ஜீவகாருண்ய ஒழுக்கம் –சுத்த சன்மார்க்க ஒழுக்கம்
ஜீவகாருண்ய ஒழுக்கம் –
சுத்த சன்மார்க்க ஒழுக்கம்
—- APJ ARUL @ ELANGO
ஜீவகாருண்ய ஒழுக்கம் :
திருவருட்பிரகாச வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் மேன்மையையும் பயனையும் குறித்து மூன்றுப் பிரிவுகளில் விளக்கியுள்ளார்கள். வெளிவந்த வருடம் 1867.
நாம் எதற்காக ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி வள்ளலார் விவரிக்கும் போது; (ஜீ.கா. உரை நடை பக்கம் நூல் :பக்கம் : 133).
“…. இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடை படாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபம் என்று, உண்மையாக அறிய வேண்டும். ஒப்பற்ற பெரிய வாழ்வை கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும். அவ்வருள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் கைக்கூடும் …” என்கிறார் வள்ளலார்.
மூன்றுப்பிரிவுகளிலும் வள்ளலாரால் விவரிக்கப்பட்ட ஜீவகாருண்ய ஒழுக்கத்தை சுருக்கமாக காண்போம்.
- கடவுளின் அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் கூடுமல்லது, வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.
- ஜீவர்கள் தயவு என்பது; ஜீவகாருண்யம், ஆன்ம விளக்கம் ; கடவுள் தயவு என்பது; அருள், இயற்கை விளக்கம்;
- தயவை கொண்டு தயவை பெறுதல், விளக்கத்தை கொண்டு விளக்கம் பெறுதல்.
- ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும். அதனால் உபகார சத்தி விளங்கும். அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.
- ஜீவகாருண்யர்களே (மதத்தார்கள்), கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.
- ஜீவகாருண்யத்தில் ஆன்ம உருக்கத்தை கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் என்றறிய வேண்டும்.
- ஜீவகாருண்யத்தால் அருள் விளக்கம் தோன்றி கடவுள் நிலை கை கூடி முத்தி இன்பம் அடைய முடியும்.
- ஜீவகாருண்ய ஒழுக்கமானது கடவுள் அருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமென்பதுமல்லாமல், அந்த அருளின் ஏகதேச விளக்கம் என்றும் அறிய வேண்டும். இயற்கை உண்மையின் ஏகதேசம்.
- ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறியப்படும்.
- ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம்/காருணியம் உண்டாக, உண்டாக, அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும். அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும். அவ்வனுபவம் பூரணம் ஆதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்.
- தலைமையான ஜீவகாருண்ய ஒழுக்கமான பர ஜீவகாருண்யத்தால், (பசி, கொலையால் வரும் துன்பங்களை நீக்குவதால்) இவ்வுலக இன்பம் எல்லாவற்றையும், அளவிறந்த சித்தி இன்பங்களையும் எக்காலத்தும் அழியாத முத்தியின்பத்தையும் அருளால் அடைவிக்கும். (பக்கம்:193).
அன்பர்களே ! இதை கவனிக்க: ஜீவ..கா. உரை நடைப்பகுதி
15 ல்;
“வடலூரில் 25-05-1867 அன்று, வைகாசி மாதம் 11 வியாழக்கிழமையன்று தருமசாலை தொடக்க விழாவில், வள்ளலாரால் இயற்றப்பட்ட இந்நூல், எழுதப் பெற்றிருந்த வரையில், அதாவது மூன்று பகுதிகள் படித்து விளக்கப் பெற்றது.
நிற்க ! அதன்பின்பு வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மிக விரிவாக ஏழு பிரிவில் எழுதி உபதேசித்ததாக கேள்வி. மற்ற பிரிவுகள் கிடைக்கவில்லை.”
மேலும் ஜீ.கா.பக்கம் 194 ல்: சுவாமிகள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை மிக்க விரிவாக எழு பிரிவில் எழுதி உபதேசித்ததாகக் கேள்வி. அது முற்றிலும் உண்மையானால் மூன்றாவது பிரிவின் தொடர்ச்சியும் மற்ற நான்கு பிரிவும் இது காறும் கிடைக்காதிருப்பது தமிழ்நாட்டின் தவக்குறை என்றே கொண்டு வருந்திப் பிரார்த்திக்க வேண்டிருக்கிறது. (ஆ.பா. – ஆ. பாலகிருஷ்ணன்).
அன்பர்களே !
மூன்றாவது பிரிவின் தொடர்ச்சியை தேடும் போது, உரைநடை பகுதியில் சொல்லப்பட்டுள்ள சில “ஜீவகாருண்ய ஒழுக்கக் குறிப்புகளை” பார்க்க முடிகிறது. அவை ஜீவகாருண்யத்தால் நமக்கு மென்மேலும் விளங்கும் நிலைகளாக அவற்றை பார்க்க முடிகிறது.
ஆம், ஜீவகாருண்ய ஒழுக்கம் நூல் மூன்று பிரிவுகளில் சொல்லப்பட்டுள்ள ஜீவகாருண்யத்திற்கான விளக்கத்தை தொடர்ந்து மேலும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது எனலாம். இதோ: பக்கம்: 486)
“…..அன்னியவுயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற்படியாயிருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.
“ நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினால் அல்லது வேறு வகையால் அடைவது அரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தால் அல்லது பெறமுடியாது. ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில்: கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. (பக்கம் :486).
மற்ற உயிர்களின் துன்பங்களை நீக்குவது ஜீவகாருண்ய ஒழுக்கம் எனக்கண்டிருந்தோம். இங்கு மற்ற உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலும் ஜீவகாருண்யம் என கருத்தில் கொள்ள வேண்டும். அதுபோல், கடவுள் நிலை எப்படி பட்டது? நம் நிலை எப்படி விளங்குகிறது? என இந்த இரண்டையும் குறித்து விசாரம் செய்தல் என்பதும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் வருகிறது.
அடுத்து, ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள, ஜீவகாருண்யத்தால் வரும் பயனை விட மேலும் உயர்நிலைப்பயனை பெறும் விஷயத்தை இங்கு பார்க்கமுடிகிறது. அவற்றை சுருங்க பார்ப்போம்.
உரைநடைப்பகுதி பக்கம் 484 ல் ;
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும்.
ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும்.
அடுத்து, உரைநடையில் பக்கம் 484 ல்; வேத ஆகமங்களில், மந்திரத்தில், சொல்லப்பட்டுள்ள ஜீவகாருண்யம் குறித்து பார்க்கையில்;
பிரமன் பெற்ற பயன் வரை அடைய முடியும்.
ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம்.
காயத்ரி: கா–ய–த்ரி. (உரை நடைப்பகுதி பக்கம் : 456 ல்; சாத்திரத்தில் சாதனமாக உள்ள மகா ஜெபம் தான் காயத்ரி.
க – ஜலதத்துவமாகிய ஸ்தூலதேகம், பிரமஸ்வரூபம்.
ய – வாயுதத்துவமாகிய சூக்ஷ்மதேகம், விஷ்ணு ஸ்வரூபம்.
ஆ – அக்னிதத்துவமாகிய காரணதேகம், ருத்ரஸ்வரூபம். த்ரி மூன்று.
அதாவது, மேற்குறித்த மூன்று தேகங்களின் ஸ்வரூப ரூபசுபாவ குணங்களை ஐயம் திரிபு மயக்க மின்றிக் கடந்தால், ஜனனமரண சாகரம் நீங்கி நித்தியர் ஆவோம். எப்படியெனில்: காயத்திரி மந்திரத்திற்குப் பாதம் மூன்று. பாதம் ஒன்றிற்கு வர்ணம் எட்டு. ஆக மூன்று பாதத்திற்கும் வர்ணம் இருபத்து நான்கு.
- பாதம் மூன்றென்பதன் குறிப்பு: ஜீவர்களுக்கு மலம் மூன்று.
- வருணம் இருபத்து நான்கு என்பதன் குறிப்பு:
- இரு + பத்து + நாலு இதில்;
- இரு – இரண்டாகிய ஜீவகாருண்யம் மற்றும் தத்துவ விசாரம்
- பத்து – பற்று
- நான்கு – ஜீவகாருண்யம், ஈசுரபக்தி பாசவைராக்கியம் பிரம்ம ஞானம்.
அதாவது; ஜீவகாருண்யம் தத்துவவிசாரம் ஆகிய இரண்டையும், பற்றினால்; நாலாகிய; 1. ஜீவகாருண்யம்,2. ஈசுரபத்தி, 3.பாச வைராக்கியம், 4.பிரம ஞானம் ஆகிய இவற்றை அடையலாம். அடைந்து, காயத்ரிமந்திரம் திரிமூர்த்தி ஸ்வரூபமாதலால், இதற்கு அதீதமான பிரமானுபவத்தைப் பெறலாம். முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்தால் பிரம்ம ஞானத்தை பெறலாம்.
எப்படியெனில்:- ஓதயாத்: ஓ ஆன்மஅறிவின்கண், த சத்துவ குணமயமாய், த் அருளனுபவம் பெற்று, யா பிரமமாதல். ஆதலால், மேற்குறித்த காயத்திரியின் ஸ்வரூபானுபவத்தைப் பெறுதலாம். பிரம்ம ஞானத்தை அதாவது ஆன்ம அறிவின்கண் நாம் லட்சியத்தை செலுத்துவதற்கு ஜீவகாருண்யத்திலும் தத்துவங்களை பற்றியும் கடந்து வருதல் வேண்டும் என உள்ளது.
இவ்வாறாக ஜீவகாருண்ய ஒழுக்கம் சமய மத மார்க்கங்களில் ஒரு ஆன்ம உருக்கமாகவும், தத்துவ விசாரமாகவும், தர்மங்கள் ஆற்றுவதாகவும், ஒரு விசாரமாகவும் பார்க்க முடிகிறது.
சன்மார்க்கங்களின் வகை மூன்று:
- சமய சன்மார்க்கம்,
- மத சன்மார்க்கம்
- சுத்த சன்மார்க்கம்.
சமய மத சன்மார்க்கங்களை விரிக்கில் விரியும் (அனந்தம்).
- சமய சன்மார்க்கம்
சமய சன்மார்க்கம் என்றால் என்ன என்பது பற்றி வள்ளலார் சொல்வதை காண்போம்: பக்கம்:469 ல்;
“சன்மார்க்கம் என்பதில் வகை தொகை விரிவு அனந்தம். இதன் தாத்பரியம் யாதெனில்: சமய சன்மார்க்கத்தின் பொருள் குணத்தினது லக்ஷியத்தை அனுசந்தானஞ் செய்வது. குணமென்பது யாது? சத்துவகுணம். இயற்கை உண்மை ஏகதேசமான சத்துவ குணத்தின் சம்பந்தமுடைய மார்க்கமே சமய சன்மார்க்கம். சத்துவ சம்பந்தமுடைய மார்க்கம் யாதெனில்: சத்போதம், சத்கர்மம், சத்சங்கம், சத்காலம், சத்விசாரம், சத்பாத்திரம், சற்சனம், சற்செய்கை முதலியனவும் சத்துவ சம்பந்தம் உடையன. இதனியல்பாவன: கொல்லாமை, பொறுமை, சாந்தம், அடக்கம், இந்திரியநிக்கிரகம், ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம். இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம். இவ்வண்ணம் வாச்சியானுபவம் பெற்றுச் சொரூபானுபவமாகிய சாதனமே சமய சன்மார்க்கம். (பக்கம் : 469) ஆக, சமய சன்மார்க்கத்தின் இயல்புகளில் ஒன்று ஜீவகாருண்யம்.
2. மத சன்மார்க்கம்:
மத சன்மார்க்கம் என்றால் என்ன என்பது பற்றி வள்ளலார் சொல்வதை காண்போம்: பக்கம்: 470; சமயாதீத மத சன்மார்க்கம் – நிர்க்குண லட்சியமாகிய சத்துவ குணத்தின் லட்சியார்த்தத்தைக் கொள்வது மத சன்மார்க்கம். அதாவது சோகம், சிவோகம், அவன், அவள், நான் என்னும் அனுபவம். அதாவது சத்துவகுணத்திற்கு மார்க்கம் நான்கு: 1-சத்துவகுணத்தின் முதல் விளைவு தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல், 2-வது புத்திரனைப் போல் பாவித்தல், 3-வது சினேகிதனைப் போல் பாவித்தல், 4-வது தன்னைப் போல் பாவித்தல். இது ஜீவ நியாயம்.
இவ்வாறே தான் கடவுளுக்கு அடிமையாகுதல், புத்திரனாகுதல், சிநேகிதனாகுதல், கடவுளே தானாகுதல். இது சத்துவ குண லட்சியார்த்தமாகிய மத சன்மார்க்கத்தின் முடிபு. சத்துவ குணத்தின் விளைவென்று சொன்னதற்குப் பொருள் சத்துவ குணத்தின் முக்கிய லட்சியமாகிய எல்லாம் வல்ல சர்வசித்தியோடு ஞானதேகம் பெறுகிறவரையில் உள்ள அனுபவம். ( நெல் விளைத்தா னென்பதன் பொருள் உழுதல் தொடங்கிக் கிருகத்தில் சேர்க்கிறவரையில் அதன் தாத்பரிய மடங்கி யிருப்பது போல்.) (பக்கம்:470)
நிற்க! அன்பர்களே, சமயத்தின் அதீதம்தான் மதம் ஆகும். சமய சன்மார்க்கத்தின் இயல்புகளில் ஒன்று தான் ஜீவகாருண்யம். மதத்திலும் மதப்பயனை அடைவதற்கும் ஜீவகாருண்ய ஒழுக்கம் இயல்பாகவுள்ளது.
3. சுத்த சன்மார்க்கம் :
சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன என்பது பற்றி வள்ளலார் சொல்வதை காண்போம்: பக்கம்:470;
சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல.பிரமன், விஷ்ணு, ருத்திரன் இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டித்தால் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏற வேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்க வேண்டிருக்கும்.(476);
சமய தெய்வங்கள் தேவர்கள் இவர்கள் அந்த சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்.(477);
சிவம் பரசிவம் இரண்டையும் மறுக்க வந்தது சுத்த சிவம் போலும், சன்மார்க்கம், சிவ சன்மார்க்கம் இரண்டையும் மறுக்க வந்தது சுத்த சன்மார்க்கம்.(469);
சமய மத சன்மார்க்கங்களில் வகர வித்தை, தகரவித்தை உள்ளது. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா, மூர்த்தி, ஈசுவரன், பிரமம், சிவம் முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தமிருக்கும். அதற்கு மேலிரா.
சமய அனுபவமானது வாச்சியானுவம் ஆகும். மத அனுபவமானது வாச்சியானுபவம் பெற்று லட்சிய அனுபவம் பெறுதல். சுத்த சன்மார்க்கத்தின் அனுபவம் சமய மத அனுபவங்களை கடந்தது.
கடவுளின் பாவன, குண, இவை குறித்த பொருள் அறிதல் (வாச்சியார்த்தம்), பொருள் அறிந்து அறிந்ததில் லட்சியம் கொள்ளுதல் (லட்சியம்) இவையெல்லாம் கடந்து விளங்கும் உண்மையை உள்ளபடி அறிந்து அனுபவிக்கும் மார்க்கம். ஆண்டவரே வந்து உண்மை தெரிவிப்பதாக உள்ளது. சுத்த சன்மார்க்கத்தில் அக அனுபவமே உண்மை.(பக்கம் 471)
சுத்த சன்மார்க்கத்தில் (ஜீவகாருண்ய) தயவு ஒழுக்கத்திற்கு வருவோம்.
இங்கு வள்ளலார் பயன்படுத்தியுள்ள திருவார்த்தை; “கருணை” ஆகும். கருணை என்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும் என்கிறார் வள்ளலார். தயவு, கருணை, அருள் மூன்றும் ஒரு பொருளையே குறிக்கும் என்கிறார் வள்ளலார்.
இங்கு ஊன்றி கவனிக்க வேண்டும்.
திருவருட்பிரகாச வள்ளலார் சமயத்தில் லட்சியம் உள்ள போது, அந்த சன்மார்க்கத்தின் இயல்புகளில் ஒன்றாகவுள்ள “ஆன்மாவின் இயற்கை குணமாகிய ஜீவகாருண்யம்” பற்றி மற்றும் இந்த ஜீவகாருண்யத்தின் வலிமையை (ஒழுக்கத்தை) விரிவாக மூன்று பகுதியில் எடுத்துரைத்து, அதை நூல்களாக வெளியிட்டார்கள். எவர் ஒருவரிடம் ஜீவகாருண்ய ஒழுக்கம் வலிமையாக முழுமையாக வெளிப்படுகிறதோ அவருக்கு கடவுளின் நிலையும் கடவுளின் அருளும் கிட்டும் என்றார்கள்.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் சத்திய வாக்கியங்களை மீண்டும் ஒருமுறை கருத்தில் கொள்வோம்;
ஜீவகாருண்ய ஒழுக்கம் இறைவீட்டின் திறவுகோல் என்றும்,
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்றும்,
ஜீவகாருண்யத்தின் லாபம் அன்பு என்றும்,
ஜீவகாருண்ய உருக்கம் உண்டாக உண்டாக அருள் பூரணமாக வெளிப்படும்
ஜீவகாருண்யர்களிடத்தில் சிவ அனுபவம் உண்டாகும் என்றும்,
ஜீவகாருண்யப் பயனால் (வேத மார்க்கம் படி) பிரம்மன் ஆயுசு கிட்டும்,
ஜீவகாருண்யஒழுக்கம் முப்பத்தாறு தத்துவங்களை கடந்து பெறும் அனுபவம்
ஜீவகாருண்ய (தர்மத்தால்) அனுபவத்தால் முடிபாக பிரமம் ஆதல்.
ஆக, சமய மத சன்மார்க்கத்தில் ஜீவகாருண்ய ஒழுக்கமானது அனைத்தையும் நல்குவதாக உள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால்….
ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் உண்மை குறித்த நூல் எழுதும் போதும், அதன் அடிப்படையில், வடலூரில் சத்திய தருமசாலையை தொடங்கிய போதும், வள்ளலார் அவர்கள் சமய சன்மார்க்கத்தில் லட்சியம் கொண்டிருந்தார்கள். எல்லா மார்க்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பது ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆதலால், பொதுவாகவே, அதாவது சன்மார்க்கங்கள் அனைத்திற்கும் முதற்சாதனமாக ஜீவகாருண்யம் உள்ளது. இது சத்தியம்.
நிற்க! கவனிக்க:
திருவருட்பிரகாச வள்ளலாரிடம், கடவுளின் உண்மை நிலை குறித்த அவரின் தொடர் தேடுதலில், கடவுள் பற்றி கொள்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது. ஓர் உண்மையை அருளால் அறிகிறார்கள். முடிபாக, எல்லா பற்றுக்களையும் பற்றற கைவிட்டுவிட்டு, சமய மத அனுபவங்களை கடந்து, தனது சுத்த அறிவில், தனி வெளியில், ஒரு சுத்த சன்மார்க்கம் என்னும் ஒரு உண்மை பொது நெறியை கண்டதாக வள்ளலார் அறிவிக்கிறார்கள்.
சுத்த சன்மார்க்கத்திற்கும் அதே இரக்கக் கோட்பாடு தான் முதற்சாதனம். தயவு என்னும் கருணையே என்னை ஏறாநிலை மிசை ஏற்றிவிட்டது என்கிறார்கள். ஆனால்; இங்கு நாம் சத்தியமாக ஒன்றை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
சுத்த சன்மார்க்கத்தின் ஒரே சாதனம் கருணை. இந்த கருணைக்கு வள்ளலார் தரும் பொருள் தான் முக்கியமாக உள்ளது. கருணை என்பது; எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும்.
புறத்தில் எல்லா உயிர்களிடத்தில் மட்டும் தயவு வைப்பது மட்டுமில்லாமல், (ஒருங்கே) ஆண்டவரிடத்திலும் அன்பு வைப்பதும் “நெறியாக” இங்கு பார்க்கப்படுகிறது. கடவுளிடத்தில் வைக்க வேண்டிய அன்பை நாம் புறத்தில், உயிர்களிடத்தில் வைக்கும் தயவிலிருந்து தான் பெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
ஆனால், புறத்தில் ஜீவகாருண்யத்தால் பெற்ற அந்த அன்பை அகத்தில் ஆண்டவரிடத்தில் காலம் தாழ்த்தாது வைக்க வேண்டும். அன்பு செய்வதற்கு ஆண்டவரை தெரிந்திருக்க வேண்டும். உண்மை ஆண்டவரின் நிலை காண நாம் உண்மை குறித்த “விசாரம்” ஒருங்கே செய்ய வேண்டியுள்ளது.
கருணை நன்முயற்சியில் தான் கடவுளின் உண்மை நிலையை நாம் காண முடியும். மேலும், மேற்படி உண்மையை கடவுளிடமே விண்ணப்பித்து, அவர் முலமே அருளால் தெரிந்துக் கொள்வதாகவும் உள்ளது. கடவுளிடம் நாம் ஒவ்வொருவரும் பணிந்து, நெகிழ்ந்து கருணை காட்டுங்கள் என்று வேண்டுவதாக உள்ளது.
நிற்க ! அன்பர்களே, இங்கு ஒன்றை கருத்தில் கருத வேண்டும். அதாவது, எந்தொரு செயலுக்கும் ஒரு சமமான எதிர்வினை உண்டு என்பது அறிவியல் உண்மை. அப்படித்தானே. ஆம், இது நியூட்டனின் மூன்றாவது விதியாகும்.
அன்பர்களே, தயவை கொடுத்து, தயவை பெறுதல்.
மற்ற உயிர்களுக்கு ஏற்படுகின்ற துன்பத்தை போக்கும் நமது கருணை செயலுக்கு சமமான எதிர்வினை எதுவெனில்; கருணை காட்டுங்கள் ஆண்டவரே என்ற நமது வேண்டுதலே ஆகும். சரிதானே.
வள்ளலார் அவர்களிடம் சமயப்பற்றுள்ள காலத்திலும் (எல்லா ஞானிகளிடமும்) இருந்த விருப்பம் எதுவெனில்; 1867 ஜீ.கா.நூல் பக்கம்:133 ல், இதோ;
“….இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடை படாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபம்….”
நிற்க ! நிற்க !
சமய மத சன்மார்க்கங்களில் ஜீவகாருண்ய ஒழுக்கம் இயல்பாக இருந்தாலும், ஆனால் அச்சமய மத மார்க்கத்தார்கள் எவரும் ஆண்டவரின் உண்மை சொரூபத்தை கண்டு, என்றும் நித்தியமாக விளங்கும் தேகத்தை அவர்கள் பெறவில்லை எனக்கண்ட வள்ளலார்.
தனக்கு இருந்த அந்த விருப்பமாகிய, அதாவது, எதனாலும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை பெற்றேத் தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அந்த விருப்பம் மேலும் அவரிடம் அதி தீவிர விருப்ப முயற்சியாக மாறி இருந்ததை அவரே தெரிவிக்கிறார்கள். பார்க்க பக்கம்:வி.ம்: 662.
அன்பர்களே ! வள்ளலாருக்கு முன்பிருத்த சமய சான்றோர்கள், சமய தலைவர்கள், சமய ஞானிகள், சமய மகான்கள், இவர்கள் ஒப்பற்ற பெரிய வாழ்விற்கு இறைவனிடம் வேண்டி பல வழிகளில் முயற்சியை மேற்கொண்டனர். இவர்களிடத்தில் ஜீவகாருண்யத்தின் வல்லபம் மற்றும் அதன் பிரயோஜனத்தை அவர்கள் பெற்று இவ்வுலக இன்பத்தையும், அளவிறந்த சித்தி இன்பங்களையும் பெற்று, நீடித்த வாழ்வை பெற்று மகிழ்ந்தனர். இதையே முத்தி பயனாக சமய சன்மார்க்கத்தினர் கருதினர். சாமாதி நிலையும் பெற்றனர் பலர்.
ஆனால் எவரும் “ நித்திய தேகத்தை “ பெறவில்லை. ஆக, சமய மத சன்மார்க்கங்களின் பல வகை சாதனங்கள் இத் தேகத்தை பெற்று தரவில்லை என்கிறார் வள்ளலார். தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சமய மதங்களில் வழி துறை இல்லாததால், அவற்றில் லட்சியம் வையாது, இறைவனிடமே உண்மை தெரிவிக்குமாறு வேண்டி நின்றார்கள்.
நிற்க !
பக்கம் 15 & 194 ல்; ஜீவகாருண்ய ஒழுக்கம் குறித்த நூல் மொத்தம் ஏழு எனப்படுகிறது. மூன்று வெளிப்பட்டுள்ளது. மீதி நான்கு நூல் கிடைக்கவில்லை என மூத்த சன்மார்க்கச் சான்றோர்கள் சொல்லியுள்ளார்கள்.
ஜீவகாருண்ய ஒழுக்கம் குறித்து முழு விசாரணையை திருவருட்பிரகாச வள்ளலார் துணைக் கொண்டு இன்று நான் உங்களுடன் செய்கின்றப் போது, கடவுள் அருளால் அந்த நான்கு நூல்களை நான் தெரிந்துக்கொண்டேன். எதுவெனில்; மீதமுள்ள அந்த நான்கு நூல்கள் “நான்கு விண்ணப்பங்களே” எனலாம். அன்புடன் APJ அருள். இது சத்தியம்.
காரணம்;
ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்று நூல்களில் வள்ளலார் செய்த விசாரம் போல், இந்த நான்கு விண்ணப்பங்களிலும் வள்ளலார் செய்திருப்பார்கள். ஜீவகாருண்ய ஒழுக்கம் நூல்களில் ஜீவகாருண்யம் தவிர மற்றவை சமய மத கொள்கை சார்ந்தும் இருக்கிறது. நான்கு விண்ணப்பத்தில் (ஜீவகாருண்யமும்) கருணையும் சுத்த சன்மார்க்க தனி நெறியும் வெளிப்பட்டிருக்கும். சில உதாரணம்;
வழி:
சமய சன்மார்க்கத்தில் அருள் பெறும் வழி :
ஜீவகாருண்ய ஒழுக்கமே.( ஜீ.காரு.பக்கம் 176)
இங்கு, சுத்த சன்மார்க்கத்தில் அருள் பெறும் வழி;
திருவருட் சுதந்தரம் ஒன்றாலே (வி.ம். பக்கம் 662).
அருள் பெறுதல்:
நம்பிக்கை கொண்டிருக்கும் சமய கடவுளை, பணிந்து வணங்கி, அக்கடவுளின் அருள் பெற, மற்ற சீவர்களிடத்தில் தயவு செய்து அதனால் வருகின்ற அன்பும் அறிவும் அருளை பெற்றுத் தரும். இது சமய சன்மார்க்கம்.
ஆனால் இங்கு, சுத்த சன்மார்கத்தில்: ஒழுக்கம் நிரப்பி, எல்லா உயிர்களிடத்தும் தயவு கொண்டு, அதனால் பெற்ற அன்பை, கடவுளிடத்தில் வைக்க, அக்கடவுளின் உண்மை நிலை காண்பதே இங்கு லட்சியம். ஆண்டவரே விரைந்து வந்து உண்மையை தெரிவிக்க வேணுமாய் ஆண்டவரிடத்திலேயே விண்ணப்பமும், நன்முயற்சி விசாரமும் செய்தல் வேண்டும். ஆக, எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்பையும் ஒருங்கே செய்தல் வேண்டும். இது சுத்த சன்மார்க்கம்.
வழிபாடு:
(பக்கம் 134) ஜீவகாருண்ய ஒழுக்கமே வழிபாடு. ஜீவகாருண்யத்தால் பெற்ற விளக்கத்தால் சாத்தியர்களான ஜீவன் முத்தர்கள் அவர்களே, கடவுளை அறிவால் அறிந்து, கடவுள் மயம் ஆவார்கள். இது சமய சன்மார்க்கம்
இங்கு, (பக்கம் 643) எங்கும் பூரணராகி விளங்கின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மை அன்பால் கருத்தில் கருதி வழிபாடு செய்தல். கடவுளாலேயே வழி தெரிவிக்கப்பட்டு, தெரிவிக்கப்பட்ட வழியில் இடைவிடாது கருணை நன்முயற்சி செய்தல் வேண்டும். அதாவது; எல்லா உயிர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்பும் ஒருங்கே நடக்க வேண்டும்.
தத்துவங்கள்:
பக்கம்: 136 : இந்த தூல தேகத்தில், ஜீவனாக இருக்கின்ற ஆன்மாவும், அறிவுக்கறிவாய் இருக்கின்ற கடவுள் இயற்கை விளக்கமும் தவிர, கரணம், இந்திரியம் முதலிய மற்றவைகள் எல்லாம் கருவிகளாகிய தத்துவ சடங்களே. (சமய வேத மத சன்மார்க்கங்கள்)
பக்கம் 645 : இங்கு ஒருவராகிய ஆண்டவரை தவிர மற்ற எல்லாம் தத்துவங்களே. தத்துவங்கள் அனைத்தும் கடவுளால் தோற்றுவிக்கப்படுகிறது. ஆன்மாவும் தேகமும் தத்துவங்களே.
பிறவிகள் பற்றி:
(பக்கம் 140):: அவரவர் கடின செய்கைக்குத் தக்கப்படி, சிலர் நரக வாசிகளாகவும், சிலர் சமுத்திர வாசிகளாகவும், சிலர் ஆரணிய வாசிகளாகவும், சிலர் மிருகங்களாகவும், சிலர் செந்துக்களாகவும், சிலர் சண்டாளங்களாகவும், சிலர் தாவரங்களாகவும்…வழங்கப்படுகின்றன. (சமய மத சன்மார்க்கங்கள் )
இங்கு, (பக்கம் : 641 ) ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலேயே ஏழுப் பிறவிகள், அப்பிறவிகளில் அதன் யோனி வர்க்கங்களில் தோற்றுவித்தும், முடிபாக உயர் அறிவுடையாதாகிய மனிதப்பிறவி வழங்கப்படுகிறது. எல்லாம் கருணையால் அறிவின் வளர்ச்சியில் நேர்த்தியாக உள்ளது. இது சுத்த சன்மார்க்கம். (பக்கம் :641 )
பிறவிகளின் வரிசை தோற்றம் :
பக்கம் 146 : 1. தாவரம், 2. ஊர்வன, 3. பறவை, 4. மிருகம், 5. நரகர், 6. மனிதர், 7. தேவர் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது சமய மத சன்மார்க்கங்கள்.
ஆனால் இங்கு பக்கம்; 641ல் ; 1.தாவரம் 2.ஊர்வன/ நீர் வாழ்வன 3. பறவை 4. விலங்கு 5. தேவர் 6. நரகர் 7. மனிதர். இது சுத்த சன்மார்க்கம்.
பிறவியும் அதன் வரிசை அறிவின் உயர்ச்சி அடிப்படையில்.
கவனிக்க: சமய மத சன்மார்க்கத்தில் மேற்படி தேவர் பிறவியானது நரகர் மற்றும் மனித பிறவிகளை காட்டிலும் உயர் பிறவியாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால், சுத்த சன்மார்க்கத்தில் தேவர் பிறவி ஐந்தாவது பிறவியில் வருகிறது. மேலும், தேவர் பிறவியை காட்டிலும் நரகப் பிறவி உயர்வுடையதாக சொல்கிறார் வள்ளலார். இந்த தேவர், நரகர் இரு பிறவிகளை காட்டிலும் உயர்வுடையாதாகிய கடைசி பிறவியாக மனிதப் பிறவி என்கிறார் வள்ளலார்.
தர்மங்கள் என்பவை ஜீவகாருண்யம்:
மத சன்மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ள ஜீவகாருண்யம் எதுவெனில்; ( பக்கம் 485 ) :“… ஆன்மாவின் இயற்கையாகிய தருமங்கள் அவை சீவ தர்மம், குல தர்மம், சாஸ்திர தர்மம், ஆசார தர்மம், ஆசிரம தர்மம், சாதி தர்மம் (முதலியனவாக விரியும்) ஆகும். இதுவே இங்கு தயையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது… தர்மத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடைய மாட்டான்.”
ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் விண்ணப்பத்தில் (பக்கம் 654); “.. ஜாதி ஆசாரம், ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுலக கலாசாரத்தை பொய் என்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல் செய்வித்து….” மேலும்,
(பக்கம் 484) ல்; தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன; 1.ஜாதி, 2.குலம்,3.ஆசிரமம், 4.லோகம், 5.தேசம், 6.கிரியை, 7.சமயம், 8.மதம், 9.மரபு, 10.கலை,11.சாதனம், 12.அந்தம், 13.சாஸ்திரம் ஆகிய ஆசாரங்கள். இந்த ஆசாரங்களை விட்டொழித்து உண்மை அறிவு ஆசாரத்தை வழங்கி, பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகி கடவுள் அருளைப் பெற முடியும்.
மலங்கள் :
(பக்கம் : 175 ஜீ.கா.) சமய சன்மார்க்கங்களில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் பெற்ற பேரின்ப லாபத்தால், மும்மலங்கள் இல்லாமல் விலகும். விலக்கிக் கொண்டவர்கள் பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்.
ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் ஐந்து மலங்கள் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் என்கிறார் வள்ளலார். இது சுத்த சன்மார்க்கத்தின் மரபு நான்கில் ஒன்றாகும்.
அந்தங்கள் :
பக்கம் 175 ஜீ.கா.) : சமய சன்மார்க்கத்தார்கள் ஜீவகாருண்ய ஒழுக்கத்தால் பெற்ற பெருமை வேதாந்தம், சித்தாந்தம், கலாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும்.
ஆனால் (பக்கம் 655 வி.ம்.) சுத்த சன்மார்க்கத்தில் கடவுள் அருள் எப்படியிருக்கிறது என வள்ளலார் சொல்லும் போது; “வேதாந்தம், சித்தாந்தம், கலாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து, அவைகளையும் அனுட்டியாதபடி தடை செய்வித்து அருளினீர்.”
இயற்கை: உண்மை – விளக்கம் – இன்பம் :
ஜீவகாருண்ய நூலில் பக்கம் 133 & 141 ; இயற்கை உண்மை வடிவினராகிய கடவுள், அதில் ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏக தேசங்களாயும் உள்ளது. ஜீவகாருண்யத்தின் லட்சியம் என்பது இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குவது. கடவுளின் பூரணமாகிய இயற்கை இன்பத்தை பெறுதல்.
ஆனால், சுத்த சன்மார்க்க நெறியில் (விண்ணப்பங்கள் பக்கம் 656) : இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய் (அருட்பெருஞ்ஜோதி சொரூபராய்) இயற்கை இன்பமென்கின்ற சத்தியத் திரு நடம் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப் பெருங்கருணை தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுள் என்கிறார். சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் என்பதின் மூலம் அக அனுபவம் ஆகும்.
ஜீவகாருண்யம் தத்துவ விசாரம் :
வேத மதத்தில் (மத சன்மார்க்கத்தில்) பக்கம் 456 ல்; காயத்ரி குறிப்பு படி இம்மார்க்கத்தார்களின் முயற்சியில் “ஜீவகாருண்யமும் தத்துவிசாரமும்” காணப்படுகிறது. மலம் மூன்றும், தத்துவங்கள் முப்பத்தாறும் கடந்து, தர்மங்களாகிய ஆசாரங்களை கைக்கொள்வது இங்கு தயவை செயலாகப் பார்க்கபடுகிறது. தர்மத்தால் பிரமானுபவத்தை பெறலாம்.
ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் (பக்கம் 476) தத்துவங்களில் லட்சியம் கூடாது. மேலும், எல்லா பற்றுக்களுக்கும் காரணமான அந்த ஆசார வகைகளை விட்டு தலைவனையே தொழுவீர்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. (வி.ம். பக்கம்: 654): சைவம், வைணவம், சமணம், பவுத்த பல பெயர் கொண்டு பல பட விரிந்த அளவிறந்த சமயங்களும், அச்சமயங்களில் குறித்த சாதனங்களும், தெய்வங்களும், கத்திகளும், தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வசமயங்களில் பலபட விரிந்த வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்தி கற்பனைக் கலைகள் என்றும் உள்ளபடியே எனக்கறிவித்து அச்சமய ஆசாரங்களை சிறிதும் அனுட்டியாமல் தடை செய்வித்து அருளினீர்.
ஊழ் – முன் ஜென்மம்
ஜீவகாருண்ய ஒழுக்க நூலில் பக்கம்: 183 ல்; முன் தேகத்தில் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த ஜீவர்கள் ஆதலால் கடவுள் விதித்த அருளாக்கின்படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகிறார்கள் என்று அறிய வேண்டும்.
ஆனால், சுத்த சன்மார்க்கத்தில், (விண்ணப்பம் பக்கம் :650 ல்); ஜீவனை ஆதரிப்பிக்கும் பல குணங்கள், தொழில்கள், என கடவுளால் காரண காரிய, காரண காரியத்துடன் அருளிய தோற்றங்கள் என்கிறார்கள். சமயம் சொல்லும் ஊழ் இங்கு இல்லை. (வள்ளுவர் சொல்லும் ஊழ் தான் இங்கு. அதாவது, நல்லவர்க்கு நல்லது நடக்கும், கெட்டவர்களுக்கு கெட்டது நடக்கும் இது இயற்கை. மேலும் நல்லவர்களுக்கு கெடுதலும் வரலாம், கெட்டவர்களுக்கு நல்லதும் நடக்கும். இது ஊழ் ஆகும் என்கிறது குறள். இதையும் இயற்கை செயல்களே என்று அறியும் அறிவே மெய்யறிவு ஆகும்.ஊழால் வரும் துன்பத்தை அறிவாலும், அருளாலும் நீக்கிக் கொள்ள முயற்சிக்க கூடும்.)
ஆயுசு பயன்
பக்கம் 484; ஜீவகாருன்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும், பிரம்ம ஞானத்தால் என்றும் அழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்று கடவுள் மயமாகலாம்.
விண்ணப்பம் பக்கம் 662 & 477: பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் இவர்கள் வாயு தத்துவங்களே. மேலும், புராணத்தின் இருதயம் எல்லாம் தத்துவ சம்மாரமே. இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும். நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக்கூடும். நமது லட்சியத்தை கடவுளது திருவருட் சுதந்தரம் ஒன்றோலே பெறுதல் கூடும்.
முடிபாக நமது விசாரணையில்;
அன்பர்களே, வள்ளலார் சமயப்பற்றுள்ள காலத்தில் இயற்றிய ஜீவகாருண்ய ஒழுக்க நூல்களில் வள்ளலாரால் விவரிக்கப்பட்டுள்ள ஜீவகாருண்ய செய்கைகள் யாவும் சுத்த சன்மார்க்கத்தில் தகுதியாக, உரிமையாக வைத்து கட்டளையாக்கி விட்டார் வள்ளலார். (பார்க்க பக்கம்:478).
ஆனால், அதே நேரத்தில், அந்த நூல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுள் நிலை சார்ந்த விசயங்கள் யாவும் அவர் பற்று வைத்திருந்த சமயக் கொள்கையை சார்ந்து வெளிப்பட்டிருந்தது. (ஆதாரத்துடன் மேலே விரிவாக கண்டோம்.) சாதி மற்றும் சமய ஏற்பாடு கட்டுப்பாட்டு ஆசாரங்கள் இவையெல்லாம் சுத்த சன்மார்க்கத்திற்கு எக்காலத்தும் முக்கிய தடைகளாக அறிவித்துள்ளதை இங்கு சத்தியமாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.(பக்கம் பார்க்க:644).
ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் மேன்மையை வள்ளலார் விளக்கும் சிறப்பை பாருங்கள்:
ஜீவகாருண்ய நூல் பக்கம் 164; ஜீவகாருண்ய ஒழுக்கமில்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுளருக்கு சிறிதும் பாத்திரமாகர்கள்; அவர்களை ஆன்ம விளக்கமுள்ளவர்களாக நினைக்கப்படாது. ஜீவகாருண்யமில்லாது செய்யப்படுகிற செய்கைகள் எல்லாம் பிரயோஜனமில்லாத (மாயாஜால செய்கைகளே) ஆகுமென்று அறிய வேண்டும் – வள்ளலார்.
ஜீவகாருண்ய நூல் பக்கம் 169; ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி, ஜீவர்களை பசி என்கின்ற அபாயத்தினின்றும் நீங்கச் செய்கின்ற உத்தமர்கள், எந்த ஜாதியாராயினும், எந்த சமயத்தாராயினும், எந்த செய்கை உடையவர்களாயினும், தேவர், முனிவர், சித்தர், யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையவர் ஆவார்கள் என்று சர்வ சக்தியையுடைய கடவுள் சாட்சியாக சத்தியம் செய்யப்படும் என்று அறிய வேண்டும் – வள்ளலார்
சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை விளக்கும் விண்ணப்பங்கள் பக்கம் 655 ;
உலகியல் கண் பொன் விஷய இச்சை, பெண் விஷய இச்சை, மண் விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என்னறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல், எல்லா உயிர்களையும் பொதுமையின் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியை பெறுவித்து சுத்த சன்மார்க்கத் தனி நெறி ஒன்றையே பற்றுவித்து செய்வித்து அருளினீர்.
நன்றி : APJ அருள் @ ELANGO 8778874134.
சுத்த சன்மார்க்க ஒழுக்கத்தை உள்ளது உள்ளபடி அறிந்துக் கொள்ள திருவருட்பிரகாச வள்ளலார் அருளியுள்ள நான்கு விண்ணப்பங்களை ஊன்றி வாசிக்க வேண்டும்.
1. சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம்.
இயற்கை உண்மையரென்றும்,
இயற்கை அறிவினரென்றும்,
இயற்கை இன்பினரென்றும்,
நிர்க்குணரென்றும்,
சிற்குணரென்றும்,
நித்தியெரென்றும்,
சத்தியரென்றும்,
ஏகரென்றும்,
அநேகரென்றும்,
ஆதியரென்றும்,
அமலரென்றும்,
அருட்பெருஞ்ஜோதியரென்றும்,
அற்புதரென்றும்,
நிரதிசயரென்றும்,
எல்லாமான வரென்றும்,
எல்லாமுடைய வரென்றும்,
எல்லாம் வல்லவரென்றும்,
குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த
“திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்”
துதித்தும்,
நினைத்தும்,
உணர்ந்தும்,
புணர்ந்தும்,
அனுபவிக்க விளங்குகின்ற “தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!”
தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக் கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.
எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லா தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.
அஞ்ஞானத்திற் பயின்று:
தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான விருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.
அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,
தாவரயோனி வர்க்கம்:
இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,
ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:
பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,
பறவையோனி வர்க்கம்:
பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;
விலங்குயோனி வர்க்கம்:
பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;
தேவயோனி வர்க்கம்:
பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தை களால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்;
நரகயோனி வர்க்கம்:
பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.(1)
கைமாறு:
அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோ மில்லை.
உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!
வீண்போது:
இம்மனித தேகத்திற் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும் சிசுப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் பல வேறு அவத்தைகளால் அறிவின்றி யிருந்தோமாகலில், தேவரீர் பெருங்கருணை திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண்போது கழித்தோம்.
ஓர் உண்மை கடவுள்:
அப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்திங்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள்ளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,
எஞ்ஞான்று செய்வோம்:
அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்திநின்ற தருணத்தே.
ஓர் ஞான சபை காணுதல்:
களைப்பறிந்துதவுங் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர் நெடுங்காலம் மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமுந் தவித்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரமென்று குறிக்கப்படுகின்ற உத்திரஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடனம் செய்வோ மென்றும் அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், “அப்பதியினிடத்தே யாம் அருள் நடனம் புரிதற்கு அடையளாமாக ஓர் ஞான சபை காணுதல் வேண்டு” மென்றும் திருவருட்குறிப்பால் அறிவித்தது மன்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞான சபையையுந் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையை கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.
இனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்க தொடங்குகின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!
தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள செய்யும் இவ்வலங்காரத்திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்,
சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!
அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.
எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.
எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!
2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:
இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ வெளியில், இயற்கைவிளக்க நிறைவாகி விளங்கிய அருட்பெருஞ்ஜோதி செரூபராய், இயற்கைஇன்ப நிறைவாகி ஓங்கிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எல்லா உயிர்களும் இன்பமடைதற் பொருட்டுத் திருவுளக்கருணையாற் செய்தருளுகின்ற சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே!
அறிவு என்பது ஒரு சிறிதுந் தோற்றாத அஞ்ஞானம் என்னும் பெரிய பாசாந்தகாரத்தில் நெடுங்காலம் சிற்றணூப்பசுவாகி அருகிக்கிடந்த அடியேனுக்கு உள்ளொளியாகி இருந்து அப் பாசந்தகாரத்தின்றும் எடுத்து எல்லாப் பிறப் புடம்புகளிலும் உயர்வுடைத்தாகிய ஆறறிவுள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரதுதிருவருட் பெருங்கருணைத் திறத்தை எங்ஙனம் அறிவேன்! எவ்வாறு கருதுவேன்! என்னென்று சொல்வேன்!
எல்லாம் உடைய இயற்கை விளக்க கடவுளே! தாய் கருப்பையில் சோணிதத் திரளில் சேர்த்து என்னை ஓர் பூதப் பேரணு உருவில் பெருகி வெளிப்பட இருத்திய காலத்திலும் எனக்குள் உள்ளொலியாகியிருந்து அப் பூதப் பேரணு உருவைச் சிருட்டித் தருளினீர். அன்றிப் புறத்தில் எவராலும் சிறிதும் சகிக்கப்படாத அதன் அசுத்தம் அருவருப்பு துற்கந்தம் முதலியவற்றைப் பொறுத்து அச்சோணிதத் திரளில் ஓர் ஆவி உருவாகியிருந்து அத்திரளினுள்ள பல்வகை விரோத தத்துவங்களால் சிறிதும் தடைபடாமல் என்னுருவைக் காத்தருளினீர்.அன்றியும் அவ்விடத்து எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகஞ் செய்தருளினீர். அன்றி அங்ஙனம் பூத்த ஆன்ம சத்திக் கலைகள் வாட்டமடையாது வெளிப்பட்டு விளங்க வளர்த்தருளினீர். அன்றியும் தாய் கருப்பையினிடத்துப் பூதப் பேரணு உருவில் கிடந்த என்னை அக்கருப்பையில் பவுதிக பிண்ட வடிவில் இருத்தும் வரையில் நச்சுக்கிருமி நச்சுக்காற்று நச்சுச்சுவாலை முதலிய உற்பாத வகைகளால் எனது பூதப்பேரணுஉருச் சிதறி வேறுபடாமலும் காத்தருளினீர்.
அன்றியும் தாய் கருப்பையில் பவுதிக பிண்ட வடிவில் என்னை இருத்திய காலத்திலும் எனது இச்சை ஞானக் கிரியைகளை வெளிப்படுத்துதல் முதலிய உபகரிப்பு அதிகரிப்புகளுக்கு உரிய உபயோக தத்துவ உறுப்புகள் எல்லாவற்றையும் குறைவின்றி வகுத்தமைத்து வளர்த்துக் காத்தருளினீர். அன்றியும் அடியேன் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்த காலத்து இரும்பில் பெரிதும் கடினமுடையதாய் இருட்குகையில் பெரிதும் இருளுடையதாய் மிகவும் சிற்றளவுடையதாய் அசுத்தம் முதலியவற்றால் நிரம்பிய அக்கருப்பையினுள் நெருக்கத்தாலும் வெப்பத்தாலும் புழுங்கிய புழுக்கத்தினால் வருந்தி வருந்திக் களைத்தபோ தெல்லாம் அங்ஙனம் அமுதக் காற்றை அடிக்கடி மெல்லென வீசுவித்து அவ்வருத்தமும் களைப்பும் தவிர்த்துக் காத்தருளினீர். அன்றியும் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்து பசியினால் பரதவித்து மூர்ச்சித்த போதெல்லாம் பூதகாரிய அமுதத்தை எனக்கு ஊட்டுவித்துப் பசியை நீக்கி மூர்ச்சை தெளிவித் தருளினீர். அன்றியும் தாய் கருப்பையில் பிண்ட வடிவில் கிடந்து பேய்வெருட்டாலும் பேரிருட்டாலும் பயந்த போதெல்லாம் நாத ஒலியால் பேய் வெருட்டையும் விந்து விளக்கத்தால் பேரிருட்டையும் தவிர்த்து என் பயத்தை நீக்கியருளினீர், அன்றி தாய் கருப்பையிங்கண் நேரிட்ட பெருந்தீ பெருக்காற்று பேரோசை பெருவெள்ளம் பெரும்புழு முதலிய உற்பாத துரிசுகள் அனைத்தயும் தவித்துக் காத்து அப்பிண்ட வடிவில் எனக்கு ஓரறிவையும் விளக்கி அருளினீர்.
அன்றியும் உலகனிடத்தே பிறந்து அனுபவிப்பதற்குரிய சுபஅனுபவப் பெருக்கம் ஆயுட் பெருக்கம் முதலிய நன்மைகளையும் எனக்கு அப்பிண்ட வடிவின்கண்னே அமைத்தருளினீர். அன்றியும் சோணிதக்காற்றின் அடிபடல் யோனி நெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிட ஒட்டாமற் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித்தருளினீர்.
எல்லாமாகிய இயற்கை இன்பக் கடவுளே! தந்தை என்பவனது சுக்கிலப் பையின்கண் யான் வந்தமைந்த கணப்போதிற்கு முன்கணப்போது வரையுமாக என்னால் ஒருவாறு அளவிடப்பட்ட ஒரு கோடி ஒன்பது லஷத்து அறுபதினாயிரம் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பகுதிப் பேரணு உருவிற்கிடந்த எனது அகத்தினும் புறத்தினும் அருவாகியும் உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி அன்பொடும் அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட்பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் ஒருவாறு ஒருகணப்போது பாதுகாத்தலில் சலிப்படைந்தும் தளர்ச்சியடைந்தும் அருவருப்புற்றும் சுதந்தரமற்றும் பாராக்கிலிருந்தும் தடைபடுகின்ற தந்தை முதலிய ஜீவர்கள் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு எவ்விதத்தினும் சிறிதாயினும் மனம் துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகி இருக்கின்றேன். ஆகலில் தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!
அருட்பெருஞ்ஜோதித் தனித்தலைமைக் கடவுளே! தாய் என்பவளது சோணிதப் பையிங்கண் யான் வந்தமைந்த கணப்போது தொடங்கி இவ்வுலகில் தோன்றிய கணப்போதிற்கு முங்கணப்போது வரையுமாக என்னால் ஒருவாறு அளவிடப்பட்ட ஆறுகோடி நாற்பத்தெட்டு லஷங் கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் ஆபத்துகளும் வாராதபடி பூதப்பேரணு உருவிலும் பிண்டப் பெரு வடிவிலும் கிடந்த எனது அகத்தினும் புறத்தினும் அருவாகியும் உருவாகியும் சலித்தல் முதலிய இன்றிப் பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட் பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் பரதந்திரித்தும் பராக்கடைந்தும் தடைபடுகின்ற தாய் முதலிய ஜீவர் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு எவ்வகையினும் எத்துணையும் மனம் துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகி இருக்கின்றேன். ஆகலின் தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்! எங்ஙனம் துதிப்பேன்! யாவராலும் பிரித்தற்கு ஒருவாற்றானும் கூடாத பாசம் என்னும் மகாந்தகாரத்தில் யான் அது என்னும் பேதந் தோன்றாது அருகிக் கலந்து அளவிறந்த காலம் முன்பின் என்பதின்றி மூர்ச்சித்துக் கிடந்த என்னை அம்மகாந்தகாரத்தி னின்றும் ஒரு கணப்பொழுதினுள் அதிகாரணக் கிரியையால் அதிகாரணப் பகுதி உருவில் பிரித்தெடுத் தருளிய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
சத்திய ஞானானந்தத் தனித்தலைமைக் கடவுளே! காரணக் கிரியையால் காரணப்பகுதி உருவினும், அதிசூக்குமக் கிரியையால் அதிசூக்கும பகுதி உருவினும், சூக்குமக் கிரியால் சூக்குமப்பகுதி உருவினும், பரத்துவ சத்திசத்தரால் பூத உருவினும், அபரத்துவ சத்திசத்தரால் பவுதிக வடிவினும் ஒரு கணப்போதினுள் என்னை செலுத்திய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
அகண்ட பூரணானந்தராகிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளே! ஜீவனை ஆதரிப்பிக்கும் பூதப் பிருதிவித் தோற்றமும், ஜீவனை விருத்தி செய்விக்கும் பூத நீர்த் தோற்றமும், ஜீவனை விளக்கஞ் செய்விக்கும் பூதாக்கினித் தோற்றமும், ஜீவனை அதிகரிப்பிக்கும் பூத வாயுத் தோற்றமும், ஜீவனை வியாபகஞ் செய்விக்கும் பூத வெளித் தோற்றமும், உபப்பிருதிவி உபநீர் உபாக்கினி உபவாயு முதலிய தோற்றங்களும், அவைகள் இருக்கும் இடங்களும், தொழிலிடம் முதலிய இடங்களும், ஒலி அறிவு, உருவ அறிவு, சுவை அறிவு, நாற்ற அறிவு, பரிச அறிவு, என்னும் ஐவகைக் குணஅறிவுகளும், அவைகள இருத்தற்குரிய செவி கண் நாக்கு மூக்கு மெய் என்னும் உள்ளிடப் பொறிகளும், அவைகள உத்தியோகித்தற்குரிய வெளியிடப் பொறிகளும், வசனித்தறிதல் நடந்தறிதல் கொடுத்தெடுத் தறிதல் மலம் விடுத்தறிதல் சலம் விடுத்தறிதல் என்னும் ஐவகைத் தொழிலறிவுகளும், அவைகள இருத்தற்குரிய வாக்கு பாதம் கை நீர்வாயில் அபானவாயில் என்னும் கரும உள்ளிடப் பொறிகளும், அவைகள் தொழிற்படற் குரிய கருமப் புறவிடப்பொறிகளும், நினைத்தல் விசாரித்தல் நிச்சயித்தல் அகங்கரித்தல் என்னும் சூக்குமக் கரணத் தொழில்களும், அவைகளை இயற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் சூக்கும கரணங்களும், அவைகளை இயற்றுவிக்கும் அதிசூக்கும கரணங்களும் அக்கரணங்களின் உபகரணங்களாகிப் பலபல பேதப்பட்டு விரிந்த சத்துவம், ராஜசம், தாமச முதலிய குணங்களும், பருவஞ்செய்தல் தகுதிசெய்தல் இச்சைசெய்தல் தெரிவுசெய்தல் அதிகாராஞ்செய்தல் காரணஞ்செய்தல் காரியஞ்செய்தல் முதலிய இடைப்பாட்டுத் தொழில்களும், அவைகளை இயற்றும்பொழுது இயையு இச்சை அறிவு முதலிய கருவிகளும், அக்கருவிகளுக்குரிய இடங்களும், அவைகள் உத்தியோகித்தற்குரிய இடங்களும், துரிசு நீக்குவித்தல் சுகம் விழைவித்தல் தூய்மை செவித்தல் இன்பமடைதற்கு வழியாயிருத்தல் துணையாயிருத்தல் முதலிய பரத்துவத் தொழில்களும், அவைகளை இயற்றுதற்குரிய தத்துவங்களும், அவைகளிருத்தற்குரிய இடங்களும், பிரேரித்தற்குரிய இடங்களும், அறிதல் அறிவித்தல் அனுபவித்தல் அனுபவிப்பித்தல் முதலிய முக்கியத் தொழில்களும், அவைகளை இயற்றுகின்ற சத்தி சத்தர்களும், அவர்கள் இருத்தற்குரிய இடங்களும், அவர்கள் அதிகரித்தற்குரிய இடங்களும், வாதவிருத்தி பித்தவிருத்தி சிலேட்டும விருத்திகளும், அவைகள் இருக்குமிடங்களும், உத்தியேகிக்குமிடங்களும், சூரியசத்தி சந்திர சத்தி அக்கினி சத்தி தாரகைசத்தி பிரமசத்தி மாயாசத்தி ருத்திரசத்தி முதலிய சத்திகளும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், அச்சத்திகளை நடத்தும் சத்தர்களும் அவர்கள் இருத்தற்கும் அதிகரித்தற்கும் உரிய இடங்களும், நனவு கனவு சுழுத்தி முதலிய அவத்தைகளும் அவைகள் இருத்தற்குரிய இடங்களும் இங்ஙனம் இன்னும் பற்பல அக உறுப்புகளும் அகப்புற உறுப்புகளும், மீத்தோல் புடைத்தோல் வந்தோல் மென்தோல் தோல்வகைகளும் வெண்ணரம்பு செந்நரம்பு பசுநரம்பு சிறுநரம்பு பெருநரம்பு முதலிய நரம்பின் வகைகளும், பேரென்பு சிற்றென்பு நீட்டென்பு முடக்கென்பு முதலிய என்பின் வகைகளும், நல்லிரத்தம் புல்லிரத்தம் கலவையிரத்தம் கபிலையிரத்தம் முதலிய இரத்த வகைகளும் மெல்லிறைச்சி கல்லிறைச்சி மண்ணிறைச்சி நீரிறைச்சி முதலிய இறைச்சி வகைகளும், மேல்நிலைச்சுக்கிலம் கீழ்நிலைச்சுக்கிலம் முதலிய சுக்கில வகைகளும், ஓங்காரமூளை ஆங்காரமூளை முதலிய மூளைவகைகளும், தலையமுதம் இடையமுதம் முதலிய அமுதவகைகளும், வெண்மை செம்மை பசுமை கருமை பொன்மை என்னும் வண்ண வகைகளும், வெண்மையிற்செம்மை வெண்மையிற்பசுமை வெண்மையிற்கருமை வெண்மையிற்பொன்மை, செம்மையின் வெண்மை, செம்மையிற்பசுமை செம்மையிற்கருமை செம்மையிற்பொன்மை, பசுமையின் வெண்மை பசுமையிற்பொன்மை பசுமையிற்கருமை, கருமையின்வெண்மை, கருமையிற்செம்மை கருமையிற்பசுமை கருமையிற்பொன்மை, பொன்மையின்வெண்மை பொன்மையிற் செம்மை பொன்மையிற்பசுமை பொன்மையிற்கருமை என்னும் வண்ண பேதவகைகளும், இவைகள் இவைகள் இருத்தற்குரிய இடங்களும் செயல்வகைகளும் பயன் வகைகளும் இங்ஙனம் இன்னும் பற்பல புறஉறுப்புகளும் புறப்புறஉறுப்புகளும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பவுதிக வடிவின்கண் ஒருங்கே உள்நின்று தோன்ற உள்நின்று தோற்றாது தோற்றவித்து தேவரீரது திருவருட் பேராற்றலை எங்ஙனம் அறிந்து எவ்வாறு கருதி என்னென்று துதிப்பேன்!
சுத்த சன்மார்க்க லக்ஷிய சத்திய ஞானக் கடவுளே! ஜீவர்களாற் கணித்தறியப்படாத பெரிய உலகின்கண்ணே, பேராசை பெருங்கோபம் பெருமோகம் பெருமதம் பெருலோபம் பேரழுக்காறு பேரகங்காரம் பெருவயிரம் பெருமடம் பெருமயக்கம் முதலிய முதலிய பெருங்குற்றங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய மற்றை இடங்களிற் பிறப்பியாமல், குணங்களே பெரும்பாலும் விளைவதற்குரிமையாகிய இவ்விடத்தே, உறுப்பில் குறைவுபடாத உயர் பிறப்பாகிய இம்மனிதப் பிறப்பில் என்னை பிறப்பித்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
அருட்பெரு வெளியின்கண்ணே அருட்பெருஞ்ஜோதி வடிவராகி விகற்பமில்லது விளங்குகின்ற மெய்ப்பொருட் கடவுளே! சிசுப் பருவந் தொடங்கிக் குமாரப் பருவம் வரையில் பேய்வெருட்டல் தோஷந்தாங்கல் பால் எதிரடுத்தல் சவலைக்குருந்தாதல் நோய்ப் பிணிப்புண்டல் பசியால் அரற்றல் பயத்தால்உலம்புதல் உண்டிஉவட்டல் உடம்பொடுநேர்தல் முதலிய எவ்வகைத் தடைகளாலும் தடைபடாமல் எனது அகத்தும் புறத்தும் காத்திருந்து வளர்த்தருளிய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
அறிவார் அறியும் வண்ணங்களெல்லாம் உடைய பேரருட் பெருஞ்ஜோதிப் பெருந்தகைக் கடவுளே! குமாரப் பருவத்திற்றானே உலகில் சிறுவர்களுடன் கூடிச் சிறுவிளையாட்டியற்றல் சிற்றுண்டிவிழைதல் சித்திரம்பயிறல் அதிசயம்பார்த்தல் அசங்கியம் பேசல் அவலித்தழுதல் சிறுசண்டை செய்தல் சிறுகுறும்பியற்றல் தன்வசத்துழலல் தாய்வயிற் சலித்தல் முதலிய குற்றங்களில் என்னை சிறிதும் செலுத்தாமல் ஒரு சிறிய அறிவு விளங்கப் புரிந்து இடந்தனித்திருத்தல் இச்சையின்றி நுகர்தல் ஜெபதபஞ்செய்தல் தெய்வம்பராவல் பிறவுயிர்க்கிரங்கல் பெருங்குணம்பற்றல் பாடிப்பணிதல் பத்திசெய்திருத்தல் முதலிய நற்செய்கைகளில் என்னைச் செலுத்திய தேவரீரது பேரருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
எல்லாம் ஆனவராயும் ஒன்றும் அல்லாதவராயும் எல்லா அண்ட சராசரங்களின் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்குகின்ற தனித்தலைமைக் கடவுளே! குமாரப் பருவத்தில் என்னை கல்வியில் பயிற்றும் ஆசிரியரையின்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கருமையாகிய கல்விப் பயிற்சியை எனதுள்ளகத்தே இருந்து பயிற்றுவித்தருளினீர்.
இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போதுபோக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலான பாஷைகளில் எனக்கு ஆசை செல்லவெட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமை உடையதாய்ச் சாகாக்கல்வியை இலேசில் அறிவிப்பதாய்த் திருவருள் வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றினிடத்தே மனம் பற்றச்செய்து அத்தென்மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்.
அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம் ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.
வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.
அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர். வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக்கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர். அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.
அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை பெண்விஷய இச்சை மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும் கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லா சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழிவில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ் ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய உண்மைப் பேரறிவை அறிவித்தும், நான் எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்.
இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!
இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்
3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
இயற்கை விளக்கம் எங்கின்ற சத்திய ஞானசபைக் கண்ணே, இயற்கை உண்மை எங்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்பம் எங்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப்பெருங் கருணைத் தனிப் பெரும்பதியாய தனித் தலைமைக் கடவுளே!
தேவரீர் திருவருட் சமூகத்தை அடைந்த உண்மை ஞானிகளின் சித்திவல்லப தரத்தை வகுத்தறிந்து வாழ்த்துதும் என்று அளவிகந்த முகங்களை கொண்டு அளவு கடந்த நெடுங்காலம் தத்தம் அளவைகளால் தனித்தனி அளந்தளந்தும் ஒருமித்து அளந்தளந்தும் ஒருவாற்றினும் முடிவு தோற்றாமையின் வேதாகமங்கள் அனைத்தும் ஆங்காங்கு கோடித்து அதிசயிக்கின்றன என்றும், அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் படைத்தல் காத்தல் துரிசு நீக்கல் முதலிய தொழில்களால் நிகழ்த்துகின்ற அதிகாரத் தலைவர்களும் எவ்வகைத் தத்துவங்களையும் காரண காரிய திறத்தால் நடத்துகின்ற சத்தி சத்தர்களும் உண்ர்ந் துணர்ந்தும் உணர்ச்சி சொல்லாமையின் முயற்சி பற்றாது மயங்குகின்றன ரென்றும், பேரறிவாற் சிறந்த பெரியர்களெல்லாம் வியந்து வியந்து விளம்புகின்றனர். அதனால் திருவருட் சமூகத்தை யடைந்த உண்மை ஞானிகளின் சித்தி வல்லப தரத்தை ஒருவராலும் ஒருவாற்றானும் உணர்ந்து கொள்ளுதல் கூடா வென்று ஐயுறவின்றி அறிந்து கொண்டேன். இங்ஙனம் அறிந்துகொண்ட சிறியேன் அவ்வுண்மை ஞானிகளுக்குச் சித்தி வல்லப தரத்தைக் கொடுத்தருளிய திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மை விளக்கத் தரத்தை எங்ஙனம் அறியத் தொடங்குவேன்!
மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேன் பொய்யறிவாற் புனைந்து உரைத்த பொய்யுரைகளையும் மெய்யுரைகளாகத் கருணையினாற் கடைக்கணித்தருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங் கருணைப் பெருந்தன்மையைக் கருதுதற்கு விரும்பிய ஐந்தொழிற் கருத்தர் முதலியோர் தூய்மையுடைமை அன்புடைமை முதலிய சுபகுணங்களைக் கருதுதற் கருவியாய தமது கரணங்கள் முற்றப் பெற்றிலவென்று கருதுதலின்றி எண்ணி எண்ணி இரங்குகின்றனர் என்று அறிவுடையோர் வியந்துரைத்தலைப் பலகாற் பயின்று கேட்டறிந்தேன்.
இங்ஙனங் கேட்டறிந்த சிறியரிற் சிறியேன் அத்திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங் கருணைப் பெருந்தன்மையைக் காமம் வெகுளி முதலிய அவகுணங்கட்கெல்லாம் வைப்பிடமாகி பராய் முருட்டன்ன கருங்கற் கரணத்தால் எங்ஙனங் கருதத் தொடங்குவேன்!
நாயிற் கடையேன் செய்த குற்றங்களை எல்லாம் குணங்களாகக் கொண்டு என்னுள்ளகத்தே அமர்ந்து உயிரிற் கலந்து பெருங்கருணைப் பெருமானே! தேவரீரது திருவருட்சமூகத்தின் இயற்கைப் பெருங்குணப் புகழைத் துதித்தற்கு விரும்பிய மூர்த்திகள் முதலியோர் துதித்தற் கருவியாய தத்தஞ் செந்நாயுறுப்புகள் வாய்மைகூறல் இன்சொற்புகறல் முதலிய ஒழுக்கங்களிற் சான்றில என்று துதித்தலின்றி அச்சுற்று நிற்கின்றனர் என்று அறிஞர் உண்மை வாசகத்தால் அறிந்தேன்.
இங்ஙனம் அறிந்த கடையேன் பொய்யுரைத்தல் பயனிலகூறல் முதலிய தீமைக்கட் பயின்று தடித்த எனது நாவினால் தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கைப் பெருங்குணப் பெரும்புகழை எங்ஙனம் துதிக்கத் தொடங்குவேன்!
அண்ட பிண்ட முதலிய எல்லாவற்றிற்கும் அகத்தும் புறத்தும் நிறைந்து விளங்கின்ற அருட்பெருஞ் ஜோதித் தனிப் பெரும் பதியாய பூரணரே! தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கை உண்மைத் தரத்தை அறிதல் வேண்டு மென்றும், இயற்கைப் பெருங் கருணைப் பெருந் தன்மையைக் கருதுதல் வேண்டுமென்றும், இயற்கைப் பெருங்குணப் பெரும்புகழைத் துதித்தல் வேண்டுமென்றும், எனது உள்ளகத்தே ஓவாதுறைந்து ஊற்றெழுந்து விரைந்து விரைந்து மேன்மேற் பெருகின்ற பேராசைப் பெருவெள்ளம் அணைகடந்து செல்கின்ற தாகலின், “அறிவார் அறிகின்ற வண்ணங்களும் கருதுவார் கருதுகின்ற வண்ணங்களும் துதிப்பார் துதிக்கின்ற வண்ணங்களும் ஆகிய எல்லா வண்ணங்களையும் உடையவர் அருட்பெருஞ்ஜோதித் தனித்பெருங்கடவுள்” என்ற சத்தியஞானிகளது உண்மை வாசகத்தைப் பற்றுக்கோடாகக் கொண்டு, தன்மைசாலாத் தமியேன் அறிதற்கும் கருதுதற்கும் துதித்தற்கும் தொடங்கினேன்.
இங்ஙனந் தொடங்குதற்கு முன்னர், எனது அறிவிற்கும் கருத்திற்கும் நாவிற்கும் இயல்வனவாகத் தோற்றிய வண்ணங்களுள் ஒன்றேனும் ஈண்டு இயற்படத் தோற்றாமையின், அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங் கடவுளே!
தேவரீர் திருவருட் சமூகத்தின் இயற்கை வண்ணங்கள் எத்தன்மையவோ! எத்தன்மையவோ! என்று உணர்ந்து உணர்ந்து கருதிக்கருதி உரைத்து உரைத்து அதிசயிக்கின்றவ னானேன்.
இயற்கை உண்மைத் தனிப்பெரும் பொருளாயும் இயற்கை விளக்கத் தனிப் பெரும் பதமாயும் இயற்கை இன்பத் தனிப்பெருஞ் சுகமாயும் பிரிவின்றி நிறைந்த பெருந் தன்மையராய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே!
தேவரீர்! திருவருள் வலத்தால் பொறி புலன் கரண முதலிய தத்துவங்கள் அனைத்தையும் வென்று நின்மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம் உண்மைக்கண் இயற்கை இன்பானுபவஞ் செய்கின்ற சுத்த யோகாந்தர்களும் சுத்த கலாந்தர்களும் சுத்த போதாந்தர்களும் சுத்த நாதந்தர்களும் சுத்த வேதாந்தர்களும் சுத்த சித்தாந்தர்களும் சுத்த சன்மார்க்க ஞானிகளின் திருக்கூட்டங்களை நன் முயற்சியால் தனித்தனி அடைந்து பத்தியாற் பணிந்து, ‘அற்புதப் பெருஞ் செயல் புரிகின்ற ஐயர்களே! அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் உள்ளம் உவந்துரைத் தருளல் வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்ற தோறும், ‘எல்லா பொருள் கட்கும், எல்லாக் குணங்கட்கும் எல்லா பயன்கட்கும் எல்லா அனுபவங்கட்கும் மற்றெல்லாவற்றிற்கும் உருவ சொரூப சுபாவ முதலிய இலக்கணங்கள் அனைத்தும் தாமேயாகியும் தாமல்லாராகியும் தாக்கியும் தாக்கற்றும் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற இயற்கை உண்மைக் கடவுளது இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் அந்தோ! அந்தோ!! எங்ஙனம் அறிவோம்! எவ்வாறு கருதுவோம்! என்னென்று கூறுவோம்!’ என்று அவ்வவ் கூட்டங்களினுந் தனித்தனி உரைத்து உரைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து நெட்டுயிர்க்கின்றார்கள் என்றும், எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற் குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்தியஞான சுகானுபவ பூரண சொரூப சாத்தியர்களாய், எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞாந்தேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குண சித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்துசித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி சிவசித்தி முதலிய பிண்டசித்தி, அண்டசித்தி, பகிரண்ட சித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திளெல்லாவற்றையும் திருக்கடைக் கணிப்பாற் செய்யவல்லவராய், சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே, புண்ணிய வசத்தால் புகுதப் பெற்று மனங்கனிந்து வணங்கி நின்று, ‘சர்வ சுதந்தரராய சாத்தியர்களே! இயற்கை உண்மைத் தனிப்பெரும் பதியாய கடவுளின் இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் திருவுளம் பற்றித் திருவாய் மலர்ந்து திருவார்த்தை அளித்தருளல் வேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்ற தோறும் திருவார்தை அளித்தலின்றிப் பெருங்கருணைத் திருக்கண்களில் ஆன்ந்தநீர் பொழிந்து சும்மா இருக்கின்றனர் என்றும், உணர்ந்தோர் வியந்துரைப்பக் கேள்வியுற்று, ‘இயற்கைத் திருவருட் சமூகம் இருந்த வண்ணம் என்னையோ!! என்று குலாவிக் குலாவிக் கூவுகின்றவனானேன்.’
அடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைக் கருமஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், முடிநிலை யோகஞான சித்தி அனுபவங்களினும், அடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலைத் ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத் ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், சமரச சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், அது அதுவாகி நிறைந்தும் அதுஅதுவாகி விளங்கியும், அதுஅதுவாகி இனித்தும், ஆங்காங்கு ஆதீதமாகிக் கலந்தும், இவை அனைத்துமாகி ஒருமித்தும், அதீதா தீதமாகித் தனித்தும் வயங்குகின்ற பெருங் கருணைப் பெரும்பதியாய கடவுளே! எல்லாச் சத்திகளுக்கும், எல்லாச் சத்தர்களுக்கும் எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத் தேவிகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் எல்லாச் சாதனர்களுக்கும் எல்லாச் சாத்தியர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் எல்லாத் தத்துவங்களுக்கும் எல்லா பொருட்களுக்கும் எல்லாக் குணங்களுக்கும் எல்லாச் செயல்களுக்கும் எல்லா அனுபவங்களுக்கும் மற்றெல்லாவற்றிற்கும் முதற்காரணமாயும் நிமித்த காரணமாயும் துணைக் காரணமாயும் இவை அல்லவாயும் விளங்குகின்ற திருவருட்சமூகப் பெருங்கருணைப் பெரும் பதியாய தேவரீர் இயற்கைத் திருவண்ணம் அறிந்துகொள்ளுதல் எங்ஙனமோ! எங்ஙனமோ!!
ஓ! ஒப்புயர்வின்றி விளங்குகின்ற ஒருவரே! தேவரீர் திருவண்ணமும் திருவருட் சமூகத் திருவண்ணமும் அறிதற்கும் கருதுதற்கும் துதித்தற்கும் எத்திறத்தானும் கூடாவாயினும் அடிமை அளவிற்கு இயன்றபடி அறியாது அறிந்தும் கருதாது கருதியும் துதியாது துதித்தும் எனது உரிமையை ஊற்றஞ் செய்கின்றவனானேன். வந்தனம்! வந்தனம்!!
இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்
4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன். பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேகசுதந்தரத்தையும், போகசுதந்தரத்தையும், ஜீவசுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமும் தேற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!
இங்ஙனம்
சிதம்பரம் இராமலிங்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி