January 22, 2025
tamil katturai APJ arul

வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?

வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?BY APJ.ARUL.

 

Author :RAMALAKSHMI

அன்பர்களே!
திருஅருட்பிரகாச வள்ளலார் நம்மிடம் சத்தியம் செய்து சொல்வது என்னத் தெரியுமா?
“வம்மின் உலகியலீர், மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர். புனைந்துரையேன், பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன். பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே. புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான் புகழ்கின்றேன் என்மொழி ஓர்பொய்மொழி எண்ணாதீர்”
ஆக வள்ளலார் நம்மிடம் சத்தியம் செய்து அறிவித்தது; “மரணமில்லா பெருவாழ்வில் நாம் வாழ்ந்திடலாம்” என்பதைத் தான்.
கடவுளை எங்ஙனம்
வழிபாடு செய்தல் வேண்டும்?
நமக்கு துணையாக எவரேனும் உண்டா?
மேற்படி கேள்விக்கு பதில்;
“உற்றவரும், பெற்றவரும், பிறரும், உடைமைகளும், உலகியலும், உற்றதுணை அன்றே” என்கிறார் வள்ளலார்.
இறைநிலையை அறிய இறைவனே துணை என்பதை நாம் இங்கு சத்தியமாக அறிய வேண்டும். எனவே ஆண்டவனின் நிலையறிய அவர்தம் துணையையே தான் நாம் பக்தியோடு பணிந்து வேண்டுதல் வேண்டும்.
வள்ளலார் கீழ்வருமாறு பக்தியோடு பணிந்து உரைக்கிறார்கள்.
“மிகுந்த சுவைக் கரும்பே, செங்கனியே, கோந் தேனே, மெய்ப்பயனே, கைப்பொருளே, விலையறியா மணியே, தகுந்த தனிப் பெரும்பதியே, தயாநிதியே, கதியே, சத்தியமே.”
மேலும், வள்ளலார் கீழ்வருமாறு கணிந்துளத்தே கனிந்து நினைந்துரைக்கிறார்.
“பரம்பரமே, சிதம்பரமே, பராபரமே, வரமே, துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே, துரியமுடி அனுபவமே, சுத்த சித்தாந்த மதாய்த் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே, சமரச சன்மார்க்க சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே” என்கிறார்கள்.
அன்பர்களே!
மேற்படியாக பத்தியொடு பணிந்து, கணிந்துளத்தே கனிந்து நினைத்துரைத்திடில் அப்பொழுதே காணாத காட்சி எலாம் கண்டு கொளல் ஆமே! என்கிறார் வள்ளலார்.
நிற்க! அன்பர்களே, இந்த இடம் மிகவும் முக்கியமான இடமாகும்.
மேலும் மிக முக்கியமாக மற்றொன்றையும் நமக்கு குறிப்பிட்டு சொல்கிறார்கள்.
அஃது யாதெனில்;
“கண்டதெலாம் அநித்தியமே
கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யே
நீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமே
உட்கொண்ட தெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந்திலிரே”
என்கிறார் வள்ளலார். மேலும்,
சாதியும், சமயமும், மதமும் பொய்யென (211)
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி (212)
சாதியும், மதமும் சமயமும் காணா (115)
ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி (116) மற்றும்
உரைநடைப் பகுதி பக்கம் 411&ல்;
“சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயம், மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காம, குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும், கொலை, புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.”
மேலும், எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்” என கடவுளிடத்தில் விண்ணப்பிக்க சொல்கிறார் வள்ளலார்.
ஆக, அன்பர்களே,
உண்மைக் கடவுளை கருத்தில் கருதி அக்கடவுளை உண்மை அன்பால் வழிபாடு செய்வதற்கு முன்பு, உலகில் காணும் சமய, மத, (மார்க்கங்களில்) சாதிகளில் லட்சியம் வையாது, அவற்றின் ஆசாரங்களை விட்டொழித்து பொது நோக்கத்தை வருவித்துக் கொண்டு நம்மை சுத்த சன்மார்கக நெறிக்கு தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சத்தியமாக தெரிந்திருக்க வேண்டும்.

unmai

Channai,Tamilnadu,India

2 thoughts on “வள்ளலார் செய்த சத்தியம். & கடவுளை எங்ஙனம் வழிபாடு செய்தல் வேண்டும்?

  • True article about God and this website is good to realize the God

  • welcome

Comments are closed.