பதற்கு பொருள் – வள்ளலார்

ஒருமை என்பதற்கு என்ன பொருள்? என்பதை நாம் தெரிந்துக்கொள்ளும் முன்பு அதன் முக்கியத்துவத்தை முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
”கருணை” மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சாதனமாகும்.
தயவு,அருள்,கருணை ஒரே பொருளையே குறிக்கும்.
என்னை யேறாநிலை மிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு.
தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.
அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும்.
அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.
அது அந்த ஒருமையினாலேதான் வந்தது.
நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

பக்கம் 414: ல் நம் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் இதோ:
ஒருமை யென்பது தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்;

மற்ற இடத்தில்,

தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது என்கிறார் நம் வள்ளலார்.
(ஆங்கீரச வருடம் கார்த்திகை மாதம் 3ஆம் நாள்.)
அன்பர்களே!
மொத்தத்தில் உலகில் காணும் சமய,மத,மார்க்கங்களில்
உள்ள உண்மை மற்றும் உயர்ந்த கருத்து எதுவெனில்:
” இதரர்களுக்கு இம்சை இல்லாது,
அவர்கள் செய்யினும்
தான் சகித்து அடங்கி நிற்பது.”

அன்பர்களே! இங்ஙனம் இருப்பின் நமக்கு ஒருமையை தரும் என்கிறது மற்ற மார்க்கங்கள்.
ஆனால்,
சுத்தசன்மார்க்கத்தில் வள்ளலார் ஒருமைக்கு தரும் விளக்கம் பாருங்கள்;
ஒருமை யென்பது’
தனது அறிவு ஒழுக்கம்
ஒத்த இடத்தில், தானே கூடும்;
மேலே ஒருமைக்கு பொருள் காணும் பொழுது,
தனது அறிவு+ஒழுக்கம் ஒத்த இடம் என உள்ளது.
அன்பர்களே!
இங்கு ”தனது அறிவு” என்பது’ அவரவர் பெற்றிருக்கும் அறிவு.
இங்கு ’ஒழுக்கம்” என்பது;
11.01.1872ல் வெளியிட்ட அறிவிப்பில்
“இதில் வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள்பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும், உண்மையுரைத்தல், இன் சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று, சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்”
நிற்க! இங்கு சொல்லப்பட்ட ‘ஒழுக்கங்கள்’ பொதுவாக எல்லா ஞானி, யோகிகளால் ஏற்கனவே கண்டறியப்பட்டவை, போதிக்கப்பட்டவை. சமயமத மார்க்கங்களில் உள்ளவை.
இந்நிலையில் வேறு ஏதேனும் வள்ளலார் சிறப்பாக தனியாக சொல்லியுள்ளார்களா? என இங்கு நாம் கண்டறியவேண்டும். அங்ஙனம் ஏதேனும் சொல்லப்பட்டியிருந்தால் மட்டுமே வள்ளலார் கண்ட மார்க்கம் ஒரு தனி மார்க்கமாக கருத முடியும். ஏனென்றால் அவரின் தனி நெறியை வெளிப்படுத்தும் வழியும் புதியதாகவே இருக்க வேண்டும்.
ஆம், வள்ளலார் “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” என தனியாகவே ஓரிடத்தில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளார்கள். உரைநடைப்பகுதி (ஆவண எண்.4, பக்கம் 410ல்) ’’திருக்கதவு திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் (30.01.1874) வள்ளலார் சொல்லியது;இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் (சுத்த) சன்மார்க்க ஒழுக்கம் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் என்ற திருவார்த்தை அதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாகவுடையது கடமை”
மற்ற ஒழுக்கங்களைத் தன்மார்க்கத்திற்கு அடிப்படையான தகுதிகளாக வைக்கிறார் வள்ளலார் என அறியமுடிகிறது. எனவே சுத்தசன்மார்க்கத்தில் “அடிப்படை தகுதி ஒழுக்கங்கள்” எனவும், “சுத்த சன்மார்க்க ஒழுக்கம்” எனவும் வள்ளலார் மிகத் தெளிவாக குறிப்பிட்டு உள்ளதை இங்கு உறுதி செய்யமுடிகிறது. ஆக, சுத்த சன்மார்க்கஒழுக்கம் நிரம்பிய பின்பே கடவுள் நிலையறிய முடியும் என்ற உண்மையில் நாம் பெற்றிருக்கும் அறிவு ஒத்து வந்தால் ஒருமையை நாம் பெறுவோம். அதன்பின்பு இறை தயவு நமக்கு கிட்டுவது சத்தியமே.
இதோ சில பாடல் வரிகளை காண்போம்;
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.
####
ஒருமை நிலையில் இருமையும் தந்த
ஒருமையி னீர்இங்கு வாரீர்
பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்
####
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே
####
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
####.
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே
####.
தத்துவம் அனைத்தும் தவிர்த்துநான் தனித்த
தருணத்தில் கிடைத்ததொன் றென்கோ
சத்துவ நிரம்பும் சுத்தசன் மார்க்கந்
தனில்உறும் அனுபவம் என்கோ
ஒத்துவந் தெனைத்தான் கலந்துகொண் டெனக்குள்
ஓங்கிய ஒருமையே என்கோ

உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே.

ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

ஒன்றே சிவம்என் றுணர்ந்திவ் வுலகமெலாம்
நன்றே ஒருமையுற்று நண்ணியே –

ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

ஒருமைபெறு தோற்றம்ஒன்று தத்துவம்பல் வேறு
ஒன்றின்இயல் ஒன்றிடத்தே உற்றில

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
\கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.
—– நல்ல விசாரணை செயதமைக்கு நன்றி; உங்கள் ஏபிஜெ அருள்.

unmai

Channai,Tamilnadu,India